Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

நாளையும் ஓர் புது வரவு

 

அவன் பொட்டுப்பொட்டாய் நெற்றியில் துளிர்த்த வியர்வையை அழுத்தித் துடைத்தான்.

அடர்ந்த புதராய் வளர்ந்து செம்பட்டை பாரித்த மீசையில் வழிந்த வியர்வை,வெடித்து பிளவுபட்டிருந்த உதடுகள் வழியாக ஊடுருவி உப்புக்கரித்தது.

அவனுக்கு அந்த சுவை புதிது…அந்த சூழ்நிலை புதிது..இப்போதும் கண்கள் இருட்டத்தான் செய்கிறது…ஆனால் அது நியாயமான பசி என்கிற நிறைவு அவனது கண்களில் மிளிர்கிறது.!.

“யோவ்..இன்னும் என்னா..மவராசன் கிரீடம் தரிக்கலீயோ..?பல்லாக்கு பரிவாரங்களுக்காக காத்திருக்கீரோ..?”இரண்டாவது மாடியிலிருந்து அதட்டலாக சத்தம் கொடுத்தார் கொத்தனார்.

“இதோ வாரேனுங்க”என்றபடி தலைமுண்டாசுக்கு மேல் இருப்புச்சட்டியை வைத்து செங்கற்களை அடுக்கி…அருகிலிருந்த ஏணியில் ஏறினான் அவன்.

மேலிருந்து எட்டிப்பார்த்த கொத்தனார் “ஏன்யா..அஞ்சு கல்லுக்கு மேல அய்யாவால தூக்க முடியாதோ.?அரை ஆளு கூலிக்கு மேல ஒரு ரூபாகூட சேர்த்து தரமாட்டேன்…போய்யா போயி இன்னும் நாலுகல்லை சேர்த்து வச்சு தூக்கிட்டு வாய்யா..”என்று விரட்டினார்.

“ஆடுடா ராமா.!ஆடுடா ராமா.!அய்யாவுக்கு ஒரு சலாம் போடுடா ராமா.!”என்று கொத்தனார் சாட்டையை சுண்டியபடியே ஆட்டுவிப்பதாகபட. தலையை உலுக்கியபடியே செங்கற்களை அடுக்க ஆரம்பித்தான்.

அவனது ஞாபக அடுக்குகளில் ஒவ்வொரு கற்களாக உதிர ஆரம்பித்தது.

***

அன்று கடைவீதியில் மேஸ்திரி மணிகண்டன் தன் சகாக்களுக்கு பணியிடங்களை பகிர்ந்து கொண்டிருந்தபோது பின் வேட்டியை பிடித்து இழுத்தது ஏதோ ஒன்று.

திரும்பிப்பார்த்தால் ஈயத்தட்டை கையில் ஏந்தி இளித்தபடியே நின்றிருந்தது அந்த குரங்குக்குட்டி.!.

வேலைச்சுமையின் புகைச்சலில் சிடுசிடுத்து நின்ற மேஸ்திரி மிளகாய் கரைசலில் முகம் அலம்பியதுபோல தீப்பிடித்த எரிச்சலோடு பாய்ந்துவிட்டார் குரங்காட்டி மீது.!

“மன்னிச்சுக்குங்க..ஐயா.!..எனக்கு வலிக்க பீடி இல்லீனாலும் கம்முனு கிடப்பேனுங்க..அதுக்கு அடக்க புகையிலை இல்லீனா கிறுக்கு புடிச்சிடுங்கய்யா..அதான் உங்களை தொந்தரவு பண்ணிட்டுது,ஒரு ரூவா கெடந்தா போடுங்க ஒரு பொட்டலம் வாங்கிப்போட்டுட்டா பொன்னாட்டம் அடங்கி கெடக்கும்ங்க.!” தலையை சொரிந்தபடியே நின்றான் அவன்.

“எம் பின்னாடி வாடா..பத்து கல்லை அந்தாண்ட புரட்டிப்போடு ஒரு ரூவா தர்றேன்..சாரத்துல ஏறி உயிரை கையில புடிச்சிகிட்டு உழைச்சா தான் சாயங்காலம் நூறோ…..எரநூறோ கண்ணுல பார்க்க முடியும்…நீ அப்புடியா…பத்து பேருகிட்ட கையேந்தி ‘பட்டை’ய போட்டுகிட்டு…பாவம் வாயில்லாத சீவனை புண்படுத்தி பொழைக்கறதுமில்லாம…அதுக்கு புகையிலை பழக்கப்படுத்தி கெடுத்தவேற வச்சிகிட்டு…உழைச்சு பிழைக்கற எங்களை உசுப்பிவிட்டு கிண்டலாடா பண்ற.”

“நாளைக்கு காலையில நான் பார்க்கறப்போ…அதை நீ காட்டுல விட்டுட்டு வந்திருக்கனும்..இல்ல..’புளுகிராஸ்’-க்கு போன் பண்ணிடுவேன்.அவங்க போலீஸோட வந்து முட்டிச்சில்லை பேத்துடுவாங்க..பார்த்துக்க.!”என்று காட்டமாக கண்டித்து அகன்றார் மேஸ்திரி.

“என்னால தானே நீ பொழைக்கற..!..மரத்துலேயிருந்து தவறி விழுந்துட்டேன்னு ஒந்தாய் போட்டுட்டு போயிட்டுது…அப்படியே விட்டிருந்தா தெருநாய்ங்க கடிச்சு கொதரி போய் சேர்ந்திருப்பே…அப்பவும் ஒண்டிக்கட்டையா சம்பாதிச்ச காசுல பால் வாங்கி ஊத்திதானே உன்னை காவந்து பண்ணேன்…இப்ப எவன்எவனோ உன்க்கு கரிசனம் காட்டறான்…எல்லாம் உனக்கு எதங்கி…நான் தேடிகிட்ட கேடுகாலமா..”உலரலாக முனுமுனுத்தபடியே கையில் வைத்திருந்த தடியால் ஓங்கிஓங்கி விலாசினான் குரங்காட்டி கோபால்.

கீச்..கீச்..என்று துள்ளியபடியே அடி பொறுக்காமல் அலறி அலம்பல் செய்து கொண்டிருந்தது குரங்குக்குட்டி.கண் இமைக்கும் நேரத்தில் குரங்காட்டியின் இடதுகை சங்கிலிப்பிடியை நழுவவிட…அது ஓடி தப்பிக்க சாலையை கடக்க முயல…அதே நேரம் கிரீச்சிட்டு நின்றது கண்டெயினர் லாரி ஒன்று..அதன் சக்கரத்தின் கீழே….

“அய்யோ”என்று தன்னையும் அறியாமல் அலறினான் கோபால்.

இதோ இருபத்துநான்கு மணிநேரத்தில் என்னென்னவோ நடந்தேறி விட்டன.

அந்த லாரிக்காரனை அடிக்க ஆளாளுக்கு பாய்ந்தார்கள்.சிலர் சமரசம் பேசி சில நூறுகளை கறந்தார்கள்.!.

நேற்று வரை சிரட்டை பாலுக்கும்..சிறு கவளம் சோற்றுக்கும் கோபாலனை நம்பி இருந்ததாக..அவன் நினைத்துக்கொண்டிருந்த அந்த ஜீவன் ..சகல மாலை மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

உடனடி கோயில் ஒன்று உதயமாகி தனக்கென ஒரு பக்த வட்டத்தையும் உருவாக்கிக்கொண்டது.

“ஐயா..புள்ளை மாதிரி வளர்த்தேனுங்க..கடைசியில அதோட உயிர்போகவும் நானே காரணமாயிட்டேன்..ஒரு பிடி மண் அள்ளி போட்டாவது அந்த பாவத்துக்கு பரிகாரம் தேடிக்கறேனுங்க..வேறொன்னும் வேணாங்கய்யா…”ஊர் தலைவரிடம் முறையிட்டான் குரங்காட்டி.

“ஏன்..ஐயா முக்கால மூனு பூசைக்கும் தர்மகர்த்தாவாக இருந்து பரிபாலணம் பண்ணுங்களேன்..நாங்க வேணும்னா ஒதுங்கிக்கறோம்…”என்று எகுத்தாளமாக பேசியவர்..”டேய்..இவனை இந்தபக்கம் யார் பார்த்தாலும் அடிச்சி விரட்டுங்கடா..”என்று சகாக்களுக்கும் உத்தரவு போட்டுவிட்டார் .

‘அடடா..அஞ்சறிவு சீவன் தானேன்னு ஆட்டி வைக்கறதும் இந்த மனுச புத்திதான்…ஆடை அழுக்கா இருந்தா மனுசனையே ஒதுக்கி வைக்கறதும் அதே மனுச புத்திதான்’தனக்குத்தானே முனுமுனுத்தபடியே கண்ணீர் வழிய கைகூப்பினான்..”வர்றேன்ங்கய்யா..”.

காலை வரை தனக்காக இருந்த ஒரே சொந்தமும் இப்போது கைவிட்டு போய்விட்ட நிலையில் மேஸ்திரி மணிகண்டனின் வார்த்தைகள் மனதில் ரீங்காரமிட்டன.”என் கூட வந்து பத்துக்கல்லை அந்தாண்ட புரட்டி போட்டா ஒரு ரூவா தருவேன்.!”.

நாளையிலிருந்து ஒருவேளை உணவானாலும் உழைத்தே உண்பது என்று முடிவெடுத்துக்கொண்டான் கோபாலன்.

இதோ இந்த சிந்தனையை செயலாக்கியதன் விளைவுதான் கோபாலன் செங்கற்கள் அடுக்கிய இருப்புச்சட்டியை சுமந்து ஏணி வழியே ஏறிக்கொண்டிருக்கிறார்.மேல்தளத்திற்கும்,அவர் வாழ்வின் அடுத்த தளத்திற்கும் அந்த ஏணியே ஆதார ஊக்கியாக அவர் நினைத்துக்கொண்டார்.மனதில் புதுத்தெம்பு வந்தமர்ந்தது.

***

மாலை.

தனது கையில் இரு நூறு ரூபாய் தாள்கள் இருக்க தனது நடையில் கமபீரம் கூடிவிட்டதை உணர்கிறார்.!

தேநீர் கடையில் இருவர் தன்னை சுட்டிக்காட்டி ஏதோ முனுமுனுப்பதை அலட்சியமாக நிராகரித்து…”ஒரு ஸ்டாங் டீ..சர்க்கரை கொஞ்சம் தூக்கலா..!”கட்டளையிடுகிறார்.

எப்போதும் ஓசி டீக்காக காத்திருக்கும் காலம் கைகழுவி போய்விட்டதை எண்ணி பெருமிதம் கொள்ளும் அதே வேளையில் தனது வளர்ப்பின் நினைவு மூளையை பிராண்ட கண்கள் கசிய பெரூமூச்சிடுகிறார்.

அப்போது இருவர் அவரை நெருங்கி..”ஏய்..குரங்காட்டி உன்வளர்ப்பு குரங்கை சாகடிக்க எவ்வளவு கொடுத்தானுங்க..வேம்பனூர் ஆளுங்க”என்க..

“ஏஞ்சாமி…அது என்னை மோசம்பண்ணி போயிட்டுதேன்னு..வேதனையில வெந்து நொத்து கிடக்கேன்..நீங்கவேற “என்று பார்வையில் மிரட்சியோடு பதிலளித்தான்.

“இல்ல…குரங்கை பொதச்சி கோயில்கட்டி..உண்டியல் வச்சு பூட்டி சாவியை இடுப்புல சொறுகிகிட்டு சலம்பல் காட்டுறானுவோ…என்னமோ..பொதுக்காரியம்னா ஊரே இவனுங்ககிட்டதான் கைநீட்டனுமாமே..அதையும் பார்ப்போம்…”கறுவினான் ஒருவன்.

கோபமாக பேசியவனின் காதில் கிசுகிசுத்தான் இரண்டாமவன்.

“டேய்..இவன மாதிரியே கடப்பாக்கம் பஸ்ஸ்டாண்டுல ஒரு குரங்காட்டி குரங்கை வச்சு வித்தை காட்டி பிழைக்கறான் …மாப்ளே.!..ஆயிரமோ..ஐநூறோ வீசுனா..நாய் தன்னால கொடுக்கப்போறான்..கொண்டாந்து கொன்னு நம்ம நல்லூர் எல்லையில புதைச்சு நாமளும் ஒரு கோயிலை கட்டி உண்டியல் வச்சிடனும்டா..வாடா”..பரபரப்பாக கிளம்பினார்கள் இருவரும்.

திடுக்கிட்டு அங்கிருந்து எழுந்து நடந்தார் கோபாலன்.

வழக்கமாக வாழைப்பழம் தரும் பெட்டிக்கடைக்காரர் சினேகமாக சிரித்தபடி..”வாய்யா…நாளைக்கு ரெண்டு பழம் அழுதுஅழுது வாங்கிப்போடுவ..இன்னிக்கு ரெண்டு தாரே வித்திருக்குய்யா…எல்லாம் உன் வளர்ப்புக்கு வந்த மவுசை பார்த்தியா.?!”என்றார்.

அதை ரசிக்காத மனநிலையில் “ஐயா..மிருகமெல்லாம் கஷ்டப்பட்டா..உடனே வந்து காப்பாத்துவாங்களாமே..ரெட் கிராஸோ..புளு கிராஸோ அதுக்கு ஒரு போன் போட்டு கொடுங்கய்யா..”என்றார்.

எண்களை ஒற்றி ரிசீவரை கோபாலனிடம் நீட்டியபடி விநோதமாக பார்த்தார்.

“ஐயா…நான் நல்லூருலேருந்து பேசுறேனுங்க…ஐயா கடப்பாக்கம் கடைவீதியில ஒரு குரங்காட்டி குட்டிக்குரங்கை கட்டிவச்சு கொடுமைபடுத்தறானுங்க…ரொம்ப குறும்பு பண்ணிச்சின்னு சூட்டுக்கோல் எடுத்து இழுவி அக்குறும்பு பண்றானுங்க…போதாததுக்கு கஞ்சா பீடி,புகையிலைன்னு கண்ட கருமாத்திரத்தையும் பழக்கி விட்டுருக்கான்யா…எப்படியாவது அந்த வாயில்லா சீவனை வந்து காவந்து பண்ணுங்கய்யா..!”போனை கட்பண்ணி காசு கொடுத்த கோபாலனை குறுகுறுப்பும் குழப்பமுமாக பார்த்தார் பெட்டிக்கடைக்காரர்.

‘நாளைக்கு இன்னொருவனுக்கும் சித்தாள் வேலை மேஸ்திரிகிட்ட கேட்கனும்’என்று நினைத்தபடி தனது குடிசையை நோக்கி நடந்தார் கோபாலன்.

- பிப்ரவரி 8-14;2008 

தொடர்புடைய சிறுகதைகள்
"என்னப்பா...வந்துடுவாங்களா..?..நான் வேற பள்ளிவாசலுக்கு தொழுக போகனுமே..."பரூக் மரைக்காயரின் கேள்விக்கு பதிலளிக்க அவகாசமின்றி வீதியில் இறங்கி ஓடினார் பண்ணையாள்சவுரிமுத்து. இன்னும் சிலநாட்களில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது.அதன் பொருட்டு வாக்குகேட்டு வரும் வேட்பாளரை வரவேற்க நாட்டாமையின் பண்ணை வீட்டில் குழுமியிருந்தார்கள் அனைவரும். "ஐயா..வேற்பாளர் வந்துகிட்டிருக்காருங்க..தெரு முனையில் ...
மேலும் கதையை படிக்க...
"ஐயா,இது போலீஸ் ஸ்டேஷனுங்களா...எம்மவனை காப்பாத்துங்கய்யா...'வெட்டியா ஊரை சுத்திசுத்திவர்றீயே..படிப்புக்கேத்த வேலை கிடைக்கிற வரைக்கும் கிடைக்குற வேலைக்கு போயேன்'னு சத்தம் போட்டேன்..அதுக்காக கோவிச்சிகிட்டு 200அடி உயர செல்போன் டவர்ல ஏறி கீழே விழுந்து சாகப்போறேன்னு அடம் பண்றான்...உடனே கிளம்பி வாங்கய்யா"பதட்டத்தில் அதற்கு மேல் வார்த்தை ...
மேலும் கதையை படிக்க...
"எலேய்..துரை!என்ன பழம்டா வச்சிருக்கே?கன்னல் இல்லாம கொஞ்சம் கொண்டாடா.."பழவண்டிக்காரனை ஏவியவர்,குதப்பிய வெற்றிலை எச்சிலை ஓரமாய் உமிழ்ந்தபடியே அடுத்த அதட்டல் உத்தரவை தேநீர் கடைக்காரனுக்கு போட்டார் ஏட்டு ராகவன்.."ஏய்..யாருய்யா அது..கடைப்பையன்கிட்ட ஒரு கிளாஸ் பச்சத்தண்ணீய கொடுத்தனுப்பு". சைடு ஸ்டாண்ட் போட்டு நிறுத்தப்பட்டிருந்த புல்லட்டில் சாய்ந்தபடியே கடைப்பையன் ...
மேலும் கதையை படிக்க...
'ஆற்றங்கரை மேட்டினிலே....அசைந்து நிற்கும் நாணலது காற்றடித்தால் சாய்வதில்லை'...காரைக்கால் பண்பலையில் டி.எம்.எஸ் குரல் கசிய...தானும் சேர்ந்து பாடியபடியே சமையலில் ஈடுபட்டிருந்தாள் சரசு. பாதியிலேயே பாடலை நிறுத்தி விட்டு அறிவிப்பாளர் "நேயர்களே..ஒரு முக்கிய அறிவிப்பு...நாகப்பட்டினத்துக்கு வடகிழக்கே இருநூற்றைம்பது கிலோமீட்டர் தூரத்தில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை மேற்கு ...
மேலும் கதையை படிக்க...
குரு ஞானசம்பந்தர் உயர்நிலைப்பள்ளி .பிரார்த்தனை மண்டபத்தில் நடுநாயகமாக நின்றான் கபிலன். ஒலிப்பேழையிலிருந்து உருக்கொண்டு தவழ்ந்து வந்த தமிழ்த்தாய் வாழ்த்து நிறைவடைந்தவுடன் மாணவத்தலைவன் தலைமையாசிரியருக்கு முகமண் கூறி ஒரு குறிப்பேட்டை தந்துவிட்டு தனது இருப்பிடம் திரும்பினான். "மாணவ மணிகளே.!..காலாண்டுத்தேர்வு வரை நம்பிக்கையில்லா தீர்மானத்தில் நடுநாயகமாக இருந்த ...
மேலும் கதையை படிக்க...
நீதியின் நிழலில்
சமர்ப்பனம்
உழைப்’பூ’
குலச்சாமி
விழி திறந்த வித்தகன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)