சங்கிலிக் கண்ணிகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: October 10, 2017
பார்வையிட்டோர்: 8,774 
 

மப்பும் மந்தாரமுமாக இருக்கும் ஐப்பசி மாதத்தின் குளிர்ந்த ஈரமான காலைப் பொழுது. இந்தியன் மனித வள முகவாண்மை, உத்தமர் காந்தி சாலை சென்னை, என்ற முகவரியில் இயங்கிய அந்தத் தனியார் நிறுவனத்தின் வரவேற்பறையில் எப்படியும் குறைந்தது நூறு பேராவது இருப்பதாகவே தோன்றியது. முக்கால்வாசிப்பேர் அவரவர் கையில் இருந்த செங்கல் அளவு நீள அகல பரிமாணங்கள் கொண்ட தத்தம் முப்பரிமாணத் திரை செல் பேசியில் தங்களுக்கான உலகத்தில் மூழ்கியிருந்தனர். திடீரென அறை பரபரப்பானது. சஃபாரி உடை அணிந்த வாட்டசாட்டமான உடற்கட்டும் போலீஸ் அதிகாரியை நினைவு படுத்தும் தோற்றத்துடன் வந்த ஒருவர் சற்றே அதிகாரமான உரத்த குரலில் பெயர் மற்றும் பதிவு எண் பட்டியலை வாசிக்கத் தொடங்கினார். கிட்டத்தட்ட பத்து நபர்களின் பெயர்களை வாசித்து முடித்தபின்,

‘பெயர் வாசித்தவர்கள் எல்லாம் முதலாம் மாடியில் அறை எண் 101 க்கு வந்து விடுங்கள்’ என்று சொல்லிவிட்டு மாடிப் படியேற ஆரம்பித்தார். அதற்குள் பெயர் வராத பலர் ‘சார் எங்க பேர் படிக்கவில்லை’ என்றபடி பின் தொடர ‘அடுத்து கூப்பிடுவோம்’ என்று சொல்லிக் கொண்டே முதல் மாடியில் 101 அறைக்குள் புகுந்து விட்டார். அங்கே அந்த அறைக்கு வெளியிலும், படிக்கட்டிலும் நின்றவர்களை வரவேற்பு அறையில் சென்று அமரும்படி, காவலாளி கழுத்தைப் பிடித்துத் தள்ளாத குறையாய் அன்போடு துரத்திக் கொண்டிருந்தார். ‘அடுத்த பேட்ச் எப்போது கூப்பிடுவாங்க சார்’, என்று காவலரிடம் விசாரிப்புகள். எப்படியும் இன்னும் அரை மணி நேரமாவது ஆகும் என்று தெரிந்ததும் கொஞ்ச கூட்டம் சமாதானம் ஆனது.

அடுத்தடுத்த கால் மணி நேர இடைவெளிகளில் பத்து பத்து பேராக அழைக்கப்பட மெல்ல மெல்லக் கூட்டம் கரையத் தொடங்கியது. அறை எண் 101 ல் நுழைந்த யாரும் திரும்ப வரவேற்பு அறைக்கு வந்த மாதிரித் தெரியவில்லை. அங்கிருந்து அவர்கள் வேறு வழியாக வெளியே அனுப்பப்பட்டிருக்கலாம். ஆச்சரியத்திலும் ஆச்சரியமாக மருந்துக்குக் கூட ஒரு பெண் போட்டியாளர் அந்தக் கூட்டத்தில் இல்லை. சந்தோஷுக்கு இன்னும் பெயர் கூப்பிடப்படவில்லை. மணி ஒன்று என்று வரவேற்பறைக் கடிகாரம் காட்டியது. பசி வயிற்றைக் கிள்ள ஆரம்பித்தது. காலையில் திண்டிவனத்தில் அனந்தபுரி எக்ஸ்பிரஸில் ஏறுவதற்கு முன் செண்பகா வாங்கிக் கொடுத்த காபி சாப்பிட்டதுதான். டிரெயினுக்கு டிக்கெட் எடுத்த செண்பகாதான் சென்னை வரப் போக எல்லாவற்றுக்குமாக எக் மோரில் இறங்கும் போது ‘ஆல் தி பெஸ்ட், நாளை காலையில் பார்க்கிறேன்’ என்று சொல்லி அவன் உள்ளங்கையில் ஐநூறு ரூபாய்யைத் திணித்து விட்டு பதிலுக்குக் காத்திராமல் கூட்டத்தில் மறைந்து போனாள். ஆண்டவா, செண்பகாவிற்கு வேண்டியாவது இந்த வேலை எனக்குக் கிடைக்கணும். நாலு வருஷமாக எத்தனை இண்டர்வியூக்கள், எத்தனை சுடு சொற்கள், முதுகுக்குப் பின் சிரிப்புகள். சந்தோஷ் உண்மையாகவே சந்தோஷமாக இருந்து பல நாட்களாகிறது. இதையெல்லாம் தாங்குவதே செண்பகாவுக்காகத்தான். எப்படியும் இன்னும் ஒரு வருடம் இருக்கிறது. அதற்குள் வேலை கிடைக்க வேண்டும். மாமா கொடுத்த கெடு அது. இல்லாவிட்டால் செண்பகாவுக்கு வேறு யாருடனாவது திருமணமானால், கல்யாணத்திற்கு போய் எங்கிருந்தாலும் வாழ்க என்று வாழ்த்திவிட்டு மாப்பிள்ளைக்கு சிரித்த முகத்துடன் கை கொடுத்து விட்டு வர வேண்டியதுதான். இந்தப் பணம் ஐநூறு ரூபாயில் எப்படியாவது மிச்சம் பிடித்து அடுத்து எதாவது இண்டர்வியூ வந்தால் அவளையோ, வீட்டிலோ தொந்தரவு செய்யாமல் போய் வந்து விடலாம். நல்லவேளை ஆண்டவன் திண்டிவனத்தில் பிறக்க வைத்தான். சென்னையானாலும், பாண்டி ஆனாலும் நூற்றம்பது ரூபாயில் போய் வந்து விடலாம். நெல்லை,மதுரை, திருச்சி என்றால் இன்னும் கஷ்டம். நிறைய இண்டர்வியூக்களை இந்த சென்னையிலேயே ஏன்தான் வைக்கிறார்களோ?

சஃபாரிகாரர் வந்து கே. சந்தோஷ், திண்டிவனம் – ரெஜிஸ்டர் நம்பர் 13754 என்றதும் ‘டக்’ கென நினைப்பு மாறியது. 110 எண் அறையில் இவனுடன் இன்னும் ஆறே ஆறு பேர். மூன்று பேர் இல்லை. ஆளுக்கு ஐந்தாறு பக்கங்கள் கொண்ட ஒரு புத்தகம் போல ஒன்று தரப்பட்டது. அதில் வந்திருந்தவர்களின் குடும்பப் பின்னணி, அரசியல் தொடர்பு, உயர் பதவியில் உள்ள உறவினர்கள் குறித்து எல்லா விவரங்களுடன் கல்வித்தகுதியும் கேட்கப்பட்டிருந்தது. அடுத்து அதை நிரப்பிக் கொடுத்த பின்னர் நேர்முகத்தேர்வு வேறு ஒரு அறையில் தனித்தனியாக நடைபெற்றது. தேர்வு அப்படி ஒன்றும் கடினமாக இல்லை. பொதுவாக அவனுடைய சிந்தனைகள், நோக்கங்கள், பொழுதுபோக்குகள், நண்பர்கள் இப்படியே இருந்தது. மறந்து கூட அவன் படித்த தமிழ் இலக்கியத்தில் ஒரு வினா கூட கேட்கப்படவில்லை.

இதெல்லாம் முடிய மணி பிற்பகல் இரண்டு. பிங்க் நிறத்தில் கேண்டீன் சாப்பாட்டிற்கான காகித டோக்கனும், ஒரு வெள்ளைத் தாளில் அண்ணா நகரில் உள்ள ஒரு மருத்துவமனை விலாசமும் கொடுத்து சரியாக மூன்று மணிக்குள் சாப்ப்பிட்டு விட்டு மருத்துவமனைக்குப் போய் மருத்துவத் தகுதிக்கான தேர்வுக்கு போய் விட்டு மாலை ஆறு மணிக்குப் மீண்டும் திரும்ப இங்கே வர வேண்டும் என்று சொல்லி அனுப்பினார்கள்.

சாப்பாட்டு நேரம் கடந்து விட்டதால் கேண்டீனில் அதிகம் கூட்டமில்லை. தட்டை எடுத்துக் கொண்டு போனால் வயதான பெண்மணி ஒருவர் ஒரு கையிலிருந்த கரண்டியால் அதில் சூடாக சாதம் போட்டு, மறு கையில் உள்ள கரண்டியால் கொதிக்கக் கொதிக்க சாம்பாரும் ஊற்ற அடுத்திருந்த மற்றொரு பெண் அதே போலவே வெண்டைக்காய் பொரியலும், பறங்கிக் காய் கூட்டையும் பரிமாறினார். பக்கத்தில் இருந்த மூங்கில் கூடையிலிருந்து பாதி பொரியும் போதே எடுக்கப்பட்டு எண்ணை வடியாத கருப்புத் துகள்களுடன் கூடிய அப்பளங்களில் கொஞ்சம் சமாரான ஒன்றை எடுத்துக் கொண்டு சந்தோஷ் மேசைக்கு வந்தான். அவசர அவசரமாகச் சாப்பிட்டு வெளியே வந்தவனுக்கு அது பின் வாசல் என்பது புரிந்தது. வாசலில் இருந்த காவலாளியிடம் அண்ணா நகருக்குப் போக பஸ் ஸ்டாப் பஸ் நம்பர் கேட்டு நடக்கும் போது மழை வரும் போல வானம் இருட்டிக் கொண்டு இருந்தது. பஸ் ஸ்டாப்பில் காத்திருந்த போது மறுபடியும் செண்பகா மனதுக்குள் அவசரமாக வந்து போனாள். பஸ் வரவும் உள்ளே ஏறி உட்கார்ந்து அண்ணாநகர் ரவுண்டாணா என்று டிக்கெட் வாங்கியவனின் சிந்தனையெல்லாம் மருத்துவத் தேர்வில் எல்லாம் சரியாக அமைந்து இந்த வேலை கிடைத்து விட வேண்டும் என்பதிலேயே இருந்தது. இடையில் பஸ்ஸில் ஏறி ஆட்டம் பாட்டம் என்று கொட்டமடித்த கல்லூரி மாணவர்களின் அலம்பல் அயர்ச்சியூட்டியது. ஆறு வருடங்களுக்கு முன் தானும் இப்படி இருந்தவன்தான் என்ற நினைப்பே அருவெறுப்பாக இருந்தது. ரவுண்டாணா ஸ்டாப்பை சரியாகக் கேட்டு இறங்கிக் கொண்டவன் அடுத்த கட்டமாக அந்த மருத்துவமனையை விசாரித்துக் கண்டு பிடித்துப் போய்ச் சேர மணி மூன்றைக் கடந்து ஐந்து நிமிடமாகி இருந்தது.

வரவேற்பில் இருந்த பெண்ணிடம் வெள்ளைச் சீட்டைக் கொடுக்க அவள் படு சிக்கனமாக, ‘நான்காவது மாடி, அறை எண் 437’ என்று சொல்லி சீட்டைத் திரும்பத்தந்தாள். நான்காவது மாடியில் அந்த அறைக்கு வெளியில் அவன் காத்திருக்க வெளியில் வந்த நர்ஸ் இவனைப் பார்த்துவிட்டு ‘மெடிக்கல் டெஸ்ட் தானே சார்.என்னுடன் வாங்க’ என்று சொன்னாள். வெள்ளை காகிதத்தை வாங்கிக் கொண்டு நிறைய இரத்த மாதிரிகளை சின்னச்சின்ன குப்பிகளில் சேகரித்துக் கொண்டார்கள். என்னென்னவோ பெயர் தெரியாத மிஷின்களில் படுக்க வைத்து ஏகப்பட்ட எக்ஸ் ரே, ஈ.சி.ஜி, ஸ்கேன் எல்லாம் எடுத்துத் தள்ளினர். கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்திற்குப்பின் ‘எல்லாம் முடிந்தது சார். நீங்க போகலாம். ரிப்போர்ட் கம்பெனிக்கு அனுப்பி விடுவோம்’, என்று சொல்லப்பட்டது. ‘ இத்தனை டெஸ்ட் எடுத்தீங்களே, உடம்பில் எதாவது பிரச்சனை என்றால் சொல்லுவீர்களா’ என்று அப்பாவித்தனமாகக் கேட்டவனிடம் சிரித்தபடி, ‘அதெல்லாம் கம்பெனியில் கேட்டுக்குங்க சார்’ என்று பதில் சொல்லப்பட்டது. இந்த மருத்துவமனையில் இத்தனை சோதனைகளுக்கெல்லாம் எப்படியும் பத்து முப்பதாயிரம் செலவாயிருக்கும் என்று சந்தோஷுக்குத் தோன்றியது.

மறுபடியும் பஸ் பிடித்து நுங்கம்பாக்கம் வந்தான். கம்பெனி வரவேற்பு அறையில் தொலைக் காட்சிப் பெட்டியில் ஆதித்யா சேனலில் வடிவேலு காமெடி சப்தமின்றி ஓடிக் கொண்டிருந்தது. காலையில் பார்த்த யாரும் இல்லை.

அழுத்தமான சிவப்பு உதட்டுச் சாயம் அணிந்த சற்று மிகையான அலங்காரத்துடன் இருந்த வரவேற்பு அலுவலகப் பெண், உதடு பிரியாமல் சிரித்து ,’எஸ் ஸர், வாட் கேன் ஐ டூ ஃபார் யூ ஸர் ’ என்று சங்கீதமாக வினவினாள். சந்தோஷ் தான் காலையில் இண்டர்வியூவிற்கு வந்ததையும், இப்போது மெடிக்கல் டெஸ்ட் முடித்துவிட்டு வந்திருப்பதையும் தட்டுத்தடுமாறி பாதி ஆங்கிலமும் மீதி தமிழிலுமாகச் சொல்லவும், ‘கைண்ட்லி வையிட் ஃபொர் சம் மோர் டைம் ஸர். ஐ வில் கால் யூ இன் ஃப்யூ மினிட்ஸ்’ என்று சொல்லி விட்டு யாருக்கோ தொலை பேசினாள்.

அவள் தாழ்ந்த குரலில் ‘எஸ் ஸர், ஓகே ஸர்’ என்று பல முறை சொல்லிவிட்டு இறுதியாக ஒரு தேங்க் யூ ஸர்’ சொல்லி பேச்சை முடித்த பின் , ‘ சந்தோஷ்’ என்று சன்னமான குரலில் கூப்பிட்டாள்.

‘ கங்கிராட்ஸ் சந்தோஷ் ஸர். யூ ஆர் ஆல்மோஸ்ட் செலக்ட்டட். ஜெஸ்ட் சம் ஃப்யூ டெஸ்ட் ரிசல்ட்ஸ் ஆர் எட் டு கம். ப்ளீஸ் சைன் தி வவுச்சர்ஸ் அன் கெட் யுவர் ட்ராவல் எக்ஸ்பென்சஸ் ஸர். டுமாரோ ப்ளீஸ் டூ கம் அட் நைன் இன் தி மார்னிங் ஸர்’ என்றபடி சில படிவங்களில் கையெழுத்து வாங்கிக் கொண்டு முள்ளங்கிப் பத்தையாக மூன்று ஐநூறு ரூபாய் நோட்டுகளைத் தந்தாள். மனசு மகிழ்ச்சியில் திக்குமுக்காடியது. செய்தியை சண்பகாவிடம் பகிர்ந்து கொள்ள பொதுத் தொலைபேசி ஒன்றைக் கண்டுபிடித்து தகவல் சொன்னான். மீண்டும் டிரெயின் பிடித்து திண்டிவனம் போய்விட்டுத் திரும்ப நாளை வர வேண்டும். மின்சார ரயிலில் கண்னை மூடியபடி சிந்தனை. சம்பளம் பற்றிக் கேட்கவில்லை. எப்படியும் இண்டர்வியூ பயணச் செலவுக்கே ஆயிரத்து ஐநூறு தந்தவர்கள் கண்டிப்பாக நல்ல சம்பளம் தருவார்கள். கடவுளே அந்த மெடிக்கல் டெஸ்ட் எல்லாம் ஓகே ஆகி விட வேண்டும். மருவத்தூர் போய் வர வேண்டும். மனதுக்குள் ஆயிரம் பிரார்த்தனைகள்.

இரவு மணி பதினொன்று. டாக்டர். பெருநிலவழுதி யின் கைபேசி அழைத்தது. எடுத்துப் பேசியவர்,

‘ஆமாம் சார். இப்பஅனுப்பிய நூத்துமுப்பத்தைந்து பேரில் சந்தோஷ் னு ஒரு கேண்டிடேட்டோட மெடிக்கல் ப்ரொஃபைல் நூறுக்கு நூறு மேட்ச் ஆகிறது. மற்ற ப்ரொஃபைல் எல்லாம் ஓகே ஆகிட்டா எல்லாம் சரியா வொர்க்கவுட் ஆகிடும்’.

மறு முனை, ‘சரி. நாளை மதியம் நான் அழைக்கிறேன்’ என்று சொல்லித் தொடர்பைத் துண்டித்தது.

ருத்திரவர்மன் ஐ.பி.ஸ்ஸின் தொலை பேசியில் அழைப்பு. எண்ணைப் பார்த்ததும் பரபரப்பானவர்,

‘ அய்யா, எல்லா ஃபைலையும் தரோவா பார்த்துட்டேன். கே. சந்தோஷ், திண்டிவனம் – ரெஜிஸ்டர் நம்பர் 13754 என்ற பையனுடையது லைன் கிளியரா இருக்கு. ஏழைக் குடும்பம். அரசியலிலோ இல்லை அதிகாரத்திலோ சொந்த பந்தம் யாரும் இல்லை. ஒரு சாப்பாட்டுக்கே சிரமம். மத்தது அய்யா சரின்னு சொன்னா நாளைக்கே செட் பண்ணிடலாம்’.

‘ சரி. நான் நாளைக்கு காலையில் பேசறேன்’ தொடர்பு துண்டிக்கப்பட்டது.

விழுப்புரத்தில் இரவு ஒரு மணிக்கு ‘வெளுப்பு சிவா’ வின் தொலைபேசி அடித்தது. ‘எவண்டா, இந்த அர்த்த ராத்திரியில் போன் போட்டு தொல்லை பண்றவன்’ என்றவாறு அலட்சியமாக எடுத்தவன் என்ணைப்பார்த்ததும்,

‘ அண்ணாத்தே இன்னா மேட்டரு? திடீல்னு இந்நேரத்துக்கு போன் போடறீங்க’

மறுமுனை பேசப் பேச, இங்கே சிவா, ‘ சரிங்க அண்ணாத்தே, பக்குவமா செய்துடலாம். அதெல்லாம் எதுவும் ஆகாது. எல்லாம் என் பொறுப்பு. முடிச்சிட்டு காலையில் தகவல் சொல்றேன்ணே’ என்றதும் தொடர்பு துண்டிக்கப்பட்டது.

மறுநாள் பொழுது விடிந்தது. அப்பாவிடம் கிடைத்த ஆயிரத்து ஐநூறு ரூபாயில் ஐந்நூறைத் தந்து விட்டு, உள்ளதிலேயே கொஞ்சம் சுமாராக இருந்த சட்டையை மாட்டிக் கொண்டு முதல் எக்ஸ்பிரஸ் வண்டியைப் பிடிக்க சந்தோஷ் திண்டிவனம் ரயில்வே ஸ்டேசனை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

காலையில் ‘ யோவ் டாக்டர் வழுதி, இன்னிக்கு எல்லாம் ரெடியாயிடும். எப்பயா ஆப்ரேஷன் பண்ணிக்கலாம்?’.

‘கொஞ்சம் பொறுங்க. கண்டதையும் தின்னு, கண்டதையும் மேஞ்சதில இப்போ உடம்பு படு மோசமா இருக்கு. ஆர்கன் டொனேசன் ரூல்ஸ் வேற பிரச்சினையா இருக்கு’.

‘அதையெல்லாம் மாத்தி சட்டம் ஆக்கிடலாம்யா. சமூகத்தில் மிகப் பொறுப்பான பதவி வகிப்பவர்களுக்கு முன்னுரிமை தர சட்ட வடிவம் கொண்டு வர எதிர்க்கட்சியாரோட கூட பேசிட்டேன். எந்த பிரச்சனையும் இருக்காது. நீ ஆப்பரேஷனை சரியாப் பண்ணிணாப் போதும்’.

‘எப்படியும் இன்னும் இரண்டு நாள் போகட்டும். நெறய பொறுத்தாச்சு. அதிகபட்சம் இன்னம் ஒரு வாரம் இல்ல பத்து நாள். இன்னிக்குத் தேதி 16. அடுத்த 26 க்குள்ளயே பண்ணிடலாம்’.

அடுத்தது தமிழ் காத்த வேளுக்கு போனைப் போட்டவர், ‘தம்பி வேள், இன்னிக்கு சொன்னபடி மொழியுணர்வு அறப் போராட்டம் ஆரம்பித்து நல்லா நடத்தணும். ஆனா வன்முறை கை மீறக் கூடாது. சட்டசபையில் அதுதான் முக்கியமா ஓடணும். வேண பணம் பொருளாளர் கிட்ட வாங்கிக்க’. மீடியா, மக்கள் எல்லாரோட கவனமும் போராட்டத்தில் தான் இருக்கணும். மற்ற சிந்தனையெல்லாம் வராத அளவு சிறப்பா இருக்கணும், ஆமா’.

‘சரிங்க அய்யா. நீங்க கவலைப்படாதீங்க. நான் போராட்டத்த என் கைக்குள்றயே வச்சிக்கிறேன்”.

தமிழ் காத்த வேளின் மொழியுணர்வுப் போராட்டம் ஆரம்பித்து சரியாக நான்காவது நாள். போராட்டத்தைப் பற்றித்தான் எல்லாத் தொலைகாட்சிகளிலும் அனல் பறக்கும் விவாதங்கள். காத்தவேள் தமிழ்த்தாயின் முன் வேலுடன் காவல் இருப்பது போல் கட் அவுட்கள் வீதிகளில் வைக்கப்பட காவல்துறை அகற்ற ஒரே களேபரம். வழக்கமான கடையடைப்பு, போலீஸ் வேன் எரிப்பு, மாணவர்கள் ஆர்ப்பாட்டம், அப்பாவி பஸ்கள் கல்லடி பட போராட்டம் கனஜோராக நடந்து கொண்டிருந்தது.

போராட்டம் தொடங்கிய ஆறாம் நாள் மாலை மூன்று தொடர்பற்ற செய்திகள் பத்திரிக்கைகளில் வந்திருந்தன.

மக்கள் தொண்டர் திரு. பெருங்கோவன் திடீர் உடல் நலக் குறைவு. சட்ட மன்றத்திலேயே மயங்கி விழுந்தார்.

மருத்துவமனையில் அனுமதி. தமிழ் காத்த வேள் மக்கள் தொண்டரின் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு போராட்டத்தை ஒத்தி வைப்பாரா?

என்பது இரண்டாம் பக்கத்திலும்,

உறுப்பு தானம் தொடர்பான புதிய சட்டம் எதிர்ப்பின்றி சட்டமன்றத்தில் ஏகமனதாக நேற்று ஏற்கப்பட்டது என்ற செய்தி ஆறாம் பக்கத்தில் ஒரு மூலையிலும்,

திண்டிவனம் அருகே கடந்த வாரம் அதிகாலையில் அடையாளம் தெரியாத வழிப்பறித் திருடர்களால் தாக்கப்பட்டதில் காயமடைந்த கே. சந்தோஷ் என்ற 27 வயது இளைஞன் மூளைச் சாவு அடைந்தான் என்பது பத்தாவது பக்கத்திலும் வந்திருந்தது.

சந்தோஷின் மரணத்தை முன்கூட்டியே முடிவு செய்த மக்கள் தொண்டர் பெருங்கோவன், மறுநாள் காலை உறுப்பு மாற்று சிகிச்சை செய்தும் பலனின்றி மருத்துவ மனையில் காலமானார். மக்கள் தொண்டர் பெருங்கோவனின் மரணத்தை மனிதர்கள் எவருமே முன் கூட்டி முடிவு செய்யவில்லை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *