Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

விருந்து

 

சட்டிகள், பானைகள், கரி பிடித்து ஒடுக்கு விழுந்திருந்த பெரிதும் சிறிதுமான அலுமினியப் பாத்திரங்கள் சகிதம் தாமரைப் பாளையம் மற்றும் அக்கம் பக்கத்து ஊர்க்கோடி வளவுகளில் இருந்து நண்டும் குஞ்சுகளுமாகக் குடும்பங்கள் மலைக் கன்னியாத்தா கோயிலை நோக்கி நடக்கத் தொடங்கி விட்டன.

“வவுத்துப் புள்ளக்காரி, நீ வேறே வந்து மலங்காட்டுல அவதிப் படணுமாங்காட்டியும்” என்று குஞ்சாளைத் தடுத்தார்கள்.

“இல்லீங்கோவ். அந்தப் பெரிய குட்டிக்கு வளம பத்தாது. அத்தினி கூட்டத்துல ஊரு மொறைக்காரப் பொம்பளன்னு சொன்னாத்தான் கறியுஞ் சோறும் நெறையக் கெடைக்கும். ஊமச்சியாட்டம் இவ நிப்பா. ஊத்தற மவராசன் எலும்புத் துண்டுகளாப் போட்டு ஏமாத்திப்புருவான்..”

ஒரு மாதம் முன்பிருந்தே சுற்று வட்டார ஊர்களின் ஜனங்கள் இதை ஒரு சுவார°யமான வைபவம் எனப் பரபரப்புடன் ஆவல் தேக்கிக் காத்திருந்தார்கள்.

தாமரைப் பாளையப் பெரிய மனிதர்கள் தங்கள் குலம் விளங்கப் பிள்ளைகளைக் கொடுத்த குலதெய்வமான மலைக் கன்னி யாத்தாவுக்கு நன்றிக் கடனாக ஆடுகளை வெட்டிப் பூசை போட்டு, ஏழை எளியவர்களுக்குக் கறியுஞ் சோறுமாக அன்னமிடுவது ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் பிள்ளைத் தவ பூஜையின் நோக்கம் என்று விஷயம் தெரிந்தவர்கள் பேசிக் கொண்டார்கள்.

எஜமான்களின் தலைமுறை வழி வழக்கப்படி எல்லா வீடுகளுக்கும் பல ஊர்களுக்கும் ஆட்கள் மூலம் அழைப்பு அனுப்பப்பட்டது. முந்தின நாளே கார்களிலும் வண்டிகளிலுமாக ஒற மொறைகள் வந்து கூடியவண்ணம் இருந்தார்கள்.

அந்த நாளில், தாரை தப்பட்டைகள் முழக்கி, கொம்பு ஊதி, கட்டியங் கூற, தீப்பந்தம் ஏந்தியவர்கள் முன்னே செல்ல, அதிர்வேட்டுகள் ஓலிக்க, தாமரைப்பாளைய எசமாங்க வளவுப் பெண்டிர் சீர் வரிசைத் தட்டுக்களை ஏந்தி நடந்தனர். அவர்களுக்குப் பின்னே ஆடவர் கூட்டம். அதற்குப் பின்னே கழுத்தில் கயிறு பிணைத்து இழுத்துச் செல்லப்பட்ட பலியாடுகள், பண்ணை ஆட்களின் கைகளுக்கிடையில் சிக்கித்தவித்த கோழிகள், அதற்கும் பின்னால் கார்கள், வண்டிகள் வரிசையாக…

எல்லாம், எல்லோரும் மலையடிவாரம் சேர வெய்யிலின் உக்கிரம் ஆரம்பித்தது. மலைப் பாதையில் ஏறி உச்சியில் இருந்த கன்னியாத்தா கோயிலை அடைந்தார்கள்.

சுற்று வட்டார ஏழை மக்கள் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்று நூற்றுக் கணக்கில் மலையில் ஆங்காங்கே முகிழ்த்திருந்த மரங்களின் நிழல்களில் கூடிக் காத்திருந்தனர். பேச்சுக் குரல், குழந்தைகளின் அழுகுரல், யாரோ யாரிடமோ உரத்துச் சண்டையிட்டது எல்லாமாய் ஜோவென்று காற்றில் கரைந்தும் கரையாமலும் கேட்டது. குஞ்சாள் ஒரு பாறையில் சாய்ந்து உட்கார்ந்து கோயிலுக்கு முன்னால் பெரிய கொப்பரைகளில் தண்ணீர் கொதிப்பதையும், மறுபக்கத்தில் சமையற்காரர்கள் வரிசையாக நின்று களைந்த அரிசியைக் கொட்டி அகப்பைகளால் கிளறுவதையும் ஒரு பக்கத்தில் ஆடுகளையும் கோழிகளையும் யார் யாரோ பிடித்துக் கொண்டு நிற்பதையும் ஏக்கத்தோடு பார்த்தாள்.

பூசாரி வந்து ஆடுகள் மீது பூஜைத் தண்ணீரைத் தெளித்தார்.

“பூசாரி ஐயா, ஆடுக துளுக்கலீங்களே” ஒருவர் கவலையுடன் சொன்னார்.

“தெய்வக் குத்தமாயிருக்குமோ?” இன்னொருவர் சந்தேகம் கிளப்பினார்.

பூசாரி உள்ளே போனார். “கருப்பராயசாமி, கன்னியாத்தா! என்ன குத்தங் கொறை செஞ்சிருந்தாலும் எங்களை மன்னிக்கணுமுங்கோ!” என்று பணிவாகச் சொல்லி சூடக்கட்டியை ஏற்றினார். எல்லோரும் தாடையில் போட்டுக் கொண்டார்கள்.

மறுபடியும் பூஜை தீர்த்தத்தைக் கொண்டு வந்தார். ஆடுகள் மீது தெளித்தார். சில்லென்று தண்ணீர் ஓங்கி அடிக்கப்பட்டதும் உடல் சிலிர்த்த ஆடுகளைப் பார்த்து, “ஆடுக துளுத்தாச்சு. இனி வெட்டலாம்!” என்று பலர் உரக்கக் கத்தினார்கள்.

மணியக்காரர், “எலேய் சுப்பையா, ஒரே வெட்டுல தலை உருளணும். பலியாடுக கத்துனா தோசமுடா!” என்று உத்தரவு கொடுக்க, அவன் தொடர்ந்து ஆடுகளை வெட்டியதில் பீச்சியடித்த ரத்தத்தைப் பார்க்க, குஞ்சாளுக்கு மயக்கம் வருவது போலிருந்தது.

கொஞ்ச நேரத்தில் கொப்பரைகளில் கறி வெந்தது. பெரிய பெரிய தவலைகளில் சோறு கொதித்தது.

பசி வேளையை மீறியும் கூட்டம் கறி விருந்தை எதிர்பார்த்து நாக்கைச் சப்புக் கொட்டிக் காத்திருந்தது.

“சித்தே பொறுத்துச் சோறு போட்டுடுவாங்க” யாரோ பேசிக் கொண்டது பசி மயக்கத்தில் இருந்த குஞ்ச்சாளுக்குப் புத்துணர்வைக் கொடுத்தது.

விரதம் ஏற்ற பெண்கள் பூசாரி சொல்படி பூஜைக் காரியங்களில் ஈடுபட்டிருந்தனர்.

விரித்த ஜமக்காளத்தில் பந்தலுக்கு அடியில் அமர்ந்து வெற்றிலையைக் குதப்பியபடி சீட்டு ஆடியவர்கள், ஆங்காங்கே பாறைகளில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தவர்கள், பெரியவர்கள் கண்களில் படாமல் ஒதுக்குப் புறம் நின்று புகை பிடித்த இளவட்டங்கள், எப்போது சோறு கிடைக்கும் என்று ஏங்கியிருந்த ஏழைகள், எசமான்களின் ஏவலுக்குப் பணி செய்து கொண்டிருந்த எடுபிடிகள், கிட்டத்தட்ட எல்லோருக்கும் விருந்து தயார் என்றதும் பரபரப்பு…

முதலில் எசமான்களுக்கான பந்தி துவங்கியது. காக்கைகளின் தொல்லை. கைகளைத் தட்டி, “சூ!..சூ!” என்று விரட்டியபடியே, பரிமாறுகிற ஆட்கள் வேலை செய்தார்கள். அடுத்தடுத்து நான்கு பந்திகள் எசமான்களுக்கே நடக்க வேண்டியிருந்தது.

அப்புறம்தான் காத்திருந்த ஊர்க் கும்பலுக்குச் சோறு போடத் தொடங்கினார்கள். கூட்டம் நெருக்கியடித்து முன்னேறியது. “எல்லாரும் வரிசையில வாங்க!” என்று கையில் தடி வைத்துக் கொண்டு ஒருவன் கத்தினான்.

வயிற்றுச் சுமையுடன், பசிக் களைப்பும் பாத்திரங்களுமாய் குஞ்சாள் வரிசையில் மெல்ல மெல்ல நகர்ந்து முன்னேறினாள். “கடாக் கறி சாப்ட்டு ரொம்ப நாளாச்சி. எப்பிடியும் ஈரல் துண்டு வரும்ல? வராம என்னா? இருவது ஆடுகள்ல போட்டுருக்காங்க!” இவளாகப் பின்னால் நின்றவளிடம் பேச, அவள் இவளைப் பார்த்துச் சிரித்தாள்.

“என்னாங்கோ சிரிக்கறீங்க? ஈரலு துண்டு வராதுன்னுட்டா? அட, வராட்டினாப் போவுது, கெரகம். கொழுப்புக் கொடலு கூடவா வராது? பாப்பமே..” என்று நம்பிக்கையோடு சொல்லி நகர்ந்தாள். அவளுக்கு அப்போதே கறிக் குழம்பு வாசனை, மூக்கை உறிஞ்சி, கண்களை மலர்த்த வைத்தது. அட, என்னமாய் மணக்குது..!

சாதத்தை அகப்பையால் அள்ளிப் போட்டவனும் குழம்பை ஊற்றியவனும் குஞ்சாளைத் தெரிந்தவர்களே. அவர்களைப் பார்த்துச் சிரித்து வைத்தாள். அவளையும் குழந்தைகளையும் பார்த்து, “அட முத்தான் பொண்டாட்டியா, வா..வா! லேய் சுப்பான், பொறக்கப் போறதோட பங்கையும் சேர்த்துப் போட்டுடு என்னா?” என்று சொல்லிச் சிரித்தபடி, பானையிலும் போசியிலும் சோற்றைப் போட்டான். குழம்பு ஊற்றுபவன் அகப்பையைத் தவலையில் விட்டுத் துழாவியபோது ஆவலுடன் குஞ்சாள், ஈரலு துண்டு இருந்தாப் போடுங்கோ! என்றாள்.

“ஈரலா? ஆகா, அதுக்கென்ன போட்டுட்டாப் போச்சு.. ரெண்டு போசியிலேயும் ஈரலாப் போட்டு நெரப்பிருவோம்..” என்று சிரித்துப் பேசிக் கண் சிமிட்டினான்.

இவள் புரியாமல் காலியாக இருந்த பாத்திரத்தைக் காண்பிக்க, அவன் ஒரேயடியாகச் சிரித்தபடி, எலும்புத் துண்டுகளை எடுத்துப் போட்டுக் குழம்பு ஊற்றினான்.

“கறி? கொளுப்புக் குடலு?” ஏக்கத்தோடு கேட்டாள்.

அவன் குனிந்து குஞ்சாள் காதுக்கு மட்டும் சொன்னான். “கறி, ஈரலு, சிக்கன் லெக் பீஸு எல்லாம் எசமாங்கமாருக்கு பெசலாப் பண்ணிப் போட்டாச்சு. அதெல்லாம் அவங்களுக்கு மட்டும் தான். மீதிப் பேருக்கெல்லாம் எலும்புத் துண்டுங்களைப் போட்டு ரசம் வெச்சு வெளாசச் சொல்லி எசமாங்கமாரு உத்தரவு. எல்லாத்துக்கும் கறி போட்டுக் கட்டுப்படியாகுமா குஞ்சா?”

இவளுக்குத் தலை சுற்றியது.

அந்தக் கொப்பரையில் ஆடுகள் “பே..பே” என்று கத்தின. தலையில் ஓங்கி வெட்டு ஒன்று விழுந்தது. இவளின் கழுத்து பாதி துண்டிக்கப்பட்டு, “பே..பே” என்று ஓலமிட்டாள். ரத்தம் பீறிட்டது. இவள் ரத்தத்தைப் பானையில் பிடிக்கிறார்கள். தரையில் சாய்ந்து துடித்தாள் இவள்.

“அம்மா.. அம்மா!” என்று குழந்தைகள் இவளைச் சுற்றி நின்று அலறுவதையும், “என்ன ஆச்சு?” என்று சிலர் இவளைச் சூழ வருவதையும், யாரோ ஒரு புண்ணியவான், “தரித்திரம் புடிச்ச களுதைங்க. வவுத்துப் புள்ளையோட கொளுத்தற உச்சி வெய்யில்ல, மலை ஏறி வந்து அப்படி இந்தச் சோறு வாங்கித் தின்னாட்டித் தான் என்னா?” என்று கூறியதையும் அரையுணர்வில் புரிந்தவளுக்கு, அதுவுமில்லாமல் போயிற்று.

(இலக்கியச் சிந்தனையின் சிறந்த சிறுகதைத் தேர்வு பெற்றது. `தேன்மழை’ மாத இதழில் வெளிவந்தது) 

தொடர்புடைய சிறுகதைகள்
கிட்டத்தட்ட பதினைந்து வருடங்கள் கழித்து, சொந்த ஊரான புதூருக்கு இவன் போன போது ஏகப்பட்ட மாற்றங்கள். ``மிஸ்டர் ராஜேஷ்! உங்க ஊருக்கு விசிட் போறேன். ஒருநாள் லீவு போட்டுட்டு வாங்களேன். காரில் ஜாலியாப் பேசிகிட்டுப் போன மாதிரியும் இருக்கும்; உங்களுக்கு ஒரு மாறுதலாகவும் ...
மேலும் கதையை படிக்க...
இரண்டு தினங்களாக விடாமல் பெய்த மழை மனமிரங்கிக் கடந்த அரை மணி நேரமாக சிறு தூறலாக மாறியிருந்ததை வரவேற்றான் சங்கர். சே, இதென்ன போர்! தொடர்ந்த மழையின் ஓயாத ஓசை, பகலிலும் இருள் கவ்வினாற்போன்ற சோம்பல் சூழ்நிலை, தெருவில் முழங்கால் நீரில் சளக், ...
மேலும் கதையை படிக்க...
பள்ளிக்கூடத்தில் சில வேலைகளைக் கவனித்துவிட்டு வீட்டுக்குக் கிளம்பியிருந்தார் அந்தத் தலைமையாசிரியர். ஆஜானுபாகுவான உயரம், முன் வழுக்கை, பின்னால் முடிக்கற்றை பாகவதர் போலப் படர்ந்து தோளைத் தொட்டு இறங்கியிருந்தது. நெற்றியில் சந்தனக் கீற்று, புருவ மத்தியில் பெரிய குங்கும வட்டம், முழுக்கை வெள்ளைச் சட்டை, வெள்ளை ...
மேலும் கதையை படிக்க...
``உம்... ஆரம்பிச்சுற வேண்டியதுதானே?'' நடுவளவு பெரிய தனக்காரர் தங்கசாமி ஊர்க் கூட்டத்தை நோக்கிக் கேட்டார். பஞ்சாயத்துத் தலைவர்களும், கூடியிருந்தவர்களில் பலரும் தலையசைத்துச் சம்மதம் தெரிவிக்க, தங்கசாமி செருமிக் கொண்டு, புங்கனூராரைப் பார்த்துச் சொன்னார்: ``ஏனுங்கோ, பிராது கொடுக்க வந்தவிய நீங்க. உங்க பிராதைச் சபையில சொல்லுங்க!'' தலை ...
மேலும் கதையை படிக்க...
முன் மண்டையில் இரத்தம் பீறிட்டு நெற்றி, முகம், கன்னம் யாவும் வழிய வழிய அந்தப் பதினைந்து வயதுச் சிறுவனை சாம்பலான் தூக்கி வந்து டாக்டர் வீட்டு வராந்தாவில் இருந்த பெஞ்சில் கிடத்திவிட்டு, ``சாமி! சாமி!'' என்று உரக்கக் கூவினான். அவன் கூச்சலினால், டாக்டர் ...
மேலும் கதையை படிக்க...
முகங்கள்
மழையில் ஓர் கிழவர்!
மன்னிப்பு
எழுதப்படாத தீர்ப்புகள்!
புயலில் சில தனி மரங்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)