கார்த்திகை மாசத்து நாய்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: April 30, 2022
பார்வையிட்டோர்: 17,263 
 

‘Blazer’ எங்கள் வீட்டுக்கு வந்தது நேற்றுப்போல இருக்கிறது, நாலு வருஷங்களாகிவிட்டன. அப்பாதான் சொல்லிவைத்தாராம். சாரத்தை மடித்துச் சண்டியாகக் கட்டிக்கொண்டு மீன்வியாபாரி போலத் தெரிந்த அந்த உயரமான மனிதன் மிதியுந்தின் காவியில் (Carrier) வைத்துக்கட்டிய சன்லைட் சவர்க்காரப்பெட்டிக்குள் சாக்குமடிப்பொன்றில்வைத்து கழுநீரின் நிறத்தில் உடம்பும், அடிவயிறு வெள்ளையாகவும் இருந்த . அந்த நாய்க்குட்டியைப் பக்குவமாகக் கொண்டுவந்தான். ஐம்பது ரூபாயாக இருக்கவேணும், அப்பா பணத்தைக்கொடுத்ததும் இரண்டாந்தடவையும் எண்ணிப்பார்த்துவிட்டு “கள்ளுக்கொண்டும் இல்லையோவும்” என்று இளித்துக்கொண்டு நிற்கையில் அப்பா மேலுமொரு பத்து ரூபாவைக்கொடுக்கவும் முழு முரசையும் காட்டிச்சிரித்துவிட்டுப் போனான். மாலையில் பள்ளிக்கூடத்தால் வந்ததும் நண்பர்களுடன் விளையாடப்போய்விடும் ஐந்தாவது வாசிக்கும் தம்பி கடம்பனை நாய்க்குட்டி வசீகரித்துவிட ‘ஏதோ தனக்கெனவே’ வருவிக்கப்பட்ட வஸ்துவைப்போல அதைத்தரையில்விடாது காவிக்கொண்டுதிரிந்தான்.

அதுக்கு ஒரு பெயர் வைக்கவேணுமென்ற பிரக்ஞையே இல்லாதிருந்த எம்மிடம் “அம்பா…நான் இதுக்கு ‘Blazer’ என்று பெயர் வைச்சிட்டேன்” என்று அறிவித்தான். அடுத்த நாள் ஏதாவது கொமிக்ஸ் புத்தகத்தில் பொறுக்கியிருப்பானோ, பெயர் வித்தியாசமாகவும் கூப்பிட இலகுவாகவுந்தான் இருந்தது. ஆனாலும் Blaze என்பதன் அர்த்தத்தை அகரமுதலிகளில் தேடவும் அதன் அர்த்தங்கள்: திடீர்வெடிப்பு, பெருநெருப்பு பெருங்கோபம் என்றெல்லாம் திகைப்பூட்டுவதாக இருந்தன. இதையெல்லாம் சொல்லி அவன் மனத்தை மாற்றிவிடவா முடியும், சரி நாய்தானே கோபக்காரனாகவே இருந்துவிட்டுபோகட்டுமென விட்டுவிட்டேன். அது குட்டியாய் இருக்கும்போது, ஒரு பழைய பிரம்புக்கூடையினுள் மர அரிவுதூளைக்கொட்டிப் படுக்க வைத்தோம் தேமேயென்று படுத்தது. வளர வளர அதற்கு பிரம்புக்கூடை சலித்துப்போயிருக்க வேண்டும், எங்கள் வீட்டின்மேல் வேப்பமரத்தின் நிழல்விழும், பகல்வேளையின் நிழலில் குளிர்ச்சியாகவிருக்கும் வீட்டுத்தாழ்வாரத்திலே போய்ப்படுக்கும். அதன் பிரம்புக்கூடையை தாழ்வாரத்தில் எடுத்துவந்து வைத்துவிட்டேன், அதுவோ பெரியமனிதத்தனமாய் கூடையைத்தவிர்த்துவிட்டு பத்தடி தள்ளிப்போய் தாழ்வாரத்தில் வெள்ளம் கொணர்ந்துசேர்த்த சுரிமணலிலேயே சுகமாய்ப்படுத்தது. மதியம் சமையலறையிலிருந்து மணம் கிளம்பத்தொடங்கியதும் வீட்டின் கூடத்துக்கும் சமையலறைக்கும் இடையிலுள்ள இடைகழியில் (நடை) போட்டிருக்கும் தரைவிரிப்பில் வந்துபடுத்துக்கொண்டுவிடும். திங்கள், வெள்ளி, அமாவாசை, பௌர்ணமி, ஏகாதசிவிரத நாட்களில் கெஞ்சி அழைத்தாலும் சமையலறைப்பக்கம் தலையும்வைத்துப் படுக்காது. ஏனையநாட்களில் சமையல் முடியமுடிய வாசம்பிடித்து தரைவிரிப்பிலிருந்து அங்குலம் அங்குலமாக நகர்ந்துவந்து குசினிக்கான கால்மிதியில் நந்திமாதிரிப் படுக்கப்பார்க்கும்.

சோற்றுவிடயத்தில் அதொரு அபேதவாதி, யார்போட்டாலும் தின்னும், ஆனால் எல்லா எஜமானிகளின் கட்டளைகளுக்கும் பணிந்துவிடாது. கொஞ்சமும் மரியாதை இல்லை, வீட்டிலிருக்கும் வேளைகளில் நானோ, அம்மாவோ எத்தனை விரட்டினாலும் பாதிக்கண்ணைத்திறந்தபடி தலையை அரை அங்குலம் உயர்த்தி “ எனக்கா சொல்கிறாய் அம்மணி ” என்பதுபோலப் பார்த்துவிட்டு மீண்டும் ’சுகம் சுகமெ’னப்படுத்துவிடும். அசையாது. கடம்பன் ஒருக்கால் “அடீக்” என்றால் மட்டும் சடக்கென எழும்பிக் குசினியைப்பார்த்தபடி ’ங் ங் ங்’ என்று முனகிக்கொண்டு ஓடும், அம்முனகலுக்கு ‘‘அப்புறம் வலிதாங்க முடியாதுப்பா’’ என்று நாய்மொழியில் பொருள். அவன் சொன்னபடி அது கேளாவிட்டால் இடுப்புப்பட்டியால் ’சொடேர்’ என அடிப்பான். அல்லது அவன் வாட்டர் பிஸ்டலை எடுத்தாலும் சமர்த்தாய் ஓடிவிடும்.

Blazer என்னதான் சுகம் அனுபவித்தபடி சயனித்திருந்தாலும் ஒழுங்கைக்குள் அரைக்கிலோ மீட்டர் தூரத்தில் வேறொரு நாயின் அனுங்கலோ, கிறீச்சோ எமக்குக்கேட்காது ஆனால் அதன் மிகை உணர்திறனுள்ள (Super Sensitive) காதுகளுக்குக் கேட்டுவிடும். அதுவும்ம் வந்தால் தன் சோற்றுக்குக்கேடென்று நினைக்குதோ என்னவோ…துடித்துப்பதைத்துப் பாய்ந்துபோய் அதை மேலும் இரண்டு கிலோமீட்டர் தூரத்துக்காவது விரட்டிவிட்டுவந்து ஏதோ ஒலிம்பிக்ஸில் தங்கப்பதக்கம் வென்றதோரணையில் மூச்சிரைத்துக்கொண்டு நிற்கும்.

எமது ஒழுங்கைக்குள் நாலைந்து வீடுகள் தள்ளி ஒரு புரட்டஸ்தாந்து தேவாலயம் இருக்கிறது, அங்கே வருபவர்கள் எவருடனோ ஒரு வெள்ளையும் கறுப்புமான சுருட்டை முடியுடன் ஒரு பெண்நாயும் வந்துபோகும், அதைக்கண்டவுடன் ஒருநாள் Blazer சத்தமில்லாமல் எழுந்துபோய் அந்தத்தேவாலய வளவெல்லாம் அதோடுகூடிக் காதல்செய்துவிட்டு (Dating) வந்து தேமேயென்று வெள்ளந்திபோலப் படுத்திருந்தது. அது இனியும் குட்டியில்லை…நாலுவயதாகிறது அவருக்குள்ளும் அவருக்கான வசந்தம் பிறந்துவிட்டது, நம்ம இளவட்டங்களைப்போலக் ‘கலர்’ பார்க்கத் தொடங்கிவிட்டதென்று நினைத்தேன்.

எங்கள் கல்லூரி யாழில் பிரசித்தமான பெண்கள் கல்லூரிகளிலொன்று. வீட்டிலிருந்து ஒரு கி.மீட்டருக்கும் குறைவான தொலைவில்த்தான் இருக்கிறது. தினமும் சகதோழிகளுடன் நடந்தே போவேன். சிலவேளைகளில் ’Blazer’ ரும் எமது வீட்டொழுங்கை கல்லூரியுள்ள அரசடி வீதியோடிணையும் சந்திவரைக்கும் என்னுடன் கூடவரும். நான் விரட்டாமலே பாதியில் திரும்பி எங்கேயாவது தன்பாட்டில் ஊரை சுற்றிப்பார்த்துவிட்டு வீட்டுக்குப்போய்விடும். அன்றைக்கு பிரதான வீதியிலேறிய பின்னாலும் பாதித்தூரத்துக்கு தனக்கும் ஏதோ அலுவல் இருப்பதைப்போல என்கூடவே தலையை ஆட்டிக்கொண்டு வந்தது. ஏறுவெயில் மேல்நெற்றியை எரித்துக்கொண்டிருக்கையில் இந்த Blazer தொடர்வதும் எரிச்சலாக இருக்க அதை அடிக்கக் கல் எடுப்பதைப்போலக் குனிந்து பாவனை பண்ணினேன். சடக்கென முன்னங்கால்களால் தடுப்பானைப்போட்டு நின்று எனைப்பார்த்தது, ஆனால் திரும்பி ஓடவில்லை. சரி எப்படியும் போய்விடுமென்று அதைக்கவனிக்காமற் போய்விட்டேன். பிறகு அது ஆடினதுதான் செமையான உச்சக்கூத்து. யார் வளவுக்குள்ளாலோ புகுந்து அதன் பின்னாலுள்ள புறக்கணிப்பாதை (Bypass) ஒன்றினூடாக முன்னே ஓடிப்போய் திடுப்பென ஒரு வெள்ளைநிறத்தில் ஒரு சிநேகிதியையும் கண்டுபிடித்து அவளையுங்கூட்டிக்கொண்டு கல்லூரியின் வாசலுக்கருகில்போய் மதிலோரமாக நின்றது. நாங்கள் கல்லூரிவாசலை அடையமுன் சிநேகிதியை முன்னங்கால்களால் இறுக அணைத்துப்பிடித்து என்னை அந்நியமாகப் பார்த்தபடி இகலோகத்தின் உச்ச சுகிர்தத்தை அனுபவித்தது. வெட்கம் என்னைப் பிடுங்கித்தின்றது, என்கூட வந்த தோழி சமீதா ஏதோ அப்போதுதான் கண்டுபிடித்தவள்போல “ அம்பா அங்கே பாரடி உங்கட நாயின்ர குய்யாலங்கடியை…” என்றாள்.

“நான் என்ன அதை நித்தியானந்தா தபோவனத்து நாயென்றா சொன்னேன்…எனக்குத் தெரியாதா அது எங்கட நாயென்று…மூடிக்கொண்டுவாடி முந்திரிக்கொட்டை” என்று அவளை அதட்டினேன். நான் அதை விரட்டப்போக அதுவே ‘அது எங்கள்வீட்டு நாயென்பதைத் தெருவுக்கே காட்டிக்கொடுப்பதாகிவிடும்.’ பேசாமற் கடந்துபோய்விட்டோம்.

அதொரு வெள்ளிக்கிழமை. பிரதி வெள்ளிகளில் மழையில்லாத நாளாயின் வகுப்புக்கள் ஆரம்பிக்க முதல் வேப்பமரத்தின் கீழான அசெம்பிளி மேடையையைச் சுற்றி மாணவிகள் நிற்க, ஒருத்தி சிவபுராணம் சொல்லித்தருவாள் மற்றவர்கள் தொடர்ந்து பாடவேண்டும். நான் மாணவர்தலைவி வேறு, மற்றைய தலைவிகளோடு சேர்ந்து மாணவிகள் சீராக வரிசைகளில் அமைதியாக நிற்கிறார்களா என்பதையும் கவனிக்கவேண்டும். சிவபுராணத்தில் ஒருத்தருக்கும் மனது லயிக்காது, சில மாணவிகள் (அநேகமாக விரதார்த்திகள்) மயங்கிக்கூட விழுவார்கள். எத்தனைபேர்தான் உலாஞ்சிக்கொண்டு விழுந்தாலும் சிவபுராணம் விடுப்பின்றிப் பாராயணமாகும்.

‘நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணுணர்வே
போக்கும் வரவும் புணர்வுமிலாப் புண்ணியனே…’

என்று நாம் வில்லங்கத்துக்குப் பாடிப்பக்தி செலுத்திக்கொண்டிருக்க ‘Blazer’ சனியன் அந்த வெள்ளை நாயோடு இணந்தபடி அதைக் ‘கொர’ ‘கொர’வென இழுத்துக்கொண்டு கல்லூரிக்குள் நுழைந்தது. வாசலிலேயே இணையைக் கண்டுகொண்ட எம் ஆய்வுசாலை உதவியாள் பெருமாள் ஓடிப்போய் அதைச் “ச்சூ ச்சூ”வென்று விரட்டவும் மாணவிகளின் கவனமும் சிதறியது. சிலர் மேற்கண்ணாலும் ஓரக்கண்ணாலும் அருகருகில் நின்ற மாணவிகளைப் பார்த்துச் சிரித்துக்கொண்டனர். ‘Blazer’ இழுத்த இழுவைக்குத் தாக்குப்பிடிக்காத இணைவி ஓடமுடியாமல் இடறுப்பட்டு விழுந்துவிட அதைவிடாமல் இழுத்தபடி எம் அசெம்பிளிப்பக்கமாகவே வந்தது. பெருமாள் இப்போது கேட்டியொன்றை எடுத்துக்கொண்டு அவற்றை அடிக்க ஓடினான்.

அதைக்கவனித்த எங்கள் உயிரியலாசிரியை திருமதி. உமையாள்: “ஏய்… பெருமாள் அதுகளைத் தம்பாட்டிலவிடு, விரட்டாதை” என்று கண்டிக்கவும் அவ்விணை அப்படியே நின்றது. மேலும் அவற்றால் ஓடமுடியவில்லை மாணவிகள் பின்னால் மற்ற ஆசிரியைகள் குழாத்துடன் நின்றிருந்த அதிபர் திருமதி. கோகுலவல்லியின் முகத்தில் எள்ளும் கொள்ளும் தானாகப் பொரியச் சங்கடத்தில் கைகளைப் பிசைந்துகொண்டு நின்றார்.

‘பல்லோரும் ஏத்தப்பணிந்து.’ என்று ஒருவாறு சிவபுராணம் முடிவுற்றது நாய் இணையைக் காணவில்லை. எங்கேயோபோய் மறைந்துவிட்டன. லேசான திருப்தி ஏற்பட்டது. திருமதி. உமையாள் அதிபரின் காதுகளில் எதையோ சொல்லிவிட்டு மேடைக்கேறி “ அன்பான மாணவச்செல்வங்களே…எல்லா மாணவிகளும் இயற்கையின் சாங்கியங்களையும், விலங்குகளின் நடத்தைகளையும் தெரிந்திருக்கவேண்டும், இது நாய்களுக்கு அவற்றின் இனப்பெருக்ககாலம், ஆக அவை கலவி செய்வது இயற்கையான ஒரு நிகழ்வு. உலகத்துக்குப் புதியதோ நகைப்புக்கோ உரியவிடயமல்ல. இதுபோலக் கலவிசெய்யும் நாய்களை நீங்கள் எங்கு பார்க்க நேர்ந்தாலும் ஒருபோதும் அவற்றை விரட்டியடிக்கக்கூடாது, விலங்குகளின் நடத்தையைக் குழப்புவது இயற்கையைக் குழப்புவதற்குச்சமன்……. சரியா?.” என்று சொல்லிவிட்டு மேடையிலிருந்து இறங்கினார். மாணவர்கள் எவரும் பின்னர் நகைக்கவில்லை. தொடர்ந்து ‘விரதங்களின் மகத்துவங்கள்’பற்றி சமய ஆசிரியை ஒருவர் 10 மணித்துளிகள் உரையாற்றி முடிக்கவும் அசெம்பிளி கலைந்தது. மாணவிகள் தத்தம் வகுப்புகளுக்குப் போயினர்.

எமக்கு அன்றைய முதற்பாடம் திருமதி. உமையாளின் விலங்கியல். வகுப்புள் நுழைந்ததும் அசெம்பிளியில் கூறியதன் தொடர்ச்சிபோல “ வெளியே நாய்களின் கலவிமுயக்கத்தை எல்லோரும் கவனித்திருப்பீர்கள்” என்றுவிட்டு நிறுத்தி வகுப்பைப் பார்த்தார்.

அங்கங்கு ஒருவரை ஒருவர் கடைக்கண்ணால் பார்த்துவழிந்த எம் நாணச்சிரிப்புக்களைத் தெரிந்தும் அவர் அவற்றைப் பொருட்படுத்தவில்லை. எல்லோரும் நம் நமுட்டு நாணச்சிரிப்புக்களை நிறுத்தினோம்.

“இதொன்றும் சிரிப்பதற்கான விடயமல்ல, இது எல்லோரும் பார்க்கவும் தெரிந்துகொள்ளவும் வேண்டிய இயல்பான விலங்குகளின் நடத்தைதான்.…….. குறிப்பாக விலங்கியல் மாணவர்கள்…….. ஒருவேளை உங்களுக்கு விலங்குகளைச் சினைப்படுத்தும் பண்ணையொன்றிலோ அல்லது விலங்குக் காட்சிச்சாலையிலோ, அல்லது கால்நடை மருத்துவராகவோ பணிசெய்ய நேரிட்டால் இப்படிச் சிரித்துக்கொண்டிருந்தால் எப்படிப் பணிசெய்யமுடியும்?”

அவரது வீறமைவு (சீரியஸ்னெஸ்) எமக்கும் தொற்றிக்கொண்டது. நாமும் அவர் சொல்வதை வீறமைவுடன் செவிமடுக்க நிமிர்ந்து உட்கார்ந்து தயாரானோம்.

முதலில் “நாய்கள் எந்த வர்ணத்துள் (Species) வருகின்றன…யாராவது சொல்லுங்கள்” கேள்வியைத்தூக்கி எம்மிடம் போட்டார்.

ஒருவருக்கும் சரியான பதில் தெரியவில்லை, நீண்ட மௌனத்துக்குப் பிறகு ஒருத்தி மட்டும்

“I think…Carnivorous” என்று அனுங்கினாள்.

“இல்லை Carnivorous என்பது ஒரு வர்ணமல்ல. அது முலையூட்டிகள், பறவைகள், ஊர்வன எனும் பிரிவைப்போல…மாமிச உண்ணிகள், தாவர உண்ணிகள் எனும் பெரும்பிரிவு அது விலங்கு இராட்சியப்பிரிவு (Phylum), Carnivorous என்பது சிங்கம், புலி, நாய், பூனை, எலி, தவளையோடு Primate (இருகால்விலங்குகள்) ஆகிய எம்மையும் உள்ளடக்கிய பெருஇராட்சியம்.

இது முள்ளந்தண்டுளிகளுக்கும் அடுத்த பிரிவு, முலையூட்டிகள். அதன்கீழ் >>> மாமிசமுண்ணிகள், தாவரபோஷணிகள். மாமிசபோஷணிகளின் கீழ்வரும் >>> அடுத்த பிரிவே வர்ணம் (Class). நாய்கள் Carnidae எனும் வர்ணத்துள் வருகின்றன, இவற்றுக்கு நீண்ட வேட்டைப்பற்களோடான தாடையும், ஒடுங்கிய இடையும், இலேசான உடல்வாகும், வேட்டைக்குணமும், பாய்ச்சலியல்புமிருப்பது சிறப்பான தனியியல்பு. இப்பொதுவியல்பால் நம் நாட்டுநாய்களோடும், போமறேனியன் நாய்களோடும், Coyote (செந்நாய்கள்), Jackals (ஓநாய்கள்), Foxes (நரிகள்) எல்லாமே இந்த வர்ணத்துள் அடங்கும். ஆனால் Hynae (கழுதைப்புலிகள்) மட்டும் விதிவிலக்கு, அவை இதற்குள் அடங்காது Hyaenidae எனும் தனியான உபகுடும்பத்துள் (Subspecies)வரும்” என்றவர் தொடர்ந்தார்.

“நாயினங்களின் காமவெப்பச்சக்கரம் (Heat Cycle) எம்முடையதைப்போல் மாதாமாதம் அமைவதில்லை, ஆண்டுக்கு இரண்டுதடவைகள்தான், குறிப்பாக வசந்தகாலத்திலும், (Spring) இலையுதிர்காலத்திலும், (Autumn). விதிவிலக்காச் சில சிறிய Terrier, Maltese வகையிலான miniature இன நாய்களுக்கு மட்டும் காமவெப்பச்சக்கரம் ஆண்டுக்கு 4 தடவைகள் அமையும். அக்காலங்களில் மட்டும் அவை ஆண்நாய்களை அணையவிட்டுக் கர்ப்பம் தரிக்கும்.”

“நாய்களுக்கு இணவு முக்கியமான நிகழ்வு. ஏன் நாய்கள் இணைந்த பின்னால் அவற்றால் உடனே பிரிந்து தம்பாட்டில் ஓடிவிட முடிவதில்லை…யாருக்குத்தெரியும்?”

என்றவர் தொடர்ந்து புதிர்க்கேள்விபோடவும் அனைத்து மாணவிகளுக்கும் நாணமேறித் தலைகள் ஒருசேரக் கவிழ்ந்தன ஆயினும் அந்நெடுநாட் சந்தேகத்துக்கான பதிலையும் அவரிடமிருந்து அறிந்துவிடும் ஆர்வமும் அவர்களுக்கு அதிகரித்தது.

“நாம் கண்ணால் பார்த்துச் சிரித்துவிட்டுப்போகிற விடயங்களின் அறிவியற்காரணங்கள் விஞ்ஞானஆசிரியர்களில் 99% பேருக்கே சரியாகத்தெரியாது…Carnidae வர்ண விலங்குகளின் காமவெப்பம் ஆண்டுக்கு இரண்டு தடவைகளே வருமென்று சொன்னேனல்லவா…ஆதலால் ஒரு கலவியில் ஒருதடவை ஆண் சிந்தும் விந்திலிருந்து அவற்றின் முட்டைகள் கருக்கட்டப்படும் சாத்தியம் குறைவு, அதை நிவர்த்திக்க நாயினத்துக்கு இரண்டாவது தடவையிலான விந்துவிசிறலை இயற்கை வைத்திருக்கிறது. இரண்டாவது தடவையும் விந்து விசிறப்பட்டவுடன் அவற்றின் காளான் மொட்டைப்போன்ற ஆண்குறியின் தலைப்பகுதியின் புடைப்பும் விறைப்பும் ஒடுங்கவும், இணைகள் இலகுவாகப் பிரிந்துவிடும்.”

இப்போ எல்லா மாணவிகளும் சிரிக்க திருமதி. உமையாளும் அச்சிரிப்பில் கலந்துகொண்டார்.

ஒருமுறை ஓனாங்கைப்போலிருந்த இளம் ஒல்லிப்பிச்சான் உடற்பயிற்சி ஆசிரியனுக்கு ஒன்பதாவது மாணவி ஒருத்தி லவ் லெட்டர் எழுதிக்கொடுத்துவிட்டாள், விஷயம் எப்படி அதிபருக்குப்போயிற்றென்றே தெரியவில்லை. திருமதி. கோகுலவல்லி அவளைக்கூப்பிட்டுவைத்து “மேல் வகுப்பிலிருக்கும் மாணவி நீ மற்றவர்களுக்கும் முன்மாதிரியாக இருந்திருக்கவேண்டாமா, என்ன நெஞ்சழுத்தம் இருந்தால் படிப்பிக்கவரும் ஆசிரியருக்கே லவ் லெட்டர் கொடுப்பாய், பதினைஞ்சு வயசிலயே உனக்கு ஆம்பள சுகம் தேவைப்படுதோ…போய் உன் அப்பாவைக்கூட்டிக்கொண்டுவா இன்றைக்கே உனக்கு டி.சி தந்து விரட்டிவிடுகிறேன்…” என்று தாம் தூமென்று குதித்து ஆவிவிடவும் திருமதி.உமையாள் அவரைச் சமாதானப்படுத்தி. “கொஞ்சம் பொறுங்கள் மாடம்…இதெல்லாம் இந்த டீனேஜ் வயசில் ஆணுக்கோ பெண்ணுக்கோ வரக்கூடிய ஒரு இயல்பான மோகந்தான், (Infatuation or Crush) அவள் தன்னைக் கவர்ந்த ஒரு ஆணிடம் தன் லவ்வை ஈடுபாட்டை எவ்வளவு நாகரீகமாக வெளிப்படுத்தியிருக்கிறாள். அவன் டீச்சரோ, லாப் அட்டென்டரோ என்பதெல்லாம் இரண்டாம் பக்ஷம். ஒரு இயல்பான சமாச்சாரத்தை ஒரு கொலைக்குற்றமாகப் பார்க்கவேண்டியதில்லை, மானுடவியலில் சமப்பால் ஈர்ப்பென்று இன்னொரு விஷயமும் இருக்கு, இதொரு விரிவான சப்ஜெக்ட், இங்கிலிஷ் லிட்ரேச்சரில பி.ஏயும், சோஷியல் சயின்ஸில எம்,ஏயும் படித்த நீங்கள் இதைப்போய்ப் பெரிசுபடுத்தறீங்களே, அந்த இலக்கியங்களிலெல்லாம் ரோமியோவும் ஜூலியட்டும் என்ன சும்மாவா இருந்தாங்க? இல்லை காமாக்ஷி கௌரியென்று காப்புக்கட்டி விரதம் காத்தாங்களா,…விடுங்க மாடம், கல்லூரிகள் தண்டனைக்கூடங்கள் அல்ல, மாணவர்களின் நாற்றங்கால்கள்” என்று அதிபரைத் தணிவித்து அவ்விஷயத்தை ஒன்றுமில்லாமலாக்கினார். ‘Teacher is a Subject’ என்பார்கள். திருமதி. உமையாள் போன்ற அறிவியல் சமூகப் புரிதலுள்ள குருத்தினிகள் அரிதாகத்தான் பூக்கிறார்கள் குறிஞ்சிமலரைப்போல.

– ஞானம் சஞ்சிகை – இதழ் 261 பெப்ரவரி 2022. கொழும்பு.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *