கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: January 1, 2013
பார்வையிட்டோர்: 18,900 
 

ஹோயே… ஹோ… அலைகளின் பேரிரைச்சலை மீறி, கடல் அரக்கர்களின் ஓங்காரக் குரல் எழத் தொடங்கிவிட்டது. சூறைக் காற்றின் ஆரவாரத்தோடு பெரு மழைக்கான அறிகுறிகளுக்கு இடையே, இளவரசி கடல் பூதத்தால் கடத்தப்பட்ட கதையைக் கட்டியக்காரன் சொல்லிக்கொண்டு இருந்தான். நீல தேசத்து இளவரசியைக் காப்பாற்ற இன்னும் அரை மணி நேரமே உள்ளது.

வேலன் தன் ஓலைத் தொப்பியைத் தலையில் மாட்டியபடி துடுப்பைக் கையில் எடுத்துக்கொண்டு குறுவாளைத் தேடியபோது, அவனுடைய செல்போன் ஒலித்தது. i don’t wanna live with u. i’m leaving-nimmi. என நிர்மலா குறுஞ்செய்தி அனுப்பி இருந்தாள். வேலன் எதிர்பார்த்த செய்திதான். ஆனாலும், ஒரு நிகழ்ச்சிக்கு இடையே, அதுவும் இளவரசியைக் காப்பாற்றப்போகும் தருணத்தில் வரும் என எதிர்பார்க்கவில்லை.

Nadagam

வேலன், நிம்மியின் எண்ணுக்கு அழைத்தபோது, அது அணைத்துவைக்கப்பட்டு இருந்தது. ஒருவேளை அவள் சிம்மைக் கழற்றித் தூக்கி எறிந்திருக்கக் கூடும். மேடையில் கட்டியங்காரன், ‘நீல தேசத்து மகாராஜா, இளவரசியைக் கடல் பூதத்திடம் இருந்து மீட்டுக் கொடுப்பவர்களுக்குத் தன்னுடைய தேசத்தில் ஒரு பகுதியைத் தானமாகத் தருவதாக’ தண்டோரா போட்டு இருப்பதைச் சொல்லிக்கொண்டு இருந்தான். இது வரை 48 முறை இளவரசியைக் காப்பாற்றி இருக்கிறான் வேலன். அத்தனைக்கும் ராஜ்ஜியத்தில் பங்கு தருவது என்றால், அரசன் வேலனிடம் கொத்தடிமையாகத்தான் இருக்க வேண்டும்.

மகாராஜா மேடையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்துகொண்டு இருந்தார். அவருடைய முகத்தில் பெருங்கவலையும் குழப்பமும் சூழ்ந்து இருந்தன. அவருடைய மனநிலைக்கு ஏதுவாக குமார் அம்பாயிரத்தின் டிஜ்ருடு வாத்திய இசை ஒலித்துக்கொண்டு இருந்தது. வேலனின் மனம் முழுக்க நிம்மியின் நினைவுகள் பெருகி வழிந்தது. நிம்மியின் இந்த முடிவு ஏதோ அவசரத்தில் எடுத்த முடிவு என்று சொல்லிவிட முடியாது. கடந்த ஆறு மாதங்களாக அவளுடைய பேச்சு விடைபெறுதலை நோக்கியே நகர்ந்துகொண்டு இருந்தது.

அவள் ஒற்றைக் கேள்வியில் மையம்கொண்டு இருந்தாள். ‘நாம ஏன் சேர்ந்து வாழணும் வேலு?’ எங்கு தொடங்கினாலும் அவளுடைய பேச்சு இந்த வார்த்தையோடுதான் முற்றுப்பெறும். அந்த வார்த்தையை உபயோகித்த பிறகு, அவள் வேறு எதுவுமே பேசுவது இல்லை. வேலன் ஏதாவது பேசினால்கூட, பதில் சொல்வது இல்லை.

டிஜ்ருடுவின் இசை வேகம் அதிகரித்தது. மேடையில் விளக்கொளி அணைய… கட்டியங்காரன், ”வேலு மாமா துடுப்பை எடுத்துக்கிட்டு இளவரசியைக் காப்பாத்த கடலுக்கு வந்துட்டார்” என இசையை மீறிய ஒரு குரலில் சத்தமாகச் சொன்னான். டிஜ்ருடு வாத்தியத்தின் ரூன் ட்டூன் ட்ரூம் ட்ரூம்… இசையோடு, காற்றில் துடுப்பை அசைத்தபடி வேலன் நீலப் புடவை அலைகளுக்கு உள்ளிருந்து வெளிப்பட்டான். வேலனின் துடுப்பின் வேகம், டிஜ்ருடு இசைக்கு ஏற்ற தாளக்கட்டோடு இருந்தது. ‘வேலு மாமா… வேலு மாமா…’ எனக் குழந்தைகள் கோரஸ் ஆகக் குரல் கொடுக்க ஆரம்பித்தார்கள்.

தூய சவேரியார் கல்லூரி மைதானமே குழந்தைகளால் நிறைந்து இருந்தது. எல்லாமே ஃபாதர் சேவியரின் ஏற்பாடு. அவர் ஒரு குழந்தை மனிதர். குழந்தைகளுக்கான கவிதைகள், குழந்தை நாடகம் என அவருடைய சிந்தனை முழுக்கக் குழந்தைகளைச் சுற்றியே இருக்கும். நிம்மிக்குக்கூட குழந்தைகள் என்றால் உயிர். ”டேய் வேலுப்பிள்ளே… உன்னை ஒரு குழந்தையாத்தாண்டா பாக்கறேன்… அதான் உம் மேல இவ்ளோ லவ்வு” என்பாள். அந்த இவ்ளோவில் இருக்கும் ராகம், ஓர் இசையாக இருக்கும்.

இந்தக் கல்லூரியில் வேலுவுக்கு இது இரண்டாவது நிகழ்ச்சி. ஏற்கெனவே வேலுவின் வீரதீரங்களை அறிந்த குழந்தைகளிடம் இருந்துதான் அந்த ஆரவாரம் கிளம்பியது. வேலன் நடு மேடைக்கு வந்து நின்றபடி, ”இளவரசியக் காப்பாத்தப் போறேன். நீங்க வர்றீங்களா?” எனக் குழந்தைகளைப் பார்த்துக் கேட்டான். ஆயிரம் குழந்தைகளும் உற்சாகமாகத் தலையசைத்தார்கள். ”என்னை மாதிரி துடுப்பு வலிங்க…” என்றபடி, வேலன்… ”ஏஹோய்… ஏஹே ஹோய்…” எனப் பாடியபடி துடுப்பை அசைக்க… குழந்தைகளும் ஒரு கணத்தில் வேலனாக மாறி, துடுப்பை அசைத்தார்கள். பிரதான சாலையில் போகிறவர்களுக்குக்கூடக் கேட்கும் விதத்தில் அவர்களின் ஏஹோய்… ஏஹே ஹோய் சத்தம் பெரிதாக இருந்தது. ஆயிரம் குழந்தைகளின் குதூகலத்தையும் மீறி வேலுவுக்குள் துக்கம் பெருகியது.

இதுபோல ஒரு நாடக மேடையில்தான் முதன்முதலில் நிர்மலாவை வேலு சந்தித்தான். உறவையும் பிரிவையும் தீர்மானிக்கும் இடத்தில் நாடக மேடைகள் இருப்பதை எண்ணி அவன் சிரித்தபோது, ”வேலு மாமா…” என்கிற குரல், உச்சத்தைத் தொட்டு இருந்தது.

கடல் பூதம் அவனுடைய பாய்மரப் படகைக் கவிழ்க்க சூறாவளிக் காற்றை ஏவிவிட்டு இருப்பதைக் கட்டியங்காரன் சொன்னான். டிஜ்ருடுவின் ஓங்கார இசையோடு முரசின் ஓசையும் கலந்து, அடிவயிற்றில் திம்திம் என ஒலித்தது. வேலு நிலைகுலைந்தான். அவன் துடுப்பு கைநழுவிப்போனது. i don’t wanna live with u. குறுஞ்செய்தி வாசகம் அவன் நினைவைவிட்டு அகலவில்லை. வேறு எப்போதும் வேலன் இப்படி இருந்தது இல்லை. அரிதாரம் பூசிய பிறகு, அவன் அந்தக் கதாபாத்திரமாக மட்டுமே இருப்பான். ஆனால், இன்று நிம்மியின் கணவனாக இருந்தான். I’m leaving எங்கே சென்று இருப்பாள்? வேலனுக்காக உறவுகளை எல்லாம் துடைத்தெறிந்துவிட்டு வந்தவள். ‘நீல தேசத்து இளவரசி மாதிரி ஏதாவது ஒரு பிரச்னையில் சிக்கி இருப்பாளோ?’ என்கிற அச்சம் அவனுள் எழுந்தது. சூறைக் காற்றில் படகு உடைந்தது. வாள் சுழற்றியபடி கடல் அரக்கர்கள் வேலுவைச் சூழ்ந்தனர்.

ஒரு கடல் அரக்கனின் குண்டாந்தடி வேலுவின் மண்டையில் இறங்கியது. பாய்மரப் படகு இரண்டாகப் பிளந்து கடலுக்குள் வீழ்ந்தான் வேலு. குழந்தைகள் திகைப்புடன் பார்த்துக்கொண்டு இருந்தனர். கடல் பூதத்தின் பேய்ச் சிரிப்போடு விளக்குகள் அணைந்தன. ”திமிங்கில அடிமைகளே… உங்கள் பசிக்கு இவனை இரையாக்கிக்கொள்ளுங்கள்”- இருளில் கடல் பூதத்தின் குரல் ஒலித்தது.

மெல்லிய விளக்கொளியில் மேடையில் விழுந்துகிடந்தான் வேலு. குழந்தைகளின் பேரமைதி வேலுவை மேலும் துயரப்படுத்தியது. ‘நிம்மி எங்கே சென்றிருப்பாள்?’ வேலுவுக்குத் தன்னை ஏதேனும் ஒரு திமிங்கிலம் விழுங்கிவிட்டால் நல்லது என்று தோன்றியது.

வேலு கண் மூடினான். அசைவற்றுக்கிடந்தான். அப்படித்தான் கிடக்க வேண்டும். வெள்ளி மீன் வந்து, தான் கடல் பூதத்தால் தன்னுடைய வம்சத்தை இழந்த கதையைச் சொல்லி, அவனை பவளப் பாறை மறைவுக்கு எடுத்துச் செல்லும் வரை அப்படியே சலனமற்றுக்கிடக்க வேண்டும். வேலுவுக்கு அந்தத் தருணம் பிடித்திருந்தது. எந்தப் பாவனையும் அற்று இருப்பது அழகாக இருப்பதாக உணர்ந்தான்.

வேலுவின் வாழ்க்கை முழுக்க முழுக்கப் பாவனைகளால் கட்டமைக்கப்பட்டு இருந்தது. 22 ஆண்டுகளாகக் குழந்தைகள் நாடகக் கலைஞனாக இருக்கிறான். தினப்படி நாடகம் இல்லை என்றால், ஒத்திகை இருக்கும். சில சமயம் அன்றன்றாடப் பட்சியாகவோ… ஐராபாசியாகவோ வீட்டுக்கு வந்துவிட நேர்வதும் உண்டு. நிம்மி மிக நல்ல மன நிலையில் இருக்கும்போது, ”வாடா பாவனை ராஜகுமாரா” என்றுதான் அழைப்பாள். நிம்மியின் வார்த்தைகளுக்குள் சொக்கிக்கிடந்த காலம் ஒன்று உண்டு.

தஞ்சை கலை இலக்கியப் பெருமன்ற விழாவில்தான் வேலன் முதன்முதலாக நிர்மலாவைச் சந்தித்தான். அன்று இளவரசியாக நடிக்க வேண்டிய பாலகிருட்டிணன் குடித்துவிட்டு விழுந்துகிடந்தான். அவனைத் தட்டி எழுப்பியபோது, ”இளவரசிக்குத்தான் டயலாக் இல்லையே… என்னை அப்படியே தூக்கிக்கொண்டுபோய் நிறுத்து நடிக்கிறேன்” என்று உளறினான். ”ஏண்டா, இடுப்பில் இருக்கிற வேட்டி அவுந்துகிடக்கிறதுகூடத் தெரியாம கிடக்கிறே… இப்படியே எப்படிடா நடிப்பே?”

”பட்டாபட்டி டவுசர் போட்ட இளவரசி புதுமையாத்தானே இருப்பா…” என்று அவன் சொல்லிக்கொண்டு இருந்தபோது, நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த பேராசிரியர் காமராசோடு வந்திருந்தாள் நிர்மலா.

நிர்மலாவின் சிரிப்பைத்தான் முதலில் பார்த்தான் வேலு. ”பட்டாபட்டி இளவரசி” எனச் சொல்லிச் சொல்லிச் சிரித்தாள். அவள் சிரிப்பு அடங்கவும்… காமராசு, ”என்னாச்சு வேலு… இன்னிக்கு நாடகம் போட முடியாதா?” என அக்கறையோடு விசாரித்தார். ”இளவரசியா நடிக்கிறதுக்கு யாராவது வேணும் சார்.” வேலன் தன் பார்வையை நிர்மலாவைவிட்டு அகற்றாமல் காமராசுவிடம் கேட்டான். ”யேய்! நான் இளவரசிடா… என்னை எவனும் காப்பாத்த வேணாம். என்னைய நானே காப்பாத்திக்குவேன். நாங்க பாக்காத கடல் பூதமா? எத்தனை மேடையில் பாத்திருக்கோம். நேத்துகூடக் கடல் பூதமும் நானும்தான் சரக்கைப் போட்டோம். ஒரு குவார்ட்டருக்குக்கூட தாங்க மாட்டான் மங்குணிப் பய. அவன்லாம் கடல் பூதமா… நான்சென்ஸ்!’ – போதையில் பாலகிருட்டிணன் உளறினான். கடல் பூதமாக நடிக்கும் குழந்தைசாமி, பாலகிருட்டிணனின் புட்டத்தில் ஒரு மிதி மிதிக்க, வேலனுக்கு அவமானமாக இருந்தது.

”நான் வேணா இளவரசியா நடிக்கட்டுமா?”- வெகு இயல்பாக நிர்மலா கேட்டாள். காமராசு, நிர்மலாவை ஆச்சர்யமாகப் பார்த்தபடி, வேலனிடம் ”தெரிஞ்ச பொண்ணு… உன்னைய பாக்கணும்னு சொல்லிச்சு. அதான் கூட்டிட்டு வந்தேன். அதுவும் நல்லதாப்போச்சு” என்றார்.

வேலன் அவருக்கு ஒரு நன்றியைச் சொல்லிவிட்டு, ஒத்தி கையை ஆரம்பித்தான். வேலனின் நாடகத்தில் அது வரை எந்தப் பெண்ணும் நடித்தது இல்லை. அன்றைய நாடகம் வழக்கத்தைவிடச் சிறப்பாக அமைந்தது.

நாடகம் முடிந்த பிறகும் அவர்கள் நெடுநேரம் பேசிக்கொண்டு இருந்தார்கள். கல்லூரிக் காலத்தில், தான் வேலுவின் நாடகத்தை ஒரு முறை பார்த்திருப்பதாகச் சொன்னாள் நிர்மலா. விடை கொடுக்கப் பேருந்து நிலையம் வரை வந்தாள். இருவரும் தங்களுடைய செல்போன் எண்களைப் பரிமாறிக்கொண்டார்கள். அதன்பின் தொடர்ந்த போன் உரையாடல்களில் இருவரும், அவர்களுக்குள் இருந்த காதலை உணர்ந்தார்கள்.

‘வீட்டில் வந்து பெண் கேட்கும் தைரியம் இருக்கா வேலுப் பிள்ளே?’ என ஒரு குறுஞ்செய்தியை நிர்மலா அனுப்பிய மறு நாள், வேலு தஞ்சாவூரில் இருந்தான்.

நிர்மலாவின் அப்பா வெகு நிதானமாகப் பேசினார். ”ஒரு கூத்தாடியுடன் என் மகளின் வாழ்க்கையைப் பொருத்திப் பார்க்க விருப்பம் இல்லை” என்றார். ”அதையும் மீறி நீங்கள் திருமணம் செய்துகொள்வீர்களானால், நான் தடை ஒன்றும் சொல்லப்போவது இல்லை. அப்படித் திருமணம் செய்வதற்கு முன் எனக்கும் என் மகளுக்குமான உறவு முறிந்துபோகும்” என்றார்.

”அப்பா நான் இவரோட ரொம்ப தூரம் பயணப்பட்டுட்டேன். இனி, திரும்ப உங்க வழிக்கு என்னால் வர முடியாது. எப்பவாவது நான் செஞ்சது தப்பில்லைனு தோணினா, என்னை வந்து பாருங்க” என்றபடி வேலுவோடு புறப்பட்டாள் நிர்மலா. அப்பாவின் நிதானமும் அழுத்தமும் அப்படியே நிர்மலா விடம் இருந்தது.

வெறும் பேச்சுவார்த்தைக்கு என்று வந்தவன், நிர்மலாவோடு திரும்பினான். திருமண வாழ்க்கைக்கான எந்த ஏற்பாடும் வேலனிடம் இல்லை. பாலகிருட்டிணன், குழந்தைசாமி இவர்களுடன் ஓர் அறையில் தங்கியிருந்தான் வேலன்.

நிர்மலாவுக்கு அவர்களோடு தங்குவதில் எந்தப் பிரச்னையும் இல்லை. அவள் அவர்களோடு மிகவும் அன்பாக இருந்தாள். பாலகிருட்டிணனை இளவரசி என்றும் குழந்தைசாமியைப் பூதம் என்றும் அழைத்தாள்.

வேலனின் வாழ்க்கையில் நிர்மலாவின் வருகைக்குப் பின் பெரிய மாற்றம் இருந்தது. அவனுடைய நடை உடைகளே மாறி இருந் தன. அடுத்த மூன்று வருடங்களில் ஒரு சொந்த வீடு கட்டும் அளவுக்கு வேலுவை மாற்றி இருந்தாள். சொந்த வீடு கட்டிய பிறகுதான் தன்னுடைய வாழ்க்கை தன் வசப்பட்டதாக உணர்ந்தான் வேலன். வேலுவின் காதல் காலம் அங்கு இருந்துதான் தொடங்கியது. சின்னச் சின்ன வார்த்தைகள்தான் நிம்மியிடம் எப்போதும் அழகு. ”குட்டிப் பையா” என அவள் அழைக்கும் விதத்தில் ஒருவித மயக்கம் இருக்கும்.

ஒரு நாள், ”எம் மேல உனக்குக் கோபமே வராதாடா?” என்றாள்.

வேலனுக்கு அது வேடிக்கையாக இருந்தது. எதற்காகத் தன்னிடம் கோபத்தை எதிர்பார்க்கிறாள் என்பது அவனுக்குப் புரியவில்லை. ”எதுக்குக் கோபப்படணும்?” என்றான்.

”போடா மக்கு பிளாஸ்திரி. கோபத்துக்குப் பிறகு வர்ற அன்பு எப்படி இருக்கும் தெரியுமா? எங்க அப்பாவும் நானும் செல்லமாக் கோபப்படுவோம். யாரு முதல்ல பேசறதுனு ஒரு ஈகோ வரும். சுவரைப் பாத்து ஒரு மூணு நாள் பேசுவோம். அது எவ்வளவு அழகா இருக்கும் தெரியுமா?”

Nadagam2நிம்மி அவள் அப்பாவைத் தன்னில் பார்க்க விரும்புகிறாள் என வேலனுக்குத் தோன்றியது. நிம்மி அப்படி யோசிக்கக்கூடியவள்தான். அவள் அப்பாவை விட்டு வந்த அன்று பேருந்துப் பயணத்தில், ”வேலு… என் கையை அழுத்தமாப் பிடிச்சிக்கடா; மனசுக்குள்ள இருந்து அப்பா கூப்பிட்டுக்கிட்டே இருக்காரு; திரும்பிப் போனாலும் போயிருவேன்” என்றாள்.

அப்பா அவளுக்குள் அழுந்தப் பதிந்த மனிதர். அவள் அப்படித் தன்னைப் பார்க்க விரும்புகிறாள் என்கிற எண்ணமே அழகானதாகவும் விநோதமானதாகவும் இருப்பதாக உணர்ந்தான் வேலன். அதற்காகவே வேலன் அவளிடம் கோபப்பட விரும்பினான்.

பாலகிருட்டிணன் மீதும் குழந்தைச்சாமி மீதும் தினசரி வரும் கோபம் நிம்மியின் மீது ஏனோ வரத் தயங்கியது. ”நிம்மி உம் மேல கோவமே வர மாட்டேங்குது” என வேலன் சொன்னபோது, நிம்மி சிரித்தபடியே ”உன் கோபமும் என்னை லவ் பண்ணுதோ என்னவோ” என்றாள். அவள் அப்படிச் சொன்னவிதம் வேலனுக்குப் பிடித்திருந்தது.

ஒரு நாள் சமையலைக் காரணம் காட்டி பாவனையாக அவளிடம் கோபப்பட்டான். ”என் சமையல் பிடிக்கலைன்னா, என் மேல உனக்கு இருக்கிற அன்பு குறைஞ்சிட்டு வருதுனு அர்த்தம்”- நிம்மியும் அவனோடு பதிலுக்கு மல்லுகட்டத் தொடங்கினாள். அந்தச் சண்டை சில மணி நேரம் நீடித்தது. ”குட்டிப் பையா! எம் மேல கோபமாடா?” என நிம்மி அருகில் வந்து கேட்கவும் சிரித்தபடியே ”ஆமா” என்றான்.

”அட முட்டாப் பயலே! பேச்சுவார்த்தையில தீர்ற பிரச்னைன்னா… அதுக்குப் பேரு கோவம் இல்லடா, ஊடல்” என்று வேலனின் தலையில் குட்டினாள். சின்ன வயதில் அம்மா செல்லமாகக் குட்டுவதுபோல் இருந்தது.

அவள் மடியில் படுத்தபடி, ”எனக்கு அம்மா இல்லாத குறையை நீ தீர்த்துவைக்கிறே” என நெகிழ்ச்சியாகச் சொன்னான். ”எனக்குக் குழந்தை இல்லாத குறையை நீ தீத்துவைடா”- நிம்மி யின் இந்த வார்த்தைதான் அவர் களை வழிநடத்தி, இந்தப் பிரிவின் எல்லையில் கொண்டுவந்து நிறுத்தி இருக்கிறது.

வெள்ளி மீன் தன் கதையைச் சொல்லி முடித்து, பவளப் பாறைகளுக்கு இடையே வேலனை இழுத்துச் சென்றது. வேலனின் காதுக்குள் இளவரசியை மீட்பதற்கான மந்திரத்தைச் சொன்னது. நிம்மியை மீட்டெடுக்கும் மந்திரத்தையும் யாரேனும் இப்படிக் காதுக்குள் வந்து சொன்னால், நன்றாக இருக்கும் என வேலனுக்குத் தோன்றியது. மந்திரத்தை வேலன் உச்சரித்தான். கடல் பூதத்தின் உடல் நடுங்கியது. ‘கடல் ஜீவராசிகளை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் அளவுக்கு சர்வ வல்லமை படைத்த தன்னை, ஒரு சாதாரண படகோட்டி அழிக்க முனைவதா!’ என்கிற ஆத்திரத்தில் வேலனை அழிக்க சில்வண்டு ராட்சசனை ஏவிவிட்டான். மேடையின் மையத்தில் சில்வண்டு ராட்சசன் ஒரு கயிற்றில் தொங்கியபடி பறந்துகொண்டு இருந்தான். சில்வண்டு ராட்சசன் மேடையில் தோன்றியதுமே குழந்தைகளின் உற்சாகம் கரைபுரண்டது.

இந்த நாடகத்துக்கு என்று இரண்டடி குள்ள மனிதனைச் சில்வண்டு ராட்சசனாகத் தேர்வுசெய்தது, அவனுக்கான ஆடைகளை வடிவமைத்தது எல்லாம் நிம்மிதான். ”வர வர… நீ சினிமா ஹீரோ மாதிரி ப்ளே போட ஆரம்பிச்சிட்டே… வேலு மாமாவால முடியாதது ஒண்ணும் இல்லைங்கிற மாதிரி இருக்கு உன் நாடகம். ஹடில்ஸ் நிறைய இருக்கணும்டா. அப்பதான் நாடகம் சுவாரஸ்யமா இருக்கும்” என்று சொல்லி, சில்வண்டு ராட்சசனை உருவாக்கினாள்.

சில்வண்டு ராட்சசனுடன் பறந்தபடியே சண்டை போட வேண்டும். இன்றைக்கு இருக்கும் மன நிலையில் அது சாத்தியமா என்று தெரியவில்லை. ஒரு கணம் கவனம் பிசகினாலும் கயிறு கை நழுவிப் போய்விடும். குழந்தைகளுக்கு வேலு மாமாவின் மீதான பிம்பம் உடையும். வேலு தனக்குள் இருக்கும் துயரங்களைத் தூர வைத்துவிட்டு கண் மூடி மந்திரத்தை உச்சரித்தான். மெள்ள வேலு அந்தரத்தில் எழத் தொடங்கினான். ஒரு தாளக்கட்டோடு குழந்தைகள் கைதட்ட ஆரம்பித்தார்கள்.

”உனக்கென்னடா தினமும் ஆயிரம் குழந்தைகளப் பாக்கறே. அவங்க வேலு மாமா… வேலு மாமானு உன்னைக் கொண்டாடுறாங்க. அதுலயே வாழ்ந்து முடிச்சிருவே. ஆனா, நான் இவ்ளோ பெரிய வீட்டுல ஒத்தை ஆளா இருக்கணும்.” ஒரு நாள் நாடகம் முடித்து வீடு திரும்பியதும் நிம்மி கண்கலங்கி இதைச் சொன்னாள். வேலனுக்கு அவளுடைய வலி புரிந்தது.

மறு நாள் மருத்துவமனைக்குச் சென்றார்கள். பல பரிசோதனைகளுக்குப் பிறகு, வேலனுக்கு குழந்தை பெறுவதற்கான சாத்தியம் இல்லை என்கிற மருத்துவ உண்மையை அறிந்துகொண்டார் கள்.

”சரி விடு… குழந்தை பாக்கியத்துக்கு நாம கொடுத்துவைக்கலை” என்று அதைச் சாதாரணமாகத்தான் எடுத்துக்கொண்டாள் நிம்மி. ”ஒரு குழந்தையைத் தத்தெடுக்கலாம்” என்றான் வேலன். ”என்னால தாய்மையை இரவல் வாங்க முடியாதுடா” என்கிற ஒற்றை வார்த்தையில் முடித்துக்கொண்டாள்.

நிம்மி எல்லாவற்றையும் எளிமையாக எடுத்துக்கொண்டதைப்போல வேலனால் எடுத்துக்கொள்ள முடியவில்லை. ஒரு புன்னகையில், ஒற்றைப் பார்வையில், ஓர் உடல் அசைவில் ஆயிரம் குழந்தைகளைக் கட்டிவைக்கும் தனக்கொரு குழந்தை இல்லை என்பதை அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. வீட்டில் இருக்கும் தனிமையை முதன்முதலாக உணர ஆரம்பித்தான் வேலன். அவனுடைய இயலாமை அவனுக்குள் ஒரு குற்ற உணர்ச்சியை ஏற்படுத்தியது.

நிம்மியின் தனிமையும் வேலனின் இயலாமையும் அவ்வப்போது முட்டிக்கொண்டன. ”உனக்குப் பத்துப் புள்ள பெத்துத் தரணும்டா… அதுதான் என்னோட லட்சியம்”- திருமணம் முடிந்து வந்தபோது அவள் தன்னுடைய லட்சியமாகப் பறைசாற்றியதைத் தன்னால் துளியளவுகூட நிறைவேற்ற இயலவில்லை என்கிற ஆற்றாமையை அவனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. வீடு அவனுக்கு அந்நியமாகத் தெரிந்தது. நிம்மியின் புன்னகைக்குள் புதைந்துகிடக்கும் கண்ணீர்த் துளிகளை அவனால் பிரித்துப் பார்க்க முடிந்தது. அதுவே அவனைத் தாங்க இயலாத துயரத்துக்கு இட்டுச் சென்றது.

‘விந்து வங்கியின் உதவியோடு ஒரு குழந்தை பெறலாம்’ என நண்பன் சொன்ன யோசனையைச் சொன்னபோதுதான், முழுவீச்சாக நிம்மியின் மூர்க்கமான கோபத்தை வேலனால் உணர்ந்துகொள்ள முடிந்தது.

”நான் வாழ்க்கையில நேசிச்ச ஒரே ஆம்பள நீதாண்டா. பத்தாங் கிளாஸ் படிக்கறப்போ அவனப் புடிச்சது; பன்னெண் டாங் கிளாஸ் படிச்சப்போ இவனப் புடிச்சது; கடைசியா உன்னைப் பிடிச்சதுனு வரல. பெத்தா உன் புள்ளயப் பெறுவேன். இல்லேன்னா, காலம் பூரா மலடாவே இருந்துட்டுப்போவேன்” என்று கத்தித் தீர்த்துவிட்டாள்.

வாய் ஓயாமல் பேசிக்கொண்டு இருக்கும் நிம்மி, அதன் பின் பேசுவது குறைந்துபோனது. ”வரும்போது நாப்கின் வாங்கிட்டு வர்றியா?” என நிம்மி கேட்கும் தருணங்களில், வேலன் மிகவும் உடைந்துபோவான். வாளால் சிரம் அறுத்ததுபோல, உயிர் ஒரு முறை போய் திரும்பும்.

சில்வண்டு ராட்சசனின் நெஞ்சில் குறுவாளால் குத்தியபடி, கடல் பூதத்தின் உயிர் ஒளித்துவைக்கப்பட்டு இருக்கும் இடத்தைச் சொல்லுமாறு கேட்டான் வேலன். ஆழக் கடலில் ஒரு குடுவையில் பூதத்தின் உயிர் இருப்பதை அறிந்துகொண்டான். சில்வண்டைக் கொன்றுவிட்டு கடலுக்குள் மறைந்தான் வேலன்.

வேலனின் உடலுக்கு மேல் நீலப் புடவை அலைபரப்பிக்கொண்டு இருந்தது. இன்னும் பத்து நிமிடங்கள் கடல் பூதத்தின் உயிரை எடுத்துவிட்டால், நீல தேசத்து இளவரசி வந்துவிடுவாள். அதோடு நாடகம் முடிந்துவிடும். வேலனுக்கு நாடகம் எப்படா முடியும் என்று இருந்தது. ஒரு வேளை நிம்மியே மனம் மாறி போனில் அழைத்தாலும் அழைப்பாள் எனத் தோன்றியது. அப்படி அழைத்தால் நன்றாகத்தான் இருக்கும். நிம்மியைத்தான் தான் புரிந்துகொள்ளவில்லை என்பதை வேலன் உணர்ந்தான். அவள் இயல்பாகச் சொன்ன வார்த்தைகள்கூட, அவனுக்குத் தவறாகப்பட்டிருக்கிறது.

மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு, அவள் வேலனை எத்தனையோ முறை சரிசெய்ய முயன்று இருக்கிறாள். ஒரு முறை ”நீ என்ன அவ்ளோ பெரிய இவனாடா… மூஞ்சியக் காட்டிட்டுத் திரியற… இந்த 1,800 ஸ்கொயர் ஃபீட் வீட்டில் ரெண்டே ரெண்டு பேருதான் இருக்கோம். ரெண்டு பேருமே பேசாம இருந்தா எப்படி?” என்றாள் வெளியே புறப்பட்டுக்கொண்டு இருந்தவனை வழிமறித்து. அவள் இதைச் சொன்ன விதம் வேலனுக்குத் தவறாகத் தெரிந்தது. ”ஆமா, நான் ஒண்ணும் பெரிய ஆளு இல்லதான். உனக்கு ஒரு புள்ளயக் கொடுக்கக்கூட வக்கில்லாதவன்தான். என்னை என்ன செய்யச் சொல்றே?” என்றபடி அவளுடைய பதிலை எதிர்பார்க்காமல் வெளியேறினான்.

இரவு திரும்பி வந்தபோது, நிம்மியின் முகம் வீங்கி இருந்தது. வேலன் அதைக் கவனித்தபோதும் எதுவும் கேட்காமல் அறைக்குச் சென்றான். நிம்மியும் எதுவும் பேசாமல் வந்து படுத்தாள்.

ஒரு கனத்த மௌனத்துக்குப் பிறகு ”உனக்கு என்னைச் சமாதானப்படுத்தணும்னு தோனலல்ல” – அவள் எங்கோ பார்த்தபடி சொன்னது வேலனுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. ”நான் ஒண்ணும் தப்பாப் பேசல… என்னோட இயலாமையைச் சொன்னேன். அவ்வளவுதான்” என்றபடி திரும்பிப் படுத்தான்.

நிம்மி அப்போதும் அழுதுகொண்டுதான் இருந்தாள்.

காலையில் உணவு பரிமாறியபடியே, ”இந்த ஆறு வருஷ வாழ்க்கையில் உன்னோட ஒவ்வோர் அசைவுக்கும் எனக்கு அர்த்தம் தெரியும். ஆனா, நீ என் மனசைக்கூடப் புரிஞ்சுக்கல. இப்படி ஒரு வாழ்க்கை ஏன்னு எனக்குப் புரியல. நாம ஏன் சேர்ந்து வாழணும் வேலு?” முதன்முறையாக அந்தக் கேள்வியை அப்போதுதான் கேட்டாள். கடந்த ஆறு மாதங்களாக அந்தக் கேள்வியை மட்டுமே கேட்டுக்கொண்டு இருக்கிறாள். இன்று அந்தக் கேள்விக்கான விடைதான் வீ பீஷீஸீ’t ஷ்ணீஸீஸீணீ றீவீஸ்மீ ஷ்tலீ u.

பாலகிருட்டிணன் ஒரு குடுவையை வேலுவின் அருகே உருட்டிவிட்டான். அதற்குள்தான் கடல் பூதத்தின் உயிர் இருக் கிறது. அதைத் திறந்தால் புகையாகக் கிளம்பும். அந்தப் புகை முற்றிலுமாக வெளியேறியதும் நெஞ்சைப் பிடித்துக்கொண்டு கடல் பூதம் விழுந்து மரிக்கும். மேடையில் கலங்கிய புகைக்கு மத்தியில் நீல தேசத்து இளவரசி தோன்றுவாள். அதோடு நாடகம் முடியும். வேலன் தனக்குள் இருந்த சக்தியை எல்லாம் ஒன்று திரட்டி எழுந்து நின்றான்.

கடல் பூதத்துக்கு எதிராக ஒரு நீண்ட வசனம் பேச வேண்டும். தடுமாற்றம் இல்லாமல் பேசிவிட முடியுமா என்கிற கேள்வி அவனுள் எழுந்தது. குடுவையுடன் எழுந்த வேலுவைப் பார்த்து குழந்தைகள் எழுந்து நின்று கைதட்டின. இனி பேசுகிற ஒவ்வொரு வார்த்தைக்கும் பெரியவர்கள் கைதட்டுவார்கள். கடல் மீதான மீனவனின் உரிமை. பூதத்தால் அழிக்கப்படும் மீனவர்களின் வலி என ஒவ்வொரு வார்த்தையிலும் ஓர் உள் அரசியல் இருக்கும். பூதத்தின் கழுத்தில்கிடக்கும் சிவப் புத் துண்டுக்கும் மண்டை ஓட்டு மாலைக்கும்கூட ஓர் அரசியல் சாயம் உண்டு.

எல்லாம் சரியாகச் செய்ய வேண்டும் என்கிற பதற்றம் வேலனுக்குள் எழுந்தது. ”ஏ ஹோய்… ஏஹே ஹோய்… கடல் தாயே! உன் மகன் உன்னைக் காக்க வந்திருக்கிறேன்” எனப் பேசத் தொடங்கியபோது எழுந்த ஆரவாரம் கடல் பூதம் செத்துவிழும் வரை ஓயவில்லை. மேடை முழுவதும் புகையாக இருந்தது. புகைக்கு நடுவில் இருந்து பாலகிருட்டிணன் இளவரசியாக வந்தான். ஒரு பெரும் கைதட்டலோடு நாடகம் முடிந்தது.

அதுவரை வேலனுக்குள் அடக்கி வைக்கப்பட்ட மிருகத்தைப் போல இருந்த கண்ணீர் பீறிட்டுக் கிளம் பியது. அவன் குலுங்கி அழத் தொடங்கினான். வேலனால் இனி ஒருபோதும் நிம்மி இல்லாமல் நாடகம் நடத்த இயலாது எனத் தோன்றியது.

கலைந்துகிடந்த மேடையில் ஒற்றை மனிதனாக அமர்ந்தபடி, இதுதான் தான் நடிக்கும் கடைசி நாடகம் எனத் தீர்மானித்துக்கொண்டான். அது அவனை மேலும் துயரப்படுத்தியது. லேசாக மழை தூறியது. சற்று முன் வேலனை ஒரு கோமாளியாகப் பார்த்துச் சிரித்த குழந்தைகளின் சிரிப்பெல்லாம் மழைத் துளியாய் விழுவதாக உணர்ந்தான்.

வேலனின் செல்போன் ஒலித்தது. நிம்மி மீண்டும் ஒரு குறுஞ்செய்தி அனுப்பி இருந்தாள். ‘குற்றவுணர்ச்சியில் நீ தினம் தினம் படும் அவஸ்தையைத் தாங்க முடியவில்லை. என்னை மன்னித்துவிடு. உன் உலகம் அழகானது அதனோடு வாழப் பழகிக்கொள் – நிம்மி.’ என்றிருந்தது. வேலன் மீண்டும் அவளுடைய எண்ணுக்கு முயற்சி செய்தான். அவள் தொடர்பு எல்லைக்கு வெளியே இருந்தாள். செல்போனைத் தூக்கி எறிந்துவிட்டு வேலன் எழுந்து நடக்கத் தொடங்கினான். அதன் பின் வேலன் ஒருபோதும் நாடகம் நடத்தவில்லை. நிம்மி உள்ளிட்ட யாரும் வேலனைப் புரிந்துகொள்ளவில்லை. வேலனைப் புரிந்துகொள்ள; வேலனாய் வாழ வேண்டும்.

– ஜனவரி 2012

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *