கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: September 7, 2017
பார்வையிட்டோர்: 9,452 
 

இரவு நான் வீட்டை விட்டு கிளம்பும்போதே எங்கள் பகுதியில் ஏதோ பரபரப்பு ஆரம்பித்திருந்தது. யாரையும் நிறுத்தி ’என்னாச்சு..?’ என்று கேட்கும் நிலையில் நான் இல்லை. காரணம் நான் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன். இந்த முடிவை நான் எடுப்பது எத்தனையாவது முறை என்றெல்லாம் எனக்கு தெரியாது. ஆனால் அந்த முடிவு இந்த முறை மனதில் அழுத்தமாகவே இருந்தது. மரணத்தைத் தவிர ஒரு சுபமான முடிவு என் வாழ்க்கைக்கு கிடையாது. என்னை புறக்கணித்த இந்த உலகத்தின் மீது வெறுப்பைக் காட்ட இதைவிட ஒரு சந்தர்ப்பம் எனக்கு அமையாது.

எங்கள் வீட்டிலிருந்து கொஞ்ச தூரத்தில் இருந்த அந்த காடு இருந்தது. நான் அதற்குள்தான் வந்திருந்தேன். எனக்கு முன்னால் நிலா வந்திருந்தது. முற்புதர் நிறைந்த காடு அது. எங்கள் பகுதி மக்களுக்கு பெரும்பாலும் இதுதான் கழிப்பிடம். ஆள் நடமாட்டம் குறைந்த பகுதி. எனக்கு அதுதான் தேவை. நான் அதற்குள் இருந்த உடைந்த கிணற்றின் அருகில் வந்தேன். கோயில் கிணறு. எட்டிப் பார்த்தேன். உள்ளே ஒரு தவளை குதித்து இருந்த மெளனத்தை கலைத்தது. முழுவதும் பாசி படர்ந்த கிணறு. அதையே உற்றுப் பார்த்தேன். அது என்னை வா வா என்று கைநீட்டி அழைக்கிற மாதிரி இருந்தது. உள்ளே விழுந்தால் என் பிணம் கிடைக்க நிச்சயம் இரண்டு நாள் ஆகும். பக்கத்தில் கவனிப்பாரற்று சிதைந்து உடைந்து நிற்கும் கோயில் மாதிரி இருந்தது என் மனசு. என் கண்கள் கலங்கி கண்ணீர் அந்த கிணற்று நீரில் விழுந்தது.

’மீனா ஏன் அப்படிச் சொன்னாள்.? மீண்டும் மனசு கிடந்து புலம்ப ஆரம்பித்தது. வீட்டிற்கு வெளியே என்னை முழுவதுமாய் புரிந்துக் கொண்டிருந்த ஒரே உயிரென அவளை நம்பியது என் தவறா? அவளும் கடைசியில் எல்லோரையும் போல் என்னை சராசரி மனிதனாய் பார்க்கவில்லையே ஏன்? ப்ராடிக்கலாய் பேசுகிறாளாம். அன்பிற்கு உருவம் இருக்கிறதாயென்ன? அதை புரிந்து கொள்ளாமல் என்ன பிராடிக்கல்?’

“சி.எம்.. இங்க என்னடா பண்ற.. வீட்டுக்கு போகல?” அந்த வழியாக வாயில் பீடியோடு கடந்து போன குமார் என் பதிலை எதிர்பார்க்காமல் குரல் கொடுத்துவிட்டு போனான்.

சி.எம்..!? இதென்ன பெயர்? என் பெயர் இதுவல்ல. என் பெயர் மனோகர். சுருக்கமாய் மனோ. ஆனால் என்னை எல்லோரும் சி.எம் என்றுதான் கூப்பிடுகிறார்கள். சி.எம் என்றால் சீப் மினிஸ்டர் என்றெல்லாம் நினைத்து விடாதீர்கள். சி.எம் என்றால் சென்டிமீட்டர். எனது உயரம் மொத்தமே என்பத்தி ஐந்து சென்டிமீட்டர்தான். இருபத்திரண்டு வயதில் என்பத்து ஐந்து சென்டிமீட்டர் உயரம். மூன்றடிக்கும் குறைவு. எனது மொத்த வளர்ச்சியே அவ்வளவுதான். கொஞ்சம் வளர்ந்து (!) நினைவு தெரிந்த நாளில் பீரோ கண்ணாடியில் என் முழு உருவத்தைப் பார்த்தபோது நான் கதறி அழுதுவிட்டேன். இதென்ன உருவம் சினிமாவில் காட்டுகிற குட்டிசாத்தான் மாதிரி? எனக்கே என்னைப் பார்க்க அருவருப்பாய் இருந்தது. கோபத்தில் கண்ணாடியை உடைத்தேன். உடனே எங்காவது ஓடிப் போய் தற்கொலை செய்து கொள்ளத் தோன்றியது. நான் முதல் முறையாய் தற்கொலை செய்து கொள்ள நினைத்தது அப்போதுதான். அம்மா எனக்கு ஆறுதல் சொன்னாள். ’நாங்க என்ன பாவம் செய்தோமோ நீ அனுப்பவிக்கற..’ என்று அப்பா தலையில் அடித்துக் கொண்டு அழுதார். இனி வேறென்ன செய்யமுடியும் அவர்களால்?

எனக்கு பிறகு என் தம்பி பிறந்தான். அவனும் என்னைப் போல் இருப்பானோ என வீட்டில் பயந்தார்கள். அவன் அப்படியில்லாமல் சராசரியாய் இருக்க ஆறுதல் அடைந்தார்கள். எனக்கும் ரொம்ப சந்தோசமாய் இருந்தது. நான் படும் துன்பமோ அவமானமோ அவன்படக்கூடாது.

வீட்டில் எனக்கு வருத்தம் வராமல் வளர்க்கத்தான் பார்த்தார்கள். சமூகம் விட்டால்தானே? விடாது அது என்னை துரத்தித் துரத்தி அடித்தது. என்னை பள்ளிக்கூடம் சேர்த்தார்கள். அங்கே ஒவ்வொரு நாளும் நெருப்பில் நிற்கிறமாதிரி இருந்தது. வகுப்பு வாத்தியார் வரை என்னை கேலி செய்து மகிழ்ந்தார்கள். வகுப்பில் ஒருமுறை கந்தசாமி வாத்தியார் என்னிடம் கேள்வி கேட்க நான் பதில் சொன்னேன். சரியான பதில்தான். ஆனால் அவர் ’துரை.. எழுந்து நின்னு பதில் சொல்லமாட்டீங்களோ..’ என்று கத்தினார். வகுப்பில் அனைவரும் ஒன்றாய் ’அவன் நின்னுட்டுதான் சார் பதில் சொல்றான்..’ என்று பலமாய் சிரித்தார்கள். வாத்தியாரும் சேர்ந்து ’எனக்கு தெரியும்டா..’ என்று சிரிக்க நான் இன்னும் என்னுள் குறுகிப் போனேன். உடம்பு முழுவதும் பூச்சிகள் ஊருகிற மாதிரி இருந்தது. அப்போதே எனக்கு செத்துப் போகத் தோன்றியது.

சாய்ந்திரம். பள்ளிக்கூடம் விட்டு திரும்புகிறபோது ரயில்வே லைனில் நடந்து வந்தேன். மனசு இன்னும் வலித்துக் கொண்டிருந்தது. புத்தகத்தை ஒரு ஓரமாய் வைத்து விட்டு வருகிற ரயிலில் குதித்து விடத் தோன்றியது. ரயில் வர நான் காத்திருந்தேன். ஆனால் அப்போதுதான் எனக்குள் இருந்து அவன் வந்தான். அவன் வேறு யார்? என் மனசு அல்லது என் மனசாட்சி ஏதோவொன்று. அவன் என் ஓரே நண்பன் அவ்வளவுதான். என்னிடம் பேசக்கூட தயங்குகிற சமூகத்தில் அவனைத் தவிர யார் என்னிடம் நண்பனாய் இருக்க முடியும்? அவன் என்னைப் போலவே இருப்பான். ஆனால் நல்ல உயரம். ஒருத்தரும் அவனை கேலி செய்துவிட முடியாது. இப்போது அவன்தான் என்னிடம் பேசினான்.

“மனோ.. நம்ம உயிரை நாமலே எடுத்துக்கற உரிமை நமக்கு கிடையாது. இயற்கையோட படைப்பில எதுவுமே வீணில்ல. எல்லா உயிரும் ஏதோவொரு நன்மைக்காகத்தான் படைக்கப் பட்டிருக்கும். அதனால உன்னாலயும் இந்த உலகத்துக்கு ஏதாவது நல்லது நடக்கலாம்.. அதுவரைக்கும் நீ எந்த விபரீத முடிவும் எடுக்காம பொறுமையா இரு.. நம்பிக்கையா இரு..” என்றான். அந்த வார்த்தைகள் எனக்கு கொஞ்சம் தைரியத்தை தந்த மாதிரி இருந்தது. நான் அவனையே பார்த்தேன். அவன் ஒரு புன்னகையோடு என்னுள் மறைந்து போனான். அன்று நான் சாகற எண்ணத்தை விட்டுவிட்டு உற்சாகமாய் வீடு திரும்பினேன்.

வீட்டிற்கு வந்தேன். நடந்ததைச் சொன்னேன். பள்ளிக்கூடம் மட்டும் போகமாட்டேன் என்று அடம்பிடித்து அழுதேன். அப்பா பள்ளிக்கூடம் வந்தார். வாத்தியாரிடம் பேசினார். அவர் மன்னிப்பெல்லாம் கேட்டார். ஆனால் எல்லோரையும் அடக்கி விட முடியுமாயென்ன?

எனக்கிருந்த பட்டப் பெயர்கள் சரித்திர நாயகர்களுக்குக் கூட இருந்திருக்குமா என்று தெரியவில்லை. உயர்ந்த மனிதன், லில்லிபுட், அப்பு, சி.எம், கட்டய்யன் என அதன் பட்டியல் நீளும். எங்கள் வீட்டை அடுத்து என் சொந்த பெயர் வைத்து அழைத்தது மீனாதான். என்னைவிட பத்து வயது குறைந்தவன் கூட என்னை ’டேய் மனோ.. டேய் சி.எம்.’ என்று தான் கூப்பிடுகிறான். இந்த இருபத்திரண்டு வயதிலும் சிறுவர் சைக்கிளையே ஓட்டிக் கொண்டிருப்பது எவ்வளவு அவமானம்? டெய்லரிடம் அளவு கொடுக்கப் போனால் என்னை அவன் எப்போதும் ஒரு பென்ஞ்சில் ஏற்றியே அளவெடுக்கிறான். சினிமாவில் போய் நடித்தால் பெரியாள் ஆகலாமென தெரிந்தவர்கள் சொல்வார்கள். நான் பதில் சொல்லாமல் சென்று விடுவேன். அங்கே போய் என்னை நானே கேலி செய்து கொள்ள எனக்கு விரும்பமில்லை. நான் வீதியில் நடக்கும்போது என்னைப் பார்த்து சிரிக்காமல் கடப்பவர்கள் பார்வையற்றவர்கள் மட்டுமே. பஸ்ஸில் ஏறும் போது பள்ளிக்கூடத்தில் படிக்கிற பசங்கள் ’என்ன சி.எம்.. இன்னைக்கு ஏணி எடுத்துட்டு வரலையா..?’ என்பார்கள். நகைச்சுவையாம்..? கேட்டதும் கூட்டம் குலுங்கிச் சிரிக்கும். இத்தனையும் எத்தனை நாள்தான் பொறுத்துக் கொள்வது?

பத்தாம் வகுப்பிற்கு மேல் நான் பள்ளிக்கூடம் போகவில்லை. படிக்கிற ஆசை சுத்தமாய் வரவில்லை. எப்போதும் தொண்டையில் மீன் முள் மாட்டிக் கொண்ட மாதிரி இருக்கிறது என் வாழ்க்கை. எதன் மீதும் பற்று வரும்? அப்பா அவருக்கு தெரிந்த ஒரு நண்பரின் கடையில் வேலைக்கு சேர்த்துவிட்டார். அந்த கடையின் போன் பூத்தை நான் பார்த்துக் கொண்டேன். மாசம் இரண்டாயிரம் சம்பளம். கொஞ்சம் என்னை அது பெரிய மனுசனாய் உணர வைத்தது. அந்த பூத்தில்தான் மீனா எனக்கு அறிமுகம் ஆனாள். என்னை மதித்த என் வயதை மதித்த பெண்மணி. அவள் தபாலில் தமிழ் இலக்கியம் படிக்கிறாள். மீனா அடிக்கடி அங்கே போன் பேச வருவாள். தாவணியில் வருகிற அழகு தேவதை. அவள் ஒருநாள் வராமல் போனாலும் தவித்துப் போக ஆரம்பித்தேன். மீனாவுக்கு நல்ல குரல்வளம். அதை ஒருமுறை பாராட்டினபோது அவள் வெட்கப்பட்டாள். ’போங்க.. மனோ உங்களுக்கு எப்பவும் கிண்டல்தான்..’ என்று என் தலை முடியை இலேசாக கலைத்துவிட்டு போனாள். எனக்கு அன்றிரவு தூக்கமே வரவில்லை. அதற்கு பிறகான நாட்களிலும் நான் தூங்கவில்லை. அது காதலென புரிந்தபோது எனக்கே அது ஓவராகத்தான் தெரிந்தது. காதலுக்கு கண்ணேயில்லை என்கிறபோது உயரம் மட்டும் இருக்கிறதாயென்ன?

தூக்கம் வராததை சாப்பிட பிடிக்காததை மீனாவிடம் எப்படி சொல்வதென யோசித்தேன். இருக்கிற நட்பும் போய்விடுமோ என்கிற பயமும் இல்லாமலில்லை. ஆட்கள் வராத கடையில் ஒரு மதிய நேரம். நான் எதிர்பார்த்தபடி மீனா வந்தாள். தட்டுதடுமாறி அவளிடம் பேசினேன்.

“மீனா.. நான் உங்கள காதலிக்கறேன்னு நினைக்கறேன்.. என்னை நீங்க ஏத்துக்குவீங்களா..?”

அவள் அதிர்ந்துதான் போனாள். ஒரு நீண்ட அமைதி. பிறகு மெதுவாய் பதில் சொன்னாள்.

”இல்ல மனோ.. என்னை மன்னிச்சிடுங்க.. உங்கள மதிக்கறேன்.. உங்ககூட நட்பா இருக்கறது சந்தோசமாத்தான் இருக்கு.. ஆனா அதுக்காக உங்கள கல்யாணம் செய்துக்கறதெல்லாம் என்னால நினைச்சுப் பார்க்க முடியல.. வாழ்க்கை முழுசும் மத்தவங்களோட கிண்டலுக்கும் கேலிக்கும் ஆளாக நான் விரும்பல.. என்னை தப்பா நினைக்காதீங்க மனோ.. நீங்களே கொஞ்சம் பிராட்டிகலா யோசிச்சுப்பாருங்க..” என்றபடி என் பதிலுக்கு காத்திருக்காமல் நடந்து போனாள். அதற்குள் கண்ணீர் வழிந்து நம்பர் எழுதும் நோட்டு நனைந்திருந்தது.

எந்த சந்தோசத்திற்கும் தகுதியில்லாமல் எதற்கு வாழ்ந்து கொண்டிருப்பது? தற்கொலை செய்து கொள்வது தவிர வேறு வழியில்லை. அந்த முடிவில்தான் இப்போது இந்த கிணற்றுமேட்டில் இருந்தேன். நிலா வெளிச்சம் தண்ணீரை தெளிவாய் காட்டியது. செருப்பை கழட்டி விட்டேன். திட்டில் ஏறி நின்று குதிக்க நினைத்த போதுதான் எனக்குள்ளிருந்து அவன் வந்தான். என் நண்பன். அவன் மிகக் கோபமாய் இருந்தான்.

“வேண்டாம் மனோ.. அவசரப்படாதே.. ஏதோவொரு நன்மைக்காகத்தான்..”

அவன் சொல்லி முடிக்கும் முன்பு ஒரு மண்ணும் வேண்டாமென கத்தியபடி என் மனசாட்சி நண்பனை விரட்டி அடித்தேன்.

“உட்கார்ந்து இன்னும் கொஞ்சம் உன்னைப் பத்தி யோசிச்சுப் பார்..” அவன் தொடர்ந்து பேச என் கோபம் உச்சத்திற்கு போனது. இந்த முறை அவன் சட்டென ஒரு எரிச்சலோடு மறைந்து போனான். இந்த திடீர் தடையால் என் வேகம் சற்று குறைந்தது. நான் மீண்டும் அந்த திட்டின் மீது அமர்ந்தேன். என்னை மீறி யோசனைகள் போய்க் கொண்டிருந்தது. இந்த முறை என் வீடு மட்டுமே என் யோசனையில் வந்தது. அசைந்த கிணற்று நீரில் நிலா லேசாய் தடுமாறியது. தூரத்தில் நாய்கள் குரைத்தன. நான் சாய்ந்து படுத்தேன். நான் எப்போது தூங்கிப் போனேன் என்று எனக்கு தெரியவில்லை.

‘டேய்.. சி.எம்.. இங்கயா படுத்திருக்க.. ஊரே பரபரப்பா இருக்கு இங்க என்னடா பண்ற..?” அந்த வழியாக சைக்கிளில் வந்த முத்தண்ணா கத்திவிட்டு போனார்.

சட்டென கண் திறந்து பார்த்தேன். விடிந்திருந்த மாதிரி இருந்தது. இவ்வளவு நேரம் தூங்கியிருக்கிறேனா? ஊரில் என்ன பிரச்சனையாம்? வேகமாய் எழுந்தேன். நான் வீட்டை நோக்கி ஓடினேன். வீதியே பேயறைந்த மாதிரி இருந்தது. என்னாச்சு? ஏதாவது கலவரமா? கொஞ்ச தூரத்தில் நிறைய பேர் கூடியிருந்தார்கள். தீயணைப்பு படை வண்டி நின்றிருந்தது. போலீஸ்காரர்கள் கூட்டத்தை விரட்டிக் கொண்டிருந்தார்கள். தாசில்தார், பஞ்சாயத்து தலைவரென அனைவரும் இருந்தார்கள். ஒரு அம்மா பெரும் குரலெடுத்து அழுது கொண்டிருக்க நிறைய பேர் அவரை தேற்றிக் கொண்டிருந்தார்கள். நான் சிரமப்பட்டு கூட்டத்திற்குள் நுழைந்து பார்த்தேன். என் தம்பி நின்றிருந்தான். என்னடா ஆச்சு என்றேன்.

“ராத்திரியெல்லாம் எங்க போனே..? வீட்டில எல்லாம் தேடினாங்க..”

“கோயில்ல தூங்கிட்டேன்.. ஆமா இங்கென்னடா பிரச்சனை..?”

”ம்.. ராத்திரி விளையாடிட்டு இருந்த ஒன்றரை வயசு குழந்தை இந்த போரிங் போட்ட குழிக்குள்ள விழுந்திடுச்சு.. ஆள் இறங்கி எடுத்திட்டிருக்காங்க..” என்றான்.

நான் அதிர்ச்சியோடு அதை பார்த்தேன். குழந்தை அறுபது அடி ஆழத்தில் இருக்கிறதாம். பத்து மணி நேரத்திற்கும் மேலாய் போராட்டம் நடக்கிறதாம். நினைக்கவே பயங்கரமாய் இருந்தது. போர்வெல்லின் ஐந்தடி தூரத்தில் ஒரு ஆழமான குழி தோண்டியிருந்தார்கள். அதில் ஒரு ஒல்லியான ஆளை இறங்கி விட்டிருந்தார்கள். மானிட்டர் எல்லாம் வைத்து கவனித்து கொண்டிருந்தார்கள். குழந்தைக்கு சுவாசிக்க ஆக்சிஜனும் நீர் உணவும் டியூப்பில் போய் கொண்டிருந்தது. டி.விக்காரர்கள் குழுமி ஆங்காங்கே பேட்டி எடுத்துக் கொண்டிருந்தார்கள். மீனாவை அந்த கூட்டத்தில் பார்த்தேன். பதட்டமாய் தெரிந்தாள். அதற்கு பிறகு நான் அவள் பக்கம் திரும்பவில்லை. கொஞ்ச நேரத்தில் குழிக்குள் இறங்கின ஆள் முடியாமல் மேலே வர அனைவர் முகத்திலும் மீண்டும் அதிர்ச்சி. அந்த குழந்தையின் தாய் உரத்த குரலில் அழுதுவிட்டு மயக்கமானாள். கூட்டத்தில் சிலர் கண்கலங்கி கடவுளே என்று கன்னத்தில் போட்டுக் கொண்டார்கள். மீண்டும் என்ன செய்வதென பேச்சு வார்த்தை நடந்தது. இன்னும் கொஞ்சம் சின்ன உருவமாய் வேண்டும் என்று அவர்கள் முடிவுக்கு வந்தபோது நான் அவர்கள் அருகில் போனேன்.

“அந்த குழியில நான் இறங்கறேன் சார்..” என்றேன். அவர்கள் திரும்பினார்கள். என் உருவத்தைப் பார்த்தார்கள். சந்தோசமானார்கள்.

அம்மா பதறிப் போய் என்னிடம் வந்தாள். தம்பி பயத்தோடு என்னை பார்த்தான். அப்பா டேய் உனக்கென்ன பைத்தியமா என்றார். நான் சாக முடிவெடுத்தவன். உயிர் போவதென்றால் இப்படி ஒரு நல்ல விஷயத்திற்காக போகட்டும். அதற்கு பிறகு யார் பேச்சும் என் காதில் விழவில்லை. அதன் பின் எல்லாமே கனவு மாதிரிதான் நடந்தது. என் உடைகளை கலைந்து சின்னதாய் ஒரு ஷாட்ஸ் மட்டும் அணிந்து கொண்டேன். என்னை சுற்றிலும் கயிறு கட்டி மிகப் பாதுகாப்பாய் அந்த குழிக்குள் இறக்கினார்கள். நான் தலை கீழாக இறங்கினேன். என் உருவத்தால் சுலபமாய் உள்ளே போக முடிந்தது. முகத்தில் மண் விழ ஆரம்பிக்க நான் கண்களை இறுக்கமாய் மூடிக் கொண்டேன். ஆழம் போகப் போக இருள். முற்றிலும் இருள். சப்தமற்ற உலகம். என் உயிர் பிரிந்து சூன்யவெளியில் பயணிக்கிற உணர்வு. எனக்கு வியர்த்தது. இன்னும் உள்ளே போக மூச்சு திணறியது. ஆனாலும் முழுமூச்சாய் மெல்ல மெல்ல இறங்கினேன். சன்னமாய் ஏதோ சத்தம் கேட்டது. குழந்தையின் முணங்கல் சத்தம். எனக்கு சந்தோசமானது. நம்பிக்கையும் வந்தது. அந்த இணைப்புப் பகுதியை அடைந்திருந்தேன். குழந்தை தட்டுப்பட்டது. மெதுவாய் கையில் குழந்தையின் இடுப்பைப் பிடித்து வெளியே எடுத்தேன். பத்திரமாய் பிடித்துக் கொண்டேன். கயிற்றில் சிக்னல் கொடுத்தேன். என்னை மெதுவாய் மேலே இழுத்தார்கள். மெல்ல மெல்ல மேலே வந்தேன். கண்களில் வெளிச்சம் தென்பட்ட போது நான் இன்னொரு பிறவி எடுத்ததாய் உணர்ந்தேன்.

அந்த குழந்தையின் தாய் ஓடிவந்து குழந்தையை கட்டிக் கொண்டு அழுதாள். என்னிடம் பேச அவளிடம் வார்த்தையில்லை. நன்றியோடுப் பார்த்தாள். கூட்டம் சந்தோசத்தில் கத்தியது. என் வீடு என்னை கண்கலங்கி நெகிழ்ச்சியோடு பார்த்தது. மக்கள் உற்சாகமாய் என்னை மேலே தூக்கிப் போட்டு கொண்டாடினார்கள். இப்போது நான் இருந்தேன் எல்லோரையும் விட உயரத்தில்.

– கல்கி நினைவு சிறுகதைப் போட்டி (2011) யில் பிரசுரத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதை

Print Friendly, PDF & Email

2 thoughts on “சி.எம். ஆகிய நான்…

  1. உங்கள் பாராட்டிற்கு மிக மிக நன்றிகள் தி.தா.நா. சார்!

  2. சரசுராம்!
    வாழ்த்துக்கள்.கதையும் தங்களின் நடையும் நன்றாய் இருக்கிறது.நிஜமாகவே அவன் உயர்ந்தவந்தான். தி.தா.நா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *