துளசி

 

இந்தப் பெண்ணைப் பார்த்தால் யாராலாவது மூளை சரியில்லாத பெண்ணென்று சொல்ல முடியுமா? அதிலும், காலை ஒரு ஒன்பது மணிக்கு மேல் தெருக்களில் அலைய ஆரம்பிக்கும் போது பளிச்சென்று குளித்து சுத்தமான பாவாடை தாவணியோடு கண்ணுக்கு இதமாகத்தான் இருக்கிறது. தெருத் தெருவாக சுற்ற ஆரம்பித்து விடுகிறாள். சில சமயம் ஏதாவது ஒரு வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்துகொண்டு மணிக் கணக்காகப் பாடிக் கொண்டே இருப்பாள். குரல் தேன்தான். சில சமயம் நடுத்தெருவில் உட்கார்ந்து கொண்டு தெரு மண்ணையெல்லாம் மடியில் போட்டுக் கொண்டிருப்பாள். குழிகள் பறித்து சிறு சிறு கற்களைப் பொறுக்கி பல்லாங்குழி ஆடக் கிளம்பி விடுவாள். எதிரே ஒரு பெண் அமர்ந்து இருப்பது போலவும், அவள் தப்பாட்டம் ஆடுவது போலவும் பாவித்து, ஏகமாக சண்டை போடுவாள். சில சமயம் அழுதல், சில சமயம் சிரித்தல், எங்காவது திண்ணையில் படுத்துத் தூங்குதல் என்று பொழுது போகும். மாநிறம்தான் என்றாலும் நல்ல அழகான தோற்றம். வயது பதினெட்டுக்குள்தான் இருக்கும்.

நான் அவளைக் கூப்பிட்டு பேச்சுக் கொடுத்துப் பார்ப்பேன். நன்றாகத் தெளிவாகப் பேசுவாள். தனக்கு தாய், தந்தை, அண்ணன் எல்லோரும் இருப்பதாக சொல்லியிருந்தாள். பக்கத்துத் தெருவில் அவள் வீடு இருப்பதாகவும் சொன்னாள். நான் அவளை ஒரு நாள் கேட்டேன். “ஏன் அம்மா, நீ இவ்வளவு தெளிவாகப் பேசுகிறாயே? பிறகு ஏன் கிறுக்குப் போல சுற்றிக் கொண்டிருக்கிறாய்?”

“எனக்கு அப்படி சுற்றினால்தான் நிம்மதியாக இருக்கிறது. என்னால் வீட்டில் இருக்கவோ, பள்ளிக்கூடம் போகவோ முடிவ தில்லை. இது தெரிந்துதான் அப்பா, அம்மா என்னை என் போக்கில் விட்டு விட்டார்கள்.”

நான் குடியிருந்த வீட்டுக்கு எதிர் புறத்தில் ஒரு கல்யாண மண்டபம் உண்டு. சிறிய மண்டபம். சாமானிய மனிதர்கள் அங்கு குறைந்த வாடகையில் கல்யாணம் போன்ற சுப காரியங்களை செய்து கொள்வார்கள். இந்த மாதிரியான ஒரு கல்யாண நாளில் அந்தப் பெண் மண்டபத்தின் வாசலில் போடப்பட்டிருந்த கோலத்தின் நடுவில் அமர்ந்து கொண்டு பாட்டுப் பாடிக்கொண்டிருந்தாள். உள்ளே மொய் எழுதுதல் நடந்து கொண்டிருந்ததால், சத்திரத்து வாசலில் யாரும் தென் படவில்லை. அந்த நேரத்தில், மண்டபத்தினுள் இருந்து ஒரு வாலிப் பையன் வெளியே வந்தான். பாடிக் கொண்டிருக்கும் பெண்ணைப் பார்த்ததும் அருகே சென்றான். நான் என் வீட்டு வாசலில் நின்றபடி கவனித்துக் கொண்டிருந்தேன். அவன் அந்தப் பெண்ணை நெருங்கினான். அவனது பார்வையிலிருந்த ஒரு மயக்கம் எனக்குக் கலவரத்தைக் கொடுத்தது. அந்தப் பெண் அவனை நிமிர்ந்து பார்த்தது. அவள் முகத்தில் ஒரு மருட்சி. சட்டென தன் கையை பாவாடைக்குள் விட்டு எடுத்தது. அதன் கை நிறைய மூத்திரம். பையன் முகத்தில் வீசி அடித்தது. சிட்டாய் பறந்து ஓடிப் போய் விட்டது. அந்தப் பையன் அறுவெறுப்போடு ‘தூ! தூ!’ என்று துப்பியபடி மண்டபத்துக்குள் போய் விட்டான். நான் பிரமிப்பில் கல்லாய் சமைந்து நின்றுவிட்டேன். அதன் பிறகு அந்தப் பெண் இந்தத் தெருப்பக்கமே வரவில்லை.

Image

அப்பெண் வருவது நின்றபின் எனக்குக் கொஞ்சம் மனதிற்குக் கஷ்டமாகவே இருந்தது. ஏக்கமாகக்கூட இருந்தது. இரண்டொரு மாதம் சென்றிருக்கும். ஒரு நாள், நான் காரணீஸ்வரர் கோயில் சென்று வரலாம் என்று எண்ணினேன். நான் அதிகமாகக் கோயில் குளம் என்று போக ஆசைப்பட மாட்டேன். கடவுளை என் மனதிலும் இஷ்ட தெய்வத்தின் படத்திலுமே வைத்து பக்தி செய்து கொள்ளுவேன். அன்று கோயில் பிரகாரத்தைச் சுற்றும் போது யாரோ என் பெயரைச் சொல்லிக் கூப்பிடுவது கண்டு திரும்பிப் பார்த்தேன். என் இள வயது சிநேகிதி ஜானகி என்னை நோக்கி வந்து கொண்டிருந்தாள். மகிழ்ச்சியோடு அவளுடன் சேர்ந்து பிரகாரம் சுற்றலானேன். அவள் என்னிடம் இரண்டொரு வார்த்தை சம்பிரதாயமாகப் பேசிவிட்டு வாய்க்குள் ஸ்தோத்திரங்களை சிரத்தையோடு முணுமுணுத்துக் கொண்டே வந்தாள். சுவாமி தரிசனம், கற்பூர ஆரத்தி எல்லாம் முடிந்த பிறகு கோயிலில் சற்று உட்கார்ந்து விட்டுத்தான் செல்ல வேண்டும் என்ற வழக்கத்தை அனுசரித்து பிரகாரத்தின் ஒரு பக்கம் அமர்ந்து கொண்டோம்.

முதலில் அவள் என்னைப்பற்றி விசாரித்தாள். நான் சுருக்கமாக சொல்லிவிட்டு இப்பொழுது என் கடைசி மகனோடு வசிக்கிறேன் அவனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. என் கணவர் இரண்டாவது மகன் வீட்டில் இருந்து வருகிறார். அவர்கள் எல்லாம் நகரில் மற்றொரு பகுதியில் இருக்கிறார்கள் என்று சொன்னேன். ஜானகி தான் சென்னையிலேயே பல வருடங்களாக இருப்பதாகவும், தன் கணவரும் மகனும் சேர்ந்து ஏதோ தொழில் நடத்துவதாகவும் சொன்னாள். அந்த சமயத்தில் புத்தி சுவாதீனமற்ற அந்தப் பெண் எங்கிருந்தோ ஓடி வந்து “அம்மா, பசிக்கிறது. ஏதாவது தின்னக் கொடு” என்று கேட்டாள். நான் “இந்தப் பெண் உன் மகளா?” என்று கேட்டேன். “ஆம். என் வயோதிக காலத்தில் அனுபவிக்க வேண்டிய விதியாக அமைந்து போனது.” என்றாள் விசனத்துடன். “நான் வசிக்கும் தெருவுக்கு இந்தப் பெண் அடிக்கடி வந்து பார்த்திருக்கிறேன். பேசினால் தொடர்ச்சியாக தெளிவுடன்தான் பேசுகிறாள். டாக்டரிடம் காட்டினீர்களா? சரியான வைத்தியம் செய்தால் குணமாகி விடுவாள் என்று எனக்குத் தோன்றுகிறது.” என்றேன்.

ஜானகி சொல்லத் துவங்கினாள், “இவள் இரண்டு ஆண்டு முன்பு வரையிலும் நன்றாகத்தான் இருந்தாள். பள்ளியில் படித்து வந்தாள். நல்ல மதிப்பெண்கள் வாங்கினாள். ஆசிரியர்கள் எல்லாம் அவள் நன்றாகப் படிக்கிறாள் என்றார்கள். சமர்த்துப் பெண் என்று சொல்லுவார்கள். என் போதாத காலம் என் தம்பி மகன் ரூபத்தில் வந்தது. அவனும் இவள் வயது உடையவன்தான். ஒரு சமயம் பள்ளி விடுமுறையில் அவன் வீட்டிற்கு வந்திருந்தான். இரண்டு பேரும் கலகலப்பாக பழகிக் கொண்டும், விளையாடிக் கொண்டும் இருந்தனர். ஒரு நாள், இருவரும் கேரம் விளையாடிக் கொண்டு இருந்தனர். எனக்கு சமையல் பொருள் ஏதோ வாங்க வேண்டிவந்தது. நான் அவர்களிடம் நீங்கள் விளையாடிக் கொண்டிருங்கள், நான் கடை வரை சென்று பொருள் வாங்கி வருகிறேன் என்று சொல்லி விட்டு போனேன்.

“திரும்பி வந்த போது, வீட்டுக் கதவு உட்பக்கமாக தாளிட்டு இருந்தது. உள்ளே ‘தட தட’ வென்று ஓசை கேட்டது. ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தேன். அந்தப் பையன் அவளிடம் தப்பான நோக்கத்துடன் நெருங்கிக் கொண்டிருந்தான். இவள் சட்டென தன் மூத்திரத்தைக் கையில் ஏந்தி, அவன் முகத்தில் அடித்தாள். கோபம் கொண்ட அவன், இவளைப் பிடித்து இழுத்துத் தள்ளிய வேகத்தில் சுவற்றில் மோதிக் கொண்டு கீழே விழுந்தாள். தலையிலிருந்து ரத்தம் கசியத் தொடங்கியது. கதவை நான் தட்ட முயல்வதற்குள் அவனே கதவைத் திறந்து கொண்டு வந்தான். கலவரம் தேங்கிய முகத்துடன் என்னைத் தாண்டிக் கொண்டு ஓடினான். அன்று போனவன்தான். ஆளே காணாமல் தொலைந்து போய் விட்டான். அன்றையிலிருந்து துளசி இப்படி இருக்கிறாள். நாங்களும் நிறைய வைத்தியங்கள் செய்து பார்த்து விட்டோம். ஆனால் பலன் தெரியவில்லை. இவள் வீட்டை விட வெளியில் சுற்றுவதையே விரும்புகிறாள். அதிலும் வீட்டுக் கதவை யாராவது மூட முயன்றால் முகம் வெளிறி அலற ஆரம்பித்து விடுகிறாள். இரவில் கூட இவள் நன்கு உறங்கிய பிறகே வீதிக் கதவை சாத்துகிறோம். அவள் விழிப்பதற்குள் திறந்து வைத்து விடுகிறோம். மருத்துவரோ, அவள் போக்கிலேயே விட்டுப் பிடியுங்கள். கண்டிப்பாக குணம் அடைவாள் என்று உறுதியாகக் கூறுகிறார். தெய்வம் விட்ட வழி.” என்று சோகமாக சொல்லி முடித்தாள்.

***

பூரணி

எழுத்தாளரும் கவிஞருமான இவருக்கு இப்போது 100 வயது. 1913 அக்டோபர் 17ம் தேதி பிறந்தார். சாதாரண மத்தியதரக் குடும்பம். ஐந்தாம் வகுப்பு வரை படித்தார். 13 வயதில் திருமணம். பிறகு, இந்தி கற்றுக் கொண்டு அதில் ‘ராஷ்டிர பாஷா’ பரீட்சை எழுதி தேறினார். பலருக்கும் இந்தி கற்றுக் கொடுத்தார். இவரிடம் கற்றுக் கொண்ட மாணவிகளில் பிரபல மொழிபெயர்ப்பாளர் சரஸ்வதி ராம்நாத்தும் ஒருவர். கபீர் கவிதைகளையும் முன்னாள் பிரதமர் வாஜ்பாயியின் சில கவிதைகளையும், சமகால இந்திக் கவிஞர்கள் சிலரின் கவிதைகளையும் மொழிபெயர்த்திருக்கிறார். 1937ல் பழநியில் இருந்து வெளி வந்த ‘சித்தன்’ பத்திரிகையிலும், கோவையிலிருந்து வெளி வந்த ‘பாரதஜோதி’ பத்திரிகையிலும் இவருடைய 5 சிறுகதைகள் வெளியாயின. 1929ல் ‘ஸ்வயம்வர கும்மி’ என்கிற தலைப்பில் கவிதைகளும், 1930–45க்கு இடைப்பட்ட காலத்தில் ‘நலங்குப் பாடல்கள்’ சிலவற்றையும் எழுதினார். ‘நலங்குப் பாடல்கள்’ தேசிய விடுதலை இயக்கம் சார்ந்த எழுச்சிப் பாடல்கள். மேலும் பள்ளிக் குழந்தைகளுக்காகவும், மாதர் சங்கத்துக்காகவும் சில பாடல்களை எழுதியிருக்கிறார். மரபுக் கவிதைகள், 2001-2005க்கு இடைப்பட்ட காலத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட புதுக் கவிதைகளையும் படைத்திருக்கிறார். இவர் புதுக் கவிதைகளை ‘புது மரபுக் கவிதைகள்’ என்றே குறிப்பிடுகிறார். சிறுகதை, கவிதை போன்ற புனைவுகள் தவிர நினைவலைகள், சுயவரலாறு, வேதாந்த விசாரங்கள் என்று நீள்கிற இவருடைய படைப்புகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. திருப்பூர் ‘சக்தி இலக்கிய விருது’ உள்ளிட்ட விருதுகளையும் பல பாராட்டுகளையும் பெற்றிருக்கிறார். இவருடைய கவிதைகளும், சிறுகதைகளும், நினைவலைகளும் நூல்களாக வெளியாகி இருக்கின்றன. இப்போது சென்னையில் வசிக்கிறார். இவருடைய மகள் க்ருஷாங்கினியும் எழுத்தாளர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர். நவீன தமிழ்ப் பெண் கவிஞர்களில் முக்கியமான ஒருவர். வெகு யதார்த்தமான, அலட்டல் இல்லாத, மனதில் தோன்றி உண்மைகளை, அதன் இயல்பு சற்றும் குறையாமல் வெளிப்படுத்துபவை பூரணியின் எழுத்துகள். இவரின் இரு சிறுகதைகள் இங்கே… 

தொடர்புடைய சிறுகதைகள்
ஒரு எழுபது வருடங்களுக்கு முன்னால், இருந்த குடும்பஸ்தர்களுக்கு எட்டு, பத்து என்று குழந்தைகள் பிறந்தன. காரணம் குடும்பக் கட்டுப்பாட்டு முறை தெரியாது என்பது மட்டும் அல்ல. அக்காலத்திலும் அதற்கு சில வேறுவிதமான முறைகள் இருக்கத்தான் செய்தன. ஆனால், பொதுவாக அந்தக்கால மக்கள் ...
மேலும் கதையை படிக்க...
அன்று ஒரு காரியமாக என் சினேகிதி கமலா மாமியின் வீடு சென்றேன். அது ஒரு வசதியான குடும்பம். குழந்தைகள் சாப்பிட அமர்ந்திருந்தனர். சமையற்கார அம்மாள் பரிமாற வந்தாள். எனக்கு அவளை அங்கு பார்த்தும் ஒரு ‘ஷாக்’. அவள் எங்கள் கிராமத்தைச் சேர்ந்தவள். ...
மேலும் கதையை படிக்க...
வீட்டு சொந்தக்காரர் வாடகை வாங்க வந்தபோது, “என் பெண் வரப் போகிறாள். இந்த ஊரில் சில மாதம் தங்க வேண்டுமாம். ஆகையால், வீட்டை அவளுக்காக காலி செய்ய வேண்டி வரும். நீங்கள் ஒரு மாதத்திற்குள் வேறு வீடு பார்த்துக் கொள்ளுங்கள். இம்மாத ...
மேலும் கதையை படிக்க...
‘தாயும் பிள்ளையும் ஒன்றானாலும் வாயும் வயிறும் வேறு’ என்பது பழ மொழி. பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் ரத்த பாசமும் அன்பும் உண்டுதான் என்றாலும், அதைவிடச் சற்று தூக்கலானதுதான் தன் நலன் பேணல். ஒவ்வொரு ஜீவனும் தன் வாழ்வின் பொருட்டுத்தான் உலகில் இயங்குகிறது. தனக்கு ...
மேலும் கதையை படிக்க...
கால மாற்றம்
வயிறு
சாவு
முதுமை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)