Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/content/42/10186442/html/index.php:2) in /home/content/42/10186442/html/wp-content/themes/Clipso/functions.php on line 189
Sirukathaigal - Sirukathai - Short Stories in Tamil

சொல்லாமலே…

 

மழை விட்டிருந்தது. அம்பத்தூர் பேருந்து நிலையத்தில் இறங்கிய வாணி விறுவிறுவென்று நடக்க ஆரம்பித்தாள். சட்டென்று இடது கால் கோணிக்கொண்டது. ஒரு நொடி குனிந்து அந்த கால் செருப்பு அறுந்திருப்பதை கவனித்தாள். சாலை ஓரமாக ஒரு குப்பைத்தொட்டி இருந்தது. ஜோடி செருப்பையும் அவிழ்த்து குப்பைத் தொட்டியில் எறிந்தாள். ‘ரொம்ப நாள் ஆகி விட்டது. புது செருப்பு இன்றைக்குக் கண்டிப்பாக வாங்கி விட வேண்டும்’. திரும்ப எந்த நிமிடமும் மழை வந்து விடும் போல இருந்தது. மாமா வீடு பேருந்து நிலையத்திலிருந்து பக்கந்தான். இரண்டு கைகளிலும் கனமான பைகள். மழை பெய்து சொத சொதவென்று இருந்த சாலையில் செருப்பில்லாமல் நடை வேகம் குறைந்தது.

வாசற் கதவு திறந்தே இருந்தது.

“மாமா!” உற்சாகக் குரல் கொடுத்துக் கொண்டே உள்ளே நுழைந்தாள்.

சமையற்கட்டில் ‘டீ’ கொதிக்கும் மணம் வந்தது.

அவள் வருகையை எதிர்பார்த்திராத மாமா முகத்தில் வியப்பு. “வாம்மா! வாணி, வா!” என்றவாறே பைகளை வாங்கிக் கொண்டார். திரும்ப சமையற்கட்டுக்குள் நுழைந்து இரண்டு கோப்பைகளில் ‘டீ’ யோடு திரும்பினார்.

“அட! நா வருவேன்னு முன்கூட்டியே ஏதாவது பட்சி உங்களுக்கு சொன்னதா மாமா? எனக்கும் சேர்த்து ரெடியா ‘டீ’ போட்டிருக்கீங்க?”

மாமா பதில் சொல்லாமல் புன்னகைத்தார்.

மாமி போய் மாமாவை தனியாகப் பார்ப்பதே ஒவ்வொரு தடவையும் மனதை நெருடும் வாணிக்கு.

“எப்படீயிருக்கேம்மா? மாப்பிள்ளை நல்லாயிருக்காரா? ஏன் நீ மட்டும் வந்திருக்கே? கொழந்தைகளை அழைச்சிக்கிட்டு வரக்கூடாதா?”

“அதுங்களுக்கு பரீட்சை மாமா! மன்த்லி டெஸ்ட் நடந்துக்கிட்டிருக்கு. ஒங்க மாப்பிள்ளை யதேச்சையா இன்னிக்கு லீவு போட்டிருக்காரு. அதான் அவர் கிட்ட கொழந்தைகளை விட்டு விட்டு நா ஒரு எட்டு ஒங்களை பார்த்துட்டுப் போகலாமுன்னு வந்தேன்.”

சூடான ‘டீ’ மழைக்கு இதமாக இருந்தது. சோஃபாவில் அமர்ந்து ரசித்துக் குடிக்க ஆரம்பித்தாள். ஹாலில் மாமியின் பெரிய சைஸ் போட்டோ ஒன்று மாட்டப்பட்டிருந்தது. அதில் எப்போதோ சாற்றிய பூமாலை காய்ந்து தொங்கிக் கொண்டிருந்தது. மாமா உள்ளே போய் திரும்பியபோது அவர் கையில் ஒரு ஃப்ளாஸ்க் இருந்தது.

“என்ன இது? நான் வர்றதுக்குள்ள ‘டீ’ குடிச்சாச்சா? வாசல்லேயே அப்படி வாசனை தூக்குது? சமோசா வேண்டாமா?”

உரத்தக் குரலில் பேசிக் கொண்டே பக்கத்து போர்ஷன் பரிமளா மழைத் தண்ணீர் புடவையில் படாமல் இடது கையால் புடவைக் கொசுவ மடிப்பை சற்றே தூக்கிக் கொண்டு உள்ளே நுழைந்தாள். வலது தோளில் கைப்பை தொங்கிக் கொண்டிருந்தது. எதிர்பாராமல் வாணியைப் பார்த்ததும் அவள் லேசாக அதிர்ந்து போனது வாணிக்குக் கண்கூடாக தெரிந்தது. மாமா முகத்திலும் ஒரு பதட்டம் தெரிந்தது.

வாணி தான் முதலில் சுதாரித்துக் கொண்டாள். “வாங்க ஆன்ட்டீ! ஆஃபீஸ்லேந்து சீக்கிரமா வந்துட்டீங்க போல?” என்று எழுந்து நின்று பரிமளாவை எதிர் கொண்டாள்.

“நீ வந்திருக்கிறது தெரியவேயில்ல வாணி. வாசல்ல செருப்பு கூட காணும்?” என்றாள் பரிமளா.

தன் செருப்பு அறுந்து போன கதையை வாணி சொல்லிக் கொண்டிருக்கும்போதே மாமா ஃப்ளாஸ்கிலிருந்து இரண்டு ‘கப்’ களில் சூடான ‘டீ’யை ஊற்றி ஒன்றை பரிமளாவிடம் நீட்டினார். பரிமளா இப்போது நிதானமாக சோஃபாவில் அமர்ந்து கொண்டு கைப்பையிலிருந்து சமோசா பொட்டலத்தையெடுத்துப் பிரித்தாள்.

“இந்தா வாணி! எடுத்துக்கோ! தெருமுனைக் கடையில சூடா போட்டுக்கிட்டிருந்தான். மழைக்கு நல்லாயிருக்குமேன்னு தான் வாங்கினேன்.”

மூவரும் சமோசா தின்று ‘டீ’ குடித்து முடியும் வரை அங்கே மௌனம் நிலவியது.

வாணி தான் வீட்டிலிருந்து கொண்டு வந்திருந்த ‘ஐட்டங்களை’ டேபிள் மீது கடை பரப்பினாள்.

“மாமா! இங்க பார்த்தீங்களா? ஒங்களுக்குப் பிடிக்குமேன்னு புளி சாதம் செஞ்சு எடுத்துக்கிட்டு வந்தேன். வர்றப்போ தான் செஞ்சேன். வச்சு நாளைக்குக் கூட சாப்பிடலாம். கெட்டுப் போகாது. நல்லாத்தானிருக்கும். இதோ பாருங்க! தக்காளி தொக்கு, பூண்டு ஊறுகாய், வீட்டில போட்ட வத்தல்!”

பரிமளா பக்கம் திரும்பி,”ஆன்ட்டீ! மாமா இவ்வளவு சாப்ட மாட்டாரு. நீங்க பாதி பாதி எல்லாம் எடுத்துக்குங்க. ஒங்களுக்கும் சேர்த்து தான் கொண்டு வந்தேன்.” என்றாள்.

ஒரு பையைப் பிரித்து வேஷ்டியும் சட்டையும் எடுத்து மாமா கையில் குடுத்து, “இந்தாங்க மாமா! இது உங்களுக்கு தீபாவளிக்கு” என்றாள்.

“எதுக்கும்மா இதெல்லாம்?” என்று கூறினாலும் மாமாவின் முகம் மலர்ந்து தான் போயிற்று. மனைவி போன பின்னர் தன்னிடம் அக்கறை காட்டும் ஒரே உறவான தன் தங்கை மகளிடம் அவருக்கும் மிகுந்த பாசமுண்டு.

“வாணி! இரு! ஒனக்கும் சேர்த்து தோசை ஊத்தி எடுத்துக் கிட்டு வர்றேன்.” என்று பரிமளா தன் போர்ஷனுக்கு விரைந்தாள். மாமாவைத் தேடி மெயின் ரோடில் மளிகைக் கடை வைத்திருக்கும் அருணாசலம் வர மாமா வாசலுக்கு போய் வராண்டாவில் நின்று அவருடன் பேச ஆரம்பித்தார்.

மாமாவின் சொந்த வீட்டில் இரண்டே போர்ஷன். ஒன்றில் மாமா மாமி. மற்றொன்றில் பரிமளாவும் அவள் கணவர் ராஜேந்திரனும். இருவர் வீட்டிலும் குழந்தை பாக்கியமில்லை. மாமா அம்பத்தூரிலேயே ஒரு கம்பெனியில் வேலை பார்த்தவர். ராஜேந்திரனுக்கு மாநில அரசில் வேலை. மாமி போய் வருஷம் மூன்றாயிற்று. மாமி போன ஆறாம் மாசமே ராஜேந்திரன் இரண்டே நாள் ஜுரத்தில் போய் சேர்ந்தார். பரிமளா ப்ளஸ் டூ வரை படித்திருந்ததனால் ராஜேந்திரனின் அலுவலகத்தில் கருணை அடிப்படையில் ஒரு வேலை கிடைத்து அம்பத்தூரிலேயே அலுவலகம், போய்க்கொண்டிருக்கிறாள்.

போன வருஷம் மழை நாளில் கடுங்காய்ச்சலில் மாமா படுத்து கிடந்தபோது கேள்விப்பட்டு வாணியும் அவள் கணவரும் ஓடோடி வந்தனர். அப்போது தான் அவருக்கு வேளைக்கு ஆகாரம் கொடுத்து மருந்து வாங்கிக் கொடுத்து பரிமளா அக்கறையுடன் கவனிப்பதை நேரில் பார்த்தார்கள். குழந்தைகளை பக்கத்து வீட்டில் விட்டு விட்டு வந்ததால் வாணிக்கு அன்றிரவே வீட்டுக்குத் திரும்ப வேண்டிய நிர்பந்தம்.

“நான் இங்கே பக்கத்திலேயே தானே இருக்கேன். நா ஒங்க மாமாவை கவனிச்சிக்கிடறேன். நீ பயப்படாம போய் வா! அப்பப்ப மாமவுக்கு ஃபோன் மட்டும் மறக்காம பண்ணு!” என்று பரிமளா தான் சமாதானம் சொல்லி வாணியை அனுப்பி வைத்தாள்.

அம்பத்தூர் பேருந்து நிறுத்தத்தில் அடையார் செல்லும் பேருந்தில் ஏறி அமர்ந்ததும் வாணியின் கணவன் அவளைக் கேட்டான்,”நீ இன்னா நெனைக்குற அவங்களப் பத்தி?” என்று.

அவள் ஒன்றும் சொல்லத் தோன்றாமல் முழிக்க, அவனே சொன்னான், “ஒங்க மாமா அந்தப் பொம்பளையை வச்சிக்கிட்டிருக்காரு!” என்று.

ஒரு நொடி தூக்கிவாரிப் போட்டது வாணிக்கு. குரலே எழும்பவில்லை. ‘என்ன கோண புத்தி இந்த மனுஷனுக்கு?’ என்று ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. ஒரு தனிக்கட்டையான மனுஷனுக்கு நோய்வாய்ப்பட்டால் அக்கம் பக்கத்தில் உதவ மாட்டார்களா? இதைப் போய் இப்படி பார்க்க வேண்டுமா?’ வீடு போய் சேரும் வரை கோபத்தில் பேச்சே வரவில்லை வாணிக்கு.

தொடர்ந்து வந்த நாட்களில், சமைக்கும்போது, துணி அலசும்போது, பாத்திரம் கழுவும்போது மனசு கிடந்து அலை பாய்ந்தது. ஒரு வேலையும் ஓடவில்லை. ‘அப்படியும் இருக்குமோ?’ என்ற எண்ணம் வரும்போதே,’சே!சே! இந்த மனுஷன் புத்தி தான் கேவலமா வேலை செய்யுது. நம்ப மனசைக் கெடுத்துக்கக் கூடாது’ என்று தலையை உலுக்கி தன்னை சரி செய்து கொள்ள முயல்வாள். சோதனையாக அப்புறம் உடனே மாமாவைப் பார்க்கப் போக கை வரவேயில்லை. உடல் நிலை விசாரணை எல்லாம் போன் மூலம் தான். இன்று தான் அடுத்த மாதம் வரும் தீபாவளியை சாக்கிட்டு வந்திருக்கிறாள். பரிமளா வெளியிலிருந்து சமோசா வாங்கிக் கொண்டு வர, மாமா அவள் வருவதற்குள் ‘டீ’ போட்டு வைத்து காத்திருக்க, அவர்களுடைய தோழமையான இனிமையான மாலை ‘தேநீர் நேரம்’ வாணிக்கும் பிடித்து தான் இருந்தது. தனிமையில் வாழும் மாமாவுக்கு எவ்வளவு அருமையான சிநேகிதம் என்று தான் நினைக்கத் தோன்றிற்று.

பரிமளா சூடான தோசைகளுடனும் வந்தாள். புதினா சட்னி வாசம் அறை முழுவதும் பரவி பசியைத் தூண்டியது.

“கை கால் கழுவி விட்டு வா வாணி! எப்ப வந்தே? நல்ல பசியாயிருப்பே!” என்றாள் பரிமளா.

சட்டென்று அவள் கைகளைப் பிடித்து ஒரு பையை அவள் கைகளில் திணித்தாள் வாணி.

“என்ன இது?” என்றவாறே அதைப் பிரித்த பரிமளாவிற்கு ஆச்சரியத்தில் கண்கள் விரிந்தன.

“ஒங்களுக்கு தான் ஆன்ட்டீ! தீபாவளிக்கு வாங்கிட்டு வந்தேன். நிச்சயம் கட்டிக்கணும் பண்டிகைக்கு!”

“எனக்கு எதுக்கு இதெல்லாம்?” நெற்றி சுருங்கியது பரிமளாவுக்கு.

“என்னவோ மனசில தோணிச்சி ஆன்ட்டீ! நா பிரியமா வாங்கி வந்தா நீங்க உடுத்திக்கிட மாட்டீங்களா?” வாணி நயமாகக் கேட்டாள்.

“என்ன கலர் இது? புதுசா இருக்கே?” அவள் மனம் நெகிழ்வதைக் கண்ட வாணி அவசரமாக,” பீட்ரூட்டை வெட்டினா உள்ளே ஒரு கலர் வருமே அது போல இல்லே?” என்றாள்.

பரிமளாவுக்கு சிரிப்புப் பொத்துக் கொண்டு வந்தது.

“யாராச்சும் கேட்டா அப்படியே சொல்லிடலாமா?” என்றாள் சிரிப்பினூடே.

“சூப்பர் ஆன்ட்டீ! ஒங்க கலருக்கு இது ரொம்ப எடுப்பா நல்லாயிருக்கும் பாருங்களேன்!”

“என் கண்ணே!” என்று வாணியை அணைத்து நெற்றியில் முத்தமிட்டாள் பரிமளா. “என்ன அன்பான கொழந்தைம்மா நீ!”

மாமா அருணாசலத்தை அனுப்பி விட்டு உள்ளே நுழைந்தார்.

“மாமா! நேரமாயிடிச்சி. நா கௌம்பறேன். தோசை சூடா சுட்டு கொண்டாந்திருக்காங்க. நேரத்தோட சாப்புடுங்க! அப்புறம் பாக்கலாம். போய் போன் செய்யறேன். ”

கூடவே வாசல் வரை வந்த பரிமளாவிடம் மெல்லிய குரலில், “ஆன்ட்டீன்னு கூப்புட்டா என்னவோ அடுத்த வீட்டுக்காரங்களை கூப்பிடற மாதிரி இருக்கு. நா ஒங்களை ‘மாமி’ ன்னு கூப்பிடவா?” என்று கேட்டு அவள் கரங்களைப் பற்றி அழுத்தி விட்டு பேருந்து நிலையத்தை நோக்கி மன நிறைவோடு நடக்க ஆரம் பித்தாள் வாணி. 

தொடர்புடைய சிறுகதைகள்
கோபி தன் கோபத்தையெல்லாம் காட்டி ஓங்கி உதைக்க, வண்டி 'விர்'ரென்று சீறிக் கொண்டு ரோஷமாகக் கிளம்பியது. சிக்னல்களையெல்லாம் கடந்து அண்ணா சாலையின் மையத்திலுள்ள தன் அலுவலகத்தில் வண்டியை நிறுத்தி விட்டு 'லிஃப்டுக்கு' ஓடிய கோபிக்கு 'சே!' என்றிருந்தது. 'என்ன மனைவி, என்ன வாழ்க்கை ...
மேலும் கதையை படிக்க...
மஞ்சு கை கால்களெல்லாம் ஓய்ந்து போய் படுத்தாள். எப்போதடா பொழுது விடிந்து இந்த நீண்ட இரவு முடியும் என்று ஆயாஸமாக இருந்தது. நேற்று இரவு ஒன்றுமே விபரீதமாக நடக்காததைப் போல எப்பொழுதும் போல ஜகன் காலை எட்டு மணிக்குக் கண் முழித்து ...
மேலும் கதையை படிக்க...
அனிதாவுக்கு பற்றிக் கொண்டு வந்தது. பரத்தைக் குளிப்பாட்ட வேண்டும், வயிற்றுக்கு ஏதாவது கொடுத்து பள்ளிக்குக் கிளப்ப வேண்டும். இன்றைக்கென்று பார்த்து குழந்தைக்கு 'மூடே' சரியில்லை.அனிதாவின் கோபம் பரத் மேல் இல்லை. பரத் அழுவது, அனிதா பரபரப்பது எல்லம் தெரிந்தும், தலையே நிமிராமல் ...
மேலும் கதையை படிக்க...
"கண்ணா! செப்புப் பாத்திரத் தண்ணி குடிச்சியா?" ரமா பரபரப்பாக சமையலறையில் காரியம் செய்து கொண்டே அப்போது தான் தூங்கி எழுந்து வந்த பிள்ளையை விசாரித்தாள். பல் தேய்த்து விட்டு ஆசையாக சூடாகக் காப்பி குடிக்கலாம் என்ற நினைப்போடவே எழுந்திருந்த கண்ணன் உடனே ...
மேலும் கதையை படிக்க...
'கிளி ஆன்ட்டீ வீடு' எங்கள் தெருவில் பிரசித்தம். தெருக் குழந்தைகள் எல்லாம் மாலையில் பள்ளி விட்டு வந்து ஆன்ட்டீ வீட்டில் இருக்கும் பேசும் கிளிகள், மைனாக்கள், வகை வகையான வண்ணப்பறவைகளைப் போலக் குரல் கொடுத்து விளையாடிக்கொண்டிருப்பார்கள். ஆன்ட்டீ பறவைகளை மிக அன்பாகப் பராமரிப்பார்கள். ...
மேலும் கதையை படிக்க...
கூட்டம் நெரிந்தது. கோலாகலமான டிசம்பர் சங்கீத சீஸன்! எல்லா சபாக்களிலும் மத்யான நேர கச்சேரி மேடைகள் வளரும் இசைக் கலைஞ்ர்களுக்கென்றே பிரத்யேகமாக. முதல் கச்சேரிக்கு வந்த கும்பல் அப்படியே அடுத்த கச்சேரிக்கும் அமர்ந்து விட்டது. அடுத்த கச்சேரிக்கு, அந்த பிரபலமாகி வரும் இளம் ...
மேலும் கதையை படிக்க...
காசியில் கங்கைக்கரையில் தஸாஸ்வமேத கட்டத்தில் ஏழு அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. அங்கே மாலை நேர கங்கா ஆரத்திக்கான ஏற்பாடுகள் ஆரம்பித்தன. ஒரே மாதிரி உடையலங்காரத்துடன் ஒவ்வொரு வளைவிலும் பன்னிரண்டிலிருந்து பதினைந்து வயதுக்குட்பட்ட பாலகர்கள் பூஜையை ஆரம்பித்தனர். கரையிலிருந்து சற்று நேரம் ஆரத்தி ஏற்பாடுகளை ...
மேலும் கதையை படிக்க...
"கொரியர்!" குரல் கேட்டதும் ஓடிப் போய் கதவைத் திறந்தார் அண்ணாசாமி. "மணிகண்டன்' னு யாராச்சும் இருக்காங்களா?" "ஆமாம்! எதிர் ஃப்ளாட்! வீடு பூட்டியிருக்கே? அவரு சனி ஞ்£யிறு தான் வீட்டில இருப்பாரு!" "நீங்க மிஸ்டர் அண்ணாசாமியா? ஒங்க கிட்ட குடுக்க சொல்லி சொன்னாங்க!" "சரி! குடுங்க! ராத்திரி அவரைப் ...
மேலும் கதையை படிக்க...
"இன்னும் எவ்வளவு நேரம் இங்கே உட்காரப்போறே?" என்றாள் வீணா முகத்தை சுளித்துக் கொண்டு. அவளுக்கு அவள் சலிப்பு! அவளுடைய பள்ளியில் முதலாவதாக வந்த பெண்ணுக்கு மட்டுந்தான் சென்ற வருடம் இங்கே இடம் கிடைத்ததாம். அந்தப் பெண்ணை விட ஓரிரு மதிப்பெண்கள் குறைவாக வாங்கி இரண்டாம், ...
மேலும் கதையை படிக்க...
'ணங்'கென்ற சத்தத்துடன் முதலில் ஒரு பித்தளைக் குடம் வைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பல வண்ண பிளாஸ்டிக் குடங்கள் வரிசையாக வைக்கப்பட, தேசிய நெடுஞ்சாலையின் அந்தப் பகுதியே பல வண்ணக்குடங்களினால் போடப்பட்டது போல் தோற்றமளித்தது. வானம் பார்த்த பூமியான கருத்தம்பட்டி கிராமம் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து ...
மேலும் கதையை படிக்க...
அனு அப்படித்தான்!
போராட்டம்
சின்ன முள்ளும் பெரிய முள்ளும்
கண்ணா! காப்பி குடிக்க ஆசையா?
மனிதர்கள் பலவிதம்
சங்கீத சௌபாக்யமே!
சின்னஞ்சிறு பெண் போலே…
ஆன் லைன் வர்த்தகமும் அப்பாவி அண்ணாசாமியும்
இழந்ததும் பெற்றதும்
மாயப் பெட்டியும் மாறாத மனிதர்களும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)