Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

தேர்

 

தூரத்துப் பார்வைக்கு தேர் போலத்தான் இருந்தது. தேருக்கு உரிய சிற்பங்களோ அழகோ இல்லை. தேர் போன்ற வடிவில் இருந்தது. பாடையைத் தூக்குவது போல் அதைத் தூக்கிக் கொண்டு வந்தார்கள். பிளாஸ்டிக் குடங்கள், பக்கெட்டுகள், கழிவுப் பொருட்கள், டியூப் லைட்டுகள், மின்சார ஒயர்கள் என்று தாறுமாறாய் அந்தத் தேர் வடிவமைப்பில் இருந்தன. கூர்ந்து கவனிக்கிற போது ஒரு தேர் வடிவம்தான். ஆனால் முழுக்க கழிவு மற்றும் குப்பைப் பொருட்களால் ஆனது என்று தெரிந்தது அப்பாசாமிக்கு.

பாடையைப் போல் அதைத் தூக்கிக் கொண்டு வந்தவர்கள் ஏதோ சப்தமிட்டு வருவது தெரிந்தது. தேருக்குப்பின்னால் இருவர் இருவராக வரிசையாக வந்து கொண்டிருந்தனர். அவர்களும் ஏதோ சப்தமிட்டு வருவது தெரிந்தது. பேனர்களும், வாசக அட்டைகளும் பிடித்தபடி வந்து கொண்டிருந்தனர். அவர்கள் மெல்ல நெருங்க கோஷங்கள் புரிய ஆரம்பித்தன. சின்ன ஊர்வலம்தான்.

அட என்ன… மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துள் புகுகிறதே ஊர்வலம். ஒருவாரமாய் போலீஸ் காவலால் திணறியது மாவட்ட ஆட்சியர் அலுவலகம். இன்றைக்குக் காணோம். ஓரிருவர் பத்திரம் எழுதும் இடத்தில் தென்பட்டார்கள். ஊர்வலம் காம்பவுண்டுகள் புகுந்தது. கோஷங்கள் சற்று உரத்துக்கிளம்பின. ஊர்வலத்தை யாரும் தடுக்கவில்லை.

குப்பை இல்லாத உலகத்தை உருவாக்குவோம். பிளாஸ்டிக் இல்லா உலகம் தேவை. கழிவுகளை காசாக்குவோம் என்ற வாசகங்கள் பேனர்களில் தென்பட்டன. கழிவுப் பொருட்களால் ஆன தேர் நகர்ந்து சென்று கொண்டிருந்தது. வாசல் முகப்பில் அந்தத் தேரை வைத்தார்கள். கோஷங்கள் தொடர்ந்து கொண்டிருந்தன. நடுத்தர வயதுக்காரர் மிடுக்குடன் புடை சூழ வந்து நின்றார். தேரைச் சுமந்து வந்தவன் ஒரு மனுவை அவரிடம் கொடுத்தான். அவரும் அதை வாங்கிக் கொண்டு மெல்லியதாகப் புன்னகைத்தார். கைகூப்பியபடி உள்ளே மனுவுடன் திரும்பிச் சென்றார்.

தேர் மீண்டும் வலம் வர ஆயத்தமாவது போலிருந்தது. காம்பவுண்ட் வலதுபுற மூலைக்குச் சென்றது. வாய் திறந்த சிமெண்ட் குப்பைத் தொட்டி குப்பைகளைச் சுமந்து கொண்டு கிடந்தது. தேரை அதில் சாய்த்தார்கள். பிளாஸ்டிக் பொருட்கள் சடசடவென்றச் சப்தத்துடன் அதன் வாய்க்குள் சென்று மறைந்தன. பேனர்களை சுருட்டிக் கொண்டவர்கள் கக்கத்தில் இடுக்கிக் கொண்டார்கள். அட்டை வாசகங்களை வைத்திருந்தவர்கள் வாய் பிளந்த குப்பைத் தொட்டிக்கு நகர்ந்தார்கள்.

இன்றைக்கு மனுநாள் என்பது ஞாபகம் வந்தது அப்பாசாமிக்கு. ஒருவாரமாய் போலீஸ் பாதுகாப்பு காரணமாய் உள்ளே நுழைந்துவிட முடியவில்லை. மனுநாள் என்பதால் எந்தத் தடையும் இல்லை என்பது போல் எல்லோரும் சகஜமாய் நுழைந்து கொண்டிருக்கிறார்கள் என்று பட்டது. முதலில் மனு ஒன்றை எழுதி விடவேண்டும் என்றிருந்தது.இது ரொம்ப நாளாய் தவணையாய் இருக்கிறது.

இன்னொரு தவணை விசயம் ரேசன் கார்டிற்கு கூடுதல் இணைப்புத் தாள் ஒட்டுவது. போன மாதம் முப்பதாம் தேதி கடைசி என்று அறிவிப்பு வந்தது, அப்புறம் நீட்டித்தார்கள். எப்போது போனாலும் ரேசன் கடையில் தேர்த்திருவிழா பார்க்க வந்த கூட்டம் போல் இருந்து கொண்டே இருந்தது.திருச்செல்வத்தின் பெயரை நீக்க வேண்டுமா. அப்படியெதுவும் தேவையில்லை. எப்போது வேண்டுமானாலும் அவன் வந்து விடலாம். குடும்ப அட்டையில் அவன் பெயர் இருப்பது கூட இருப்பது போல நினைப்பு வந்தது அவருக்கு.

கிராமத்திலிருந்து கிளம்பும்போது தேர் முட்டியைக் கடந்து வந்தது ஞாபகம் வந்தது. தேர் முட்டியிலிருந்து வெளியே தேரை இழுத்து வந்து வெயிலில் காயப்போட்டது போல போட்டிருந்தார்கள். அழுக்கடைந்து போன தேரின் மரச்சிற்பங்களைத் துடைத்துக் கொண்டிருந்தார்கள். லேசான கறுப்பு கலந்த வர்ணத்தை அடிக்கும் வேலையும் தொடர்ந்து கொண்டிருந்தது.

திருச்செல்வத்தை ஊருக்கு தேர் திருவிழாவிற்கு வர ஆயத்தமான இருக்கும்படி அப்பாசாமி கடிதம் எழுதி இருந்தார்.”நீ போய் ஒரு வருடம் ஆகப் போகிறது. இந்த வருஷம் மாரியம்மன் தேருக்கு எப்படியும் கொஞ்சம் காசை சேர்த்துக் கொண்டு நீ வந்து விடு. பெரிய சேமிப்பு இல்லையென்றாலும் வந்து போகும் செலவை சமாளித்துக் கொள்வாய் என்று எண்ணுகிறேன். நீ மலேசியாவிலிருது வரும்போது தங்க நகைகளையோ, பணத்தையோ, எலக்ட்ரானிக் பொருட்களையோ நாங்கள் எதிர்பார்க்கவில்லை. நீ விரிவாய் எழுதவில்லை என்றாலும் அங்குள்ள நிலைமையை நீ எழுதி உள்ள வரிகளைக் கொண்டு யூகிக்க முடிகிறது. நீ நிலைபெற இன்னும் பல மாதங்களோ, ஆண்டுகளோ ஆகக்கூடும் என்பதை என்னால் யூகிக்க முடிகிறது. அதனால் உன்னிடமிருந்து எதையும் நாங்கள் எதிர்பார்க்கவில்லை என்பதை யதார்த்தமாய் சொல்லி விடுகிறேன். உன்னைப் பார்க்காமல் அம்மாவும், உன் மனைவியும் அழுகையால் தங்கள் வார்த்தைகளை இக்கடிதத்தில் நிரப்புகிறார்கள். நீ வந்து போவது மட்டும் எங்களுக்கு ஆறுதல் தரும். தேர்த்திருவிழா சமயம் என்பதால் உறவினர்களையும் பார்க்க வாய்ப்பாக அமையும். தேர்த்திருவிழாவிற்கு வருகிற மாதிரி உன் விடுமுறை நாட்களையும், பயணத் திட்டத்தையும் வகுத்துக் கொள். உன்னை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்.”

கடிதம் எழுதியபின் மூன்று மாதங்களுக்குள் என்னன்னவோ நடந்து விட்டது. அவன் மலேசியா சிறைச்சாலையில் இருக்கிற விஷயம் வந்து சேரவே காலம் பிடித்தது. உயிருடன் இருக்கிறான் என்பது தெரிந்த போது பெருமூச்சு விட்டுக் கொண்டனர்.

சாவுக்கு கட்டும் சப்பரத்தை மங்கலமாக இருக்கட்டும் என்று தேர் என்று சொல்வார்கள். பிளாஸ்டிக் கழிவுகளால் ஆன அந்தத் தேரை குப்பையில் போட்டார்கள். சப்பரமோ தேரோ மண்ணாகும். இந்தப் பிளாஸ்டி பொருட்கள் மண்ணாகாதே. நினைவுகளும் மக்காமல் வாழ்க்கை முழுக்க நிற்கும்.

அப்பாசாமிக்கு கிராமத்து தேர் மிகவும் பிடிக்கும் வெவ்வேறு படிகளாக அது உயர்ந்து கூம்பாவதை அதிசயமாகப் பார்த்துக் கொண்டிருப்பார். யாளிகளும் அவற்றின் வாயிலிருந்து தொங்கும் விளக்குகளும் வெளிச்சம் பரப்பி எரிவதைப் போலிருக்கும். நடனமாடும், அபிநயக்கும் தேவர்கள் சின்ன உருவங்களாய் நேர்த்தியாக இருக்கும். அவற்றின் இடையில் ஒளிந்திருக்கும் இருட்டு அவரை பயமுறுத்திக் கொண்டே இருக்கும். பெரிய கற்களை முட்டுக் கொடுத்து தேர் நிலையில் அழுக்கடைந்து கிடப்பதைப் பார்க்க சங்கடமாக இருக்கும். சீக்கிரம் அழுக்கு பரவிவிடும். தேர்த்திருவிழா சமயங்களில் நேர்ச்சைக்காக தேரின் அடியில் மஞ்சள் துணியை ஒற்றை ரூபாய் காணிக்கையோடு சேர்த்து சிலர் கட்டுவார்கள். அப்பாசாமி காணிக்கை பொட்டலம் கட்டி பல வருடங்கள் ஆகிவிட்டன. இவ்வருடம் திருச்செல்வத்தை அழைத்துக் கொண்டு போய் காணிக்கை பொட்டலம் கட்ட நினைத்திருந்தார்.

“காணிக்கை பொட்டலம் கட்டலாம். மொட்டை கூட அடிக்கலாம். வூட்ல இருக்கறவங்க ஒரு ஆள் விடாமெ மொட்டை அடிக்கலாம். குலதெய்வம் கோவிலுக்கு கண்டிப்பாக கூட்டிக்கொண்டு போகணும் எப்படியிருந்தாலும் அவன் திரும்பி வரணும்” முன்பெல்லாம் இப்படித்தான் பிரார்த்தனை அவரின் மனதிற்குள் ஓடிக் கொண்டிருக்கும். இப்போதெல்லாம் பிரார்த்தனை மெல்ல மறைந்து போய் கேவலாய் அழுகைதான் முன் நிற்பது அவருக்கே அருவருப்பைத் தந்தது.

மனுநாள் என்பதால் பரபரப்பாய் மக்கள் அலைந்து கொண்டிருப்பதாய் பட்டது. முகப்பிலிருந்து உள்நோக்கும் பாதையில் கசகசவென்று நின்று கொண்டிருந்தவர்களிடம் பரபரப்பு இருந்தது. அவசர கதியில் யாரையாவது இடித்துத் தள்ளி சங்கடப்படுத்திக் கொள்ள கூடாது என்ற நினைப்பு வந்தது. மனு கொடுக்கிற நாளில் எந்த சங்கடமும் வந்துவிடக் கூடாது. அது மனுவைக் கூட பாதித்துவிடும். மனுவின் கோரிக்கையைக் கூடப் பின் தள்ளிவிடும் என்று நினைத்ததை எண்ணி லேசாகப் புன்னகைத்துக் கொண்டார்.

மாடிப்படியிலிருந்து வரிசை ஆரம்பித்தது. இப்போதே ஐம்பது பேருக்கு மேல் நின்றிருந்தனர். இன்னும் நாலைந்து பேர் நின்றால் கட்டிடத்தின் உள் நிழலில் இருந்து தப்பித்து வெளியே போய்தான் நிற்க வேண்டியிருக்கும். அந்த ஐம்பது பேரில் ஒருவராக வந்து விட்டது குறித்த ஆறுதல் இருந்தது. அப்பாசாமி ஒரு நாள் கிளம்பும்போது திருச்செல்வத்தின் ஜாதகத்தை எடுத்து வைத்திருந்தார். இன்னும் மஞ்சளாய் மின்னியது. ஓலைச் சுவட்டின் கீறல் போல் அதன் எழுத்து ஜாதகத்தாளை மீறிக் கொண்டுத் தெரிந்தது. அந்த ஒளியில் மகனின் எல்லாத் துயரங்களும் தொலைந்து போவதாய் நினைத்தார்.

“இதை எதுக்கு எடுத்துட்டு” என்றாள் மனைவி. அவள் திருச்செல்வத்தின் நிலைமை எண்ணி திடுமென படுக்கையிலிருந்து எழுந்து தேம்பி அழுது ஓய்ந்துவிட்டவள். கண் முன்னால தொலைஞ்சு போயிருந்தா கூட பரவாயில்லே என்பாள். விமானம் ஏறி மேகத்துள் நுழைந்து தவறி விட்டவன் போலாகிவிட்டான் என்பாள்.

“இதை எதுக்கு எடுத்துட்டு”

“ஒரு பார்வை பார்த்தல்லாம்”

“அவன் பிளைட் ஏறும்போது பாத்ததுதானே”

“பாத்ததுதா”

“அப்ப இல்லாதது இப்ப என்ன வரப் போகுது.”

“மனசு ஆறுதலாச்சும் இருக்குமே. அவன் தலையெழுத்து என்னன்னு பாக்கலாம். பெருமாள் கோயில்லே ஒரு அர்ச்சனையும்.”

“அர்ச்சனையும் பொய். பூசாரி வாக்கும் முழுப்பொய் ஆசாரி வாக்கு அரைப் பொய் மாதிரி அது முழுப்பொய்தா. நம்மளெ நாமளே ஏமாத்திக்கறதுதா எல்லாமே பொய். அவன் தலை எழுத்து மட்டும் உண்மை”

அவள் தழதழத்த குரலில் சொல்லி அழுதாள். பெரிய மகன் நம்பிக்கையோடுதான் இருந்தான். திருமணம் என்று வந்தபின் மாறிப்போய் விட்டான். அவனுக்கு அப்பாசாமி ரேஷன் கடைக்குப் போய் வருவது பிடிக்காது. “இந்த ரேஷன் அரிசி தின்ன உங்க காலத்தெ மறந்துட்டு நல்லதா சாப்புடுங்க. இது வேண்டாம்” என்று எரிச்சல்படுவான். அவன் விட்டுப் போனபின்பு அவர்களால் ரேஷன் அரிசிதான் குடும்பத்திற்கென்றானது. இளைய மகன் எப்படியோ சம்பாதித்து அதே வார்த்தைகளைச் சொல்லுவான் என்பது அப்பாசாமி மனதில் இருந்தது. மனது மட்டும் அலைபாய்ந்து உண்மைகளைப் பரபரத்துச் சொல்லிக் கொண்டிருந்தது.

இதுவும் ஒரு வகை நாடு கடத்தலா. அவனே தன்னை கடத்திக் கொண்டு போய் அங்கு உட்கார்ந்து கொண்டான். அல்லது இது தீவுக்கடத்தலா. ஏதாவது ஒரு தீவில் கொண்டு போய் விட்டு விட்டது போலிருந்தது. மலேசியா ஒரு தீவுதானா. கடலால் சூழப்பட்ட எல்லா நாடுகளும் தீவு என்றுதான் நினைப்பார்.. தேயிலைத்தோட்டம், ரப்பர் தோட்டம் போட தீவுகளுக்கு பொய் சொல்லி கடத்திக் கொண்டு போயிருக்கிறார்கள். தொழு நோய் போன்று பெரு வியாதிக்கார்ர்களுகென்றும், சிறைக்கைதிகளுக்கென்று தீவுகள் இருந்திருக்கின்றன. விமானத்தில் பயணம் போய் காணாமல் போனவர்களைப் பற்றி யோசிக்க ஆரம்பித்தார். காணாமல் போனவர்களில் இதுவும் ஒரு வகை என்ற எண்ணம் வந்தது.திருச்செல்வனும் ஒருவன்.

எண்ணங்களை வைத்து நாட்களைக் கடத்துவது அலுப்பானதாக இல்லை அவருக்கு.

எண்ணங்கள் தேர் போல் ஆடி அசைந்து கொண்டிருந்தன அவருள். 

தொடர்புடைய சிறுகதைகள்
செல்லம்மாளுக்கு இரை கிடைத்து விட்ட மாதிரித்தான் தோன்றியது. முகத்தில் ஒரு வார தாடியுடன் தலையைக் குனிந்த படியே அவன் வாசலில் நுழைய முற்பட்டான். கையில் ஒரு பிரபலத் துணிக்டையின் இலவசப் பை இருந்தது. அதில் துருத்திக் கொண்டு சட்டையொன்று தெரிந்தது. “ என்ன ...
மேலும் கதையை படிக்க...
சந்தானலட்சுமிக்கு தினசரிகளில் தங்கத்தின் விலை நிலவரம் பற்றிப் பார்ப்பது சமீபத்திய பழக்கமாகி விட்டது. அது எப்போது ஆரம்பித்தது  எனபது ஞாபகமில்லை.இரண்டு வருடங்களுக்குள்தான் இருக்கவேண்டும். கைக்கெட்டா தூரத்தில் பறந்து கொண்டிருந்ததிலுருந்துதான் என்பது ஞாபகம்.சென்னை விலை, உள்ளூர் நிலவரம், டாலர் மதிப்பு எல்லாம் அத்துப்படி. ...
மேலும் கதையை படிக்க...
" இந்தக் கக்கூஸ’லேயே குடியிருக்கலாம் போல இருக்கு "என்றாள் மாதவி. கழிப்பறையின் பளபளப்பு அவளின் முகத்தில் மினுமினுத்துக் கொண்டிருந்தது. பிரகாசத்தை கழிப்பறையின் உட்சுவர்கள் பிரதிபலித்துக் கொண்டிருந்தன. ஒரு வகை பளபளப்பு இப்போதுதான் பளிங்குக் கற்களை பதித்துவிட்டு நகர்ந்து விட்டிருப்பதுபோல தோன்றச் செய்தது. ...
மேலும் கதையை படிக்க...
இங்குதான் இருந்தது கடல். கடல் தண்ணீரில் கரைந்த நம் நிர்வாண பிம்பங்களை உண்ட கடல் மீன்களுக்குப் பித்தேறின. அலைகள் கரையைத் தொட்டு விலகும்போது நமது உடல்களின் உவர்ப்பில் கொஞ்சம் உப்பு கூடிவிடுகிறது. அதே கடலருகில் சூரியனின் ஆயிரம் ஆயிரம் கரங்கள் நம் வேட்கையின் சுவர்களில் நிறங்களைப் பூசியதைக் கண்டோம். கடற்கரையின் தீராத மணல் வெளி நமது தீராத விருப்பங்களை எவ்வளவு குடித்த பிறகும் சுவடற்று இருந்தது. கடலின் ...
மேலும் கதையை படிக்க...
“இந்த உலகத்திலே மொதல்ல மனுசங்க மட்டுந்தா இருந்திருக்காங்க” “என்ன கதையா” “சின்னக் கதையா“ “குட்டிக் கதையா“ “குட்டிகளைப் பத்தின கதையல்ல........சொல்லட்டுமா” “சொல்லுங்க..குட்டிகளனு யாரும் வந்திடக்கூடாது” “இந்த உலகத்திலே மொதல்ல மனுசங்க மட்டுந்தா இருந்திருக்காங்க. எல்லாருக்கும் ரொம்பவும் போர் அடிச்சுப் போச்சு. மனுசங்க மூஞ்சிய மனுசங்களே எத்தனை நாளைக்குப் பார்க்கிறது? வேற ...
மேலும் கதையை படிக்க...
பத்திரம்
தங்கமே தங்கம்
கழிப்பறை
பேரிரைச்சல்
தாண்டுதல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)