குளத்தில் முதலைகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: April 14, 2019
பார்வையிட்டோர்: 13,304 
 

பகல் பொழுது போனால் இரவு. இருட்டு நிறைந்த கால பொழுதுகள். அதில் நல்ல இரவு கெட்ட இரவு என்பது எல்லாம் கிடையாது. அதை அனுபவிக்கும் மனிதரிடம் தான் இருக்கு. இந்த கதையில் வரும் கதாபாத்திரங்களுக்கு நடக்க போகும் சம்பவங்கள்; அது நல்ல இரவா அல்லது கெட்ட இரவா என முடிவு செய்ய போகிறது.

நடு இரவை நோக்கி நகர்ந்துக் கொண்டிருக்கிறது. சாலை ஓரத்தில் தெரு விளக்கின் கீழ் இரு மோட்டார் சைக்கிள்கள் நின்றுக் கொண்டிருக்கிறது. அந்த மோட்டார் சைக்கிளில் 30 வயது எட்டி இருக்கும் இரு முரட்டு ஆசாமிகள் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் பேச்சில் எந்த மரியாதையைக்குரிய வார்த்தையும், ஒழுக்கம் நிறைந்த மனிதர்களாகவும் காட்டவில்லை. மிக மோசமான ஒரு தலைமுறை வளர்ந்துக் கொண்டு இருக்கிறது என்பது அவர்கள் பேசும் மொழியும் செய்கைகளும் மிக அப்பட்டமாக படம் பிடித்து காட்டுகிறது.

அந்த இரண்டு பேரில், ஒருவனின் போன் அலறுகிறது. அலறுகிறது என்றால்; இவர்களை அழைக்கும் நபர் அலறுகிறார். போனை எடுக்கலாமா வேண்டாமா என யோசித்துக் கொண்டே இருக்கும் போது, போன் அலறுவது நின்று விடுகிறது. இருவரும் தங்களை கலவரத்தோடு பார்த்துக் கொள்கிறார்கள். மீண்டும் போனும்; போன் அடிப்பவரும் அலறுகிறார்கள். வேறு வழி இல்லை. பதில் சொல்லித்தான் ஆக வேண்டும். போனை எடுக்கிறான். போனை எடுத்ததும் நல்ல நல்ல செந்தமிழ் வார்த்தைகளால் அலறுகிறார். தமிழுக்கு அமுதென்று பேர் என்பதை நன்கு அறிந்த மேதை அவர்.

’அவன் கிடைசானா இல்லையா’

’இல்லை அண்ண’

’காசு கட்டி 15 நாள் ஆச்சு. ஆளே காணோம். நீங்கள் எல்லாம் என்ன வட்டி கொலேக்டர்? ஒருத்தனை பதினைந்து நாளா கண்டு பிடிக்க முடியலைனா போய் சாவுங்கடா. இன்னைக்கு ராத்திரிக்குள்ள அவன் எங்க இருந்தாலும் கண்டுபிடிச்சு தூக்கிட்டு வர்றீங்க. இல்ல செருப்பால அடிப்பேன். நல்ல திங்கறதுக்கு தாண்டா நீங்க எல்லாம் லாயக்கு. சோத்துமாடுங்க. உங்களை நீங்க கேங்ஸ்டர்ஸ்-ன்னு வெளியில் சொல்லிக்காதீங்க.’

போன் கட் ஆகிறது.

‘கத்துகிறார் மச்சி’

‘அவன் மட்டும் கையில் கிடைத்தான், செத்தாண்டா அவன். மூஞ்சி மொகறை எல்லாம் உடைச்சு புடுவேன். வட்டிக்கு காசு வாங்கும் போது கெஞ்ச வேண்டியது. இப்ப நாம அலைய வேண்டியதா இருக்கு. பதினைந்து நாளா வீட்டு பக்கமும் வரவில்லை. வீட்டிலும் யாரும் இல்லை.’

‘அவனை பேசி விட்டானே மணி அவனை புடிப்போம்.’

‘மணியை எங்கே போய் தேடுவது.’

‘அந்த கேம் கடையில் தான் இருப்பான். மணியை புடிச்சு உதைக்கிற உதையிலே காசு வாங்குன குமார் வந்து சேரணும்’

இருவரும் மோட்டார் சைக்கிளை எடுத்து கொண்டு கிளம்புகிறார்கள்.

வட்டி வசூலிக்கும் அந்த இரு ஆபிசர்களும் நீண்ட கடை வரிசையில் நடுவில் இருக்கும் ஒரு இரு மாடி கடையின் முன் மோட்டார் சைக்கிளை நிறுத்துகிறார்கள். கடையின் முகப்பில் ஒரு மாமாக் ஸ்டால் மெலிதான வெளிச்சத்தில் இயங்குகிறது. OPEN என்கிற ஆங்கில எழுத்து LED விளக்கின் பலகையில் ஓடியும், நகர்ந்தும், நடந்தும் பல கோணங்களில் வட்டம் அடித்துக் கொண்டிருந்தது. அந்த மாமாக் கடையின் பின்புறம் முழுவதும் அடைக்கப்பட்டு, ஒரு சிறு கதவு மட்டும் இரும்பால் செய்யப்பட்டிருந்தது.

அந்த கதவை திறந்து ஆபிசர்ஸ் இருவரும் உள்ளே நுழைகிறார்கள். உள்ளே வரிசையாக பல கண்ணிகள் இருந்தது. பர்மா, இந்தோனேசியா பணியாளர்கள் கேம் கடை ஊழியர்களாக வேலை செய்துக் கொண்டிருந்தார்கள். டிங் டோங், பீம் பீம், டவுங் டவுங் என பல வித சத்தங்கள் அந்த கணிணியில் வந்து கொண்டிருந்தது. அந்த கடை முழுவதும் நாற்பது கணிணிகளுக்கு மேல் இருக்கும். ஆனால் ஒரு கணிணி கூட கோசமாக இல்லை. எல்லோரும் மிக தீவிரமாக கணிணியில் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அந்த கடை முழுவதும் சிகரெட்டின் புகை வேறு சூழ்ந்திருந்தது. மிக மெல்லிய வெளிச்சம் கடை முழுவதும் பரவியிருந்தது. கேம் கடை என்பது கள்ள சூதாட்ட மையம் அல்லது மிக எளிமையாக பணம் போட்டு பணம் எடுக்கும் எந்திரம் என்றும் சொல்லலாம். பத்து போட்டு நூறு எடுக்கலாம். ஆயிரம் போட்டு நாசமாய் போகலாம். ஆக மொத்தம் சூதாட்ட மையம்.

ஆபிசர்ஸ் இருவரும் அந்த மெல்லிய வெளிச்சத்தில் மணி என்பவனை தேடிக் கொண்டிருந்தார்கள். ஒரு மூலையில் தனியாக மணி என்பவன் கண்ணியில் விளையாடிக் கொண்டிருந்தான். அவன் அருகில் போனார்கள். ஓங்கி தலையில் ஒரு தட்டு தட்டினார்கள். படார் என மணி கண்ணியின் திரையில் மோதிக் கொண்டான். தடார் மடார் என சத்தம் கேட்கவும் கடையின் மொத்த கண்களும் இந்த மூவரையும் பார்த்தது. அதற்குள் சீனன் ஒருவன் வேகமாக வந்து, மூவரையும் கடையை விட்டு வெளியே போய் சண்டை போடும் படி கத்தினான்.

மணி மிகவும் பயந்து போய் இருந்தான். தலையில் ஓங்கி தட்டியத்தில் வெட்கத்தாலும், வலியிலும் கண்கள் கலங்கி, மனதுகுள் அழ ஆரம்பித்துவிட்டான். இன்று பெருசா ஏதோ நடக்க போகிறது என்று அவன் உள்மனது சொல்லியது. ஆபிசர்ஸில் ஒருவன் மணியின் இடது கையை பிடித்து இறுக்கிக் கொண்டே, வெளியே இழுத்து போக முயற்சியித்தான். இன்னொரு ஆபிசர் மணியின் சிலுவார் பாக்கெட்டில் கையை விட்டு கைபேசி, மணிபர்ஸ், டாக்சி சாவி எஞ்சியிருந்த சில பத்து வெள்ளி நோட்டுகள் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டான். வேறு வழி ஏதுவும் தோன்றாதவனாய் மணி அவர்களுடன் கடையை விட்டு வெளியே போனான். மணிக்கு அழுகை அழுகயாய் வந்தது.

மணிக்கு வயது 45 இருக்கும். டாக்சி ஓட்டுனர். பலராலும் உறிஞ்சி பிழியப்படும் மிக பாவமான தொழில் செய்பவர்கள் தான் இந்த டாக்சி ஓட்டுனர்கள். டாக்சி ஓட்டுனர்களின் கதையை சொல்ல இந்த ஒரு கதை போதாது. இந்த ஒரு கிரகம் போதாது. அவர்களின் புலம்பல்களை கேட்க ஏழு கடல் ஏழு உலகம் தேவை. மணிக்கு நல்ல திடகாத்திரமான உடம்புத்தான். பாவம் மனம் தான் பிஞ்சி போயிருந்தது.

குமார் என்கிற தன் இன்னொரு டாக்சி ஓட்டும் நண்பனுக்கு வட்டி தவுக்கே ஒருவரிடம் 1000 வெள்ளி வாங்கிக் கொடுத்திருந்தான். டீல் ரொம்ப சிம்பள்தான். ஆயிரம் வெள்ளி கேட்டால், ஸ்டாம்பிங் ஃபீஸ், புரோஸேஸிங் ஃபீஸ் என வெட்டிக் கொண்டு கையில் 800 வெள்ளி கொடுப்பார்கள். நாள் ஒன்றுக்கு 50 வெள்ளி; முப்பது நாட்களில் திருப்பி கட்ட வேண்டும். தொடர்ந்து மூன்று நாட்கள் கட்டவிவில்லை என்றால் வட்டி குட்டி போட்டுவிடும். குமார் பதினைந்து நாட்கள் கட்டவில்லை. இப்போது மணி மாட்டிக் கொண்டான்.

மணியை அவனுடைய டாக்சியின் அருகில் கீழே உட்கார வைத்திருந்தார்கள். முகத்தில் ரெண்டு மூணு அறை விழுந்திருக்கும். முகம் வீங்கி போயிருந்தது. வலி உடம்பில் இல்லை. அவன் மனதில்.

‘உனக்கு ஒரு மணி நேரம் அவகாசம் தருகிறேன். உன் நண்பன் குமார் எங்கிருந்தாலும் இங்கு வர வேண்டும். காசு வாங்கும் போது இருக்கும் அறிவும் ஆர்வமும் அதை திருப்பி கட்டும் போதும் இருக்க வேண்டும்.’ இரு ஆபிசர்ஸில் ஒருவன்.

மணி கெஞ்சுகிறான்.

‘நான் வாங்கின பணத்தை முறையாக திருப்பி கட்டிக் கொண்டுதானே வருகிறேன். என் நண்பன் குமார் வாங்கிய பணத்துக்கு என்னை ஏன் அடிக்கிறீர்கள்?’

‘நீ தானே வாங்கிக் கொடுத்தாய். அப்ப நீதான் பொறுப்பு. இப்போ அவனை இங்கு வர சொல்லு.’

’நான் அவனை பார்த்தே பத்து நாள் ஆச்சு. எனக்கே அவன் எங்கு இருக்கான் என்று தெரியவில்லை.’ என்று சொல்லி முடிப்பதற்குள் இன்னொரு அறை விழுந்தது.

இப்போது அவனை மீறி அழுகை வந்தது. மனைவி குழந்தைகள் முகங்கள் தன் கண் முன்னே வந்து போனது. என்ன ஒரு கேவலமான வாழ்க்கை. இந்த வாழ்க்கை வாழ்வதற்கு பதில் செத்து போகலாம் என்று தோன்றியது.

இவர்களை திருப்பி அடிக்கக்கூடிய பலம் தன் உடம்பில் இருந்தது. ஆனால் மனதில் தைரியம் இல்லை. அவர்களுடன் சண்டை போடலாம். அவர்கள் நாலு குத்து குத்தினால் தன்னால் ரெண்டு குத்தாவது திருப்பி குத்த முடியும். ஆனால் பின் விளைவுகள் மோசமாக இருக்கும். மணியின் வீடு வட்டி ஆபிசர்ஸ்களுக்கு தெரியும். வீட்டில் வந்து பிரச்சனை செய்வார்கள். மனைவி குழந்தைகளை பயமுறுத்துவார்கள். மேலும் சில ஆபிசர்ஸ்களை அழைத்துக் கொண்டு வந்து அடியை கிளப்பலாம். இதை எல்லாம் யோசித்துக் கொண்டே அமைதியாக தரையில் உட்கார்ந்திருந்தான்.

இனி வாழ்கையில் இரண்டு தப்பு செய்ய கூடாது என தீர்க்கமான முடிவு எடுத்தான். ஒன்று சூதாடுவதில்லை. அது எந்த ரூபத்தில் எந்த டெக்னோலோஜியில் இருந்தாலும் சரி, சூது நிச்சயமாய் வேதனையைத்தான் தரும். இரண்டாவது வட்டிக்கு கடன் வாங்குவது கூடாது. அதைவிட முக்கியம் யாருக்கும் வட்டிக்கு கடன் வாங்கி தர உதவி செய்ய கூடாது. உழைப்பவன் உயர்வான். இனி உழைப்பது மட்டும் தான் குறிகோள். டாக்சி ஓட்டி முடித்ததும் நேரே வீட்டுக்கு போய் குடுப்பத்தோடு கலந்துவிடுவது.

இப்போதைக்கு இவர்களிடம் இருந்து எப்படி தப்பிப்பது என யோசித்தான். வேறு வழியே இல்லை. நண்பனை காட்டி கொடுத்துதான் ஆக வேண்டும். கண்களை துடைத்துக் கொண்டான். வட்டி வசூலிக்கும் ஆபிசர்ஸ்களிடம் தன் கைபேசியை கேட்டான். கொடுத்தார்கள். குமார் எண்ணுக்கு டயல் செய்தான். போன் ரிங் ஆனது.

மணியும் குமாரும் போனில் பேசிக் கொண்டார்கள்.

‘குமார்! எங்கே இருக்கிறாய்.?’

‘ஆத்து ஓரத்து அய்யா கோவிலில் இருக்கேன்.’

‘அங்கே என்ன செய்கிறாய்?’

‘மனசு சரியில்லை. சும்மா உட்கார்ந்திருக்கேன்.’

‘சரி நீ அங்கேயே இரு. நான் வரேன்.’

‘வரும் போது சாப்பிட ஏதாவது வங்கி வர முடியுமா? பசிக்குது. காலையில் இருந்து ஒன்னும் சாப்பிடலை. கையில் சுத்தமாக ஒரு காசு இல்லை.’

மணிக்கு மனசு வலித்தது. முறையாக பணம் செலுத்தும் தனக்கே நாலு அறை விழுந்ததே. குமாரை என்ன செய்ய போகிறார்களோ என பயந்தான். அவன் கையில் காசும் இல்லை. பசியில் வேறு இருக்கான். இது போல ஒரு மோசமான இரவை அவன் தன் வாழ்கையில் பார்ததே இல்லை. ஆபிசர்ஸ் இருவரையும் அழைத்துக் கொண்டு ஆத்து ஓரத்து அய்யா கோவிலுக்கு போனான்.

மணி டாக்சி ஓட்டிக் கொண்டு முன்னே போனான். ஆபிசர்ஸ் இருவரும் மோட்டார் சைக்கிளில் மணியின் டாக்சியை பின்தொடர்ந்து போனார்கள். மணி பிரதான சாலையை கடந்து ஒரு சிறு மண் சாலை வழியாக போய் ஆற்றை ஒட்டி இருக்கும் அய்யா கோவிலுக்குள் நுழைந்தான். ஒரே இருட்டு. மணியின் டாக்சியின் முன்புற விளக்கின் வெளிச்சம் அந்த இடத்தை ஓரளவுக்கு தெளிவாக்கியது.

அது ஒரு சிறு அய்யா கோவில். பலகையால் கட்டப்பட்டு இருந்தது. இடுப்பு உயரத்தில் ஒரு அய்யா சிலை. கழுத்தில் பழைய மாலை காய்ந்து போயிருந்தது. விழித்த பார்வை. கையில் பெரிய அருவா கத்தி. பக்கத்தில் ஒரு சூலம். அய்யா பாதம் அருகில் கின்னஸ் ஸ்டவுட் பீர் போத்தல் ஒன்று. எரிந்து முடிந்து போயிருந்த ஊதுபத்திகள். சூட தட்டு. அந்த தட்டில் திருநீறும் சிவப்பு குங்குமமும் இருந்தது. அய்யா சிலைக்கு பின்னாடி சாட்டை கயிறு ஒன்று தொங்கிக் கொண்டிருந்தது.

குமார் கோவிலில் சிமெண்டு தரையில் படுத்து இருந்தான். மணியின் டாக்சியை பார்த்ததும் தெம்பு வந்தவனாய் எழுந்து உட்கார்ந்தான். பசியால் ரொம்பவும் சோர்ந்து போய் இருந்தான். மணி டாக்சியை நிறுத்திவிட்டு இறங்கி நடந்து குமார் நோக்கி வந்தான். டாக்சி விளக்கின் வெளிச்சம் போய் நிலா வெளிச்சம் படர்ந்திருந்தது.

குமார் மணியின் வெறும் கையை பார்த்தான். ஏமாற்றம் அடைந்தான். இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மெதுவாக அந்த அய்யா கோவிலுக்குள் நுழைந்தது. அவர்கள் யார் என்பதை குமார் அறிந்துக் கொண்டான். மணியை பார்த்தான். அந்த பார்வையில் ஆயிரம் கேள்விகள் இருந்தது. குமாருக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. பக்கத்தில் இருக்கும் ஆற்றில் இறங்கி ஓடி மறுமுனையில் ஏறி தப்பித்து ஓடிவிடலாமா…? அல்லது எதிரே இருக்கும் ஒத்தையடி பாதியில் ஓடி விடலாமா? அல்லது பின்புறம் இருக்கும் புதர் காட்டில் புகுந்து ஓடிவிடலாமா? என பலவாறு யோசித்தான்.

சரி. ஆனது ஆகிவிட்டது. நடப்பது நடக்கட்டும். துணிச்சலோடு நின்றான். ஆபிசர்ஸ் இருவரும் தலைகவசத்தை கழட்டி கொண்டே கெட்ட கெட்ட வார்த்தைகளால் குமாரை திட்ட தொடங்கி விட்டார்கள். திட்டியதோடு இல்லாமல் முகத்தில் ரெண்டு குத்தும் ஓங்கி ஒரு உதையும் விட்டார்கள். பட்டினியோடு இருந்த குமாருக்கு ரொம்பவும் வலித்தது. பேச வார்த்தைகள் வரவில்லை. மணியும் அய்யா சிலையும் மௌனமாக நடப்பதை பார்த்துக் கொண்டிருந்தார்கள். ’திருப்பி கட்ட முடியாதுன்னா என்னாத்துக்கு கடன் வாங்க வேண்டும்?’ என பச்சை பச்சையாக கேட்டார்கள்.

ஆபிசர்ஸ் தன் முதலாளிக்கு போன் போட்டார்கள்.

‘அண்ண. குமாரை கண்டு பிடித்து விட்டேன். என்ன செய்யலாம்?’

‘வழக்கம் போல் என்ன செய்வீங்களோ, அதையே செய்து விடுங்கள்.’

போன் கட் ஆனது.

மணியை டாக்சியை எடுத்து கொண்டு கிளம்ப சொன்னார்கள்.

மணி சொன்னான்.

‘நான் ஒரு தடவை அண்ணன் கிட்ட பேசி பார்க்கிறேன். குமாரின் டாக்சியை கம்பனிகாரன் இழுத்துக் கொண்டான். வேலை இல்லாமல் இருக்கான்.’

‘நீ அந்த பணத்தை திருப்பி செலுத்துவதாக ஜாமின் சொல்லு குமாரை விட்டு விடுகிறோம்.’

மணி ரொம்பவும் யோசித்தான். மணி இரண்டு வட்டி தவுக்கேயிடம் வட்டிக்கு கார்டு வாங்கி இருந்தான். ஒரு கார்டு ஐம்பது வெள்ளி. ரெண்டு கார்டு நூறு வெள்ளி. டாக்சி வாடகை அறுபது வெள்ளி. வீட்டுக்கு அன்றாடம் ஐம்பது வெள்ளி கொடுக்க வேண்டும். பிறகு டாக்சி ரிப்பேர், சாப்பாட்டு செலவு, சிகரெட் செலவு, நான்கு நம்பர் செலவு, கேம் கடை செலவு என அவனுக்கே இழுத்து பறித்து சமாளிக்க முடியாத சூழலில் தான், தன் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருந்தான். குமாருக்கு ஜாமின் கொடுக்க போய் தான் ஏதாவது பெரிய சிக்கலில் மாட்டிக் கொண்டால் என்ன செய்து. தன் குடும்ப நிலை என்னாவது என்று யோசித்தான்.

குமாருடைய நிலையை யோசித்து பார்த்தான். கேம் கடையில் நிறைய பணத்தை இழந்து விட்டான். அந்த சூழலில் அவனின் டாக்சி வேறு ரிப்பேர் ஆகி விட மூன்றாவதாக ஒரு கார்டு வாங்கியாக வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டான். நாள் ஒன்றுக்கு 150 வெள்ளி கட்ட வேண்டி இருந்தது. நாள் வட்டி இல்லாமல் மாத வட்டிக்கும் கடன் வாங்கி இருந்தான். டாக்சி வேறு ரிப்பேர் ஆகி செலவு. அவனால் சாமாளிக்கவே முடியாமல் போனது. இந்த சூழ்நிலையில் டாக்சி வாடகையை முறையாக கட்டவில்லை என கம்பனிகாரன் டாக்சியை பிடுங்கி கொண்டான். நான்கு திசைகளிலும் இருந்த பூதங்கள் எல்லாம் குமாரை பிடித்து நசுக்க தொடங்கியது.

மாத வட்டிக்கு கடன் கொடுத்தவர்கள் வீட்டில் வந்து கேட்காத கேள்வி எல்லாம் கேட்டு போனார்கள். மனைவி குழந்தைகள் எதிரே வந்து கத்தி கலாட்டா செய்ததில் குமார் வெட்கத்தாலும் வேதனையாலும் தடுமாறி போயிருந்தான்.

பணம் இல்லாவிட்டால் வீட்டில் பிரச்சனை வரத்தானே செய்யும். வீட்டில் பிரச்சனை சீன பட்டாசு போல் பட பட பட வென வெடிக்க தொடங்கியது. அந்த சத்தத்தை அவனால் தாங்க முடிய வில்லை. சத்தம் அவன் காதை அடைக்கவே, தன் மனைவியை அடித்து விட்டான். மனைவி நேரே போலிசில் போய் புகார் செய்து விட்டார். தன் கணவன் தன் அடித்து விட்டதாகவும், ஊற் சுற்றி கடன் வாங்கி வைத்திருப்பதாகவும் இனி தன் கணவனுடன் சேர்ந்து வாழ முடியாது. விவாகரத்து வேண்டும் என போலிஸ் நிலையத்தில் கேட்டார். போலிஸ் சார்ஜனும், ‘அம்மா! இங்கு நீங்கள் புகார் மட்டும் தான் கொடுக்க முடியும். விவாகரத்து எல்லாம் பதிவு இலாகா அல்லது நிதிமன்றத்தில் தான் வாங்க முடியும்’ என்று ஆலோசனை கூறி அனுப்பி வைத்தார்.

குமாருடைய மனைவி தன் குழந்தைகள் இருவரையும் அழைத்து கொண்டு அவர் அம்மா வீட்டுக்கு போய் விட்டார். நாசிக் லெம்மாக் வியாபாரம் செய்தாவது தன் குழந்தைகளை காப்பாற்ற வேண்டும் என்கிற வைராக்கியத்தோடு பஸ் ஏறி விட்டார்.

வட்டிக்காரர்கள் துரத்துவதால் குமார் வீட்டு பக்கமும் போகவில்லை. குமாரின் நிலையை யோசித்த மணிக்கு தன் அடி வயிறு கலக்கியது. இப்போ ஏதோ மணி சமாளிக்க கூடிய சூழலில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறான். மணியின் மனைவி மூக்கு கண்னாடி விற்கும் கடையில் வேலை செய்து வருகிறார். அவருக்கு சம்பளம் மாதம் 1500 வெள்ளி. ஏதோ அவனால் தத்தி தவழ்ந்து தன் குடும்பத்தை மனைவியின் உதவியோடு வளர்க்க முடிகிறது. தன் சக்தியை மீறி கடன் வாங்கி அல்லது அடுத்தவருக்கு ஜாமின் சொல்லி மாட்டிக் கொண்டால் என்ன செய்வது என்று யோசித்தான்.

இதை எல்லாம் யோசித்துக் கொண்டு இருக்கும் போதே ஆபிசர்ஸ் இருவரும் மணியை அங்கிருந்து கிளம்ப சொல்லி மிரட்டினார்கள். மணியும் வேறு வழி இல்லாமல் அங்கிருந்து கிளம்பினான்.

குமாரையும் காப்பாற்றியாக வேண்டும். அதே சமயத்தில் தானும் மாட்டிக் கொள்ளகூடாது. மணி யோசித்து கொண்டே டாக்சி எடுத்துக் கொண்டு கிளம்பினான். கிளம்பியவன் சிறிது தூரம் போனதும், டாக்சியை ஒரு மூலையில் நிறுத்திவிட்டு இறங்கினான். மெதுவாக நடந்து அய்யா கோவிலுக்கு போய், ஆபிசர்ஸ் கண்ணில் படாமல் அங்கிருக்கும் புதர் பக்கம் போய் ஒளிந்துக் கொண்டான். நிலைமை கை மீறி போனால் என்னா ஆனாலும் உள்ளே நுழைந்து குமாரை காப்பாற்றி ஆக வேண்டும் என உறுடியாக இருந்தான்.

இதற்கிடையில் மணி ஒரு யோசனை செய்தான். குமார் இனி டாக்சி ஓட்டியோ அல்லது இங்கிருந்துக் கொண்டு வேறு எதாவது வேலை செய்து கடனை எல்லாம் கட்டி, எல்லா சிக்கலிலும் இருந்து மீண்டு வருவது இயலாத காரியம். மணியின் மச்சான் ஒருவர் சிங்கப்பூரில் கிரேன் அப்பேரேட்டர் வேலை செய்கிறார். நல்ல சம்பளம். குமாரிடம் E Full லைசன்ஸ் இருக்கு. இப்போதைக்கு குமாரை சிங்கப்பூர் அனுப்பி விடுவதுதான் ஒரு வழி என்று தோன்றியது. ஆனால் இந்த இரவு முடிந்து பகல் வர வேண்டும். இந்த ஆபிசர்ஸ்களிடம் இருந்து குமாரை காப்பாற்றியாக வேண்டும். யோசித்து கொண்டே இருந்தான். சற்று தொலைவில் இருந்தபடியே நடப்பதை பார்த்துக் கொண்டு இருந்தான்.

குமார் அமைதியாக கோவில் தியாங்யில் சாய்ந்த படியே அமர்ந்திருந்தான். கோவிலுக்குள் இருக்கும் அய்யா சிலையின் கண்களை பார்த்தான். அய்யா சிலை கண்களும் குமாரை மௌனமாக பார்த்துக் கொண்டிருந்தது. ஒரு முடிவுக்கு வந்தான். வட்டிக்கு கடன் வாங்கி ஆகிவிட்டது. அதை திருப்பி கட்டித்தான் ஆக. ஓடிக் கொண்டே இருக்க முடியாது. ஓடி ஒளிவது வேறு சிக்கலில் கொண்டு போய் விட்டு விடும். நின்று அதை எதிர்கொள்வதுதான் ஒரே வழி. கொன்று விடுவார்களா என்ன ….? ஆனால் கொல்லத்தான் போகிறார்கள் என்று அவனுக்கு தெரியவில்லை. உயிரை எடுப்பது மட்டும் தான் கொலையா ….? அதற்கு இணையான காரியமும் கொலைதானே …..

குமார் யோசித்தான். அடித்தால் அடி வாங்கி கொள்வோம். வேறு வழி இல்லை. கையில் பணமும் இல்லை. இனி யாரும் கடனும் கொடுக்க மாட்டார்கள். பாசாக் கடையில் வைப்பதற்கும் பொட்டு தங்கம் கிடையாது. தாலி ஒன்றுதான் மிஞ்சி இருக்கிறது. அதுவும் இனி கிடைக்காது. ஒன்னு வீட்டில் இருக்கும் பொருட்களை எல்லாம் விற்று கடனை அடைக்க வேண்டும். அப்படியும் சில ஆயிரங்கள் தேவைப்படும். டாக்சி ஓட்டுனர்களுக்கு பேங்க் ஸ்டேட்மெண்டும் கிடையாது. வங்கியில் லோனும் போட முடியாது. சரி முடிந்த வரையில் பேசி பார்ப்போம். அப்புறம் அய்யா விட்ட வழி. அய்யா சிலையின் கண்களை பார்த்தான். அதே வெறித்த பார்வைத்தான். ஆனால் அதில் வித்தியாசம் தெரிந்தது.

ஆபிசர்ஸ் இருவரும் குமார் அருகில் வந்தார்கள். அதில் ஒருவன்,

‘நீ இப்போ வட்டியோடு எவ்வளவு கட்ட வேண்டும் தெரியுமா …?’

‘தெரியல’

‘ரெண்டாயிரம் வெள்ளி’

‘நான் வாங்கியது வெறும் 800 வெள்ளித்தான் அதில் 300 வெள்ளி திருப்பி செலுத்திட்டேன். இன்னும் ரெண்டாயிரம் வெள்ளின்னா என்னா செய்றது.’

‘முப்பது நாட்களுக்குள் கட்டி முடித்திருந்தால், வெறும் 1500 வெள்ளித்தான் ஆகி இருக்கும். நீ 15 நாட்களாக கட்டவில்லை. ஓடி ஒளிந்தும் கொண்டாய். நீயே வந்திருந்தால் பேசி இருக்கலாம். இப்போ நாங்கள் உன்னை தேடி வந்ததால் நாங்கள் சொல்வதைத்தான் கேட்க வேண்டும். நீ சொல்வதை எல்லாம் எங்களால் கேட்டு கொண்டு இருக்க முடியாது.’

‘இப்போ என்னிடம் அவ்ளோ பணம் கிடையாதே!’

‘நீ சொல்வதை எல்லாம் கேட்டு கொண்டிருக்க நாங்க ஒன்றும் கேனப்பயல்கள் கிடையாது. உனக்கு ரெண்டு நாள் டைம் தருகிறோம். மொத்தமாக ரெண்டாயிரம் வெள்ளி கொடுத்து, செட்டில் பண்ணிவிட்டு போ.’

‘அவ்ளோ பணம் என்னால் ரெண்டு நாளில் ரெடி பண்னமுடியாது. ப்ளிஸ் எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்கள். நான் சத்தியமாக கொடுத்து விடுவேன். அய்யா சாமி மீது சத்தியமாக சொல்கிறேன்.’

‘உன் சத்தியத்தை எல்லாம் தூக்கி குப்பையில் போடு.’

‘நீ ஓடி விட்டால் உன்னை எங்கே தேடி கண்டுபிடிப்பது. நீ வேலைக்கு ஆக மாட்டாய்.’

‘ப்ளிஸ் …. நம்புங்க …. நான் நிச்சயமாய் உன் பணத்தை தந்து விடுகிறேன்.’

‘சரி. நீ தந்து விடுவாய். நாங்கள் நம்புகிறோம். அப்படி என்றால் ஒரு காரியம் செய்.’

‘என்ன?’

‘உன் பொண்ணுக்கு என்ன வயசு?’

‘ஏன் கேட்கிறீங்க?’

‘ஒன்னும் செய்ய மாட்டோம். எங்களுக்கும் மனசாட்சி இருக்கு. சும்மா சொல்லு.’

‘பன்னிரெண்டு வயசு’

‘சரி. உன் பெண்ணை நிர்வாணமாக போட்டோ எடுத்து கொடு. அப்படி நீ பத்து நாளில் ரெண்டாயிரம் வெள்ளி தரவில்லை என்றால் அந்த போட்டோவை ப்ரிண்ட் எடுத்து அங்கங்கே ஒட்டி விடுவோம். வாட்ஸாப், ஃபேஸ்புக்குன்னு ரிலிஸ் பண்ணிருவோம். மத்தபடி ஒன்னுமே செய்யமாட்டோம்.’

குமாருக்கு அப்படியே நெஞ்சு நின்றுவிட்டது. அடி வயிற்றில் இருந்து ஒரு பயமும் ஆத்திரமும் கிளம்பி உச்சி தலைக்கு வந்தது. அய்யா சிலையின் கண்கள் மௌனமாக குமாரை பார்த்துக் கொண்டிருந்தது. அய்யா சிலையின் கையில் இருந்த அருவா கத்தியை பிடுங்கி அங்கேயே அய்யாவுக்கு காவு கொடுக்க வேண்டும் போல் தோன்றியது. வாழ்க்கையின் உச்சகட்ட வேதனையை அனுபவித்தான்.

இந்த சித்திரவதைக்கு பதில் செத்தே போகலாம்னு தொன்றியது குமாருக்கு. இனி எதற்கு பயம்? ஏன் இந்த அடிமை உணர்வு. இப்போதும் அய்யா சிலையின் கண்கள் மௌனமாக குமாரை பார்த்து கொண்டிருந்தது.

புதர் மறைவில் ஒளிந்து கொண்டு எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்த மணிக்கு கோபம் உச்சியை தொட்டது. இனி பொறுத்து கொள்ள முடியாது. ஆபிசர்ஸ் ரெண்டு பேர்கள். நாமும் ரெண்டு பேர்கள். தப்பு செய்கிற அவர்களுக்கே இவ்ளோ துணிச்சல் இருக்கும் போது, நாம் ஏன் கோழைகளாக இருக்க வேண்டும். இரண்டு பேருமாக சேர்ந்து, அவர்களின் மூஞ்சி முகறை எல்லாம் உடைத்துவிட்டு, போலிசில் போய் புகார் செய்து விட வேண்டியது தான். இனி போலிசுக்கு போவதை தவிர வேறு வழியே இல்லை. ஆனது ஆகட்டும் என மணி புதர் மறைவில் இருந்து எழுந்து அவர்களை நோக்கி ஓட ஆரம்பித்தான்.

பட்டினியோடு அடி வாங்கி சோர்ந்து போயிருந்த குமாருக்கு, ஆத்திரமும் ஆவேசமும் புது தெம்பை கொடுத்து இருந்தது. எழுந்து நின்றவன், தன் பலத்தை எல்லாம் ஒன்று சேர்த்து, ஆபிசர்ஸ் ஒருவனை ஓங்கி விட்டான் ஒரு குத்து. ஆபிசருக்கு தலையே சுத்தி விட்டது. தடுமாறி போய் தூர விழுந்தான். இன்னொருவனின் கையை பிடித்து முறுக்கி முதுகில் ஒரு குத்தும் கால் முட்டியில் ஒரு உதையும் விட்டான். அவன் வலி தாங்காமல் கெட்ட வார்த்தையில் முனகிக் கொண்டே கோவிலின் பக்கவாட்டில் போய் விழுந்தான். அவன் விழுந்த இடத்தில் மலை பாம்பு ஒன்று சுருண்டு படுத்திருந்தது.

மணி வேகமாக ஓடி வந்தான். பசி வேதனையிலும் ஆபிசர்ஸ் மேல் இருந்த கொலை வெறியிலும் குமார் மணியை கவனிக்கவில்லை. குமார் ஆற்றில் இறங்கி, ஆற்றை கடந்து, ஆற்றுக்கு அந்த பக்கம் இருக்கும் மண் சாலையில் ஓட ஆரம்பித்தான்.

குமார் ஆற்றை கடந்து ஓடுவதை பார்த்த மணி தன் டாக்சி நோக்கி ஓட ஆரம்பித்தான். அய்யா சிலையின் கண்கள் நடப்பதை மௌனமாக பார்த்துக் கொண்டிருந்தது.

குமார் ஓடிக் கொண்டே இருந்தான். எவ்வளவு தூரம் ஓடி இருப்பான் என்று அவனுக்கே தெரியவில்லை. இனி எவ்வளவு தூரம்தான் ஓடுவது. ஓடிக் கொண்டே இருப்பது தீர்வு ஆகாது என முடிவுக்கு வந்தவன், நின்றான். நின்று நிமிர்ந்து பார்த்தான். தூரத்தில் மணியின் டாக்சி வந்து கொண்டிருப்பது தெரிந்தது. மணியின் டாக்சியின் விளக்கு வெளிச்சம் குமார் கண்களில் பட்டது. இப்போது மணியின் சிலுவார் பாக்கெட்டில் இருந்த கைபேசி சிணுங்கியது. எடுத்து பார்த்தான். அவனுடைய மனைவி. தன்னிடம் கோபித்துக் கொண்டு போன மனைவி ஏன் இந்த நேரத்தில் தனக்கு போன் செய்கிறாள், என யோசித்து கொண்டே போனை ஆன் செய்து பேசினான்.

’என்னங்க! நம்ம பொண்ணு பெரிய மனுசி ஆயிட்டா. இப்போதுதான். அதிகாலையில்’

போனை வைத்தான். நாம் செய்யும் சின்ன சின்ன தப்புதான் பிற்பாடு பெரிய பெரிய பிரச்சனைகளுக்கு காரணமாக அமைகிறது. தப்பு செய்யாத மனிதன் இவ்வுலகில் இருக்க முடியுமா என்ன? ஆனால் அந்த தப்புகளை சரி செய்ய வேண்டும். மணியின் டாக்சி மிக அருகில் வந்து விட்டது. மணி டாக்சியின் விளக்கு வெளிச்சத்தை விட, சூரியன் உதிக்கும் வெளிச்சம் பிரகாசமாக படர தொடங்கியது.

– இந்த கதை வல்லினம் இணைய தளத்தில் நவம்பர் 2016-ஆம் ஆண்டு வெளியானது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *