கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: April 29, 2015
பார்வையிட்டோர்: 16,295 
 

“சார்வாள்! சொகமாயிரிக்கீறா?” இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னும் வள்ளிநாயகத்தின் குரலில் குமரித்தமிழ் கொஞ்சியது. “ஜே எம் எஸ் பஸ்ஸுல என்ன கூட்டம்.நல்ல குளுறு வேற. சமுனாமரத்தூர் எப்படி மாறிடுச்சு. நாப்பது வருசமாயிட்டுல்ல. தம்பி கல்யாணங்கெட்டாமலே இருந்துட்டீக. நம்ம ஊரு பக்கம் ஏதாச்சும் நல்ல நாயரு பொண்ண அம்பது பவுனோட முடிச்சிருக்கலா”.

நான் சிரித்தேன். “நம்ம எளங்கோவன் மகளாட்டு நாரோல்ல தா கலியாணம் வச்சிருக்கு. நீரு வாரீரு. அந்தால என்னமாச்சும் சொல்லீட்டு இங்கனயே கெடந்தீரு. சவட்டி புடுவேன். ரிட்டைடாயிட்டு இன்னும் என்னவே இந்தூருல? நம்ம மக்க மனுசாளோட வந்து சேராம”. என்மீது மாறா அன்பு கொண்ட தம்பதியர். தம்பி மகளின் திருமண அழைப்பினைத் தந்து விடைபெற்றனர்.

நினைவுகளின் கனம் தாளாமல் வீட்டின் முன்புறமிருந்த இலவச மருத்துவ மையத்துக்குச் சென்றேன். என் வாழ்வு இவ்விடத்தை விட்டு நகராது. “செண்பக வனம்”.

பெயர்ப்பலகையை நோக்குகிறேன். எழுபத்து மூன்றில் நான் இந்த ஜவ்வாது மலைக்கு வந்தபோது, “சாருக்க சுசீந்தரமா எனக்க தக்கல இந்தா இவ ஆரவாமொளிக்காரிதான்,” என என்னை வரவேற்று போஷித்த ஆசிரியர் தம்பதியர்தான் இந்த வள்ளி நாயகமும் கோலம்மையும்.

ஷெல்லியையும் கீட்ஸையும் கம்பனையும் கபிலரையும் நேசித்த எனக்கு அன்றைய ஜவ்வாது மலையின் பனியும் அமைதியும் மயக்கும் பேரெழிலாய் தோன்றியது. அன்று காப்புக்காடெங்கும் சந்தன மரங்கள் பரவியிருந்தன. எட்டியும் புங்கனும் காட்டு வாகையும் வேங்கையும் துறிஞ்சியும தான்றியும் ஈட்டியும் ஆலும் அரசும் மலை வேம்பும் நெல்லியும் எங்கும் அடர்ந்து, லண்டானா புதர்களும் கோவங்கொடிகளும் ஊனாங்கொடிகளுமாய் அழியா வனமாய் இருந்தது. வாச்சர் கோவிந்தனின் துணையுடன் மலையைச் சுற்றி வந்தேன்.

”சார்வாள் கேட்டியளா இந்த மலை புதுசா வந்த ஒடனே அழகாத்தானிருக்கும். மா பலா வாழையோடு மரத்துல மந்தியாடும்னு குத்தாலக்குறவஞ்சி பாடத்தோணும். ஒரு மாசத்துல குப்புற படுத்துடுவீரு. ஒம்ம கூடவே கெடக்கானுவளே இவனுவ கஞ்சாவையும் தண்ணியையும் பளக்கிடுவானுவ. ஊருல அம்மைக்கு எழுதி நல்ல பொண்ணா பாத்து கெட்டி கூட்டிட்டு வாரும்.”

வள்ளி நாயகம் சாரின் அறிவுரைகள் சரியென்றே சில மாதங்களில் எனக்குத் தோன்றத் தொடங்கியது. வாச்சர் கோவிந்தனும் கார்டு கிஷ்டனும் அந்த மலைவாசிகளே. அவர்களே எனக்கு சமையலும் துணையும்.

கரும்பச்சை மரங்களடர்ந்த பங்களாவில் தூரத்தில் மேயும் ஆடுகளின் ஒலிகளும் மைனாக்களின் கிரீச்சிடல்களும் சிட்டுகளின் ஓசைகளுமே சத்தங்கள். போக்குவரத்து வசதிகளற்ற அந்த மலையில் பாரத தேசத்தின் எந்ந உணர்வுகளும், கேளிக்கைகளும் வந்தடையா காலமது.

பனிபடர்ந்த காலைகளில் என் பங்களாவின் வெளிப்புறத்தில் ஒரு முதிர்ந்த தாயாய் தன் கிளைகளை பரப்பிய ஆலமரத்தின் விழுதுகளை பவளங்களாய்ச் சிவந்த கனிகளை தங்கநிறத் துளிர்களை கையில் கடுங்காப்பியுடன் புகை மூட்டமாய் பார்க்கையில் மனதில் ஷெல்லியின் வரிகள் ஊற்றெடுக்கும்.

‘இளங்காற்று தன் மெல்லிய பனித்துளிகளால்
செடியை வளர்த்தது
இரவின் முத்தங்கள்
அதைத் தொட்ட போது
இலைகள் மூடிக்கொணடன!’

ஒரு நாள் காலையில் பட்டறைக்காடு மலைமீது கையில் ஒரு தடியுடன் ஏறினேன். பார்க்க யாருமற்ற அவ்விடத்தில் மஞ்சளும் ஊதாவும் சிவப்பும் நீலமும் வெண்மையுமாய் அத்தனை மலர்கள். சந்தன மரங்களில் போட்டிருந்த எண்களை சரிபார்த்துக் கொண்டே உச்சியை அடைகையில் தூரத்தில் ஆடுகளைப்பார்த்தேன்.

மலை உச்சியில் அடர்ந்த பசும்புற்கள். அங்கே ஒரு காஞ்சிர மரத்தின்மீது ஒயிலாகச் சாய்ந்து அவள் அமர்ந்திருந்தாள். எதிர்க்காற்றில் குழல் கற்றைகள் பறக்க ஒரு காலை மடக்கி ஆடுகளைப் பார்த்தவாறு அவள் அமர்ந்திருந்த கோலம் என் மனதினுள் அழியாச் சித்திரமாய் படிந்தது.

பசும் வண்ணத்தில் கஞ்சிர மலர்கள் காற்றில் அவள் மீது உதிர்ந்து கொண்டிருந்தன. நான் ஏதோ வனப்பேச்சியோ என்று தான் ஒருகணம் மயங்கினேன். புற்களையும் சருகுகளையும் மிதித்துக் கொண்டே நான் அருகில் சென்ற சப்தம் கேட்டுத் திரும்பி அரண்டு எழுந்து நின்றாள். மருண்ட அந்த விழிகள் தூய நீரோடை போன்ற குளிர்வுடன் என்னை நோக்கின.

” தாதன் இங்க இல்ல சாரு” என்றாள். தாதன் அப்பகுதி வாச்சர்.

” நீ இங்க தனியா என்ன பண்ற?” என்றேன்.

” ஆடு சாரு” என்றவாறே ஓடிவிட்டாள். எனக்கு ஒரு நொடி சொப்பன மயக்கமோ என்று தோன்றியது. இத்தனை முழுமையான அழகுடன் ஒரு பெண்ணிருக்க முடியுமா. சின்ன வயதில் அம்மாவுடன் ஊரில் குலதெய்வக்கோவிலில் படையலிடச் சென்றபோது காட்டு வழியில் தனியாக மரத்தடியில் அமர்ந்திருந்த யட்சி சிலை மனதில். வெயில் மழை காற்று என எல்லாவற்றையும் பார்த்து பழமையின், காலத்தின் அழகு படிந்து எண்ணைக் கருமையுடன் புன்னகைத்து அமர்ந்திருந்த யட்சி போன்றவளே இவளும் என்றே எண்ணினேன்.

எத்தனை கருமை. தெய்வச்சிலைகளுக்கே உரிய மாயக்கவர்ச்சி அந்தக் கருப்பு. அவள் கூந்தலில் சூடி இருந்த செந்தூர நிற காட்டுமலர், காதோரம் படர்ந்திருந்த கூந்தலின் நெளிவு, நெற்றியின் செறிவு, குவலயத்து எளிமையெல்லாம் ஒருங்கே கொண்ட அகன்ற விழிகள், நேரான மூக்கு, முதிரா கன்னியின் இதழ்கள் . அவள் ஓர் ஆதி பெண் தெய்வமாகவே எனக்குத் தோன்றினாள். மறுநாள் அவளைத்தேடி அலைந்தேன்.

காட்டு நெல்லி மரங்கள் பசுங்காய்களுடன் நிறைந்திருந்தன. செந்நிற இலைகளுடன் நுனா மரங்கள். பெயரறியாச் செடிகள், காட்டாமணக்குப் புதர்கள் படர்ந்திருந்த காட்டுக்கொடிகளில் ஊதா வண்ண மலர்கள், கொத்து கொத்தான சிவந்த பழங்கள், தட்டாரைப்பூச்சிகள், நீலவண்ண மலர்கள் தேனீக்கள் ஓணான்கள் நாகணவாய்ப்பறவைகள், தேன் சிட்டுகள், வண்ணாத்திப் பூச்சிகள், தவிட்டுக்குருவிகள், மணிப்புறாக்கள் என காடு உயிர்ப்புடன் இருந்த உள்பகுதியில் அவளை மீண்டும் பார்த்தேன். கையில் பொன்னிறக் கொன்றை மலர்க்கொத்துடன காட்டு வாகை மரத்தடியில் நின்றிருந்தவள் என்னைப் பார்த்ததும் சிரித்தாள்.

முறியுணர்க்கொன்றை நனி பொன் கால

அந்த உயரத்திலும் புழுங்கியது. வானம் இருண்டு மழையைக் கொணர்ந்தது. அங்கிருந்த பாறை மீது அமர்ந்தேன். அவளும் ஆடுகளும் அதே மரத்தடியில்.

மழையின் முழுமையை, காட்டில்தான் உணர இயலும். மரமும் கிளையும் புல்லும் கொடியும் கல்லும் எல்லாம் மழையைத் தழுவின. மழைக்கூதலில் சிற்றாடையைஒ போர்த்தியபடி அமர்ந்திருந்த அவளை முழுமையாய் பார்க்கிறேன். இவள் கை விரல்கள் மட்டுமே போதுமே என் முழு வாழ்விற்கும்.

” உன் பேரென்ன?”

” செம்பகா…”

” காட்டுல தனியா இருக்க பயப்படமாட்டியா?”

”எங்கப்பன் இங்க தான் சுத்திட்டிருக்கும் சாரு. நான் இங்கயே பொறந்தவ. காட்டுல எனுக்கின்னா பயம்.”

”நீ எனக்கு காட்டைச் சுத்திக்காட்டுறயா” என்றேன்.

”இன்னா பாக்கனும் சாரு?”

”எல்லா மரம் பேரும் பூவும் தெரியனும்.”

”உனுக்குத் தெரியாததா சாரு.”

”இல்ல எனக்கு இங்குள்ள மரமெல்லாந் தெரியல.”

அவளுக்குச் சிரிப்பு வந்தது. பூத்த மலர்களையெல்லாம் கொய்து இவள் மீது சொரிந்தால் கூட அது ஒரு துளிதான். அந்தக் கால் விரல்களைப் பற்றி என் தலையில் மார்பில் வைத்து ராதையைக் கொண்டாடியக் கண்ணனாக மாற மனம் விழைந்தது. பெண் தெய்வ வடிவுதானே!

“இது வெப்ளாந்தழ சாரு பழம் பழுக்க போடறது.”

”ஷெண்பகா என்ன சார்னு கூப்டாத. தேவான்னு சொல்லு.”

”அய்யோ”, நாணினாள்.

”ஏன் ஷெண்பகா நீ எவ்ளோ அழகுன்னு உனக்குத் தெரியுமா?”

”போ சார் நான் கருப்புதான இங்க டீச்சருங்கள்ளாம் எம்மாஞ் செவப்பா திவ்ளோன்டு கை வச்ச லவிக்க போட்ணு காதாண்ட முடிய வெட்டிகினு நகை அல்லாம் போட்டுகிணு அழவா கீறாங்க”

” அய்யோ ஷெண்பகா அதெல்லாம் சும்மா வேஸ்ட், வெளி வேஷம். நீ தான் உண்மையான அழகு. ஏஞ்சல்!”

”அப்டீன்னா?”

”ஏஞ்சல்னா தேவதை. எங்க ஊர்ல கடல் இருக்கு. அங்க நாங்க கும்பிடற சாமி கன்னியா சிவனுக்காக காலங்காலமா தவம் நிக்கறா, அவ தான் கன்னியாகுமரி. அவ நித்ய கன்னி. ஆனா எல்லாருக்கும் தாய். நீயும் அப்படித்தான். மத்த பொம்பளைங்கல்லாம் உங்கிட்ட கூட வர முடியாது. உன் அழகே இந்த கறுப்புதான்.”

நான் பேசப்பேச பெண்களுக்கே உரிய உள்ளுணர்வில் என்னை அறிந்து கொண்ட மாதிரி நோக்கியவள், “மெய்யாவா” என்றாள்.

அவள் மூக்கிலும் காதுகளிலும் காய்ந்த காஞ்சிர மலர்களை அணிந்திருந்தாள். கைகளில் சிவப்பு வண்ண கண்ணாடி வளைகள். அதுவே பேரழகாய் இருந்தது. இடை வரை அடர்ந்த சிகையும் துள்ளல் நடையும் கபடமற்ற விழிகளும் சுழிக்கும் இதழ்களும் புருவங்களும் நாசியும் அவளை முழுமையாக்கின. ஒளிரும் கறுப்பும், காட்டுக் கொடி போன்ற எழில் வடிவும், எனக்கு அவள் வன தேவதையாகவே மாறிவிட்டாள்.

காட்டில் கொன்றை மலர்களையும் வேங்கைப்பூக்களையும் ஊமத்தம்பூக்களையும் கருப்பும் சிவப்பும் கலந்த குன்றின் மணி விதைகளையும் காற்றில் வெடித்துச் சிதறும் கரண்டிக்காய்களையும் காடை, பாம்பு முட்டைகளையும் காண்பித்தாள்.

”அய்யோ! அந்தப்பூ கிட்ட போவக்கூடாது. கண்ணு நோவு வரும்னு எங்க ஆசா சொல்லுச்சி.” செந்நிறத் தீப்பிழம்புகளாய் மலர்ந்திருந்த பூக்களைப் பார்த்து சொன்னாள்.

“இது செங்காந்தள் இதைப்பாடாத சங்கப்புலவனே கிடையாது தெரியுமா? குவியுணர்த்தோன்றி ஒண்பூ வண்ண கணங்கொள் சேவல்..”

“அதெல்லாம் எனுக்கின்னா தெரியுஞ்சார்” சிணுங்கினாள்.

ஒரு நாள், அருகிலுள்ள குட்டை ஓன்றில் மலர்ந்திருந்த வெண்ணிற அல்லிகளையும் கொட்டிப்பூக்களையும் பார்த்துக்கொண்டே இருவரும் புன்னை மரத்தடியில் அமர்ந்திருந்தோம். காட்டு மல்லிப்பூக்களைத் தொடுத்து கூந்தலில் சூடியிருந்தாள் “என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறயா?” என்றேன்.

அவள் விழிகளில் கண்ணீர்த்துளிகள். என்னை ஏறிட்டு பார்த்தவள் அங்கிருந்து திரும்பிப் பார்க்காமல் சென்றுவிட்டாள்.

’பூப்போல உன்கண்
புலம்புமுத்து உறைப்ப’

என் மனம் கனத்தது.

அன்று முழுவதும் என்னால் யாரிடமும் பேச முடியவில்லை. நள்ளிரவில் வீட்டிலிருந்து எழுந்து வெளியில் வந்தேன். நிலவொளியில் பனிபடர்ந்த மலை சலனமின்றி ஜொலித்தது. நான் ஷெண்பகத்தின் குடிசையை நோக்கி நடந்தேன். அவள் வீட்டிற்கு சிறிது தூரத்தில் நின்றேன்.

‘மாவுறங்கின புல்லுறங்கின வண்டுறங்கின கானுறங்கின வெங்கண்
மானிரு கண்ணுறங்கில’

கம்பனின் வரிகள் மனதிலோட சிறிது நேரம் பார்த்து விட்டுத் திரும்பிவிட்டேன். அதன் பிறகு இரண்டு நாட்கள் கழித்து தான் அவளைப் பார்த்தேன். காட்டோடை அருகில நீர் மத்தி மரத்தடியில் நின்றிருந்தாள். “ஏன் என்னைப் பார்த்து ஒளியற”, என்றேன்.

“ வேணாஞ்சார் எங்கப்பனுக்குத் தெரிஞ்சா வெட்டிப்புடும். எங்க மலக்காரங்க கீழ்நாட்டார கட்டிக்க மாட்டம். இது மாறின்னா ஊர உட்டு தள்ளி வச்சுருவாங்க.”

”அதெல்லாம் நா பாத்துக்கறேன். உனக்கு புடிச்சிருக்கா?” என்றேன். கண்களில் நாணத்துடன் குனிந்து கொண்டாள். கூந்தலில் பவள வண்ண மலர்க்கொத்து. “நாவப்பழம் தின்னுவீங்களா” என்று மடியிலிருந்து எடுத்து நீட்டினாள். நான் புன்னகையுடன் வாஙகிக்கொண்டேன்.

“ராவுல தனியா வெளிய வராத சார் கன்னிமாரு ஒலாத்துவாங்க.”

” நீ என்ன பார்த்தியா”

”ஆமா நானும் தூக்கம் புடிக்காம வூட்டு பின்னாடி கோந்துனு இருந்தேன்.”

மறுநாள் காட்டில் ஆட்டுப்பாலை மண்சட்டியில் கறந்து அதில் ஏதோ இலையைப் போட்டாள். கொஞ்ச நேரத்தில் அது பாலாடைக்கட்டியாய் மாறியது. “நல்லாருக்கும் சாப்பிடு சார்” என்று ஊட்டி விட்டாள்.

காட்டில் தீ மூட்டி எதையோ வாட்டிக் கொண்டிருந்தாள். “கெவுறு கதுரு சார். உனுக்கு தான் கொணாந்தேன்” என்று அதை நிமிண்டி ஊதி கொடுத்தாள். அவளின் அன்பை அப்படித்தான் காண்பிக்க முடிந்தது.

” என்ன சார்னு கூப்டாதன்னு சொன்னேன் இல்ல”

”பேர எப்டி சொல்றது… மாமான்னு கூப்டட்டுமா…”

நான் சிரித்தவாறு, “சரி பேபி” என்றேன்.

”நீ எதுக்கும் பயப்படாதே பேபி. எங்க ஊருக்கு போயிடலாம். அங்க கடல் இருக்கு, குமரித்தாய் இருக்கா. இங்க மாதிரியே தான் மழை பெய்யும். ரொம்ப அழகான ஊர்.” ஆவலாய் தலையசைத்தாள்.

கிஷ்டனிடம் திருமணம் பற்றி கூறியதும் பதறினான். ”சார் அது எனக்கு மொறப்பொண்ணு தாஞ்சார். எங்கமாமன் ஜடையன் ஊரு நாட்டாமக்காரு. அதெல்லாம் கீழ்நாட்டாருக்கு பொண்ணு தரவே மாட்டாங்க.”

“ நீ அவ அப்பா கிட்ட சொல்லு. நானே நேர்ல வந்து பேசறேன்.”

அன்று மாலை ஜடையனே என்னைத்தேடி வந்தான். ”ஊருக்கு என்ன தீர்க்கணுமோ அந்த பணத்த கட்டிடலாம். நா உம்ம பொண்ண நல்லா வச்சிக்குவேன். நீங்க சரின்னு சொல்லனும்” என்றேன். இருட்டும் வரை எதுவுமே பேசாமல் என் பங்களா வாசலிலேயே அமர்ந்திருந்த ஜடையன், ”உங்க ஊர்ல போயி அப்பன் அம்மய இட்னு வா சார்” என்றான்.

மறு வாரம், ”நா கெளம்பறேன் பேபி. எங்க அம்மை கூட வாறேன் ”என்றேன். காட்டு அரளி மலர்களைச் சூடியிருந்த என் தேவதை கண்கள் கலங்க ”சரி மாமா” என்றாள். காட்டில் பொறுக்கி வந்திருந்த விளாம்பழங்களையும், எலந்தம்பழங்களையும் என் பையில் போட்டவள், காகிதப் பொட்டலத்தை என் கைகளில் தந்து ’வழியில சாப்புட சோளப்பொரி வறுத்தேன்’ என்றாள்

செந்நிற அரளிப்பூக்களைச் சூடி மலை முகடுகளில் கதிரவன் மறையும் சிவந்த ஒளியில் நின்ற அவள் எனக்கு பாசத் தாயாக, அணுக்கமான தோழியாக, இனிய காதலியாக, என்னருமை மகளாக,கருணைவடிவான குமரித்தெய்வமாக, ஆக்ரோஷமான கொற்றவையாக ஒருங்கே காட்சியளித்தாள். மனம் முழுக்க அந்த அழியாக் காதல் பரவி என்னை நிறைத்தது. மனம் பொங்க, நான் முழுமையாய் மறைந்து அவளுள் கலந்து அவளாக மாறிவிடப் பிரேமை கொண்டேன்.

”சார்! அதுக்குள்ள ஊர்ல இருந்து வந்துட்டீங்களா? ஒரு மாச லீவுதான?” இருபது நாளில் திரும்பிய என்னைக் கேட்ட கோவிந்தன் முகம் வாடி இருந்தது.

“என்ன கோயிந்தா” என்றேன்.

“சார், செம்பகா செத்துடுச்சி சார்…”

” நீங்க போன மக்யா நாளே ஜொரம். என்ன வைத்யம் பண்ணாலுங் கொறையல. காயலாவே பூடுச்சி அஞ்சி நாள் ஆயிடுச்சி.” எனக்கு நினைவு திரும்ப இரண்டு நாளாயிற்று. காஞ்சிர மரத்தடியை, செங்காந்தள் மலர்களை ஆம்பல் குளத்தை சுற்றிச்சுற்றி வந்தேன்.

ஒரு வாரம் கழித்து வந்த கிஷ்டன் என்னைப் பார்த்துக் கதறினான். கொஞ்ச நேரங்கழித்து, “சார் நாந்தாஞ் சொன்னேனே… எங்க மாமன் மருந்து வச்சிடுச்சி சார்.”

என் உடல் அதிர்ந்தது. “ என்னடா!” என்றேன்.

”ஆமா சார் அதுக்குத்தான் உங்கள ஊருக்கு போவ சொல்லி இருக்கான். ஒரு வெத இருக்கு சார் அத்த சோத்துல வச்சி குடுத்தா கொஞ்சங் கொஞ்சமா காயலா பூடுவாங்களாஞ் சார். எனுக்கே இப்பதான் தெரியும்.”

“ செம்பகா சாவரத்துக்கு மின்ன என்ன கூப்டனுப்புச்சி சார்.” நடுங்கும் உடலுடன் அவனைப் பார்த்தேன்.

”அதுக்கும் தெரிஞ்சுடுச்சி. ’கிஷ்டா அவுரு வராங்காட்டியும் என் உசுர எங்கப்பன் வைக்காது. மாமான்னு சொல்லிக்கினே என் உசுரு போச்சுனு சொல்லு’னு அழுதுச்சி சார். இத்த உங்கையில குடுக்க சொல்லுச்சி ”, என்று சிவப்பு வண்ண வளையல்களை என் கைகளில் வைத்தான்.

Print Friendly, PDF & Email

1 thought on “செம்பக வனம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *