நீ என்றுமே என் மகன்தான்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 12,001 
 

மணி மாலை ஐந்து மணியை நெருங்கியது. நார்மா அன்று வேலை செய்தவரை போதுமென்ற முடிவுடன் அனைத்தையும் ஒழுங்கு செய்துவிட்டு, கணினியை நிறுத்திவிட்டு, கைப்பையை எடுத்துக் கொண்டு அறையை விட்டுக் கிளம்பினாள். “பை, பை, நார்மா, நாளை பார்க்கலாம்,” என்று புன்னகைத்தாள் உடன் பணி செய்யும் ரோஸ். மெலிதாக வரவழைத்துக் கொண்ட புன்னகையுடன் தலையை அசைத்துவிட்டு வெளியே வந்தாள் நார்மா. குளிரூட்டிய கட்டிடத்தில் இருந்து வெளியே வந்ததும் கோடை வெயில் தகித்தது. கார் நிறுத்துமிடத்தை நோக்கி நடந்தாள். மகளின் கல்விக்காக கடன் வாங்குவதற்கு வங்கியில் அவள் செய்த விண்ணப்பத்திற்கு நாளை முடிவு தெரிந்துவிடும் என நினைத்துக் கொண்டாள். அவள் கணவன் கார்லின் நம்பிக்கைத்ரோகம் இந்த இரண்டு மாதங்களில் அவள் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டுவிட்டது.

காரை நெருங்கிய நார்மா கதவைத் திறந்தவண்ணம் வழக்கம் போல பிள்ளைகளைப் பள்ளியில் இருந்து அழைத்துக் கொண்டு வீடு செல்லத் தீர்மானித்தாள். அவளது வண்டி கிளம்பிய பொழுது கைபேசி ஒலித்தது , அவளது வழக்கறிஞர் வில்லியம் அழைக்கிறான் எனத் தெரிந்தது. வண்டியை நிறுத்திவிட்டு, கதவின் கண்ணாடிகளை காற்று நன்கு வரும்படி இறக்கிவிட்டு நார்மா அவனுடன் பேசினாள். வில்லியமின் குரலின் தொனியில் இருந்து அவளால் அவன் உணர்சிகளைப் புரிந்து கொள்ள முடியவில்லை. அவன் இயந்திரம் போலப் பேசினான்.

“நார்மா, டி. என்.ஏ மரபணு சோதனையின் முடிவுகள் வந்துவிட்டன. அதன்படி உன் மகன் டேனியல் உன் கணவன் கார்லின் மகன் அல்ல.”

நார்மாவிற்கு தன் காதுகளையே நம்ப முடியவில்லை. அதைத்தொடர்ந்து வில்லியம் சொன்னதன் பொருள் அவளுக்கு சுத்தமாக விளங்கவே இல்லை.

“நார்மா, டேனியல் உன் மகனும் அல்ல.”

நார்மா பேச்சிழந்தாள், மறுமுனையில் அமைதியைக் கண்டு வில்லியம், “நார்மா, நார்மா” என்று பதறினான்.

“சொல்லு வில்லியம், நீ என்ன சொல்கிறாய் என்று எனக்குப் புரியவில்லை” என்றாள் நார்மா.

“நீ எங்கிருக்கிறாய் நார்மா?”

“வேலையில்தான், இப்பொழுதுதான் காரைக் கிளப்பினேன், பிள்ளைகளைப் பள்ளியில் இருந்து அழைத்து வரப் போகிறேன்.”

“வேண்டாம், நீ வண்டியை ஒட்டாதே. அங்கேயே இரு, நான் வந்து உன்னையும் பிள்ளைகளையும் வீட்டுக்கு அழைத்துப் போகிறேன், உன்னுடன் பேச வேண்டும். குழந்தை பிறந்த பொழுது மாறி இருக்க வேண்டும். ஒரு கால் மணி நேரத்தில் வந்து விடுகிறேன். அங்கேயே இரு,” என்று அவள் மறுத்துப் பேச வாய்ப்பளிக்காமல் தொலை பேசியைத் துண்டித்தான் வில்லியம்.

அவன் கடைசியாகச் சொன்னதன் பொருள் இப்பொழுதுதான் நார்மாவிற்கு புரிந்தது. டேனியல் தன் மகன் இல்லை என்றா சொன்னான்? ஐயோ, அதை நினைத்தால் அவள் இதயமே வெடித்துவிடும் போலிருந்தது. டேனியலின் துறுதுறுப்பான முகம் கண் முன் வந்தது. கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தும் அதற்கிடையே டேனியலின் புன்னகை நிறைந்த முகம் தெரிந்தது. இது போன்ற செய்தியைக் கேட்கும் நிலைக்குத் தன்னைத் தள்ளிய கணவன் கார்ல் மீது கோபம் கோபமாக வந்தது.

கார்ல், நகரில் உள்ள ‘சீமென்ஸ்’ என்னும் ஜெர்மன் பன்னாட்டு நிறுவனத்தில் பணியாற்றிக்கொண்டிருந்தான். மின்னணுவியல் கருவிகளின் வர்த்தகப் பிரிவில் அவனுக்கு வேலை என்பதால் பெரும்பாலும் ஜெர்மனியில் உள்ள தலைமை அலுவலகத்திற்கும் பிற நாடுகளுக்கும் சென்று வருவது கார்லின் பொறுப்பாக இருந்தது. மாதத்தில் பாதிக்கும் மேலான நாட்கள் வேலை காரணமாக பயணம் செய்வதிலேயே கழிந்துவிடும். அவனது முன்னோர்கள் ஜெர்மனியில் இருந்து வந்து குடியேறியவர்கள். அதனால் கார்லுக்கு ஜெர்மன் மொழியில் நன்கு பேசவும் தெரியும் என்பது அவன் வேலையில் அதிவேகமாக வளர உதவியிருந்தது. நார்மா, நகரில் உள்ள கிறிஸ்டோபர் நியூ போர்ட் பல்கலைக் கழகத்தில் நிர்வாகப் பிரிவில் வேலை செய்து கொண்டிருந்தாள்.

அவர்களுக்கு திருமணமாகி இருபது ஆண்டுகள் உருண்டோடி விட்டது. பிள்ளைகளில் பெரியவள் மகள் டெப்ரா ஒரு தனியார் பள்ளியில் இறுதியாண்டு படித்துக்கொண்டிருந்தாள். மகன் டேனியல் மகளை விட நான்கு வயது இளையவன். அவனும் டெப்ரா படிக்கும் அதே தனியார் பள்ளியில் நடுநிலை வகுப்பில் படித்துக் கொண்டிருந்தான். நார்மாவிற்கு தனது பிள்ளைகளை புகழ் பெற்ற ‘ஐவி லீக்’ கல்லூரிகளில் படிக்க அனுப்ப வேண்டும் என்று விருப்பம். கார்லின் ஆண்டு வருமானம் ஆறு இலக்கங்களில் இருந்ததால் அவளது கனவினை செயல்படுத்த முடிந்தது. புகழ் பெற்ற பல்கலைக் கழங்களில் படிக்க வைப்பதற்கு தயார்ப் படுத்தும் விதமாக பிள்ளைகளை நல்ல தனியார் பள்ளியில் சேர்க்க முடிந்தது. இதோ, அடுத்த ஆண்டு டெப்ராவிற்கு கார்நெல் பல்கலை கழகத்தில் சேர அனுமதி கிடைத்துவிட்டது. எல்லாம் அவள் நினைத்த வண்ணம், திட்டமிட்ட வண்ணம் வாழ்க்கையில் நடப்பதாக நினைத்த பொழுது எதிர்பாராத அதிர்ச்சி அளிக்கும் நிகழ்வும் நடந்தது.

எதிர்பாராதது என்று சொல்வது சரியாக இருக்காது. அவளுக்கு கார்லின் நடவடிக்கையில் மாறுதல் தெரிந்தது. சென்ற ஆண்டு பதவி உயர்விற்குப் பின்பு அவனது வெளிநாட்டுப் பயணங்கள் அதிகரித்தது. வீட்டிற்கு வருவது குறைந்தது. இருந்த நாட்களிலும் முன்பு போல பிள்ளைகளை அழைத்துக் கொண்டு புஷ் கார்டன், கொலோனியல் வில்லியம்ஸ்பர்க், விர்ஜீனியா பீச் என ஊர் சுற்றுவதைக் குறைத்துக் கொண்டான். திரைப்படம், உறவினர் வீடு, விருந்துகள் எனக் குடும்பத்துடன் எங்கும் செல்வதில் ஆர்வம் காட்டவில்லை. இதைப்பற்றி நார்மா ஏதேனும் கேட்டால், தனது பதவி உயர்விற்குப் பிறகு பணிச் சுமை அதிகரித்து விட்டது, நிற்கவும் நேரம் இல்லை என்பது போன்ற பதில் வரும். அத்துடன் அவள் பொறுப்பாகக் குடும்பத்தைப் பார்த்துக் கொண்டு, பிள்ளைகளையும் வளர்த்து வருவது அவனுக்கு வேலையில் கவனம் செலுத்த உதவியாக இருக்கிறது என்று நன்றி சொல்லுவான். மேலும் இதுபோன்று கடுமையாக உழைத்தால் விரைவில் ஜெர்மனியில் உள்ள தலைமை அலுவலகத்தில் நிர்வாகத் துறையில் பணி செய்ய நல்ல வாய்ப்பும் இருக்கிறது என்பான்.

அவளுக்கு அதில் அவ்வளவாக விருப்பம் இல்லாவிட்டாலும், அவன் வீட்டில் இருக்கும் ஓரிரு நாட்களில் எப்பொழுதோ நடக்கப் போவதைப் பற்றி விவாதிக்க விரும்பியதில்லை. அந்த சமயம் வரும் பொழுது அதைப்பற்றி கவலைப் பட்டுக் கொள்ளலாம் என அமைதியாக இருந்து விடுவாள். டெப்ராவின் பள்ளி நாட்கள் முடிய இரண்டு மாதங்கள் இருக்கும் பொழுது நார்மாவிடம் இருந்து திருமணமுறிவு கேட்டு கார்ல் நீதிமன்றம் வழியாக அனுப்பிய அறிவிப்பு கிடைத்தது. ‘அவளுடன் இனி வாழ விருப்பம் இல்லை’ என்பது அவன் கூறிய காரணம். வாழ்வின் மத்திய வயதில் சிலருக்கு வரும் ‘மிட் லைஃப் கிரைசிஸ்’ என்னும் பைத்தியக்காரத்தனம் இவனுக்கும் வந்துவிட்டது போலிருக்கிறது என்று நார்மா எண்ணினாள். கடைசியாக கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறைக்கு வீடு வந்து சென்றவன் அதுவரை மீண்டும் வீட்டிற்கு வராத காரணமும் புரிந்தது. இந்த முறை அவன் வீட்டிற்கு வந்து நான்கு மாதங்கள் போலாகிறது.

முதலில் இதை அவள் பிள்ளைகளிடம் சொல்லி அவர்களது மன அமைதியைக் குலைக்க விரும்பவில்லை. கார்லைத் தொடர்பு கொள்ள அவள் செய்த எந்த முயற்சியும் பலிக்கவில்லை. அவளது தொலை பேசி அழைப்பு, மின்னஞ்சல் என அனைத்தையும் தவிர்த்தான். இனி நீதி மன்றம் வழியேதான் அவர்கள் தொடர்பு என்பது போலிருந்தது அவனது நடவடிக்கை. வேறு வழியின்றி கார்லுடன் பணியாற்றும், அவனுடன் பெரும்பாலான பயணங்களில் துணையிருக்கும் ஆண்ட்ரூவைத் தொடர்பு கொண்டாள். அவன் ஒருவாறு மென்று விழுங்கி சொன்ன செய்தி மேலும் அதிர்ச்சி அளித்தது. கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாகவே கார்லுக்கு ஜெர்மனியில் ஒரு தோழி இருப்பதாகத் தெரிந்தது. அதை ஆண்ட்ரூ சாதாரண நட்பு என நினைத்ததாகச் சொன்னான். ஆனால், கார்ல் இப்பொழுது ஜெர்மனியில் உள்ள தலைமையகத்தில் வேறு வேலை ஒன்றைத் தேடிக்கொண்டு இப்பொழுது அந்தப் பெண்ணுடனேயே வசித்து வருவதாகச் சொன்னான். அவனுக்கு மீண்டும் அமெரிக்காவிற்கு வரும் எண்ணம் இருப்பதாகத் தெரியவில்லை, திருமண முறிவிற்குப் பிறகு அந்தப் பெண்ணையே மணக்க எண்ணியிருக்கலாம் எனவும் சொன்னான்.

இந்தப் பிரச்சனைக்கு வேறு முடிவில்லை என்பது நார்மாவிற்கு புரிந்தது. பிள்ளைகளிடம் சொல்லிவிட்டு தனது பள்ளிநாட்களில் உடன் படித்த, இப்பொழுது திருமணமுறிவு வழக்குகளை கையாள்வதில் சிறந்தவன் எனப் பெயர் வாங்கிய வில்லியமைத் தொடர்பு கொண்டாள். தானும் திருமண முறிவிற்கு சம்மதிப்பதாகவும், குழந்தைகளை வளர்ப்பதற்கு ஆதரவாக தந்தை என்ற முறையில் கார்லிடம் இருந்து மாதா மாதம் பணம் ஒழுங்காக வருவதற்கு ஏற்பாடு செய்வதை மட்டுமே அவள் விரும்புவதாகத் தெரிவித்தாள். கார்ல் மீது ஏற்பட்ட வெறுப்பில், அவன் செய்த நம்பிக்கைத் துரோகத்தில் கொதித்துப் போன நார்மாவிற்கு கார்லிடம் உதவித் தொகை எதிர்பார்ப்பது கொஞ்சமும் பிடிக்கவில்லை. ஆனால் டெப்ராவின் கல்லூரிக்காகும் கல்விச் செலவையும், டேனியல்லின் தனியார்ப் பள்ளி கல்வியையையும் அவளது வருமானத்தில் மட்டுமே சமாளிக்க முடியாது. அத்துடன் தந்தையின் கடமையில் இருந்து கார்ல் எளிதாகத் தப்பி விடுவதையும் அவள் விரும்பவில்லை. பிள்ளைகளின் நல்ல எதிர்காலத்திற்கு அவள் இதைச் செய்தே ஆக வேண்டும்.

வழக்கு நீதிமன்றத்திற்கு வந்தது. நீதிமன்றத்திற்கு வந்த கார்ல் நீதிபதியிடம் மகளுக்கு பதினெட்டு வயது தாண்டிவிட்டதால் அவளது செலவிற்கு இனி தான் பொறுப்பேற்க முடியாது என்று தெரிவித்தான். நார்மாவின் வழக்கறிஞர் வில்லியம் நார்மாவின் காதில் மெதுவாக, “இதுதான் கார்லின் திட்டம் போலிருக்கிறது. இது போன்று தவிர்ப்பதற்காகவே இதுவரைப் பொறுத்திருந்து, மகளுக்கு பதினெட்டு வயது தாண்டியதும் அத்துடன் கையைக் கழுவிக் கொள்வதற்கு திட்டமிட்டு, இப்பொழுது திருமண முறிவிற்கு கார்ல் விண்ணப்பித்திருக்கிறான்,” என்றான். நார்மா பல்லைக் கடித்து கோபத்தை அடக்கிக் கொண்டாள். ஆனால் கார்ல் அடுத்து சொன்னதை நார்மாவும் வில்லியமும் கொஞ்சமும் எதிர்பார்க்காமல் அதிர்ச்சி அடைந்தார்கள்.

கார்ல் மிக அமைதியாக நீதிபதியிடம், டேனியல் தனக்குப் பிறந்தவன் இல்லை. தனது சாயல் அவனிடம் சிறிதும் இல்லை. டேனியல் தன் மகன்தானா என்றே சந்தேகமாக இருப்பதால் அவனை வளர்ப்பதற்கு தன்னால் உதவித் தொகை தர இயலாது என்றான். அத்துடன் நார்மா தனக்கு துரோகம் செய்திருக்கிறாள் என்ற அடிப்படையில்தான் அவனுக்கு திருமணமுறிவு பெறவேண்டும் என்ற எண்ணமே எழுந்ததாகவும் சொன்னான். நார்மா தன் மேல் விழுந்த பழியை எண்ணிக் கொதித்துப் போனாள். சாடாரென இருக்கையை விட்டு எழுந்தவளை வில்லியம் கையைப் பிடித்திழுத்து இருக்கையில் அமர்த்தினான். அவள் உதடு துடித்தது. அவள் கையை அழுத்தி அமைதியாக இரு என்று சைகை செய்தான். கார்லின் அவதூறுக்குப் பதறிய நார்மாவை நீதிபதி திரும்பிப் பார்த்துவிட்டு, மீண்டும் கார்லைத் திரும்பிப் பார்த்தார். சிறிது மௌனத்திற்குப் பிறகு, கார்லிடம் அவன் என்ன சொல்கிறான் என்று புரிந்துதான் பேசுகிறானா என்று கேட்டார். கார்ல் அழுத்தம் திருத்தமாக, தெளிவாக தான் புரிந்துதான் பேசுவதாகக் கூறினான். நீதிபதி இப்பொழுது வில்லியமைத் திரும்பிப் பார்த்தார். இதற்குள் அடுத்து செய்ய வேண்டியதை முடிவு செய்திருந்த வில்லியம், டி.என்.ஏ. மரபணுச் சோதனை செய்வதற்கு நார்மா தயாராக இருப்பதைத் தெரிந்து கொண்டு நீதிபதியிடம் அவள் விருப்பத்தைத் தெரிவித்தான். பரிசோதனை முடிவு வரும் வரை வழக்கும் தள்ளி வைக்கப் பட்டது.

சோர்ந்து போய் வீடு வந்த நார்மாவிற்கு இதைப் பிள்ளைகளிடம் எப்படி சொல்வது என்றே தெரியவில்லை. அவள் ஒரு வழியாகச் சொல்லி முடித்ததும், பிள்ளைகள் இருவரும் அதிர்ச்சி அடைந்தார்கள். டேனியல் கண்கள் கலங்கி அழுதவாறு தன் அறைக்கு ஓடிவிட்டான். பதினான்கு வயது சிறுவனுக்கு இதைவிட அதிர்ச்சி இருக்க முடியாது. பிள்ளைகளைச் சமாதனப் படுத்தவோ, மற்ற வேலைகளைச் செய்வோ திறனின்றி நார்மா படுக்கையில் சாய்ந்தாள். அதிர்ச்சியில் அழ முடியாமல் அவள் மனம் வெறுமையாக இருந்தது. தொடர்ந்து சில நாட்கள் நார்மாவும் பிள்ளைகளும் இயந்திரம் போல இயங்கி வாழ்க்கையை ஓட்டினார்கள்.

அவளுக்குத் தெரியாமலே டேனியல் தனது மகன்தானா என்று சந்தேகப்பட்டு கார்ல் டி.என்.ஏ. மரபணுச் சோதனை செய்திருப்பான் போலிருக்கிறது என்று இப்பொழுது நார்மாவிற்கு தோன்றியது. அதுதான் அவ்வளவு ஆணித்திரமாக நீதிமன்றத்தில் குற்றம் சாட்டியிருக்கிறான் போலிருக்கிறது. ஆனால் டேனியல் அவள் மகனும் இல்லை என்ற இந்த மரபணுச் சோதனையின் முடிவை அவனும் எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லை.

கடந்து முடிந்தவைகளைப் பற்றிய சிந்தனையில் இருந்த நார்மாவை கார் ஹாரனின் ஒலி நினைவுலகதிற்கு கொண்டு வந்தது. அருகில் வந்து நின்ற வில்லியமின் வண்டியின் பின் இருக்கைகளில் டெப்ராவும், டேனியலும் அமர்ந்திருந்தார்கள். அவர்களை அவனே அழைத்து வந்துவிட்டான். தன் காரின் கண்ணாடிகளை ஏற்றிவிட்டு, கதவையும் பூட்டிவிட்டு நார்மா வில்லியமிற்கு அருகில் வந்து உட்கார்ந்தாள். பிள்ளைகளைத் திரும்பிப் பார்த்து புன்னகைப்பதைத் தவிர்த்தாள். அது அவளது அழுத முகத்தை அவர்களிடம் இருந்து மறைக்க அவள் செய்த முயற்சி. ஆனால் அவர்கள் அவள் முகத்தையே பார்ப்பது அவளுக்குப் புரிந்தது. வில்லியமின் காரில் பீஸா மணம் வந்தது. அவனே அவளது நிலையை உணர்ந்து கொண்டு, அவர்களுக்கு இரவு உணவும் வழியில் வாங்கி வந்திருந்தான். அவனுக்கு எப்படி நன்றி சொல்வதெனப் புரியாமல் கலங்கிய கண்களுடன் அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்தாள் நார்மா. அவன் அமைதியாக அவள் தோளை ஆதரவாகத் தட்டிக் கொடுத்துவிட்டுக் காரைக் கிளப்பினான்.

அன்றிரவு பிள்ளைகளின் பொறுமையை சோதிக்காமல், நார்மா ஒரு வழியாக டி.என்.ஏ. மரபணு சோதனை முடிவுகளை விசும்பிக் கொண்டே மெதுவாகத் தெரிவித்தாள். டேனியலின் முகத்தைவிட்டு அவள் கண்களை நார்மாவால் அகற்ற முடியவில்லை. செய்தியைக் கேட்டதும் அவள் மடியில் முகம் புதைத்து டேனியல் அழுதான். நார்மாவும் அவனுடன் சேர்ந்து அழுதாள். டெப்ரா அருகில் வந்து அமர்ந்து டேனியலின் முதுகை வருடிக் கொடுத்துக் கொண்டே இறுகிப் போன குரலில், “இப்பொழுது என்ன செய்வது வில்லியம்?” என்றாள்.

“உன் தந்தையை இனி குழந்தை வளர்ப்பில் பங்கேற்க சொல்லி உதவித் தொகை கேட்டுக் கட்டாயப் படுத்த முடியாது …” என்று தொடங்கிய வில்லியமை டெப்ரா இடைமறித்து, “அவர் பணம் எங்களுக்குத் தேவையில்லை, எங்களால் எங்கள் சக்திக்கு ஏற்றவாறு வாழமுடியும்,” என்று நறுக்கெனப் பதில் சொன்னாள்.

“டேனியல் என் தம்பி இல்லை என்றால், அவன் யார்? அவன் பெற்றோர்கள் யார்? பிறந்த பொழுது குழந்தை மாறியிருக்கலாம் என்றால் என் தம்பியாக இருப்பவன் எங்கே இருப்பான்?” என்றாள்.

“அதை டேனியல் பிறந்த மருத்துவ மனையில் இருந்து ஆரம்பித்து துப்பு துலக்க வேண்டும், அந்த சமயம் பிறந்த குழந்தைகளை மரபணு சோதனைக்கு உட்படுத்தி தெரிந்து கொள்ளலாம், நான் ஏற்பாடு செய்கிறேன்,” என்று சொல்லிவிட்டு வில்லியம் விடை பெற்றுக் கொண்டான். நார்மாவின் காரையும் தன் நண்பன் உதவியுடன் அவள் வீட்டிற்கு கொண்டு வந்து நிறுத்திவிட்டுப் போனான்.

அவன் சொன்னபடியே அடுத்த நாளே மருத்துவமனை நிர்வாகத்தினரைச் சந்திக்க ஏற்பாடு செய்தான். மருத்துவமனை குழந்தை மாறியிருக்கும் என்ற செய்தியை முதலில் வன்மையாக, ஆணித்திரமாக மறுத்தது. பின்பு நீதிமன்ற வழக்கின் படி செய்த மரபணு சோதனை என்பதினால் தயக்கத்துடன் தகவல்களை ஆராய அனுமதி அளித்தது. டேனியல் பிறந்த அன்றே பிறந்த, ராபர்ட் என்ற சிறுவனின் தகவல்கள் மேலும் பொருந்தி அவனைத் தேடிச் சென்றார்கள். ராபர்ட்டின் குடும்பம் அருகில் உள்ள யார்க் டவுனில் தான் வசித்து வந்தனர். சந்தேகம் என்ற ஒன்று தோன்றிவிடவே அதைத் தீர்க்க அவர்களும் தயாரானார்கள். மீண்டும் மரபணு சோதனைகள், மீண்டும் அவற்றின் முடிவுகள். இந்த முறை ராபர்ட்தான் நார்மாவின் குழந்தை என்றும், டேனியல் ராபர்ட் இடத்தில் இருந்திருக்க வேண்டியவன் என்பதும் தெளிவானது. சிறுவர்கள் இருவருமே முடிவைக் கேட்டு அலறினார்கள்.

“அம்மா, அம்மா என்னை அனுப்பிவிடாதீர்கள்” என்று ஒருபுறம் அழுதான் டேனியல். “அம்மா, நான் உங்களுடன்தான் இருப்பேன், நான் அவர்கள் வீட்டிற்கு போக மாட்டேன்,” என்று ராபர்ட்டும் தன் அம்மாவின் கைகளை இறுக்கிப் பிடித்துக் கொண்டான். இரண்டு குடும்பங்களும் இரண்டு சிறுவர்களையுமே தங்களுடன் வைத்துக் கொள்ளவே விரும்பினார்கள். ஆனால் முடிவில் சிறுவர்களின் முடிவுப்படி அவரவர் வளந்த இடத்திலேயே அவர்கள் தொடர்ந்து வளரட்டும், அவ்வபொழுது பெற்றோர்கள் வந்து மற்ற குழந்தையைப் பார்த்து செல்லலாம் என்ற முடிவுக்கு ஒப்புக் கொண்டார்கள்.

“அம்மா, நீங்கள் என்னை அனுப்பிவிடுவிடுவீர்களோ என்று பயந்தேன்,” என்று நார்மாவைக் கட்டிக் கொண்டான் டேனியல். நார்மா அவன் தலையைக் கோதியபடி, “நீ என்றுமே என் மகன்தான் டேனியல், நம்மைப் பொருத்தவரை நான் உன் அம்மா, நீ என்றும் என் அன்பு மகன்தான்” என்றாள். “நீ என்றுமே ….என்றுமே என் தம்பிதான் டேனியல், உண்மை என்ன என்று தெரிந்து கொண்டோம், அவ்வளவுதான்” என்று டேனியலை அணைத்துக் கொண்டாள் டெப்ரா.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *