குழப்பம்

 

அப்படியே பைத்தியம் பிடித்துவிடும் போல இருக்கிறது. ஒருவேளை ஏற்கனவே பிடித்திருக்குமோ? ஆனால் யாரும் எதையும் சொல்லக் காணோமே! தலையைத் திருப்பிப் பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்த தரணி சாரைப் பார்த்தால் அவர் எப்போதும் போலப் புன்னகைத்துவிட்டு ‘என்ன’ என்பதுபோல் பார்த்தார்.

‘ஒன்றுமில்லை’ எனத் தலையசைத்துவிட்டுத் திரும்பி வேலையைத் தொடர்ந்தேன்.

கொஞ்ச நாளாகவே இப்படித்தான் இருக்கிறது. அலுவலகத்தில் ஒரே குழப்பம். ஒரே இரைச்சல். ஒருமுறை அலுவலகத்திலிருந்தவாறே அம்மாவைத் தொலைபேசியில் அழைத்துப் பேசிக்கொண்டிருந்தபோது அவள் கேட்டது நினைவுக்கு வந்தது.

“என்னடி பேபி இது பேங்க் தானா இல்ல எதுவும் சந்தகடையா? இந்தச் சத்தத்துக்குள்ள இருந்து வேலை பார்த்தா மைண்டுக்கு எதாது ஆகிறாதா?”

மறுபடியும் எனது கணினி முழுக்கத் தேடினாலும் நான் தேடிய கோப்பு கிடைக்கவே மாட்டேன் என்கிறது.

“இந்த ட்ரைவில் இந்த ஃபோல்டரில் இந்தப் பெயரில் தான் வச்சிருந்தேன் சார்” என ஆறாவது தடவையாக மேனேஜரிடம் சொன்னேன்.

“என்னம்மா இது? இங்கதான் வெச்சேன்னா இப்ப எங்க போச்சு? சரி பரவாயில்ல. இன்னொரு தடவ நான் டைப் பண்ணிக்கிறேன், பத்து நிமிஷம் ஆகுமா?” கோபமாகத் தொடங்கி மாறிக்கொண்டிருந்த என் முகப்பாவனையைப் பார்த்தவர் சமாதானப்படுத்துவது போல் சொல்லிமுடித்தார்.

எனக்குக் குழப்பம் அதிகமாகிவிட்டது. இந்த குளிரூட்டப்பட்ட அறையிலும் வேர்த்துவிட்ட முகத்தை அவ்வப்போது துப்பட்டாவால் துடைத்துக் கொண்டேயிருக்கிறேன். அந்தப் பக்கம் தரணி சார் மறுபடியும் எதற்காகவோ சத்தமாகச் சிரித்துக் கொண்டிருக்கிறார். என் வேலை தொடர்கிறது..

“மேனேஜர் சார், இந்த க்யூவை ஆதரைஸ் செய்து சிஃப் நம்பர் சொல்றீங்களா?”

“ம்ம்.. எழுதிக்கோ.. எயிட் ஒன் த்ரீ செவன் … …”

அவர் சொல்லியதைக் கடகடவென ஃபைலில் எழுதிவிட்டுக் கணினியில் செக் செய்து சரியா என்று பார்த்தால் நான் நினைத்ததைப் போலவே தவறாக இருந்தது! இவர் எப்பவுமே இப்படித்தான். ஒரு தடவை இரண்டு தடவையானால் பரவாயில்லை. எப்பொழுது கேட்டாலும் எந்த எண்ணைச் சொன்னாலும் பிழையாயிருக்கிறது. இது எப்படிச் சாத்தியம்? நேற்று கிட்டதட்ட ஒரு பத்து வாடிக்கையாளர்களின் சிஃப் எண்களை உருவாக்கியிருப்பேன். அவற்றுள் நான்கு எண்களைத் தவறாகவே சொன்னார். இரண்டை நான் நேரடியாகத் திரையைப் பார்த்துச் சரியாகக் குறித்துக்கொண்டேன். மீதமிருந்த நான்கைந்து சிஃப் எண்களையும் பதினொன்று இலக்கங்களாக இல்லாமல் பத்து இலக்க எண்களாகவே சொல்லியிருந்தார். வாய்ப்பேயில்லை. எங்கோ தப்பு நடக்கிறது. அது எங்கே?

ஒருவேளை என் செவித்திறனில் கோளாறோ? அவர் கூறுவதை நான் சரியாகக் கேட்டுக் கொள்வது இல்லையோ? இல்லை காது ஒழுங்காகக் கேட்டாலும் மனது வேறு ஒரு எண்ணை உள்வாங்கிக்கொள்கிறதோ? இல்லையென்றால் காதும் கேட்டு மனதும் சரியாகப் புரிந்துகொண்டு எழுதுகையில் கை வேறு ஒரு எண்ணைக் குறித்துவிடுகிறதோ? என்ன தான் நடக்கிறது..! எனக்குத் தலையே வெடித்துவிடும் போல இருக்கிறது.

மறுபடியும் வழக்கம்போல் கஸ்டமரின் பெயரை வைத்தும் பான் நம்பர் போன்ற இன்னும் சில அடையாளங்களை வைத்தும் கணினியில் தேடிப்பார்த்தபோது சரியான எண் கிடைத்தது. ‘மூன்று’ என்ற எண்ணை ‘எட்டு’ எனச் சொல்லியிருக்கிறார். ஒரு வேளை அவருக்குப் பார்வைக் கோளாறாக இருக்குமோ?

“சா…ர்”

“என்னம்மா?”

“உங்களுக்குக் கண்ணுல பவர் இருக்கா என்ன?”

“இல்லையே.. இதுநாள் வரை அப்படி ஒன்னும் இல்ல. ஏன் கேக்குற?”

கேட்டிருக்கவே கூடாதோ என்று தோன்றியது. “ஆமா, எனக்கு லேசா பவர் இருக்கு.. கண்ணாடி போடனும்” இப்படி ஏதாவது சொல்லுவாரோ என எதிர்பார்த்தது நடக்கவில்லை. எனக்கு மறுபடியும் மண்டை காய்கிறது.

“சும்மாதான் சார்.. எனக்குப் பவர் இருக்கு.. கான்டாக்ட் லென்ஸ் வாங்கப் போறேன். அதான் உங்ககிட்ட கேக்கலாமேனு”

“அப்படியா? சரி சரி.. என்னோட எம்.ஆர்.ஐ. ஸ்கேன் ரிப்போர்ட் வந்திருச்சு பார்க்குறியா?”

‘நாம எம்.பி.பி.எஸ். படிக்காத குறை ஒன்னுதான்’ என மனதில் தோன்ற ரிப்போர்ட்டை வாங்கிப் படித்தால் லெஃப்ட் தலாமஸ், செரிபரல் இன்ஃபார்க்ட், லெசன் அது இது என்று என்னவெல்லாமோ எழுதப்பட்டிருக்கிறது. உடனே அறிந்துகொள்ளும் அவசரத்தில் அந்த ரிப்போர்ட்டைக் கையில் எடுத்துக்கொண்டு டாக்டர் மாமாவிடம் பேசப்போவதாக மேனஜரிடம் சொல்லிக்கொண்டு ஓய்வறைக்குப் போனேன். வேலையாயிருந்த மாமாவைத் தொலைபேசியில் பிடித்து, சிறிது நேரத்தை ஒதுக்கச்சொல்லிக்கேட்டுப் படபடவெனப் படித்துக் காட்டினேன்.

“…அப்படினா அவரது மூளையோட லெஃப்ட் தலாமஸ் பகுதியில சின்ன சின்ன கட்டிகள் மாதிரி இருக்கலாம். அந்தக் கட்டிகள் காற்றுப் பாக்கெட்டுகளாகவோ நீர்க்கட்டிகளாகவோ கூட இருக்கலாம். அது எவ்வளவு இருக்கு எங்க இருக்குனு ரிப்போர்ட் பார்த்தா தான் சொல்லமுடியும் பேபி..”

“சரி மாமா.. திடீர்னு ஒரு நாள் அவர் ஆபீசுக்கு வரல. போன் பண்ணிக்கேட்டப்போ அவரை ஆசுபத்திரியில சேர்த்திருக்கறதாச் சொன்னாங்க. என்னனு கேட்டா பிபி, சுகர் எல்லாம் கன்னாபின்னானு ஏறியிருக்குனு டாக்டர்ஸ் சொல்லிட்டாங்களாம். சி.டி. ஸ்கேன் எல்லாம் எடுத்துப் பார்த்தாங்க. ட்ரீட்மெண்ட்டுக்குப் பிறகு கொஞ்ச நாள் ரெஸ்ட்ல இருந்தார். அப்புறம் ஒரு ஒரு வாரம் கழிச்சு இன்னைக்கு மத்யானம் போய் இந்த எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுத்துட்டு வந்தார். சாயங்காலம் டாக்டர்ட்ட போனுமாம்.. ஒன்னும் பிரச்சனை இல்லல்ல?”

“நார்மலாத் தான் இருக்கும்”

“சொல்ல மறந்துட்டேன் மாமா.. அவருக்கு வலது கை மணிக்கட்டுக்குக் கீழ வேலை செய்யல. கால்பாதம் கூட மரத்துப் போனமாரி இருக்காம். வண்டி ஓட்டுறது இல்ல.. ஆட்டோ ரிக்ஷால தான் ஆபீசுக்கு வந்துட்டுப் போறார்”

“எத்தனை வயசாகுது?”

“இன்னும் ரெண்டு வருஷத்துல ரிட்டயர் ஆகப்போறார் மாமா”

“ரொம்ப ஹைப்பராவே இருப்பாரா?”

“ஆமா..”

“தான் சொல்றதுதான் பெருசுங்கற மாதிரி பேசுவாரா?

“ம்”

“கஸ்டமர்ஸ்கிட்ட சின்ன சின்ன விஷயத்துக்கு எல்லாம் கத்துவாரா?”

“ம்”

“ரொம்ப ரூல்ஸ் பேசுவாரா?”

“ம்”

“என் கெஸ் கரெக்ட்னா, ரிப்போர்ட்ல இருக்குறத வெச்சுப் பார்க்கும்போது அந்த கட்டிகள் இவரோட நியூரான்ஸ லைட்டா அரிச்சிட்டு இருக்கிறதாத் தோனுது. ப்ரெயின் ரொம்ப சென்சிட்டிவ் பார்ட்.. அதுல ஒரு சின்ன டிஸ்டர்பன்ஸ் இருந்தா கூட பெருசா தன்னோட விளைவுகளைக் காட்டும்.. அது என்ன என்னனு அவர் கூட இருந்து பேசிப் பழகிப்பார்த்தா தான் கண்டுபிடிக்கலாம். வேற எதாவது அப்னார்மலிடீஸ் தெரியுதா?”

“…”

“பேபி..”

“…”

“ஹலோ!”

“…”

அமைதியாக இணைப்பைத் துண்டித்துவிட்டு அலுவக அறைக்குள் வந்தேன். சீரியஸாக வேலை செய்துகொண்டிருந்த தரணி சாரிடம் கொஞ்சம் வம்பு அளந்துவிட்டு அனிதா மேடத்தின் ஸ்னாக்ஸ் டப்பாவில் கைவிட்டு கொஞ்சம் உப்புக்கடலையை எடுத்துக் கொறித்தவாறே இருக்கைக்கு வந்துவிட்டேன். ஆர்வம் கொப்பளிக்கும் முகத்தை வைத்தவாறு என்னை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார் மேனேஜர்.

“ரிப்போர்ட்ல என்னவாம்?”

“எந்த ரிப்போர்ட் சார்? ஓ இதுவா? ஒன்னும் பிரச்சனையில்ல எல்லாமே நார்மல் தான்னு சொன்னார்”

புன்னகைத்தவாறே இருக்கையில் அமர்ந்த நான் ரிப்போர்ட்டை அவரிடம் கொடுத்துவிட்டு வேலையைத் தொடங்கினேன். குழப்ப ரேகைகள் முற்றிலுமாக விலகி அப்போது கவலை ரேகைகள் என் மனதை அரிக்கத் தொடங்கியிருந்தன. 

தொடர்புடைய சிறுகதைகள்
"கீர்த்தி, என்னடி அமைதியாக இருக்க? உனக்கு இந்தப் புடவை ஓ.கே. தான? அமுதாவுக்கு இந்தப் பாசிப்பச்சைக் கலர் நல்ல சூட் ஆகும்னு நினைக்கிறேன்" கேட்டுக்கொண்டே வந்த வித்யாவையும் அவள் கையில் இருந்த புடவையையும் பார்த்தாள் கீர்த்தி. "நல்லா இருக்கு" அமைதியாக ஒரு புன்னகை. "ஏய்.. ...
மேலும் கதையை படிக்க...
“ஹலோ” “எல ராசு, எங்க இருக்க?” “வீட்லதாம்ல சொல்லு” “நம்ம ஜாவா எங்கெருக்கு?” “எது, ப்ரீடுக்கு வாங்கிக் குடுத்தியே ஒரு கரும்வளவி, அதுவா?” “ம்” “நேத்து தான் செத்துப்போச்சி. ஒரு வாரமா சீக்கு” “என்னது?!” “போன மாசமே ரொம்ப வீக்காகி சரியா சாப்பிடல. தலைய தொங்கபோட்டுக்கிட்டே கிடந்துச்சு. கொஞ்சம் சின்ன வெங்காயம் உரிச்சி ...
மேலும் கதையை படிக்க...
எச்சரிக்கை: உங்களுக்கு ஐக்மோபோபியா என்றால் இந்தக் கதையைப் படிக்காதீர்கள். சில இடங்களில் ரத்தம் இருக்கலாம்! “இதுக்கு முன்னாடி எப்பவாவது இந்த மாதிரி மயக்கம் வந்திருக்கா?” டார்ச் லைட் ராதாவின் கண்களைக் கூசச் செய்ய, ‘இல்லை’ என்பது போல அவள் லேசாகத் தலையை அசைக்க முரளி “இது ...
மேலும் கதையை படிக்க...
மழை சோவென்று பெய்து கொண்டிருந்தது. அடித்த காற்றில் அது வரை அங்கு உலர்ந்து கிடந்த சருகுகள் எல்லாம் சுற்றிப் பறந்தன. சாலையில் சென்ற பெண்களின் உடைகளை எல்லாம் காற்று களவாடப் பார்த்தது. சிக்கென்று பிடித்துக் கொண்டு சென்றனர் அனைவரும். மறு கையில் ...
மேலும் கதையை படிக்க...
ஆளுக்கொரு பொருளை வைத்துக்கொண்டு ஐந்துபேரும் சேர்ந்து அந்தக் குழியைத் தோண்டத் துவங்கியிருந்தோம். “அட்வென்ச்சர் வேணுங்கிறதுக்காக இதெல்லாம் ஓவர் திவ்யா” லலிதா (எ) லல்லி நூறாவது முறையாக அந்த டயலாகை சொல்லி முடித்தாள். அந்தக் குளிர் பனியிலும் அவளது முகம் வேர்த்து வெளுத்திருந்தது. “உங்களுக்கெல்லாம் மனசாட்சி இருக்கா? ...
மேலும் கதையை படிக்க...
ஒரு மந்தமான மதிய வேளை. உண்ட களைப்பில் வீட்டில் அனைவரும் உறங்கிக் கொண்டிருந்தனர். அது என்னவோ தெரியவில்லை எல்லோரும் விழித்திருக்கும் நேரங்களில் உறங்குவதற்கும் உறங்கும் நேரங்களில் விழித்திருந்து வித்தியாசப்படுவதற்கும் மிகவும் பிடித்திருந்தது. ஒரு வழியாக முழுவாண்டுத் தேர்வு முடிந்து விடுமுறையும் தொடங்கியிருந்தது. ...
மேலும் கதையை படிக்க...
“என்னங்க.. ஸ்கூல் வேன் வந்திருச்சா?” பதற்றத்துடன் கேட்டுக்கொண்டே சமையற்கட்டிலிருந்து விரைந்து வந்தவள் பதிலுக்குக் காத்திராமல் வாசலுக்கு ஓடினாள். அப்போதைய அசதியைப் போக்குவதற்கு எனக்கு ஒரு ஸ்ட்ராங் காபி தேவையாக இருந்தது. அட! மேஜையின் மீது வைக்கப்பட்டிருந்த தம்ளரை இப்போது தான் பார்க்கிறேன்! ...
மேலும் கதையை படிக்க...
நான் உங்களுக்குப் புரியாத பாஷை ஒன்றில் பேசப்போகிறேன். அல்லது புரிந்த பாஷையில் புரியாத வார்த்தைகளை இழைத்துப் பேசி என் மனப்பாரத்தைச் சற்று இறக்கிவைக்கப் போகிறேன். உங்களுக்குப் புரியப்போவதில்லை என்று இப்போது நான் சொன்னதை அப்படியே எடுத்துக்கொள்ள வேண்டாம். புரிந்துகொண்டால் மட்டும் எனக்காக ...
மேலும் கதையை படிக்க...
விலை
ஒரு நாயகன்
முதலிரவுக் கதை
பேருந்தில் நீ எனக்கு
அவள் பெயர் பூவெழினி
எல்லைக்கு அப்பால்
நாமிருவர்
முகமூடி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)