கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: August 6, 2012
பார்வையிட்டோர்: 20,531 
 

தேவந்தியின் கதையை மீட்டுருவாக்கம் செய்துள்ள இச் சிறுகதையைத் தொடங்குமுன் சிலப்பதிகாரத்தை அடியொற்றி அவள் குறித்த ஒரு முன் குறிப்பு

சிலப்பதிகாரக் காப்பியத்தில் , தலைவி கண்ணகியின் உற்ற தோழி தேவந்தி. மதுரையில் கண்ணகிக்கு நிகழப் போகும் தீமை பற்றித் தனக்கு முன்னறிவிப்பாக ஏற்பட்ட கனவைக் கண்ணகி பகிர்ந்து கொள்வது தேவந்தியோடுதான்.

தேவந்தியும் கண்ணகியைப் போலவே கணவனைப்பிரிந்திருப்பவள்தான்.

பூம்புகார் நகரிலுள்ள சோமகுண்டம் , சூரிய குண்டம் ஆகிய நீர்த் துறைகளில் மூழ்கிக் காம வேள் கோட்டத்தைக் கை தொழுதால் பிரிந்த கணவன் திரும்பி வருவான் என்று தேவந்தி கூறக் கண்ணகி அதை மறுத்து விடுகிறாள்.

தேவந்தி இடம்பெறும் ‘கனாத் திறம் உரைத்த காதை’ என்ற இந்தக் காட்சியில் , தேவந்தியின் கிளைக் கதையைச் சற்று விரிவாகக் குறிப்பிட்டிருக்கிறார் இளங்கோ .

அந்தணக் குலத்தில் பிறந்த தேவந்தியின் மாமனாருக்கு இரு மனைவிகள்.அவர்களில் மாலதி என்பவளுக்கு மட்டும் குழந்தைகள் இல்லை.மற்றவளுக்கு ஒரு குழந்தை இருக்கிறது.

குழந்தையின் பெற்றோர் வெளியே சென்றிருக்கும் சமயத்தில் மாலதி , மாற்றாளின் குழந்தைக்குப் பாலூட்டப் பால் விக்கி அது இறந்து விடுகிறது. அஞ்சி நடுங்கிய மாலதி குழந்தையைத் தூக்கிக் கொண்டு புகார் நகரிலுள்ள கோவில்களுக்கெல்லாம் ஓடுகிறாள்.அங்கேயே ‘பாடு’ (தவம்)கிடக்கிறாள்.
ஒரு கட்டத்தில் பிணங்களைத் தின்னும் இடாகினி என்னும் பேய் குழந்தையைத் தூக்கிக் கொண்டு மறைந்து விடுகிறது.

செய்வதறியாமல் மயங்கும் மாலதியின் மனதிற்குள் பாசண்டச் சாத்தன் என்ற தெய்வ உருவம் தோன்றி ஆறுதல் அளிக்கிறது. தானே குழந்தையாக வந்து அவளது துயரைத் தீர்ப்பதாகக் கூறும் அது ..அவ்வாறே அவள் முன் ஒரு குழந்தை வடிவில் கிடக்கிறது.அளவற்ற மகிழ்ச்சியுடன் அதை எடுத்துச் செல்லும் மாலதி அவனைத் தங்கள் மகனாக எண்ணியே வளர்க்கிறாள்.

பாசண்டச் சாத்தனும் மனித உருவில் வளர்ந்து ஆளாகித் தன் தாய் தந்தையர்க்குச் செய்ய வேண்டிய அனைத்துக் கடமைகளையும் – நீர்க்கடன் கழிப்பது வரை செம்மையாகச் செய்து முடிக்கிறான்.
தனது உலகியல் கடமைகளில் ஒரு பகுதியாகத் தேவந்தியை மணந்து எட்டு ஆண்டுக் காலம் அவளோடு வாழ்கிறான்.

(சாத்தன் தீவலம் செய்து தேவந்தியை மணமுடித்து அவளோடு சேர்ந்து வாழ்ந்தபோதும் அவர்கள் கணவன் மனைவி உறவுடன் வாழவில்லை – தேவந்தியும் சாத்தனும் உடல் உறு கூட்டம் இல்லாத் தெய்வக் கற்புக் காதலர் என அறிஞர் தெ. பொ.மீஅவர்கள் குறிப்பிடுவார்)

எட்டு ஆண்டுகள் முடிந்தபின் ,(தாய் தந்தையர்க்கு ஆற்ற வேண்டிய கடமைகள் முடிந்ததும்) தான் கடவுள் என்பதை அவளுக்கு உணர்த்திவிட்டு அவளோடு இணைந்து வாழாமல்- தன் கோட்டத்திற்குள்(கோயில்)சென்று – அவள் தன்னைக் காண வேண்டுமென்றால் இனிமேல் அங்கேதான் வந்தாக வேண்டுமெனக் கூறிவிட்டு மறைந்து போகிறான்.

உண்மையை ஊராரிடம் உள்ளபடி கூற முடியாத தேவந்தி , தன் கணவன் தீர்த்த யாத்திரை சென்றிருப்பதாகவும் ,அவன் விரைவில் வர வேண்டுமென்பதற்காகவே தான் கோயில் குளங்களைச் சுற்றி வருவதாகவும் கூறி நாட்களை நகர்த்துகிறாள்.

இறுதியாகக் காப்பியம் முடியும்போது , சேரன் கண்ணகிக்காக எடுத்த கோயிலுக்கு வந்து தன் தோழியை எண்ணிப் புலம்புகிறாள்.அவள் மீது ஆவேசிக்கும் (தெய்வம் ஏறிய நிலை) சாத்தன் வழியாகவே கோவலனின் தாய் , கண்ணகியின் தாய் , மாதரி முதலியோரின் பழம் பிறப்புக்கள் உணர்த்தப்படுகின்றன. கண்ணகி கோயில் பூசனைக்கும் தேவந்தியையே பொறுப்பாக்குகிறான் சேரன் செங்குட்டுவன்.

தேவந்தி கதையின் இந்த அடிப்படை , கீழ்க் காணும் என் சிறுகதைப் படைப்பில் பெண்ணிய நோக்கில் மீட்டுருவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது.

இனி……சிறுகதை…

(நன்றி: இக் கதையைப்பிரசுரம் செய்த ‘வடக்கு வாசல்’ இதழுக்கு -நவ.’07)

அந்தப்புர மேன் மாடத்தை அழகுபடுத்திக் கொண்டிருந்த சிலைகளோடு
தானும் ஒருசிலையாய்ச்சமைந்து போய் அசைவற்று நின்று கொண்டிருந்தாள் கண்ணகி.
இரு நிதிக் கிழவனான அவள் தந்தை மாநாய்கன் , தன் செல்வப் புதல்விக்குச் சீதனமாய்த் தந்திருந்த எழுநிலை மாடங்கள் கொண்ட பிரம்மாண்டமான அந்த மாளிகையின் தனிமை …அவள் முகத்தில் அறைந்தது.அதிலும் கோவனோடு பல நாட்கள் ஒன்றாகக் கூடியிருந்து நிலவின் பயனை இருவருமாய்த் துய்த்திருந்த அந்த முத்து மாடம் ….அவளது அந்தரங்கக் கதைகளை ஒவ்வொன்றாகக் காதுக்குள் ஓதியபடி , அந்த வெறுமையின் அவலத்தை மேலும் விசிறி விட்டுக் கொண்டிருந்தது. நினைவு நதி கிளர்த்திவிட்ட எண்ண அலைகளின் ஓங்காரச் சுழலுக்குள் சிக்கிச் சுழன்றபடி அவள் போராடிக் கொண்டிருந்த அந்தத் தருணத்தில் ….அருகே நிழல் தட்டியது.

”கண்ணகி ! நீ இப்போது துணுக்குற்றுத் திரும்பிப் பார்த்த கோலம் எப்படி இருந்தது தெரியுமா ? கோவலரை நீ எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்ததுபோலத்தான் எனக்குத் தோன்றியது.”

”என் நிலைமை …நீ கூடப் பழிக்கும்படி ஆகிவிட்டதல்லவா தேவந்தி ? ஆனால் ஒரு வகையில் பார்த்தால் நீ சொல்வதிலும் உண்மை இல்லாமல் இல்லை. ஒரு வேளை …இன்று காலை நான் கண்ட கனவு மெய்ப்பட்டால் …அவர் விரைவில் என்னை நாடி வருவது உறுதி ! அவர் வருவதில் மகிழ்ச்சிதானென்றாலும் , அந்தக் கனவின் கோரமான மற்றொருபக்கம்தான் என்னை மிரட்டிக் கொண்டிருக்கிறது…”

முகம் தெரியாதஒரு பட்டினத்தில்…இனம் தெரியாத ஏதோ ஒருவகை ஆபத்து தங்களை எதிர்கொள்ளக் காத்திருப்பதாக அன்று அதிகாலையில் தான் கண்ட கனவைத் தேவந்தியிடம் கொட்டித் தீர்த்தாள் கண்ணகி.

”இப்படி அந்தப்புரச் சிறையிலேயே அடைந்து கிடந்தால் …உனக்கு வேறு எந்த மாதிரியான கனவுகள்தான் வரக் கூடும் கண்ணகி …? உன்சீறடியை அலங்கரித்த சிலம்பைக் கழற்றி விட்டாய் ! நெற்றியில் திலகம் அணிவதையும் நிறுத்தி விட்டாய் ! மங்கலத் தாலி ஒன்றைத் தவிரப் பிற எல்லா அணிகலன்களையும் துறந்து விட்டாய் ! இன்னும் எத்தனை நாள்தான் இப்படி அவரது வருகையை எதிர்நோக்கி இங்கேயே தவமிருக்கப் போகிறாய் ? ..நானும் உன்னைப் போலக் கணவரைப் பிரிந்திருப்பவள்தான் ! ஆனாலும் கோயில்…வழிபாடு ….நோன்பு என்று ஏதேதோ செய்து என் மனதை ஆற்றிக் கொள்ளவில்லையா ?..நீயும் வெளியே வா கண்ணகி ! வெளிக் காற்றைச் சற்றே சுவாசி !”

”தேவந்தி ! போதும் நிறுத்திக் கொள் ! உன்னை இன்னும் கொஞ்சம் பேச விட்டால் ..சோமகுண்டம் , சூரிய குண்டம் என்று புகார் நரத்திலுள்ள புனிதக் குளங்களையெல்லாம் பட்டியலிடத் தொடங்கி விடுவாய் ! காமவேள் கோட்டத்தைத் தொழுவதற்குக் கூட என்னை அழைக்க ஆரம்பித்து விடுவாய் !”

”அதில் தவறென்ன கண்ணகி ?”

”அது எனக்குப் பெருமையில்லை தேவந்தி ! அது…பீடில்லாத செயல் என்று நினைப்பவள் நான் . என் கணவர் என்னிடம் திரும்பி வருகிறார் என்றால் …அது என் அன்பின் வலிமையால்தான் சாத்தியப்பட வேண்டும் ! அது எப்போது முடியவில்லையோ …அப்போது பிற புறக் காரணிகளுக்கு அங்கே வேலையில்லை.”

தேவந்தி அதைக் கேட்டு ஏளனமாகச் சிரித்தாள்.

”உன் அன்புக்கோ …அல்லது நான் செய்து கொண்டிருக்கிற நோன்புக்கோ அந்த வலிமை நிச்சயம் இல்லையடி பயித்தியக்காரி !”

அந்த வார்த்தைகள் கண்ணகியைச் சற்றே வியப்பில் ஆழ்த்தின.

”பிறகு நீ ஏன் இப்படிக்….”

”கோயில் கோயிலாக வலம் வருகிறேன் என்றுதானே கேட்கப் போகிறாய் ? ..தெரிந்துதான் செய்கிறேன் கண்ணகி ! இதனாலெல்லாம் என் கணவர் நிச்சயம் வரப்போவதில்லை என்பதை நன்றாகத் தெரிந்து கொண்டுதான் இப்படியெல்லாம் நான் செய்து கொண்டிருக்கிறேன்”

”அப்ப்டியெல்லாம் பேசாதே தேவந்தி ! மாதவியின் கலை மயக்கத்தில் கட்டுண்டு கிடக்கும் கோவலர் கூடக் கட்டாயம் திரும்பி வந்து விடுவார் என்று நான் நம்பிக்கையோடு இருக்கும்போது உனக்கு ஏன் இந்த விரக்தி ?”

”இது விரக்தியில்லை கண்ணகி ! நிஜம் ! சுட்டெரிக்கும் நிஜம் !”

”உன் கணவர் தீர்ர்த்தத் துறைகளில் படிந்து வரத்தானே போயிருக்கிறார் ?”

”அது …இந்த உலகின் கண் முன்னே அரங்கேறும் நாடகம் ! ஆனால் உண்மை வேறெங்கோ பாதாளத்தில் பதுங்கிக் கொண்டு கண்ணா மூச்சி ஆடிக் கொண்டிருக்கிறது.”

”என்னிடம் அதைப் பகிர்ந்து கொள்வதால் உனக்கு ஆறுதல் கிடைக்குமென்று நீ நினைத்தால்…”

கண்ணகி வார்த்தையை முடிப்பதற்கு முன் தேவந்தி வெடித்தாள்.

”என்றாவது ஒரு நாள் உன்னிடம் மட்டுமே அதைச் சொல்லியாக வேண்டும் என்ற
தாகத்துடன் …என் நெஞ்சக் கூட்டுக்குள் அடைகாத்து வருகிறேன் கண்ணகி !என் கதையின் மூல வேரை ..அதன் சரியான அர்த்தத்தில் உள் வாங்கிக் கொள்ள உன் ஒருத்தியால்தான் முடியும் !”

கண நேரம் அமைதி காத்த தேவந்தி …தன் கதையைத் தொடங்கினாள்.

”என் கணவரின் தந்தைக்கு இரண்டு மனைவியர். மூத்தவளான மாலதிக்குக் குழந்தை இல்லாமல் போய் விட்டதால் இரண்டாவதாக ஒரு பெண்ணை அவர் மணந்து கொண்டார் . அவளுக்குப் பிறந்த அந்த ஆண் குழந்தையைப் பொறுப்போடும் , கரிசனத்தோடும் சீராட்டி வளர்த்ததெல்லாம் மூத்த மனைவி மாலதிதான்”

‘குறுகுறு நடந்து …சிறுகை நீட்டி ..இட்டும் தொட்டும் , கவ்வியும் ..துழந்துமாய் ..அந்தப் பிஞ்சுக் குழந்தை தரும் பிள்ளை இன்பத்தில் தன்னை மறந்து லயித்துக் கிடந்தாள் மாலதி.மயங்க வைக்கும் அந்த மழலைச் செல்வத்திற்கு முன்னால் தன் கணவர் மறுமணம் செய்து கொண்ட துயரம் கூட அவளைப்பெரிதாகப் பாதிக்கவில்லை.

அவள் மடியில் கிடந்த அந்த மகவு சிணுங்கியது; கை, கால்களை உதைத்துக் கொண்டு அழுதது ;துணி விரிப்பில் அதைக் கிடத்தி விட்டுச் செம்பில் பாலும் , வெள்ளிச் சங்கும் எடுத்து வந்த மாலதி குழந்தையை மடியில் கிடத்திச் சங்கில் பால்புகட்டத் தொடங்கினாள். அதன் தாயும் , அவளதுகணவரும் பக்கத்து ஊரில் நடக்கும் ஒரு திருமணத்திற்குச் சென்று விட்டிருந்தனர்.

‘இந்தப் பாவியைக்குடல் விளக்கம் செய்ய ஒரு மகள் ஜனிக்காமல் போனால்தான் என்ன ?நான் தான் பத்துத் திங்கள் சுமக்காமல்…பிள்ளைவலி என்னவென்றே தெரியாமல் இந்தக் குழந்தைக்குத் தாயாகி விட்டேனே..? நல்ல வேளையாக …இவ்வாறு நான் குழந்தையைப் பார்த்துக் கொள்வதை அவள் தவறாக எண்ணவில்லை. ஒருக்கால் கணவரோடு கூடச் சேர்ந்து , நினைத்த நேரத்தில் , நினைத்த இடங்களுக்குச் சென்றுவர இது வசதியாக இருப்பதாகக் கூட அவள் எண்ணிக் கொண்டிருக்கலாம்…சரி! அப்படித்தான் இருந்துவிட்டுப் போகட்டுமே ! அதைப் பற்றி எனக்கென்ன வந்தது ?மடியை நிறைத்துக் கிடக்கும் இந்த மழலையைப் பார்த்தபடியே என் பொழுதை ஓட்டி விடலாமே..?”

ஏதேதோ எண்ணங்களில் மிதந்தபடியே அவள் பாலைப் புகட்டிக் கொண்டிருந்தாள். திடீரென்று , சற்றும் எதிர்பாராத ஒரு தருணத்தில் குழந்தையிடமிருந்து ஒரு செருமல் ! புரையேறி மூச்சு அடைத்துக் கொண்டுவிட்டதைப் போல ஒரு திணறல்..! செய்வதறியாமல் அவள் திகைத்து நின்ற அந்த ஒரு நொடிக்குள் குழந்தையின் தலை துவண்டு சரிய , அது இறந்து விட்டதாகவே முடிவு கட்டிக் கொண்ட மாலதி….,பிரபஞ்ச சோகம் முழுவதையும் ஒன்றாக உள்ளடக்கி ஓலமிட்டாள்.

குழந்தையை இழந்து விட்ட அவலம் ஒரு புறமும் , மாற்றாளின் மகவைச் சாகடித்துவிட்ட பழிச் சொல் மறுபுறமுமாய்ப் பதை பதைத்து நடுங்கியது அவள் உள்ளம் ! அண்டை அயலாரிடம் ஆலோசனை கேட்கப் போய்..அந்தச் செய்தி அனைவருக்கும் அஞ்சலாக்கப்படுவதிலும் அவளுக்குச் சம்மதமில்லை.

சேலைக்கிழிசல் ஒன்றில் குழந்தையைப்பொதிந்து தோளில் கிடத்தியபடி…பூம்புகார் நகரத்திலுள்ள இந்திரக் கோட்டம் தொடங்கி , வேற்கோட்டம், நாகர் கோட்டம் என அங்குள்ள கோயில்கள் அனைத்தையும் ஒன்றுவிடாமல் வலம் வரத் தொடங்கினாள் மாலதி. அங்கிருந்த தெய்வ சன்னிதிகளின் முன்னிலையில் குழந்தையக் கிடத்தி மனதுக்குள் கதறினாள். குழந்தை இன்னும் கூடப் பேச்சு மூச்சு இல்லாமல்தான் கிடந்தது.

மாலதியின் உள்ளுணர்வில் ..அவளது குலதெய்வமான பாசண்டச் சாத்தனின் உருவம் திடீரென்று மின்னலடிக்க …அங்கே சென்று பாடு கிடக்கலாம் …அந்தக் கடவுள் முன்பு பழியாய்க் கிடக்கலாம் என்று எண்ணியவளாய் , அலறிப் புடைத்தபடி… அங்கமெல்லாம் அலுங்கிக் குலுங்கக் கோயிலை நோக்கி ஓட்டமும் , நடையுமாய் அவள் செல்லத் தொடங்கினாள். நகரத்திற்கு வெளியே ..எங்கோ தொலைதூரக் காட்டுப் பகுதியில் இருந்த அந்தக் கோட்டத்திற்குப் போய்ச் சேர்ந்த அவள் ,அதன் முற்றத்திலேயே குழந்தையோடு மயங்கிச் சரிந்தாள்.

தன் நினைவு தவறிக் கிடந்த மாலதியின் ஆழ்மனதிற்குள் ஊழிக் கூத்தாடிக் கொண்டிருந்தான் பாசண்டச் சாத்தன். ஒரு நேரம் அவளுக்குள் விசுவ ரூபம் எடுத்து விண் முட்ட வளரும் அவன் , அடுத்த கணத்திலேயே அழகுக் குழந்தையாகித் தவழ்ந்து தளர் நடையிட்டபடி ..அவள் மடி தேடி ஓடி வந்து விடுவான்.ஒரு நிமிடம் தெய்வமாக ஆசி வழங்கும் அவன் , அடுத்த நிமிடத்திலேயே மண்ணளைந்த கையோடு …மிரண்டு போன பாலகனாக அஞ்சி வந்து அவள் முன்பு நின்று விடுவான். அவன் தெய்வமா…? இல்லை தெய்வக் குழந்தையா..?

மயக்கம் முழுதுமாய்த் தெளிந்திராத மாலதி ..சாத்தனின் திரு உருவச் சிலைக்குமுன்னால் அரைகுறையாகக் கண் விழித்தாள்….

‘என்ன இது…சிலை வடிவத்தில் சாத்தனின் முகம் என் கண்ணுக்குத் தெரியவில்லையே ..?அங்கே எனக்குத் தட்டுப்படுவது …என் குழந்தையின் முகமல்லவா..?’

எங்கிருந்தோ ஒரு குழந்தையின் முனகல் ஓசை …மெதுவாய்…மிக மெதுவாய்க் கேட்கச் சாத்தனின் முகத்திலிருந்து மெள்ளத் தன் பார்வையை மீட்டுக் கொண்டாள் மாலதி. கோயில் முற்றத்தில் அவள் கிடத்தியிருந்த குழந்தை…கை, கால்களை உதைத்தபடி , சிரித்து விளையாடிக் கொண்டிருந்தது.அதை அள்ளி எடுத்துக்கொண்ட அவள் அதன் காதுகளில் ஓதினாள் ‘நீ….குழந்தை இல்லை..கண்ணே ..நீ என் தெய்வம்..’
………………………………………

அந்தக் குழந்தைதான் என் கணவர்”என்றபடி கதைக்குச் சற்று இடைவெளி விட்டாள் தேவந்தி.

”அப்படியென்றால் உன் கணவர் உருவில் உருவில் பாசண்டச் சாத்தனா…?”

”அப்படி யார் சொன்னது..?அது என் மாமியார் அவளாகவே ஏற்படுத்திக் கொண்ட மனப்பிரமை! அது அவள் கொண்ட மன மயக்கம்! குழந்தையைச் சாகடித்துவிட்ட பழி , தன் மீது விழுந்து விடுமோ என்ற பதட்டமான உணர்ச்சியின் பிடியில் அவள் சிக்கியிருந்த நேரத்தில் , பால் விக்கியதால் பாலகன் சோர்ந்திருக்கிறானா …அல்லது உண்மையிலேயே அவன் மாண்டு விட்டானா என்று சோதித்துப் பார்க்க வேண்டும் என்பது கூட அவளுக்குத் தோன்றாமல் போயிருக்க வேண்டும் ! குழந்தையைத் தூக்கிக் கொண்டு அவள் ஓடிய ஓட்டத்திலும் , அதைப் போட்டுக் குலுக்கி எடுத்ததிலும் அதற்கு ஏற்பட்ட விக்கலும் மூச்சுத் திணறலும் இயல்பாகவே சீராகி விட்டிருக்கிறது ! அப்படித்தான் அது நடந்திருக்க வேண்டும் ! ஆனால் இறுதி வரை அவள் அப்படி நினைக்கவே இல்லை .தான் உறுதியாக நம்பிய கடவுளின் அருளால்தான் மகன் பிழைத்தான் என்று பொதுவாக எல்லோரும் எண்ணுவது போல எண்ணக் கூட அவள் தயாராக இல்லை. குழந்தை முதலிலேயே இறந்து போய் விட்டது என்றும் , பிறகு அதற்குள் உயிராக வந்து உலவியது தன் இஷ்ட தெய்வம்தான் என்றும் அவள் திட்ட வட்டமாக முடிவு கட்டிக் கொண்டு விட்டாள். ஆனால் கணவரிடமும், மாற்றாளிடமும் அதைச் சொல்லித் தன்னையே காட்டிக் கொடுத்துக்கொள்ளும் துணிச்சலும் அவளிடம் இல்லை ! அதற்கு மாறாகக் குழந்தையோடு தனித்திருக்கும் தருணங்களிலும் …வாய்ப்பு நேரும்போதெல்லாம் அதன் அசாதாரணத் தன்மையை அந்தப்பிஞ்சு மூளைக்க்குள் அவள் செலுத்திக் கொண்டே இருந்தாள்…..

‘இதனால் பாதிக்கப்பட்டவர் என் கணவர்தான் ! மானுடத்திற்கும் , அமானுஷ்யத்திற்கும் இடையிலான ஊசலாட்டத்திலேயே வளர்ந்து வாலிபரானார் அவர். சராசரி மகனாகத் தாய் தந்தையர்க்கு ஆற்ற வேண்டிய யதார்த்தக் கடமைகள் ஒரு புறம் ! தெய்வீகமான தன் புனிதம் கறைப்பட்டு விடாமல் காத்துக் கொண்டு விட வேண்டுமென்ற இடைவிடாத போதனை மற்றொரு புறம் ! அவரது லௌகீக வாழ்வின் தவிர்க்க முடியாத திருமணக்கட்டத்தில் நான் அவரோடு இணைந்தேன். மணமேடையைத் தீவலம் வரும்போது என்னைப் பற்றிய அவரது கரங்கள் …தொடர்ந்து நாங்கள் மண வாழ்க்கை நடத்திய எட்டாண்டுக் காலத்தில் என்னைத் தீண்டியதே இல்லை. அது ஏன் என்பது …அப்போது எனக்கு விளங்கியிருக்கவில்லை.அப்படிப்பட்ட கேள்விகளை அவரிடம்கேட்க நான் வளர்ந்த சூழல் என்னை அனுமதிக்கவும் இல்லை.”

தேவந்தியை நெருங்கி வந்து அவளை ஆரத் தழுவிக் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தாள் கண்ணகி. ஆயிரம் அர்த்தச் செறிவுகளை அடக்கியிருந்த அந்தக் கண்ணீர் …தனக்கானதா அல்லது தேவந்திக்கானதா என்பதை அவளே அறிந்திருக்கவில்லை. தேவந்தி அவளை மெல்ல வருடிக் கொடுத்தாள்.

”உன் உள்ளம் புரிகிறது கண்ணகி ! நீயும் உன் கணவரைப்பார்த்து வினாக் குறியாகக்கூட ஒரு பார்வையைப் படர விட்டிருக்காதவள்தானே…?என்ன செய்வது ? இது இந்த யுகத்தின் சாபம். சரி. மீதியையும் கேட்டுவிடு.”

”நாங்கள் அப்படித்தான் வாழ்ந்தோம் . ஒருவர் நிழல் கூட அடுத்தவர் மேல் படாமல் எட்டாண்டுக் காலம் உலகத்தின் பார்வைக்கு நாங்கள் கணவன் மனைவியாக வாழ்ந்தோம்….அவர் உற்றார் , உறவினருக்கு உறுதுணையாக உதவினார்… ; கல்வி கேள்வியில் தேர்ச்சி பெற்றுச் சான்றோனென்று பெயரெடுத்தார் ; குலத் தொழிலில் கொடிகட்டிப் பறந்து …கோலோச்சி உயர்ந்தார் ;…இப்படி…என்னைத் தவிரத் தன்னைச் சுற்றிக்கூடியிருந்தோரையெல்லாம் பலமுகம் காட்டிப் பதமாகக் குளிர்வித்தார் ; பெற்றோரின் காலம் முடிந்தது ; மாலதியும் மரணமடைந்தாள் ; அவர்களுக்குச் செய்ய வேண்டிய ஈமக் கடன்களையெல்லாம் முறைப்படி கழித்த பிறகு …, மெதுவாக என்னை நாடி வந்தார்…என்னிடம் முதலும், கடைசியுமாக அவர் பேசிய சந்தர்ப்பம் அது ஒன்றுதான் !

”நான் யார் என்பதை நீ அறிய மாட்டாய் தேவந்தி !என் மூவா இள நலத்தை உள்ளபடி நான் காட்டினால் …அதைப் பொறுக்கும் சக்தி உன் கண்களுக்கு இல்லை . நான் தான் பாசண்டச் சாத்தன். மாலதியின் பழி துடைக்கவே, மறைந்த குழந்தையின் உருவில் நான் குடி புகுந்தேன். அவளுக்காகவே மனிதப் பிறப்பெடுத்த நான் , மனித வாழ்வின் கடமைகள் அனைத்தையும் செய்து முடித்தேன்….இனிமேல் நான் விடைபெறும் தருணம் வந்து விட்டது ! கடவுளையே கரம் பற்றும் அரியதொரு வாய்ப்பைப் பெற்றவள் நீ !அந்த மகிழ்ச்சியோடு எஞ்சிய உன் வாழ்நாளைக் கோயில் வழிபாட்டில் கழித்துக் கொள்.”

– இந்த வாசகத்தோடு என் வாழ்க்கையிலிருந்தே விடைபெற்று அவர் அகன்று போனார். வேரற்ற மரமாக நான் விழுந்து கிடந்த நாட்கள்…நீண்டு கொண்டே போன அந்தக் காலகட்டத்தில்தான் என் அறிவில் படிந்திருந்த மாயத் திரைகளெல்லாம் …படிப்படியாக விலகிக் கொண்டே வந்தன….அது வரையில் புலப்பட்டிருக்காத புதிர்களின் முடிச்சுக்களெல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்ந்து கொண்டே வந்தன.நான் …தெளிந்தேன்..! என் கணவர் கடவுளில்லை ! மனித மனத்தின் கண நேரத் தடுமாற்றத்தால் அவ்வாறு ஆக்கப்பட்டவர் ! அவர் புனிதரில்லை. தாயின் மூளைச் சலவையால் இக வாழ்விலிருந்தே தன்னைத் துண்டித்துக் கொண்டு விட்ட ஒரு மனிதர்தான் அவர்..!”

”இந்த அளவு யோசித்து வைத்திருக்கும் நீ …உன் கணவர் திரும்பி வர வேண்டும் என்பதற்காக நோன்பு நோற்பதாக ஏன் சொல்லிக் கொண்டிருக்கிறாய் என்பதுதான் எனக்கு இன்னும் விளங்கவில்லை தேவந்தி !”

”நான் தான் முதலிலேயே தெளிவுபடுத்திவிட்டேனே கண்ணகி ! ஊராரின் கண் முன்னால் நான் போடும் வேடம் அது ! கண்ணகி ! நீ அருக (சமண) சமயத்தைச் சேர்ந்தவள்.இப்படிச் செய்வதையெல்லாம் ஒரே வார்த்தையில் ‘மடமை’ என்று சொல்லி விலக்கி வைத்து விட உன்னால் முடியும் ! ஆனால் .. என் பிறப்புப் பின்னணி அவ்வளவு எளிதாக என்னை விட்டு விடாது .தீர்த்த யாத்திரை சென்றிருக்கும் கணவன் நலமுடன் திரும்ப வேண்டும் என்று வழிபடாமல் நான் சும்மா இருப்பதை அது நிச்சயம் ஏற்றுக் கொள்ளாது. அந்த வகையான நிந்தனைகளிலிருந்து தப்பித்துக் கொள்ளத்தான் நான் இப்படி நெஞ்சறிந்து பொய்யாக நடித்துக் கொண்டிருக்கிறேன் ! இந்த உலகத்தவர்களின் நாக்கு இருக்கிறதே …அது …பிளவுபட்டுக் கிடக்கும் அந்த ஆதிசேஷப் பாம்பின் நாக்கை விடவும் கூடுதலான நச்சுத் தன்மையைக் கொண்டிருப்பது. கண்ணகி ! கோவலன் , மாதவியை நாடிச் சென்றிருப்பது , கலை மீது கொண்டிருக்கும் காதலால்தான் என்பது எல்லோருக்குமே வெளிப்படையாகத் தெரியும் ! ஆனால் உன்னிடம்தான் ஏதோ குறை இருப்பதைப் போல நரம்பற்ற நாவினராய் இந்த ஊரார் பேசவில்லையா? ”

– கண்ணகி ,தாளாத துயரத்துடன் தலையைத் தாழ்த்திக் கொண்டாள். அவள் முகத்தைச் சற்றே உயர்த்திய தேவந்தி…அங்கே அரும்பியிருந்த கண்ணீர் முத்துக்களைத் தன் விரலால் சுண்டி விட்டாள்.

”இப்படி நாமெல்லம் கண்ணீருக்குள்ளேயே கரைந்துபோய் விடுவதனாலேதான் சில கேள்விகளைக் கேட்காமலே விட்டு விடுகிறோம் ! அப்படி நான் கேட்கத் தவறிய ஒரு கேள்வி …என் உள்ளத்துக்குள் உட்கார்ந்து கொண்டு அல்லும் பகலும் என்னைக் குடைந்தெடுத்துக் கொண்டிருக்கிறது .”

-அது என்னவாக இருக்கும் என்பதை அறிந்து கொள்ளும் ஆவலுடன் தன் விழிகளை அகல விரித்தாள் கண்ணகி.

”மனிதக் கடமைகளில் மனைவிக்கு ஆற்ற வேண்டிய கடமை என்பதும் உட்பட்டிருக்கிறதா…இல்லயா ? அப்படி அதுவும் உட்பட்டதுதான் என்றால் மனித நிலையில் ஆற்ற வேண்டிய எல்லாக் கடமைகளையும் என் கணவர் முழுமையாகச் செய்து முடித்து விட்டார் என்று எப்படிச் சொல்ல முடியும் ?…மனைவி என்ற மனித உயிருக்குள்ளும் தனியாக ஒரு இதயம் துடித்துக் கொண்டிருக்கிறது என்பது மட்டும் ஏன் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதே இல்லை ? இதையெல்லாம் அவரிடம் கேட்காமல் நான் மௌனமாக இருந்து விட்டேன் கண்ணகி ! இந்தக் கேள்விகளைக் கேட்பதற்காகவாவது அவரை நான் சந்தித்தே ஆக வேண்டும் !”

-அத்தனை நேரமும் , வேறு யாருடைய கதையையோ சொல்வதைப் போல் நிதானமாகச் சொல்லிக் கொண்டுவந்த தேவந்தியின் குரல் …அந்தக் குறிப்பிட்ட கணத்தில் உடைந்து சிதறத் தொடங்கியது. உடனேயே அதிலிருந்து தன்னை மீட்டுக் கொண்டுவிட்ட அவள் ..ஆவேசமான குரலில் சூளுரைப்பதைப் போல் ஒரு பிரகடனம் செய்தாள் !

”ஆனால் இந்தக் கதை ..இந்தத் தேவந்தி ஒருத்தியின் வாழ்க்கையோடு முடிந்து விடப்போவதில்லை ! இனி வரும் காலங்களிலும் வேறு ஏதோ ஒரு வடிவத்தில் இது தொடரத்தான் போகிறது . அப்போது ..இன்றில்லை என்றாலும் ..என்றோ ஒரு நாள் ..ஏதாவது ஒரு யுகத்தில் நான் அந்தக் கேள்விகளைக் கேட்காமல் நான் விட்டுவிட மாட்டேன் ! இந்த மாதிரியான மௌனங்கள் உடைபடும் தருணத்தை …நிச்சயம் நான் நிகழ்த்திக் காட்டத் தவற மாட்டேன் கண்ணகி !”

காலம் , தன் மீது உழுது விட்டுப் போயிருக்கும் பதிவுகளைச் சுமந்தபடி …யுகங்களின் இருள் படர்ந்த கணங்களின் ஊடே …மெள்ள ஊர்ந்து பயணிக்கத் தொடங்கினாள் தேவந்தி.

Print Friendly, PDF & Email

3 thoughts on “தேவந்தி

  1. தேவந்தி இப்போது மௌனங்களை படிப்படியாக உடைத்துக்கொண்டு இருக்கிறாள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *