கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: October 11, 2012
பார்வையிட்டோர்: 12,676 
 

அதிகாலையில் விழிப்புத் தட்டியபோதே அந்த நாள் இன்றுதான் என்று சங்கரன் எம்பிராந்திரிக்குள் ஓர் எண்ணம் ஓடிற்று!

முதல் நாள்தான் மூலவருக்கும் அம்பாளுக்கும் அபிஷேகம் செய்வித்து, ஆடையுடுத்தும் வித்தையை அவருக்குச் செய்துகாட்டியிருந்தார் வைத்தி. ”நீசப்பய ஊரு ஸ்வாமி இது! தெய்வத்துத் தயவில்லாம வாழ்ந்துடலாம்னு மனசெல்லாம் தடுமன் தடுமனாக் கிடக்கு. கோயில்னு ஒண்ணு இருக்கறது சும்மா ஒரு சுத்துச் சுத்தி வர்றதுக்கு மட்டும்தான்னு எண்ணம். ஈஸ்வரனுக்கும் அம்பாளுக்கும் ஒரு சலாம் போட்டுட்டா முடிஞ்சுபோச்சுன்னு ஒரு எகத்தாளம். அங்கயும் நாலு பேரு வேல பாக்கறான், அவனுக்கும் வயிறுன்னு ஒண்ணு இருக்கு, நாலு காலமும் தெய்வத்துக்கும் அன்னம்னு ஒண்ணைக் காட்டியாகணும்னெல்லாம் ஒருத்தருக்கும் மனசுல படறதே இல்லே. கலி ஸ்வாமி, கலி. அம்பாள் சந்நிதில ஒரு செப்புக்காசு தட்டுல விழுந்துட்டா அன்னிக்கு லாட்டரி அடிச்சதுன்னு நெனெச்சுக்கிடும் ஆமா!”

அவர் தன்னிடம் பேசவில்லை என்பதைப் போல பிரகாரத்தில் காந்தும் கானலைப் பராக்குப் பார்த்துக்கொண்டு இருந்தார் சங்கரன் எம்பிராந்திரி.

”இந்த மட்டிலேதான் முப்பது வருஷம் குப்பை கொட்டி ரெண்டு பொண் குழந்தைகளையும் கரை சேத்திருக்கேன்னா பாரும். அரசாங்கம் அளக்கிற படி பத்து நாளைக்குக் காணாது. இங்கேபோய் வந்திருக்கேரே. ஈ.ஓ-வுக்குப் புத்தியைப் பின்னாலதான் கொண்டுவெச்சிருக்கோ. எப்போதாவது ஒரு திருமஞ்சனம், திருவாதிரைன்னு வந்தாத்தான் உண்டு. அதைக்கொண்டு மீதம் முன்னூத்தி முப்பத்து மூணு நாளும் ஓட்டிக்கணும். உங்க நாட்டிலேயும் தெய்வத்துக் கதி இப்படித்தானோ?”

சங்கரன் எம்பிராந்திரி இந்தக் கேள்வியால் நிலத்தில் வந்து விழுந்துவிட்டார். அங்கேயும் இப்படித்தானா? அங்கே இன்னும் தெய்வம் உசிரோடு இருப்பதைப் போலத்தானே இருக்கிறது? சின்னச் சின்ன அம்பலங்களின் நிலை வேண்டுமானால் தள்ளாட்டமாக இருக்கும். ஏக்கர் கணக்கில் கட்டிவைத்திருக்கிற அம்பலங்கள் எதுவும் அங்கே ஈயோட்டிக்கொண்டு இருப்பதாகக் கேள்வியில்லையே?

சங்கரன் எம்பிராந்திரிக்கு வந்ததிலிருந்தே கோயிலின் அமைப்பும், வாளிப்பும், கற்கள் பதித்த அகண்ட பிராகாரங்களும், தூண்களும், யாழித்தாங்குகளும், கழுகுகள் மோதும் கோபுரத்தின் சாய்வும், யாவும் பார்த்துப் பார்த்து மாளவில்லை. காரை பெயர்ந்தும் அழுக்குப் பொடிந்தும் காணும்போதே இப்படியிருக்கிறதே. கட்டிய காலத்தில் எப்படி இருந்திருக்கும்! இவர்களுக்குக் கோயில் என்பது அத்தனை பெரிய கொண்டாட்டமாக அல்லவா இருந்திருக்க வேண்டும்என் றெல்லாம் இருந்தது அவருக்கு. அத்தனை உயர சிவலிங்கத்தையும் பளபளவென்று ஆளுயரத்துக்கு நிற்கும் அம்பிகையையும் அவர் ஆயுட்காலத்தில் பார்த்ததே இல்லை.

”சரி! கோயில் நிலைதான் இப்படிக் கிடக்குன்னா, உமக்கோ கோயில் கிரமங்கள் ஒண்ணும் தெரியாதுங் கறீர். உம்மைக்கொண்டு நான் என்னத்தைத்தான் ஒப்பேத்தறது? வயசாவது எளசா இருந்தா, நீரைக் கொண்டுவாரும், பீடத்தை வழிச்சுவிடும்னு ஏவலாம், ம்ஹும்!” என்று எம்பிராந்திரியை மேலுக்குக் கீழுக்குமாக ஒரு நோட்டம் விட்டார், ”ஒரு எழுபது வயசு காணுமா உமக்கு?”

”அதுக்கு மேலே பத்துப் பதினொரு பூரம் கண்டாச்சு!” என்று புன்னகைத்தார் சங்கரன் எம்பிராந்திரி.

”என்னது?” என்று தன் வியப்பை வெளியே கொட்டியேவிட்டார் வைத்தி. ”எம்பத்தொண்ணா? நம்பவே முடியலையே! நல்லா திடமா கல்லு கல்லா இருக்கீரே!”

”எல்லாம் பகவதியோட க்ருபை!” என்று கோபுரத்தைப் பார்த்து ஒரு தரம் கண்ணை மூடினார் எம்பிராந்திரி.

அதைக் கண்டு வைத்தி சற்று நாணினாற் போல இருந்தது. அதனால், ”ஈ.ஓ. சாருக்கு என்ன வைத்தியம் பார்த்தீரு?” என்று கதையை ஆரம்பித்துவைக்க முடியுமா என்று பார்த்தார்.

”நான் வைத்தியன் இல்லை, வெறும் சிகில்சகன்.”

வார்த்தை புரியாமல் விழித்தார் வைத்தி.

”ஆயுர்வேதத்துல வைத்தியர் உழிச்சல் செய்யாது. உழிச்சல் என்னா,தேகத் திலே எண்ணெய் தேச்சுவிடற சிகில்ச்சை. அதுக்கு வேறே ஆள் காருண்டு. அவராக்கும் சிகில் சகன்மார். உழிச்சல்காரன் என்னும் பறயும்” என்றார் எம்பிராந்திரி.

”நர்ஸூ மாதிரியா?”

எம்பிராந்திரி சற்றுத் தயங்கினார், பிறகு, ”அதே!” என்றார். ”முதுகுத்தண் டிலே மேலே ஒரு ஏழு, தாழே ஒரு பந்தரண்டு, பின்னே ஒரு அஞ்சுன்னு எலும்பு அடுக்கிக் காணும். ராமச்சந்திரன் சாருக்கு அந்த அஞ்சிலே ரெண்டாம் எலும்புக்கும் மூணாம் எலும்புக்கும் நடுவிலேதான் தேய்மானம். சின்ன வயசிலே கால் முறிவு வந்து ஒரு கால் கொஞ்சம் வளர்த்திக் குறையுண்டு. அதுனாலயாக்கும் இந்தக் குழப்பம்.”

”நீரு என்ன பாஷை பேசுறீரு? தமிழாட்டம் நல்லாத்தான் புரியுது. முழுசா மலையாளம்தான் பேசுறீரா? இல்லை தமிழ்க் கலப்படமா?”-திடீரென்று கேட்டார் வைத்தி.

எம்பிராந்திரி புன்னகைத்தார், ”பாலக்காட்டுக்குப் பக்கத்திலேதானே இருந்தேன், ஒரு கலப்பு மலையாளம் அங்கே உண்டு. அதுதான் பேசும்போது வர்றது!”

”என்ன படிச்சிருக்கேரு?” என்று கேட்டுவிட்டு, எண்பது வயதான ஒரு மனிதரை இப்படி ஒரு கேள்வி கேட்கத் தகுமா என்று மனதுக்குள் அதிர்ந்தார் வைத்தி.

”அஞ்சோ ஆறோ ஓர்மையில்ல!” என்றார் எம்பிராந்திரி.

தான் அதைக்கூடப் படிக்கவில்லை என்பதைச் சொல்ல இயலாத நிலையில் வைத்தி பேச்சைத் தொடராமல் விட்டுவிட்டார்.

பேச்சு வெளியேதான் தொடரவில்லையே தவிர, இரண்டு பேருக்கும் மனதுக்குள் கேள்விகளாகவும்,பதில் களாகவும், ஞாபகங்களாகவும் தொடர்ந்துகொண்டுதான் இருந்தன. மானசீகமான அந்தப் பேச்சில் எம்பி ராந்திரி திரும்பவும் கேரளத்துக்கே போய்விட்டார்.

பன்னிரண்டு வயசில் ஆரம்பித்தது. பஞ்சகர்மாக்களை ஓர் ஆயுர்வேத வைத்தியனைப் போலத் தேர்ந்திருந்தும், வாழ்க்கை என்னவோ உடல்களை வழித்துவிடுவதிலேயே கழிந்துவிட்டது. எத்தனை வருஷம்! எத்தனை உடல்கள்! ஏ அப்பா… உருண்டது, திரண்டது, ஒத்தைநாடி, தொப்பை சுமந்தது, உயரமானது, குள்ளமானது, கறுத்தது, சிவந்தது என்று எத்தனை உடல்கள், ரோகத்தோடு வந்து சேரும் மனித உடல்கள்!

ரோகத்தின் தீவிரத்தைப் பொறுத்து ஏழு நாள் அல்லது அதன் மடங்குகளில் ஆயுர்வேத எண்ணெய்கொண்டு அப்யங்கம், சிரோவஸ்தி, சிரோதாரா, பிழிச்சல், ஞவரக்கிழி, எலக்கிழி என்று வைத்தியர் குறிப்பிடும் சிகிச்சையைச் செய்துவிட்டு, தேகத்தை நேர்ப்படுத்தி, திருப்தியுற்ற அந்த முகங்களையும் மனங்களையும் பார்த்துப் பார்த்து காலம் கழிந்துபோயிற்று. அதைத் தவிர வாழ்வில் வேறு சுகம் என்று ஒன்று கிடையாது.

மனித உடல்கள் என்றால், எல்லாம் ஆண் உடல் கள். பெண் என்று அவர் ஆயுட்காலத்தில் தீண்டிப் பார்த்தது ஒரே ஒருத்தியைத்தான். அதுவும் வெறும் தீண்டலோடு முடிந்துபோன ஒன்று. அதிகபட்சமாக ஓரிரு முத்தங்கள். இரண்டொரு ஆவிகோத்த அணைப் புகள். அவ்வளவுதான். அவரது மார்பில் படுத்துக் கொண்டு, அவர் அவளுக்கு எழுதிய தாளை வாசித்துக் காட்டினாள். அதுவே தேனைப் போன்ற சுவையுள்ளதாக இருந்ததே என்று இப்போதும் எம்பிராந்திரி வியந்துபோகிறார். அன்றைக்கு அத்தனை தனிமையில் தான் ஏன் அந்தக் கறுத்த அழகை ஆட்கொள்ளவில்லை என்று அவரது மனதில் ஒரு பூதம் அவ்வப்போது எழுந்து அடங்கும். தனக்கே சொந்தமாகப் போகிற ஒரு பெண்ணைப் பெண்டாள எல்லோருக்கும் மனம் வருவதில்லைதான் என்று தனக்குத்தானே ஒரு சமாதானமும் எழுந்து அடங்கும்.

அப்புறம் என்ன நடந்தது? அவளுக்குப் பிடித்தால் போதுமா? அவளது அம்மாவுக்கும் பிடிக்க வேண்டாமா? இந்த உலகத்தில் எந்தக் கிறுக்க னாவது காதலிக்கும் பெண்ணின் அம்மாவின் சம்மதம் இல்லாமல் போனதற்காக, ஓடி வரத் தயாராக இருந்த காதலியைக் கைவிடுவானா? வஞ்சிப் பானா? சங்கரன் எம்பிராந்திரி அதைத்தான் செய்தார். தான் செய்வது சரியானது என்றே நினைத்தார். என்ன தான் இருந்தாலும் ஒரு தாயாரின் மனதை நோகவிட லாமா? இருந்தாலும் அந்தப் பெண்ணுக்குச் செய்தவஞ்சகம்? அதை என்ன செய்வது? அதற்காக அவர் தன் ஆயுளைத் தனிமையின் கூட்டுக்குள் அடைத்தார். எந்தப் பெண்ணைப் பார்த்தாலும், அவளுக்கு என்ன செய்தாய் என்று ஒரு கேள்வி உள்ளுக்குள் எழுந்து அடங்கும். இப்படியாக, உலகில் காணும் அத்தனை பெண்களுக்கும் அவர் துரோகம் செய்தவராக ஆகி விட்டார். அதிலும் முக்கியமாகக் கறுத்த பெண்கள். அதுவே, அவரின் தனிமைக்குள் அசை போடக்கிடைத்த புளிப்பான மிட்டாயாக இருந்தது. அதைச்சுவைத்துக் கொண்டே இருப்பார். அலுக்கவே அலுக்காது.

அவள் அப்புறம் என்ன ஆனாள்? தெரியவில்லை. தமிழ்நாட்டில்தான் கல்யாணம் ஆகிப் போனாள் என்று சொன்னார்கள். அவர் அந்த திசைப் பக்கம் போகவே துணியவில்லை. ஏன்? அது அவருக்கே தெரியாது. ஆனால், இந்த நீண்ட வாழ்வின் இத்தனை வருடங்களில் ஒரு கணமேனும் ஏன் அவளது இடமும் அவரது இடமும் ஒரே நேரத்தில் சந்தித்துக்கொள்ள இயலாமல் போயிற்று என்பதைத்தான் அவரால் அறிந்துகொள்ளவே முடியவில்லை.

எப்போதாவது அவள் திரும்பி வருவாள் என்று முட்டாள்தனமாக யோசித்துக்கொண்டுதானே அந்த ஊரைவிட்டுப் போகாமல், கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் விட்டுவிட்டு அங்கேயே பழியாகக் கிடந்தார். அந்த நேரத்தில்தான் அங்கே சிகிச்சைக்கு வந்து சேர்ந்தார் ராமச்சந்திரன்.

நெடுங்காலமாகவே ஆங்கில மருத்துவத்தையே நம்பியிருந்த ராமச்சந்திரன் நிற்கவோ, நடக்கவோ முடியாத நிலையை எட்டிய பிறகே, தன் தூரத்து உறவினரின் தூண்டுதலின் வாயிலாக அங்கே வந்து சேர்ந்திருந்தார். நாற்பத்தொன்பது நாட்கள் சிகிச்சை முடிந்தபோது தான் ஒரு புதிய உடலைப் பெற்றுவிட்டதாக அவர் உணர ஆரம்பித்திருந்தார். வைத்தியத்தைக் காட்டிலும் சங்கரன் எம்பிராந்திரியின் விரல்களும் உள்ளங்கைகளும் செய்த மாயமே நோயைக் குணமாக்கியது என்பதாகவே அவருக்கு இருந்தது.

வைத்தியத்துக்கும் அப்பாற்பட்டு அவர்களுக்குள் பரஸ்பரம் ஒருவிதமான நட்பு ஓடத் துவங்கியிருந்தது. தன் வேலைகளை முடித்துவிட்டு ராமச்சந்திரனின் அறைக்கு வந்துவிடுவார் எம்பிராந்திரி. தான் வெகுகாலமாகக் கடைப்பிடித்து வரும் தியான முறையை அப்போது எம்பிராந்திரி அவருக்குக் கற்றுக் கொடுத் தார். வெளியே செல்லக் கூடாது, படியிறங்கக் கூடாது, புத்தகம்கூடப் படிக்கக் கூடாது என்று வைத்தியர் அவருக்குக் கட்டளை இட்டிருந்ததனால், எண்ணெய் ஊறி இளகிய எலும்புகளோடு தளர்ந்திருந்த உடலைத் தியானத்தில் செலுத்துவது ராமச்சந்திரனுக்கு அதுவரை அவர் அனுபவித்திருந்த யாதொரு சுகத்தை யும்விட பெரியதாக இருந்தது.

”யாருமே இல்லையா உங்களுக்கு?”

”என்னோட அச்சன்தான் கடைசியா மரிச்சது. அது கழிஞ்சு நாப்பது கொல்லம் ஆச்சு. அன்னு முதலானு அனாதனாயது. பின்னே இவிடே ஒருபாடு ஆள்க்கார்க்கு சிகில்சிட்டுண்டு. அவர் கொறே நாள் லெட்டர் இடும். பின்னே மறந்துபோவும்” என்று புன்னகைத்தார் எம்பிராந்திரி.

”நான் அப்படி மறந்துபோக மாட்டேன்” என்றார் ராமச்சந்திரன். ”என்னோட வந்துடுங்களேன், கோயில்ல வேலை போட்டுத் தர்றேன். இருக்கிற வரைக்கும் கடவுள் கைங்கர்யமா போவட்டுகே…”

அந்தத் திடீர் ஏற்பாடு எம்பிராந்திரிக்குள் ஒருவித மான பரவசத்தை உண்டாக்கிற்று. அவர் எதிர் பார்த்திராத அழைப்பு.

ராமச்சந்திரன் சிகிச்சை முடிந்து கிளம்பிப் போய் ஒரு மாதம் கடந்த ஒரு நாள் வங்கியிலிருந்து தேவை யான பணத்தை எடுத்துக்கொண்டு எம்பிராந்திரி பஸ் ஏறிவிட்டார். வாளையார் தாண்டி தமிழ்நாட்டுக்குள் நுழைந்ததுமே அவருக்குள் உறங்கிக்கொண்டு இருந்த பழைய எண்ணங்கள் எல்லாம் ஊற்றெடுக்கத் தொடங்கிவிட்டன. சாலையில் தெரியும் பெண்களை எல்லாம் உற்றுப் பார்க்க ஆரம்பித்திருந்தது மனம். சிறுமிகளாக இருந்தாலும் அவள் சாயல் தெரிகிறதா என்று தேடிக்கொண்டு இருந்தார். தஞ்சாவூரையும் கும்பகோணத்தையும் தாண்டி வருவதற்குள் நாலு மாவட்டங்களைக் கடந்துவிட்டதை அறிந்தபோது அவருக்கு தமிழ்நாடு என்ன வேட்டி முடிப்பில் முடிந்துகொள்கிற அளவுக்குச் சிறியதா என்கிற எண்ணம் பெரும் ஆசுவாசமாக எழுந்துவிட்டிருந்தது.

ஆனால், இந்தப் பூமியெங்கும் அவளைப் போலவே கறுத்த பெண்கள் பளபளவென்று ஜொலித்துக்கொண்டு இருக்கிறார்களே என்று ஆச்சர்யமாக இருந்தது. இந்தக் கூட்டத்தில், ஒரு பெரிய மாநிலத்தில் எங்கே இருக்கிறாள் – அல்லது உயிரோடு இருக்கிறாளா என்றுகூடத் தெரியாத ஒரு பெண்ணை அவர் எப்படிக் கண்டு பிடிப்பார்?

அவரைப் பார்த்ததும் ராமச்சந்திரனின் முகம் பளீரென்று விரிந்துவிட்டது. காணாமல் போன தகப்பனார் திரும்பி வந்துவிட்டதைப் போல அவர் காட்டிய அன்பும் செய்த உபசாரமும் எம்பிராந்திரியைக் கூசிப்போகச் செய்துவிட்டன. ராமச்சந்திரன்தான் அப்படி என்றால், அவர் வீட்டு அம்மாளுக்கும், கல்லூரியிலும் பள்ளி இறுதியிலுமாக வாசித்துக்கொண்டு இருந்த அவரது இரண்டு பெண் குழந்தைகளுக்கும்கூட அப்படியே ஒரு மனசாக இருக்குமா என்று வியந்து கொண்டே இருந்தார் எம்பிராந்திரி.

”அந்த ஜோலி விஷயம்?”

ராமச்சந்திரன் அவரைப் பார்த்துப் புன்னகைத்தார், ”எந்த ஜோலி விஷயம்?”

எம்பிராந்திரி அதிர்ந்துவிட்டார். அவருக்கு வார்த்தை வரவில்லை. இது என்ன பெரிய ஏமாற்றமாக இருக்கிறதே!

ராமச்சந்திரன் முகத்தில் புன்னகை மாறாமல் அவரிடம் சொன்னார், ”பயந்துக்க வேணாம், எனக்கு ஞாபகம் இருக்கத்தான் இருக்கு. ஆனா, உங்க வயசு உள்ள ஒருத்தரைப் புதுசா வேலையில சேத்துக்க எந்த ஷரத்துலயும் இடம் இல்லையே.”

எம்பிராந்திரி ஏதோ சொல்ல வந்தார். தூரத்திலிருந்து யாரோ பேசுவது போல இருந்தது அவரது குரல், ”நீங்க சொன்னதை நம்பில்ல நான் வந்தது!” என்று மட்டும் சொல்ல முடிந்தது.

ராமச்சந்திரன் இடைகழிப் பக்கமாகத் திரும்பி மனைவியைக் கூப்பிட்டார். ”இவருக்கு வேலைக்குப் போகணுமாம்… என்ன பண்ணலாம்?” என்று அந்த அம்மாளைப் பார்த்துப் புன்னகைத்தார் ராமச்சந்திரன்.

”அவரைப் போட்டு குழப்பாதேங்கோ…” என்று பரிந்துகொண்டு வந்தார். ”நாங்க சொல்றதை நீங்க தப்பா எடுத்துக்கப்பிடாது. இவர் படுத்த படுக்கையா விழுந்துட்டவர். இந்த மாங்கல்யத்தை நம்பித்தான் இந்தக் குடும்பம் இருக்கு. முதுகுத்தண்டிலே பிரச்னைன்னா என்ன விளையாட்டா? தஞ்சாவூரிலேயும் மெட்ராஸிலேயும் எல்லா டாக்டரும் கைவிட்ட பின்னேதான் நாங்க அங்கே வந்தோம். இன்னிக்கு இவர் நடமாடறார், பழைய மாதிரி ஆகிட்டார்னு சொன்னா, அது உங்க கையோட மகிமை. அந்தக் கைக்கு நாங்கன்னா செஞ்சு போடணும், அந்தக் கைக்கு ஒரு ஓய்வு வேணாமான்னு நாங்க ரெண்டு பேரும் பேசித்தான் இப்படி ஒரு முடிவை எடுத்தது. இத்தனை வயசுக்கப்புறமும் நீங்க வேலைக்குப் போகலாமா? உங்களுக்குன்னு சொந்தபந்தம் இருந்தா, இப்படி விட்டுடுவாங்களா?” என்று சற்று தவிப்பாக நிறுத்தினாள், ”இதை உங்க வீடாட்டமே நினைச்சுக்க வேண் டியது, இந்தக் குழந்தைகள்தான் உங்களுடைய பேரக் குழந்தைகள். அவ்வளவுதான்!”

எம்பிராந்திரி மிரண்டு போய்விட்டார். ‘இது என்ன… இது என்ன?’ என்று உள்ளுக்குள் தவிக்கத் தொடங்கிவிட்டது. வழக்கமாகப் பெண் பிள்ளை களோடு அவர் அதிகமாகப் பேசுவதில்லை. ஆரம் பத்திலிருந்தே வந்துவிட்ட அந்தக் கூச்சம் இன்னும் தொடர்கிறது. அவரோடு இவ்வளவு உரிமையுடன் வேறொரு பெண் பேசியதில்லை. ‘அவளை’த் தவிர!

பேசுவது பெண் பிள்ளை என்பதாலும், அப்போதைக்கு அவருக்குள் நிகழ்ந்திருந்த தவிப்பினாலும், அப்போது எந்தப் பதிலும் சொல்லாமல் இருந்துவிட்டார். அப்புறம் நாலைந்து நாட்களாக ராமச்சந்திரனைத்தான் கரைத்துக் கரைத்து ஒரு வழியாக சம்மதிக்கவைத்துவிட்டார் எம்பிராந்திரி.

முதலாவதாக, அவர் ஒருபோதும் வேலை செய்யாமல் இருந்ததில்லை. இரண்டாவதாக, அவரது உடலில் இன்னும் வலு இருக்கிறது. மூன்றாவதாக, என்னதான் அவர்கள் உறவுகொண்டாடினாலும் ஒருத்தர் வீட்டில் உட்கார்ந்து சாப்பிடுவது என்பது தனக்கு ஒருபோதும் ஏற்க இயலாத ஒன்று என்று தன் பக்க நியாயங்களை அவர் அடுக்கிக்கொண்டே போனார். அதையும் தாண்டி அவரது அகக்கண்ணில் கண்ட ஒரு சில காட்சிகளைக் கண்டு அவர் நடுங்கினார். அவற்றைத் தன் மனதுக்குள் பூட்டி வைத்துக்கொண்டு பேசுவதற்குத் தவிர்த்தார். கடைசியாக, ஒருவேளை தன்னால் இயலாது போகிற சூழ்நிலை வரும்போது, அவர்கள் சொல்கிறபடி இருந்துவிடுவதாக அவர் சம்மதித்தபோது ராமச்சந்திரன் வேறு வழியில்லாமல் அவருக்கு வேலை கொடுக்கச் சம்மதித்தார்.

சங்கரன் எம்பிராந்திரியின் வயதுக்கு அலுவலக வேலை எதுவும் தர இயலாத நிலையில், அர்ச்சகராக அவர் இருக்க முடியுமா என்று அவரிடம் கேட்டார். ராமச்சந்திரன் எம்பிராந்திரி மிகுந்த உற்சாகம் அடைந்தார்.

”எம்பிராந்திரிமாருடெ பாரம்பரியக் கர்மம் அதுதன்னெயானு! என்டே அச்சன், தத்தமங்கலத்தினெ தொட்டடுத்து ஒரு சிவன் அம்பலத்திலானு மேல்சாந்தியாட்டு இருந்தது. ஈ உழிச்சலும் பிழிச்சலும் எழுத்தச்சன்மாரும் வாரியர்மாரும் செய்யுன்ன பணியா. எம்பிராந்த்ரிமாரில்ல” என்று புன்னகைத்தார்.

அதைத் தொடர்ந்துதான் ஈ.ஓ-வாக இருந்த நான்கைந்து கோயில்கள் ஒன்றில் அவரை அர்ச்சகராக அமர்த்தினார் ராமச்சந்திரன். அந்தக் கோயிலில் ஏற்கெனவே அந்த வேலையைப் பார்த்துக்கொண்டு இருந்தவர் வைத்தி. அம்மன் சந்நிதியைப் பார்த்துக்கொண்டு இருந்த சுப்பு குருக்கள், போன வருடம் அவள் பாதத்துக்கே போய்ச் சேர்ந்துவிட்ட பிறகு, அவர் ஒருத்தர் மட்டும்தான். எப்போதாவது தேவைப்பட்டால், உதவிக்கு சுப்புவின் மகன்கள் வந்து போவார்கள். அவர்களில் ஒருவனுக்குத்தான் வேலை கிடைக்கும் என்று நினைத்துக்கொண்டு இருந்தார். இப்போது எங்கிருந்து இப்படி ஒருவர் வந்தார் என்பதே வைத்தியின் வியப்பாக இருந்தது. அதிகாரிகளின் சித்தம் தைவத்தின் சித்தம் போல… யாருக்கும் புரியாது!

மூல தெய்வங்களுக்குத்தான் அனுதினம் அபிஷேகம் காப்பு. பரிவாரத் தெவங்களுக்கு வாரம் ஒருமுறைதான் அந்த கௌரவம் என்பதையெல்லாம் வைத்திதான் எம்பிராந்திரிக்கும் சொல்லிக் கொடுத்தது. தட்சிணாமூர்த்திக்கு வியாழக்கிழமை என்றால், துர்க்கைக்கு வெள்ளிக்கிழமை. இருந்தாலும் வந்து இரண்டு தினங்களாகியும் அவரைக் கர்ப்பக்கிரத்துக்குள் நுழையவிடவில்லை. அப்படியே நுழைந்தாலும், ஒரு வேலையும் கொடுக்கவும் இல்லை.

இரண்டாம் நாள் மதியம் உச்சிக்கால பூஜைக்கு எழுந்துகொள்ளும்போதுதான் வைத்தி ஒரு தீர்மானத்துக்கு வந்துவிட்டதைப் போல் அதைச் சொன்னார், ”நாளையில இருந்து அம்பாள் சந்நிதியை நீரே பாத்துக்கும். இங்கே சம்ஸ்கிருதத்தைத் துடைச்சுப் பாடாத குறை. பாதகமில்லை. உமக்குத் தெரிஞ்ச ஸ்தோத்திரத்தைச் சொல்லும். இதுக்கு மேலே அபிராமி அந்தாதியையா நெட்டுருப்போட முடியும்?”

எம்பிராந்திரி இரவெல்லாம் தூக்கம் வராமல் புரண்டுகொண்டு இருந்தார். வயதுக்கு மீறிய ஏதொவொன்று தன்னை இயக்கிக்கொண்டு இருப்பதை அவர் உணர்ந்தார். இயல்பான கூச்சம் தன்னைத் திரும்பத் திரும்ப ஆட்கொள்வதைச் சகித்துக்கொள்ள இயலாமல் தவித்தார். உடல் குறுகிக் குறுகி விரிந்தது. தான் ஓரங்குலமாகச் சுருங்கிவிட்டோமோ என்று நினைப்பார். அடுத்த கணம் உடல் தடித்து அகண்டு அறையெங்கும் நிறைவது போல இருக்கும். இப்படி ஒருநாளும் வந்தில்லையே என்று மனம் பரிதவித்துக்கொண்டே இருந்தது. எப்போது உறங்கினாரோ தெரியவில்லை… அதிகாலை நேரத்தில் மரப் பலகையின் ஒசைக்கே விழித்துக்கொண்டுவிட்டார்.

கண்ணைப் பிட்டுக்கொண்டதும் தான் எங்கே இருக்கிறோம் என்று முதலில் வியந்து அடங்கினார். அப்போதுதான் இந்த நாள்தான் அது என்று அவரது சித்தத்தில் இசைகேடாக ஏதோவென்று புரண்டது. உடல் உஷ்ணமாக இருந்தது. தாள ஓடு வேய்ந்த சிறு அறை. அந்த இருட்டிலும் கண்கள் கூசுவது போல பளீரென்று ஏதோவென்று தெரிந்தது. ஒருவழியாக எழுந்துகொள்ள முடிந்தது. கிணற்றில் நீரை இறைத்து வாளிவாளியாக விட்டுக்கொண்ட பின்னால்தான், படபடப்பு அடங்கி, உடல் கொஞ்சம் குளிர்ந்தது போல இருந்தது. இவ்வளவு உஷ்ணத்தை அவர் உடல் ஒருபோதும் கண்டதில்லையே என்று யோசித்துக்கொண்டே திருநீரும் சந்தனமும் இட்டுக்கொண்டு வாசலில் வந்து காத்திருந்தார்.

வைத்தி வெகுநேரம் கழித்துதான் வந்தாற்போல் இருந்தது. அவர் வழக்கமாக வருகிற நேரம் அதுதான் என்பதும் எம்பிராந்திரிக்கு நினைவு வந்தது.

கோயிலுக்கு வந்ததும் அம்பாள் சந்நிதியைத் திறந்து கொடுத்துவிட்டு, சிவனைக் கவனிக்கப் போய்விட்டார் வைத்தி, ”சொன்னதெல்லாம் ஞாபகம் இருக் கோன்னோ?”

எம்பிராந்திரி தலையை ஆட்டியிருந்தார். அவர் சொன்னவை நன்றாகவே நினைவிருந்தன. அவரது கையில் எண்ணெய் பாட்டிலும் பூச்சரமொன்றும் இருந்தன. அவற்றை வைத்திதான் கொடுத்துவிட்டுப் போனார். தெய்வத்துக்கு முதலில் எண்ணெய்க் காப்பு, அப்புறம் மாம்பொழி, மஞ்சப்பொடி, திருமஞ்சனப்பொடி என்று பத்து பொடிகளின் வரிசை ஒன்றை வைத்தி முதல் நாள் ஒப்பித்திருந்தார். கோயில் இருக்கும் நிலையில் அந்தப் பொடிகளையெல்லாம் எப்போதாவது ஒரு நாள்தான் தெய்வம் கண்ணால் பார்க்க முடியும். இப்போதைக்கு வெறும் எண்ணெய்தான்!

எம்பிராந்திரிக்கு மனதுக்குள் ஒரு சிரிப்பு ஓடிற்று. உனக்கு இந்த உத்தியோகம் இன்னும் விட்டுப்போகவில்லை போலிருக்கிறதே என்று எண்ணம் எழுந்து அடங்கிற்று. இத்தனை நாட்கள் மனித உடல்கள்… இப்போது தெய்வத்தின் உடல். அதுதான் வித்தியாசம்!

நடையைத் திறந்துகொண்டு உள்ளே காலை வைத்தார் எம்பிராந்திரி. சிக்குப்பிடித்த எண்ணெய் மணம் புகை போல எழுந்தது. ஆயுர்வேத எண்ணெய் மணத்திலேயே பழகிப்போன நாசி அனுகூலமில்லாத ஒரு சுளிப்பை அடைந்தது. அப்போது இருளை விலக்கிக்கொண்டு பளீரென்று தெரியத் தொடங்கியது ஆளுயர அம்பிகையின் தோற்றம். கேரளத்துப் பகவதிகள் இத்தனை உயரம் இருப்பதில்லை. அவை பெரும்பாலும் நின்றுகொண்டும் இருப்பதில்லை. இவளோ இந்த அரை வெளிச்சத்ததில் ஆளுயரத்துக்கு உயிரே போலல்லவா காண்கிறாள் என்று வியந்தார். மிகுந்த தயக்கத்துடன் அவளை நெருங்கினார்.

முதல் நாள் சூட்டியிருந்த ஒற்றை மாலையும் ஓரிரு பூச்சரங்களும் அவளது மேனியில் வாடிக்கிடந்தன. கேரளக் கோயில்களில் இந்த நிலையில் தெய்வத்துக்கு ஒரு புஷ்பாஞ்சலி உண்டு. அதற்கு நிர்மால்யம் என்று பெயர். இதற்கென்றே கோயிலுக்கு வருவதற்கு அங்கே ஆட்களும் உண்டு. அதற்குப் பிறகுதான் பழைய மலர்களையும் துணியையும் மாற்றி அபிஷேகமெல்லாம்!

வைத்தி அப்படியேதும் சொல்லியிருக்கவில்லை என்றபோதும், எம்பிராந்திரி மாடத்தில் இருந்த கற்பூரத்தை எடுத்து முதலில் அவளுக்கு ஒரு தீபாராதனை ஏந்தினார். அதைக்கொண்டே குத்துவிளக்குகளையும் ஏற்றினார். திடீரென்று அவரது மனம் நடுங்கத் தொடங்கியிருந்தது. அவரால் அவளைப் பார்க்க முடியவில்லை. ஆளுயரத்துக்குக் கறுப்பாகப் பளபளவென்று நிற்கும் அவளது தோற்றம் அவரை அச்சமுறச் செய்தது.

வைத்தி சொன்னது நினைவு வந்து நடைக்கதவுக்கு உள்ளே இருந்த துணித் திரையை இழுத்துவிட்டார். இப்போது அவரும் அவளுமாக ஓர் அச்சமூட்டும் ஏகாந்தம் அங்கே நிலவியது. காய்ந்த மலர்களையும் முதல் நாள் உடுத்தியிருந்த ஆடையையும் வைத்தி செய்தது போலே வரிசைக்கிரமாக விலக்கினார்.

முதலில் என்ன செய்ய வேண்டும்? தண்ணீர் வேண்டும்!

கர்ப்பக்கிரகத்துக்குள்ளேயே பைப் போட்டு தண்ணீர் பிடிக்க வசதி இருந்தது. அதிலிருந்து நீரைப் பிடித்து, வைத்தி செய்தது போலவே அவள் மீது சிரசாதி ஊற்றினார். அவர் அதற்கு அவளுக்கு மிக அருகில் போக வேண்டியிருந்தது. அவரது உடல் கூச்சத்திலும் பரவசத்திலும் அதிர்ந்தது. அடுத்ததாகப் புட்டியிலிருந்து கொஞ்சம் எண்ணெய் எடுத்து தைலக் காப்பிடத் தொடங்கினார்.

அதற்குள் அவரது உடல் வியர்த்துக் கொதித்துப் போயிருந்தது. எத்தனையோ மனித உடல்களுக்குச் செய்தபோது இல்லாத பரவசம் இப்போது ஏன் என்று இவர் தனக்குள் தவித்துக்கொண்டு இருந்தார்.

தலையைச் சுற்றிக்கொண்டு படபடவென்று வந்து அவரது உடல் தள்ளாடிற்று. அப்போது, அவருக்குள்ளே ஏதோ ஒன்று உடைந்து நொறுங்குவதையும் பொங்கிஎழுவதையும் உணர்ந்தார்.

அப்போது மனதுக்குள்ளிருந்து ஒரு குரல் எழுந்தது.

‘அட! இங்கேயா நிற்கிறாய்?’

அந்தக் கணத்தில் அவரது உடலைவிட்டுப் பிரிந்தது உயிர்த்திரவம்!

– 10th டிசம்பர் 2008

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *