கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: June 29, 2013
பார்வையிட்டோர்: 18,397 
 

திருச்சி தெப்பக்குளம் வாணப்பட்டரைத் தெரு மாரியம்மன் கோவிலில் சித்திரைத் திருவிழா. மலையைச் சுற்றியுள்ள நான்கு வீதிகளிலும் மழை பெய்ததுபோல நீர் தெளிக்கப்பட்டு கலர் கலராகக் கோலங்கள் போடப்பட்டுள்ளன. ஆங்காங்கே மாவிலைத் தோரணங்களுடன் தண்ணீர்ப் பந்தல்கள். பானகம், நீர்மோர், உப்புடன் பாசிப் பருப்பு கலந்த வெள்ளரிப் பிஞ்சுக் கலவை – பக்தர்களுக்கும் பசித்துக் களைத்து வருபவர்களுக்கும் இலவச விநியோகம். வடக்கு ஆண்டார் தெரு மேற்கு முனையில், ரோட்டோரமாகப் பெரிய பெரிய அண்டாக்களிலும், குண்டாக்களிலும், கஞ்சி காய்ச்சப்பட்டு அன்னதானம்.

வேப்பிலைக்கொத்துடன், தீச்சட்டிகளைக் கையில் ஏந்தி, மஞ்சள் நிற ஆடையணிந்த மங்கையர் கூட்டம். கரகம், காவடி, மேளதாளம், வாண வேடிக்கை முதலியன. அம்மன் தேர் கோவிலிலிருந்து புறப்பட்டு விட்டதாகச் செய்தி. எங்கும் மக்கள் கூட்டம்.

முனியாண்டி தன் தொழிலில் மும்முரமாக இருக்கும் நேரம். அவனைச்சுற்றி மழலையர் கூட்டம். கையில் நீண்ட மூங்கில் பட்டைக் கிளைகளுடன் கூடிய ஒரு பெரிய குச்சி. அதில் ஆங்காங்கே தொங்கும் அழகிய கலர்க் கலர் பலூன்கள். கூலிங் க்ளாஸ் கண்ணாடிகள், விசில்கள். தண்ணீர் நிரம்பிய பந்து போன்ற பலூன்கள். முனியாண்டியின் உள்ளத்தில் ஒரு உவகை. இன்று எப்படியும் மாரியம்மன் அருளால், முன்னூறு ரூபாய் சம்பாதித்தே ஆக வேண்டும். டாக்டர் சொன்ன தொகை மூவாயிரத்துக்கு இந்த முன்னூறு மட்டுமே பாக்கி கடந்த மூன்று வருடமாக நினைத்து ஏங்கிய ஒரு காரியம் நிறைவேறப் போகின்றது. மனைவி மரகதத்தை எப்படியும் மகிழ்விக்க வேண்டியது அவன் கடமை.

காலையிலிருந்து நாஸ்தா செய்யக்கூட நேரமில்லை. நாக்கு வறண்டு விட்டது. நீர் மோரை ஒரு தகரக் குவளையில் வாங்கி ஒரே மடக்காகக் குடித்து விட்டு, பலூன்களை ஊதுவதும், கயிறு போட்டுக் கட்டுவதும், காசை வாங்கி ஜோல்னா பையில் போடுவதும் என, அவன் பத்து விரல்களும், பத்து விதமான வேலைகளைச் செய்து வந்தன.

இத்தகைய தேர்த்திருவிழாக்களில், தன்னைச் சுற்றி எப்போதும் குழந்தைகள் கூட்டம். ஆனால் தனக்கென ஒரு வாரிசு இதுவரை உருவாகவில்லை என்ற ஏக்கம் உண்டு. திருமணம் ஆகி ஏழு ஆண்டுகள் ஓடி விட்டன. மரகதமும் தன்னால் முடிந்த கூலி வேலைகள் செய்து சம்பாதித்து வரும் அன்பான, அனுசரணையான மனைவிதான். முனியாண்டியும், மரகதமும் மனம் ஒத்த மகிழ்வான தம்பதிகள். கஞ்சியோ கூழோ இன்பமாகப் பகிர்ந்து உண்டு, கடன் இல்லாமல் காலம் தள்ளி வரும் ஜோடிகள். காவேரிக்கரையோரம் ரயில்வே லைனை ஒட்டிய ஒரு பெரிய குடிசை வீடு – அதுவே அவர்கள் இன்பமுடன் இல்லறம் நடத்தும் அரண்மனை.

திடீரென அடுத்தடுத்து பெரிய வேட்டுச்சத்தங்கள். குழந்தைகள் அனைவரும் காதைப் பொத்திக் கொண்டு, பலூன்களையும் பிடித்துக்கொண்டு, இங்கும் அங்கும் ஓட்டம். போலீஸ்காரர்கள் கையில் தடியுடன் நடுரோட்டில் யாரும் நிற்காதபடி கூட்டத்தை ஒழுங்குபடுத்தி வந்தனர். முனியாண்டியும் ரோட்டு ஓரத்திற்குத் தள்ளப்பட்டான். கூட்ட நெரிசலில் இரண்டு மூன்று பலூன்கள் பட் பட்டென வெடித்துச் சிதறின. தேரில் அம்மன் தெரு முனைக்கு வந்து கொண்டிருக்கிறாள். ஆண்களும் பெண்களும் போட்டி போட்டுக்கொண்டு தேர் வடத்தை எப்படியாவது தொட்டுக் கும்பிட்டுவிட முண்டுகின்றனர். வியர்த்துக் கொட்டும் மேனியுடன் தேர் இழுக்கும் ஆட்களில் சிலர் கும்பலாக வீடுகளுக்குள் புகுந்து, தண்ணீர் வாங்கி, தலையில் ஊற்றிக்கொண்டு, வெளிச்சூட்டைத் தணித்துக் கொள்கின்றனர்.

“பலூன்காரரே, இந்த பாப்பாவைக் கொஞ்சம் பார்த்துக்கோ! பத்து நிமிடத்தில் அம்மனை அருகில் சென்று கும்பிட்டு ஓடியாறேன்” என்று மின்னல் வேகத்தில் சொல்லிச் சென்ற கைலிக்காரனின் முகம் கூட மனதில் சரியாகப் பதியவில்லை முனியாண்டிக்கு. குழந்தை முகம் பளிச்சென்று அந்த அம்மனே தேரிலிருந்து இறங்கி நேரில் வந்தது போல இருந்தது. நல்ல அழுக்கேறிய பாவாடை சட்டை. கையில் மட்டும் ஒரு சில ரப்பர் வளையல்கள். காதுகளில் இருந்து தொங்கட்டான்கள் கழற்றப்பட்டதற்கு அடையாளம் போல வெறும் ஓட்டைகள். காலில் அழுக்கேறிய செருப்புக்கள். கொலுசுகள் போட்டிருந்ததற்கான சுவடுகள். சிடுக்கும் சிக்குமாக எண்ணெய் அற்ற தலைமுடி. இரட்டைப் பின்னல் இட்டதற்கான அறிகுறிகள்.

பெரிய பலூன் ஒன்றை ஊதி அந்தப் பெண்ணின் கையில் கொடுத்தான் முனியாண்டி. சிறிய புன்னகையுடன் “தாங்க்யூ அங்கிள்” என்று சொல்லிய அந்தப்பெண், “ரொம்பவும் பசிக்குது அங்கிள்” என்றது.

“கொஞ்சம் பொறுத்துக்கோம்மா, அப்பா வந்திடுவார்” என்றான் முனியாண்டி.

“அப்பாவும், அம்மாவும் தான் செத்துப்போய்ட்டாங்களே! எப்படி வருவாங்க?” என்றது அந்தப்பெண் குழந்தை. அதைக்கேட்ட முனியாண்டிக்கு தலைசுற்றியது.

“உங்க வீடு எங்கம்மா இருக்கு?” என்றான்.

“நாகப்பட்டிணம்! அப்பாவும், அம்மாவும் சுனாமி வந்தப்போ கடல் தண்ணீரிலே அடிச்சுட்டுப் போய்ட்டதாச் சொன்னாங்க” “இப்போது கூட்டியாந்த மாமா யாரும்மா?” முனியாண்டி அவள் கண்களைத் துடைத்து விட்டுப் பரிவுடன் வினவினான்.

“எனக்குத்தெரியாது அங்கிள். அவரு தான் நாகப்பட்டிணத்திலிருந்து என்னை பஸ்ஸிலே கூட்டியாந்து இங்க உங்கள்ட்ட விட்டுட்டுப் போய்ட்டாரு. ராத்திரி பசிக்குதுன்னு சொன்னேன். டிபன் வாங்கித்தரவே இல்லை. வெரி வெரி பேடு அங்கிள்” என்றது அந்தப் பெண் குழந்தை.

சுமார் ஐந்து வயது குழந்தை பசியால் அழுதது முனியாண்டியின் வயிற்றைப் பிசைந்தது. அருகில் இருந்த “ராமா கஃபே” என்ற ஓட்டலுக்கு அழைத்துச் சென்றான். சுற்றிமுற்றிப் பார்த்தும் கும்பலில் அந்தக் கைலிக்காரனைக் கண்டு பிடிக்க முடியவில்லை. சூடான சுவையான இரண்டு இட்லிகள் மட்டும் சாம்பார், சட்னியில் தோய்த்து சாப்பிட்டுத் தண்ணீர் குடித்த சிறுமிக்கு முகத்தில் ஒரு புதுப்பொலிவு.

“பலூன் அங்கிள்! யூ ர் வெரி குட் அங்கிள்! தாங்க் யூ வெரி மச்” என்று கூறி அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்தது. முனியாண்டிக்கு இது ஒரு வித இனம் புரியாத இன்பத்தையும், அதே நேரம் ‘இந்தக் குழந்தையை என்ன செய்வது?’ என்ற கவலையையும் அளித்தது.

தேர் அந்த ஓட்டலைத் தாண்டியதில் கூட்டம் சற்றுக் குறையத் தொடங்கியது. குழந்தையை ஒரு கையில் பிடித்துக்கொண்டு, தேர் சென்ற திக்கிலேயே தேருக்குப் பின்னால், சற்றுத் தள்ளி, தன் வியாபாரத்தையும் கவனித்துக் கொண்டு, கைலிக்காரனையும் கண்களால் தேடிக்கொண்டு, கிரிவலமாகப் புறப்பட்டான், முனியாண்டி, தன் வயிற்றுப்பசிக்கு ஆங்காங்கே மோர், கஞ்சி, குடிநீர் போன்ற ஏதோ ஒன்றை குடித்து வந்தான். ஆசையுடன் தன் கையில் பலூன் ஒன்றைப் பிடித்து வந்த குழந்தைக்கு, நல்ல ஒரு அங்கிள் கிடைத்து விட்டதில் மட்டில்லா மகிழ்ச்சி.

ஊரு பேரு நாகப்பட்டிணம், தன் பெயர் விஜி, அப்பா பெயர் கோபால், அம்மா பெயர் ராஜி, தாங்க்யூ, வெரிகுட் முதலியவை தவிர வேறு எந்தத் தகவலும் சொல்லத் தெரியாத மழலை அவள்.

மதியம் மூன்று மணி. உச்சி வெய்யில் மண்டையைப் பிளக்கிறது. தேர் மலைக்கோட்டை நுழை வாயிலைத் தாண்டி ‘சாரதாஸ்’ என்ற மாபெரும் ஜவுளிக்கடலுக்கும், மங்கள் & மங்கள் என்ற அந்தத் தங்க மாளிகைக்கும் இடையே நகர்ந்து செல்கிறது. மாணிக்க விநாயகர் கோவிலுக்குள் குழந்தையுடன் நுழைந்தான் முனியாண்டி. எதிர்புறத்தில் உள்ள புறப்பாட்டு விநாயகர் சந்நிதி மண்டப நிழலில் அமர்ந்தான். வெய்யில் கடுமைக்கு அந்த இடம் மிகவும் குளுமையாகவே இருந்தது.

குருக்கள் ஐயா அவர்கள் சர்க்கரைப் பொங்கல் பிரஸாதம் வினியோகித்துக் கொண்டிருந்தார். தானும் வாங்கிக்கொண்டு குழந்தைக்கும் வாங்கிக் கொடுத்தான். பலூன்கள் அனைத்தும் அனேகமாக விற்றுத் தீர்ந்திருந்தன. தன் தலைப்பாகைத் துண்டை உதறி விரித்து, குழந்தையை ஒரு தூண் ஓரமாகப் படுக்க வைத்ததும் அது கண்ணயர்ந்து தூங்கிவிட்டது. அதன் பிஞ்சு விரல்கள் மட்டும் முனியாண்டியின் சட்டையை இறுக்கமாகப் பற்றி இருந்தன.

குழந்தையின் அருகே உட்கார்ந்தே தூங்கிக்கொண்டிருந்த முனியாண்டியை, ஐந்து மணி சுமாருக்கு பக்தர் ஒருவர் உடைத்த சதிர் தேங்காய்த் துண்டு ஒன்று தட்டி எழுப்பியது. முகத்தை அலம்பிய முனியாண்டி குழந்தையுடன் படிவாசல் பிள்ளையாரை வணங்கி விட்டு, தெப்பக்குளத்தையும் வலமாக சுற்றி வந்து, நிலைக்கு வந்து சேர்ந்துள்ள வாணப்பட்டரை மாரியம்மனை மிக அருகில் சென்று வணங்கிவிட்டு, வீடு நோக்கிப் புறப்பட்டான். தெப்பக்குள ரோட்டு ஓரக் கடை ஒன்றில் பேரம் பேசி குழந்தைக்கு மாற்று உடையாக கவுன் ஒன்று வாங்கிக்கொண்டு, தன் அரண்மனையாகிய குடிசைக்குள் குழந்தையுடன் நுழைந்தான்.

சூடாக தோசை சுட்டுக்கொண்டிருந்த மரகதம், குழந்தை ஒன்றுடன் வந்த தன் கணவனை தன் இரு புருவங்களையும் உயர்த்தி ஒரு பார்வை பார்க்கும் போதே, குழந்தை விஜியோ

“அ..ய்..ய்..யா தோசை!…..அம்மா….ஸாரி, ஆண்ட்டி, எனக்கு ஒரு தோசை வேணும்…..தருவீங்களா” என வெட்கம் கலந்த ஆசையுடன் தன் கையை நீட்டியது.

குழந்தையை வாஞ்சையுடன் தன் மடியில் அமர்த்தி, தோசையை ஊட்டிக்கொண்டே, அதன் கதை முழுவதையும் முனியாண்டி சொல்லச் சொல்ல கேட்டுக்கொண்டாள், மரகதம். குழந்தைக்கு பாய் ஒன்றைத் தட்டிப்போட்டு படுக்க வைத்த பின், மேற்கொண்டு என்ன செய்வது என இருவரும் யோசித்து, பேசிக்கொண்டே இருந்ததில், நள்ளிரவு வெகு நேரம் ஆகிவிட்டது.

காலையில் எழுந்த குழந்தைக்கு, உடல் அனலாகக் கொதித்தது. பயத்தில் கை கால்கள் நடுங்கின. அழ ஆரம்பித்தது. முனியாண்டியும், மரகதமும் என்னவெல்லாமோ சொல்லி சமாதானப்படுத்த முயன்றனர். “காஃபி, டீ ஏதும் வாங்கி வரட்டா? உனக்கு என்னடா கண்ணு வேணும்? ஏன் அழுவற?” என்று பரிவுடன் வினவினர்.

“எனக்கு ஒண்ணும் வேண்டாம். என்னயத்தான் போலீஸ் ஸ்டேஷனிலே கொண்டுபோய் விடப்போறீங்களே! நேத்து ராத்திரி நீங்க பேசிக்கிட்டு இருந்தீங்களே! நான் உங்க கூடவே இருக்கேன்…ப்ளீஸ்…என்னய எங்கேயும் கொண்டு போய் விட்டுடாதீங்க…ப்ளீஸ்” என கெஞ்ச ஆரம்பித்தது.

குழந்தையைக் கட்டிப் பிடித்துக் கொண்ட மரகதம் “சரி..சரி…நீ எங்களோடேயே இருக்கலாம்டா கண்ணு, உன்னய எங்கேயும் கொண்டுபோய் விட மாட்டோம்டா, நீ சமத்து பாப்பா இல்லையா, அழக்கூடாது” என்று சொல்லி, தன்புடவைத் தலைப்பால் குழந்தையின் கண்களைத் துடைத்து விட்டு, அள்ளி அணைத்து முத்தமிட்டாள் மரகதம்.

திருவிழாவில் பலூன் விற்ற பணத்தை எண்ணி முடித்த முனியாண்டி, “செயற்கை முறையில் கருத்தரிப்பு செய்ய, தேவையான பணம் சேர்ந்து விட்டது தாயீ, எப்போது டாக்டர் ஐயாவைப் பார்க்கப் போகலாம்?” என வினவினான். “இதோ பாருய்யா மச்சான்! அந்த மாரியாத்தாவே இந்தப்பச்சப் புள்ளையை, நமக்குத் தேர் திருவிழாவிலே கொடுத்திருக்கும் போது, நமக்கு இன்னொரு குழந்தை எதுக்கய்யா வேணும்? இந்தப் புள்ளய நல்லபடியா வளர்த்து ஆளாக்கினா அதுவே போதுமய்யா! அந்தப் பணத்தை அப்படியே எடுத்துட்டுப் போயி, பக்கத்துல உள்ள இஸ்கூலிலே, இதை சேர்த்துப்பாங்களான்னு விசாரித்து விட்டு வாய்யா” என்றாள் மரகதம்.

திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் அருளால், ஒரே நாளில “தாயுமானவளான” தன் மனைவியை அள்ளி அணைக்கச் சென்ற முனியாண்டியைப் பார்த்து வெட்கத்துடன் சிரித்தது, குழந்தை விஜி.

– மே 2007
(“தினமலர் நிறுவனர் அமரர் டி.வி.ஆர். நினைவு சிறுகதைப் போட்டி 2005” இல் பரிசு பெற்ற கதை.)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *