கனகலிங்கம் சுருட்டு

 

ஒருவருடைய பெயரை வைத்துக் கொண்டு அவருடைய காலத்தைக் கணிக்க முடியுமா என்று சில சமயங்களில் நீங்கள் யோசிக்கலாம். முடியும் என்று நாங்கள் நம்பினோம். ஒரு காலக்கட்டத்தில் யாழ்ப்பாணத்தில் பிறந்த குழந்தைகளுக்கு ஒரேவிதமான முடிவுள்ள பெயர்களைத்தான் பெற்றோர் சூடினார்களோ தெரியவில்லை, அப்படியான தமிழ்ப் பெயர்களை வேறு பிரதேசங்களில் வாழ்ந்த தமிழர்களிடம் அதிகம் கேள்விப்பட்டதில்லை. கந்தையா, பொன்னையா, செல்லையா, சின்னையா, இராசையா, முருகையா, அழகையா என்று இப்படியான எல்லாப் பெயர்களும் யகர வரிசையில் முடிவதாகவும், பொன்னுத்துரை, சின்னத்துரை, செல்லத்துரை, கண்ணுத்துரை, ராசதுரை, அருமைத்துரை என்று துரையில் முடிவதாகவும் இருந்தன. வேறு ஒரு காலகட்டத்தில் பிறந்தவர்களுக்கு சிவலிங்கம், கனகலிங்கம், இராமலிங்கம், யோகலிங்கம், சந்திரலிங்கம், கணேசலிங்கம்; என்றும், கொஞ்சக் காலம் கழித்துப் பிறந்தவர்களுக்கு சிவராசா, தவராசா, நடராசா, வரதராசா, ஜெயராசா, குணராசா, யோகராசா என்று எல்லாமே ராசாவில் முடியும் பெயர்களாயும் இருந்தன. பெண்களுக்கும் இராஜேஸ்வரி, பரமேஸ்வரி, யோகேஸ்வரி, சிவனேஸ்வரி என்று பெயர்கள் இருந்தன. இப்படியான பெயர்களை வைத்துக் கொண்டே ஆணும்சரி, பெண்ணும்சரி அவர்கள் எந்த காலகட்டத்தை சேர்ந்தவர்கள் என்றும், வயதைக் கேட்காமலே குத்து மதிப்பாக அவர்களின் வயது என்னவாக இருக்கும் என்றும் ஓரளவு எங்களால் கணிக்க முடிந்தது.

கொழும்பிலே உள்ள மகாராஜா நிறுவனத்தில் நான் கடமையாற்றிக் கொண்டிருந்த போது இப்படியான பெயரைக் கொண்ட ஒருவரைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. ஒருநாள் காலை நேரம் நிர்வாக இயக்குநர் என்னைத் தனது அறைக்கு வரும்படி அழைத்திருந்தார். பொதுவாக நிதிநிர்வாகம் பற்றித்தான் நாங்கள் அவரோடு கலந்து உரையாடுவோம். ஏன் அவசரமாக அழைத்தார் என்ற சிந்தனையோடு அவரது அறைக்கு நான் சென்றபோது, அவருக்கு எதிரே வாட்டசாட்மாக ஒருவர் அமர்ந்திருந்தார். என்னைக் கண்டதும் எனக்கு அவரை அறிமுகப் படுத்தி வைத்தார்.

‘மீட் மிஸ்டர் பொன்யா’ என்றார் நிர்வாக இயக்குநர்.

பெயரைக் கேட்டு ஒரு கணம் நான் திகைத்தாலும் அது பொன்யா அல்ல பொன்னையாவாக இருக்கலாம் என்று அவரது தோற்றத்தைக் கொண்டு மனதுக்குள் கணித்துக் கொண்டேன். இங்கே இதுவரை புதிதாக வேலைக்கு வந்தவர்கள் எல்லாம் இளைஞர்களாகவும், நவீன பெயர்களைக் கொண்டவர்களாகவும் இருந்தனர். இப்படியான பெயரைக் கொண்ட ஒருவரை அன்று அங்கே சந்திக்க வேண்டி வரும் என்று நான் எதிர் பார்த்திருக்கவில்லை.

‘ஹலோ’ என்று பொக்கைவாய் தெரியச் சிரித்தார். இருவரும் கை குலுக்கிக் கொண்டோம்.

அவரோ ரைகட்டி கோட்சூட் அணிந்திருந்தார். அவரது பெயரை வைத்துக் கொண்டே அவரது வயதை ஓரளவு என்னால் ஊகிக்கக் கூடியதாக இருந்தது. சுமார் அறுபத்தியேழு அறுபத்தெட்டு வயதிருக்கலாம். நிறைய முடியோடு கூடிய பெரிய மண்டை, குழி விழுந்த கண்கள். கோட்பட்டன் இழுத்து மூடமுடியாதபடி செல்லத் தொப்பை ஒன்றுமிருந்தது. தொப்பைவண்டி தெரியாமலிருக்க, பான்ஸை இறுக்கி இடுப்பிலே தேற்பட்டை ஒன்றும் அணிந்திருந்தார். ஷேவ் செய்த துப்பரவான முகம். நல்லெண்ணெய் வைத்துத் தலை வாரியிருக்க வேண்டும், ஏனென்றால் யாழ்ப்பாணத்து நல்லெண்ணைய் வாசம் குப்பென்று அறையெங்கும் பரவியிருந்தது.

‘உங்களுடைய கொம்பனிக்கு இனிமேல் இவர்தான் இயக்குநராக இருப்பார்’ என்று நிர்வாக இயக்குநர் மேலும் சில விவரங்களையும் அவரைப் பற்றித் தெரிவித்தார். நான் புன்னகையோடு அவருக்கு வணக்கம் கூறி, அவரை எனது இடத்திற்கு அழைத்துச் சென்றேன்.

‘செக்ஸி கை’ (Sexy Guy) என்று அவரை வியப்போடு பார்த்துக் கண் சிமிட்டிவிட்டுச் சென்றாள் வாசலில் எதிர்ப்பட்ட கம்பனி செக்ரட்ரி.

எனது அறைக்கு அடுத்து இருந்த கண்ணாடித் தடுப்பு அறையைத்தான் அவருக்கு ஒதுக்கிக் கொடுத்திருந்தார்கள். எழுந்து நின்று எட்டிப் பார்த்தால் அவர் உட்கார்ந்திருப்பது தெரியக்கூடியதாகக் கண்ணாடி போட்ட தடுப்பு ஒன்றும் குறுக்கே இருந்தது. அவரோடு பழகத் தொடங்கிய பிறகுதான் அவரது பெரிய மண்டைக்குள் ஒரு கணினியே இருப்பது தெரியவந்தது. வயதிற்கேற்ற அனுபவத்தில் நிறைய விடையங்களைத் தெரிந்து வைத்திருந்தார். அரசாங்க திணைக்களத்தில் உயர்பதவியில் தொழில் புரிந்து ஓய்வு பெற்றதாலோ என்னவோ நிறைய அனுபவசாலியாகவும் இருந்தார். அவரை யாரும் இலகுவில் ஏமாற்றிவிட முடியாது என்பதும் புரிந்தது. அவரிடம் இருந்து முகாமைத்துவம், குறிப்பாகத் தொழிலாளர்களை எப்படிச் சமாளிப்பது என்பது போன்ற பல விடையங்களை அவருடன் பழகிய கொஞ்ச நாட்களில் நானும் நிறையவே கற்றுக் கொண்டேன். வாரம் ஒருமுறை நல்லெண்ணெய் தேய்த்துக் குளித்தால் உடம்புச் சூட்டைத் தணிக்கும், வெள்ளைப்பூடு சுட்டுச் சாப்பிட்டால் வயிற்றுக் கோளாறு நின்றுவிடும், வெந்தயம் சாப்பிட்டால் உடம்பு குளிர்மையாக இருக்கும், இஞ்சி, மிளகு, தேனின் பயன்பாடு என்றெல்லாம் அவர் உள்ளுர் வைத்தியர்போல அவ்வப்போது ஆலோசனை சொல்லிக் கொண்டே இருப்பார். அவர் சொல்வதை நாங்கள் கேட்கிறோமா இல்லையா என்பது பற்றி அவர் யோசிக்காமல் இல்லை, ஆனாலும் சொல்லவந்ததைச் சொல்லியே முடிப்பார்.

ஒருநாள் மதிய நேரம் என்னைத் தனது அறைக்கு வரும்படி அழைத்தார்.

எதிரே இருந்த நாற்காலி ஒன்றை இழுத்துப் போட்டுக் கொண்டு உட்கார்ந்தேன்.

‘எனக்கு ஒரு உதவி செய்யவேண்டும்’ என்று திடீரெனக் கேட்டார்.

‘என்.ன?’ என்றேன்.

‘யூ ஆர் லுக் லைக் மை சண், ஒரு மகனிடம் கேட்பது போலக் கேட்கிறேன்’ என்று பீடிகை போட்டார்.

‘சொல்லுங்க..!’ என்றேன்.

அவரது மேசையில் சிறிய சர்க்கரைப் போத்தல் ஒன்று இருந்தது.

‘எனக்கு லோ சுகர், தற்செயலாக எப்போதாவது நான் இங்கே இருக்கும் போது மயக்கமாகப் போய்விட்டால் இந்த சர்க்கரையை எடுத்து ஒரு ஸ்பூன் சர்க்கரை வாயில் போட்டு விடும்’ என்றார்.

பெரியதொரு விடயத்தை எவ்வளவு சாதாரணமாகச் சொல்கிறார். சர்க்கரையைவிட குளுக்கோஸ் விரைவாக வேலை செய்யும் என்று எனக்குத் தெரியும். ஆனாலும் அவர் சொன்னதைத் தட்டாது ஒரு மகனுடைய பாசத்தோடு சரி என்று தலை அசைத்தேன். முன்பெல்லாம் தண்ணீரில் மூழ்கி முத்துக் குளிப்பவர்கள் குளிக்கும்போது, கயிற்றின் மறுபக்கத்தை மைத்துணரின் கையில் பொறுப்பாகக் கொடுத்து விட்டுத்தான் தண்ணீரில் குதிப்பார்களாம். அவர்கள் மைத்துணரில் நம்பிக்கை வைத்திருந்தது போல இவர் என்மீது வைத்த நம்பிக்கை என்னை ஒருகணம் நெகிழ வைத்தது.

எப்பொழுதும் மதிய உணவு எடுத்ததும் அவர் வெளியே சென்று அங்கே உள்ள மலைவேப்பமர நிழலில் கொஞ்ச நேரம் நின்று ஓய்வெடுப்பார். கேட்டால் ஜில்லென்று வீசும் வேப்பங்காற்று உடம்பிற்கு நல்லதென்பார். அந்த நாட்களில தமிழ்நாட்டு சொக்கலால் ராமசேட் பீடி எப்படிக் கொழும்பில் உள்ள தொழிலாளர் வர்க்கத்திடம் பிரபலமாக இருந்ததோ அதேபோல நெவிகட், திறீறோஸ் சிகரட் இளைஞர்களிடையே பிரபல்யமாக இருந்தது. அதேபோல் யாழ்ப்பாணத்து கனகலிங்கம் சுருட்டு காரம் மணம் குணம் நிறைந்தது என்று எல்லோராலும் அறியப்பட்டதாகவும் இருந்தது. நகரத்திலே சுருட்டுக் குடிப்பவர்கள் மிகக் குறைவு. கொஞ்சம் வயதில் கூடிய ஒரு சிலர் மட்டுமே சுருட்டுக் குடிப்பதைக் கைவிடாமல் அப்போதும் தொடர்ந்து கொண்டிருந்தனர். அந்த ஒரு சிலரில் இவரும் ஒருவராக இருந்தார். வேப்பமரநிழலில் நின்றபடி காற்சட்டைப் பையுக்குள் கையை விட்டு ஒரு சிறிய பொதியை வெளியே எடுப்பார். அதில் இருந்து கறுப்பு நிறத்தில் உள்ள சுருட்டு ஒன்றை வெளியே எடுப்பார். நுனியில் இருந்து அடிவரை அதை உருட்டி ஏதோ விதமாய் பதம் செய்வார். தீப்பெட்டியை எடுத்து அதிலே பக்குவமாக ஒரு தீக்குச்சியை எடுத்து மிகவும் கவனமாக உராசி, அந்தச் சுருட்டைப் பற்ற வைப்பார். சிகரட்மாதிரி சுருட்டு இலகுவில் பற்றிக் கொள்ள மாட்டாது என்பதால், புக்குப் புக்கு என்று கண்ணை மூடித் தம் பிடித்து பொக்கைவாயால் உள்ளே இழுத்துப் புகைவிடுவார். அவருடைய நிறத்திற்கு, தூர நின்று பார்ப்பவர்களுக்கு கரி இஞ்சின் ஒன்று புகை கக்குவது போலத் தெரியும். அந்த மலைவேப்பமர நிழலில் தினமும் நடக்கும் ஒரு நிகழ்வாக இது இருக்கும். அந்த இடத்தைவிட்டு அவர் சென்ற பின்பும் சுருட்டுப் புகைமணம் அந்த இடத்தில் அவர் அங்கே நின்றதற்கான அடையாளத்தை உறுதிப் படுத்தி நிற்கும்.

யாழ்ப்பாணம் புகையிலைக்குப் பெயர் போனதாக இருந்தது. கரீபியன் தீவுகள், மெக்ஸிக்கோ, குவாதமாலா போன்ற இடங்களில் 10ம் நூற்றாண்டளவில் புகையிலையின் பாவனை இருந்ததற்கான சான்றுகள் உண்டு. எப்படி யாழ்ப்பாணத்திற்குப் புகையிலைச் செடியைக் கொண்டு வந்து பயிரிட்டார்கள் என்பது தெரியவில்லை. புகையிலை பயிரிடும் பிரதேசங்களில் போறணை என்று சொல்லப்படுகின்ற சூட்டு அடுப்பில் தான் புகையிலை பதனிடப் படுவதுண்டு. இந்தப் புகையிலையில் இருந்து தான் சுருட்டுச் செய்யப்படும். சுருட்டுச் சுற்றுவது என்பது யாழ்ப்பாணத்தில் ஒரு குடிசைக் கைத்தொழிலாக இருந்தது மட்டுமல்ல, நல்ல வருமானத்தையும் பெற்றுப் பல குடும்பங்களுக்குச் சாப்பாடும் போட்டது. சுற்றியிருந்து எல்லோரும் சுருட்டுச் சுற்றும்போது ஒருவர் மட்டும் அன்றைய தினப்பத்திரிகையை எடுத்துப் பலமாக வாசித்துக் காட்டுவார். கண் காரியத்தில் இருந்தாலும் செவிகள் அன்றைய செய்தியை உள்வாங்கிக் கொள்ளும். அந்த இடத்தில், பத்திரிகை வாசிப்பது என்பது தினசரி நடக்கும் ஒரு நிகழ்ச்சியாக இருக்கும்.

இவருடைய பெற்றோர்கள் யாழ்பாணத்தவர்களாக இருந்தாலும் இவர் கொழும்பிலேதான் பிறந்து வளர்ந்திருந்தார். கொழும்பில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் தான் கல்வி கற்று, பொறியியலாளராக அதியுயர் புள்ளிகள் பெற்று பல்கலைக்கழகப் பட்டம் பெற்றிருந்தார். நல்ல ஆங்கில அறிவு உடையவராகவும் இருந்தார். அரசாங்கத்தில் உயர் பதவில் இருந்த இவர் ஓய்வு பெற்றதும் வீட்டிலே சோம்பேறியாக இருக்க விரும்பாமல் இங்கே வேலைக்கு வந்து சேர்ந்தார். இவரது அனுபவத்தையும், திறமையையும் கண்டு கொண்ட எங்கள் நிறுவனம் எந்தவித மறுப்புமில்லாமல் அவரை உள்வாங்கிக் கொண்டது. குறுகிய காலத்தில் எல்லோரையும் தன் வசமாக்கிக் கொண்ட, அனுபவம் மிக்க ஒருவரின் சேவை கிடைத்ததில் எங்கள் நிறுவனம் பெருமைப்பட்டது.

தினமும் அவர் மதிய உணவு அருந்திவிட்டு வந்து உட்கார்ந்தபின், நான் அடிக்கடி எழுந்து நின்று அவரது அறையை நோட்டம் விடுவதை வழக்கமாக்கிக் கொண்டேன். அன்று மதியம் என்னுடன் பேசும்போது மறுநாள் அவர் விடுப்பு எடுத்திருப்பதாவும், அதனாலே வேலைக்கு வரப்போவதில்லை என்றும் சொன்னார். அது அவருடைய சொந்த விடையம் என்பதால், ஏன் என்று நான் கேட்கவில்லை. நான் கேட்காமலே அவர் ஏன் விடுப்பு எடுக்கிறார் என்பதற்குக் காரணம் சொன்னார். மறுநாள் அவரது தாயாரின் திதி என்றும் அதனாலே திவசம் கொடுப்பதற்காக வீட்டிலே நிற்கப் போவதாக விளக்கம் சொன்னார். எனக்கு அதைக் கேட்டதும் வியப்பாக இருந்தது. இந்த வயதிலும் தாயாரை மறக்காமல், விடுப்பெடுத்து திதி கொடுக்கிறாரே என்று நினைத்துப் பார்த்த போது, எனக்கு அவர்மேல் இருந்த மதிப்பு இன்னும் ஒரு படி மேலே உயர்ந்தது. தேவையான காசோலைகளில் கையெழுத்தை வாங்கி வைத்துக் கொண்டு, இதைவிட ஏதாவது அவசர தேவை என்றால் அவரது வீட்டிற்கு மறுநாள் வந்து கையெழுத்தைப் பெறுவதாகவும் கூறியிருந்தேன்.

மறுநாள் ஏற்கனவே அறிவித்தபடி அவர் வேலைக்கு வரவில்லை. மாலை ஆறுமணியளவில் நான் வீட்டிற்குப் பேவதற்காக ஆயத்தங்கள் செய்தபோது தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. எடுப்பதா விடுவதா என்று அரைமனதோடு எடுத்து என்ன என்று கேட்ட எனக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பொன்னையா அவர்கள் திடீரென இறந்து விட்டதாக அதிர்ச்சியில் இருந்த அவரது மனைவி அந்த துயரச் செய்தியை அழுதழுது சொன்னார். என்னால் நம்பமுடியாமல் இருந்தது. மறுநாள் அவர் வேலைக்கு வந்ததும், அவரிடம் கையெழுத்து வாங்குவதற்காக தயாராக எடுத்து வைத்திருந்த காசோலைகள் மின்விசிறிக் காற்றில் ‘வாழ்வே மாயம்’ என்பதுபோல, நிலையில்லாமல் என் கண்முன்னால் படபடத்தன. உடனடியாகவே வண்டியை எடுத்துக் கொண்டு அவரது வீட்டிற்குச் சென்றிருந்தேன்.

திவசம் கொடுத்துவிட்டு களைப்பாக இருக்கிறது என்று சாய்மனைக் கதிரையில் படுத்திருந்ததாகவும், மனைவி அவர் ஓய்வெடுத்துத் தூங்குவதாக நினைத்து, சந்தைக்கு காய்கறி வாங்க வெளியே சென்றதாகவும் குறிப்பிட்டார். திரும்பி வந்து பார்த்தபோது அவர் இன்னும் தூங்குவதாக நினைத்ததாகவும், அவருக்குத் தேனீர் தயாரித்துக் கொண்டு வந்து நீட்டிய போதுதான் அவர் எழுந்திருக்கவில்லை என்பதைக் கவனித்தாகவும் சொன்னார். தனது தாயாரின் திதியின் அன்றே அவரும் இறைவனடி சேர்ந்திருந்தார். மறுநாள் நடந்த அவரது மரணச் சடங்கிலும் பங்கு பற்றி விட்டு வேலைக்கு வந்திருந்தேன்.

‘நேற்றிருந்தார் இன்றில்லை’ என்ற நினைவு என்னை வாட்டியது. நிம்மதியான சாவு என்று கம்பனியில் எல்லோரும் பேசிக்கொண்டாலும், எனக்கு மட்டும் ஏனோ அதில் உடன்பாடு இருக்கவில்லை. தனது ஆரோக்கியத்தில் இவ்வளவு கவனமாக இருந்தும், அவருக்கு இப்படி ஆகிவிட்டதே என்ற கவலை என்னை வாட்டிக் கொண்டிருந்தது. அவருடைய ஒவ்வொரு அசைவும் கண்ணுக்குள் நிலைத்து நின்றாலும், அவர் இல்லையே என்ற வெறுமையின் தாக்கம் எனக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. எழுந்து நின்று மறுபக்கம் எட்டிப் பார்த்தேன். அடுத்த கண்ணாடித் தடுப்புக்குள் அவர் உட்கார்ந்து இருப்பது போன்ற பிரேமை எனக்குள் ஏற்பட்டாலும் அவர் இல்லை என்ற நிஜம் என்னைத் தடுமாற வைத்தது. உட்கார்ந்து கொண்டு யோசித்துப் பார்த்தேன். ஒருவேளை இரத்தத்தில் சர்க்கரை போதாமல்தான் இறந்திருப்பாரே? அவர் அன்று விடுப்பு எடுக்காமல் வேலைக்கு வந்திருந்தால் நான் அவரைக் கவனமாகக் கவனித்திருப்பேனோ, அந்த மரணத்தைத் தவிர்த்திருக்கலாமோ என்றெல்லாம் மனசு குழம்பிப் போய்க் கிடந்தது. மனசு சமாதானப்படாமல் போகவே, என்னையறியாமலே மீண்டும் எழுந்து மறுபக்கம் எட்டிப்பார்த்தேன். அவர் உட்கார்திருந்த நாற்காலி மட்டுமல்ல, அவரது மேசையில் இருந்த அந்த சர்க்கரைப் போத்தலும் வெறுமையாகவே காட்சி தந்தது.

(பாரிஸ் தமிழர் கல்விநிலையத்தின் வெள்ளிவிழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட சிறுகதைப் போட்டி – 2012 ல் பரிசு பெற்ற சிறுகதை – ஆசிரியர்) 

தொடர்புடைய சிறுகதைகள்
அந்த செய்தி என்னை மிகவும் பாதித்திருந்தது. ஒரு கணம் கணனித் திரையைப் பார்த்தபடி உறைந்து போயிருந்தேன். காரணம் நேற்றுத்தான் ஹரம்பிக்கு ஒரு லைக் போட்டு பிறந்த நாள் வாழ்த்துச் செய்தி அனுப்பியிருந்தேன். இப்பொழுதெல்லாம் முகநூல் இருப்பதால் உடனுக்குடன் வாழ்த்துச் செய்தி அனுப்பி எங்கள் விருப்பத்தைச் ...
மேலும் கதையை படிக்க...
அம்மா தனித்துப் போயிருந்தாள். இடம் பெயர்ந்தபோது பக்கத்து வீட்டு பரிமளம் அன்ரியுடன்தான் அம்மாவும் சென்றதாகச் சொன்னார்கள். பரிமளம் அன்ரிக்கு அம்மா மீது ஒரு வகை பாசம் இருந்தது. அவர்கள் கடைசியாகச் சாவகச்சேரியில் தங்கியிருந்ததாக எனக்குத் தகவல் கிடைத்தது. அப்படி என்றால் சாவகச்சேரி ...
மேலும் கதையை படிக்க...
ஏதோ ஒன்று, அவனது இதயத்தை மெல்ல வருடியதால், முன்வரிசையில் உட்கார்ந்து தூங்கிவழிந்து கொண்டிருந்த தினேஷ் திடுக்கிட்டு விழித்துப் பார்த்தான். கானக்குயில் ஒன்று மேடையில் கீதமிசைத்துக் கொண்டிருந்தது. இது கனவல்ல நிஜம்தான் என்பது, அந்த அழகு மயில் அங்குமிங்கும் மெல்ல அசைந்து கொண்டிருந்ததில் அவனுக்குப் புரிந்தது. சற்று ...
மேலும் கதையை படிக்க...
கதை ஆசிரியர்: குரு அரவிந்தன் கடந்த இரண்டு நாட்களாக அவன் என் பார்வையில் பட்டுக்கொண்டே இருக்கிறான். எதேச்சையாக யன்னலுக்கால் பார்வையைப் படரவிட்டபோது, அவன் வாசலில் உட்கார்ந்திருப்பது தெரிந்தது. கலைந்த முடியும், நாலுமுழ வேட்டியும் சட்டையுமாய் ஏதோ ஒன்றுக்கான எதிர்பார்ப்போடு இருக்கிறான் என்பது மட்டும் ...
மேலும் கதையை படிக்க...
எதைத்தான் தொலைப்பதென்ற விவஸ்தையே கிடையாதா? நண்பன் பதட்டத்தோடு ஓடிவந்து சொன்னபோது, நான் நம்பவில்லை. இராணுவம் ஆக்கரமித்த மண்ணில் மரணம் எப்படிச் சாதாரண நிகழ்வாய்ப் போய்விட்டதோ, அதேபோல கற்பைத் தொலைப்பதுகூட ஒரு சாதாரண நிகழ்வாயப் போய்விடுமோ என்ற அச்சத்தோடு தங்கள் சொந்த மண்ணில் தமிழ் ...
மேலும் கதையை படிக்க...
ஹரம்பி
உறவுகள் தொடர்கதை
இதயத்தைத் தொட்டவள்..!
காவி அணியாத புத்தன்
எதைத்தான் தொலைப்பது?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)