நெடுஞ்சாலையில் ஒரு சாவு

 

ன்று இவர் ஊரில் இல்லை-தூங்கி எழுந்த எண்ணெய் தேய்த்து ஸ்னானம் செய்தேன். இவர் இல்லாததால் வீட்டில் வேலை ஒன்றுமே இல்லை. என்ன செய்து பொழுதைப் போக்கலாம் என்று தவித்தவள், இவருடைய பட்டன் இல்லாத ஷர்டுகளைப் பொறுக்கி எடுத்துப் பட்டன்களைத் தைத்துக் கொண்டிருந்தேன்.

சமையற்கார அம்மாள் எட்டிப் பார்த்தாள் -

“சாப்பிட வரலையா? கார்த்தாலேந்து வெறும் வயத்தோடு இருக்கியே!”

“ம்?…வரேன். இருங்கோ…இன்னும் ரெண்டு ஷர்ட் தான் பாக்கி…”

இவர் இருந்தால் எட்டரை மணிக்கு டிபன்; ஒரு மணிக்கு சாப்பாடு. தனி மனுஷியாய் உட்கார்ந்துகொண்டு எத்தனை தடவைகள் சாப்பிடுவது என்ற சலிப்பு தோன்றியதால், ‘இன்னிக்கு டிபன் வாண்டாம்-சமையலே ஆகட்டும்-ஒரு வழிய பதினோரு மணிக்கு சாப்பிடறேன் என்று சொல்லியிருந்தேன்.

சமையல்கார அம்மாள் போய்விட்டாள்.

அவள் வேலை முடிந்தால் அவளுக்கு நிம்மதி. கொஞ்சம் கட்டையை நீட்டலாமே!

சரி, எழுந்திருப்போம் என்று கைக்காரியத்தை கேலி வைக்கும் பொது, வாசலில் ஏதோ ‘ஹோ’ என்ற சப்தம் -

என்ன விஷயம்?

டவுனிலிருந்து ஒரு மைல் தள்ளி வயக்காட்டு நடுவில் எங்கள் தொழில்சாலை இருந்தது-அதே காம்பவுண்டில் எங்கள் வீடு – நாலு பக்கமும் வயல் சூழ்ந்த எங்கள் இல்லத்திற்கு எதிரில் தேசிய நெடுஞ்சாலை-சாலைக்கு எந்தப் பக்கம் ஒரு சேரி..

பொழுது விடிந்து பொழுது போனால் சேரியில் ஏதாவது ரகளைதான்…

இரவு இல்லை, பகல் இல்லை என்று, எப்போதும் வேண்டுமானாலும் குடித்துவிட்டு ரகளை செய்வர் சிலர்…

சண்டை இன்னதிற்க்குத்தான் எழும் என்று இல்லை.

காசு பெறாத விஷயத்துக்கு மண்டை உடையும்.

தடியை எடுத்துக்கொண்டு ஒருவனை ஒருவன் துரத்தி, பன்றியை அடிப்பதுபோல அடித்துக்கொள்வார்கள்.

பெண்கள் தொண்டை கிழியக் கத்துவார்கள்…

பல் போன கிழவியிலிருந்து, பிறந்த குழந்தை வரைக்கும், ஒருத்தரையும் விட்டுவைக்காமல், நாக்கு கூசும்படி வார்த்தைகளைக் கொட்டி வசைபாடுவார்கள்.

சீ! என்ன ஜனங்கள்…

இங்கு குடிவந்த நாட்களாய் இதெல்லாம் எனக்குப் பாடமாகிப் போனதால், அன்றைக்கு காதில் விழுந்த சப்தங்கள் என்னுள் புது சுவாரிசியம் ஒன்றையும் ஏற்படுத்தவில்லை.

ஒரு சில நிமிஷங்கல்கூடச் சென்றிருக்காது -

என்னென்னவோ நானாவித ஓலங்கள் – கூட்டமாய் ஜனங்கள் சேர்ந்து கத்தும் த்வனிகள்.

என்னாயிற்று?

வாசற்கதவைத் திறந்துகொண்டு தோட்டத்தில் இறங்கினேன்.

தொழில்சாலைக்கு எதிரில் உள்ள சாலையில் கூட்டமான கூட்டம் -

திபுதிபுவென்று ஈசல் போல மனிதர்கள் ஓடி வந்து கொண்டிருந்தார்கள்.

சேரி தீப்பிடித்துக்கொண்டு விட்டதா?.

எனக்கு கொஞ்சம் சுவாரஸ்யம் பிறந்தது.

தோட்டக் கதவைத் திறந்துகொண்டு வந்த வேலைக்காரியை பார்த்து, ” என்ன விஷயம் சொக்கம்மா?” என்றேன்.

கொளந்தை மேல பஸ் ஏறிடிச்சிங்க ..அதா அந்தால பாருங்க…”

தொழில்சாலை கேட்டிற்கு வலது பக்கம் சுமார் நூறு அடிகள் தள்ளி ஒரு கூட்டம் தனியாய் தெரிந்தது-

“கவர்மெண்டு பஸ்ஸூங்க…வேகமா வந்துட்டான்…கொளந்தை மேல எறிடிச்சி…நிக்காம போகப் பாத்திருக்கான். இந்தால எதிப்பிலே வந்த ஜனங்க, ரோட்டு மையத்திலே நின்னு கிட்டு பஸ்ஸை மறிச்சிட்டாங்க. இதா, இந்தால பாருங்க…”

கேட்டுக்கு இடது பக்கம், சாலையிலிருந்து மண்ணில் இறங்கி நின்றுகொண்டிருந்த பச்சை ஸ்டேட் பஸ்ஸை அப்போதுதான் பார்த்தேன்-

ஆண் பிள்ளைகள் நூறு பேராவது அந்த பஸ்ஸைச் சுற்றி இருந்தார்கள்-

ஒருத்தொருத்தனுக்கு வெறி ஆவேசம்-

வேலியிடம் நெருங்கிப் போய் எட்டிப் பார்த்தேன்-

கையில் கிடைத்த கற்களை பஸ்ஸை நோக்கி எறிந்த வண்ணம், உள்ளே புக சிலர் முயற்சிப்பது புரிந்தது.

“இழுடா அந்த நாயை…எவண்டா இவனுக்கு வண்டி ஓட்ட அனுமதி கொடுத்தவன்”

“வண்டியை நிறுத்தாம போனானே! அவனுக்கு என்ன திமிரு!”

“இழுடா வெளியே!”

ஆக்ரோஷமான குரல்கள்-

டிரைவர் ஸீட்டில் அவனைக் காணவே காணோம்-

எந்த ஸீட்டுக்கடியில் புகுந்து கொண்டானோ?

பஸ்ஸில் இருந்த பிரயாணிகள் முகங்கள் பயத்தால் வெளிறி இருப்பது புரிந்தது.

வெறி பிடித்த கூட்டத்தில் அகப்பட்டுக்கொண்டோமே என்ற நடுக்கம்.

என் கவனத்தை இந்தப் பக்கம் திருப்பினேன் -

கம்பெனி ஆட்கள், மானேஜர் எல்லோரும் கும்பலாய் வெளியிலிருந்து உள்ளே வருவதைப் பார்த்ததும், எனக்கும் அந்த அடிப்பட்ட குழந்தையைப் பார்க்கவேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.

வேலைக்காரி உடன்வர கோட்டை அடைந்தேன்…

“என்ன? ரொம்ப அடியா?” என்றேன் மானேஜரிடம்.

“சின்னப் பொண்ணு…மண்டையில் சரியான அடி…!” அவர் முகம் அருவருப்பால் சுருங்கியது.

“நானே போய் பார்த்துட்டு வரேன்”

“வேண்டாம்..பார்க்காதிங்கோ..மனசுக்குக் கஷ்டமாயிருக்கும்”

அவர் தடுத்துப் பார்த்தார். நான் கேட்கவில்லை. கேட்டைத் தாண்டும்போது, என்னைத் தனியாக இந்த கூட்டத்தில் விடக் கூடாது என்பதுபோல, அவரும் உடன் வந்து சேர்ந்துகொண்டார்.

திருவிழா கூட்டம் -

‘காச் மூச்’சென்று ஒன்றும் புரியாதபடி கத்தல்கள் -

ஆறு கட்டையில் ஒருத்தி புலம்புவது மட்டும் தனியாகக் கேட்டது -

“நவருங்க..அம்மா வறாங்க…” சேரி ஜனங்கள் எனக்கு ‘பராக்’ சொல்லி வழி விட்டனர்.

“யாரும் கிட்டப் போய் தொடாதீங்க, இது போலீஸ் கேஸ்” என்னோ கொஞ்சம் விவரம் அறிந்தவன், அதட்டிக் கொண்டிருந்தான்.

விலகிய கூட்டத்தின் வழியாக, நான் அந்தப் பெண்ணைப் பார்த்தேன்-நான்கு, ஐந்து வயசுக்குள் தான் இருக்கும்.

அம்மண உடம்பில் புழுதி படிந்திருந்தது.

கழுத்தில் பாசி மணி, செம்பட்டைத் தலை, கையில் மந்திரித்த அழுக்குக் கயிறு-அந்தக் குழந்தை மல்லாந்து கிடந்தது.

சற்றே சாய்ந்து இருந்த தலையில் வலது பக்கம் பஸ் மோதியதற்கு அடையாளமாக, மண்டை ஓடு விருந்து மூளை தெரிந்தது. நான்தான் மூளை; என்னை சரியாகப் பாருங்கள் என்பதுபோல, கொஞ்சம் மூளைத் துண்டுகள் இரண்டடி பரப்பில் இறைந்திருந்தன.

பாதி மூடின கண்கள் -

உடம்பில் சுவாசம் இருந்தது. வினாடிக்கொருதரம் விக்கல் எடுப்பதுபோல உடம்பு லேசாய் தூக்கிப் போட்டுக் கொண்டிருந்தது.

வலியா? பார்க்கப் பரிதாபமாய் இருந்தது.

“மூளை செதறிடுச்சுடிங்க…”

“கிளியம்மா பெத்த மவனே…ஒன் கதி இப்படியா ஆவோணம்?”

“தண்ணி கொண்டு வாடி..,உசிரு போறத்துக்கு முன்னாலே ரெண்டு சொட்டு உள்ளார போவட்டும்…”

எவளோ அதிகாரம் பண்ண, நசுங்கின அலுமினிய செம்பில் ஜாலம் கொண்டுவந்தாள், ஒருத்தி.

விரலை நனைத்து, குழந்தையின் வாயில் சில சொட்டுக்களை விட்டாள். கொஞ்சம் உள்ளே போயிற்று. பிறகு விட்ட ஜாலம் கன்னத்து வழியாய் வழிந்தது. நுரை தள்ளிய வாயில் ஈ மொய்த்தது.

எனக்குப் பார்க்க சகிக்கவில்லை.

“போகலாம் வாங்கோ…”

நங்கள் திரும்பிவிட்டோம்.

குழந்தையைப் பற்றின விவரங்களைச் சொன்னால் சொக்கம்மா -

தகப்பனில்லாத பொண்ணாம் இவள் -

இரண்டாம் வருஷம் குடித்துவிட்டு கண்மண் தெரியாமல் அடித்துக்கொண்டதில் அவன் இறந்து போனானாம் -

கிளியம்மவுக்குக் கொஞ்சம் சமர்த்து போதாது – இருக்கும் சாமான்களை சுற்றி இருப்பவர் ஏமாற்றி எடுத்துக்கொண்டு விட்டனராம். கிளியம்மா வயத்துப் பிழைப்புக்காக டவுனில் இரண்டு வீடுகளில் பத்து தேய்கிறாளாம். காலையில் இந்தப் பெண்ணை எதிர்வீட்டில் விட்டுவிட்டு, நாலணா காசு கொடுத்து விட்டுப் போவாளாம் – அவர்கள் கொடுக்கும் பழையதையோ, இட்லியையோ, இல்லை கோப்பைக் கஞ்சியையோ உண்டுவிட்டு இது, தெருவில் விளையாடிக்கொண்டிருக்குமாம். மாலையில் கிளியம்மா வீடு திரும்பியதும் மகளை அழைத்துக் கொள்வாளாம்.

அல்லல் படவே பிறந்த இந்தக் குழந்தைக்கு இப்படி ஒரு கஷ்டமா?.

எனக்குப் பாவமாக இருந்தது.

வீட்டினுள் பொய் கை, கால்கள் அலம்பிக் கொண்டேன்.

“சாப்பிட வரப்போறயோ, இல்லையோ? எண்ணெய் தேய்ச்சு தூத்தாமாடிட்டு இப்படி வெய்யிலே அலையறயே-தலைவலி வரப்போறது…” சமையல்கார மாமி உரிமையுடன் கோபித்தாள்.

“இதோ வரேன்..தட்டு போடுங்கோ…”

ஏதோ அசிங்கத்தைப் பார்த்துவிட்ட மாதிரி, சாப்பாடு உள்ளே போக மறுத்தது.

பேருக்கு சாப்பிட்டுவிட்டு மீண்டும் வாசலுக்கு வந்தேன்.

கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் ஆகிவிட்டதால், வெயில் ஏறிப் போய், கூட்டம் ஆங்காங்கு மாற நிழலில் நின்றுகொண்டிருந்தது.

பஸ் டிரைவரை எப்படியோ காபந்து பண்ணி பாக்டரி ஆபீஸ் ரூமுக்குள் வைத்துவிட்டார்களாம்.

“அந்த கொளந்தை செத்திடுச்சுங்க” என்றன் வெளியே யிருந்த வந்த தோட்டக்காரன்.

போகட்டும்-கிடந்தது அவஸ்தைப்படாமல் போய்ச் சேர்ந்ததே.

பஸ் காலியாகி விட்டது. கூட்டத்தின் வெறி கொஞ்சம் அடங்கினதும், ‘தப்பித்துப் போனால் சரி’ என்று பயணிகள் எல்லோரும் இறங்கி நடந்தோ, வேறு பஸ்ஸிலோ போய்விட்டனர்.

‘உன்பாடு என்பாடு’ என்று ஒரு வழியாய் போலீஸ் வந்து சேர்ந்தது. பஸ்ஸை கல் கொண்டு சின்னபின்னம் செய்து கொண்டிருந்தவர்கள் கொஞ்சம் அடங்கிப் போனார்கள்.

எனக்கு போரடிக்க ஆரம்பித்தது -

‘எத்தனை நாளிகை வேடிக்கை பார்ப்பது – உள்ளே போகலாம்’ என்று திரும்பினவள், சட்டென்று கூட்டத்தில் எழுந்த சலசலப்பைக் கண்டு நின்றேன்.

ஆங்காங்கு நின்றிருந்த பெண்கள் ஓடிவந்து குழந்தை விழுந்து கிடந்த இடத்தைச் சுற்றி கொண்டார்கள். கீச்சுக் குரலில் ஒருத்தி பிலாக்கணம் பாட ஆரம்பித்தாள்.

“அந்தால பாருங்க..கிளியம்மா வறா…”

சாலையில், இடது பக்கத்தில் டவுனிலிருந்து வரும் திசையில், தலைவிரிகோலமாய் ஒரு பெண் ஓடிவருவது புரிந்தது.

அவளுடன் நாலு பேர் ஓட்டமும் நடையுமாய் வந்துகொண்டிருந்தனர். கிட்ட வரவர மரங்கள் பார்வையை மறைத்ததால் மொட்டைமாடிக்குச் செம்று நின்றுகொண்டேன். வேடிக்கை பார்க்க என்னோடு சமையல்கார அம்மாள், தோட்டக்காரன், சொக்கம்மா, இன்னும் யார் யாரோ-

இரண்டு கைகளையும் தலைக்கு மேல் தூக்கி படார்படார் என்று வயிற்றில் அந்தப் பெண் அடித்துக்கொண்டு வந்தாள்.

“என் ராசாத்தி…
யம்மாடீ…ஈ…
யம்மாடீ…ஈ…” அடிவயிற்றில் எழுந்த வேதனையை அடித்து, அடித்து அடக்குவது போல அவள் குமறிக்கொண்டு வருவது என் மனசை நெகிழ வைத்தது.

“யம்மாடீ…யம்மாடீ…” அவள் எங்களைக் கடந்து பெண் பிணம் கிடக்கும் இடத்திற்குப் போவதற்குள், அவளின் வேதனை தொற்றிக்கொண்டது போல எல்லோருமே கத்த ஆரம்பித்தனர்.

கடைசி நூறு அடிகளை எப்படிக் கடந்தாளோ! புயலெனப் பாய்ந்துபோய் மகளின் சடலத்தில் விழப் போனாள் அந்தத் தாய் -

பிணத்தை நெருங்கியவளின் கையைப் பிடித்துக்கொண்டார் போலீஸ்காரர்.

“சித்த இரும்மா..எடத்தை அளந்து போட்டோ பிடிக்க ஆளுங்க வராங்க. இப்போ ஒண்ணையும் கலைக்கக் கூடாது…”

“எம் மவளே…ஐயோ ராசாத்தீ…ஈ…”

கட்டுப்படுத்தப்பட்ட வெள்ளம் அணையில் முட்டிக் கொள்வது போல, தரையில் விழுந்து முட்டிக்கொண்டும், மோதிக்கொண்டும், உருண்டு புரண்டாள் அந்தத் தாய்…

பார்த்துக்கொண்டே நின்ற எனக்கு, சட்டென்று எல்லாம் வெறுத்துப்போனது.

என்ன ஜனங்கள் இவர்கள்?

குழந்தையை இடித்துவிட்டு வண்டியை நிறுத்தாமல் போகிறான் ஒருவன்.

அரசின் சொத்தை கல்கொண்டு அழித்துவிடப் பார்க்கிறார்கள் பலர்.

டிரைவரை கொலை செய்கிறேன் என்கிறான் இன்னொருவன்.

பெத்த தாய், இறந்த குழந்தையை கையில் எடுத்து அணைத்து புலம்பக்கூட முடியாமல் எதையோ சொல்லித் தடுக்கிறான் மற்றொருவன்…

சீ என்ன ஜனங்கள்!

பொறுப்பு என்பது, மனசு என்பது, ஈவு இறக்கம் என்பது, ஒருத்தருக்குமே இல்லையா?

எனக்கு மனசு கசந்துபோனது.

குமுறும் எண்ணங்களை வளர்த்துக்கொண்டு என் நாட்டையும், அதில் வாழும் அறிவற்ற ஆயிரக்கணக்கானவர்களையும் நான் நிந்தித்துக்கொள்ளும் அந்த வினாடியில், இருண்ட அறையில் வெளிச்சம் பிறக்கிறாற்போல் என்னுள் அந்தக் கேள்வி பிறந்தது.

எல்லோரையும் நிந்திக்கிறேன்! இந்த நாடு என்று உருப்படும் என்று தவிக்கிறேன்! ஆமாம், நான் என்ன செய்தேன்?.

நானா?. நான்..நான் என்ன பண்ண முடியும்?.

ஏன் முடியாது?. அடிப்பட்ட குழந்தையை டாக்டரிடம் எடுத்துப் போயிருக்க முடியாதா?. இல்லை டாக்டர் யாருக்காவது போன் பண்ணி வரவழைத்து பார்த்திருக்கக் கூடாதா?. தக்க சமயத்தில் வைத்தியம் செய்திருந்தால், அந்தக் குழந்தை பிழைத்திருக்குமோ என்னவோ?. என்ன பண்ணினேன்?. ஒன்றுக்கும் உபயோகமில்லாமல் அந்தக் கூட்டத்தோடு கூட்டமாய் நானும் நின்று வேடிக்கை பார்த்தேன், இல்லையா?. படித்து, உலகமறிந்து, வசதியுடன் இருக்கும் நானே இப்படிப் பொறுப்பற்று இருந்துகொண்டு, மற்றவர்களை எப்படிக் குறை சொல்லலாம்?.

என் கண்களில் ஜலம் தளும்பி கன்னத்தில் வழிந்து ஓடியது.

வாஸ்தவம்தான் – எனக்கு என்ன யோக்யதை?.

- வெளியான ஆண்டு: 1975 

தொடர்புடைய சிறுகதைகள்
"அம்மா..." "என்ன இந்துக் குட்டீ?" "என்னம்மா பண்ணிட்டு இருக்கீங்க?" "ஒரு க்ளயண்டோட முக்கியமான விஷயம் பேச வேண்டியிருக்கு-அதுக்காக பாயிண்ட்ஸ் தயாரிச்சிகிட்டு இருக்கேன்..என்ன வேணும்மா?" "இல்லேம்மா.. வந்து..." "சொல்லு டார்லிங், அம்மாக்கு நாழியாவுது பாரு..." "நாளன்னிக்கு எங்க ஸ்கூல்ல ஸ்போர்ட்ஸ் டே மம்மி... நீங்களும், டாடியும் வரணும் மம்மீ.." "நாளன்னிக்கா? ஏழாம் தேதியா? ...
மேலும் கதையை படிக்க...
எப்படி? எப்படி இது சாத்தியம்? யாராலும் நம்பவே முடியவில்லை. வியப்பும் தவிப்புமாகத் திணறினார்கள். அக்ரஹாரத்துக் காற்றில் சற்று முன் பலாமரத்து வீட்டம்மா சொன்ன சேதி கும்மியடித்துக் கொண்டிருந்தது. அய்யன் குளக்கரை அரச மரம் கூட இலைகளை சலசலத்துப் பேசிக்கொண்டது. பலாமரத்து வீடு, அந்த ...
மேலும் கதையை படிக்க...
ப்ரீதி ரொம்ப சுத்தம். இன்றைக்கு என்றில்லை, சின்ன வயசு முதற்கொண்டே இந்த சுத்த உணர்வு ரொம்ப ஜாஸ்திதான். இவளையொத்த பெண்கள் பள்ளி விடுமுறை நாட்களில் ஸ்கூல் எக்ஸ்கர்ஷன், மகாபலிபுரம் போகிறோம். திருநீர்மலை ஏறப் போகிறோம் என்று அலைந்த நாட்களில் கூட, அவள் ...
மேலும் கதையை படிக்க...
சியாமா-எங்கள் நாய்-இரண்டு நாட்களாய் சரியாய்ச் சாப்பிடுவதில்லை; மந்தமாய் இருக்கிறாள். டாக்டரிடம் கொண்டு காட்டினோம். 'நத்திங் டூ ஓர்ரி.. டிவர்ம் பண்ணுகிறேன்... சரியாயிடும்' என்றவர், "எக்ஸசைஸ் கொஞ்சம் கொடுத்துப் பாருங்களேன்; உடம்பு சுறுசுறுப்பாகும்" என்று சொன்னார். என்ன தேகப் பயிற்சி கொடுப்பது! பந்து விட்டெறிந்த பார்த்தேன்-இரண்டு ...
மேலும் கதையை படிக்க...
அன்று சியாமாவுக்கு இறைச்சி வாங்கிவரும் ஆள் வரவில்லை. வயலில் கரும்பு வெட்டுகிறார்களாம், போய் விட்டான். தேசிய நெடுஞ்சாலையில் அந்த டவுனுக்கு தெற்கே ஒன்றரை கிலோ மீட்டர் தள்ளி அமைந்திருந்த தொழில்சாலையில் எங்கள் இல்லமும் இருந்ததால் ஏதொரு விஷயத்திற்கும் எந்த ஒரு சாமான் வாங்கவும் ...
மேலும் கதையை படிக்க...
தாய்
பலாமரத்து வீடு கதை!
சுத்தம்
வாக்
வைராக்கியம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)