சாபம்..!

 

நான் நண்பர் வீட்டில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும்போதுதான் அவர் பையன் பெரிய துணிப்பையில் எதையோ வாங்கி வந்தான்.

“என்னப்பா அது…?” என்றேன்.

“கோதுமை சார் .”என்றான்.

“எங்கே இருந்து வாங்கி வர்றே..? ”

“நியாய விலைக் கடையில சார்” சொல்லிச் சென்றான்.

அடுத்த வினாடி எனக்குள்ளும் வாங்க வேண்டும் என்கிற உந்துதல் ஏற்பட்டது. கட்டாயம் வாங்கியே ஆகவேண்டும் !

வீட்டில்…. நான், மனைவி, இரண்டு மகன்கள். ராத்திரி வேளையில் யாரும் சோறு சாப்பிடுவதில்லை.

“கோதுமை நியாய விலைக் கடையில் இல்லேன்னா மாளிகைக் கடையிலேயாவது வாங்கி வாங்க..”….

என் மனைவி பத்து நாட்களாகப் பாடம் படிக்கிறாள். அவளுக்குச் சர்க்கரை வியாதி. பையன்கள் சப்பாத்திப் பிரியர்கள். கோதுமை வெளிக்கடைகளில் விலை அதிகம். வாங்க மனமில்லை. நான் சாதாரண அரசு உத்தியோக வேலைக்காரன். குறை வருமானத்தில் குப்பைக் கொட்ட வேண்டிய கட் டாயக்காரன். நேற்று அலுவலகம் விட்டு வரும் வழியில் உள்ள நியாயவிலைக்கடையில் வழக்கம்போல…

“இருக்கா..?” கேட்டேன்.

“இல்லை !” சொன்னான்.

இன்று சனிக்கிழமை அலுவலகம் விடுப்பு. அந்தப் பக்கம் போகவில்லை. வந்து விட்டது போல.

உடனே…

“நானும் கோதுமை வாங்கனும்..” சொல்லி நண்பரிடம் விடை பெற்றுக் கொண்டு கிளம்பினேன்.

வீட்டுக்குள் நுழைந்து அவசர அவசரமாக நியாய விலை கடை புத்தகம் பணம் எடுத்துக் கொண்டு கிளம்பினேன்.

“எங்கே போறீங்க..?” மனைவி குரல் கொடுத்தாள்.

“நியாய விலைக்கடைக்கு. கோதுமை வாங்க…”நானும் திருப்பிக் குரல் கொடுத்தேன்.

“பத்துக் கிலோவுக்குக் குறையாமல் வாங்கி வாங்க. இன்னைக்குச் சனிக்கிழமை. ரெண்டு வாழைப்பழம், வெற்றிலை மறக்காமல் வாங்கி வாங்க..”

“சரி” சைக்கிளை எடுத்துக் கொண்டு வேகமாய் மிதித்தேன்.

பதினைந்து நிமிட மிதிப் பயணம். ஒரே கட்டிடத்தில் அருகருகே இரு நியாயவிலைக் கடைகள். இரண்டிலுமே அதிகக் கூட்டமாக இருந்தது. மக்கள் நெருக்கி அடித்துக் கொண்டு நின்றார்கள். நல்ல வேளையாக கொரோனா கட்டுப்பாடுகள் இல்லை. இருந்திருந்தால்… முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளி விட்டு, பத்து கிலோ மீட்டர் தூரத்திற்காவது நின்றிருப்பார்கள். எல்லோரும் வறுமைக்கோட்டுக் கீழே உள்ள முகங்கள். அனைவர் கைகளிலும் சிகப்பு நிற புத்தகம் வைத்துக் கொண்டு ஒரு வரிசை, ஒழுங்கு இல்லாமல் நான் முந்தி, நீ முந்தி என்று கடைக்காரர்களிடம் புத்தகங்களைக் காட்டி , நீட்டி, மூட்டை , மூட்டையாக அரிசி வாங்கிச் செல்வதிலேயே குறியாய் இருந்தார்கள்.

“என்ன அரிசி..?” அருகில் நின்ற முகம் தெரியாத ஆளிடம் கேட்டேன்.

“வெள்ள நிவாரண இலவச அரிசி சார்.!” என்றார்.

பத்து நாட்கள் தொடர்ந்து மழை கொட்டியத்தின் பலன். சிகப்பு அட்டைக்காரர்களுக்கு இந்தச் சலுகை.

இந்தக் கூட்டத்தோடு முட்டி மோதிக் கோதுமை பெறுவது என்பது சிரமம். மேலும்… தினம் வயிறு நனைக்க கஷ்டப்படும் இவர்களோடு போட்டி போடுவதும் சரி இல்லை. எனக்குள் பட்டது.

வந்த காரியம் முடிக்காமல் போனால் நாளை இல்லாமல் போகலாம். நியாயவிலைக்கடைகளிலெல்லாம் பொருட்களைக் கண்டவுடன் வாங்கி விட வேண்டும். தவறினால் கிடைப்பது கஷ்டம். இல்லாமல் போகும். நின்று வாங்கிச் செல்வதைத் தவிர வேறு வழி இல்லை. கூட்டம் குறையட்டும். ! ஒதுங்கினேன்.

அரை மணி நேர தள்ளு முள்ளுக்குப் பிறகு கூட்டம் ஓரளவிற்கு குறைந்தது. அடுத்து கால் மணி நேரத்தில் காணாமல் போனது.

நான் படி ஏறி கோதுமை கேட்டு கார்டு நீட்டினேன்.

“இல்லே சார்!” அவன் குண்டைப் போட்டான்.

“இப்போதான் ஒரு பையன் வாங்கி வந்தான்..??” சொன்னேன்.

“சரக்கு கொஞ்சமாத்தான் வந்தது. உடனே சரியாய்ப் போச்சு சார்..”

கையைப் பிசைந்தேன். என் முக வாட்டம், சங்கடத்தைப் பார்த்த அவன்….

“பக்கத்துக் கடையில் இருக்கா பாருங்க..” என்றான்.

வாங்கிக் கொடுப்பான் ! என்கிற நம்பிக்கையில் எட்டிப் பார்த்தேன். அரிசி மூட்டைகளுக்கு நடுவில் பாதி மூட்டை கோதுமை இருந்தது.

“இருக்கு” இவனிடம் சொன்னேன்.

“வாங்கிப் போங்க சார்” சொன்னான்.

அந்தக் கடைக்காரன் வயசு 40. அவ்வளவாய்ப் பழக்கம் இல்லாதவன் இங்கு வந்து செல்வதினால் புன்னகைப் பூக்கும் அளவிற்குக் கொஞ்சம் முக அறிமுகம். நான் சென்ற வருடம் வாடகை வீட்டில் குடி இருந்தபோது அந்த வீட்டிற்கு முன் பத்து லட்ச ரூபாய்க்கு மனை வாங்கி வீடு காட்டினான்.. அப்போது ஏற்பட்டப் பழக்கத்தால்…..

பார்த்தால் புன்னகை. நெருங்கினால்..”வணக்கம் சார்!சௌக்கியமா..” வார்த்தைகள்.

எனக்கும் அவன்.மீது கொஞ்சம் மதிப்பு, மரியாதை. இந்த சின்ன வயதில் குறை சம்பளத்தில் தன் தங்கைக்குத் திருமணம் முடித்து, வீடும் கட்டி இருக்கிறான். சாமர்த்தியசாலி என்று.

“ஆள் நியாயவிலைக்கடையில் இருந்து கொள்ளை அடிக்கிறான். பொருட்கள் பதுக்கி அநியாய விலைக்கு விற்று வீடு கட்டுகிறான்!”- என்று அங்கிருந்த அக்கம் பக்கம் சொன்னார்கள்.

ஒருவன் முன்னேற்றத்தைப் பார்த்து மக்கள் பொறாமையில் சொல்வது இயல்பு. மேலும்…’எடைக் குறைவு!’ என்பது எல்லா நியாய விலைக் கடைகளிலும் இருக்கும் பொதுவான நடை முறை.

அது விற்பனையாளர்கள் கொள்ளை, குற்றமில்லை. குத்தூசிகளால் மூட்டைகள் லாரிகளில் ஏற்றல், இறக்கல், கைமாறல், சாக்கு கிழிசல், ஒழுகல், அது இதுவென்று கடைகளுக்கு அரிசி, சர்க்கரை, கோதுமை, பருப்பு வகைகள் அனைத்தும் பண்டகச் சாலைகளிலிருந்து வரும்போதே மூட்டைக்கு இரண்டு மூன்று கிலோக்கள் குறைவே வரும். அதை விற்பனையாளர்கள் சரி கட்ட வேண்டும் என்பது தவிர்க்க முடியாத தலைவிதி!

அதனால் அவர்கள் கிலோவிற்கு ஐம்பது, நூறு கிராம்கள் எடை குறைத்து வழங்கி சரி செய்வார்கள். இதையே காரணம் காட்டி அதிக எடை குறைப்பு செய்வதுதான் கொள்ளை!

நியாய விலைக்கடைக்கார்கள் கள்ள மார்க்கெட்டில் மூட்டைமுட்டையாய், அரிசி, சரக்கு விற்கிறார்கள் என்பதெல்லாம் அதிகாரிகளைக் கைக்குள் போட்டுக் கொண்டு செய்யும் செயல்.

இதுவரை பக்கத்துக்கு கடைக்காரனிடம் நான் எதற்கும் சென்றதில்லை. இப்போது போக மனம் இடம் கொடுக்க வில்லை. அதனால்..

“தம்பி!” என் கடைக்காரனை அழைத்தேன்.

கல்லாவில் பணத்தை எண்ணிக் கொண்டிருந்த அவன்…

“என்ன சார்..?” நிறுத்திப் பார்த்தான்.

“கார்டு இல்லாமல் எப்படிக் கொடுப்பார்..?” என்றேன்.

“நான் சொன்னேன்னு சொல்லுங்க..?”

“நீங்களே சொல்லிடுங்க தம்பி..”

“தேவை இல்லே. சார். நான் சொன்னென்னே சொல்லுங்க..” தொடர்ந்து எண்ணினான்.

இனி இவனை வற்புறுத்துவதில் பயனில்லை. புரிந்தது.

‘ஆள் கொடுத்தால் கொடுக்கிறான். இல்லை கொடுக்காமல் போகிறான். இதற்கு எதற்குத் தயக்கம்….?’ என்று துணிவு வர.. நான் பக்கத்துக்கு கடையில் தலை நீட்டினேன்.

கவனித்த அவன்…

“வாங்க சார்..” கல்லாவில் இருந்தபடி மலர்ந்தான்…

“பக்கத்துக் கடையில் கோதுமை தீர்ந்து போச்சு ரமேஷ்!”

“வேணுமா சார்..?”

“ஆமாம்”

“எத்தனை கிலோ..?”

“பத்து!”

“அவ்வளவு ,முடியாது சார். எனக்கு கணக்குல இடிக்கும். அஞ்சு கொடுக்கலாம்” சொன்னான்…

“பரவாயில்லே..” பையை நீட்டினேன்.

“சார். அரிசி?” – என்னை உரசியபடி ஒரு குரல்.

திரும்பிப் பார்த்தேன்.

சிகப்பு அட்டையுடன் அழுக்கு, வேட்டி, துண்டில் ஐம்பது வயது முதியவர். ஒடுக்குக் கன்னம். குழி விழுந்த கண்கள். வற்றிப் போன வயிறு. எலும்புகள் தெரியும் நெஞ்சு. பார்வையிலேயே ஏழை, தினக்கூலி ஆள் புரிந்தது. `

“மொதல்ல அவருக்குப் பத்து கிலோ போட்டு அனுப்பு..” என்று உதவியாளரிடம் உத்தரவிட்ட ரமேஷ். அவரிடம் கார்டு வாங்கி, பதிந்து, கைநாட்டுப் பெற்றுக்கொண்டு ஆளை வேலை முடித்து அனுப்பி விட்டு அடுத்து எனக்குக் கோதுமை கொடுத்து முடித்தான்.

பணத்தைக் கொடுத்தேன்.

அவன் நியாய விலை விலைக்கே பணத்தை எடுத்துக் கொண்டு மீதியைத் திருப்ப… எனக்கு ஆச்சரியம்.

“ரமேஷ்! பணம் குறைவாய் எடுத்திருக்கேப் போலிருக்கு..?!…” என்றேன்.

“இல்லே சார். சரியாய் எடுத்திருக்கேன்”

“நீ விற்கிற விலையை எடுத்துக்கோ. எனக்குச் சலுகை வேணாம். நட்பு போதும்” என்றேன்.

“பரவாயில்லே சார்..வாங்க..” பிடிவாதமாய்த் தலையாட்டி விடை கொடுத்தான்.

“நன்றி !” – ரமேஷிடமும் என் கடைக்காரனிடமும் சொல்லி விட்டு சிறிது தூரம் சைக்கிளைத் தள்ளி வந்த பங்க் கடையில் நிறுத்தி மனைவி சொன்ன வாழைப்பழம், வெற்றிலை வாங்கினேன்.

“ஐயா..!” குரல்.

பார்த்தேன்.

சிறிது நேரத்திற்கு முன் என்னோடு அரிசி வாங்கிய ஆள் தலையில் அந்த மூட்டை..

“நான் கோதுமை வாங்கலே. வாங்கினேன்னு புத்தகத்துல குறிச்சிருக்கிறதா எனக்குத் தெரிஞ்ச ஒரு படிச்ச பையன் சொன்னான். உண்மையா பாருங்க..” சொல்லி புத்தகத்தை நீட்டினார்.

வாங்கிப் புரட்டிப் பார்த்த எனக்கு அதிர்ச்சி !

இன்றைய தேதியில் அரிசி மட்டுமல்ல, கோதுமை, சர்க்கரை, மண்ணெண்ணெய், பருப்பு வகைகள் அனைத்தும் வாங்கியதாகப் பதிந்திருந்தது.

பேரதிர்ச்சியில்…

“ஆமாம்!” என்றேன்.

“இப்படித்தான் ஐயா. ஏமாந்தவங்க கார்டுல அநியாயம் செய்து ஏழைங்க வயித்துல அடிச்சு பணக்காரனாகிறானுங்க பாவிங்க. சாமிதான் அவனுங்களுக்குக் கூலி கொடுக்கணும்…!…” என்று மனதார சபித்து அவர் கார்டு வாங்கிப் போனார்.

அட..கொள்ளைக்காரர்களா..??! நினைத்த அடுத்த நொடி…

அவர் சாபத்தில் எனக்கும் பங்கிருப்பதாகத் தோன்ற…கோதுமையும் மனசும் கனத்தது. 

தொடர்புடைய சிறுகதைகள்
சோதிட சிகாமணி. .. ஸ்ரீலஸ்ரீ மார்க்கண்டேயன் தன் முன் பணிவாக வந்தமர்ந்த இளைஞனைக் உற்றுப் பார்த்தார். "பேர் சுரேஷ் !"அமர்ந்தவன் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டான். "அப்புறம். .?" "வயசு 30. அரசாங்க வேலை. எழுத்தர் பணி. மாசம் முப்பதாயிரம் சம்பளம். மனைவி , ஒரு பொண்ணு, புள்ளைன்னு ...
மேலும் கதையை படிக்க...
வாசலில் வாழை மரங்கள். மாலையும் கழுத்துமாக கூப்பிய கரங்களுடன் மணமக்கள் சிரித்தப்படி ஜோடியாக பெரிய டிஜிட்டல் பேனரில் வருகிறவர்களை வரவேற்பதுபோல் நின்றார்கள். முகப்பில்...சந்தனம், ரோஜாப்பூ, கற்கண்டு தட்டுகளுடன் அழகு வரவேற்பு மங்கைகள் என்று அந்த திருமண மண்டபம் வழக்கமான களைகட்டுதல்களுடன் இயங்கிக் கொண்டிருந்தது. முகூர்த்த ...
மேலும் கதையை படிக்க...
நான் முதன்முதலாக எந்த பெரு நகரங்களுக்குச் சென்றாலும் அந்த ஊர் பேருந்து நிலையத்தை நன்றாக சுற்றிப் பார்ப்பது வழக்கம். அதில் நிறைய பிரயோஜனங்கள். நகர பேருந்து நிற்குமிடத்திற்குச் சென்றால்..... பேருந்துகளில் இருக்கும் பெயர் பலகைகளைப் பார்த்து சுற்றுப்பட்ட ஊர்களைத் தெரிந்து கொள்ளலாம். அங்கு ...
மேலும் கதையை படிக்க...
இரவு மணி 11.00. 'ஆம்பளை அஞ்சு மடங்கு வீராப்புன்னா பொம்பளை பத்து மடங்குங்குறதுதான் நடைமுறை வழக்கம், கேள்வி. இவர் மாறாய் இருக்கார். சண்டை.... ரெண்டு நாள்ல சரணாகதி அடைவார்ன்னு நெனைச்சா... ஆள் பத்து நாட்களாகியும் திரும்பாம இருக்கார்.! அஞ்சு நாட்கள்தான் புருசன்கிட்ட முகம் ...
மேலும் கதையை படிக்க...
கழுத்துவரைபோர்வை போர்த்தி சோர்ந்து, சுருண்டு கயிற்றுக் கட்டிலில் படுத்திருந்த 30 வயது இளைஞன் இனியன் மல்லாந்து படுத்து கண் விழித்தான். மூங்கில், தென்னங்கீற்றுகளிலான கூரை பார்வையில் பட்டது. அப்படியே கண்களை இறக்கி நோட்டமிட்டான். செம்மண் சுவர்களாலான குடிசை புரிந்தது. வாசல் திறந்திருக்க வெளியே.... "லெமூரியாக் கண்டம் ...
மேலும் கதையை படிக்க...
உலகை நொடியில் சுற்றி தகவல்களைச் சேகரித்து வரும் அதி நவீன ரோபோவை பத்து நாட்களாகக் காணாமல் கவலையில் படுத்திருந்த உலக விஞ்ஞானி 80 வயது விஜயாலயன் கண்களில் திடீர் வெளிச்சம். உடலில் புத்துணர்ச்சி. தன் ஆராய்ச்சிக்கூட வாசலில்.... அந்த ரோபோ.!! "ஏ...! கரிகால்..!!" கூவி ...
மேலும் கதையை படிக்க...
வேறு வழி இல்லாமல் தயக்கத்துடனும் ஒரு வித அசட்டுத் துணிச்சனுடனும் நடந்தார் வெங்கடசுப்ரமணியம். என்ன நடக்கப் போகிறதோ. ..? ! வேண்டும் ! தாயில்லா பெண் என்று செல்லமாக வளர்த்து, சுதந்திரமாகப் பறக்கவிட்டதற்கு இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும் ! போய்ச்சொன்னதும் கொதிப்பார்கள் ! தன் ...
மேலும் கதையை படிக்க...
சண்டை போட்டா வீட்டுக்காரியைச் சரி படுத்தத் தெரியனும்.! இல்லேன்னா வில்லங்கம், விவகாரம், விவாகரத்து ! - இதுக்குப் பயந்துக்கிட்டுத்தான் இத்தினி காலமா பொண்டாட்டியோட சண்டை போடாமல் இருந்தேன். ஆனாலும் எத்தினி காலத்துக்குத்தான் இப்படி இருக்க முடியும்..? நேத்திக்கு முதல் நாள். முந்தாநேத்து. எனக்கும் என் ...
மேலும் கதையை படிக்க...
ரஜனி திரைப்படத்தின் இரண்டாவது ஆட்டம் முடிவு. கொட்டிக் கவிழ்த்த நெல்லிக்காய்கள் போல் மக்கள் கூட்டம் கொளேரென்று திரையரங்கிலிருந்து சிதறியது. சேகரும் அதில் ஒருவனாக வெளி வந்தான். நேற்று வெளியான படம். நண்பன் ஒருவன் அதில் நடித்திருப்பதால் பார்த்து பதில் சொல்ல வேண்டிய கட்டாயம். அண்ணா ...
மேலும் கதையை படிக்க...
''என்னங்க! சாப்பிட வாங்க.'' அழைத்தாள் மனைவி மரகதம். ''அம்மாவுக்கும் போடு.'' என்றேன். அம்மா காலையில்தான் கிராமத்திலிருக்கும் தம்பி வீட்டிலிருந்து வந்தாள். வந்து இரண்டு நாட்கள் தங்குவாள். நல்லது கெட்டது சாப்பிட்டுவிட்டு கிளம்புவாள். அம்மாவிற்கு இங்கு கக்கூஸ் போகக் கஷ்டம். கிராமத்தில் காற்றாடச் சென்றவள். அடுத்து அவளுக்கு ...
மேலும் கதையை படிக்க...
பாவாடையை மாத்தாதே…!
புதுப் பாதை..!
பாலூத்தியாச்சு…!
ஆம்பளை ஆம்பளைதான்..!
அலைகளால் அழியாத தூசு..!
எம கிரகம்…!
மாப்பிள்ளைப் பார்க்கணும்..!
மனைவியை நைஸ் பண்ணத் தெரியனும்..!
கடவுள் பாதி மிருகம் பாதி…
தாய்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)