பங்களூர் மெயிலில்

bangaloremailil
 

பங்களூர் மெயிலில் அன்று கூட்டமேயில்லை. மெயில் புறப்பட வேண்டிய நேரத்துக்கு ஐந்து நிமிஷ நேரம் தாமதித்துப் புறப்பட்டும்கூட, ஜனங்கள் வந்த பாட்டைக் காணோம். எனவே அந்த வண்டி, ‘இனி மேல் வந்தால் ஏறமுடியாது’ என்று எச்சரிப்பதைப் போல், நீண்ட ஊதலுடன் கிளம்பிற்று.

என்ஜினிலிருந்து இரண்டாவது பெட்டியில் மூன்றே பேர் உட்கார்ந்திருந்தோம் – சிதம்பரம் பிள்ளை, ஓர் இளைஞர், நான்! வண்டி பேஸின் பிரிட்ஜ் ஜங்ஷனைத் தாண்டியதும், என்ன நினைத்துக் கொண்டதோ, பிரமாத வேகத்துடன் ஓட ஆரம்பித்து விட்டது. ஜோலார்ப்பேட்டை தாண்டுகிறவரை நாங்கள் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளவே இல்லை.

நாங்கள் மூன்று பேரும் ஸ்திரீகளாயிருந்தால் இப்படிப் பேசாமல் மௌனவிரதம் அனுஷ்டித்திருக்க முடியுமா என்பதை எண்ணி நான் வியந்துகொண்டு இருந்தேன். என் ஆச்சர்யத்தை வலுக்கவிடாது அந்த இளைஞர் மெதுவாகக் கனைத்துக்கொண்டு, ”ஸார், கொஞ்சம் மணி என்ன என்று சொல்ல முடியுமா?” என்று கேட்டார்.

நான் எனது கைக் கடியாரத்தை ஒருமுறை பார்த்துவிட்டு, ”கடியாரம் நின்றுவிட்டது” என்றேன்.

”அப்படியா?” என்று சொல்லிவிட்டு, அந்த இளைஞர் சிதம்பரம் பிள்ளை இருந்த திக்கை நோக்கினார்.

சிதம்பரம் பிள்ளை ஒரு மூலையில் உட்கார்ந்து கொண்டு, எட்டு நாளைக்கு முன்பு வாங்கின ஒரு தமிழ் தினசரியைப் படிப்பதில் தீவிரமாக முனைந்திருந்தார்.

”கொஞ்சம் மணி என்ன, சொல்ல முடியுமா?” என்று அவரிடம் கேட்டார் இளைஞர்.

பிள்ளை பதில் பேசவில்லை. இளைஞருடைய முகத்தைக்கூட அவர் நிமிர்ந்து பார்க்கவில்லை. அந்த வாலிபர் கழுத்தை ஜன்னலுக்கு வெளியே நீட்டி, ரயிலுக்கு வெளியே எதிர்நோக்கி ஓடிக்கொண்டிருந்த இயற்கைக் காட்சிகளின் வனப்பை ரஸிக்கத் தொடங் கினார். காற்றில் மிதந்து வந்த என்ஜின் கரித்தூள் ஒன்று அவர் கண்ணில் படவே, தலையை உள்ளுக்கு இழுத்துக்கொண்டு, மறுபடியும் சிதம்பரம் பிள்ளையை மணி கேட்டார்.

பிள்ளை இந்தத் தடவையும் பதில் சொல்லாமல் மௌனம் சாதித்தார். வாலிபர் அதற்காக வருத்தப்படவில்லை. மறுபடியும் ஜன்னல் பக்கம் திரும்பினார். வாயு வேகத்தில் ரயில் பறந்துகொண்டிருந்தது.

சற்று நேரத்தில், இளைஞர் மீண்டும் நகர்ந்து நகர்ந்து பிள்ளையிடம் சென்று, ”தங்களைத் தொந்தரவு பண்ணுவதாக நினைக்கக்கூடாது; மணி என்னவென்று சொல்லமுடியுமா?” என்று கேட்டார்.

பிள்ளை இப்போதும் வாயைத் திறக்கவில்லை. தம்மைப் பார்த்து ஒருவன் பேசிக்கொண்டிருப்ப தாகவே அவர் நினைக்கவில்லை. வழக்கப்படி இளைஞர் ஜன்னல் பக்கம் போய்விட்டார். அதற்குப் பிறகு அரை மணி நேரம், எங்கள் பெட்டியில் பேச்சு மூச்சே இல்லை.

வெகு நேரம் கழித்துச் சிதம் பரம் பிள்ளை, தமது மூக்குக் கண்ணாடியைக் கழற்றிக் கீழே வைத்தார். பத்திரிகையை நாலு மடிப்பாக மடித்துத் தமது கைப் பெட்டிக்குள் வைத்துவிட்டு, கையைத் தட்டி அந்த இளைஞரை அருகில் அழைத்தார்.

இளைஞர் அருகில் வந்ததும், ”நீங்கள் என்னை மூன்று தரம் மணி என்னவென்று கேட்டதற்கு நான் பதில் பேசாமல் இருந்து விட்டேன். அதனால் நீங்கள் என்னை ஊமை அல்லது செவிடு என்று நினைத்திருக்கலாம்; அல்லது தாக்ஷண்யமற்றவன் என்றும் எண்ணியிருக்கலாம். அப்படி யெல்லாம் இல்லை. நான் உமக்குப் பதில் சொல்லியிருந்தால் என்னவெல்லாம் நடந்திருக்கும் என்பதை நினைத்தே, பேசாமல் இருந்துவிட்டேன். நீங்கள் கேட்ட தும் உடனே நான் பதில் சொல்லி யிருந்தால், மேற்கொண்டு பேச்சுக் கொடுக்க ஆரம்பித்திருப்பீர்கள், இல்லையா?” என்றார்.

”ஆமாம்” என்றார் இளை ஞர்.

”நான் மூன்று வருஷ காலமாக என்னுடைய பெண் மரகதத்துக்குப் பிள்ளை தேடிக்கொண்டிருக்கி றேன். இப்போது கூடச் சென் னைக்கு அது விஷயமாகத்தான் போய் வருகிறேன். ஒரு வாரமாகச் சுற்றிச் சுற்றி அலைந்தேன். ஒன்றும் பிரயோஜனப்படவில்லை. இருக்கட்டும், எங்கேயோ ஆரம்பித்து எங்கேயோ பாய்ந்து விட்டேன்.

நீங்கள் மேற்கொண்டு பேசி னால், நானும் பேச வேண்டியிருக் கும். அப்புறம் நான் உம்முடைய பூர்வோத்திரங்களையும், நீர் என்னுடைய குடும்ப சமாசாரங் களையும் தெரிந்துகொள்ள நேரிடும். பிறகு, ‘நீர் எங்கே போகிறீர்?’ என்று நான் கேட்பேன். நீர் ‘பங்களூர் போகிறேன்’ என்று பதில் சொல்லுவீர். உடனே நான், ‘என் வீடு ஸ்டேஷன் ரோட்டிலேயேதான் இருக்கிறது. நீங்கள் ரயிலை விட்டு இறங்கியதும், ஒரு வேளை என் வீட்டில் தங்கிப் போகவேண்டும்’ என்று சொல் வேன். அதற்குள் நமக்குள் அவ்வளவு சிநேகம் ஏற்பட்டுவிடும், இல்லையா?

நீர் என்ன பதில் சொல்லுவீர்? ‘ஆஹா, பேஷாய் வருகிறேன்’ என்றுதானே சொல்லுவீர்! பிறகு உம்மை என் வீட்டுக்கு அழைத்துப் போவேன். சாப்பாடு எல்லாம் ஆனதும், நான் என் வீட்டு ரேடியோ பெட்டியைத் திருப்பி வைப்பேன். உடனே என்னிடம் நீங்கள், ‘சங்கீதத்தில் உங்களுக்கு ஆசை போலிருக்கிறது’ என்று சொல்லுவீர். நான், ‘ஆமாம், என் பெண் மரகதத்துக்குக் கூடப் பாட்டுச் சொல்லி வைத்திருக்கிறேன்’ என்று சொல்லிவிட்டு, ‘மரகதம், மரகதம்… இங்கே வந்து ஒரு பாட்டுப் பாடு’ என்று என் பெண்ணைக் கூப்பிட்டுப் பாடச் சொல்லுவேன். அவள் வந்து பாடுவாள். நீர் ‘பேஷ்’ போடுவீர். உடனே நான், என் பெண் மரகதத்தின் கல்யாண விஷயமாய்ப் பேச ஆரம்பிப்பேன்.

அதெல்லாம் ஒரு விதமாய் முடிந்ததும், மரகதத்தை மணக்கும் படி உம்மையே கேட்கலாமா என்று எனக்குத் தோன்றிவிடும். மரகதம் செல்லமாய் வளர்ந்தவள். அவளுக்குக் கஷ்டமென்பதே தெரியாது. ‘பணத்திலேயே பிறந்து, பணத்திலேயே வளர்ந்தவள்’ என்று நான் சொன்னால், நீர் கோபித்துக் கொள்ளக்கூடாது. என் மரகதத்தைக் கைக் கடியாரம் கூட இல்லாத உமக்குக் கொடுக்க எனக்கு இஷ்டம் இல்லை. ஆகை யால்தான் நான் முதலிலேயே முன் ஜாக்கிரதையாகப் பேச்சுக் கொடுக்காமல் இருந்துவிட்டேன். என்ன, நான் சொன்னதெல்லாம் புரிந்ததா?” என்று முடித்தார்.

அந்த இளைஞரும் புன்சிரிப்பு டன், ”புரிந்தது, புரிந்தது” என்றார்.

அதற்குள் ரயில் பௌரிங் பேட்டை தாண்டி, பங்களூர் கன்ட்டோன்மென்ட்டை அடைந் தது. சிதம்பரம் பிள்ளை ரயிலை விட்டு இறங்கி, வெளியே போனார். அந்த இளைஞரும் நானும் மட்டும் வண்டியில் இருந்தோம்.

இளைஞர் என்னைப் பார்த்து, ”ஸார், இவ்வளவு நேரம் மூட்டை அளந்துவிட்டுப் போனாரே, அவருக்கு வாஸ்தவத்திலேயே பெண் இருக்குமென்று நீங்கள் நினைக்கிறீர்களா?” என்று கேட்டார்.

நான் ஏதோ பதில் சொல்ல வாயெடுத்தேன். ஆனால், அதற் குச் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. சிதம்பரம் பிள்ளையே திரும்பி வந்து வண்டிக்குள் தலையை நீட்டினார்.

இளைஞர் கேள்வி அவர் காதில் விழுந்திருக்க வேண்டும்.

”எனக்குப் பெண் இருக்கிறாள், ஐயா! நிஜமாக இருக்கிறாள். ஆனால், கடியாரந்தான் கிடை யாது!” என்று சொல்லிவிட்டுப் போனார்.

- 06-10-1940 

தொடர்புடைய சிறுகதைகள்
‘நான்தான்’ நாகசாமி
கையிலே ரிஸ்ட் வாட்ச், விரலிலே வைர மோதிரம், குரலிலே ஒரு கம்பீரம். இந்த லட்சணங்களைக் கொண்டவர்தான் நாகசாமி. அவருக்குத் தெரியாத பெரிய மனிதர்கள் கிடையாது. அவரால் சாதிக்க முடியாத காரியங்களும் கிடையாது. யாருக்கும், எந்த நேரத்திலும், எம்மாதிரி உதவி தேவையானாலும் நாகசாமியைத் ...
மேலும் கதையை படிக்க...
மாணிக்க முதலியார், ரத்னசாமிப் பிள்ளை இரண்டு பேரும் டயரி போட் டார்கள். இரண்டு பேர் போட்ட டயரி களும் லக்ஷக்கணக்கில் செலவழிந்தன. ஆனால், ஒவ்வொரு வருஷமும் முதலியா ருக்கு மட்டும் அதிக லாபம் கிடைத்தது. அதன் ரகசியம் பிள்ளைக்கு விளங்க வில்லை. ஒரு ...
மேலும் கதையை படிக்க...
‘எதிர்வாதம்’ ஏகாம்பரம்
''ஏகாம்பரம், பேப்பரில் பார்த்தாயா! சினிமா ஸ்டார் கங்காதேவி கல்யாணத்திலே பத்தாயிரம் பேருக்குச் சாப்பாடாம். காலையிலே ஆரம்பித்த பந்தி ராத்திரி பன்னிரண்டுமணி வரைக்கும் நடந்ததாம். தெரியுமா உனக்கு?'' ''சரிதாண்டா, இதைப் போய் ஒரு பெரிய அதிசயமாகச் சொல்ல வந்துட்டே! சினிமா ஸ்டார்தானேடா? செலவழிக்கட்டுமே; நானும்கூட ...
மேலும் கதையை படிக்க...
’அட்டெண்டர்’ ஆறுமுகம்
"என்ன உத்தியோகம் சார், இது? பத்து வருசமா நானும் அட்டெண்டராத்தான் இருக்கேன்; நீங்களும் ஹெட்கிளார்க்காகவே இருக்கீங்க. சலிச்சுப் போகல்லே? உத்தியோகத்தை ஒசத்திப் போடச் சொல்லுங்க, சார்!" என்பான் அட்டெண்டர் ஆறுமுகம். "போடா, தூங்குமூஞ்சி! நீ செய்யற வேலைக்குப் பிரமோஷன் வேறே ஒரு கேடா?" ...
மேலும் கதையை படிக்க...
‘நான்தான்’ நாகசாமி
டயரி ரகசியம்!
‘எதிர்வாதம்’ ஏகாம்பரம்
’அட்டெண்டர்’ ஆறுமுகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)