சேகுவேராவும் ஓசி சாராயமும்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: October 10, 2012
பார்வையிட்டோர்: 15,284 
 

ஸீன்: 1

லொகேஷன்: பொலிவியா காடு

எஃபெக்ட்: டே/நைட்

1967 – அக்டோபர் 9 என்ற கார்டு திரையில் விரிகிறது. காடு செபியாடோனில் காட்டப்படுகிறது. பறவைகள் சத்தம், கிசுகிசு பேச்சு என்ற பின்னணி ஒலிகளுடன் டென்ட் அடித்த முகாம் லாங் ஷாட்டில் தெரிகிறது. சி.ஐ.ஏ. அதிகாரி பாய்ன்ட் ஆஃப் வியூவில், கேமரா நகர்ந்து போவது… டென்ட் உள்ளே நுழைவது. உள்ளே சுருட்டு பிடித்தபடி இருக்கிற சே குவேரா நிமிர்ந்து பார்ப்பது. க்ளோஸப்பில் அவரது ரியாக்ஷன். டைட் க்ளோஸில் கண்கள் சுருங்குவது…

சே: ”ஹூ ஆர் யூ?”

கேமரா, சி.ஐ.ஏ. அதிகாரிக்கு பேன் ஆகிறது.

சி.ஐ.ஏ: ”அமெரிக்கன்… யு ஆர் அண்டர் அரெஸ்ட். இஃப் யு ட்ரை டு எஸ்கேப், வி வில் ஷூட் யூ!”

சே: ”வித் ப்ளெஷர். பட், ரெவல்யூஷன் நெவர் டைஸ்!”

திரைக்கதைத் தாளிலிருந்து மண்டை உதறி நிமிர்ந்தார் தயாரிப்பாளர் மண்டி கோட்டா ராவ்.

”ரெவல்யூஷன் நெவர் டைஸா… ஏமண்டி மீனிங்?”

”அது… அது வந்து… ‘நான் தனியாளு இல்ல… விவசாயி சோகமா உக்காந்தா, வறட்சி. மவனே, நான் வேகமா எந்திரிச்சா, புரட்சி!’ன்னு பஞ்ச் டயலாக்கா மாத்திக்கலாம் சார். ஓப்பனிங் மட்டும் பீரியட். அப்புறம் கரன்ட்ல வந்துரும்… அஜீத் சார் ஆப்ட்டா இருப்பாரு” – கிறுகிறுத்துச் சொன்னார் நேற்று இன்றுகளைத் தவறவிட்ட நாளைய இயக்குநர் சோனு.

”அது செரி… நீ பொலிவியாவுக்கில்ல கூப்பிடுற?”

”இல்ல சார். ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டில செட் போட்டுக்கலாம்.”

”ஓ… பெத்த செட்டு ரெடி. ஆனா, ஹீரோ பேரு சே குவேரான்னா செட்டாவலையேன்டி. எதுனா மன்ச்சி கமர்ஷியல் அயிட்டமாப் பிடி.”

நிஜ ஸீன்: 1, லொகேஷன்: சாலிகிராமம் டாஸ்மாக், எஃபெக்ட்: மங்கலான இரவு.

”ண்ணே… ஆஃப் அடிச்சுட்டுப் போயிருந்தேன்னு வையி. அந்தாளைக் கொன்னு, தின்னுருக்கலாம்” – குடித்த குடியில், அறுத்த கோழியாகத் துடித்தான் வெற்றிச்செல்வம்.

”சரக்குல அடிக்காதரா… அவிய்ங்களை சக்சஸ்ல அடிக்கணும். ஒரு கோடி… நேட்டிவிட்டி சப்ஜெக்ட்டு. எங்கூரு மதுர கோச்சடைல நடந்த கதை. ஓப்பன் பண்ணா ச்சோன்னு மழை. அப்பங்காரனை ஓடவிட்டு மகனே குத்திக் கொல்றான். அந்த மகன் ஒரு அரவாணி” – லோகு ஆவேசத்தில் ஆனியன் பக்கோடாக்களை அந்தரத்தில் சிதறடித்தான்.

”மச்சான்… பாலா, அமீரு, சசிக்குமார்னு மதுரையை அடிச்சுத் தொவைச்சுட்டாய்ங்க. செல்வராகவன், மிஷ்கின் சென்னை முகத்தக் காட்டுனாய்ங்க. என்.எஸ்.சி. கல்ச்சரை தங்கர் பிடிச்சுட்டாப்ல. கோயம்புத்தூரையும் குடைஞ்சுட்டாங்க. தஞ்சாவூரை யாரு காட்னா… பாலசந்தர் காட்ன உலகம்லாம் ஐயமாருங்க வூடுக… ச்சும்மா சீரியல்ல வேலை பாக்குறது வயித்துப் பாட்டுக்குடியேய். வந்தேன்னா, வகுந்துருவேன். அதான்… அந்த லவ் ஸ்டோரி. அவ குந்தவை நாச்சியார் காலேஜ்ல லிட்டரேச்சர் படிக்கிறா, அவன் உரக் கடைல வேலை பார்க்கிறான். புதுக்கோட்டை மாலா கரகாட்டக் குழு, பழைய பஸ் ஸ்டாண்ட் சாந்தி பரோட்டாக் கடை, கம்யூனிசம், திராவிடம், பூவரசம், அக்கா குருவி, சம்பா, குருவ, உலக சினிமா… பசின்னா என்னன்னு தெரியுமாடா உனக்கு? டேய்! ஊதாச் சட்ட… டேய்…” – மப்பில் காராசேவு மிருகமாகி கரகமாடினான் வீரமணி.

”வாடா என் உலக்கை… நாங்கெல்லாம் நாகர்கோயிலு. ‘உதிரிப் பூக்கள்’ படம் எந்தூர்லடா நடக்குது? மதுரையாம், தஞ்சாவூராம். மானுட சமுத்திரம் நானென்று கூவுரா என் பங்காளி. இந்தா… இந்த வாட்டர் பாக்கெட்ல இருக்குறது எந்தூருத் தண்ணி? காவிரியா, தாமிரபரணியா, முல்லைப் பெரியாரா… ஃபுல்லா கார்ப்பரேட் கம்பெனி வந்துருச்சு. ஸ்க்ரிப்ட்டே இங்கிலீஸ்லதான்டா கேக்குறாங்க. மாறுங்கடா. விஜய்க்கு ஒரு குண்டைப் போடு, விஷாலுக்கு துண்டைப் போடு, கோடில வா, இந்திக்குப் போ, இங்கிலீஷ் படி, இன்டர்நெட்டப் புடி… ஒரு ஸ்மால் ஊத்துறா என் இதே…” – உறுமினார் சேகுவேராவை வொர்கவுட் பண்ண முடியாத சோனு என்ற சோமசுந்தரம். முதுகு வரை முடி வளர்த்து ரப்பர் பேண்டுகள் வாங்கி ராப்பகல் பராமரிப்பதால் ‘நெடுமுடி’ வேணு என்பது நிக்நேம். இந்த உதவி, துணை, இணை இயக்குநர்கள் அறை நண்பர்களானதற்குக் காரணம், பூர்வஜென்ம கர்மாவா, ராம்கோபால் வர்மாவா என்பதெல்லாம் யாரும் அறியார். ஆனால், அது தமிழ் சினிமா சரித்திரத்தில் தவிர்க்க முடியாத பக்கம் அல்லது துக்கம்.

”இன்னொரு ஆஃப் சொல்லிருவோமா?”

”அண்ணே… கடைய மூடியாச்சு. கிளம்புங்கண்ணே!”

நிஜ ஸீன்: 2; லொகேஷன்: தசரதபுரம் அறை,

எஃபெக்ட்: டே

கிம் கு டுக்கின் கொரியன் படத்தை டி.வி.டி-யில் அலறவிட்டுக்கொண்டு இருந்தான் லோகு. அவனது அசிஸ்டென்ட் கேமரா நண்பர்கள் ரெண்டு பேர் கிங்ஸ், சிப்ஸ், பெர்முடாஸோடு அன்றைய ஃபைனான்ஸியர்களாக வந்து உதித்திருந்தார்கள்.

”நேத்து படத்துக்குப் போனியே… எப்பிடிறா?”

”பரவால்ல!”

”இன்னாடா சொல்றே, காறித் துப்புறாய்ங்களேடா! பரவால்லன்றே?”

”எனக்குப் பரவால்லடா, டிக்கெட் காசு 50 ரூபாதான் நஷ்டம். ஆனா, டைரக்டரோட அப்பன்தான் புரொடியூஸர். அந்தாளுக்கு 5 கோடி நஷ்டம் ஆயிருக்கும்ல!” – இரை தேடும் கோழியாக பக்பக்கெனச் சிரித்தான்.

”எங்கப்பன் முனிச்சாலையில கண்ணாடி வெட்டிட்டு இருக்கான். அஞ்சு ரூவா கேட்டா பிஞ்சுரும் செருப்பு!”

கறுப்பு வெள்ளையில் இளையராஜா ஆர்மோனியத்தில் லயிக்கிற, சார்லி சாப்ளின் முழிக்கிற, தாமஸ் ஆல்வா எடிசன் வெறிக்கிற புகைப்படங்களின் கீழே ஷேவிங்கில் இருந்தான் வெற்றி. இன்று ஐங்கரனில் அப்பாயின்ட்மென்ட். போணியாகாத கதையை வீசிவிட்டு, ஹீரோக்களுக்கு அப்பா – மகன் – ஆக்ஷன் – காதல் கதை பண்ணிவிட்டான்.

”கட் பண்ணா டிபிகல் நார்த் மெட்ராஸ் தெரு…”

”நீ கட் பண்ணிக்காத மச்சான். நவுரு…” என்றபடி பரபரப்பாக ரூமைப் பெருக்கினான் வீரமணி.

”சன் டி.வி-ல சீரியல் பண்ண புரொடியூஸர் வந்துருக்காரு. இப்போ வர்றாங்க மச்சான்… கூல் டிரிங்ஸ் வாங்கணும்… சேஞ்ச் இருக்கா?”

”சோனண்ணட்ட கேள்றா… என்னமோ உலக சினிமான்னு நின்ன. இப்போ சீரியல்ங்கிற?”- லோகு குரல் கொடுக்க, டென்ஷனானான் வீரமணி.

”பொடலங்கா உலக சினிமா… காசு வேணும் மச்சான். போனெடுத்தா அம்மா அழுக தாங்க முடியலை. அப்பிடியே சம்பாதிச்சு செட்டிலானோம்னு வையி. அப்புறம் நாம நெனச்ச சினிமாவை எடுத்துக்கலாம்ல!”

”என்னாடா… உன் ஆளு வருதா? ரூமெல்லாம் க்ளீன் பண்ற?” – கையில் பேப்பரும் வாயில் கோல்டு ஃபில்டருமாக வந்து, ஓரமாக உட்கார்ந்து ‘டர்ர்ர்ர்’ என வால்யூம் வைத்தார் சோனு. அறைக்குத் தாயுமான

வரும் வாயுமானவரும் அவரே.

மற்றவர்கள் கில்லிக்கு முன், பின் வந்தவர்கள். சோனுதான் வெள்ளி விழா அனுபவஸ்தர். சில்க் ஸ்மிதா தற்கொலை செய்துகொண்ட நாளில் முக்காலுக்கு மேல் குடித்துவிட்டு மின்சார ரயிலில் குதிக்கப் போன பேரன்பே அவர் சினிமாவில் சம்பாதித்தது. ஷங்கர் செட்டிலிருந்து நாளைய இயக்குநர் வரை ”கோ டைரக்டரா? கூப்பிடு சோனுவை!” என்பார்கள். எத்தனை கதைகள்… முகங்கள்… டிஸ்கஷன்… ஷூட்டிங். இரண்டு முறை சுவிட்சர்லாந்தும் நாலைந்து முறை மலேசியா, சிங்கப்பூரும் டூயட் நிமித்தம் சென்று வந்திருக்கிறார். அவருக்குக் கஷ்டமெல்லாம் சொந்த ஊருக்குப் போவதுதான். ஊரில் மனைவியும் பெண்டு பிள்ளைகளும் இருக்கிறார்கள். சுவிட்சர்லாந்த் டூயட்டில் அவர் இருக்கும்போதுதான் ஊரில் அம்மா செத்துப் போனாள். கதையில் கனவும், சிதையில் உயிரும் போவது கடவுளின் ஆணை. கிராம போனிலிருந்து ரெட் கேமரா வரை கனவுகள் சுழல்கின்றன. இடுகாட்டிலிருந்து உறவுகளின் எலும்புகள் பொறுக்கி சாம்பல் கரைத்த ஆறுகள் எக்கடலைச் சேரும் எம்பெருமானே?

”டேய் வெற்றி! ஐங்கரன்னா சூப்பரு. பிக்கப் பண்ணிட்டுப் போயிட்டே இருக்கலாம். அம்மாவைக் கும்பிட்டுக் கௌம்புரா!”

”அண்ணே… ஒரு நூறு ரூவா இருக்குமா. வந்து தர்றேன்” – கன்னத்தில் போட்டுக்கொண்டு கிளம்பினான் வெற்றி.

கொஞ்ச நேரத்தில் கறுப்பு ஸ்கார்பியோவில் வெள்ளையும் சொள்ளையுமாக இரண்டு பேர் வந்து இறங்கினார்கள். நெடுந்தொடர் தயாரிப்பாளர்கள். கூட்டுக் குடும்பம், குழம்புக் காதல், பொரியல் த்ரில் என வீரமணி அவர்களிடம் காணக் கிடைக்காத கதையை விவரித்தான். அவர்கள் முகம் சுணங்கும் வேளையெல்லாம், ”கஸ்தூரி ரீ-என்ட்ரி ஆகிருக்கு. அதை ஹீரோயினாப் போட்டுக்கலாம். இல்லைன்னா பழைய மோகினியைப் பிடிக்கலாமா?” என உற்சாகமூட்டினான்.

அவர்கள், ”ஆபீஸ் பிடிச்சுரலாம் தம்பி… ஹீரோ குடும்பம் மில்லு வெச்சுருக்காங்கன்னு மட்டும் மாத்திக்குங்க. நம்மளை மாதிரி!” என்றபடி கிளம்பிப் போனார்கள்.

கொரியன் பட ஒலியைக் குறைத்துவிட்டு, லோகு மொபைலில் யாருடனோ ஆவேசமாகப் பேசினான்,

”ஆமா சார். ஒரு கோடிதான்… நேட்டிவிட்டி சப்ஜெக்ட்!”

நிஜ ஸீன்: 3, லொகேஷன்: வளசரவாக்கத்தில் உள்ள ஒரு வீடு, எஃபெக்ட்: டே

வீரமணி சீரியல் ஆரம்பித்திருந்தான். முதல் நாள் ஷூட்டிங். கிர்ர்ர்ரென்று ஜெனரேட்டர் ஓடியது. புரொடெக்ஷன் மேனேஜர் பிளாஸ்டிக் சேரில் தூங்கிக்கொண்டு இருந்தார். நர்ஸ் காஸ்ட்யூமில் இருந்த துணை நடிகைகளும், துணை நடிகர்களும் பெரிதாகச் சிரித்துப் பேசிக்கொண்டு இருந்தார்கள். அதில் ஒருவன் ‘மானாட மயிலாட’ ஆட்டக்காரன். சோனு, வெற்றி, லோகு மூவரும் முதல் நாள் ஷூட்டிங்கைச் சிறப்பிக்க வந்திருந்தார்கள்.

”மச்சான்… சீரியல்னா லேடி ஆர்ட்டிஸ்ட் நிறைய இருப்பாங்களே…” என்றான் லோகு.

”மெயினா மூணு பொண்ணுங்கடா”- வீரமணி சொல்லிக்கொண்டு இருக்கும்போதே, ”மார்னிங் சார்…” என்றபடி வந்தாள் மலர். அவளைப் பார்த்ததும் சிறு கணம் சிதறி, மனம் பதறினான் வெற்றி.

இங்கே கொஞ்சம் ஃப்ளாஷ்பேக்…

வெற்றி உதவி இயக்குநராக வேலை பார்த்த முதல் படத்தில் துணை நடிகையாக நடிக்க வந்தவள் மலர். அப்போது அவன் தங்கியிருந்த தெருவில்தான் அவளும் இருந்தாள். இமைக்கண் பார்வையில் தொடங்கி, நெடுங்குளிர் போர்வை வரை இருவருக்குமான அன்பு வளர்ந்தது. அவன், அவளுக்கு ஒரு காட்சியில் சிறு வசனம் வாங்கித் தந்தான். பூனை தாடியும் கூர்ந்த கண்களுமான அவனை ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் என்றாள் அவள். சுந்தரர்கள் சுதாரிப்பதுண்டோ… அவனது பிறந்த நாள் அன்று க்ளாப் போர்டு ஒன்றைப் பரிசளித்தாள். அவளை, ‘நடிக்க வேண்டாம்’ என்றான். ‘நீ டைரக்டராகிட்டா, நான் உன்கூடவே வந்துருவேன்’ என்றாள். ஓட்டை ஃபேன் சுழலும் அவள் வீட்டு அழுக்கு ஹாலில் பாட்டியின் இருமல் சங்கீதமாக, இருவரும் கேரம் ஆடினார்கள். கம்ப்யூட்டர் இன்ஜினீய நண்பன் வேலைக்குப் போன பிறகு, அவன் வீட்டில் உலக சினிமா பார்த்தார்கள். உலகம் சினிமாவாகிற நொடிகள் எல்லோருக்கும் உண்டுதானே… காலம் வண்ணங்களுக்குத் தீ வைத்த தினத்தில், அவள் பிரிந்து சென்றாள்.

அவள் குடும்பம் பணமின்றி, நகரில் திசையின்றி அலைந்தது. கறுத்த உதடுகளும், கதை இரவுகளும், காசில்லாப் பகல்களுமாக திரிந்த வெற்றியால் என்ன செய்ய முடியும்?

நான்கு வருடங்களுக்குப் பிறகு கொஞ்சம் பூசிவைத்து, சிகப்பேறி, பார்வை மிதக்காமல் இங்கே நிற்கிறாள் மலர். அவனைப் பார்த்து கொஞ்சம் கண்கள் துடித்து முகம் திருப்பினாள்.

”இவங்கதான் மகிதா… மூணு ஹீரோயின்ல ஒருத்தங்க…” என்றான் வீரமணி.

ஆட்டோவில் சோனுவின் மடியில் படுத்திருந்தான் வெற்றி.

”விட்றா… இதான்டா லைஃப். உன் ஸ்க்ரிப்ட்ல சேரு இதையெல்லாம்…” என்றார் சோனு.

”இதுக்குத்தான் நானெல்லாம் எங்கூரு தேவாரத்துலயே லவ்வர் பிடிச்சுட்டேன். எண்ணெய் வெச்சு வழிச்சுச் சீவி, அண்ணாச்சிக் கடை போன்லேருந்து ஐ லவ் யூ சொல்வா… அதான்டா நமக்கு கரெக்ட்டு!” என்றபடி சிரித்தான் லோகு.

நிஜ ஸீன்: 4, லொகேஷன்: வடபழனி க்ரீன் பார்க் ஓட்டல், எஃபெக்ட்: நைட்

அடக்கமான ஏ.சி. ஹாலில் பிரஸ் மீட். 7 மணிக்கெல்லாம் காக்டெயில் ஆரம்பித்துவிட்டது.

”படம் பேரு ‘மலரும் நானும்…’னு வெச்சுருக்கேன். இது நம்ம லைஃப்ல நடந்த, நடக்கிற கதை. இப்போ காதல்னா ஆளுக்கொரு அர்த்தம் இருக்கும்” – மைக்கில் அடாசு வார்த்தைகளைப் போட்டு தன் படத்தைப் பற்றி பிரஸ்ஸூக்கு விளக்கிக்கொண்டு இருந்தான் வெற்றி. கலர் டி-ஷர்ட், ஷேவிங் முகம், தெளிவான கண்கள் என ஆள் அழகாகி இருந்தான்.

ஓரத்தில் சோனுவும் லோகுவும் ‘கச்சேரி’யை ஆரம்பித்திருந்தார்கள். மூணாவது லார்ஜில் லோகு, பக்கத்தில் நின்ற புரொடக்ஷன் மேனேஜரிடம் ஆரம்பித்தான், ”ஒரு கோடிதான் சார்… நேட்டிவிட்டி சப்ஜெக்ட்.”

ஏற்கெனவே ஏழாவது லார்ஜில் முங்கிக்கொண்டு இருந்த புரொடக்ஷன் மேனேஜர் ஒரு கெட்ட வார்த்தையைத் துப்பினார். லோகு அதிர்ச்சியாக, ”ஆமாடா, ஆளாளுக்கு ஆட்டிக்கிட்டு வருவீங்க. நாங்க படம் பிடிச்சுக் குடுக்கணும். அப்புறம் விகடன் பேட்டி, சன் மியூஸிக் லைவ், காபி வித் அனு, பாராட்டு விழா, அவார்டு ஃபங்ஷன்னு புதுக் கார்ல கேரளாக் குட்டியோட கௌம்பிருவீங்க. நாங்க மட்டும் இப்டியே திரியணுமா?” என்று தொடங்கி, ஏராளமான அசைவ வார்த்தைகளால் அறைந்தார்.

”இந்தா நண்பா, இப்ப லோகு என்ன சொல்லிட்டான்னு இப்டிப் போட்டுத் தாக்குற? நாமென்ன அப்டியாப் பழகி இருக்கோம்” என்று இருபது ஆண்டு நட்பை முன்வைத்து சமாதானத்துக்கு வந்த சோனுவை, ”நீ என்னடா கொம்பு? இந்தா நேத்து வந்த பய படம் ஆரம்பிச்சுட்டான். நீ இன்னும் டிஸ்கஷன், ஃபங்ஷன்னு ஓசிச் சாராயம் குடிச்சுக்கிட்டே திரியுறியா?” என்று எகிற, சொட்டேரெனச் சுருண்ட சோனு அங்கேயே வாந்தியெடுத்தார்.

விழா முடிந்து, நள்ளிரவு வரை நடந்தது பார்ட்டி. பாதி யில் மட்டையான லோகுவை ஆட்டோவில் அள்ளிக்கொண்டு போனார்கள். நள்ளிரவில் கம்பெனி காரில் வெற்றியும் சோனுவும் திரும்பினார்கள்.

”இப்பவே இவ்ளோ பப்ளிஸிட்டி. டாட் காம்லருந்தெல்லாம் வந்துட்

டாங்கண்ணே. படம் நல்லா வரும்லண்ணே!” என்றான் டைரக்டர் வெற்றி. அவனுக்கும் கோ-டைரக்டர் சோனுதான். போதையில் அவன் தோளில் சாய்ந்து குழறினார் சோனு.

”சூப்பரா வரும்டா… நீ கவலப்படாதடா, நாமெல்லாம் ஜெயிக்கப் பொறந்தவய்ங்கடா!” என அவர் சொல்லும்போது வெற்றியின் தோளை ஈரமாக்கிஇருந்தது ஒரு சொட்டுக் கண்ணீர்!

– 22th அக்டோபர் 2008

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *