கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 14,283 
 

தொலைக்காட்சிப் பெட்டியின் எதிரே சந்துருவும், ராகினியும் அமர்ந்திருந்தனர். இருவரின் காலடியில் அவர்களது இரு மகள்கள் அமர்ந்திருந்தனர். மூத்தவள் தேவிகா, பிளஸ் 2 படிப்பவள்; இரண்டாமவள் பூர்ணா, பத்தாம் வகுப்பு படிப்பவள்.
சந்துரு மகா கண்டிப்பான தந்தை. மூத்த மகளை ஐ.ஏ.எஸ்.,சும், இளையவளை ஐ.எப்.எஸ்.,சும் படிக்க வைக்க வேண்டும் என்ற குறிக்கோள் உடையவன். ஆகையால், வீட்டுக்குள் கல்வி சூழ்நிலை நிலவ பார்த்துக் கொண்டான். காலையில் தினமலர், இந்து நாளிதழ்களை வீட்டு அங்கத்தினர்கள் கட்டாயம் வாசிக்க வேண்டும்; மாலையில், மீண்டும் ஒருமுறை வாசிக்க வேண்டும். கொழுப்பும், உப்பும், எண்ணெயும் குறைந்த புரத உணவு முறை. வீட்டுச் சுவரில் வெ.இறையன்பு, சிவகாமி, உமா சங்கர் புகைப்படங்கள். பொழுது போக்குக்காக தினம் ஒரு மணி நேரம் தான் தொலைக்காட்சி பெட்டி இயங்கும்.
காதலர் பூங்காதொலைக்காட்சி செயற்கைகோள் அலைவரிசைகளை மாற்றி மாற்றி பார்த்து வந்த சந்துரு, குறிப்பிட்ட ஓர் அலைவரிசையில் நின்றான்.
ரோஜா, “டிவி’யில், “காதலர் பூங்கா’ எனும் நேரலை ஒளிபரப்பு நிகழ்ச்சி ஓடிக் கொண்டிருந்தது. நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் ஆணும், பெண்ணும் தொலைபேசி முன் நின்றிருந்தனர். இருவரும் ஒருவரையொருவர் கோணங்கித்தனமாக பார்த்து சிரித்துக் கொண்டனர்.
நிலையத்துடன் தொடர்பு கொண்ட நேயர் ஒருவரின் தொலைபேசி அழைப்பை, தொகுப்பாளர் தொலைபேசியுடன் இணைத்தனர்.
“ஹலோ… ஹலோ…’
“ஹலோ… நான் மாணிக்கம் பேசுறேன்ங்க!’
“எங்கயிருந்து?’
“சிதம்பரம் லால்கான் தெருவிலிருந்து!’
அட, நம்ம ஊர் பையன்… அதுவும் பக்கத்து தெரு பையன் பேசுகிறான்… அதிக கவனத்துடன் தொலைக்காட்சி உரையாடலை காதுற்றான் சந்துரு.
“சொல்லுங்க மாணிக்கம்… என்ன படிக்கறீங்க?’
எதிர்முனை இளித்தது. “எங்கங்க படிக்கிறது? பாலிடெக்னிக் பெயிலாயிட்டு சும்மா ஊருதான் சுத்திக்கிட்டு இருக்கேன்!’
“சபாஷ்… அப்படித்தான் இருக்கணும். யூத்தோட மானத்தை காப்பாத்திட்டீங்க!’ – தொகுப்பாளினி.
“படிப்பு கிடக்குது கழுதை. அதுவா முக்கியம் மாணிக்கம்? நீங்க யாரையாவது லவ் பண்றீங்களா?’
“போங்க… அதைச் சொல்ல எனக்கு வெக்கமாயிருக்கு!”
“இந்த நிகழ்ச்சி காதலர் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிதான்… சும்மா சொல்லுங்க!’
“சந்துரு மெக்கானிக்கோட மகள் தேவிகாவை லவ் பண்றேங்க!’
சந்துருவின் வீட்டு அங்கத்தினர்கள் அனைவரின் தலையிலும் இடி விழுந்தது; என்ன உளறுகிறான் இந்த பைத்தியக்காரன்?
கொதி நீருக்குள் அமிழ்த்திய ஆமை போல் ஆனாள் தேவிகா. ஒழுக்கமாய் படிப்பவள் போல் நடித்து, அக்கா ஒரு புறம்போக்கை காதலிக்கிறாளோ என சந்தேகப் பார்வை பார்த்தாள் பூர்ணா. அம்மாக்காரியோ இரண்டும் கெட்டான் மனநிலையில் மகளைப் பார்த்தாள்.
“உங்க காதலி தேவிகா, என்ன படிக்கிறாங்க?’
“பிளஸ் 2 படிக்கிறா!’
“எத்தினி நாளா காதலிக்கறீங்க ரெண்டு பேரும்?’
“ரெண்டு வருஷமா!’
“உங்க காதலிக்கு நீங்க வச்சிருக்கும் செல்லப் பேரென்ன… உங்களுக்கு உங்க காதலி வச்சிருக்கும் செல்லப் பேரென்ன?’
“என்னை அவ, “தடிமாடு’ன்னு கூப்பிடுவா. அவளை நான், “படிப்புக் குட்டி’ன்னு கூப்பிடுவேன்!’
“உங்க ரெண்டு பேருக்குள்ளேயும் சண்டை வந்தா யார் மொதல்ல சமாதானக் கொடி காட்றது?’
“அவதான்… டபக்ன்னு கால்ல விழுந்து கெஞ்சிடுவா!’
“உங்க ரெண்டு பேருக்கும் எப்ப கல்யாணம்?’
“வாடா… ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக்கலாம்ன்னு தேவிகா கெஞ்சுறா. நான்தான் கொஞ்ச நாள் போகட்டும்ன்னு இருக்கேன்!’
“நீங்க ரெண்டு பேரும் எங்கங்க சுத்தியிருக்கீங்க?’
பல இடங்களை பட்டியலிட்டான். மாணிக்கத்தின் காதல் ஜெயிக்க வாழ்த்து தெரிவித்து, சிம்பு-த்ரிஷா பாடலை ஒளிபரப்பினர்.
“டிவி’யை ஆப் செய்தான் சந்துரு. வீட்டுக்குள் மினி சுனாமி அடித்தது. சந்துரு எழுந்தான். மகளை நெருங்கி வந்து நின்றான். தேவிகாவை பாதுகாக்கும் முயற்சியில் மனித அரணாய் ராகினியும், பூர்ணாவும் நின்றனர்.
“”இந்த கூத்து எத்தினி நாளா நடக்குது?” உருமினான் சந்துரு.
“”அவசரப்பட்டு வார்த்தைகளை கொட்டிறாதிங்கப்பா. இந்த மாணிக்கம் யாருன்னே எனக்கு தெரியாதுப்பா… அவன் சொன்னதெல்லாம் அக்மார்க் பொய்… வீடு, ஸ்கூல், டியூஷன் சென்டர் தவிர, வேறெங்கயும் நான் போனதில்லை!”
“”அவன் வேற தேவிகாவை சொல்றானோ?”
“”சந்துரு மகள்ன்னு தெளிவா சொன்னானே…”
“”உங்க மக நான் தப்பு செய்வேனாப்பா?”
“”உன்னை நம்பலாம்; உன் இளமையை நம்ப முடியாது,” என்றவன் மனைவியிடம் திரும்பி, “”இதானா நீ மகள்களை வளர்க்கிற லட்சணம்? பதினேழு வயசில உன் மகளுக்கு காதல் கேக்குதா?” மகளை இரு அறை அறைந்தான்.
பூர்ணா தைரியமாய் பாய்ந்து தந்தையின் அடிக்கும் கையைப் பிடித்தாள். “”அப்பா… அக்காவை அடிக்காதீங்க. எவனோ ஒரு பொறுக்கி, வேணும்னே தேவிகா மேல ஒரு அவதூறை அள்ளி வீசியிருக்கான். அதை ஒரு, “டிவி’காரனும் கொஞ்சமும் பொறுப்பில்லாம ஒளிபரப்பு பண்ணியிருக்கான். தீர விசாரிச்சு மேல் நடவடிக்கை எடுங்க!”
“”எது உண்மை தேவிகா? மாணிக்கம்ன்ற நாய் சொன்னதா, உன் தங்கச்சி சொல்றதா?”
“”தங்கச்சி சொல்றதுதான் உண்மை. நான் யாரையும் காதலிக்க பிறக்கல; சாதிக்க பிறந் திருக்கிறேன். ஒரு வெட்டிப் பையன் உளர்றதை நம்பாதீங்க!”
சந்துருவின் கோபம் மாணிக்கத்தின் மீது திரும்பியது. “”அவனைத் தேடி கண்டுபிடிச்சு பொய் சொன்ன வாயிலயே ரத்தம் பொங்க மிதிச்சா என்ன?”
“”வன்முறை நம் வழியல்ல அப்பா!”
“”வேறென்ன பண்ணச் சொல்ற?”
“”விட்ருங்கப்பா!”
எதிர்மறைவாய் தலையாட்டினான் சந்துரு. “”விடக்கூடாதும்மா. ஒரு நேர்மையான பொண்ணு மேல அபாண்டமா பழி சுமத்தினா, தண்டனை கிடைக்குமேன்ற பயமில்லை அந்த பயலுக்கு. அவனையும், அந்த, “டிவி’ சானலையும் சட்டரீதியா கண்டிக்கணும், தண்டிக்கணும்!”
“”எப்படி?” மூன்று பெண்களும் கோரசாய்.
“”பொறுத்திருந்து பாருங்கள்!” என்றான் சந்துரு, ஏதோ தீர்க்கமாய் முடிவெடுத்தவனாய்.
காவல் நிலையம். ரோஜா, “டிவி’யின் உரிமையாளர், “காதலர் பூங்கா’ நிகழ்ச்சியின் தொகுப்பாளர்கள் மற்றும் நேயர் மாணிக்கம் மீதும் எழுத்துப்பூர்வ புகார் கொடுத்திருந்தான் சந்துரு.
புகாரை மும்முறை வாசித்துப் பார்த்தார் காவல்துறை ஆய்வாளர்.
ஒரு மாதிரியாய் முறுவலித்தார் ஆய்வாளர். “”கேபிள்ல நானூத்தி சில்லரை சானல்கள் ஒளிபரப்பாகுது. எந்த சானல் பொறுப்புணர்வோட செயல்படுதுன்னு சொல்லுங்க? சின்ன பிரச்னையை பூதாகரமாக்குறீங்க சந்துரு… இதனால, உங்க பொண்ணு பேருதான் கெடும்… தவிர, ரோஜா, “டிவி’க்கு எதிரா போர்க்கொடி உயர்த்துறது விவேகமான செயல் இல்லை!”
“”இன்ஸ்பெக்டர்… உங்களுக்கு மக இருக்காளா?”
“”இருக்காளே… பி.பி.ஏ., படிச்சிட்டிருக்கா!”
“”அவளை பற்றி எவனாவது அவதூறா, “டிவி’ல பேசினா பொறுத்துப்பீங்களா? செயற்கைக்கோள் கலாசாரம் நாடெங்கும் விஷ விதை தூவுது. எல்லாரும் அதை மவுனமா வேடிக்கை பார்த்துக்கிட்டிருந்தா எப்படி? தூவுவதை தடுப்போம்!”
ஆய்வாளர் யோசித்தார்… “”ஓ.கே., சந்துரு… நல்லதொரு சீனியர் அட்வகேட்டை வைத்து ரோஜா, “டிவி’க்கு ஒரு வக்கீல் நோட்டீஸ் பதிவுத் தபாலில் அனுப்புங்க. இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அந்த மாணிக்கத்தை பிடிச்சு ஸ்டேஷனுக்கு கொண்டு வரச் சொல்றேன். லாக்-அப்ல வச்சு அவனை மிதிச்சு ஸ்டேட்மென்ட வாங்குறேன். பத்திரிகையில செய்தி வரும்போது பாப்பா பெயரை மாத்தி போடச் சொல்றேன்!”
“”நன்றி இன்ஸ்பெக்டர்!”
அடுத்த ஒரு மணி நேரத்தில், மாணிக்கம் அடித்து, இழுத்து வரப் பட்டான். முன் வழுக்கை ஆரம்பித்திருந்தது. பான்பராக் வாய், அழுக்கு ஜீன்ஸ், அரதப்பழசான ஷர்ட், டபுள் சிம் மொபைல் போன் வைத்திருந்தான்.
முப்பது வருடங்களுக்கு போதுமான அடி உதைகளை பெற்ற பின், மாணிக்கம் வாக்குமூலம் கொடுத்தான்…
“”என் பெயர் மாணிக்கம்; வயது 29. என் அப்பா ஒரு ரிக்ஷாக்காரர். என் தாய், வீட்டு வேலைகள் செய்பவர். எனக்கு இரண்டு அக்கா, இரண்டு அண்ணன் உண்டு. நான் எட்டாம் கிளாஸ் பெயில். கஞ்சா பொட்டலம் விற்பது என் தொழில். தேவிகா பற்றி, “டிவி’யில் நான் சொன்னதெல்லாம் பச்சை பொய். தேவிகா பற்றி அவதூறாய் பேசும்படி, ஒரு மாணவர் கூட்டம் சொல்லிக் கொடுத்தது. அவதூறாய் பேசுவதற்கு ஆயிரம் ரூபாய் கொடுத்தனர்…”
மாணிக்கத்திற்கு காசு கொடுத்த மாணவர் கூட்டம் பிடிபட்டது. அதில், பிரதானமாய் குமரன் எனும் மாணவனும் இருந்தான்.
“”ரெண்டு வருஷமா தேவிகா பின்னாடி சுத்தறேங்க. ஐ.ஏ.எஸ்., கனவில் இருக்கும் அவள், என் காதலுக்கு மசியவில்லை. அவளை பழிவாங்கவும், இழிவுபடுத்தவும் மாணிக்கத்தை உபயோகப்படுத்தினேன்!”
ரோஜா, “டிவி’யிலிருந்து ஒரு வேன் வந்திறங்கியது. நிகழ்ச்சி தயாரிப்பாளர், தொகுப்பாளர்கள் வந்திருந்தனர்.
நிலைய மேலாளர் பேசினார்… “”காதலர் பூங்கா, ஒரு பொழுது போக்கு நிகழ்ச்சி. இதே சாயலில் இருபதுக்கும் மேற்பட்ட சானல்களில் ஒளிபரப்பாகின்றன. நிகழ்ச்சிக்குள் சில தீய சக்திகள் புகுந்து, தனிப்பட்ட நபர்கள் மீது அவதூறு பரப்பும் என நாங்கள் கனவிலும் கருதவில்லை. மாணிக்கம் போல் பொய்யர்கள், இதுவரை எத்தனை பெண்களின் மீது அவதூரை வாரி இறைத்தனரோ… அது கடவுளுக்கே வெளிச்சம். எங்களது நிகழ்ச்சியால் தேவிகா மற்றும் அவள் குடும்பத்தினருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு வருந்துகிறோம். எங்களது மன்னிப்பு கோரலை எழுத்துப்பூர்வமாக எழுதித் தருகிறோம். தவிர, நஷ்டஈடு கோரினால் தர தயாராகவும் உள்ளோம்!”
“”நஷ்டஈடாக ஒரு லட்சம் ரூபாய் வாங்கித் தரவா?” என்று, தேவிகாவிடமும், சந்துருவிடமும் கேட்டார் காவல்துறை ஆய்வாளர்.
“”நஷ்டஈடு பணமா வேணாம்,” என்றாள் தேவிகா.
“”பின்ன?”
“”நிகழ்ச்சி தயாரிப்பாளர், தொகுப்பாளர்கள் கன்னங்களில், தலா ஒரு அறை அறைய வேண்டும் நான்!”
நிலைய மேலாளர் தன் கன்னத்தை தடவியபடி முணுமுணுத்துக் கொண்டார்… அப்பாடா… நானும் தப்பிச்சேன்; ரோஜா “டிவி’ உரிமையாளரும் தப்பிச்சார். நிகழ்ச்சி தயாரிப்பாளர், தொகுப்பாளர்களை கெஞ்சி சம்மதிக்க வைத்தார். மூவரின் கன்னங்களும் பழுக்கும் வண்ணம் அறைந்தாள் தேவிகா.
இப்போதெல்லாம், “காதலர் பூங்கா’ ஒளிபரப்பப்படும்போது, கீழ்க்கண்ட கார்டையும் போடுகிறது ரோஜா “டிவி!’
“பெண் நேயர்களுக்கு எதிராக பொய்யான தகவல் அளிக்கும் ஆண் நேயர்களின் மீது, காவல்துறை கடுமையாக நடவடிக்கை எடுக்கும். நிகழ்ச்சியில் காதலன், காதலி, பெயர், ஊர் தெரிவிப்பதை தவிர்க்கவும்!’
கார்டு போடும் போதெல்லாம், நிகழ்ச்சி தயாரிப்பாளரின் கை, அனிச்சையாய் அறைபட்ட கன்னத்தை தடவிக் கொண்டது!

– பிப்ரவரி 2011

Print Friendly, PDF & Email

3 thoughts on “காதலர் பூங்கா

  1. ஹாஹாஹா அருமை நல்ல செருப்படி வாங்கினா போல இருக்கும் அந்த சேனலுக்கு … சந்துரு செய்தது சரி தான் .. வாழ்த்துக்கள் கதாசிரியர் அவர்களே..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *