கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: June 6, 2013
பார்வையிட்டோர்: 12,401 
 

நான்கு நாள் சிகிச்சைக்குப் பிறகு அசதியும் களைப்பும் மேலிட, முதுகுப் பையைக் கையிலேந்திக்கொண்டு, ரொறொன்ரோ மவுண் சினாய் மருத்துவ மனையிலிருந்து, யூனிவேர்சிற்றி அவெனியூ வாசல் வழியாக வெளியே வருகிறேன். இலையுதிர் காலத்து இளங்காலைக் கதிரொளியில் கண்கள் கூசின. இதமான காற்றும், மிதமான வெப்பமும் உடலுக்குப் புத்துயிரூட்டின.
யூனிவேர்சிற்றி அவெனியூ வழக்கம் போல, வாகனச் சன சந்தடியுடன் அல்லாடியபடி!

டாக்ஸி ஒன்றைக் கையசைத்துக் கூப்பிட்டு, பின்னிருக்கையிலேறி மெதுவாக அமர்கிறேன். ‘எங்கே போகவேண்டும்?’ எனக் கேட்பதற்கு, சாரதி பயன்படுத்திய எத்தியோப்பிய ஆங்கில ‘மணிப்பிரவாளத்தை’ மனம்விட்டு இரசிக்கும் ஆவலை, அவனது கேள்வியின் முடிவில் துருத்திக்கொண்டு நின்ற ‘சார்’ என்ற வார்த்தை திசை திருப்பிக்கொண்டது!

‘பின்னோக்காடி’ ஊடாக என்னையே நோக்கி நின்ற அவனது மஞ்சள்பூத்த கண்களைப் பார்த்து, மெல்லிய முறுவலிப்புடன் ‘மார்க்கம் – டெனிசன்’ என்கிறேன். நீண்ட பயணம் ஒன்று கிடைத்த உற்சாகத்துடன் வாகனத்தைத் துரிதப்படுத்தினான். இன்று பொதுப் போக்குவரத்து வாகனச் சேவை எனக்கு உகந்ததல்ல என்ற விளக்கம் இவனுக்கேன்?

உரையாடலைத் தொடரவும் உடலில் வலுவில்லை. இருக்கையின் முதுகணைப்பில் பிடரியைப் பின்னோக்கி மெதுவாகச் சரித்து, மெதுவாக மூச்சை உள்ளிழுத்து வெளிவிட்டு, தியானம் செய்யுமாப்போலக் கண்களை மூடுகிறேன்.

இன்று வீட்டில் சூல்கொள்ளவிருக்கும் சூறாவளி பற்றிய அச்சம் மனதை அலைக்கழிக்கிறது!

பொலிகண்டி, யாழ் குடாநாட்டின் உச்சந் தலையில் உள்ள ஒரு கிராமம். நான் பிறந்து வளர்ந்து, பத்தாம் வகுப்புவரை படித்துவந்த இடம். பசுமை மாறாத புகையிலை நாற்று மேடைகளும், கடலை அண்டிய தென்னை மரக்காடுகளும், ஊர்மனையை நிரப்பிய பனை மரக்கூடல்களும் ஒருகாலத்தில் அக்கிராமத்தின் அப்பாவித் தனத்தைச் சொல்லும் அப்பழுக்கற்ற அடையாளங்கள்!

அந்தக் கிராமத்தில் வாழ்ந்த கடைசிக் காலங்களில், நான்தான் எனது அடையாளங்களைப் பறிகொடுக்கத் துவங்கியதாக ஞாபகம்.

குமர்ப் பருவத்தை எட்டிய காலத்தின் பின்னரும் வீட்டுப் பின்வளவில் நின்ற கறுத்தக் கொழும்பான் மாமரங்களில் ஏறியிருந்து மாங்காய் பறித்துச் சாப்பிட்டிருக்கிறேன். அப்போதுதான் கிரிக்கட் விளையாடத் துவங்கிய தம்பிக்கு எப்படி ‘லெக் பிறேக், ஓஃப் ஸ்பின்’ பந்து வீசலாம் எனக் கற்றுக் கொடுத்திருக்கிறேன். அநாயாசமாகச் சீட்டியடித்தபடியே வீட்டு வேலைகளைச் செய்து வந்திருக்கிறேன். பையன்களுடன் சேர்ந்து சயிக்கிளில் கடற்கரைக்கு உலாத்தப் போய் வந்திருக்கிறேன். இப்படி, இன்னுமின்னும் ….. நிறையச் சொல்லலாம்!

அப்பாவுக்கு இது ஒரு பிரச்சினையேயல்ல. ‘வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டி வைக்கும் விந்தை மனிதரை’ அடியோடு வெறுக்கும் வித்தியாசமான பிறவி, அவர். அம்மாவின் உபன்யாசங்கள்தான் அடிக்கடி ஆரோகண அவரோகணங்களின் எல்லைகளைத் தொட்டுத் திரும்பின.

போரின் உக்கிரம் பொறுக்க முடியாமல் 2002 ஆரம்பத்தில் கொழும்புசென்று தங்கியிருந்த சில மாதங்களிலும், 2003 பிற்பகுதியில் கனடாவந்து பதினோராம் வகுப்பில் படிக்கத் துவங்கிய காலங்களிலும் எனக்குச் சினேகிதிகள் குறைவு. இங்கு பள்ளி வகுப்புகளிலும் தமிழ் வகுப்புகளிலும் நான் சந்தித்த தமிழ் மாணவமணிகள் பரதம் என்றும், வீணை என்றும், வயலின் என்றும், கர்நாடக சங்கீதம் என்றும் பெற்றோருடன் அள்ளுண்டு, அலைந்து திரிந்தார்கள். நான் அவற்றையெல்லாம் அலட்சியம் செய்து வாளாவிருந்தமை அம்மாவுக்குக் கவலை!

பதிலாக, ஆங்கிலத்தை அதிக சிரத்தையெடுத்துக் கற்றுக்கொண்டேன். பள்ளிப் படிப்பில் படு சுட்டியாக விளங்கினேன். கடுமையான உழைப்பு என்னை ஹமில்ரன் பல்கலைக் கழகத்தில் உயிரியல் விஞ்ஞானப் பட்டப் படிப்புக்கு அனுப்பி வைத்தது. அவ்வப்போது பல்துறைசார் தமிழ் ஆங்கில நூல்களைப் படித்தேன். இவ்விதமாக, நாலாதிசைகளிலும் தேடியலைந்து, என் அறிவை நான் பெருக்கிக்கொண்டமை அப்பாவுக்குப் பெருமை!

பல்கலைக்கழக விடுதி வாழ்க்கை நாட்களில்தான் எனக்குள் புதுவித உலகொன்று கருக்கட்டத் துவங்கியதை நானாக அவதானிக்கலானேன்! உலகாலும், உறவுகளாலும், அண்டை அயலாலும், புறச் சூழலாலும் எனக்கென நிச்சயிக்கப்பட்ட உலகம் எனக்குரியதல்ல என்பதை உணரலானேன். என் உடலின் மென்மையையும் பெண்மையையும் நானே வெறுக்கலானேன்!

இந்த வெறுப்பு, புதியதொரு ஆளுமை எனக்குள் சுயங்கொள்ளக் காரணமாயிற்று. எனது குரல் கரகரத்தது. உடலின் தசைநார்கள் முறுக்கேறின. நடையுடை பாவனைகளில் மாற்றங்கள் முளைவிடலாயின. ஆரம்பத்தில் வியிப்பாகவும் விந்தையாகவும் இருந்தது. சமயங்களில், ஒருவித வெட்கம் கலந்த, குழப்பமாகக்கூட இருந்தது. ஆயினும், நாளாக நாளாக எனது உடலில் ஏற்படத்துவங்கிய மாற்றங்களை மனம் அங்கீகரிக்கத் துணிந்தது.
புதிய மனக் குருவியின் சிறகடிப்பில் மனம் சிலிர்க்கலானேன்!

தலைமுடியை ஒட்ட வெட்டியெடுத்துக்கொண்டேன். அம்மா ஆசையோடு வாங்கித் தந்த தோடுகளைக் கழற்றிக்கொண்டேன். ஆடைகளையும் வாசனைப் பொருட்களின் வகைகளையும் மாற்றிக் கொண்டேன். கையோடிருந்த இரண்டொரு சாறி, சுடிதார்களைச் சுருட்டி வைத்துக்கொண்டேன். சிநேகிதிகளைத் தவிர்த்துக்கொண்டேன். விடுதலை நாட்களிலும் வீட்டுக்குப் போய்வருவதைக் குறைத்துக்கொண்டேன். அருமை பெருமையாகப் போய்வந்த சமயங்களிலும், ஏதோ சாக்குப் போக்குச் சொல்லிவிட்டு, ஒருசில மணித்தியாலங்களில் ஓடிவந்துவிடுவேன்.

கனடாவில் தமிழ்ப் பெற்றாருக்கும் பெண்பிள்ளைகளுக்கும்; அவர்களது கலியாண காலங்களில்தான் அநேகமாக, முரண்பாடுகள் முளைவிடத் துவங்குகின்றன. திடீரென எவனையாவது வீட்டுக்குள் கூட்டிவந்துவிடுகிறார்கள் அல்லது சொல்லாமல் கொள்ளாமல் எவனுடனாவது குடும்பம் நடத்தப் போய்விடுகிறார்கள். இதனால் தமது பிள்ளைகளுக்கு ஊருலகறியத் தாம் விரும்பியவாறு கலியாணத்தைக் கோலாகலமாகச் செய்து பார்க்கும் வாய்ப்பைப் பெற்றோர் இழந்துவிடுகிறார்கள். இதன் காரணமாக, முன்கூட்டியே ஆகக் குறைந்தது ஒரு பூப்பு நீராட்டு விழாவையோ அல்லது ஒரு அரங்கேற்றத்தையோ தன்னிலும், செய்துபார்த்து மகிழ்ந்துவிட வேண்டும் என்பதில் இவர்கள் குறியாக இருக்கிறார்கள். குதிரைவண்டி முதற்கொண்டு ஹெலிகொப்டர் வரையிலான செலவுகள் உட்பட, நாற்பதாயிரம் ஐம்பதாயிரம் என்று ஆடம்பரமாகப் பணத்தை அள்ளிக் கொட்டவும் தயாராக இருக்கிறார்கள்.
என்னுடைய பூப்பு நீராட்டு விழாவை விமரிசையாகக் கொண்டாட, ஊர் நிலமை அப்போது சாதகமாக இருக்கவில்லை. கனடா வந்தபின்னர் ‘எமது’ எனச் சொல்லப்படும் கலை எதையும் நான் கற்றுக்கொள்ளவில்லை. அதனால் அரங்கேற்றம் செய்து பார்க்கும் அரிய வாய்ப்பும் அம்மாவுக்குக் கிடைக்கவில்லை. கலியாணம் ஒன்றுதான் அம்மாவின் கைவசமிருக்கும் ஒரேயொரு துருப்புச் சீட்டு. அதையும் கைநழுவவிட அம்மாவுக்கு அறவே விருப்பமில்லை.
தமிழ்நாட்டுக்குப் போய் வருபவர்களிடம் சொல்லிவைத்து, விலையுயர்ந்த காஞ்சிவரம் கூறைச் சாறிகளை இறக்குமதி செய்து வைத்திருக்கிறாள். சாதாரண சாறிகளோ, புதுப்புது வர்ணங்களிலும் டிசைன்களிலும் என்று ஒரு சாறிக் களஞ்சியமே வைத்திருக்கிறாள். மலேசியா வழியாக வந்தவர்களின் கை கால் காது மூக்கு கழுத்து இடுப்பு இன்னோரன்ன உடலுறுப்புகளை அலங்கரித்தவாறு வந்துசேர்ந்த தங்க நகைகளை, பெட்டி பெட்டியாக வாங்கிப் பூட்டி வைத்திருக்கிறாள். ‘பியூட்டி பார்ளர்’ ஒன்றில் உள்ள அத்தனை அழகு சாதனங்களில் ஒன்றையும் விடாமல் வாங்கி கண்ணாடிப் பெட்டிக்குள் காட்சிக்கு வைத்திருக்கிறாள். அழைப்பிதழ் முதற்கொண்டு அன்பளிப்பு ஈறாக, சகலதும் ஏற்கனவே தமிழ்நாட்டில் தேர்வு செய்யப்பட்டு, என் கலியாண நாளுக்காக அங்கு காத்துக் கிடக்கின்றன.

அம்மாவை நினைக்கத்தான் பாவமாக இருக்கிறது!

பட்டப்படிப்பு முடிந்து, ஹமில்ரனில் உள்ள உயிரியல் தொழில் நுட்பக் கம்பனி ஒன்றின் ஆய்வுப் பிரிவில் இரண்டு வருடங்களுக்கு மேலாகப் பணியாற்றி வருகிறேன். வேலைநேரம் போக, எஞ்சிய வேளைகளில் என்னைப் பற்றிய ஆய்வுகளில் தீவிரமாக ஈடுபட்டேன்.

இணையங்கள், ஆய்வு நூல்கள் போன்றவற்றுள் இடையறாது என்னைத் தேடினேன். பல நிறுவனங்களுடன் தொடர்புகளை மேற்கொண்டேன். தகவல்களைத் திரட்டிக்கொண்டேன்.
பல்கலைக் கழகத்திலும் சரி, எனது பணியிடத்திலும் சரி, என்னில் ஏற்பட்டு வரும் மாற்றம் மற்றவர்களுக்கு ஒரு பிரச்சினையே அல்ல. அறிவியலாளர், கல்வியாளர், நவீன பண்பாட்டாளர், முற்போக்குச் சிந்தனையாளர்கள் மத்தியில் எங்களைப் போன்றவர்கள் பற்றிய விபரத் தெளிவும், புரிந்துணர்வும் இப்போதெல்லாம் நிறையவே காணப்படுகின்றது. ‘குறைவான சமூக வலு’ கொண்ட ஒரு சிறுபான்மையாக எங்களையும் எங்கள் பிரச்சினைகளையும் இவர்கள் அனுதாபத்தோடு அணுகுகின்றார்கள். எங்களை ஏளனமாகவும் தரக்குறைவாகவும் பார்ப்பவர்களது எண்ணிக்கை குறைந்து வருகிறது.

எனது பாலின அடையாளம் என்பது நான் ஒரு ஆண் அல்லது ஒரு பெண் அல்லது வேறு ஏதோவொன்று என்பதான ஓர் உள்ளுணர்வுதான். பிறப்பால் நான் பெற்றிருந்த பால் வகையுடன் ஒத்துப்போக முடியாத – ‘ட்ரான்ஸ்ஜென்டர்’ என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் – ஒரு பால்மாறுநராக நான் இருப்பதற்கு என்னைப் பழிசொல்லி என்ன பயன்? இடைநடுவே எனக்குள் முளைவிட்ட இந்த உள்ளுணர்வுக்கும் உடலியல் மாற்றங்களுக்கும் நான் பொறுப்பாளியல்லவே. மரபியல்சார் பாதிப்பு, என் தாயிடம் காணப்பட்ட முன்மகப்பேற்று ஓமோன் அளவு மட்டம், எனது குழந்தைப் பருவ – இளமைக்கால அனுபவங்கள் போன்ற இன்னும் பலவற்றில் ஒன்றோ, பலவோ அல்லது எல்லாமோ இதற்குக் காரணங்களாகலாம்.

என்னுள் ஏற்பட்ட மாற்றத்தை எதிர்கொள்வற்கென, துணிச்சலுடன் மனநல நிபுணர் ஒருவரைச் சந்தித்தேன். அவரது ஆலோசனைகள் தைரியம் தந்தன; தன்னம்பிக்கை ஊட்டின. அவரது பணிப்பின் பேரில் எனது உடலியல் மாற்றங்கள் குறித்து மருத்துவர்களைக் கண்டு, ஆரம்ப மருத்துவ உதவிகளைப் பெற்றேன். பால்மாறுநர்கள் பொது அமைப்புக்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தினேன். என்னை ஒத்த பலரது நட்பினைத் தேடிக்கொண்டேன். பால்மாறுநர்கள் உடல் நலனுக்கான உலகத் தொழின்முறைச் சங்கத்தின் (WPATH) ஆலோசனைகளும் வழிகாட்டல்களும் எனக்குப் பெரிதும் உதவின. எனது வாழ்வுரிமையை வலுப்படுத்திக் கொள்வதற்கான எனது இடையறாத போராட்டத்தின் ஓர் அங்கம்தான் இப்போது நான் செய்தெடுத்துக்கொண்ட பாலுறுதிப்பாட்டுச் சிகிச்சை!

தாராண்மை ஜனநாயகத்தின் தந்தை எனத் தன்னைத் தானே பீத்திக்கொள்ளும் அமெரிக்கா போலன்றி, என்போன்ற சிறுபான்மையினருக்கென்று பிரத்தியேகமான சட்டப் பாதுகாப்புகளைக் கனடா வழங்கியுள்ளது. இருந்தும், வேலைவாய்ப்பு, வீட்டுவசதி, உடல் நலப் பராமரிப்பு, கல்வி, சட்டத்துறை, குடும்பம் என்று வரும்போது, மிக ‘நுட்பமான’ பாகுபாடு இங்கும் நிலவி வருகின்றது. இவ்வாறான சூழ்நிலையில், பிறரது தாக்குதல்களுக்கு ஆளாதல், சமூக நிராகரிப்பு, பாகுபாடு போன்றன காரணமாக அளவுகடந்த ஆவல், பதற்றம், மன அழுத்தம் என்பன, ஒருவரை உளக் கோளாறு நிலைக்கு இட்டுச்செல்லும் ஆபத்தும் உண்டு. வெள்ளையர் அல்லாதவர்களுக்கு இதன் பாதிப்பு இன்னும் இன்னும் அதிகம். இதனால் வெறுப்புக் குற்றங்களுக்கு இரையாவதுடன், சமயங்களில், அவற்றைச் செய்பவர்களாகவும் பால்மாறுநர்கள் காணப்படுகின்றமை துயரந்தான்!

தமிழர் வரலாற்றுக்குள் நான் மேற்கொண்ட தேடுதல்களோ பல சுவையான தகவல்களைச் சொல்லித் தந்தன. பால்மாறுநர்களை, சங்க இலக்கியங்களும், அறநூல்களும், பக்தி இலக்கியங்களும், காப்பியங்களும் அரவாணிகள், அச்சுமாறிகள், ஆண் பெண்ணாகிகள், பரத்தையருக்கு ஒப்பானோர், அதுகள், அலிகள், ஊனங்கள், பேடிகள் என்று பல்வேறு பெயர்களால் குறிப்பிடுகின்றன. பால்மாறுநர்களை இழிவானவர்களாகவும் கேள்விக்குரியவர்களாகவும் ஒதுக்கிய வரலாறு அன்று தொட்டு இன்றுவரை தமிழ் நாட்டில் தொடர்கிறது. பெயரளவில் ‘திருநங்கையர்’ கௌரவமான பெயர்தான்! ஆனால் அந்தப் பெயருக்குப் பின்னால் ஒழிந்திருக்கும் கேலியும் அவமதிப்பும் கொஞ்ச நஞ்சமல்ல!

ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை எதையுமே அடக்கி வாசிப்பார்கள்ளூ ஆனால் ஆழ ஊடுருவி வாசிப்பார்கள். இவர்களுக்கு தன்பாலின வேட்கையாளர்கள், பால்மாறுநர்கள் போன்றவர்களைப் பற்றிப் பேசுவதற்கே கூச்சம்! அவர்களைச் சமூகத்தின் சாபக்கேடுகள் என்று அருவருப்புடன் பார்க்கிறார்கள். அவர்களுடன் பேசுவது, பழகுவது ஒருவகைத் துடக்குச் சமாச்சாரம் என்று முகம் சுழிக்கிறார்கள். இதனால்தான், இந்த சிறுபான்மையினரும் தங்களைத் தமது சமூகத்தவரிடையே இனங்காட்டிக்கொள்ளத் துணிச்சலற்றவர்களாக ஒதுங்கி வாழ்ந்து வருகிறார்கள்.
எது எப்படியாயினும், ஒன்றை மட்டும் என் உள்மனம் உறுதியாக நம்புகிறது!

இயற்கையின் படைப்பு விநோதங்களில் நானும் ஒன்று! சற்று வித்தியாசமான ஒன்று; அவ்வளவுதான்! இந்த வித்தியாசத்தின் அடிப்படையில் அவமானத்தின் ஓர் அடையாளமாக என்னையே நான் ஒருபோதும் அவமதிக்கமாட்டேன். அதைப் பிறர் செய்வதையும் அனுமதிக்கமாட்டேன். இது உறுதி! இதில் எந்தவிதமான …..
’ மார்க்கம் – டெனிசனில் எங்கே போகவேண்டும், சார் …….’ என்ற டாக்ஸி சாரதியின் கேள்வியுடன் நினைவு கலைந்து திரும்பியது.
விலாசத்தைச் சொல்லி வீடுபோய்ச் சேர்ந்தேன்.

கதவைத் திறந்து உள்ளே நுழைந்த போது, புதுரக ஊதுபத்தி வாசனையை என் முகர்வுப் புலன் சரிவர மோப்பம் பிடித்தறிந்தது. ஏதோவொரு பக்திப்பாடலை அம்மாவின் பாட்டுப் பெட்டி தன்பாட்டில் பாடிக்கொண்டிருக்கிறது. அம்மா, சாமி அறையில் என்பதற்கு அவை சாட்சியங்கள். அப்பா வேலைக்குப் போயிருப்பார். தம்பி வகுப்புக்குப் போயிருப்பான். வீடு ஓய்ந்துபோயிருந்தது.

முதுகுப் பையைக் கீழே வைத்துவிட்டு, ஆளரவம் ஏதுமின்றி மெதுவாக நடந்துசென்று சாப்பாட்டு மேசைக் கதிரை ஒன்றில் அமர்ந்துகொள்கிறேன். ஏதோ அசுமாத்தம் அம்மாவின் காதை எட்டியிருக்கவேண்டும். சாமியறைக் கதவுக்கு வெளியே வந்து எட்டிப் பார்த்த அம்மாவுக்கு, இன்ப அதிர்ச்சியாக நான் அமர்ந்திருந்தேன்.

‘என்ன இது, சொல்லாமல் கொள்ளாமல் ……!’ மேற்கொண்டு பேசமுடியாத பெருமகிழ்ச்சி, அம்மாவுக்கு!

‘எனக்கொரு கோப்பி போட்டுத்தாருங்கோ… களைப்பாயிருக்கம்மா?’

‘குரல் கம்மிக் கிடக்குது…..ஏன் சுதா, இதென்ன கோலமம்மா? ஏதும் சுகமில்லையோ, பிள்ளை?’ சமயலறைக்குள் ஓடிப்போய் அவசரமாகக் கோப்பி தயாரித்துக்கொண்டே அம்மா கேட்டாள்.

சுதாகரி என்ற என் பெயரின் சுருக்கம்தான் சுதா. பெயரைச் சுதாகரன் என்று இப்போது மாற்றிக்கொண்ட பின்னரும், சுதாவே என்னுடைய சுட்டிப் பெயராகப் பொருந்திவிட்டது. ‘பெயரில் என்ன இருக்கிறது?’ என்று ஷேக்ஸ்பியர் முதல் சேரன் வரை பலரும் சொல்லிவிட்டார்கள். ஆனால் எனது பெயரில்தான் என் சமூக அடயாளமே தங்கி இருக்கின்றதே!

‘அம்மா, கோப்பியை முதல் தந்திட்டு, எனக்கு முன்னாலை வந்து கொஞ்ச நேரம் இருங்கோ. ஒரு அரை மணித்தியாலம் ஆறுதலாக உங்களோடை கதைக்க வேணும்’

சூடான நெஸ்கஃபே கலந்த கோப்பியை ஆவலோடு உறிஞ்சிக் குடிக்கிறேன். எனக்கு நேரே முன்னாலுள்ள கதிரையில் வந்து உட்கார்ந்தபோதுதான், அம்மா என்னைக் கூர்ந்து நோக்கினாள்.
சிறிதுநேர மௌனத்தின் பின்னர், அம்மாவை நேருக்குநேர் பார்க்கத் திராணியற்ற நிலையில், வெற்றுக் கோப்பிக் கிண்ணத்தினுள் விழிகளைக் வீழ்த்திக்கொண்டு மெல்லச் சொல்லத் தொடங்கினேன்.
ஊரில் நாங்கள் வாழ்ந்த கடைசிக் காலம் தொட்டு, இன்றுவரை எனக்குள் நிகழந்த மாற்றங்களை ஒன்றும் விடாமல் அம்மாவிடம் ஒப்புவித்து முடித்தபோது எனக்கு மூச்சு முட்டியது! நெஞ்சு இலேசாகப் படபடத்தது! தலையைத் தூக்கி அம்மாவின் முகத்தைப் பார்க்கவிடாமல் என்றுமில்லாத பயம் ஒன்று என்னைத் தடுத்தது!
ஆழமாக மூச்சை உள்ளே இழுத்துக்கொண்டு அம்மாவை நிமிர்ந்து பார்த்தேன். அங்கே பிரளயம் இல்லை; பூகம்பம் இல்லை; சூறாவளி இல்லை!

முகத்தில் சலனமேதுமின்றி, என்னையே பார்த்தபடி கல்லாய்ச் சமைந்து போயிருந்தாள், அம்மா!

அம்மாவை நேர்கொண்டு பார்க்க எனக்குத் திராணியில்லை. குனிந்த தலையுடன் கண்களை மூடியவாறு சொன்னேன் –

‘முந்தாநாள்தான் அறுவைச் சிகிச்சை செய்து, என்னுடைய ரெண்டு மார்பகங்களையும் வெட்டியெடுத்தார்கள்.’

இருள் கவிந்த மௌனம் இருவர் மனங்களையும் பாரமாக அழுத்தியது!

ஒருசில மணித்துளி நிசப்தத்தைக் கலைத்தபடி பின்புறமாக எழுந்துவந்து, என்னை அணைத்த அம்மாவின் ஸ்பரிசம் சில்லிட வைத்தது! கட்டையாக வெட்டிய என் தலை முடியைக் கோதிவிட்டவாறு, உச்சி முகர்ந்து, தளதளத்த குரலில் அம்மா கேட்டாள் –

‘ஏனிப்படித் தன்னந் தனியனாக…? ……. எனக்கு ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாமே…!’

மெதுவாகத் தலையைத் தூக்கி அம்மாவைப் பார்த்தேன். என் அம்மாவின் கண்களில் கண்ணீத் துளிகள் திரண்டுகொண்டிருந்தன.
நான் அம்மாவின் கைகளை இறுகப் பற்றிக்கொண்டேன்!

– காலம், டிசெம்பர் 2012

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *