கதையாசிரியர்:
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: அறிவியல் சமூக நீதி  
கதைப்பதிவு: July 16, 2012
பார்வையிட்டோர்: 13,847 
 

சுந்தர் உள்ளே வந்தவுடன் என் கையைப் பற்றி தரதரவென்று மொட்டை மாடிக்கு இழுத்துச் சென்றான். ஏதோ ஒரு ரகசியம் அவன்கிட்ட மாட்டியிருக்குன்னு அர்த்தம்.

“என்னடா?.”——என்னை குறுகுறுவென்று பார்த்தான்.. அதி ஜாக்கிரதையாய் தன் ஜேபியிலிருந்து சின்ன பொட்டலத்தை எடுத்துப் பிரித்தான்.

“என்னது இவ்வளவு ரகசியமாய்?.ப்ரவுன் ஷுகரா?.”

“த்தூ! நல்லாப் பாரு.”—–கையில் வாங்கினேன். என்னது இது. பித்தளை பட்டன் மாதிரி இருக்கு, ஓரத்தில் கருகியமாதிரி கருப்பா இருக்கு. என்னதுடா இது?.”

அவன் சுற்றுமுற்றும் பார்த்து விட்டு அடித் தொண்டையில், பீறிடும் சந்தோஷத்தை அடக்கிக் கொண்டு.

“தங்கம்டா! சொக்கத் தங்கம்.”—-எனக்கு அதில் ஏதும் சுவாரஸ்யமில்லை. இருக்கட்டும், தங்கம்தான் .அதுக்கு ஏன் இவ்வளவு சந்தோஷம்?.புரியல. நல்லதா,மெருகு போட்டு வாங்கக் கூடாது?.

“அட மடையா! இது செஞ்சதுடா.ஒரு மணி நேரத்துக்கு முன்னால இது செம்பாய் இருந்தது.. தெரிஞ்சிக்க.”

“வெய்ட்…வெய்ட்…என்ன…என்ன சொல்ல வர்ற?. இது செம்பா இருந்ததா?. இப்ப தங்கமாயிட்டதுங்கறீயா?. என்னங்கடா ஆளாளுக்கு இப்படி கிளம்பிட்டீங்க?.ஒருத்தன் மூலிகைப் பெட்ரோல்னு கதை விட்டான், நீ மூலிகைத் தங்கம்ங்கறீயா?.கிழிஞ்சது லம்பாடி லுங்கி. என்ன மறை கழண்டுக்கிச்சா?.ஆமா யாரு செஞ்சதுடா இதை?.நீயேவா?. இருக்காதே.உன்னால முடியக்கூடியது ஒண்ணே ஒண்ணுதான்..”

“என்னது.?.

“பத்து மாசத்தில ஒரு குழந்தை.”

“அழகுதான்.செஞ்சது குருவிமலை சாமியார்.”

“அவரு எங்க இங்க வந்தாரு?.

“இப்ப எங்க வீட்லதான் இருக்காரு.எங்கப்பாவுக்கு ரொம்ப வேண்டியவராம். பெயர் ஷண்முகானந்தா. சித்து புருஷர். பத்து வருஷம் இமையமலையில் தங்கி தவம் பண்ணியிருந்தாராம்.. முகத்தில என்ன தேஜஸ்ன்ற?. கண்களில் அப்படி ஒரு ஜ்வாலை. அ.ப்.ப்.ப்.பா….அப்.பப்.பா…”

“ஏய்! சுருக்கு..…சுருக்கு…..ஆல்கெமிஸ்ட் ஆளா?. ரசவாதம் பண்றாராமா?.ஹ.ஹ.ஹா. நீ இந்தாப் பெரிய மண்டைய வெச்சிக்கிட்டு, உள்ளே மூளைதானே, வேற எதுவுமா?.”

“ நீ நம்பமாட்ட தெரியும். நாங்க நேரிடையா பார்த்தோம்டா. அஞ்சி நிமிஷத்தில மாறிப் போச்சுடா. கீழே கொட்டினால் பளபளன்னு சுத்தத் தங்கம்.உரை போட்டுப் பார்த்தாச்சி..”

“என்னடா இது?.ஐன்ஸ்டீனே துண்டைக் காணோம், துணியைக் காணோம்னு ஓட்ற விஷயம் போலிருக்கே.”

“கிண்டல் வாணாம்டா.ஒரு நாளைக்கு உனக்கே உண்மை புரியும். எனக்கு ஒரு கிலோ தர்றேன்னிருக்காரு.”

“என்னது புளியா?..”

“ ச்சீய்!.”—-கூப்பிடக் கூப்பிட அவன் புர்ரென்று கிளம்பிப் போய்விட்டான். தங்கம் என்பதில் எனக்கு எந்த சுவாரஸ்யமும் ஏற்பட்டு விடவில்லை. யாரோ அவனை செமத்தியாக ஏமாற்றியிருக்கிறார்கள். மறு நாள் ஆறு மணிக்கெல்லாம் திரும்ப வந்து நின்றான்..ஒரு பொட்டலத்தை நீட்டினான்.

“என்ன பாஸ்! நேத்து மாதிரி மறுபடியும் கரித்துண்டா?.”

“இது வேற ராத்திரி சுவாமிஜீ மறுபடியும் தங்கம் செஞ்சார். இந்தா இதை நீயே வெச்சிக்க எங்கே வேணாலும்,எப்படி வேணாலும் டெஸ்ட் பண்ணிக்க .”

பிரித்தேன். மஞ்சள் நிறத்தில் பட்டன் போல, ஓரத்தில் கருகல். எடுத்து இரண்டு உரை இழுத்தேன். பளபளவென்று மஞ்சள் டாலடித்தது..

“இதுவும் ராத்திரி செம்பாய் இருந்ததுங்கறீயா.?

“எஸ்! சத்தியமா.”

ஆனால் இது இப்ப நிச்சயம் செம்பு இல்லை. மஞ்சள் ரங்கு அடிக்கிறது. சம்திங் டிஃபரெண்ட். ஒரு வேளை ரசவாதம் உண்மையோ என்று முதன்முறையாக மனம் சஞ்சலப் பட்டது.. விடுவேனா?. மனசுக்கு கடிவாளம் போட்டேன்.நெவர். நான் ஒரு இயற்பியல் முதுகலைப் பட்டதாரி.. அஃப்கோர்ஸ் சுந்தரும் தான்.. அடிப்படை கண்டிப்பாய் தெரியணும் ,தெரிஞ்சிருக்கணும் . தங்கமும் ,செம்பும் வெவ்வேறு அணுஎடைகளைக்கொண்டவை. புரோட்டான், நியூட்ரான், எண்ணிக்கைகள் வேறுவேறு. ஒரு உலோகம் மற்றொன்றாய் மாற வேண்டுமென்றால், அதன் அணுவில் புரோட்டான் எண்ணிக்கை மாற வேண்டும்.அதற்கு அணுப்பிளவு ஏற்பட்டேயாக வேண்டும். அதற்கு நிறைய விஷயங்கள் தேவை.பார்ட்டிகிள் ஆக்ஸிலரேட்டர், நியூட்ரான்கள், அணு உலை..,இத்தியாதி…இத்தியாதி….அப்போது கூட சரியா வரும்னு சொல்ல முடியாது. சரி அப்படியே வெளி உலகத்திற்குத் தெரியாத ஒரு புது முறையில் அணுப்பிளவு நடக்கிறது என்று வைத்துக் கொண்டாலும், அந்த நிகழ்வில் வெளிப்படும் ஆற்றல் ?,கதிவீச்சு ?, அளவிலாத வெப்பம்?,. சுற்று வட்டாரம் பொசுங்கிவிடுமே.இப்படியெல்லாம் எதுவும் நடக்காமல்

“எப்பிட்றா?..எப்பிட்றா.? நீ என்னமோ சுலுவா ஆம்லட் சுட்றமாதிரி சொல்ற, எப்பிட்றா?.”

“எப்படீ…எப்படீன்னு பினாத்திக் கிட்டு இரு. நான் வர்றேன்.”——-போய்விட்டான். அந்த மஞ்சள் டாலடிக்கும் பட்டன் வில்லை என் கையிலிருந்தது,ஒரு புளியங்கொட்டை சைஸில். வினோதமாய்,மஞ்சள் கிழங்காய் ஜொலித்துக் கொண்டிருக்கிறது. எனக்கும் உண்மை அறியும் ஆர்வமிருக்கிறது.

கத்தியின்றி,ரத்தமின்றி,யுத்தமொன்று வருவது போல நெருப்பின்றி,கதிர்வீச்சின்றி அணுப்பிளவு சாத்தியந்தானா?,இல்லை டுபாக்கூரா?. ஐன்ஸ்டீனை தப்பு சொல்ல இங்கு யாருக்கு தைரியம், இல்லை இல்லை தகுதியிருக்கின்றது?. கருகல் பட்டனை ஆச்சாரியிடம் கொண்டுபோய் உரை போட்டுப் பார்க்கச் சொன்னேன். உரை போட்டவன் 24 கேரட் சுத்தத் தங்கம் என்றான்.அன்றைக்கு மதியமே சுந்தர் வீட்டுக்குப் போனேன்.

” வாடா! நீ எப்படியும் வருவேன்னு தெரியும்டா.”

உள்ளே அவர் உட்கார்ந்திருந்தார்.கருத்த உருவம் நீண்ட வெண்தாடி, காவிஆடை,பரட்டைத்தலை சடை போட்டுக் கொண்டிருந்தது. ரீடிங் அறையை பூஜை அறையாக மாற்றியிருந்தார்கள். போலீஸ் இன்ஸ்பெக்டராக ஏரியா முழுக்க அதகளம் பண்ணிக் கொண்டிருக்கும், சுந்தரின் அப்பா காவி வேஷ்டி,காவி துண்டு கெட்டப்பில் சாமியின் சிஷ்யனாக பவ்வியத்துடன் நின்றுக் கொண்டிருந்தார்..உம்ம்…எல்லாம் ஒரு கிலோ பண்ற வேலை. சுவாமிஜீ என்னைப் பார்த்து ஸ்நேகமாய் சிரித்தார்.

“தம்பி யாரு?.”

“என் ஃப்ரண்ட் சாமி.சங்கர்னு சொன்னேனே, இவந்தான்..”—–விபூதியெடுத்து என் நெற்றியில் இட வந்தார். மறுத்து கையில் வாங்கிக் கொண்டேன்.. என்னை முறைத்து விட்டு திரும்பிக் கொண்டார். வெளியே வந்துவிட்டோம்.

“டேய் சுந்தர்! ஆளப் பார்த்தா பிரேமானந்தா சாமி மாதிரி கொழுக் மொழுக்னு இருக்கார்டா, ஜாக்கிரதை.உன் தங்கச்சிகளை ஊருக்கு அனுப்பி வெச்சிடு, புரியுதா?.”

“சீ! கண்டகண்ட புஸ்தகங்களைப் படிச்சிட்டு…உன் புத்தி குப்பைடா. அவருடைய அருளுரையைக் கேக்கலியே நீ?.உலகத்தில் இறை ஒன்றுதான் நித்தியமாம்.,மத்ததெல்லாம் அநித்தியமாம். ஆண்,பெண் என்பதெல்லாம் மாயைகளாம். ஆண் என்ன,பெண் என்ன?,பரமாத்மாவுக்கு எல்லாமே ஒன்றுதானாம். புரிஞ்சிக்க .பெரிய மகான் அவர்.”

“ஓ! இது இன்னும் டேஞ்சர். ஆண்,பெண் எல்லாம் ஒண்ணுதான்னு சொல்லியிருந்தார்னா, ஜாக்கிரதை. நீ கூட உஷாராய் இருக்கணுடா..”

அதற்குள் அங்கே கும்பல் சேர ஆரம்பித்திருந்தது. துறவியை சேவித்துக் கொள்ள, படாபடா ஆத்மீகள் எல்லாம் வர ஆரம்பித்தனர். வெள்யே மாருதி, ஹுண்டாய்,ஃபோர்டு,சியாரா, டாடாசுமோ, என்று வந்து மொய்க்க, போக்குவரத்து கடினமாகியிருந்தது..எப்படி இவ்வளவு கூட்டம்?. ஒரு வேளை சாமியார் ரசவாத வித்தை தெரிஞ்சவர் என்ற விஷயம் வெளியே லீக் ஆயிடுச்சோ?.

“சுந்தர்! சாமிகிட்ட கொஞ்சம் பேசணும்டா.”

“இப்பவே சொல்லிட்டேன். இங்கிதமறிஞ்சி பேசணும்.ஏதாவது வில்லங்கம் பண்ணே, வெளியே இழுத்து விட்ருவேன்.”

உள்ளே நுழைந்தோம்.

“ஸ்வாமி! என் சிநேகிதன் உங்கக் கிட்ட என்னவோ பேசணுன்றான். நம்பமாட்டேன்றான். ரசவாதமே பொய்யின்றான்.”

ஸ்வாமி மந்தகாசமாக புன்னகைத்தார்.

”நம்பறவங்களுக்குத்தான் தெய்வம் மகனே! அந்தத் தம்பியை அவர் போக்கிலேயே விட்டுவிடு..”
நான் சட்டென்று குனிந்து அவர் காலைத் தொட்டேன்.குளிர்ந்தார்.

“சாமீ! அணுவின் கோட்பாடுகளையே ஆட்டங்காண வெச்சிட்டீங்களே. எப்படி?.ஐன்ஸ்டீன் தியரிகள் பொய்யா?.நிறைய விஷயங்கள் முரண்படுகிறதே சாமீ.”

“தம்பீ! நானும் படிச்சவன் தான். பி.எஸ்.ஸி. கெமிஸ்ட்ரி. உலகத்தில் அவ்வப்போது சில மிர்ரக்கிள்கள் நடக்கத்தான் செய்கின்றன.இறைவன் விளையாட்டின் சூட்சுமங்கள் யாருக்குப் புரியும்?.ஐன்ஸ்டீன் சித்தாந்தங்களை வைத்துக் கொண்டு இதை பொய் என்கிறாய். புதிய விஷயங்களை மேலை நாட்டினர் சொன்னால்தான் ஏற்றுக் கொள்வாயா?.நாம் புதியதாய் ஒரு சித்தாந்தத்தை கண்டுபிடித்திருக்கிறோம் என்று ஏன் எடுத்துக் கொள்ளக் கூடாது?.”

எஸ்! இது நியாயம்தான். ஏன் நம்மில் மேதைகள் இல்லையா என்ன?.கணிதமேதை ராமானுஜத்தின் பல கணிதங்களுக்கு இன்று வரையிலும் உலகம் விடையைத் தேடி மண்டையைப் பிய்த்துக் கொண்டிருக்கிறதே.?..

“இதற்காக பத்து வருஷங்கள் உழைத்தேன்.முப்பூ என்னும் குருமருந்து இல்லாமல் ரசவாதம் செய்ய முடியாது என்பதைத் தெரிந்துக் கொண்டேன். முப்பூவை முடிக்க அண்டக்கல்லை தேடியலைந்தேன்.சித்திரை மாசத்து பவுர்ணமியில், நடுசாமத்தில்,களர் நிலத்தில் பூக்குமாம் அண்டக்கல் உப்பு. அதைத்தேடி அர்த்தராத்திரியில் காடுமேடெல்லாம் அலைந்து சோர்ந்துவிட்டேன். அப்போதுதான் என் குரு புஷ்பானந்தா ஸ்வாமிகள் என்னை தடுத்தாட்கொண்டார். மனம் பழுத்தால் தங்கம் தானே பழுக்கும் என்றார். குரு தொட்டுக் காட்டிய பாதையில் பத்து வருடங்கள் பயணித்தேன். ஒவ்வொன்றாய் கைவசமானது.. வாலாம்பிகையின் சூட்சுமம் விளங்க ஆரம்பித்தன.. அண்டக்கல்,வழலை,சிதம்பர ரகசியம்,காரசார சரக்கு, முப்பூ,ஜெயநீர்,…அப்ப்பா…அது ஒரு நீண்ட பயணம்,உயர்ந்தக் கலை. என் குரு எனக்களித்த கொடை.தங்கம் செய்யும் கலை கைவசமான போது, என் மனம் பற்றறுந்து விட்டது. என்னை தடுத்தாட் கொண்ட என் குருஸ்வாமிகளுக்கு அனந்தகோடி நமஸ்காரங்கள். கைகளை தலைக்கு மேலே உயர்த்திக் கும்பிட்டார். அக்குளில் அடைஅடையாய் அழுக்குகள்.. சுத்தம்,எனக்கு எதுவும் புரியவில்லை. இதெல்லாம் ரசவாதம் எப்படி சாத்தியமாகிறது?, என்பதற்கான விளக்கங்கள் அல்ல,., அவருடைய சொந்த புராணங்கள்…

“இதில் உனக்கு ஏதாவது சந்தேகமிருந்தால் கேள் மகனே!.”

“புஷ்பானந்தா பொம்பளை தானே சாமி?.”

“தாயே அம்பிகே!…ஈஸ்வரீ!..”—அவர் வேதனையுடன் கண்களை மூடிக் கொண்டார்.

சுந்தரும்,அவன் அப்பாவும் என்னை முறைத்தார்கள். சுந்தருடைய அப்பா என்னை வெளியே போகும்படி கை காட்டினார். சாமிகள் என்னை உட்காரும்படி சொல்லிவிட்டு,திரும்பி சுந்தரிடம் ஏதோ சமிக்ஞை காட்ட, அவன் ஓடிப்போய் வெளிக்கதவை அடைத்தான். அதற்குள் சுந்தருடைய அப்பா குமிட்டியைக் கொண்டுவந்து வைத்து பற்ற வைத்தார். என்ன?, எனக்காக டெமோவா?, அட்றா சக்கை.. நான் உஷாராக கவனித்துக் கொண்டிருந்தேன். என் எதிரிலேயே ஒரு செம்பு தகட்டை சிறுசிறு துண்டுகளாக கத்தரித்து, ஒரு மூசையில் போட்டு, குமிட்டியில் வைத்தார். சுந்தரின் அப்பா ஒரு தேர்ந்த பொற்கொல்லரைப் போல ஊதஆரம்பித்தார். கொஞ்ச நேரத்தில் செம்பு உருகி முத்து போல் கண்விட்டாடியது. சாமியார் தன் புருவ மத்தியை வருடிக் கொண்டே, எதையோ முணுமுணுத்தபடி,ஒரு பாட்டிலிலிருந்து இரண்டு சிட்டிகை மருந்தை எடுத்து மூசையில் போட்டு அழுத்தமாக ஊத, சொய்ங். என்ற சத்தத்துடன் புகைந்தது.. அகிலாண்டேஸ்வரி தாயே! என்று கூவியபடி, மூசையை இடுக்கியால் எடுத்துக் கவிழ்த்தார். பளபளவென்று ஒரு பொட்டு சொக்கத்தங்கம் வந்து விழுந்தது. என் கண்களையே நம்ப முடியவில்லை.ஐ யாம் ஷ்யூர், இதில் ஏதும் கண்கட்டு வித்தையில்லை.. ஆனால் நடந்துவிட்டது. எப்படி?.ஐன்ஸ்டீனின் தியரிகள் மளமளவென்று சரிவதாய் உணர்ந்தேன். அவர் தியரிகள் பொய்யென்று நிரூபிக்க இப்படியொரு ஜடாமுடி ஆள் தமிழ்நாட்டிலிருந்து கிளம்பியிருக்கிறாரா?.

“ஸ்வாமீ…ஸ்வாமீ!…இதன் அடிப்படை தத்துவம் என்ன ஸ்வாமீ?.ப்ளீஸ்!.”—–அவர் சிரித்தார்.

“நேரப்பா அண்டமொரு பிண்டம் ரெண்டும் அறிந்தவனே சித்தன்..சித்தன்..”

“எள்ளளவு கூட விளங்கல.”

“கோவனூருப் பொட்டலிலே/ குண்டு மேனியம்மன் சந்நிதியில்/ சாகா மூலி முளைத்திருக்குது அதைச்/ சார்ந்து பாரடி—ஞானப் பெண்ணே!.”—-எல்லாம் வாலாம்பிகை முப்பூவின் மகிமை தம்பீ.”
என்ன எழவோ? ,மண்டை காய்கிறது.எப்படியோ போங்கப்பா.. இந்த வம்பே வேண்டாம். வீட்டிற்கு கிளம்பிவிட்டேன். விட்டானா என்னை.? .ஒரு வாரம் ஆகியிருக்கும். சுந்தரிடமிருந்து போன்.

”சாயங்காலம் ஆறு மணிக்கு அவசியம் இங்க வா. ஒரு முக்கியமான கூட்டம் இருக்குது..”

“ என்ன விஷயம்?.சொல்லித் தொலையேன்டா?.”

“எல்லாம் நேரில்.”

நான் அங்கே போனபோது தெருவையே அடைத்துக் கொண்டு விதவிதமான கார்களின் அணிவகுப்பு.. சுந்தரம் ஓடிவந்து என்னை இழுத்துச் சென்றான். இடுப்பில் ஒரு காவித் துண்டு, மேலே போர்த்திக் கொள்ள காவி வஸ்திரம்,உடல் முழுக்க பட்டைபட்டையாய் விபூதி,முகத்தில் பத்துநாள் தாடி. இதே கெட்டப்பில் அவனுடைய அப்பாவும் சுற்றிக் கொண்டிருந்தார்.

“என்னடா கோலம் இது?. ஓ! ஒரு கிலோ பண்ற வேலையா இது?.”.— அவன் அசட்டுத்தனமாய் சிரித்தான். உள்ளே போய் உட்கார்ந்தேன். ஏழு மணிக்கு மொட்டை மாடியில் மீட்டிங் ஆரம்பித்தது. மொத்தம் இருபது பேர். அனைவரும் ஊரின் பிரபலங்கள், பண முதலைகள்.ஸ்வாமி மிருதுவான குரலில் பேச ஆரம்பித்தார்.

“அன்பர்களே! நான் நாளை இமையமலைக்கு பயணமாகிறேன்.திரும்பி வர நாலு மாசங்கள் ஆகும். எனவே இப்போது நான் சொல்வதை கவனியுங்கள். ரசவாதம் என்ற இந்தக் கலைக்கு ஆட்கொல்லி என்று பெயர். ஜாக்கிரதை. இங்கு நடக்கும் விஷயங்கள்ரகசியங்கள். எங்கியும் மூச்சு விடக்கூடாது. இங்கியே சமாதியாக வேண்டும்.இதோ இந்த பாட்டில்கள் ஒவ்வொன்றிலும் பத்து கிராம் எடையுள்ள குரு மருந்து இருக்கிறது. இது ஒரு கிலோ செம்பை தங்கமாக்கும் சக்தி கொண்டது. இதை உங்களுக்குத் தரப்போகிறேன்.நாளை முதல் மூன்று நாட்களுக்கு இந்த மருந்தை இருட்டறையில், நெல் மூட்டையில் புதைத்து வைக்க வேண்டும், நெற்புடம்.. .தங்க முட்டையிடும் வாத்தை அறுத்த கதையாக ஒரு கிலோவையும் ஒரே நாளில் செய்யப் போகிறேன் என்று மாட்டிக் கொள்ளாதீர்கள். ரசவாதம் சட்ட விரோதம். கொஞ்சம் கொஞ்சமாக. செய்து பிழைத்துக் கொள்ளுங்கள். நான் உங்களுக்கு செய்து காட்டியபடி பக்தி சிரத்தையாக இறைவனை தியானித்து தொடங்குங்கள்..”—-அவர் பேச்சை நிறுத்திவிட்டுப் பார்த்தார். எல்லோரும் பரபரப்புடன் குரு மருந்தை வாங்க முண்டியடித்துக் கொண்டிருந்தார்கள்.

“ஆனால் இதற்கொரு விலையுண்டு. ஒருகிலோ தங்கத்தின் இன்றைய தோராய மதிப்பு இருபது லட்சம். நீங்கள் ஒவ்வொருத்தரும் இரண்டு லட்சம் காணிக்கை கொடுத்துவிட்டு வாங்கிச் செல்லுங்கள். திருச்சியில் அனாதை முதியோர் இல்லம் ஒன்றை கட்டிவருகிறேன். அதற்கு நீங்கள் தரும் காணிக்கையே இந்தப் பணம்.அதேசமயம் எதையும் இனாமாக பெறக்கூடாது..”

இதெல்லாம் எனக்குப் பிடிபடாத நிகழ்ச்சியாக இருந்தது. என்னவோ நடக்கிறது.இதை பொய் என்று என்னால் சொல்ல முடியாது.ஆனால் உண்மை என்றும் மனம் ஏற்க மறுக்கிறது. சாமியின் அலைபாயும் கண்கள்….? டக்கென்று பொறி தட்டியது.. சுந்தரை பிடித்தேன்.

“சுந்தர்! எப்படியாவது ரெண்டு சிட்டிகை அந்த குருமருந்தைக் கொண்டுவாயேன்.ப்ளீஸ்!.”
அவன் திட்டிக் கொண்டே போனான். சில நிமிடங்களில் ரகசியமாக பொட்டலம் என் கைக்கு வந்துவிட்டது. தட்டிக் கொடுத்தேன்.

“சுட்றதிலே சூரண்டா நீ. என்ன ஒரு கிலோ தங்கம் வந்திடுச்சா?.”

“ஒரு பாட்டில் குருமருந்தை எங்களுக்கு ஃப்ரீயா தர்றேன்னு சொன்னார்டா.”

“ஜமாய்!.”——நான் பறந்தேன்.அங்கே போய் சேர்ந்தபோது இரவு மணி எட்டரை.ஃபொரன்ஸிக் லேப்பை ஏறக்குறைய மூடிவிட்டார்கள்.டாக்டர் இலியாஸ் முகமது அப்போதுதான் வெளியே வந்துக் கொண்டிருந்தார்.என் அடுத்த வீட்டுக்காரர்

“சார்! ப்ளீஸ்! அவசரம். ஒரு விஷயத்தை கன்ஃபர்ம் பண்ணணும்..”

“ரொம்ப டயர்டா இருக்குப்பா.நாளைக்குப் பேசலாம்..”

“சார்…சார்! ஒரு பெரிய கொள்ளை நடக்குது. இந்தப் பொடியில் என்ன இருக்குன்னு தெரியணும்.”

“என்ன மோட்டிவ்னு சொல்லிடுங்களேன். என் வேலை சுலபமாயிடும்.”

”ரசவாதம்னு சொல்லி ஒரு சாமியார் இந்தப் பொடியை வெச்சி,என் எதிரிலேயே செம்பை தங்கமாக்கிக் காட்டினார். எப்படி சாத்தியம் இது?.”

“நான் கூட படிச்சிருக்கேன். ”ஏழு கடல்களும் நீருக்குப் பதிலாக பாதரசமாக இருப்பின் ஒரு கைப்பிடி மருந்தினால் அவ்வளவையும் தங்கமாக்குவேன்.”-அப்படீன்னு பேசின்வேலண்டைன் என்கிற ஒரு மேதை சொல்லியிருக்காரு. ஜெர்மன்காரன் இதில சூரன். ரசவாதம் உண்மையாகக் கூட இருக்கலாம். அதை ஏன் பொய்யின்னு நினைக்கணும்?.”

“என்ன சார்! படிச்சவங்கள்லாமே இப்படி தெளிவில்லாம இருக்கீங்க. செம்பும்,தங்கமும் வெவ்வேறு அணு எடைகளைக் கொண்டவை,,புரோட்டான் எண்ணிக்கை வேறுவேறு. அணுப்பிளவு இல்லாமல் எப்படி சாத்தியம்?.”

“ஓகே…ஓகே!..என்னை விட்ருப்பா.இந்த விளையாட்டுக்கு நான் வரல. படிச்சதைச் சொன்னேன். சரி வெய்ட் பண்ணு.”

பொட்டலத்தை வாங்கிக் கொண்டு உள்ளே போனவர் ,சரியாக பத்து மணிக்கு வந்தார்.
“யூ ஆர் கரெக்ட். நீ கொடுத்த அந்த மெரூன் கலர் பவுடர்.—- கோல்டு குளோரைடு AUCl3— அந்த பவுடரில 64.4% தங்கம் கலந்திருக்குது.”

தங்க உப்புப் பொடி.. அடப்பாவி!. அப்ப தங்கஉப்புத் தூள் செம்புடன் சேர்ந்து வேதியல் வினை புரிந்திருக்கிறது. ரசாயன இடப்பெயர்ச்சி. ப்யூர்லி கெம்ஸ்ட்ரி.ஹ..ஹ..ஹாஹா…. இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால் சாமி கொடுத்த பத்து கிராம் குரு மருந்து, ஆறு கிராம் தங்கத்தை மட்டுமே கொடுக்கும் என்பது அறிவியல் உண்மை.ஒரு கிலோ கிடைக்கும் என்று இரண்டு லட்சத்தை கொடுத்தவர்கள் கதியை நினைத்தேன்.. சிரிப்பு வெடித்துக் கிளம்பியது. சுவாமி இந்நேரம் இமையமலைக்கு பறந்துவிட்டிருப்பார் பாவம் சுந்தர்,அப்பனும், பிள்ளையும் ஒரு கிலோவுக்காக காவி கட்டி பக்தகோடிகளாய் வேஷம் போட்டார்கள். மேற்படி தங்க உப்புப் பொடியை மூணு நாள் இருட்டு அறையில் நெற்புடத்தில் வைக்கணுங்கறது, சூப்பர். டெக்னிக்.

”நான் பி.எஸ்,ஸி…கெமிஸ்ட்ரி.”—சாமி சொன்னது நினைவுக்கு வந்தது. ..

*** இந்த அறிவியல் கதை13—04—2003ல் கல்கியில் வெளியானது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *