தோப்பில் தனிமரம்

 

“ விஜி .. நம்ம பத்மாவதி பெரியம்மா ரொம்ப படுத்து கிடக்குது..ஒரு தடவை வந்து பார்த்துட்டு போ” அம்மா போன் பண்ணியதும் எனக்குள் திக்கென்றது நான் பெரியம்மாவை பார்த்து ரொம்ப நாட்களாயிற்று.விடுமுறை நாட்களில் வீட்டு வேலைகளே சரியாக இருக்கும்.போன மாதம் அம்மா வீட்டிற்கு சென்ற போது தெருமுனையில் இருக்கும் பெரியம்மாவின் வீட்டிற்கு போக டைம் இல்லாமல் ஓடி வந்து விட்டேன்.

“ என்னங்க நீங்க வர்றிங்களா..?”

“ நீ மட்டும் போய் வா.. எனக்கு நிறைய வேலையிருக்கு.. பசங்களும் கிளாசை கட் பண்ண வேண்டாம்…” என்ற ரமேஷை கட்டாயப்படுத்த விரும்பாமல் “ சரிங்க.. மதியத்திற்கும் சேர்த்து சமையல் பண்ணி வெச்சிடறேன். அஜய்.. அப்பாவிற்கு தொந்திரவு தராம டியூஷன் கிளம்பு.. ஸ்ருதியை மட்டும் நீங்களே நாலு மணிக்கு டான்ஸ் கிளாஸ்ல விட்டுடுங்க.. நேரமானாலும் நைட்டே வந்துடறேன்…”

பேருந்து இருக்கையில் அமர்ந்து பெரியம்மா பற்றி நினைத்துக் கொண்டே கண்களை மூடினேன்.அஜய் பிறந்த போது … பெரியம்மாதான் என்னுடன் ஆஸ்பிட்டலில் இருந்தாள்.எனக்கு தூக்கம் வரும் போதுதான் குழந்தை அழுவான்.

“ விஜி.. விஜி.. குழந்தை பசிக்கு அழறான்.. எழுந்திரும்மா..” மெல்ல எழுப்புவாள்.பால் குடித்தும் விடாமல் அழுது கொண்டேயிருப்பான். நான் எழுந்திருக்க கஷ்டப்படுவேன்.பெரியம்மா கால்களை நீட்டிக் கொண்டு குழந்தையை தட்டி கொடுத்து கொண்டிருப்பாள்.

“லூ.. லூ.. ஆயி.. ஆரு அடிச்சா உன்னை தாத்தா அடிச்சாரோ தாழம்பூ தண்டாலே.. மாமன் அடிச்சானோ மல்லிகைப்பூ செண்டாலே…”
“ என்ன பெரியம்மா இது? ஆஸ்பிட்டல்ல போய் சத்தமா பாடிகிட்டு.?எல்லாரும் பார்க்கிறாங்க!”

“ இத பாருடி.. தாலாட்டு பாட தாய்க்கு என்ன வெட்கம்?நம்ம குரல்ல இருக்கிற அன்பு குழந்தைங்க காதில் தேனாட்டம் பாய்ஞ்சி.. பயமில்லாம தூங்க வைக்கும்..உங்களையும் இப்படிதான் வளர்த்தோம்.இப்ப பாரு குழந்தை லேசா கண்ணை மூடறான்…” என்பாள்.

பிறந்த வீட்டில் இருந்த அந்த ஐந்து மாதம் அஜய் படுத்திய பாடு.. கொஞ்ச நஞ்சமில்லை..சில சமயம் கடிந்து கொள்வேன்.

“ குழந்தைன்னா அப்படிதான் … வேணும்னா இங்கேயே விட்டுட்டு போயிடு.. நாங்களே வளர்த்துக்கிறோம்..” பெரியம்மா சொல்வது மட்டுமில்லை.. அம்மாவை சமையல் செய்ய சொல்லி விட்டு குழந்தையை முழுக்க ..முழுக்க இரவும், பகலும் விழித்து பார்த்துக் கொண்டாள்.

அஜய் படுத்திய பாட்டில் அவள் ஒருவனே போதும் என்று முடிவு செய்திருந்தோம்.ஆனால் ஊருக்கு போகும்போதெல்லாம் பெரியம்மா புலம்புவாள். “முதல் குழந்தைக்கு ஆறு வயசாயிடுச்சி.. கடவுள்புண்ணியத்துல இன்னொன்னு உருவாயிட்டா போதும்…..”

“ போ பெரியம்மா..ஆபிசுக்கும் போயிட்டு இது ஓண்ணை வளர்க்கிறதே பெரிய பாடாயிருச்சு..இதுல இன்னொன்னு வேறயா? நாங்கதான் வேணாம்னு தள்ளி போட்டிருக்கோம்…”

“போடி அசடு.. தனி மரம் தோப்பாகாது… கொஞ்ச நாள் கஷ்டப்பட்டா பின்னாடி நல்லாயிருக்கும்… இவனுக்கு ஒரு சொந்தம் வேணும்ல ..ஒத்தையா விடாதே..” இப்படி அடிக்கடி புத்திமதி சொல்லி முடிவை மாற்றியதால் ஸ்ருதி பிறந்தாள்.

ஊர் வந்துவிட்டது. வீட்டில் எல்லாரையும் நலம் விசாரித்து விட்டு அம்மா தந்த காபியை குடித்து,

“ அம்மா பெரியம்மாவுக்கு என்ன வாங்கிட்டு போக?”

“அது எதுவும் சாப்பிடலை , வேணும்னா உன் திருப்திக்கு இந்த சாத்துக்குடியிலேயே நாலு எடுத்துட்டு போ..” ஒரு பையில் போட்டு தந்தார்.

பெரியம்மா வீட்டில் அண்ணி மட்டும் இருந்தாள்.அண்ணனும், பிள்ளைகளும் வெளியில் சென்று விட்டிருந்தார்கள். பெரியம்மா புறக்கடை பக்கம் , அடசலான அந்த ரூமில் ஒரு பெஞ்சில் சுருண்டு கொண்டிருந்தாள். வெளிச்சம், காற்றோட்டம் இல்லாமல் இருந்த அந்த ரூமில்.. பக்கத்தில் இருந்த மாட்டு கொட்டகையிலிருந்து கொசுக்கடி வேறு..பெற்றவர்கள் கஷ்டப்ட்டு கட்டிய வீட்டில்..பிள்ளைகள் கடைசியில் தரும் இடம் இதுவா?மனசு கோபப்பட்டது.

“ அத்தே .. விஜி வந்திருக்கா…” அண்ணி காதருகே மெல்ல சொல்ல, கண் விழித்தார்.

“ அடி.. என் தங்கமே எப்ப வந்த..? என் பேர பசங்க சவுக்கியமா? எனக்கு ஒரு குறைவுமில்ல..வயசாயிடுச்சி..அவ்வளவுதான்.நீங்கள்லாம் எப்பவும் ஒத்துமையா இருக்கனும். அதான் என் ஆசை..”என்றவள், “ சுமதி அந்த பிஸ்கெட்டை எடுத்து வச்சு விஜிக்கு காபி போட்டுக் கொடு “ என்று உபசாரம் செய்தாள்.

“ நீ என்ன சாப்பிடற பெரியம்மா?”

“எனக்கு ஒண்ணும் ஒத்துக்கல. என்னை பத்தி கவலைப்படாம எல்லாரும் கிட்ட இருந்து நல்லபடியா எடுத்து போட்டிடுங்க.” பெரியம்மா சொன்னதும் எனக்கு கண்ணீர் முட்டியது. பெரியம்மாவின் தைரியம்..இந்த நிலமையிலும் வந்தவர்களை உபசரிக்கும் குணம்.. சதா பிள்ளைகள் நலனையே எண்ணும் தவிப்பு..

“ கொஞ்சமாவது சாத்துக்குடி ஜூஸ் தரட்டுமா..?”

“ வேணாம்மா என்னால் பாத்ரூம் போக முடியலை.. சுமதி வேற திட்டறா..? மெல்லிய குரலில் சொன்னாள்.

“என்னால் தூக்க முடியலை..நான் மட்டும் என்ன பண்றது?எனக்கு மட்டும்தானா? எழுதி வெச்சிருக்கு..சின்னவ வேலைக்கு போறேன்னு தப்பிச்சிகிட்டா…
சின்ன அண்ணன், அண்ணிக்கு மங்களூரில் வேலை, பெரியம்மா சொந்த பந்தங்களோடு வாழ்ந்த வீட்டில்தான் இருப்பேன்னு..பெரிய அண்ணனிடமே இருந்து விட்டாள்.

“ ஏன் அண்ணி … ஆஸ்பிட்டலிலாவது சேர்க்கலாமில்லையா?”

“ யாரு கூட போய் இருக்கிறது.. முடிஞ்சளவு பார்த்துகிட்டோம் அவ்வளவுதான்..! என்றாள்.

முடிந்தளவு பார்த்து கொண்டது பெரியம்மாதானே..என் அப்பாவிற்கு நான்கு அண்ணன்கள். இதில் மூத்த அண்ணனோட மனைவிதான் பத்மாவதி பெரியம்மா..இந்த ஐந்து குடும்பத்திற்கும் அவளின் தர்பார்தான்.எல்லா விசேஷத்திற்கும் ஓடி ஒடி செய்வாள்.கல்யாண பலகாரங்களை அவள் ஒருத்தியே முட்டி தேய நடையாய் நடந்து சொந்த பந்தங்களுக்கு தந்துவிட்டு வருவாள்.

“பெரியம்மா எதாவது மருந்து செலவுக்காவது வச்சிக்கோ..” ரூபாயை நீட்டினேன்.

முதலில் தயங்கி..பிறகு வாங்கி தலையணி அடியில் வைத்து கொண்டாள்.அங்கே அவ்வப்போது வந்த உறவினர்கள் தந்த ரூபாய் நோட்டுக்கள் நிறைய இருந்தது. யாரும் நன்றாக இருக்கும் போது தருவதில்லை. எனக்கு தெரியும் ..பெரியம்மா கடைசியாய் சேர்த்த பணத்தை மருந்து கூட வாங்காமல் பிள்ளைகளுக்கு கொடுத்து விடுவாள்.இந்த இருபது நாட்களாய் வெறும் தண்ணீரை மட்டும் ஒரு முழுங்கு நனைத்து கொண்டு கிழிந்த நாராய் படுத்து கிடக்கிறாளாம்.
வீட்டிற்கு வந்தேன்.“ அம்மா பெரியம்மாவை தோட்டத்து பக்கம் போட்டு அனாதை மாதிரி கிடக்குது. நீங்க கேட்க கூடாதா அண்ணியை?”

“ ..ம்.. கேட்டா தூக்க..பிடிக்க நீங்களா வருவீங்கன்னு கேட்பா?என்னால முடியுமா? எதோ நம்மால முடிஞ்சது தினத்துக்கும் டாக்டர வரச்சொல்லி ஊசி போட சொல்லியிருக்கேன்..”

“ அம்மா.. அண்ணியை விடுங்க.. பெரியம்மாவோட மூணு பொண்ணுங்க மாற்றி மாற்றி வந்து பார்த்துக்கலாம் இல்லையா..?”

“ அத நினைச்சாதான் விஜி கஷ்டமாயிருக்கு… பெரியப்பா போன பிறகு எத்தனை கஷ்டப்பட்டு பொண்ணுங்களுக்கெல்லாம் கல்யாணம் பண்ணி வெச்சா.. பொண்ணுங்களுக்காக உயிரா அலைஞ்சா..போன லீவுக்கு முடியலைன்னா கூட காலை நீட்டிகிட்டு முறுக்கு, லட்டுன்னு செஞ்சு அனுப்பினா.”

“ இப்ப ஒவ்வொருத்தியும் ஒவ்வொரு சாக்கு சொல்றா.. பெரியவ மாமியாருக்கு கீழ விழுந்து அடிபட்டிருக்காம், நடுவளுக்கு அவ மாமனார் அனுப்ப மாட்டேங்கறாராம். சின்னவ குழந்தைக்கு உடம்பு சரியில்லைங்கிறா..யாரை என்ன சொல்றது?வயசாயிட்டு ஒருத்தர் தயவுல வாழனும்னா இப்படிதான் போல..”

என் கணவர் வீட்டிற்கு வந்ததும் வேலைகள் நடுவில் மறக்காமல் அம்மாவிற்கு தினமும் போன் செய்து பெரியம்மாவை பற்றி விசாரித்தேன்.

“ அப்படியேதான் இருக்கு விஜி.. எல்லாரும் எப்ப போகும்னு பார்க்கிறாங்க.. பங்காளி வீட்டு கல்யாணம் வேற .. அவங்களும் திடீர்னு எதாவது ஆகிடுமோன்னு தேதி வைக்க குழம்பறாங்க…”

பெரியம்மா ஏதோ பயணத்திற்கு காத்திருப்பது போலவும், எல்லாரும் அவளை ஏற்றி விட தயாராக இருப்பது போல… மனசுக்குள் வலித்தது.எல்லாருக்கும் கஷ்டங்களின் போது கூடவே இருந்தவள் படுக்கையில் விழுந்து விட்டதால் கஷ்டமாக தெரிகிறாள்.அவள் கடைசி காலங்களில் கூட அவளை பார்த்துக் கொள்ள யாருமில்லை.தனிமரம் தோப்பாகாது …என்பாள் அடிக்கடி.. காய்க்கும் வரைதான் மரம் போலும்… இப்போது தோப்புக்கு நடுவில் பெரியம்மா..தனி மரமாய்த்தான் தெரிந்தாள்.

தினம் பெரியம்மா பற்றிய கவலைகள்… ஒரு நாள் அம்மாவின் போன், “ விஜி பெரியம்மா போயிட்டா..”

இதுவரை தேங்கி கிடந்த துக்கம் தொண்டையை விட்டு வெளி வர, ஓவென்று குரலெடுத்து அழுகை வந்தது.

“ லூ..லூ..ஆயி… ஆரு அடிச்சா உன்னை..”? பெரியம்மாவின் தாலாட்டு காற்றில் கரைந்து கொண்டிருந்தது.

( 2012 வருட தினமலர்- வாரமலர் டி.வி.ஆர் நினைவு சிறுகதை போட்டியில் ஆறுதல் பரிசு பெற்றது) 

தொடர்புடைய சிறுகதைகள்
பிரவீணா வருவதை எதிர்பார்த்து கொண்டிருந்த மல்லிகா, “ உன்னை இன்னிக்கு ஒரு மணி நேரம் பர்மிஷன் போட்டுட்டுதான வரச்சொன்னேன்... அவங்க வர்ற நேரமாச்சு... நேத்தெல்லாம் படிச்சி படிச்சி சொல்லியும் இன்னிக்கு வேணும்னு உன் இஷ்டப்படிதான் வர்றே...?” “ அம்மா நீயா நினைச்சிகிட்டா எப்படி? ...
மேலும் கதையை படிக்க...
"சண்முகம்.. நாம் வந்து இருபது நிமிடம் ஆச்சி.. இப்படியே பேசாம இருந்தா எப்படி...?" - கேட்ட கேசவமூர்த்தி கவலையோடு பார்த்தார். இருவரும் ஒன்றாகவே பணி புரிந்தவர்கள்.ஓய்வு பெற்ற பிறகும் நல்ல நண்பர்களாக இருப்பவர்கள்.ஒருவர்க்கு தெரியாமல் இன்னொருவர் குடும்பத்தில் எதுவும் நடந்ததில்லை.தினமும் யாராவது ஒருவர் வீட்டில் ...
மேலும் கதையை படிக்க...
“ ஜெய்… எனக்குதலை வலிக்கிற மாதிரி இருந்தது.. பர்மிஷன்ல வீட்டுக்கு வந்துட்டேன்.நீங்க பிக்-அப் பண்ண வர வேண்டாம்…” சுஜிபோனில்சொல்லவும் , “ சரி நான் நேரா வீட்டுக்கே வந்துடறேன்…” போனை வைத்தான். அவனுக்கு தெரியும் தலைவலி எல்லாம் இருக்காது… அவன் தம்பி மனைவிக்கு வளைகாப்பு வைத்திருப்பதாக ...
மேலும் கதையை படிக்க...
“இனியா, நீதான் எத்தனையோ கதை எழுதறியே... என் அப்பாவை பத்தி ஒரு கதை எழுதேன்... ப்ளீஸ் பா....” “ நீ நினைக்கறதை நீயே எழுதினா நல்லாருக்குமே சூர்யா...?” “ இல்லப்பா... எனக்கு எழுதல்லாம் வராது.... என் எண்ணத்துக்கு நீ உயிர் குடுத்தா நான் ரொம்ப ...
மேலும் கதையை படிக்க...
விநாயகர் சதுர்த்தி விழா.. வசந்தம் நகரில் இளைஞர் குழு சுறு சுறுப்பாக செயல் பட்டு கொண்டிருந்தது. ஏரியா முழுக்கும் வசூல் வேட்டை நடத்தியவர்கள் இனியவன் வீடு வந்ததும் தயங்கி நின்றார்கள். இனியவன் தீவிர நாத்திகவாதி.. கோயில் குளம் என்று வந்தால் விரட்டாத ...
மேலும் கதையை படிக்க...
சொன்னது என்னாச்சு?
வீடு
இனி எல்லாம் சுகமே..!
நினைவெல்லாம் நீயே ஆனாய்…
வசந்த விழா…!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Sirukathaigal

FREE
VIEW