தேசம்

 

வெளியே பலத்த மழை!

வடக்கிலிருந்து தெற்காக சாய்வாக விழுகிறது சாரல். இரைதேடி இடுக்குகளில் புகும் நாகம்போல் கடைக்குள்ளே சரசரவென பரவுகிறது ஈரம். தண்ணீர் தொடாத இடமாகப் பார்த்து பசங்க ஆளுக்கு ஒரு பக்கமாக ஒதுங்கியிருக்கிறார்கள்.

பொழுதென்னவோ பிற்பகல்தான். ஆனால் அதனை சிரமப்பட்டுதான் நம்பவேண்டும். அத்தனை ஆக்ரோஷமாக இருட்டியிருக்கிறது. வானம் வெளுத்து, மழை மட்டுப்பட்ட பிறகுதான் வேலையைத் தொடர முடியும்.

கட்டிங் மெஷினில் பாதி வெட்டுப்பட்ட நிலையில் காத்திருக்கிறது பட்டி எனப்படும் இரும்புத் தகடு. மிச்சத்தையும் வெட்டினால் மினிடோர் வண்டியில் ஏற்றி அய்யப்பன் கம்பெனிக்கு அனுப்பிவிடலாம். கூடவே கோபி கம்பெனிக்கு ஐம்பது லாக்செட் எடுத்துப் போக வேண்டும். அதை எண்ணி கவரில் போட்டு வைக்கும் வேலையை இப்போது பார்க்கலாம்தான். ஆனால், குளிர் மழையை ரசித்திருக்கும் பையன்களின் ஓய்வை பறித்து வேலை வாங்க மனது வரவில்லை. ‘எப்படியும் அவங்கதான் செய்யப் போறாங்க. அதை மொத்தமா அப்புறமாத்தான் செய்யட்டுமே’ என்று நினைத்தபடியே நிமிர்ந்தேன்.

‘கடமையை செய். பலனை எதிர்பார்க்காதே’ கீதோபதேச கிருஷ்ணன் சாரதியாகி அர்ஜுனனை சுமக்கும் காட்சி சுமந்த காலண்டர், காற்றுப் பட்டு படபடத்தது. எனக்கு ஜமால் நினைவு வந்தது. பலனை பெரிதுபடுத்தாமல் வஞ்சகமில்லாமல் கடமையைச் செய்யும் உழைப்பாளி. இப்போது இங்கிருந்திருந்தால் அத்தனைபேருக்கும் மத்தியில் அவன் மட்டும் தனித்து துறுதுறுவென எதையாவது உருட்டிக் கொண்டிருப்பான். ஓய்வை கெட்ட வார்த்தையாக நினைக்கும் வேலைக்காரன். அர்ஜுனன் இடத்தில் ஒரு முறையும், கிருஷ்ணன் வடிவில் மறுமுறையுமாக ஜமாலை பொறுத்திப் பார்த்தேன். ‘சிவாஜி மாதிரி பயல் ரெண்டு வேஷத்துக்கும் அம்சமா பொருந்திப் போறானே’ சன்னமாக சிரிப்பு வந்தது.

எங்கேயும் எப்போதும் ’லொட் லொட்’டென ஒரு இரும்பாவது அடிபட்டுக்கொண்டோ ’உர்ர்ர்ர்ர்ரும்’ என்று அறுபட்டு, அரைபட்டுக்கொண்டோ இருக்கும் கிண்டி இரும்புச்சந்தையின் இரண்டாவது சந்தில் இருக்கிறது எங்களின் கடை, கம்பெனி என்றும் சொல்லலாம். கடைகளுக்கு ’ரோலிங் ஷட்டர்’ கதவு செய்யத் தேவையான மூலபொருட்கள் அனைத்தையும் மொத்த, சில்லறை விலைக்கு விற்கும் இந்தக் கடையை துவங்கி இதோ வருகிற விஜயதசமி வந்தால் பத்து வருடம் முடியப்போகிறது.

சிறிதோ பெரிதோ தொழிலாளிகளை நம்பியிருக்கும் எந்த ஒரு நிறுவனத்துக்கும் கிடைக்கின்ற வேலையாட்களைப் பொருத்ததே அதன் வரமும் சாபமும். என் கடை வரம் வாங்கியிருந்தது. வேலைத்திறன் முன்னே பின்னே இருந்தாலும் கெட்ட பழக்கங்கள் கிட்டே நெருங்காத முத்துக்கள் எனக்கு வாய்த்த வேலையாட்கள் அத்தனைபேரும். அதில் ஜமால் வைரம்.

காற்றில் அனல் தெறித்த ஒரு நாளில்தான் ஜமால் இங்கு வந்தான்.

மங்கிய மஞ்சள் நிற சட்டையும் மடித்துக் கட்டிய லுங்கியுமாக, வெயிலில் நனைந்து வெளிச்சத்திற்குக் கூசி, கண்களை குறுக்கிக்கொண்டு வாசலருகே நின்றான்.

‘’வேலைக்கு ஆளு வேணுமிண்டீகளாம். பாய் கடைல சொன்னாவ. அதான் (வி)சாரிக்கலாமிண்டு வந்தேன். எம்பேரு ஜமால். திருநவேலி அம்பாசமுத்திரம் ஊரு. வாப்பாட்ட கோச்சுட்டு வந்துட்டேன். இங்கன சித்தி வீட்டுல தங்கியிருக்கேன். ஒரு வாரம் ஆயிட்டு. வேலை ஏதும் சிக்க மாட்டேங்கு. காரு, ஆட்டோண்டு வண்டி வாசி ஓட்டுவேன். பொறவு சொல்லிக்கறாப்பல வேறொன்னும் இல்லைல்லா. அதப் பத்தி பயப்படாண்டாம். இரும்பு பொழப்புதான. கண்ணு பாத்தா கை தானா செய்யப்போவுது… சம்பட்டி சாத்தறதுண்டாலும் சரிதேன். சலிக்காம செய்யுதேன். வேலை கொடுத்துப் பாருங்க. புடிச்சா வெச்சிக்கிருக. இல்லாட்டா வெரட்டப் போறீரு. இதுல நட்டம் ஒண்டுமில்லைலா.. வேலை தாரியளா?’’ மூச்சு விடாமல் சொல்லி முடித்தான்.

சிபாரிசு தேடாமல், நேராக வந்து நின்ற அவன் துணிவும், குரலில் குழைவு நெளிவு இல்லாமல் கொஞ்சம் கெத்தாகவே கேட்ட விதமும் எனக்கு பிடித்துப்போனது. கூடவே வார்த்தைக்கு வார்த்தை அள்ளித் தெறித்த ‘லல்லல்லா’வும். அப்போதே வேலையில் சேர்க்கப்பட்டான். அந்தச் செயல் என் கடைக்கு நான் சேர்த்துக்கொண்ட கவுரவம் என்பதை அதன்பின் வந்த ஒவ்வொரு நாட்களும் சொல்லிச் சென்றன.

நான்கு ஆட்களுக்கு இணையான வேலையாள் அவன். கடை திறக்க நான் போய் இறங்கும்போது வாசலில் காத்துக் கிடப்பான். ஒருநாளும் எனக்குப் பிந்தி அவன் வந்ததில்லை. கடைப்பசங்க எட்டுப் பேர். அதில் கடைசியாக வந்து சேர்ந்தவன் ஜமால் என்றாலும், இரும்புகளை ஏற்றிச் செல்லும் ஆட்டோ, வேன்களை ஓட்டவும் தெரிந்திருந்ததால் ஜமாலுக்குத்தான் சம்பளம் ஜாஸ்தி. அந்த வகையில் அவன் அவர்களுக்கும் மேலே. ஆனாலும் அப்படியொரு மிதப்பு அவனிடமில்லை. கடை திறந்து, பெருக்கித் தெளித்து, தர்ஹா படமில்லாத எங்கள் கடையில் பெருமாள் படத்துக்கு பூ போட்டு, ஊதுபத்தி வாசனையை அறை முழுக்க பரவவிடுவதை விரும்பிச் செய்தான்.

அவன் வாப்பாவைப் பொருத்த வரை அவன் அடங்காப் பிள்ளை. அதட்டலுக்கு பணியும் குணம் அவனுக்கு இல்லை. அவனை அதட்டும் சந்தர்ப்பம் எனக்கு வாய்க்கவே இல்லை. முதலில் பார்க்கும் யாரையும் அவன் தோற்றமும் தோரணையும் மிரட்டும். பழகிப் பார்த்தால், அவன் வளர்ந்த குழந்தை என்பது புரியும். அனைவரிடமும் மனம் திறந்து வெளுப்பாய் சிரித்து சிநேகம் வளர்க்கும் கலை அவனுக்கு பிறப்பிலேயே வசப்பட்டிருந்தது.

‘‘ரொம்ப அவசரம்ணே. அந்த சேட்டு கடையில சாயந்தரத்துக்குள்ள ஷட்டரை மாட்டி கையில காசு வாங்கியாகணும். மடமடன்னு சரக்கை வண்டில ஏத்துங்க’’ என்று பரக்க பரக்க வரும் ராஜேந்திரன்கூட ஜமாலைப் பார்த்துவிட்டால் பத்து நிமிடம் நின்று பேசிய பிறகே அளவு சொல்ல ஆரம்பிப்பான். எனக்கு பதினைந்து வருட பழக்கமான பிரேம்கூட, ‘ஜமால் இருக்கானா?’ என விசாரித்து, அவன் இருந்தால் விரும்பி வருவதை எந்தக் கணக்கில் சேர்க்க! ஜமாலின் குண வசீகரம் கடைக்கு பெரிய பலம்.

அதுவரை கடை பெயரையோ என் பெயரையோ சொல்லி சுட்டிக்காட்டப்பட்ட எங்கள் கடை வெகு சீக்கிரமாகவே ’ஜமால் கடை’ என்றானது. எப்போதாவது வரும் வாடிக்கையாளர்கள்கூட அவனுக்காக அடிக்கடி வந்தார்கள். சும்மா விலை விசாரிக்க வந்தவர்கள்கூட வாடிக்கையாளரானார்கள். அவன் அணுகுமுறை அதை சாத்தியப்படுத்தியது. முதலாளிக்கு தொழிலாளி இதைவிடப் பெரிதாக என்ன செய்துவிட முடியும்?! அவன் மீது என் பற்றும் பாசமும் கூடியது. அவன் என்மீது வைத்திருந்த அன்பின்முன் அது ஒருநாள் தோற்றுப் போனது.

சாத்தப்பனோடு பல வருடங்களாக கொடுக்கல் வாங்கல் நடக்கிறது. ஐயாயிரத்துக்கு சரக்கு வாங்கிவிட்டு அதை வசூலிக்க ஆறு மாதம் அலைய வைக்கிற ஆள். இப்படி இழுத்தடிக்கும் வியாபாரத்தில் வட்டிக் கணக்குப் போட்டுப் பார்த்தால் நஷ்டக்கணக்குதான் மிஞ்சும். வியாபாரத்தில் அப்படி துல்லிய கணக்கு உதவாது என்பதால் இப்படியான ஆட்களையும் அனுசரித்துதான் செல்ல வேண்டியிருக்கிறது. விட்டுப் பிடிப்பதும் ஒருவகை வியாபார நுணுக்கம்தான். அப்படி அனுசரித்தும் பயனில்லாமல் போனது சாத்தப்பனிடம். என்னிடம் பாக்கி வைத்துவிட்டு வேறு கடையில் ரொக்கம் கொடுத்து சரக்கு எடுத்திருக்கிறான். அதைக் கேட்டபோது, நக்கல் தூக்கலாக ஒரு பதில் வந்தது. கோபத்தை அடக்கி, பின்னால் புலம்பினேன்.

என் வருத்தத்தைப் பார்த்த ஜமால், ‘ரெண்டுல ஒண்ணு பார்த்துடனும்லா, விடுங்க சொல்றேன்’’ என்று எகிறிக் குதித்தபோதுதான் அவனது விஸ்வரூபம் தெரிந்தது.

‘’தகறாரு ஒரு பெரிய காரியமில்ல. ஆனா, வாய்மொழி விளம்பரம்தான் நமக்கெல்லாம் வாடிக்கையாளுங்களை கூட்டிட்டு வரும். வர்றவன் வெளிய போய் நாலு வார்த்தை நல்லவிதமா சொன்னாத்தான் இன்னும் பத்துப்பேர் தேடி வருவாங்க. அப்படி தூக்கி சொல்லாட்டியும் பரவாயில்ல. மோசம்னு பேசக்கூடாதில்ல. வம்புனு போயிட்டா பணத்த வசூல் பண்ணிரலாம். ஆனா அவன் சும்மா இருப்பானா? வெளிய வலியப் போய் நம்மள மோசமா பேசுவான். அது தன்னால பரவும். அதனால பாதிப்பு நமக்குத்தான். விடு. எங்க போயிடப்போறான்? வருவான். நேர்மையா உழைச்சு சம்பாதிக்கற காசு எங்கயும் போகாது. பொறுமையா இரு.’’ அவனை சமாளித்து சாந்தப்படுத்துவதற்குள் என்பாடு பெரும்பாடு ஆனது. என்மீது ஒரு சொல் விழவோ, என் மனதில் சிறு கல் அளவு பாரம் விழவோ பொறுக்காத பாசக்காரன்.

இரும்புச் சந்தையில் டன் கணக்கில் சரக்குகள் இறக்குவதும் ஏற்றுவதும் சர்வசாதாரணம். அப்படி பாரம் சுமக்க பெரும்பாலும் நம்மூர் ஆட்கள் முன்வருவதில்லை. உடல் நோகுமே என்ற தயக்கமா இல்லை, அவ்வளவு பலம் உடலில் இல்லையா? தெரியவில்லை. அதற்கேற்ற மாதிரி பீகார்கார கூலிவாலாக்கள் கிடைத்தார்கள். அத்தனை பாரத்தை சளைக்காமல் சுமக்க அவர்களால்தான் முடியும். அந்தளவுக்கு கூலியும் அதிகம். இரண்டு ஆள் வேலையை ஒருவரும், இரண்டு நாள் வேலையை ஒரு நாளிலும் செய்ய அவர்களால் முடிந்தது. கிண்டியில் நிரந்தர கூடாரம் அமைத்து, பை நிறைய பணம் பார்க்கும் அளவுக்கு இரும்புச் சந்தையில் அவர்களுக்கு வேலை இருந்தது. ஜமால் வரும்வரை நானும் அவர்களைத்தான் தேடுவேன். அவன் வருகைக்குப் பிறகு எல்லோருமே எனக்கு மறந்து போனார்கள். அத்தனைபேர் வேலையை ஒத்தை ஆளாக நேர் செய்தான். கூலிகளின் கோபமும், சக கடையாளிகளின் பொறாமையும் ஜமால்மேல் விழுந்தது. எனக்கோ பெருமையாக இருந்தது.

‘ஜமாலப்போல ஒரு ஆள் கெடச்சா எங்கடைய ஒப்படைச்சுட்டு நான் திருச்சில இன்னொரு கடை போட கெளம்பிருவேன்.’ எனக்கு சரக்கு சப்ளை செய்யும் கதிரேசன் என்னிடமே இதை அடிக்கடி சொன்னபோது பயம் வந்தது. அந்த பயம்தான் வெள்ளி, செவ்வாய், அமாவாசைகளில் கடைக்கு திருஷ்டி பூசணி சுற்றும்போது பசங்களுக்கும் சேர்த்து சுற்றச் செய்தது. அப்படிச் சுற்றியதே கண் பட்டுவிட்டதோ என்னவோ?

ஜமாலின் வாப்பா வடிவில் விதி வந்தது.

‘’ஜமாலை துபாய்க்கு அனுப்பலாமிண்டிருக்கேன். பாஸ்போர்ட், விசால்லாம் தயாராயிட்டு. ரெண்டு வருஷம் அங்க வேலை பாத்தாண்டாண்னா கெடைக்கற காசுல ஊருல ஒரு வீடு கட்டி முடிச்சிரலாம்.’’ ஜமாலின் வாப்பா ராவுத்தர் சொல்லக் கேட்ட நொடியில் நான் அதிர்ந்தது இப்போதும் துல்லியமாக நினைவிருக்கிறது.

நாடு தாண்ட ஜமாலுக்கு விருப்பமில்லை. வாப்பாவின் நச்சரிப்பு பொறுக்காமல்தான் ஊரைவிட்டு ஓடி வந்திருக்கிறான். அப்படியும் விடாமல் துரத்தி வந்துவிட்டார்.

நான், ‘சம்பளத்தை வேணும்னாலும் கொஞ்சம் கூட்டித்தர்றேன். அவன் இங்கயே இருக்கட்டும்’ என்றதும் எடுபடவில்லை.

‘’என்ன ஆனாலும் துபாய் காசுக்கு தக்க இங்கன கெடைக்குமா? அதும் மதிப்பே தனில்லா.. அங்கயும் டிரைவர் வேலதேன். அந்த வீட்டுக்காரவுக நல்ல பணக்காரவுக. கை கொள்ளா காசு கொடுப்பாக. வீடெல்லாம் ஏசிதேன். பாத்ரூமுக்குள்ளகூட ஏசி இருக்கும்னா பாத்துக்கிடுங்க. நெதைக்கும் நல்ல சாப்பாடு. மூணு வேளையும் கவுச்சிதேன். ஒட்டகக் கறியெல்லாம் இங்கனக்குள்ள கெடைக்குமா? அங்க அதாம்லே தெனைக்கும். ரெண்டே வருஷம். போனமா காசு சேத்தமாண்டு வந்துரலாம். போகலைண்டா போட்ட காசு சேதாரம்ல.’’ தகப்பனின் தொடர் கெஞ்சல், கொஞ்சம் கொஞ்சமாக மாறி, ’நீ போகாட்டா அடுப்பு எண்ணெயை தலைல ஊத்திட்டு உசிர கொளுத்திக்கிடுவேன்’ என்று மிரட்டல் வன்முறையாக எல்லை கடந்தபோது மாற்று வழி தெரியாமல் துபாய் செல்ல சம்மதித்தான் ஜமால்.

கையோடு கிளம்பச் சொன்னார் ராவுத்தர். கண்ணும் மனதும் கலங்கிப் போனான் ஜமால்.

‘சரி விடு. ரெண்டு வருஷம் ரெண்டு நிமிஷமா ஓடிப் போயிடும்.’ – அவனை ஆறுதல் படுத்த நான் சொன்னது. அது பொய்யென அடுத்து வந்த ஒவ்வொரு நாளும் சொன்னது. அவன் இல்லாத கடைப்பொழுதுகள் மிக மெதுவாகத்தான் நகர்ந்தன. அவன் போன கையோடு கடையும் களையிழந்துபோனது. ‘போறேன்’ என்றவன் போனபிறகு ஒரு முறைகூட போனிலோ, கடிதத்திலோ தொடர்புகொள்ளவில்லை. ஆனாலும், ஆறுதலான அம்சம், அவன் இல்லாத நாட்களிலும் கடையில் அவன்தான் ஹீரோ. ஜமால் பற்றிய நினைவுகளும் பேச்சுக்களுமாக கரைகிறது காலம்.

அவன் நினைவு நின்றது. மழையும்.

இரு வருடங்கள் முற்றுப் பெற்றன.

ஜமால் வரவில்லை. சில நாட்களுக்குப் பிறகு அவன் வாப்பா வந்தார். இருண்டு, தளர்ந்துகிடந்த அவர் தோற்றம் எனக்குள் அச்சப் பந்தை உருட்டியது. ஜமாலின் நலம் விசாரித்தேன். அவர் வார்த்தைகளை விடுவிக்கும் முன் கண்ணீர் தெறித்தன. குலுங்கி குலுங்கி அழுதவர், கண்ணீர் வற்றிய சில நிமிடங்களுக்குப் பின் சொன்னார்…

‘‘அந்தக் கொடுமைய ஏன் கேக்கறீய ஐயா? புள்ளைய இங்கனக்குள்ளயே விட்டிருக்கலாம். அம்சமா இருந்திருப்பான். ரெண்டு காசு கூடக் கெடைக்குமேண்டு அத்தன தொலவுக்கு அனுப்பி வெச்சேன். அதாண்யா நான் செஞ்ச குத்தம். அந்த ஈனப் பயலுவ வேலைண்ட பெயருல எம்மவன வங்கொடுமை பண்ணிப்பிட்டானுவய்யா. டிரைவர் வேலைண்டு வரச்சொல்லிபிட்டு ஒட்டகம் மேய்க்க விட்டிருக்கானுவ. அதுலயே எம்மவன் அரண்டு போனான். அந்தச் சோலியும் சுளுவில்ல. நேக்குப் போக்கா பண்ணனும். அதையெல்லாம் எம்மவன் கத்துக்குடிச்சுட்டா போனான்? ஒட்டகக் குட்டிக வழி தவறிப் போனா, இவனுக்கு வாரம் பத்து நாளுக்கு அன்னம் ஆகாரம் கொடுக்காம பட்டினி போட்டே கோவத்தை தனிச்சிருக்கானுவ பாவிப்பயலுவ. ஏன்னு கேட்டா அடிச்சுப் போட்டு ஒட்டகக் கொட்டகைலயே ஒரு ஓரத்துல எடங்கொடுத்து எம்மவன திங்க, தூங்க சொல்லியிருக்கானுவய்யா. துபாய் போயி மூத்திர நாத்தத்துக்குள்ள தூங்கப் பழகிட்டு வந்திருக்கான்யா எம்புள்ள.

நான் பாவிய்யா… நான் பாவி. நீ போகாட்டா நான் மேல போயிடுவேன்னு சொன்ன சொல்ல எம் புள்ளை நெஞ்சுக்குழிக்குள்ளயே வெச்சுகிட்டு, வெளிய சொல்லி என்னத்துக்கு ஆகப்போகுது? போட்ட மொதல எடுக்கமட்டுமாச்சும் பல்லக் கடிச்சுகிட்டு பொறுத்துகிடுவோம்னு ரெண்டு வருஷமா யாருகிட்டயும் ஒத்த சொல்லு பேசாம மனசுக்குள்ளயே கெடந்து மருகி மருகி சொல்லு மறந்து வந்திருக்குய்யா எம்புள்ள.” வாயைப் பொத்தி மீண்டும் உடல் குலுங்கினார் ராவுத்தர். அதிர்ச்சியில் எனக்கு பேச்சே வரவில்லை. நெஞ்சுக்குழிக்குள் கெதக் என்றானது. இதயமே வெடித்துவிடும் நிலைக்கு போகும்போது கண்கள் எம்மாத்திரம்? கலங்கிக் கொட்டிவிட்டன.

’’அடப்பாவிகளா? வெளிநாடு வெளிநாடுன்னு ஏய்யா வீணாப் போறீங்க? உள்ளுர்ல ஆள் அம்படாம அடுத்த தேசத்துலேர்ந்து ஒருத்தன கூப்பிடறான்னா, வெச்சுத் தாங்கவா போறான்? வேலைக்கு கூப்பிடறவன் விருந்தாளியாவா நடத்துவான்? தமிழன்னா கர்நாடகத்துல மதிப்பில்லை. ஆந்திரால பிறந்தா கேரளால இளப்பம். ஒரு நாட்டுக்குள்ளயே இந்த லட்சணம். அடுத்த தேசத்துக்கு கையேந்தி போனா அவன் வெக்கறதுதான் சட்டம். அவன் காலால இட்ட வேலைய நாம தலையால செஞ்சு முடிக்கணும்னுதான்யா எதிர்பார்ப்பான். அத ஏன்யா யோசிக்க மாட்டேங்கறீங்க?

படிப்புல கெட்டிக்காரனா இருந்து மூளை பலத்தோட நாலு ஆளுக்கு மேல ஆளா கவுரவ பதவி கெடச்சுப் போறது வேற
விஷயம். அப்பவும் அதுக்குப் பேரு பொழப்புதான். வாழ்க்கையில்லை. நாம வாழப் பொறந்தமா? பொழைக்கப் பொறந்தமா?

நாம வேலை கேட்டு வெளிநாடு போற நெலமையயெல்லாம் தாண்டி ரொம்ப காலமாச்சு. சுத்திப் பாரு, இங்க இப்ப வேலைக்கும் பஞ்சமில்லை. கவுரவமான சம்பளத்துக்கும் பஞ்சமில்லை. இல்ல, இன்னும் கூடுதலா எனக்கு பணம் வேணும்னு நெனச்சா அதுக்கான வாய்ப்புகளுக்கும் பஞ்சமில்ல. உழைக்க தயாரா இருந்தாப் போதும், குடும்பம் குழந்தைகளோட நம்ம சனத்தோட நம்ம ஊருல பொழச்சு வாழலாம்.

ஆயிரம் காரணம் சொன்னாலும் சரி, காசு தேடி அடுத்த மண்ண மிதிக்கற அத்தன பேரும் அகதிதான்யா. தன் மொழி பேச, கூட ஒரு ஜீவன்கூட இல்லாத இடத்துக்கு அவன அகதியா அனுப்பி வெச்ச உன் கொடுமைக்கு முன்னால, அவன் ஒட்டகம் மேச்சது எனக்கு பெருசா தெரியல போய்யா.. ’’ ஆற்றாமையும் ஆத்திரமுமாக நான் கத்தித் தீர்க்க, மறு பேச்சு இல்லாமல் தலையை குனிந்து கொண்டார் ராவுத்தர்.

’கூடுதல் கூலிக்கு ஆசைப்பட்டு தன்மானத்தை தாரை வார்க்க இன்னும் எத்தனை பேர் காத்துக் கிடக்கிறார்களோ கடவுளே…’ அவ்வளவு சொல்லியும் கேட்காமல், காசுக்கு ஆசைப்பட்டு பிள்ளையை தொலைத்துவிட்டு இப்போது அழும் ராவுத்தரை நாலு சாத்து சாத்தலாம்போல தோன்றியது.

அழுகை நின்று கொஞ்சம் ஆசுவாசப்பட்டதும் கேட்டார், ‘‘மவன இங்கனயே அனுப்பி வெக்கலாமுண்டு பாக்கேன். வேல கெடக்கா? சேர்த்துகிடுவீகளா?’’

‘‘உடனே அனுப்புங்க’’ என்று அனுப்பி வைத்தேன்.

ஜமால் வந்தான்.

அவன் நிலையறிந்து, தோற்றத்தை ஓரளவு யூகித்து வைத்திருந்தேன். ஆனால், அந்த கற்பனையை ஒன்றுமில்லாமல் செய்தது ’நிஜம்’. உருண்டு திரண்ட அந்த வாலிபன், ஆண்டுக்கணக்கில் நோயில் படுத்த கிழவன் போல சதை உருகிக் கிடந்தான். அந்த சோகத்தை பல மடங்காகப் பெருக்கியது அவனது குண மாற்றம்.

‘சந்தோஷத்தை சாறாப் பிழிஞ்சுட்டு, மிஞ்சுன சக்கைக்கு ஜமால்னு பேரை வெச்சு பூமிக்கு அனுப்பிருச்சோ சாமி’ அவனை தெரிந்த அத்தனை பேரும் சத்தியமாய் இப்படித்தான் சந்தேகப்பட்டார்கள்.

யாரை பார்த்தாலும் பயப்பட்டான். எப்போதும் ஒரு படபடப்பு. சின்னச் சத்தம் கேட்டாலும் அவன் உடல் முழுக்க ஒரு நடுக்கம் பரவுவதை வெறும் கண்களாலேயே பார்க்க முடிந்தது. அச்சத்தின் மொத்த வடிவாகியிருந்த ஜமாலை பார்க்க சகிக்கவில்லை. தட்டான்சிட்டு போல சுற்றிவந்த ஜீவனின் றெக்கையைப் பிய்த்து, அரை உசிராக அனுப்பிவைத்திருந்தது அவன் அப்பாவின் அயல்நாட்டு காசு மோகம்.

ஆறு மாதங்கள் ஓடிவிட்டது. ஜமாலின் நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை. சொல்வதை செய்வதும், வேலையற்ற பொழுதுகளில் நிலைகுத்திய விழிகளுமான அவன் வெறுமை பற்றிய சோகம் என் மனதை பாறாங்கல்லாக அழுத்த, அதை எடுத்து எறியும் வழி தேடித் திரிந்தேன்.

அவன் இழந்தது என்னவென புரிந்தது. அதை மீட்டெடுக்கும் வழி?

இடையறாத யோசனைக்குப் பின் ஒரு முடிவுக்கு வந்தேன்.

‘‘டேய் ஜமால் இங்க வா’’ கர்ஜனையாக வெளிப்பட்ட என் குரல் என்னையே கொஞ்சம் பயமுறுத்தியது. பசங்க என்னையும் பின் ஒருவரையொருவரும் கலவரத்தோடு பார்த்தனர். அதிகபட்ச அதிர்ச்சியோடு ஜமால் என் அருகே வந்தான்.

‘’இந்தா.’’ சில விசிட்டிங் கார்டுகளை அவன் முன்னால் விசிறியடித்தேன்.

‘’பைக் எடுத்துகிட்டு இந்த கம்பெனிக்கெல்லாம் போற. ஒவ்வொருத்தனும் கடைக்குத் தரவேண்டிய பணத்த தராம வருஷக் கணக்கா இழுத்தடிக்கறான். நானும், சரி விட்டுப் புடிப்போம். எங்க போயிடப் போறாங்கனு பார்த்தா, என்னை இளிச்சவாயன்னு நெனைக்கறாங்க. ஊருக்கெல்லாம் கடனக் கொடுத்துட்டு எப்ப வரும்னு தொண்ணாந்துட்டு இருக்கற இந்தப் பொழப்புக்கு பதிலா பேசாம கடைய முடிட்டு போயிரலாம். நீ என்ன செய்வியோ ஏது செய்வியோ எனக்குத் தெரியாது. அத்தனை பேருகிட்டயும் மொத்தப் பணத்தையும் வசூல் பண்றது உம் பொறுப்பு. இன்னும் ஒரு வாரத்துக்குள்ள பைசா பாக்கி இல்லாம மொத்த பணமும் வந்தாகணும். அதுவரைக்கும் நீ கடைக்கு வர வேண்டாம். வசூலை மட்டும் கவனி. நாளைக்குத் தர்றேன். பின்னாலயே வர்றேன் போன்னு எவன் என்ன சால்ஜாப்பு சொன்னாலும் காதுல வாங்காத.. மானங்கெட பேசுவியோ, இல்ல நாலு அப்புதான் அப்புவியோ.. என்ன வேணா பண்ணு. பணத்தோட வா. ……..ளி வர்றத நான் பாத்துக்கறேன்.’’ தொண்டை கட்ட கத்தி தீர்த்த என்னை திரும்பித் திரும்பி பார்த்தபடியே பைக்கை எடுத்துக்கொண்டு கிளம்பினான் ஜமால்.

அதன் பின் இரண்டு நாட்கள் அவன் கடைக்கு வரவில்லை. மூன்றாம் நாள் கோகுல் எண்டர்பிரைசஸ் நாகராஜிடமிருந்து போன்..

’’அண்ணே … நம்ம கடைப் பையன் இங்க வந்திருக்காப்டி. பேலன்ஸை மொத்தமா எடுத்து வெக்கச் சொல்லி ரொம்ப பேசறாருண்ணே. நான் சரக்கு எடுத்து ரொம்ப நாளாயிருச்சு. இன்னும் செட்டில்மெண்ட் பண்ணாதது தப்புதான். ஒத்துக்கறேன். மன்னிச்சுடுங்கண்ணே.. இப்ப கையில மொத்தமா இல்லை. முடிஞ்ச வரைக்கும் பெரட்டித் தர்றேன். மிச்சத்த ரெண்டு நாள்ல நானே உங்க கம்பெனிக்கு வந்து குடுத்துர்றேண்ணே. பையன கொஞ்சம் அமைதியா இருக்கச் சொல்லுங்கண்ணே. அக்கம் பக்கமெல்லாம் கூட்டம் கூடி அசிங்கமாயிருச்சு. தொழில் பண்ற இடம். கொஞ்சம் மனசு வைங்கண்ணே..’’ நாகராஜ் குரலின் நடுக்கம் அங்கே அரங்கேறிய ஜமாலின் ருத்ரதாண்டவத்தை என் கண்முன் நிறுத்தியது.

அடுத்தடுத்து தொலைபேசி அலறிக்கொண்டேயிருந்தது. அதன் ஒவ்வொரு அழைப்பிலும் ஜமால் பற்றிய பயமும், புகார்களுமே இருந்தன.

எதிர்பார்த்தது நடக்கிறது.

அடுத்தவன் தேசத்தில் அடிமேல் அடியாக பட்ட அவமானத் தீயை தனக்கு உரிமைப்பட்ட இடத்தில், நியாயமான விதத்தில் மொத்தமாக இறக்கி வைத்துவிட்டான் ஜமால். இது தன் தேசம், இங்கே தான் யாருக்கும் அடிமையில்லை என்பதை அவனுக்கு உணர்த்தியாயிற்று. அந்தப் புரிதல்தான் இன்று அவனை தன்னுள்ளிருந்த யானை பலத்தை மீட்டெடுக்க வைத்து, இயல்புக்கு திருப்பியிருக்கிறது.

என்ன ஒன்று, இந்தத் தேற்றலுக்கு நான் கொடுத்த விலைதான் சற்று அதிகம். பரவாயில்லை, வாடிக்கையாளர்களையும் வணிகத்தையும் பொறுமையாக மீட்டெடுக்கலாம். துடிப்பான இளைஞனின் வாழ்க்கையின் முன் இந்த இழப்புகள் பெரிதல்ல.

பழைய ஜமாலைப் மீட்டுவிட்ட மகிழ்ச்சியில் மனதிலிருந்த பாறை உருண்டோடியிருந்தது. 

தொடர்புடைய சிறுகதைகள்
பெரிய மனுஷி
சூரியன் பிடிக்குள் உலகம் கைமாற இன்னும் நேரம் இருக்க, இருளையும் குளிரையும் போர்த்திச் சுருண்டு கிடந்தது ஊர். ராக்கோழிகளின் ஒலியும் நின்று, தீராச் சீக்காழிகளும் ரணம் மறந்து கண் அசந்த இரண்டாம் ஜாமத்தில், இமைக்கவே கற்றுக்கொள்ளாதவளாக விழித்துக்கிடந்தாள் பவானி. விஷயம் வெளி வந்தால் ...
மேலும் கதையை படிக்க...
எப்போதும் விருப்பத்துக்குரியதாக இருப்பது சமயத்தில் அதிகபட்ச வெறுப்புக்கும் உள்ளாகும் இல்லையா. அப்படித்தான் எனக்குப் பிடித்த, நான் சார்ந்திருக்கும் உத்தியோகம் இந்த நிமிடம் எனக்குப் பிடிக்காமல் போனது. நான் ஒரு பத்திரிகை நிருபர். இது சங்கீத சீஸன். இசைப் பிரியர்களின் வார்த்தைகளில் 'டிசம்பர் சீஸன்'. ...
மேலும் கதையை படிக்க...
காற்று விசையிடமிருந்து நீர்க்குமிழியை பத்திரபடுத்துவதுபோல பிடித்திருந்தாள் காகிதக் கற்றையை. ‘கோவை தாலுகா வசுந்தராபுரம் நேரு நகரில் உள்ள மனை எண் இரண்டு’ - அடுத்து வரும் வரிகள், அவ்வளவு சுலபத்தில் விளங்காத அரசாங்க வார்த்தைகளாக நீண்டன. ஆனாலும் வாசித்து மகிழ்ந்தாள். அவள் ...
மேலும் கதையை படிக்க...
ஆத்தா
“நாடி விழுந்து நாளு நாலாச்சே.. இன்னமும் மூச்சு நிக்காம இழுத்துகிட்டிருக்கே.. ஏ ஆத்தா சிலம்பாயி.. எங்கைய்யா சாத்தையா.. என்ன கணக்கு வெச்சி இந்த சீவனை இழுத்துக்க பறிச்சுக்கனு விட்டிருக்கீகன்னு வெளங்கலையே..” - இன்னைக்கு பொழுது தாண்டாது என்று தான் குறித்துக் கொடுத்த கெடு ...
மேலும் கதையை படிக்க...
பெரிய மனுஷி
சுருதி பேதம்
வீடு
ஆத்தா

தேசம் மீது 2 கருத்துக்கள்

  1. manovasant says:

    வெளி நாட்டு மோகம் கொண்ட ஒவ்வொருவரும் படித்து தன்னிலை உணர வைக்கும் கதை. மிகவும் அருமை.

  2. R.KUMARAVEL says:

    அருமை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)