கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: March 1, 2016
பார்வையிட்டோர்: 8,877 
 

அவன் கேட்டுக்கு வெளியேயிருந்து கத்திக் கொண்டிருந்தான். கூடவே கேட்டையும் லொட்..லொட்டென்று தட்டிக் கொண்டே இருந்தான். எரிச்சலுடன் போனேன். “ ஏய்! எதுக்கு கேட்டை தட்ற?. என்னாய்யா வேணும்?. ”– அவன் சிவப்பு நிற துணியால் நரிக்குறவர்கள் மாதிரி தலைப்பாகை கட்டியிருந்தான். கழுத்தில் கருகமணி, வெற்றுடம்பின் மேலே ஒரு பச்சைநிற சால்வை போர்த்தியிருந்தான். கையில் மந்திரக் கோல் மாதிரி ஒரு கோலை வைத்திருந்தான். ஒரு தோல் பை, திட்டமான அடர்ந்த மீசை. ஒடிசலான தேகம். இவன் பிச்சை கேட்கிற ஆள் போல தெரியவில்லையே, குடுகுடுப்பைகாரனா?, அதுவும் இல்லை. கையில் உடுக்கை இல்லை.. “ஏய்!. என்னா வேணும்?.”—அவன் ராகத்துடன். “சோசியம், கைரேகை, மாந்திரீகம், குறி சொல்றதே, .” —-எனக்கு சிரிப்பு வந்துவிட்டது. “எல்லாத்துக்கும் நீ ஒருத்தனேவா?. மல்டி சேனல். எதுவும் வாணா போ..போ….”—திரும்பினேன். ”கொஞ்சம் நில்லு ஷாமீ! முழுங்கிட மாட்டேன். ஒரு நிமிஷம் வெளிய வா ஷாமீ., ஜக்கம்மா உனுக்கு நல்லவாக்கு சொல்றா..நல்லவாக்கு சொல்றா. காசு, பணம் குடுக்க வேணாம். ஜக்கம்மா சொல்றா…ஜக்கம்மா சொல்றா…”

“அட யார்றா இவன்?. முழுங்கிடுவியா நீ?.”—–அலட்சியமாக அவனைப் பார்த்தேன். எனக்கு இதிலெல்லாம் நம்பிக்கை இல்லை. என்ன பண்ணிடுவான்?. கேட்டை திறந்தேன். “ஒத்த சொல் சொல்றேன் கேளு. ஜக்கம்மா சொல்றா…”—-மேலே வானத்தை பார்த்து கண்களை மூடி எதையோ முணுமுணுத்தான்.. அடுத்து கண்களை திறந்து சிட்டிகை போட்டு விட்டு, மூடிய தன் இடது கைக்குள் உஹ்…உஹ்… என்று ஊதினான். என்னை தலை முதல் கால் வரை பார்த்துவிட்டு “உனுக்கு தொப்புள் பக்கத்தில புளியங்கொட்டை திட்டத்தில ஒரு கருப்பு மச்சம் இரிகிது. உண்டா இல்லையா?.” “ம்..ம்..மேல சொல்லு.”— “உண்டா இல்லையா?.” “ம்.சரி.” “ம்… உன் ஆண்குறி மேல, நடு தண்டுல உளுந்து சைஸ்ல ஒரு மச்சம் இரிகிது. உண்டா இல்லையா?.”——அடப்பாவி நான் முழுசா பேண்ட் ஷர்ட்லதானே நிற்கிறேன். எப்படி தெரிஞ்சது?. நெளிந்தேன். நான் வீட்டிலே தனியாக இருக்கிறதாலே உள்ளே கொஞ்சம் கலக்கம் வர்றதை தடுக்க முடியவில்லை.. “அப்புறம்?.” “ஷாமீ! கொஞ்ச நாளுக்கு முன்ன பெரிய சொத்து ஒண்ணு உன் கைக்கு வந்திரிகிது..”—— எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இதெல்லாம் எப்படி இவனுக்கு தெரிஞ்சது?. ரெண்டு வாரங்களுக்கு முன்னாலதான் என் மாமனார் காஞ்சிபுரம் டவுன்ல, மெயினான இடத்தில இருந்த ரெண்டு கிரவுண்டில் கட்டப்பட்ட பங்களாவை தன் மூத்த பேரன், (என் மகன்) பேருக்கு எழுதி வெச்சிருந்தார்.. “அட எப்படீய்யா?.” “அதான் உனுக்கு இப்ப தீவினையா வந்து மூண்டிரிகிது.” ” எ..எ..எ..என்னது…என்னது?. சரி..சரி..உள்ளேவா.”

உள்ளே அவன் சுவாதீனமாக வந்து சோபாவில் அட்டணக்கால் போட்டு உட்கார்ந்துக் கொண்டான். எனக்கு உள்ளே சற்று திக் கென்று இருந்தது. சொந்த வீடு மாதிரி நம்மளை நெட்டித் தள்ளி விட்டு வந்து உட்கார்றானே?. வம்பை விலைகொடுத்து வாங்கறோமோ?. சே! எதுக்கு பயப்படணும்?.என்னா பண்ணிடுவான்?. “நீ பயப்படாத ஷாமீ. உன் லக்னம் என்னா சொல்லு.” ”ஏன் எதுக்குய்யா?.” “சொம்மா சொல்லு ஷாமீ. ஜக்கம்மா கேக்கிறா. பயந்து சாவாதே. நடந்ததை, நடப்பதை, நடக்கப் போவதை, கரீட்டா சொல்லுவா.” “ விருச்சிக லக்னம்.” “ராசி?” “கடகம்.” “நட்சத்திரம்?.”

“ஆயில்யம்.” —–அவன் விரல்விட்டு கணக்குப் போட ஆரம்பித்தான்.. “பூ ல ஒண்ணு சொல்லு.”—-எனக்கு உள்ளே குடைய ஆரம்பித்தது. வித்தியாசமா இருக்கட்டுமே. “ பாரிஜாதம்.” “பொம்பள பேரு ஒண்ணு சொல்லு.” “யோவ்! வாணாம் முதல்ல நீ வெளியே போ.”——– அவன் அதை காதில் வாங்கிக் கொண்டதாகவே தெரிய வில்லை. .கண்களை மூடிக் கொண்டு உஸ்..உஸ்..என்று சத்தம் கொடுத்துக் கொண்டே இருந்தான். உரக்க பொம்பள பேரு ஒண்ணு சொல்லு என்று அதட்டினான். ஐயோ என்ன மரியாதை குறையுது?.. எனக்கு லேசாக வயிறு பிசைய ஆரம்பித்தது. சே! இவனை உள்ளே சேர்த்திருக்கக் கூடாதோ?.நாம வேற தனியா இருக்கிறோம். “ஜானகி.” ——அவன் இப்பவும் கண்களைத் திறக்க வில்லை. ராகம் போட்டு சொல்ல ஆரம்பித்தான். “கேளப்பா. ஜானகின்றது இந்த வூட்டுக்கு பாத்தியப்பட்ட புண்ணியவதி பேரு. சொல்றத கவனமா கேட்டுக்கோ. குறுக்கே கேள்வி கேட்டு குறுக்கு சால் ஓட்டாதே. நான் சொல்ற சொல்லு அத்தினியும் சத்தியம். காக்கையர் நாடி சோசியத்தில இரிகிது. ஜக்கம்மா சொல்றா…ஜக்கம்மா சொல்றா.. ”அஷ்டமத்தில் சனியும், பாம்பும் கூடி, நல்லவன் பார்வை போயி , ஒரு பாவி பார்த்தானாகில் செய்வினையால் நாசமாவான்.”—இது உனுக்கு ஆபத்தான நேரமப்பா. பில்லி, சூனியத்தினால பெருங்கஷ்டம் வந்து சேரப்போவுது. உனுக்கு கெட்டநேரம் வந்து இப்ப ஒரு மாசம் ஆவுதப்பா. வூட்ல சண்டை சச்சரவு, நல்லது செஞ்சாலும் பொல்லாப்பா போவுமப்பா. ஒடம்புல பிணி, பீடை, தரித்திரம், செய்தொழில்ல நஷ்டம், இன்னொரு ஆபத்தான விசயஞ் சொல்றேன் . இந்த வூட்ல ஒரு உசுருக்கு ஆபத்து இரிகிதப்பா. கொள்ளி வைக்கவேண்டிய நேரம் இரிகிதப்பா. தப்பாது. இன்னும் கேளு, ரெண்டு மாசத்தில. செய்வினையை எடுத்துட்டா, ஆயுசு தக்கும், தவறிப் போனா அப்பனே! கூட்டை விட்டு காத்து போவுமடா. ஜக்கம்மா வாக்கு தப்பாது.” “என்னய்யா சொல்ற? உன்னை உள்ளே விட்டது தப்பு. இதையெல்லாம் நானு நம்பறவன் இல்லைடா.”—அவன் நான் சொன்னதை காதிலேயே வாங்கவில்லை ”ஸ்ரி ஸாகர மது காதி இஸ்ஸி. திவ் தகி கிறீம் நது விகா”—- இப்படி விளங்காத மொழியில என்னவோ மந்திர உச்சாடனம் போல எதையோ சொல்லிக்கொண்டே, தன் ஜோல்னா பையில இருந்து ஈட்டி மாதிரி ஒரு அடி நீளம், செம்பால செஞ்சது வெளியே எடுத்தான்.. ”கொஞ்சம் குங்குமம் கொண்டா.”—-எனக்கு நம்பிக்கை இல்லைன்னாலும் உள்ளே குளிரடித்தது. “யோவ்…யோவ்!..பாவி என்னய்யா?.” —-அவனுக்கு சுய நினைவு இருக்கிற மாதிரி தெரியல. கண்களை மூடிக் கொண்டுதானிருந்தான். குங்கும டப்பாவை கொண்டு வந்து கொடுத்தேன். ஈட்டிமேல குங்குமத்தால பொட்டு வெச்சி விட்டான். மூடும்போது குங்கும டப்பி தவறி கீழே விழுந்து குங்குமம் சிதறியது. ஈட்டியை எதிரில் படுக்க வெச்சான். உரக்க மந்திர உச்சாடனம் பண்ண ஆரம்பிச்சான். ”ஓம் மியா காடது வியா, தவா ஓம் மியா காடது வியா.— திடுக்கென்று தன் உடம்பை சிலிர்த்துக் கொண்டான். அப்போது அவன் கண்கள் அகல விரிந்து நிலை குத்தி நிற்பதைப் பார்க்க நடுக்கமாக இருந்தது. நாலைந்து தடவை கொட்டாவி விட்டான். கொஞ்சம் தெளிவுக்கு வந்தபோது என் பக்கம் திரும்பி. “ஒரு விசயஞ் சொல்றேன் பயப்படாத, இந்த இடத்தை வுட்டு நவுராத. இப்ப இந்த வூட்டுக்குள்ள காட்டேரி இரிகிது.”— சொல்லிவிட்டு செம்பாலான ஈட்டியுடன் ஆவேசம் வந்தவனைப் போல கத்திக் கொண்டே வெளியே பாய்ந்தான். இப்போது எனக்கு அங்கே தனியாக இருக்க சற்று அச்சமாக இருந்தது. அமானுஷ்யமாக இங்கே யாரோ அல்லது எதுவோ இருப்பது போல தோணுது. சே! என்ன இது முட்டாள்தனம்?.பேயாவது, பூதமாவது?. மனிதர்களின் வாழ்வில் பாதி நாட்களை தோற்றப்பிழை மயக்கங்களும், பிரமைகளுமே ஆளுகின்றன. அவற்றின் விளைவுகள்தான் பேய் பிசாசு, பூதம், காட்டேரிகள் என்பதோடு கடவுளும் கூடத்தான். இது என் அபிப்பிராயம்.

அவன் கேட்டைத் திறந்து வெளியே ஓடினான். இங்கே எனக்கு பயத்தில் மாலை மாலையாய் வியர்வை ஊற்றித் தள்ளுகிறது. சே! எல்லா முரண்பாடுகளும் இந்த புத்திக்குள்ளயேதான் இருந்து தொலைக்குது. இப்போது ஒரு விஷயம் புரிகிறது. எனக்கும் அமானுஷ்யங்களின் மேல் நம்பிக்கை இல்லையென்றாலும் அது பற்றிய பயம் மட்டும் கொள்ளையாக இருக்கிறது, எல்லோரையும் போல. கொஞ்சநேரம் கழிச்சி வந்த ஜக்கம்மாவிடம் சந்தேகத்தைக் கேட்டேன். ”ஏம்பா! காட்டேரின்றது பொம்பள பூதந்தானே?.”—- என்னை புழுமாதிரி பார்க்கிறான்.

“ ஏன் குடும்பம் நடத்தப் போறீயா?. த்தூ..!. ஜக்கம்மா! இந்த மூட ஜென்மத்துக்கு உள்ளதை உள்ளபடி சொல்லு. கேட்டுக்கோ! எதிரி ஒரு வாரத்துக்கு முன்னாலதான் ஏவல் செஞ்சிரிகிறான். ரத்தக்காட்டேரி ஏவல். மந்திரம் உச்சாடனம் பண்றப்போ அது நம்ம எதிர்ல வந்து நின்னுக்குனு இருந்துச்சே கவனிச்சியா?. வேலுக்கு பொட்டு வெச்சப்போ குங்கும டப்பியை அது கீழ தட்டி வுட்டுட்ச்சி பார்த்த இல்லே?..”

”ஐயய்யோ! இங்க இருந்திச்சா?.அ…அ…அப்ப குங்கும டப்பி கைதவறி விழலியா?.”——- ஓ! ஒருவேளை பேய் என்ற கான்செப்ட் நிஜந்தானோ?. வறட்சியில் , நாக்கு பிசறுகிறது., பிடரி பக்கம் எதுவோ ஜிவ்வென்று கவ்வுகிற மாதிரி இருந்தது.

“யாரு ஏவல் விட்டிருக்கிறது?. எனக்கு அப்படிப்பட்ட எதிரிங்க யாரும் இல்லீங்களே.”—என் குரல் எனக்கே அழுகிற மாதிரி இருந்தது. “அதுக்கு வெளக்கு வெச்சி பாக்கோணும். இனிமே உன் வூட்டுக்குள்ளே காட்டேரிய நீ பிரத்தியட்சமா பார்க்கலாம் ஷாமீ. அது நாய் மாதிரி, பொம்பள மாதிரி, கெழவி மாதிரி ராத்திரியில தோத்தரிக்கும்.வீட்டுக்குள்ள திமு திமுன்னு யாரோ ஓட்ற மாதிரி, குதிக்கிற மாதிரியெல்லாம்சத்தம் குடுக்கும். பயப்படாத. திடீர்னு கன்னங்கரேல்னு எதிரேவந்து நின்னு பயமுறுத்தும். சீக்கிரமா செய்வினையை எடுக்கப் பாரு. நான் உத்திரவு வாங்கிக்கிறேன் ஷாமீ. என் தட்சணை ஐந்நூறு குடு.”—அவன் எழுந்துக் கொண்டான். எனக்கு உள்ளே தடதடவென்று ஆடியது. அட நாறப்பயலே! நிம்மதியா இருந்தேன், இப்படி ஒரு பீதியை கெளப்பி விட்டுட்டு… .

“யோவ் ஜக்கம்மா! என்னாய்யா! இப்படி ஒரு பயத்தை கெளப்பி விட்டுட்டு போறன்றே. இதுக்கு என்னா செய்யணும்னு சொல்றா.” ”ஷாமீ! செய்வினையை எடுக்கிறதுக்கு ஆளுங்க இருக்குறாங்கோ. நீ அவங்க கிட்ட போய் எடுத்துக்கோ. இல்லே நான் எடுக்கிறதுன்னா, லிஸ்ட்டு தர்றேன். அதுப்படி ஜாமான்களை வாங்கி வையி.”—– மடியிலிருந்து லிஸ்ட்டை எடுத்துக் கொடுத்தான். லிஸ்ட்டையெல்லாம் தயாராய் வெச்சிருப்பான் போல.

வெண்கடுகு—50 கிராம், நாய்க்கடுகு —50 கிராம், எலுமிச்சை பழம்—4, குங்குமம்—100.கிராம், கற்பூரம்—100.கிராம்., கல்யாண பூசனி—2 காய்கள், கோழி —1, தீபத்துக்கு எண்ணை—150.மில்லி, பசு நெய்—200. மில்லி, சாராயம்—200.மில்லி வேஷ்டி,துண்டு—1. செட், தட்சணை—உன் விருப்பம்.

“ கேட்டுக்கோ ஷாமீ! மந்திரம் உச்சாடனத்தை ஒரு தடவை சொல்லி முடிக்க நாலு நிமிசம் ஆயிப்புடும்.. 324 தடவை சொல்லோணும். கோழின்னா கருப்பு சேவக்கோழிதான். வெட குஞ்சா இருக்கோணும். தட்சணை—நீ இஷ்டப் பட்டதைக் கொடுப்பா, ஆனால் நான் இந்த வேலைக்கு நாலாயிரத்துக்குக் கீழ வாங்கறது இல்லை.”

“ என்னது நாலாயிரமா?.” —- அதற்கு அவன் கடுகடுவென்று சிவந்த கண்ணை உருட்டியது அச்சத்தைக் கொடுத்தது. “ஊஸ்.ஸ்.ஸ்..ஜக்கம்மா! இந்த அற்பனுக்கு நல்ல புத்தியக் குடு. இது என்னா வேலை தெரியுமா?. கலசத்த நிறுத்தி உக்காந்தா, முடியறதுக்கு ராத்திரி நடுஜாமம் தாண்டிப்புடும்.. வெச்சிருக்கிற செய்வினையை எடுக்கிறப்போ அது என்னையே அடிச்சிப்புடலாம். ரத்தக் காட்டேரி, பொல்லாதது. ஆளை தீர்த்துப்புடும். மந்திரம் உச்சாடனத்தில ஒரு சொல்லு தவறிட்டாலும் என் வாயை கட்டிப்புடும். தெரிஞ்சிக்கோ.”—– நான் என்னதான் தைரியம் சொல்லிக்கிட்டாலும், உள்ளே பிரமை பிடிச்சாப்பல இருக்குது.ஐயோ! ஊருக்குப்போயிருக்கிற ஜானகியும்,குழந்தைங்களும் சாயரட்சைக்கு வந்திடுவாங்களே, ராத்திரியில எதையாவது பார்த்துட்டு பயந்து…

“எப்போய்யா அத்த எடுப்ப? இன்னைக்கே முடிஞ்சிடுமா?.”—–

“லிஸ்ட்படி சாமான்களை இப்பவே வாங்கிக் வெச்சிடு நாளைக்கு வர்றேன். இன்னைக்கு எட்டாம் நாளு செய்வினையை எடுக்கிறேன்.”——ஐந்நூறு ரூபாயை வாங்கிக் கொண்டு, ரத்தக் காட்டேரி கிட்ட என்னை தனியாய் விட்டுட்டு அந்த ஜக்கம்மா பாவி கிளம்பி விட்டான்.

சாயங்காலம் ஜானகியும், பிள்ளைகளும், வந்திறங்கி விட்டார்கள். பதினைந்து வருஷ தாம்பத்தியம் எங்களோடது. வந்தவுடனே கண்டு பிடித்து விட்டாள். அவளுக்கா தெரியாது?. என்னாலேயும் மறைக்கமுடியாது. என் முகரையே காட்டிக் கொடுத்து விடும். அவ எடுத்த எடுப்பிலேயே “என்ன பேயறைஞ்ச மாதிரி இருக்கிற?. என்னமாவது தப்பு பண்ணிட்டியா?.”—-ங்க போட்டு பேசறதுன்னா அவ பரம்பரைக்கே அலர்ஜி. “ஒண்ணுமில்லையே.” ”இல்லை. என்னமோ நடந்திருக்கு.”— கீழே குங்குமம் சிதறியிருப்பதைப் பார்த்து விட்டாள். ”வீட்டுக்கு யார் வந்தது?.சொல்லு.” —–அதற்குமேல் முடியாமல் அவளை தனியாக கூட்டிச் சென்று நடந்தவைகளை ஆதியோடந்தமாக கூறி முடித்தேன். ஜானகி ரொம்பவும் பயந்து போனாள். அதுவும் நான் ஆபீஸ் போயி, பிள்ளைகளும் ஸ்கூல் போனப்புறம் காட்டேரி கூட அவள் மட்டும் தனியாக இருக்கணும் என்பதிலேயே அவள்அவசர அவசரமாக மூணு தடவை கக்கூஸுக்குப் போயி வந்தாள். அத்துடன் உயிருக்கு ஆபத்துன்னும் சொல்லியிருக்கிறான், யாரு உயிருக்கு? ன்னு சொல்லலியே. அந்த நிமிஷத்திலிருந்து எங்கள் வீட்டில் இரவும் பகலும் டிவிடி கேஸட் ஓட ஆரம்பிச்சது. `காக்க காக்க கனகவேல் காக்க, நோக்க நோக்க நொடியினில் நோக்க’.— அப்பாடா. எதுவும் பெருசா நடக்க வில்லை. கந்தசஷ்டி கவசத்துக்கு அவ்வளவு சக்தி இருக்கும் போல.

மூன்றாம் நாள் ரத்திரி ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த போது ஜானகி ரகசியமாக என்னை உலுக்கினாள். என் வாயை தன் கையால் பொத்திக்கிட்டு கேளு என்று சைகை செய்தாள். அவள் கைகள் உதறுவதை அனுமானிக்க முடிகிறது. உற்று கவனித்தேன்.ஹாலில் தமுக்கு தமுக்குன்னு யாரோ ஓட்ற சத்தம் கேட்கிறது. மெதுவாக எழுந்தேன். ஜானகி வேண்டாமென்று என்னை இழுத்து கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள். அவள் கைகள் வெடவெடவென்று நடுங்குகின்றன. இப்போது தொம் தொம்னு யாரோ குதிக்கிறார்கள். ஒருவேளை இது பிரமையோ?. கதவருகே போய் உற்று கவனித்தேன். இல்லை..இல்லை கதவுக்கு வெளியேயிருந்து சத்தம் தெளிவாகக் கேட்கிறது. மயிர்க்கால்கள் சிலிர்த்துக் கொண்டன. செல்லில் நேரம் 12-30 என்றது. நான் உரக்க கந்தசஷ்டி கவசத்தை சொல்ல ஆரம்பித்தேன். சொல்லிக் கொண்டே தடாலென்று கதவைத் திறந்து வெளியே ஓடி, ஓடும்போதே அந்த சத்தம் பட்டென்று நின்று விட்டது. லைட்டைப் போட்டேன். யாருமே இல்லை. எப்படி இது?. அன்றைக்கு ராத்திரி முழுக்க ஹாலில் பளிச்னு லைட்டைப் போட்டுட்டு உட்கார்ந்து கிடந்தோம். அன்னையில இருந்தே எங்க ரெண்டு பேருக்குமே கெட்ட கனவுகள் வந்து இம்சை பண்ணிக்கிட்டிருந்தது. அலறி அலறி எழுந்து உட்கார்ந்துக் கிடப்போம்.

ஐந்தாம் நாள் ராத்திரி ஒன்பது மணி இருக்கும். பிள்ளைகள் ஹாலில் உட்கார்ந்து ஹோம் ஒர்க் பண்ணிக்கிட்டிருந்திச்சிங்க.. ஜானகி முன் அறையில் ஏதோ வேலையில் இருந்தாள்.. நான் ஹாலில்தான் ஜன்னலோரம் உட்கார்ந்திருந்துக் கொண்டு, தினசரியின் இண்டு இடுக்குகளில் படிக்காமல் விடுபட்ட செய்திகளை தேடிப் பிடித்து படித்துக் கொண்டிருந்தேன். திடீரென்று என்னவோ விளக்க முடியாத உணர்வு. பிடரியில் சிலிர்த்தது. என் முதுகுக்குப் பின்னால் யாரோ என்னை பார்க்கிறார்கள். சடக்கென்று திரும்பினேன். ஜன்னலின் ஊடே தோட்டம் ஒரு வாரத்து வளர்பிறை வெளிச்சத்தில் அரை இருட்டாய் மங்கிக் கிடக்கிறது. தோட்டத்துப் பக்கம் பலாமரத்தின் அடியில் ஆ..ஆ..! உடம்பு முழுக்க ஜிவ்வென்று கவ்வியது.என்னவோ கருப்பாய் அசைவு தெரிகிறது.. ஆ..ஆ…ஆ! , ஆளா? இல்லை..இல்லை…சம்திங் டிஃபரண்ட். திக்கென்றது. கருகருன்னு, நிழலுருவாய் மனுஷ உருவம் மாதிரி ஆறடிக்கு மேலே உசரம், ஐயய்யோ! அ..அ..அதை…அதை.. முழுசாப் பார்த்து விட்டேன். கண்களை கசக்கி விட்டுக் கொண்டு பார்த்தேன். அது ஆணா பெண்ணா என்று அனுமானிக்க முடியவில்லை ஆனால் இரண்டு நெருப்புத் துண்டங்களாய் அதன் பார்வை மட்டும் என் கண்ணை ஊடுருவிப் பார்த்தது போல் இருந்தது. இப்போது அது பின்பக்க தாழ்வாரத்தை நோக்கி நகர ஆரம்பித்தது.. என் வாழ்நாளில் முதன்முதலாய் ஒரு அமானுஷ்யத்தை நேரில் பார்த்துக் கொண்டிருக்கிறேன். உருவம் புகைமாதிரி காற்றில் அலைவது போல இருந்தது. கைகால்களை அசைக்க முடியவில்லை, குப்பென்று மார்பு அடைத்தது. சளசளவென்று வியர்வை ஊற்றுகிறது. நான் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அது கொஞ்சம் கொஞ்சமாக காற்றில் கரைந்து மறைந்தது. மறையும் கடைசி நொடி வரை அதன் பார்வை என்மீதே இருந்தது. அதிர்ச்சியிலிருந்து மீள எனக்கு கொஞ்சம் நேரம் பிடித்தது. பேய், பிசாசு என்று எதுவும் இல்லை என்ற என் அசைக்கமுடியாத நம்பிக்கை நொறுங்கிப் போனது. சுய நினைவோடு என் கண்ணெதிரில் ஆறடி உசரத்தில் தெளிவாகப் பார்த்தேனே. நம்பாமல் எப்படி?. மேலை நாடுகளில் பிசாசை புகைப்படமே எடுத்து நெட்டில் போட்டிருக்காங்க என்ற விஷயம் இப்போது ஞாபகத்துக்கு வருகிறது. அதெல்லாம் உருவாக்கப்பட்ட பொய்கள் என்று இதுவரையிலும் சொல்லிக் கொண்டிருந்தேன்.இல்லை…இல்லை. நான் காட்டேரியைப் பார்த்ததை ஜானகியை கூப்பிட்டு மெதுவாகச் சொன்னேன். ஐயோ! வென்று அலறி, அப்பவே மயக்கம் வர்ற ஸ்டேஜுக்கு போய்விட்டாள். குடிக்க தண்ணீர் கொடுத்து ஆசுவாசப் படுத்தினேன்.. ராத்திரி முழுக்க நாங்கள் சரியாக தூங்கவில்லை.

மறு நாளும் எங்களுக்கு சோதனை வந்தது. ராத்திரி எட்டு மணியிருக்கும். வழக்கம்போல காக்க காக்க…கேசட் ஓடிக்கிட்டிருக்கு .பிள்ளைங்க ஹால்ல உட்கார்ந்து ஹோம் ஒர்க் செஞ்சிக்கிட்டிருக்குங்க. நான் என் அறையில் உட்கார்ந்து படிச்சிக்கிட்டிருக்கேன். வீல்! என்று ஜானகியின் அலறல் சத்தம். எழுந்தோடினேன். அதற்குள் ஜானகி கத்திக் கொண்டே கலவரத்துடன் ஹாலுக்கு ஓடிவந்தாள்.

”ஐயய்யோ! அது…அது… பெ..பெ..பெட்.. ரூம்ல நிக்கிதுங்க…ஆ…ஆ….”— கண்கள் நிலைகுத்தி நிற்க, உடம்பு விறைச்சிக்கிட்டது. உடம்பை ஒருமாதிரி ம்ம்…ம்.ம்…ம்… என்று முறுக்கினாள்., அப்படியே சாய்ந்தாள். தாங்கிக் கொண்டேன். கை கால்கள் வெடவெடன்னு நடுங்குகின்றன.. அம்மாவை பார்த்துட்டு பிள்ளைங்களும் கத்துதுங்க. எனக்கும் பயம் கவ்வ அவளை அப்படியே படுக்க விட்டுட்டு உள்ளே ஓடினேன்.” காக்க காக்க கனகவேல் காக்க, நோக்க நோக்க நொடியினில் நோக்க. பில்லி சூனியமும், பெரும்பகை அகல…”—.உரக்க கத்திக் கொண்டே லைட்டை போட்டேன். சுற்றிலும் பார்த்தேன். எதுவுமே இல்லை. சமையலை முடிச்சிட்டு முகம் கழுவறதுக்காக பெட்ரூமுக்கு போயிருக்கிறாள். உள்ளே அட்டாச்டு பாத்ரூம். பாத்ரூம் கதவை திறக்கறப்போ பக்கத்தில யாரோ வந்து நிக்கிறாப்பல இருக்க, நான்னு நெனைச்சி திரும்பியிருக்கிறா உசரமா, கருகருன்னு அது முகத்து கிட்ட வந்து நிக்கிதாம். கத்திக் கொண்டே ஓடி வந்துவிட்டாள். “ஏம்மா நல்லா பார்த்தியா? ஒருவேளை பிரமையோ?.” “லைட்டை போட்டுட்டுதான உள்ளே போனேன்?. நல்லா பார்த்தேன். கருகருன்னு, உடம்பெல்லாம் மயிரு.”—சொல்லும்போதே அவளுக்கு உடம்பு ஒருமுறை சிலிர்த்துக் கொண்டது.

மறுநாள் இரவு எட்டு மணிக்குத்தான் அந்த ஜக்கம்மா பாவி வந்தான். செய்வினையை ராத்திரியிலதான் எடுக்கிறதாம்.. அடுத்தடுத்து ஏற்பட்ட அதிர்ச்சியில் நாங்கள் விதிர்த்துப் போய் கிடக்கிறோம். என் மனைவி இப்போது ஜக்கம்மாவை பயபக்தியுடன் கும்பிட்டாள்.

“ஷாமீ! யாரோ ஒரு பொம்பளைதான் உங்களுக்கு செய்வினை வெச்சிருக்கிறா. உங்க ரெண்டு பேருடைய காலடி மண்ணை வெச்சித்தான் இந்த வேலை நடந்து முடிஞ்சிருக்கு. சரி எல்லாரும் இப்ப ஒருக்கா குளிச்சிட்டீங்களா?.” “ஆச்சுங்க.” —- வீட்டு ஹால் நடுவே போய் ஜக்கம்மா என்று சொல்லிக் கொண்டே சப்பணமிட்டு உட்கார்ந்துக் கொண்டான்.. ” ஷாமீ! இன்னோரு ரகசியம் சொல்றேன். விளக்கு போட்டு பார்த்ததில, அந்த பொம்பள உனுக்கு பெருஞ்சொத்து கொடுத்த அந்த புண்ணியவானுக்கும் சேர்த்து செய்வினை செஞ்சிருக்கிறா. இந்நேரம் அங்கியும் ரத்தக் காட்டேரியின் உக்கிரமான ஆட்டம் ஆரம்பிச்சிருக்கும். அங்கியும் தகவல் சொல்லிடுப்பா. குறிச்சி வெச்சிக்கோ, செய்வினையை உடனே திருப்பணும். இல்லேன்னா மூணு மாசத்துக்குள்ள சாவு செய்தி வந்துடும். ஜக்கம்மா வாக்கு தப்பாது.”—- ஜானகி ஓவென்று அழ ஆரம்பிச்சிட்டாள். நான் அவளை தேற்றும்போது, ஜக்கம்மா தன் பையிலிருந்து அதை எடுத்தது. ஒரு வெங்கல சொம்பு. மேலே நூல் சுற்றப்பட்டிருக்க அதன் மேல் ஒரு தேங்காய் செருகப் பட்டிருந்தது, கூட ஒரு மாங்கொத்து செருகப் பட்டிருந்தது.

ஹால் நடுவே பெருசாக நட்சத்திரம் மாதிரி ஒரு கட்டம் போட்டான். அதன் மையத்தில் அந்த கலசத்தை நிறுத்தினான். காமாட்சியம்மன் விளக்கு ஏத்தி வெச்சிட்டு, தட்டில் சாம்பிராணி மாதிரி ஏதோ ஒன்றால் தூபம் போட்டான். ஒன்பது இன்ச்க்கு ஒன்பது இன்ச் கண்ணாடி ஃப்ரேம் போடப்பட்ட செப்பு யந்திரத்தகடு ஒன்றை எதிரில் சாய்த்து வைத்தான். அதன் எதிரில் ஊதுபத்தியை கொளுத்தி வைத்தான். மந்திர உச்சாடனத்தைத் துவக்கினான். எங்களை கலசத்துக்கு எதிரில் உட்கார வைத்தான்…

“தோ பாரப்பா! இங்க என்ன நடந்தாலும் நீங்க யாரும் எடத்தை விட்டு நவுட்டக் கூடாது. சொல்லிப்புட்டேன். எதிர்பட்டால் அறைஞ்சிப்புடும். ஆமாம்.சீக்கிரம் பிள்ளைங்களை கூட்டிம் போயி மூத்திரம் பெய்ய வெச்சி கொண்டாந்துடு.”—— மந்திர உச்சாடனம் ஆரம்பிச்சது. அடிக்கடிபெருசாக சத்தம் போட்டான்… புரியாத மொழியில மந்திரம் சொன்னான்…ஒரு கட்டத்தில் திடீரென்று எழுந்து ஊளையிடுவது போல கர்ணகடூரமாக ஹே..ஹே..என்று கத்திக் கொண்டே வீட்டை சுத்தி சுத்தி ஓடினான். மூன்றாவது சுற்றில் ஹாலைத் தாண்டும்போது துள்ளி விழுந்தான். அதைப் பார்த்து விட்டு ஜானகி வீரிட்டலறி மயக்கமாய் என்மீது சாய்ந்தாள். விழுந்தவன் கொஞ்ச நேரம் பிரக்ஞை இல்லாமல் கிடந்தான். அப்புறமாக மெதுவாக எழுந்தவன் கால் கட்டுடன் தரையில் கிடந்த கருப்பு சேவலை எடுத்தான். உரக்க எதுவோ மந்திரத்தை உச்சாடனம் பண்ணிக் கொண்டே சூரிக்கத்தியால் சரக்கென்று சேவல் தலையை அறுத்து வெளிவாசல் பக்கம் வீசினான்.அது துள்ளித் துள்ளி விழுவது எங்களுக்கு கோராமையாக இருந்தது. அதிலும் ஜானகி ப்யூர் வெஜிடேரியன். முட்டையைக் கூட தொடமாட்டாள். என்கையை இறுகப் பிடித்துக் கொண்டாள். அடுத்து செம்பு வேல் எடுத்து கவசம் போல முன்னால் பிடித்தபடி உள்ளே சுத்தி சுத்தி வந்தான்… அவன் போட்ட கூச்சலில் எங்களுக்கு இன்னும் வெலவெலப்பு அதிகமாகிவிட்டது. ஐயோ! ஜானகி.! இவ வேற. ஜக்கம்மா சத்தம் போடும் போதெல்லாம் பொசுக்கு பொசுக்கென்று மயக்கம் போட்டு விழுந்துட்றா. எல்லா அமளியும் நடுராத்திரி பனிரெண்டு மணிக்கு மேலதான் ஓய்ந்தது. அப்புறமாய் ஜக்கம்மா எழுந்து இருட்டில் வெளியே போய் சின்னதாக ஒரு மூட்டையைக் கொண்டுவந்தான்..

“இது உங்க வாசற்படி பக்கத்தில தோண்டி எடுத்தது. சீக்கிரமா போயி தோட்டத்தில விறகுக் கட்டைகளைப் போட்டு அக்கினி வளர்த்து வை வர்றேன்.உம்…”—அவன் பரபரவென்று அவசரம் காட்டவே பயத்தை மறைச்சிக்கிட்டு எழுந்து ஓடினோம். தீ நல்லா திகுதிகுன்னு எரியறப்போ ஜக்கம்மா அந்த மூட்டையை தூக்கி வந்து பிரிக்க,. உள்ளே கைப்பிடி மண்ணும், காய்ந்து போன, சிவப்பு பொட்டு வெச்ச, இரண்டு எலுமிச்சம் பழம், ஒரு செப்புத்தகடு. அதில என்னமோ கட்டம்போட்டு நசி மசின்னு நிறைய எழுதியிருந்தது. உச்ச ஸ்தாயியில் மந்திரத்தை சொல்லிக் கொண்டே அவற்றை நெருப்பில் போட்டான்… அது எரிந்து கருகிப்போகும் வரை காத்திருந்துவிட்டு உள்ளே போய், கலச சொம்பை எடுத்து என்னிடம் கொடுத்தான்.. ”ஷாமீ! இந்த ஜலத்தை மாங்கொத்தால வீடு பூரா தெளிச்சிக்கிட்டே வா. வூட்ல எல்லா விளக்குகளும் பிரகாசமாய் எரியட்டும்.”—- வீடு இப்ப ஜகஜோதியாய் இருந்தது. எல்லாம் ஆயிற்று.

”எல்லாம் ஆச்சிப்பா. வெச்ச செய்வினைய எடுத்தாச்சி.. இனிமே இந்த பக்கமே ரத்தக் காட்டேரி தலை வைக்காது. கட்டு கட்டியாச்சி. என்னை எப்படி அறைஞ்சி கீழே தள்ளுச்சி பார்த்தியா?.. கொஞ்ச நேரம் எனுக்கு ஒண்ணுமே தெரியலப்பா. பொல்லாதது.அதுவரைக்கும் தப்பிச்சது தம்பிரான் புண்ணியம். என் மந்திர உச்சாடனம் தான் என்னை காப்பாத்திச்சி. சரி கிளம்பறேன், எனுக்கு உத்திரவு குடு.”—-. சொன்னபடியே சந்தோஷத்துடன் நாலாயிரத்துக்கு மேலேயே ஐந்நூறு ரூபாய் போட்டு கொடுத்து ஜக்கம்மாவை அனுப்பி வைத்தேன்..

“குறிச்சி வெச்சிக்கோ ஷாமி! அடுத்த மாசம் இதே நாளு இந்தப் பக்கம் வர்றேன். உனுக்கு சொத்தைக் குடுத்த புண்ணியவானுக்கு வெச்சிருக்கிறதை என்னை எடுக்கச் சொன்னா செய்யறேன். இல்லேன்னா வேற ஒருத்தர வெச்சி எப்படியும் முடிச்சிடுப்பா முடிச்சிடணும். எதிர்ல உசுருக்கு ஆபத்து நிக்கிது. தாமதிக்காத. ஜக்கம்மா வாக்கு தப்பாது. பார்த்துக்கோ தாயீ..” “சரிங்க. நாளைக்கே போய் சொல்லி ஏற்பாடு பண்றேன். மறக்காம வந்துடுங்க.”

மறுநாளே லீவு போட்டுட்டு கிளம்பிட்டோம். அவரை சம்மதிக்க வைக்கிறது ரொம்ப கஷ்டம். அவரு நாத்திகவாதி. அவர் கிட்ட ஆதியோடந்தமாக நடந்ததையெல்லாம் சொன்னோம்.

“மாப்பிள்ளை! நான் என்ன சொல்றேன்னா?” “ அப்பா! நீங்க எதுவும் சொல்ல வேண்டாம். உசுருக்கு ஆபத்துப்பா. நீங்க கம்னு இருங்க நாங்க பணம் கட்டி செஞ்சிட்றோம். உங்களுக்கு ஏதாவதுன்னா…”——மேலே வார்த்தை வராமல் ஜானகி அழ ஆரம்பித்து விட்டாள்.. அவர் கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தார்.

“மாப்பிள்ளை! எனக்கு கடவுள் மறுப்பு கொள்கை உண்டே தவிர, செய்வினை, ஏவல், சூனியம் இதைப் பத்தி நம்பிக்கை உண்டு. இன் ஃபேக்ட் எனக்கு சூனியம் வைக்கவும் தெரியும்,எடுக்கவும் தெரியும். நீங்க ரெண்டுபேரும் கவலை படாம போய்வாங்க. நாளைக்கே வெளக்கு வெச்சி பர்த்துட்டு எனக்கு வெச்ச செய்வினையை எடுத்துட்டு உங்களுக்கு தகவல் தர்றேன். சரியா?.’—வாஞ்சையுடன் பொண்ணு தலையை தடவி அனுப்பி வெச்சார். ஜானகி அரைமனசோட கிளம்பி வந்தாள். வந்ததிலிருந்து தினசரி கால் போட்டு அப்பாவிடம் பேசிக் கொண்டேயிருந்தாள். ஒரு வாரம் கழிச்சி அவரிடமிருந்து தகவல் வந்தது. செய்வினையை எடுத்து எரிச்சிட்டாராம். வீட்டு வாசற்படியருகில்தான் புதைச்சிருந்துச்சாம். அப்பாடா.நாங்கள் நிம்மதி பெரு மூச்சு விட்டோம். அத்தோட எங்க குடும்பத்தில் பழைய சந்தோஷம் மீண்டுவிட்டது. இப்போதெல்லாம் வீட்டில் எதுவும் எங்களுக்கு தோத்தரிப்பதில்லை. போச்சு, போயே போயிந்தி. வாழ்க்கை ருசியுடன் நகர ஆரம்பித்தது. இடையில் நாலு நாட்கள் சேர்ந்தாற் போல ஸ்தல யாத்திரை போய் வந்தோம். அதை நாங்கள் கிட்டத்தட்ட மறந்தே போனோம்.

ரொம்ப நாளுக்கப்புறம் மாமனாரும், அத்தையும் வீட்டிற்கு வந்திருந்தார்கள். அன்றைக்கு ராத்திரி போஜனம் முடிந்தப்புறம் எல்லோரும் ஹாலில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தோம். காட்டேரி அனுபவத்தை ஜானகி மீண்டும் ஒருமுறை பாவங்களுடன் சொல்லி முடித்தாள். மாமா சிரித்துவிட்டு பேச ஆரம்பித்தார்.

“ஜானகி ! மாப்பிள்ளை ! செய்வினையை எடுப்பேன்னு அன்னைக்கு உங்க கிட்ட நான் பொய்தான் சொன்னேன். இல்லேன்னா இந்நேரம் இன்னொரு நாலாயிரம் ரூபாயை ஏமாந்திருப்பீங்க.”—எங்களுக்கு பெரும் அதிர்ச்சி. “அப்ப நீங்க உங்களுக்கு வெச்ச சூனியத்த எடுக்கவே இல்லையா?.” —-இல்லையென்று தலையாட்டிவிட்டு

”கேளுங்க. மனுஷங்களோட பயங்களை வெச்சி பொழைக்கிற வித்தைதான் செய்வினை, ஏவல்,சூனியம் எல்லாம். கலசம், மந்திர உச்சாடனம், செம்பாலான ஈட்டி, சிவப்பு பொட்டு வெச்ச ரெண்டு எலுமிச்சை பழங்கள், செப்பு யந்திரத் தகடு, குங்குமம் கீழே சிதறியது, அவன் துள்ளி கீழே விழுந்தது…. , இதெல்லாம் நம்மளை நம்ப வைக்கும் உத்திகள். உங்க மச்சத்தைப் பத்தி சொன்னதெல்லாம், சாமுத்திரிகா லட்சணப் படி ஏறக்குறைய சொல்லிடலாம்.”— ஆனால் என்னால் அப்படி ஏற்கமுடியவில்லை.

“அப்ப நீங்க எழுதி வெச்ச சொத்து பத்திகூட கரெக்ட்டா ஊர்பேர் தெரியாத அவன் சொன்னானே. அது?.” “ அது மனுஷ இயல்பை வெச்சி தோராயமா அடிச்சிப் பார்க்கிறது. அப்படி எதுவும் இல்லையேன்னு நீங்க சொல்லியிருந்தால் வழியில இருக்குது. இன்னும் மூணு மாசம் எட்டு நாள்ல வந்து சேரும்னு அடிச்சி சொல்லியிருப்பான். ஒரு விஷயம் பாருங்க. மருந்து சாப்பிடும் போது குரங்கை நினைக்கக் கூடாதுன்னு சொல்லி வெச்சிட்டா, மருந்து சாப்பிட்ற போதெல்லாம் கண்டிப்பாய் குரங்கு நெனைப்பு வருமில்லே?. அதுபோலத்தான் உனக்கும், ஜானகிக்கும் ஏற்பட்ட காட்டேரி அனுபவங்கள். காட்டேரியைப் பத்தி அவன் சொன்னதெல்லாம் அப்படியே நிஜமா உங்களுக்கு தோணுச்சி இல்லே?. அதுதான் ஹாலுஸினேஷன், மாயத்தோற்றம். ப்யூர்லி சைக்கலாஜிகல். எதுவுமே நிஜமா நடக்கவில்லை. நிஜம்னா என் பேரன்களுந்தானே அதைப் பார்த்து அலறியிருக்கணும்? ஒரு தடவை கூட அப்படி நடக்கலியே ஏன்?. அது நடமாடினதெல்லாம் உங்க ரெண்டு பேருடைய மனசுக்குள்ளே மட்டும் தான். அது கருப்பா ஆறடி உசரம்,உடம்பெல்லாம் மயிரு, கால்களை சுத்தி மயிரு,. இதெல்லாம் உங்க மூளைகள் வரைந்த கற்பனை ஓவியங்கள்.

நம்ப முடியாத பெரிய பெரிய மேஜிக் செய்றவங்க கிட்ட கூட அமானுஷ்ய சக்திகள்னு எதுவும் கிடையாது மாப்பிள்ளே. எல்லாமே தந்திரங்கள்தான். அதுபோலத்தான் இதுவும். யோசிச்சிப் பாருங்க அவன் படிக்காதவன், ரெண்டாவதோ, மூணாவதோதான் படிச்சிருப்பான். எவ்வளவு சுலபமாக கம்ப்யூட்டர் என்ஜினியரான உங்களை ஏமாத்தி நாலாயிரம் ரூபாய்க்கு மேல கறந்துக்கிட்டு போயிட்டான். காரணம் பகுத்தறியும் குணம் இல்லாததுதான். எல்லாவற்றையும் அப்படியே நம்பிட்றது. சூனியம் நமக்கு வெச்சிருக்குதுன்றதை நாம நம்ப ஆரம்பிச்சிட்டோம்னா, அதுதான் சூனியம். நம்பாதவனுக்கு இல்லை. மூணு மாசத்தில எனக்கு சாவு வரும்னு ஜக்கம்மா சொன்னாள். இப்ப அஞ்சாவது மாசம் நடக்குது. செத்தா போயிட்டேன்?. இதே அதை நான் நம்பியிருந்தால் இந்நேரம் செத்திருப்பேனோ இல்லையோ மனநோயாளியாக ஆயிருப்பேன். பில்லி, ஏவல், சூனியம், எல்லாம் வெறும் சைக்கலாஜிகல் பிரச்சினைகள் தானே தவிர இதில அமானுஷ்ய சக்திகள்னு எதுவும் இல்லை மாப்பிள்ளை.”

– தமிழக மக்கள் பண்பாட்டுக் கழகம், சென்னை நடத்திய சிறுகதைப் போட்டி—2015 ல் பரிசு பெற்ற கதை.

Print Friendly, PDF & Email

2 thoughts on “ஜக்கம்மா சொல்றா…

  1. திரு.அருண்பிரசாத் அவர்களுக்கு,

    தங்களின் ஊக்கப்படுத்தும் கருத்துக்கு என் நன்றி. சமூக அவலங்களை சாடுவது என் இலக்கு. இவைகள் என்னுடையது மற்றுமன்று. சராசரி ஒவ்வொரு இந்தியக் குடிமகன்களிடமும் இருக்கும் குமுறல்களே.

  2. வணக்கம். தங்களின் அனைத்து கதைகளையும் இத்தளத்தில் (தான்) படித்தேன். (இதற்கு முன் உங்களை தெரியாதென்பதே உண்மை) அனைத்தும் அற்புதம். நீங்கள் நான் எதிர்பார்த்த அளவுக்கு புகழ் பெறாததின் ஊடக அரசியல் உங்கள் எழுத்துக்களின் வழியே புலர்கிறது. சிறுகதைகள் தளத்திற்கு நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *