Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

கோணங்கள்

 

ஓரு மணி…….. அடித்தது…கடிகாரத்திலும். , அவள் வயிற்றிலும். வேலை இன்னும் முடியவில்லை. இந்த குரங்கு, அதான் இந்த மேனேஜர் குரங்கு , இதன் பெயர் அன்றாடம் மாற்றப்படும் .அதன் காலை கொனஷ்டைகளே அன்றைக்கான புனைப்பெயரை தீர்மானிக்கும். நிமிடத்தில் சொன்னதை மாற்றி , இதை தப்புச்சொல்லி, அதை அடித்து, இதை திருத்தி,……ஒரு வழியாக, முடிவு செய்த final draft report கொடுத்தபோது ஒன்றடிக்க பத்து நிமிடம் தான் இருந்தது .

“சார் , லஞ்ச் போய்ட்டு வந்து தரவா.. .. ?”

“அம்மா,அர்ஜண்ட் , கழுத்துலே கத்தியை வெச்சு நெருக்கறாங்க ஹெட் ஆபீச்லே……… முடுச்சுக்கொடுத்தட்டு அப்புறம் எங்கேயாச்சும் போங்க…….”

எங்கேயாச்சும்…….?அது என்ன வார்த்தைப் பிரயோகம் …..?இவன் கெட்ட கேட்டுக்கு பெண்களுக்கு மாரல்ஸ் போதாது என்று சொல்லிக்கொண்டு திரிவதாகப்பேச்சு. அவள் புடவை கட்டுவது நின்றதற்க்கு இவரே காரணம் .மார்பு ,புடவை தலைப்பை அட்ஜஸ்ட் செய்தால் இடுப்பு , அதை புடவை கொண்டு மறைந்தால் பின் பாகம், என்று இடம் மாற்றி இடம் வெறிப்பது தாங்காமல் சல்வாருக்கு மாறி, தற்போது வேகாது வெய்யிலில் கூட துப்பட்டாவை உடல் முழுவதும் போர்த்திக்கொண்டு அமர்வது எரிச்சல் .

உச்சி வரை வந்த வெறுப்பை இரண்டு மடக்கு தண்ணீர் கொண்டு அடக்கினாள் .வயிற்று சலசலப்பிற்க்கும் இது தேவைப்பட்டது .
பத்து நிமிடம் என்று போட்ட கணக்கு, எப்போதும் கணக்குத்தவறி போகும் பீரியட்ஸ் போல அரை மணி அளவு தொட்டு நின்றது . விரல் சொடுக்கி, சிஸ்டம் லாக் அவுட் செய்து சாப்பாட்டு மேஜையை அணுகியபோது, அங்கு என்றுமில்லாத சத்தம் எரிச்சலைத்தந்தது .

“இதை இங்கே யாரும் ஒத்துக்க வேண்டாம் சொல்லிட்டேன்…….”

எப்போதும் வீரக்கொடி பிடிக்கும் ரத்னா வாய்க்குள் தள்ளப்பட்ட பெரிய சாத உருண்டை யை லாவகமாக உள்ளுக்குத்தள்ளியபடி இறைந்து கொண்டிருந்தாள் .

“யூனியன் ஒத்துக்கிடுச்சே…..?”

வேறு ஒரு சாப்பாடு மெல்லும் வாய்.

“யூனியன்….நான்சென்ஸ் …..நாம இல்லாம அது ஏது…?இப்போ யாருக்காக இந்த கன்ஸெசன்….? பெரிய கான்பிஸ்கேஷன் மாதிரியில்லே தெரியுது.”

பிரச்சனை இதுதான் .மதியம் சாப்பாட்டிற்க்காக ஒரு காண்டீன் ஆரம்பிக்க இருந்ததது தலைமை அலுவலகம். அதற்க்கான மாத செலவு கணக்கிடப்பட்டு அதில் ஒரு இருபத்தி ஐந்து சதவீதம் எல்லோர் சம்பளத்திலும் பிடிக்க உள்ளது.

டோக்கன் கொடுக்கப்படும்.தேவையானால் சாப்பிடலாம் .ஆனால் பிடித்தம் எல்லோருக்கும் பொது.இதுதான் பிரச்சனையின் மையப்புள்ளி. கையில் சாப்பாடு எடுத்துவரும் பெண்களுக்கு இது தேவை இல்லாதது.யாரோ சாப்பிட யாரோ பணம் கொடுப்பது அநீதியாகப் பட்டது.

மற்றுமொரு காரணம்…..வீட்டுக்கணக்கில் விழப்போகும் பற்றாக்குறை பற்றிய பயமே .

ரத்னா மீண்டும் இறைந்தாள்……

“இது எப்படி இருக்கு தெரியுமா . இந்த MLA hostel லே வற்ரவனும் போறவுனும் ஒரு பைசா ரெண்டு பைசா ந்னு செல்லவே செல்லாத பைசா கணக்கில் சோறு போட்டு கோடி கோடியா நம்ம டாக்ஸ் பணத்தை ஏலம் வுடறான் பாரு…..அதேதான்…..இளிச்சவாய்ங்க நாம….எவனையும் கேட்கமாட்டோம், எதையும் எதிர்க்கமாட்டோம்……”

டிபன் பாக்ஸ் காலியாகி வயறு ரொம்பிய உடன் சுற்றி நடப்பது கொஞ்சம் புரிவது போல் தோன்றியது . ரொம்ப சரி , யாரோ பணம் அதை யார் தருமம் பண்ணுவது ?

குறை ஒன்றும் இல்லை …..போன் பாட்டை சினுங்கிற்று.

“ஹலோ…..”

“அம்மா, நாதாம்மா லச்சுமி பேசரேம்மா ….பயலுக்கு வூட்டுல ரொம்ப சீக்கா இருக்காப்புல….சாயமா வரமுடியாதும்மா………..காலேல உருட்டி வெச்ச சப்பாத்தி மாவு இருக்கு பிரிஜ் உள்ளார , நாளேக்கி வாரேன்…..வந்து பண்ணுதேன்….”

அவளுக்குத்தலையை லேசாக வலிக்க ஆரம்பித்தது. காலையில் எழுந்தபோதே ஆரம்பித்த வலி முணுக் முணுக்கென்று ஆட்டம் போட்டுக்கொண்டிருந்தது.

“ஆஃபீஸ் முடிஞ்சு ஓடிடாதீங்க! நாம மீட்டிங் போடறோம்”

ரத்னா மூன்று இல்லை இன்னும் மிக அதிக தடவை சொல்லிவிட்டாள், தப்பிக்க முடியாது. இப்போது போனவுடன் வீட்டு வேலை வேறு… எல்லா நாட்களும் இப்படி க்ரைஸிஸ் மாநேஜ்மெண்ட்டாகப் போவதேன்..?

மீட்டிங் முடிவில்லாமல் நீண்டது. கடைசியாக ஒரு புள்ளியில் வந்து நின்றபோது – இந்தக்குறைந்த கட்டண உணவு விடுதி வேண்டாம் என்று பெண்கள் எல்லோரும் ஒற்றுமையாகக் குரல் கொடுக்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.

தலை வலி குடித்த மூன்று டம்ப்ளர் காப்பியில் குறைந்தது போல பட்டது. பிரமைதான். ஆனாலும் அந்த நினைப்பு பிடித்திருந்தது. அந்தத் தெம்பில் – வீட்டுக்குப்போகும் வழியில் லட்சுமியின் வீட்டிற்கு போனால் என்ன….?

“வாம்மா வா, நீ இன்னாத்துக்கு இம்மாம் தொலைவு வரே? நாதான் சொன்னேன் இல்ல, நாளைக்கி வந்துற்ரேன்னு! வா வா உக்காரு!

“லட்சுமி! நா ஒன்னப்பாக்க வரலை. ராஜா தம்பிக்கு உடம்பு எப்படி இருக்கு? இந்த ஹார்லிக்ஸ் பிஸ்கெட் எல்லாம் அவனுக்குதான். என்ன உள்ளே இருக்கானா?

ராஜா தரையில் கிழிந்த பாயில் அதைவிடக்கிழிந்த நிலையில் படுத்திருந்தான். பன்னிரெண்டு வயது இருக்கக்கூடும், ஆனால் எட்டு பத்து வயதுக்கான வளர்ச்சிதான். உடல் முழுவது சிவப்புத்தழும்புகள். காலியில் சிவப்பாகப்போடப்பட்டிருந்த நேற்றைய கோட்டிலிருந்து சீழ் வடிந்து கொண்டிருந்தது.

“லட்சுமி என்ன இது? யார் அடிச்சிருக்காங்க, நீயா, உம் புருஷனா? போலிஸ்ல சொன்னா என்ன கதி தெரியுமா? எப்படி இந்தச்சின்ன புள்ளைய அடிக்க மனசு வந்தது? இதை ரொம்ப நாளா பண்ணுர போல……எவ்வளவு தழும்பு….”

“அய்யோ நாங்க இல்லீங்க! பயன் வேல செய்யர இடத்துல எசமான் அடிச்சுப்பிட்டாருங்க”

“முதல்ல ஒண்ணு சொல்லு, படிக்க அனுப்பாம வேலைக்கு ஏன் அனுப்புற? எங்க வேல செய்யறான்? இப்படி கண் மண் தெரியாம அடிச்சிருக்காங்க? அவனச்சொல்லி பிரயோஜனம் இல்ல, உன்னயும் உன் புருஷனையும் உள்ள தள்ளணும்? என்ன பாட்டிலுக்கு பையன் உழைப்பா?”

“அய்யோ தாயி இம்மாம் நாள் என்னப்பாத்திருக்க இப்படிப்பேசுத? எல்லாம் வயத்துப்பசிதாம்மா!”

“வேண்டாம் லட்சுமி, பொய் பேசாத! நீ நாலு வீட்ல வேல செய்யற, என்னைப்போல அவங்களும் உனக்கு சோறு போடறாங்க, அப்புறம்?”

“நான் என் வயத்துப்பசியச்சொல்லல தாயி, நீ கொடுக்குற, எனக்கு சரியப்பூடும். மீதம் எம்புருசனுக்கு கொஞ்சம் கெடக்கிது. இந்த ராசாபயலும் சேத்து மூணு பசங்க, இவங்க பசிக்கி நா என்ன கொடுக்கறது? உங்க வீட்டு பழைய சோறு கொடுத்தா ரெண்டாம் நாளே-ஆயா இட்லி தோசன்னு கேட்டு நச்சரிக்கராங்க, பழைய சோறும் நா வூடு வரங்காட்டியும் பாழா பூடுது…ராசாபயலுக்கும் படிப்புல நாட்டம் இல்ல. நம்ம எம் எல் ஏவோட மச்சன் வூட்லதான் வேலக்கி போறான். “

அந்த எம் எல் ஏ குழந்தைத்தொழிலாளிக்கு எதிராகப்பேசி ஓட்டு வாங்கியது நினைவுக்கு வந்தது.

“அப்ப அவனப்பிடிச்சு உள்ள வெக்கலாம்..”

“அய்யோ வேண்டாம்மா, அவனுக வெளியே வந்துருவாக. மூணு புள்ளைங்க பசில செத்துரும்.இந்த ராஜாப்பய தினத்துக்கும் எசமான் கூட, எதோ விடுதி இருக்காமுல்ல, அங்க வவுரார சாப்பிடறன், தம்பிப் பசங்களுக்கும் பொட்டலம் கட்டி எடுத்தார்ரான்.”

வலியை மறந்து படுத்திருந்த ராஜா அழுக்கேறிய கைகளால் காலில் வழிந்த சீழைத்துடைத்தபடி சிரித்தான்.

“நாந்தாம்மா தம்பிங்களுக்கு சாப்படு கட்டியார்ரேன் எசமான் ஒண்ணும் சொல்ல மாட்டாங்க, இன்னா குடிச்சுப்போட்ட அடிப்பாக. அது சரியாப்பூடும், கட்டுபோட்டாச்சுல்ல.கட்சி ஆபீஸ் வேல வாங்கி தாரதா சொல்லி இருக்காங்க இல்ல…….”

படித்தது நினைவுக்கு வந்தது.

தர்மம் தரும் வரை அந்தப்பணம் உன்னுடையது. அதற்குப்பிறகு அது போகும் பாதையை நீ கவனிக்கலாகாது. ஏனென்றால் அது உன்னுடையது இல்லை. தன்னை அறியாமலே கட்டப்பட்ட வரி வட்டி கிஸ்தி இப்படி எங்கேயோ, யாருக்கோ தானமாகச்சென்று யாரோ வெகு சிலரின் வயிற்றுப்பசியை அடக்கும் என்றால் இன்னும் நிறைய எம் எல் ஏ ஹாஸ்டல் திறக்கப்படட்டுமே, இன்னும் பல வாடிய சிலருக்குக் கொடுத்துப் புண்ணியம் சேர்க்கலாம் போல.

நாளை ரத்னாவிடம் பேசி இதைப்புரிய வைக்க வேண்டும்.ஆனாலும் சிவப்புத்தழும்புகள் இப்போது அவள் மனதில் விழுந்தது போல் வலித்தது.பசி என்ற ஓரு சொல்லுக்கு வழங்கப்படும் நியாயங்கள் வேறு. அதற்க்கான தர்மங்களும் வேறு.

தலை வலி இப்பொது கொஞ்சம் அதிகமாக முணுக்கிட்டது.

- இந்தக் கதை அகல் எனும் மின்னிதழ் நடத்திய சிறுகதை போட்டியில் இரண்டாவது பரிசைப் பெற்றது 

தொடர்புடைய சிறுகதைகள்
காத்துக்கொண்டிருந்தாள் சில பல மணி நேரங்களாக. காலையில் ஒளிப்பிழம்பாக இருந்த சூரியன் கமலா ஆரஞ்சுப்பழம் போல மெதுவாக கீழ் நோக்கி நகர்ந்துகொண்டிருந்தது. இன்னும் கத்திரி ஆரம்பமாகவில்லை.அதற்குள் என்ன கச கசப்பு. காலையில் கஞ்சி முடமுடப்போடு விறைப்பாக இருந்த புடவை வியர்வையில் நனைந்து சுருங்கி ...
மேலும் கதையை படிக்க...
நெல்லில் எழுதும் பெயர் நிலைத்திருக்கிறதோ என்னவோ ஆனால் சின்ன வயதில் வைக்கும் பெட் நேம் நிலைத்து விடுகின்றன, சாகிற வரை சுண்டு என்ற சுந்தரவடிவேலு, டக்லூ என்கிற .டக்லஸ், மண்டூ என்கிற மண்டோதரி……. இப்படி நினைவில் ஆணி அடிக்கப்படுகிறது. தி ஹிண்டுவில் ...
மேலும் கதையை படிக்க...
இன்று சாப்பாட்டுக் கூட்டம் அலை மோத ஆரம்பித்தது. ”எல்லோரும் ஒரே லைன்லே வாங்க” என்ற குரல் மாற்றி மாற்றி ஒலித்தது.மூலையில் ஒரு கை வண்டியில் அமர்திருந்த அவன் இருப்பு கொள்ளாமல் தவித்தான். ”மூதேவி….. எப்போ வந்து சேருமோ…. பாத்திரம் காலியாகி வெறும் பருக்கை கூட கிடைக்காது ...
மேலும் கதையை படிக்க...
அது அந்த வீட்டின் பிரதான நபர். யார் யாரைப்பற்றி பேசப்பட்டாலும் விடிந்ததும் ஒரு முறை , பின் தூங்கப்போகும் முன் ஒரு முறை கட்டாயம் பேசப்பட்டுவிடும். அந்த வீட்டின் நாயகன் – மாமரம். இல்லை, நாயகன் என்பது பிழையோ..பூத்துக்குலுங்கும் அந்த சில ...
மேலும் கதையை படிக்க...
” சம்பத்து இங்கே வா!” சீஃப் எடிட்டர் கூப்பிட்டார். ”என்ன சார் புது அசைன்மெண்ட்டா? நடிகையா, பண விவகாரமா, இல்ல பக்தியா?” இன்வெஸ்டிகேடிவ் ஜர்னலிஸ்டாக ஆகப்போவதாய் மார் தட்டிக்கிளம்பின சம்பத் இப்போது கைகட்டி கொடுக்கிற வேலையச்செய்து கொண்டிருந்தான். நடிகையின் நாயைப்பேட்டி எடுத்தாலும் மனசுக்குள் என்னமோ கறுப்பு ...
மேலும் கதையை படிக்க...
முடிவு எடுத்த அந்த நொடி
குண்டு ஒண்ணு வெச்சிருக்கேன்
அவன் பார்த்துப்பான்
அடடா மாமரத்துகதையே…..உன்னை இன்னும் நான் மறக்கலியே…
வேதம் புதிது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)