நல்ல பிள்ளை எப்பவும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: October 6, 2015
பார்வையிட்டோர்: 9,191 
 

“மாயா!”

டி.வியில் தொடர் நாடகம் ஆரம்பிக்கும் நேரம். அவசரமாக, பழைய சோற்றை வாயில் அடைத்துக்கொண்டு, பக்கத்து வீட்டுக்குப் புறப்பட ஆயத்தமாகிக் கொண்டிருந்த மாயா காதில் விழாததுபோல இருந்தாள்.

“ஏ மாயா! கூப்பிட்டா, ஒடனே பதில் கொரல் குடுக்கறதில்ல? செத்தா தொலைஞ்சுட்டே?”

அந்த வேளையில் தந்தையின் குரலை எதிர்பார்த்திருந்தாலும், மாயாவுக்கு எரிச்சலாக எரிந்தாது.

“என்னப்பா?” என்றாள் அலுத்தபடி.

“சீனன் கடைக்குப் போய், நான் அனுப்பினதாச் சொல்லி வாங்கிட்டு வா. மசமசன்னு வேடிக்கை பாக்காம, போனமா, வந்தமான்னு..!”

ஒருநாளைப்போல் இதே வார்த்தைகள்தாம். என்ன வாங்கி வருவது என்பதை அவளிடம் சொல்ல வேண்டிய அவசியம் இருக்கவில்லை. தினமும் அதே சரக்குதானே!

தான் ஒரு ஆணாக இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நினைத்துக்கொண்டாள் மாயா. இப்படி இருட்டில், குண்டும் குழியுமாக இருக்கும் குறுக்குப் பாதையில் பயந்து பயந்து நடந்துபோக வேண்டாம்.

பயம் வழியில் மட்டும் இருக்கவில்லை.

சீனன் கடையென்று பெயர்தான். அந்த `பங்களா’ மட்டும்தான் கடையில் இருப்பான். பங்களாதேஷிகளுக்கே உரிய அடர்ந்த இமைகளுடன் கூடிய அகன்ற கண்களும், நல்ல உயரமாய், அந்த உயரத்தினால் உண்டான ஆழ்ந்த குரலுமாய்..!

அவன் ஏன் இப்போதெல்லாம் தன்னோடு சண்டை பிடிக்கிறான் என்று மாயாவின் யோசனை போயிற்று.

“ஏ பொண்ணு! அப்பா பேரைச் சொல்லி, ஒனக்காகத்தானே வாங்கிட்டுப் போறே?” என்று மலாய் மொழியில் கேட்டு அவன் சிரித்தபோது, முதலில் அவளுக்குக் கோபம்தான் வந்தது.

“இல்ல ஒண்ணும்!”

இதே உரையாடல்தான் தினமும்.

“என் பேரு கரீம். ஒன் பேரு என்ன?” தோள்மேல் படிந்தது அவன் கரம்.

இன்னதென்று புரியாத உணர்வுடன் மூச்சை உள்ளுக்கிழுத்துக்கொண்டாள். “சொல்ல மாட்டேன், போ!”

“சொல்லாட்டிப் போயேன்! எனக்குக் கண்டுபிடிக்க முடியாதா!”

அடுத்த முறை, தன் தந்தை முனியனுடன் அவள் கடைக்கு வந்திருந்தபோது, `ஏ மாயா!’ என்று அவர் உரக்க அழைத்தது தப்பாகப் போயிற்று.

அவள் தனியாக வந்தபோது, “மாயான்னா ஒரு சாமான் உண்மையா அதோட இடத்தில இல்லேன்னு அர்த்தம். நீ இருக்கியான்னு தொட்டுப் பாக்கட்டுமா?” அவள் மார்பைப் பிடித்து அழுத்தினான்.

அவள் திகைப்புடன் விரிந்த விழிகளுடன் அவனைப் பார்க்கையில், கண்ணடித்துவிட்டு, கையை விலக்கிக்கொண்டான்.

மாயாவுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. இது தப்பு என்றுதான் பட்டது.

யாரிடம் போய் சொல்வது? கண்டிப்பாக, அப்பாவிடம் சொல்ல முடியாது.

`அவன் ஒன்னைப் பிடிக்கிறவரைக்கும் நீ வேடிக்கை பாத்துட்டு இருந்தியா?” என்று, அவள்மேலேயே பழியைத் திருப்புவார். அவரைப்பொறுத்தவரை, பெண்களால்தான் இந்த உலகமே கெட்டுக் குட்டிச்சுவராக இருக்கிறது. அம்மா மட்டும் செத்திருக்காவிட்டால், அந்த துக்கத்தை மறக்க இப்படி அவர் குடித்தே சாக வேண்டியிருக்குமா?

மாயாவுக்கும் அம்மாவின்மேல் கோபம்தான். தன்னை வளர்க்கவென்று, பாட்டி வீட்டில் விட்டிருக்க மாட்டாரே அப்பா!

`பொம்பளைப் பிள்ளைக்குப் படிப்பு எதுக்கு? நானெல்லாம் படிச்சேனா! வளந்து ஆளாகலே? கல்யாணம் கட்டி, பிள்ளைங்களைப் பெத்து வளக்கலே?” என்று, மந்திரம்போல் பாட்டி தினமும் கூறிவர, `படிப்பு எதற்கு?’ என்று மாயாவுக்கும் தோன்றிப்போயிற்று.

பத்து வயதானபின், பள்ளிக்கூடத்திற்குப் போவதாகப் பாவனை காட்டிவிட்டு, ஆற்றங்கரை, ரம்புத்தான் தோட்டம் என்று கால்போனபடி சுற்ற ஆரம்பித்தாள்.

வாரத்தில் நான்கு நாட்கள் அவள் பள்ளிக்கூடத்துக்கு வராத மர்மத்தை அறிய இரண்டு ஆசிரியைகள் வீட்டுக்கு வந்தபோது, நல்ல வேளையாக, மாயா வீட்டில் இருக்கவில்லை.

பாட்டி, “இது இருக்கா, இல்ல செத்துத் தொலைஞ்சிடுச்சான்னு பெத்த அப்பனுக்கே அக்கறை இல்லே. பள்ளி உடுப்பை மாட்டிக்கிட்டு காலையில போகுது. அவ்வளவுதான் எனக்குத் தெரியும். வயசுக்கு வந்த பிள்ளை ஒடம்பில கொழுப்பெடுத்துப் போய் எங்கெங்கேயோ சுத்தினா, அதுக்கு நான் என்னா செய்யறது!” என்று விட்டேற்றியாகச் சொன்னாள்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் வளரும் பெண் உருப்பட்டால்தான் ஆச்சரியம் என்று அவர்கள் நினைத்திருக்க வேண்டும். மேலே எதுவும் கேட்காமல், விடைபெற்றுக் கொண்டதாகப் பாட்டி மாயாவிடம் தெரிவித்தாள்.

“நீ ஒங்கப்பன் வீட்டுக்கே போடி. கண்டவங்ககிட்ட பேச்சு கேக்க என்னால முடியாது,” என்று கைகழுவிவிட்டாள்.

முதலில், மாயாவுக்கு அந்த விடுதலை சுகமாக இருந்தது. அக்கம்பக்கத்து வீடுகளில் டி.வி, பிறரைப் பற்றிய வம்புப்பேச்சு என்று பொழுதைக் கழித்தாள்.

ஒரு நாள் கண்மண் தெரியாமல் குடித்துவிட்டு வீட்டில் நுழைந்த முனியன், “அன்னக்கிளி! வந்துட்டியா?” என்று தாபத்துடன் கூவி, அவளை அணைக்க முயன்றான்.

“அப்பா! நான் மாயா! அம்மா இல்லே!” என்ற அவள் அலறல் அவனுக்குப் புரிந்ததாகத் தெரியவில்லை. அணைப்பு இறுகியது.

`அது ஏன் என்னைப் பாத்தா எல்லா ஆம்பளைங்களுக்கும் தொட்டுப்பாக்கத் தோணுது?’ மாயாவுக்கு அழத்தான் முடிந்தது.

“ஓ, மாயாவா?” ஏமாற்றத்துடன் அவளை விட்டாலும், “நான் தனியா எவ்வளவு கஸ்டப்படறேன், தெரியுமா, மாயா?” என்று பிதற்றியபடி மீண்டும் அவளை நெருங்கினான்.

முரட்டுத்தனமாக அவனை விலக்கிவிட்டு, இரண்டு கிலோமீட்டர் தொலைவிலிருந்த பாட்டி வீட்டுக்குத் தலைதெறிக்க ஓடினாள் மாயா. ஏதேதோ புலம்பிவிட்டு, “நான் இனிமே அந்த வீட்டுக்குப் போகவே மாட்டேன்!” என்று கதறியவளை, “விடுவியா! என்னமோத்தான் அழுவறியே! பொம்பளையாப் பொறந்துட்டயில்ல? நீ படவேண்டியது இன்னும் எத்தனையோ இருக்கு!” என்று சமாதானப்படுத்தினாள் பாட்டி. “நேத்து டவுனிலேருந்து ஒரு பெரிய மனுசன் வந்து, வீட்டு வேலைக்கு ஆள் வேணும்னு கேட்டுட்டு இருந்தாரு. காடி போட்டுக்கிட்டு வந்தாரு!” அழுத்திச் சொன்னாள்.

“கண்காணாம அங்க போய் தங்கிக்க!”

மாயாவின் பயம் அதிகரித்தது. எவர் வீட்டுக்கோ போவதா! தெரிந்தவர்களே இப்படி..!

அவள் முகம் போன போக்கைக் கவனித்த பாட்டி, “ஒனக்குப் படிக்கவும் பிடிக்கல. வேற என்னதான் செய்வே? வயிறு பிழைக்க வேணாம்?” என்று அதட்டினாள், அவளுக்குப் படிப்பில் அக்கறை இல்லாது போனதற்குக் காரணமே தான்தான் என்றபதை உணராது. `ஒங்கப்பன், அந்தக் குடிகாரப் பாவி, தனியா கெடந்து சாவட்டும்!” என்று மருமகனுக்குச் சாபமும் கொடுக்கத் தவறவில்லை.

`அப்பா’ என்ற வார்த்தை காதில் விழுந்தவுடன், அச்சத்துடன் மூச்சை இழுத்துக்கொண்டாள் மாயா. இங்கே இருந்தால், அப்பா தன்னை அவருடன் இழுத்துப் போனாலும் போவார்! அவள் ஒரு முடிவுக்கு வர அதிக நேரமாகவில்லை.

புறப்படும்போது, “ஒன்னோட வேலை ஒரு சின்னப்பிள்ளையை பாத்துக்கிடறது மட்டும்தானாம். வீட்டைச் சுத்தமா வெச்சுக்க ஒனக்கு சொல்லியா குடுக்கணும்! நான் எப்படி ஒன்னைப் பழக்கியிருக்கேன்!” என்று, கிடைத்த சந்தர்ப்பத்தில் தன்னையே மெச்சிக்கொண்டபடி பாட்டி சொல்லி அனுப்பினாள்.

`காடியில் பயணம் செய்கிறோம்!’ என்று எழுந்த பெருமையில் கடந்தகாலக் கசப்பெல்லாம் அப்பால் போயிற்று.

புறம்போக்கு நிலத்தில், குறுகலான நான்கே தெருக்கள் கொண்ட கம்பத்தைத்தவிர வேறு எங்கும் போய் பழக்கமல்லாத அப்பெண்ணின் விழிகள் பெட்டாலிங் ஜெயாவின் நாகரீகமான வீடுகளையும், அடுக்குக் கட்டிடங்களையும் பார்த்து விரிந்தன.

தன் முன்னால் அமர்ந்து காரை ஒரு கையால் லாவகமாக ஓட்டும் எஜமானரைப் பார்த்தாள்.

`அப்பாவும் இருக்கிறாரே, அழுக்குச் சட்டையும், துர்நாற்றமுமாக! இவர்மாதிரி பெரிய மனிதருக்கு மகளாகப் பிறந்திருக்க வேண்டும்!’ ஏக்கப் பெருமூச்சு விட்டாள்.

பாட்டி அடிக்கடி சொல்ல மாட்டார்கள், `புண்ணியம் செஞ்சிருந்தாத்தான் நம்ப வாழ்க்கை நல்லா இருக்கும்’ அப்படின்னு?

வருத்தத்தினூடே, இந்த மனிதருடைய பிள்ளையாகப் பிறக்கும் புண்ணியம் செய்திருக்கும் குழந்தையின் ஞாபகம் வந்தது.

“ஒங்க பிள்ளை பேரு என்னங்கய்யா?” என்று கேட்டவளை திரும்பிப் பார்த்தான் முரளி.

பதினான்கு வயது என்று அந்த முதியவள் அளந்தாளே? உயரமும் பருமனுமாக இருக்கும் இந்தப பெண்ணுக்குக் கூசாமல், பதினேழு, பதினெட்டு சொல்லலாம். ஆனால், கண்ணில் அறிவுக்களை சுத்தமாக இல்லை என்று ஒரு நொடியில் அளந்தான்.

“படிச்சிருக்கியா?”

“ம். நாலாவது வரைக்கும். பாட்டிதான், பொம்பளைப் பிள்ளைக்கு படிப்பு எதுக்குன்னு நிப்பாட்டிட்டாங்க!”

“தேவலியே! பத்திரிகை எல்லாம் படிப்பியா?”

எங்காவது பிள்ளைக்குப் பாடம் சொல்லிக்கொடு என்றால்? மாயா பயந்தாள். “மறந்து போச்சு..,” என்று இழுத்தாள்.

“ஒங்கப்பா பள்ளிக்கூடத்துக்குப் போன்னு விரட்டலியா?”

தான் மறக்க நினைத்த அப்பாவைப்பற்றிய பேச்சை அவன் எடுத்ததுமே அவள் முகம் வாடியது. “எங்கப்பா ரொம்ப மட்டம். நான் ஒருத்தி இருக்கிறதே அவருக்கு நெனப்பிருக்காது. எப்பவும் குடிப்பாரு!” என்றாள்.

அப்போது முரளியின் முகத்தில் நிம்மதியுடன் கூடிய சிறுமுறுவல் தோன்றியதை அவள் கவனிக்கவில்லை. பார்த்திருந்தாலும், அதைப் புரிந்துகொள்ளும் அளவுக்கு அவளுக்கு விவேகம் வளர்ந்திருக்கவில்லை.

இன்று இதுவரை போதும் என்று நினைத்தவனாய், அவள் கேட்ட கேள்விக்கு நிதானமாகப் பதிலளித்தான் முரளி. “எங்க மகன் பேரு பாண்டி — பாண்டியன். அவங்கம்மா நர்ஸ் வேலை பாக்கறாங்க. அப்பல்லாம் நீதான் பாண்டியைப் பாத்துக்கணும். என்ன?”

குழந்தை பாண்டியைப் பார்த்ததுமே மாயாவுக்குப் பிடித்துப்போயிற்று.

“ஏய்! என் காலைக் கொஞ்சம் பிடிச்சுவிடு!” என்று, மனைவி இல்லாத சமயம் பார்த்து அவளை வேலைவாங்கிய எஜமானர் போலவோ, “இதை எங்க போய் பிடிச்சுட்டு வந்தீங்க? சரியான மக்கு! சுத்தம்னா என்னான்னே இதுக்குத் தெரியல!”என்று அவளெதிரேயே பழித்த வீட்டுக்கார அம்மாள் போலவோ இல்லாது, “அக்கா, அக்கா,” என்று அவளையே சுற்றிச் சுற்றி வந்தான் அந்த இரண்டு வயதுப் பாலகன்.

வீட்டில் அவனுடைய பெற்றோர் இருவரும் வெளியே போய்விடும் நாட்களில் அவனுடன் சேர்ந்து உட்கார்ந்து, கடையில் வாங்கிய முறுக்கையோ, பிஸ்கோத்தையோ கடித்தபடி, பெரிய கலர் டி.வியில் கார்ட்டூன் படங்கள் பார்த்தபோது, உடல் வலிகூட பெரிதாகத் தெரியவில்லை.

பார்ப்பதற்கெல்லாம் தனக்குப் புரிந்தவரை விளக்கம் சொல்லும்போது அவன் கைகொட்டிச் சிரித்தபடி கேட்கையில், இனி என்றும் அவனைத் தன்னுடனேயே வைத்துக்கொள்ள வேண்டும் என்று தோன்றும் மாயாவுக்கு.

அன்று பாண்டியின் அம்மாவுக்கு இரவு வேலை.

“ஏய்! பாண்டி தூங்கிட்டானில்ல? மேல வா! தினமும் கூப்பிடணுமா? சொல்லி இருக்கேன்ல, அவன் தூங்கினதும், நீயே வரணுமின்னு?” மாடியிலிருந்து முரளியின் குரல் அதிகாரமாகக் கேட்டது.

ஆனால் மாயாவின் காதில் அவ்வார்த்தைகள் விழுந்ததாகத் தெரியவில்லை. அசையாது அமர்ந்திருந்தாள்.

ஒரு வேலைக்காரப் பெண்ணுக்கு இவ்வளவு திமிரா! அவனுக்கு ஆத்திரம் எழுந்தது.

மனைவி இவளைப்பற்றி ஓயாது குற்றப் பத்திரிகை வாசித்தாலும் கண்டுகொள்ளாமல், தான் இவளை பாசார் மாலாமிற்கு (மலாயில், இரவுச் சந்தை) அழைத்துப்போய், குட்டைப் பாவாடை, இடுப்புக்குக் கீழ் தொங்கும் தொளதொள சட்டை, வளையல், பின்னலில் கட்டும் பிளாஸ்டிக் ரோஜா என்று எவ்வளவு சாமான்கள் வாங்கிக் கொடுத்திருக்கிறோம்! நன்றிகெட்ட ஜன்மம்!

கேள்வி கேட்ட மனைவியை, `பாவம், ஏழை! தாயில்லாப் பொண்ணு வேற! இவளை சந்தோஷமா வெச்சுக்கிட்டாதானே நம்ப பிள்ளையை கவனமா பாத்துக்குவா!’ என்று அடக்கினோமே!

மாடியிலிருந்து வேகமாகக் கீழே இறங்கி வந்தவன், முரட்டுத்தனமாக அவளுடைய கையைப் பிடித்து இழுத்தான். “சனியன்! செவிடாப் போயிட்டியா?” என்று அலறினான்.

ஆள்காட்டி விரலை உதட்டின்மேல் வைத்து, அவனை அடக்கினாள்: “ஷ்..! பாண்டி தூங்கறான்!” விழிகள் எங்கோ நிலைகுத்தி நின்றன.

மூடியிருந்த அறைக் கதவைத் திறந்து பார்த்தான் முரளி. “எங்கே தூங்க வெச்சே? இங்கே காணோமே?”

“காணும்?” என்று திருப்பிக் கேட்டபடி, அவனைத் தள்ளிவிட்டு, மாயா உள்ளே எட்டிப் பார்த்தாள்.

“முட்டாள்! என்னையே கேளு! அவனைப் பாத்துக்கத்தானே நீ இருக்கே!”

அடுத்த அரைமணி நேரம், அவர்களிருவரும் வீட்டுக்குள் பாண்டியைத் தேடினார்கள். மூடியிருந்த அலமாரிக் கதவைத் திறந்து, அரிசி மூட்டையின் பின்னால் — ஒரு மூலை விடாமல் தேடினார்கள்.

முரளியின் மனம் பரிதவித்தது.

ஒரே குழந்தை.

உடலில் ஒரு குறையுமில்லாத ஆண் குழந்தை. குறைந்த பட்சம், காதுகூட குத்தவில்லை.

சில மாந்திரீகர்கள் உடற்குறை எதுவுமற்ற தலைச்சன் ஆண்குழந்தையைக் கொன்று, அதன் உயிரற்ற உடலை `ஜாம்பி’யாக்கி, தாம் விரும்பியபடி தீய காரியங்களில் ஈடுபடுத்துவார்களாமே!

`காதில் துளை இருந்தால், உடலின் முழுமை போய்விடும். அதுதான் குழந்தைக்குப் பாதுகாப்பு!’ என்று அம்மா அடித்துக்கொண்டபோது, `பத்தாம்பசலித்தனம்!’ என்று கேலி செய்தோம்!

நடுங்கிய கரங்களுடன் போலீசை வரவழைத்தான்.

யார் எது கேட்டாலும், “இங்கதான் தூங்கிட்டு இருந்தான். அவனுக்குப் பிடிச்ச ஆமை கதை சொல்லித் தூங்கவெச்சேன்!” என்று திரும்பத் திரும்பச் சொல்லியபடி இருந்தாள் மாயா.

“இது ஒரு இடியட். பொய் சொல்ற அளவுக்கு இதுக்கு சாமர்த்தியம் கிடையாது. யாரோ கடத்திட்டுப் போயிருக்காங்க!” என்றான் முரளி, குரலடைக்க. நாட்டில்தான் குழந்தைகளைக் கடத்துவது சர்வசாதாரணமாக நடக்கிறதே!

`பத்து லட்சம் ரிங்கிட் கொடுத்தால்தான் உன் குழந்தையை விடுவேன். இல்லாவிட்டால் கொன்றுவிடுவேன்!’ என்று தொலைபேசியில் மிரட்டல் வருமோ?

போலீஸ் நாய் வந்தது. குரைத்தபடி, அது பின்புறத்திலிருந்த தோட்டத்திற்கு ஓடியபோது, முரளியன் கையைப் பிடித்து இழுத்தாள் மாயா. “பாண்டியை எழுப்பிடாதீங்க!”

ஓட்டமும் நடையுமாக, பின்புறக் கதவைத் திறந்து வெளியே ஓடினான்.

“இதோ!” அவள் காட்டிய இடத்தை வெறித்துப் பார்த்தான்.

பாண்டி பிறந்த வருடம் நட்ட செண்பக மரம் இப்போது நெடிதாக வளர்ந்திருந்தது. அதன்கீழ் மஞ்சள் நிறப் பூவிதழ்கள் உதிர்ந்திருந்த இடத்தில் புதிதாகக் கொத்தப்பட்ட மண்!

அதிர்ச்சியுடன், மூச்சை உள்ளே இழுத்துக்கொண்டான் முரளி. “பாவி! என் குழந்தையை என்னடி செஞ்சே?” என்று மாயாவின் தோள்களைப்பற்றி அவன் உலுக்கிய வேகத்தில் அவளது சட்டையின் கைப்பகுதி கிழிந்து போயிற்று.

“பாண்டி நல்ல பிள்ளை!” என்று திரும்பத் திரும்ப அவள் சொல்லிக் கொண்டிருக்கையில், ஒருவர் மண்ணைக் கொத்த, வெளிப்பட்டது — குப்பை போட வைத்திருந்த பெரிய, கறுப்பு வண்ண பிளாஸ்டிக் பை. அதனுள்…

`பாண்டி நல்ல பிள்ளை. பெரியவனாப் போயிட்டா, அவனும் அவங்கப்பா மாதிரி, வேலை செய்ய வர்ற பொண்ணுங்களை அசிங்கப்படுத்துவான். இல்ல, எங்கப்பா மாதிரி பெத்த பொண்ணுங்ககிட்டேயே தப்பா நடந்துக்குவான். பெரியாளாப்போனா, எல்லா ஆம்பளைங்களும் அப்படித்தான்! சின்னப்பிள்ளையா இருக்கிறப்போவே செத்துப்போனா, அவன் எப்பவும் நல்ல பிள்ளையாத்தானே இருப்பான்!’

பல நாட்களில், மனோதத்துவ நிபுணர்களிடம் சிறுகச் சிறுக மாயா தெரிவித்ததின் சாராம்சம் அது.

வேலை செய்ய வந்த இடத்தில் நீண்ட காலம் அவளது பெண்மை பலவந்தமாகப் பறிக்கப்பட்டதால், மனநிலை பாதிக்கப்பட்டிருக்கிறது என்று முடிவு செய்யப்பட்டது. கொலைக் குற்றத்துக்காக சிறைச்சாலை செய்ய வேண்டியவள் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டாள்.

வயதில் குறைந்த பெண்ணுடன் நீண்ட காலம் பலாத்காரமாக உடலுறவு கொண்ட குற்றத்துக்காக முரளி சிறைத்தண்டனை பெற்று, அங்கு அதேபோல் அவனைப் பிறர் பலாத்காரம் செய்தது மாயாவுக்குப் புரிந்திருந்தால் அவள் மகிழ்ந்திருப்பாளோ, என்னவோ!

தான் அருமையாக வளர்த்த பாண்டியை எந்தப் பெண்ணுக்கும் தீங்கு இழைக்காதவனாகக் காப்பாற்றிவிட்டோம் என்ற நிம்மதிதான் அவளிடம் நிலைத்திருந்தது.

`என்னோட பாண்டி எப்பவும் நல்ல பிள்ளை!’ என்றே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கிறாள் என்று கேள்வி.

– தமிழ்நேசன் பரிசுக்கதை, 2005

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *