கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: December 11, 2013
பார்வையிட்டோர்: 21,857 
 

பல நூறு சோக இழப்புகளுடன் உயிர் விட்டு மடிந்து போன, வெறும் ஒற்றை நிழலாக, வடுப்பட்டுக் கோரப்பட்டு, உலகின் கண்களை உறுத்தி வருத்துகின்ற யாழ்ப்பாணம் வேறு. அதன் உயிர்க் களை வற்றிப் போன குரூர முகத்தின் நிழல் கூட இன்று இல்லாமல் , முகமும் அந்தத் தேசத்து மனிதர்களும், காட்சி உலகின் கண் நிறைந்த வெளிப்பாடு வெளிச்சங்களாகக் களை கொண்டு உயிர்த்து நிற்பதை, பிறர் வாயால் சொல்லியல்ல,தானே நேரில் வந்து தரிசனம் கண்டபோது, இந்துவிற்குத் தன் கண்களையே நம்பமுடியவில்லை.

அவளுக்கு இது குறித்து உள்ளூர ஓரளவு மகிழ்ச்சி ஏற்பட்டாலும், அதையும்மீறி ஊடுருவிப் பாய்கின்ற அவளின் இயல்பான அறிவிtத் தேடலில், ஓர் உச்சக்கட்ட விழிப்பாய்,இது நம்பகத் தன்மையற்ற ஒரு மாயச்செய்தியாய்,அவள் மனதை உறுத்தியது.

சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு,அவள் தன் குடும்பத்தோடு துரதிஷ்டவசமாக யாழ்ப்பாண மண்ணை விட்டு இடம் பெயர்ந்து கொழும்புக்குப் புறப்பட்டபோது, இங்கு இந்த மண், பெருமைக்குரிய யாழ்ப்பாணம், தன் சிம்மாசனத்தையே இழந்து,நிறைந்த சோகத்தில் அழுது வடிகின்ற காட்சி அவலமே, எங்கும் நிறைந்த,கரிக் கோலமாய்க் கண்களை அரித்தது.எவ்வித நவீன வசதிகளுமின்றி, இருட்டில் மறைந்து போனதே யாழ்ப்பாணம்,.இரவு வந்தால் விளக்கெரிக்க மண்ணெண்ணை கூட இன்றி, சிறிய தேங்காயெண்ணெய் ஜாம் போத்தல் விளக்குடன்,அவர்கள் பொழுது நரகமாகவே கழிந்தது. பகலில் கண் விழித்தாலோ பயங்கரவெடி ஓசைகளுடன் யுத்த பீதி விரட்டும்.

பலாலி இராணுவ முகாமுக்கு, மிக அண்மையிலேயே அவர்களின் அந்தச் சிரஞ்சீவிக்
கிராமம் ஏழாலை இருந்ததால்,துப்பாக்கி வேட்டுக்களின் சப்த அதிர்வுகளால் தினமும் மரண அவஸ்தைதான்.ஒரு முறை ஷெல் வெடித்து வீட்டுக் கூரையின் பின்புறமாக விழ நேர்ந்ததாலேயே அவள் அங்கு இருக்கப் பிடிக்காமல் பிள்ளைகளோடு கொழும்புக்குப் போனாள்.

இருட்டுப் பீடை தொலைந்த மாதிரி, கொழும்பு வெளிச்சம் கண்களில் ஒளி காட்டி நின்ற போது, உண்மையில் அவள் பிரமித்துத்தான் போனாள்.,இது அவளுக்கு மாறுதலான ஒரு புது அனுபவம்..,இந்த ஒன்று திரண்ட கொழும்பு நகரத்து ஒளி வெள்ளத்தின் நடுவே,உள் உறுத்தி வருத்துகின்ற மிகப்பெரிய சோகமாய் அழுது வடிகின்ற தனது, மண்ணின் அவல முகத்தையே, அவள் சதா தன் மனக் கண்ணில் சுமந்தபடி இருந்தாள். கண்டதே காட்சி கொண்டதே கோலமென்றாகி விடஅவளென்ன கலி முற்றி விழுந்த கரிக் கோலத் துரும்புகளிலொன்றானவளா? இல்லையே! அவளை அப்படி வளர்த்தெடுத்த உயர் ஆசானாக,, அப்பாவும் அவர் வாழ்ந்த மண்ணும் துருவத்தில் மறைந்து போய் விட்டிருந்தாலும், தடம்புரண்டு தடுமாறுகின்ற இன்றைய வாழ்க்கைச் சூழலில் ,சத்தியத்தைக் காப்பாற்றுவதற்காக, வானத்தில் துருவசஞ்சாரம் செய்கின்ற அப்பாவே, மானஸீகமாகத்தன்னை வழிநடத்தி வருவதாக அவளுணர்வதுண்டு.

அவள் யாழ்ப்பணம் வந்து சேர்ந்து ஒரு தினம் கூடக் கழியவில்லை அவள் தனியாகக் கொழும்பிலிருந்து பஸ்ஸிலேயே வந்து சேர்ந்தாள், பிள்ளைகள் வளர்ந்துஆளாகுவதற்கு முன்பே, அவளுக்குப் புருஷன் துணை போய்விட்டது,அவள் கணவர் நடராஜா கல்வி இலாகாவில் கிளார்க்காக இருந்தவர்.சொற்ப பென்ஷனே வந்தாலும் கஷ்டப்பட்டுப் பிள்ளைகளை வளர்த்து விட்டதால்,மூத்தபையன் கனடாவுக்குப் போய்நிறையப் பணம் அனுப்புவதால், கொழும்புச் செலவுகளையும் சமாளிப்பதோடு,பெரிய பெண்ணுக்கும் கல்யாணமாகி, அவளும் வெளிநாடு போய்,ஒரு வருடத்திற்கு மேலாகிறது. இப்போது அவளுடன் கடைக் குட்டி சுபா மட்டும் தான்,அவள் ஒரு பட்டதாரி ஆசிரியையாக இருக்கிறாள்..

இப்போது ஏழாலையிலும் நிறைய மாறுதல்கள், புதர் மண்டி வெறும் பாலைவனக் காடாய் வெறிச்சோடிக் கிடந்த இடங்களிலெல்லாம், வாழ்க்கையை மனிதர்கள் கொண்டாடி மகிழ்வதற்காய் நவீன வசதிப் பெருக்கங்களுடன், களை கொண்டு காட்சிக்கு நிற்கும் பல புதிய வீடுகள். இவைகளின் நடுவே ஒளிமங்கிப் பொலி விழந்து நிற்கும் அவளுடைய அந்தப்பழைய வீடு, அவளின் அக்கா திலகம் இன்னும் அங்குதான் இருக்கிறாள். அவளுடைய சீதன வீடு அது. சுற்றிலும் பெரிய காணி..நிறையத் தென்னை மரங்கள், மா,பலா எல்லாம் இருந்தன. எல்லாம் அழியாமல் அப்படியே சிரஞ்சீவிக் களை கொண்டு நிற்பது போல், அவளுக்குப்பட்டது.

வீட்டைக்கண்டதும் அவள்அப்படியே புல்லரித்துப் போனாள். .பாழடைந்த ஒரு ராஜ அரண்மனை போல்அது இருந்தது.அதில் இன்னும் அழிந்து போகாமல் அப்பாவே உயிர் கொண்டு நிலைத்திருப்பதாக,அவள் நம்பினாள். அவர் சாதாரண ஏழை வாத்தியாராக இருந்த போதிலும்,தனது உயரிய ஒழுக்க நடத்தைகளினால்,அப்பழுக்கற்ற ஒரு மகா புருஷனாகவும், வழிகாட்டும் தெய்வமாகவும் இந்தமண்ணில் உயிர் பொறித்து விட்டுப் போனவர் அவர்,

அவளை வரவேற்பதற்காக,அக்காவும் அவளின் கடைசி மகள் மஞ்சுவும் வாசலில்
நின்றிருந்தனர்.அத்தானைக் காணவில்லை.அக்கா மிகவும் கிழடு தட்டி,முதுமையோடு
தோன்றினாள்.மஞ்சு முப்பது வயது கடந்த பின்னும்இன்னும் கன்னியாகவே இருக்கிறாள்
அதற்குக் காரணம் அவளது வரட்டுப் பிடிவாதம். ஓர் உள்ளூர் மாப்பிள்ளையை வேண்டிஅவள் தவமிருக்கிறாளாம்.இருக்கட்டும்..இது வெறும் பகற் கனவுதான்..இங்குள்ள இளைஞர்கள் முழுப்பேரும் ,வெளிநாடு, போனபின், இந்தக் கனவுதான் எடுபடுமா? இப்போது மிஞ்சியது புரையோடி விட்ட இந்த மண் மட்டும்தான்..இதற்குப் புதுப்பொலிவு வந்து விட்டதாய், அவளுக்குப் படவில்லை.அதற்குப் போனஉயிர் திரும்ப வெகு நாளாகும். அதுவரை எல்லாம் ஜடங்களே. .இந்த ஜடம் வெறித்தகாட்டில், மஞ்சு உயிரைத் தேடுகிறாளாம். .கிடைப்பானா? அந்த உயிர் உயர் மனிதன்?

“வா இந்து,கண்டு கனநாளாச்சு .பஸ்ஸிலே களைத்துப் போய்,வந்திருக்கிறாய், குளிச்சிட்டு வந்து சாப்பிடு.. ஆறுதலாய் கதைப்பம்.”. என்றாள் அக்கா.

இந்துவிற்கு மனம் நிலை கொள்ளவில்லை .அவசரமாக முகம் கழுவிச் சாப்பிட்ட கையோடு,அறை அலுமாரியைத் திறந்து,எதையோ தேடிக் கொண்டிருந்த போது ,மீண்டும் அக்காவின் குரல் கேட்டது.

“என்ன இந்து வேணும்?”

“அப்பாவின் அந்தப் போர்வை இருக்கல்லே?”

“ஓம்!.அலுமாரி லாச்சிக்குள்ளே தான் இருக்கு. பூட்டில்லாத லாச்சிதான்..திறந்து பார்”

இந்து லாச்சியைத் திறந்து,அந்தப் போர்வையைக் கையிலெடுத்த போது,அவளுக்கு இந்த உலகமும் ,இந்த மண்ணைப் பற்றிய இருப்புகளும் அடியோடு மறந்து,போயின. அது ஓர் அழகான கம்பளிப் போர்வை. .பளிச் சென்ற குங்குமக் கலரில் ,இவ்வளவு காலம் சென்றும், மெருகுகு குலையாமல் ,கண்ணைக் கவரும் ஒரு காட்சிப் பொருளாய்,,ஒளி கொண்டு மின்னிற்று.அப்பா அதைக் குளிர் காலத்தில் மட்டுமே பயன்படுத்துவார்.ஏனைய நாட்களில்,அது அவர் படுத்துறங்கிய,கட்டில் சட்டத்தின் மீது, மடிப்புக் குலையாமல், தொங்கிக்கொண்டிருக்கும்..

இந்து அறைக்கு வெளியே வந்து,சோபாவில்அமர்ந்தவாறே,வெகு நேரமாய்,அதைமடிமீது
போட்டபடி,,உணர்ச்சி கொண்டு ,மகிழ்ச்சி மேலீட்டினால்,புல்லரித்துப்போய், அமர்ந்திருந்தாள். உண்மையில்,அதை இன்னும் அப்பாவின் ஞாபகமாகத்தரிசித்து,மகிழும் பொருட்டே, யாழ்ப்பாண மண்ணை நாடி இப்போது அவள் வந்து சேர்ந்தாள்.

அவளது பெருமைக்குரிய அப்பாவையே, ஒரு சிரஞ்சீவிச் சத்திய தரிசனமாய் ,பிரகடனப்படுத்தி, முகம் காட்டுவது போல,அந்தப் போர்வையை, இன்னும் அவள் அவரின் உயிராகவே கண்டாள். உயிரின் சத்தியமே,உன்னத லட்சிய மென்பதை,வாழ்ந்து,காட்டியஅப்பா இன்னும் மறைந்து போகாமல்,அந்தப் போர்வையிலேயே,உயிர்கொண்டு நிலைத்திருப்பதாக,அவள் மிகவும் பெருமையோடு நினைவுகூர்ந்தாள்.

அவரைத் தன் குருவாகவே நம்பி,வழிபட்டஓர் உத்தம மகாபுருஷன் ஒருவரின்அன்புக்
காணிக்கையாகவே,இந்தப் போர்வை ,அப்பாவின் காலடிக்கு வந்து சேர்ந்தது. அவரது பெயர் ரமணனென்று ஞாபகம் குப்பிளானென்றஊரைச்சேர்ந்தவர் சிறுவயதில்அப்பாவிடம்
படித்தமாணவர்,

அப்பா ஒருசாதரண ஏழை வாத்தியார் தான்.பயிற்றப்பட்ட கணித ஆசிரியர். மல்லாகம் ஆங்கிலப் பாடசாலையில்,அவர் கற்பிக்கப் போவார். ரமணன் தன் ஏழ்மை காரணமாகத் தவணைக் கட்டணம் கட்ட முடியாமல்,போன சமயங்களிலெல்லாம்,அப்பாவே அவர் தொடர்ந்து படிப்பதற்கான வழிவகைகளை யெல்லாம், செய்துகொடுத்து,அவரைக் கைதூக்கி விட்டாராம், இதில் பட்ட நன்றிக்கடன் பொருட்டே ,தான் சிங்கப்பூர் சென்று,வாழ்ந்த நிலையிலும்,அப்பாவை மறவாமல், அடிக்கடி அவரிடமிருந்து கடிதம் வரும்.அதில்அப்பாவைக் குரு வென்றே தொடங்கி ,அவர் கடிதம் மிகவும் பக்திபூர்வமாக உணர்ச்சிகொண்டு, எழுதப்பட்டிருக்கும். ஊருக்குவரும் போதெல்லாம், இப்படிப்பல அன்பளிப்புகளோடுஅப்பாவைத் தரிசிக்க, அவர் வந்து போவார். எப்பேர்ப்பட்ட மாணவப் பெருந்தகை அவர்

“என்ன இந்து?போர்வையோடு இருக்கிறாய்?”

ஓர் ஆண்குரல் கேட்டு அவள் பிரக்ஞை கலைந்து, நிமிர்ந்து, பார்த்தாள். அக்காவின் கணவர் சதாசிவம்தான், அவளுக்கெதிரே, சோபாவில், அமர்ந்தபடி, கேட்டுக்கொண்டிருந்தார்.அவர் முன்பு ரயில்வேயில் வேலை பார்த்தவர்..அவருக்கு மூன்று பெண்கள்.முதல் இருவரும் கல்யாணமாகிக் கனடாவில் இருக்கிறார்கள். மஞ்சுவுக்குத்தான்இன்னும் கல்யாணம் ஆகவில்லை/இந்துவிற்குச் சிறுவயதிலிருந்தே ,அவரோடுநல்லஒட்டுதல்,மனம்திறந்து,வெளிப்படையாகவே,அவரோடு நிறையப்பேசுவாள்.

“இது சாதாரண போர்வையில்லை அத்தான்.”

“என்ன சொல்கிறாய்?”

“ஓம். அத்தான். இது உங்களுக்குப் புரியாது .சிறுவயதில் அப்பா வழியில் வாழ்ந்திருந்தாக் ,ஒரு வேளை, இது உங்களுக்குப் புரியக்கூடும்.எனக்கு நிறைய விடயங்கள் பிடிபட்டிருக்கு இஞ்சை வந்து பார்க்கும், போது,ஒன்றும் நிறைவில்லை என்று படுகுது.ஒரே குழப்பமாக இருக்கு .ஏன் என் மண் இப்படியாச்சு என்று யோசிக்கிறன்.

“ஏன் இப்ப இஞ்சை என்ன குறை என்று ,நீ நினைக்கிறாய்?”

“ஓ ,சரிதான். இந்த மண் நிரம்பித்தான் இருக்கு. எங்கும் வெளிச்சம்.நவீன நாகரீக மாற்றங்களுக்கு ஈடாய் ,கொழும்புக்கு நிகராக ,ஒரு புதிய சகாப்தமே, கண் விழித்துக் கொண்டு, நிமிர்ந்திருப்பதாக, என்னையும் நம்பச்சொல்லுறியளே எப்படி நம்புகிறது/ ஒவ்வொரு கணமும்,உயிர் தின்னுகிற வெறியல்லோ இங்கு மூண்டு கொண்டிருக்கு .இதுஒருச்சாதரண விடயமாய்போச்சு. அப்பா மாதிரி ஓர் ஆள் ,இப்ப இருக்க வேணும் .இந்தச் சகதிக்குள்ளே குளித்துச் சேறுபூசிக்கொண்டு அலைகிற மனிதர்களைப் பார்க்க, எனக்குப் பெரிய ,மனவருத்தமாக ,இருக்கு. நாகரீகத்திலே, நாம்,வளர்ந்திட்டோம் என்று,நினைக்கிறதே,பெரிய முட்டாள்தனம். இப்ப என்னஆச்சு பணம் நிறைய, வந்ததாலே, நாம் எதைப் பெரிதாகச் சாதிதுவிட்டோம் அப்பா அந்தக்காலத்திலே, நிறையத் தத்துவங்களெல்லாம் சொல்வார்.கைக்கு மணிக்கூடும் காலுக்குச் செருப்பும் போட்டுக்கொண்டால் மட்டும், ஒருவன் ,பெரியவனாகி விடமுடியுமோ என்று கேட்பார்,. அப்ப எனக்கு அது விளங்கேலை.இப்ப இந்த மனிதர்களைப் பார்க்கிற போதுதான் அது புரியுது.”.

“அது என்னவென்றுதான் சொல்லேன்”

“அத்தான் ,வெளி நாட்டுப்பணம் வந்து,வீடு வாசல்பெருகி,நாம் உயர்ந்து விட்டோமென்று எ.ல்லோரும் நம்பிக் கொண்டிருக்கிற மாதிரி, என்னாலை,நினைக்க முடியேலை.இது வெறும் மாயை.இஞ்சை ஒவ்வொரு கணமும், நெருப்புத் தின்று சாகிற மாதிரி,உயிர் உத்தரவாதம் இல்லாமல், தடுமாறி அலைந்து கொண்டிருக்கு. தர்மம் நீதி எல்லாம் செத்துப்போச்சு அப்பா சொன்ன மாதிரி,நாமெல்லாம்,யோசித்திருந்தால்,எல்லாம் நல்லபடி ,நடந்தேறும்.

“இப்ப இதுக்கு என்ன செய்ய வேணுமென்கிறாய்?”

“இந்த அருமையான கம்பளிப் போர்வையை அப்பாவை நினைவுபடுத்துகிற, மாதிரிக் காட்சிக்கு வைப்பம்.”

“சரிதான் போடி ,விசரி.கம்பியூட்டரிலே கண் விழித்துக் கல்யாணாகிற, காலமல்லோ இது உன்ரை அப்பா வழிபாடு,இப்ப எடுபடுமோ?”

“அப்ப இதுக்கு என்னதான் முடிவு?”

“அழிவுதான்………!”

“ஓ! கடவுளை, மறந்த மாதிரி ,மனித தர்மத்தைப்பற்றிய புனித நினைவுகளே ,அடியோடு ,மறந்து போனால்,அழிவு ஒன்று தான்,மிஞ்சும்.இந்தஉலகத்திலே,எங்கடை, கண் முன்னலை,இப்ப அதுதான் நடக்குதே இயற்கை வாயைப்பிளந்து,எங்களை,விழுங்க நினைத்தால், யாரால் காப்பாற்ற முடியும்?”

அதற்கு மேல் இந்துவால், பேச முடியவில்லை. அவள் நிறையப் பேசிக் களைடத்துப் போனாள் அப்பாவின் முக தரிசனமாகத் தெரியும், அந்தக் கம்பளிப் போர்வையை, விட்டு அகல விரும்பாமல், அது இன்னும், அவளின் மடிமீதே, உயிர் கொண்டு நிலைத் திருந்தது.வெறும் பணத்தையே, உயிர் என்று நம்பி ஓடுகிற,வரட்டு மனிதர்களிடையே, இந்தப் பிணம் தின்னும் காட்டில், அதைக் கட்டிக் கொண்டு, அழுகிற,அப்பாவின் உள் எழுச்சி கொண்ட, தனது இந்த விசுவரூப உயிர்க் கோலம், எடுபடாது என்று அவளுக்குப் புரிந்தது.அதற்கான பாதை,முற்றாகத் தடைப்பட்டு விட்டதாகவே,அவளுக்கு உணர்வு தட்டிற்று. அந்தஉணர்வின் தாக்கத்தைத் தாங்க இயலாதவளாய்,,அவள் பெரும் ஆயாசத்தோடு,கண்களை மூடிக்கொண்டாள்.

பூட்டிய அக்கண் சிறைக்குள்,ஆழ்ந்து போகையில்,,அப்பாவின் உயிர் வழிபாடான, அந்த மிகப் பெரிய ஒளி, துருவ சஞ்சாரமாக ,வானத்தில் நின்று அழைப்பது போல் தன்னையே மறந்து போன அந்த ஏகாந்த ,தரிசனத்தில், இருண்ட சிறையில், துடிதுடித்து மாய்ந்து போகும்,, இந்த உலகமே அடியோடு, அவளுக்கு மறந்து போனது பாவப்பட்ட இந்த மண்ணின், சாப விமோசனத்திற்காக இப்போதைக்குத் தன்னால், செய்யக்கூடிய, ஆத்ம பரிகாரமான உயிர் வழிபாடு இது ஒன்றுதான் என்று அவளுக்குப்பட்டது அப்பாவை, அவரின் ஆன்மீக விழிப்புடன் கூடிய புனிதங்களை மானஸீகமாய் ,எண்ணி வழிபடுகிற இந்த நினைவு ஒன்று மட்டும் தான்,அந்த நினைவின் உணர்ச்சிமயமான பரவசப் பெருக்கினால்,அவள் தன்னை மறந்து போனது மட்டுமல்ல காலில் உறுத்தி வருத்தி விட்டுப் போகின்ற, இந்த மண்ணையும் கூடத்தான். இருள் அகன்று உள்ளூரத் திளைத்துப் பரவிய,கறைகள் படியாத ,அந்தப் பூரண ஒளியின், தேஜஸ்பட்டு, அவளின் முகமும் ஒளிர்ந்து களை வீசுவது போல,அவளின் எதிரில் நிலை கொண்டு அமர்ந்திருந்த,சதாசிவத்தின் கண்களுக்கு, இருளை ஊடுருவிப் பாய்கின்ற அந்த ஒளிகூட வெறும் புதினமாகவே பட்டது.

– மல்லிகை (டிசம்பர்,2005)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *