கத்திச் சண்டை
அணு ஆயுதத்தின் தீமை பற்றி சிறுகதை எழுத வேண்டும் என்று ஒரு போட்டி வைத்தார்கள் எங்கள் கல்லூரியில்.
நான் இந்த சிறுகதையை எழுதிக் கொடுக்க, அணு ஆயுதத்தை பற்றி எழுதச் சொன்னால், இது என்ன கத்திச்சண்டையைப் பற்றி எழுதி கொடுத்து இருக்கிறாய், உன்னுடைய இந்த கத்திச் சண்டைக்கும், அணு ஆயுதத்தின் தீமைக்கும் என்ன சம்மந்தம் என்று கேட்கிறார்கள். நீங்கள் படித்து பார்த்துச் சொல்லுங்கள்.
***
தேவ புரி என்ற நாட்டுக்கு ராஜ வர்மன் என்ற மன்னன் இருந்தான். அந்த ராஜாவுக்கு இரட்டையர்களாக இரண்டு மகன்கள் பிறந்தார்கள். இளவரசர்கள் இருவருக்கும் பெரிய மாறவர்மன், சிறிய மாறவர்மன் என்று ராஜ வர்மன் பெயரிட்டார்.
ஆனால் அவருக்கு ஒரு குறை. இரண்டு மகன்களும் எப்போது பார்த்தாலும் சண்டை பிடித்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் அடித்துக் கொள்ளும் போது, சிலசமயம் ரத்தம் சொட்டும். இதற்காக அவர்கள் இருவரையும் வேறு வேறு அறைகளில் வைத்து பூட்டி விடுவார். இந்த மன வருத்தம் காரணமாகவோ என்னவோ, அந்த இரட்டை குழந்தைகளைப் பெற்ற மகா ராணி காலமாகி விட்டார்.
அந்த இரட்டை இளவரசர்கள் இருவருக்கும் எல்லாவிதமான வித்தைகளையும், கற்றுக் கொடுத்து தேர்ச்சி பெறச் செய்தார் ராஜ வர்மன். குறிப்பாக வாள் சண்டையில் இருவரும் நன்றாக தேர்ச்சி பெற வேண்டும் என்று விருப்பப் பட்ட ராஜ வர்மன், அதற்கான ஆசான்களை வைத்து சொல்லிக் கொடுத்தார். இளவரசர்களும் வாள் சண்டையில் நன்றாக தேர்ச்சி பெற்றார்கள்.
அவர்களுக்கு பதினாறு வயது ஆனது.
தன் மகன்கள் இருவருக்கும், எந்த ஒரு தகப்பனும் கொடுக்க முடியாத பரிசுகளைக் கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்தார் ராஜ வர்மன். அப்படிப் பட்ட பரிசை கடவுளிடம் இருந்து தான் பெற முடியும் என்று தெரிய, அதற்காக கடுந்தவம் செய்தார்.
ராஜ வர்மனின் தவ வலிமையை மெச்சி, கடவுள் அவர் முன் தோன்றி,
“ பக்தா.. உன் தவத்தை மெச்சினோம்.. உனக்கு வேண்டியதைக் கேள். யாம் தருகிறோம்..” என்றார்.
“ சுவாமி.. இரட்டைப் பிறவிகளான என் மகன்கள் இருவரும், வாள் சண்டையில் தேர்ச்சி பெற்று விட்டார்கள்.. அவர்கள் இருவருக்கும் அற்புத சக்தி கொண்ட இரண்டு வாட்களை நான் பரிசளிக்க விரும்புகிறேன்.. அந்த வாளுக்கு தோல்வி என்பதே இருக்கக் கூடாது. எத்தனை பேர் எதிரில் வந்தாலும், அத்தனை பேரையும் அந்த வாள் வெட்டிச் சாய்க்க வேண்டும்.. அப்படிப் பட்ட இரண்டு வாட்களை அளித்து எனக்கு அருள் பாலிக்க வேண்டும்..” என்றார் ராஜ வர்மன்.
ராஜவர்மன் வேண்டிக் கேட்டபடி அற்புத சக்தியோடு கூடிய இரண்டு வாட்களை பரிசளித்த கடவுள் ஒரு விஷயத்தை மேலும் சொன்னார்.
“ ராஜ வர்மா.. ஒன்று கேள்.. அந்த இரண்டு வாட்களும் எக்காரணத்தைக் கொண்டும் ஒன்றோடு ஒன்று சண்டையிடக் கூடாது.. அப்படி அந்த வாட்கள் ஒன்றோடு ஒன்று மோதினால் அந்த கணமே அவைகள் இரண்டுமே உடைந்து நொறுங்கி விடும்..”
“ இது நல்லது தான் சுவாமி. என் மகன்களிடம் இந்த விஷயத்தைச் சொல்லியே அந்த வாட்களை நான் கொடுக்கிறேன். அவர்கள் தங்களுக்குள் சண்டையிடாமல் ஒற்றுமையாய் இருக்க இது உதவும்..”
‘ இல்லை ராஜவர்மா.. . இந்த ரகசியத்தை நீ எப்போதும் அவர்களிடமோ வேறு யாரிடமோ சொல்லக் கூடாது. அப்படி நீ இந்த ரகசியத்தைச் சொன்னால், அந்த இரண்டு வாட்களும் உடனே தங்கள் சக்தியை இழந்து விடும்.. அவர்கள் தங்களுக்குள் சண்டையிடாமல், ஒற்றுமையாக இருக்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டியது உன் பொறுப்பு..” என்று சொல்லிவிட்டு, ராஜ வர்மன் கேட்டபடி இரண்டு வாட்களை பரிசளித்து விட்டு, கடவுள் மறைந்தார்.
இரண்டு வாட்களையும் கையில் வாங்கிக் கொண்ட ராஜ வர்மன், மிகுந்த குழப்பதிற்கும், கவலைக்கும் உள்ளானார்.
என்ன செய்வது.. தன் மகன்களை நம்பி இந்த வாட்களை கொடுக்கலாமா..
தன் மகன்களை சண்டையிடாமல் பார்த்துக் கொள்வது சாத்தியமா..
யோசித்து பார்த்து விட்டு, அந்த வாட்களை உடனடியாக அவர்களிடம் கொடுக்கப் போவதில்லை என்று முடிவு செய்தார். இப்படி இரண்டு வாட்களை கடவுளிடம் இருந்து பெற்றேன் என்பதையும் யாரிடமும் சொல்லவில்லை. பாதாள அறையில் யாருக்கும் தெரியாமல் அந்த வாட்களை பூட்டி வைத்தார்.
தன் மகன்கள் தங்களுக்குள் சண்டையிடும் பொதெல்லாம் அவருடைய கவலை அதிகரித்து விடும். ஒற்றுமையாக இருக்க வேண்டும். எக்காரணத்தை கொண்டும் இருவரும் சண்டையிட்டு கொள்ளக் கூடாது என்று சொல்லுவார்.
ஆனால் அவர்கள் கேட்பதாக இல்லை.
அவர்கள் திருந்தும் வரைக்கும் இந்த வாட்களை அவர்களுக்கு கொடுப்பது இல்லை என்று முடிவு செய்தார்.
நாட்கள் ஓடின. ஆனால் எந்த முன்னேற்றமும் இல்லை.
அன்று பதினெட்டாவது பிறந்த நாள் இருவருக்கும்.
பிறந்த நாளை விமரிசையாக கொண்டாட ஏற்பாடு செய்து இருந்தார். இந்த பிறந்த நாளில், இருவரும் சண்டை போட்டுக் கொள்ளாமல் இருந்தால் பிறந்த நாள் பரிசாக இந்த வாட்களை கொடுத்து விடுவது என்று முடிவு செய்திருந்தார்.
ஆனால் அன்று காலையில் படுக்கையில் இருந்து எழுந்தவுடனே இருவருக்கும் சண்டை ஆரம்பித்து விட்டது. பிறந்த நாளுக்கு தயாரித்த உடைகளில் ஆரம்பித்து, சாப்பிடும் பொருள் வரை ‘ இது எனக்குத் தான், உனக்கு கொடுக்க முடியாது’ என்று சண்டை. பிறந்த நாளுக்காக அழைத்திருந்தவர்கள் முன்னிலையில் அவர்கள் சண்டை போட்டுக் கொள்ளும் அளவுக்கு போய்விட,. பெருத்த அவமானமாக போய் விட்டது ராஜவர்மனுக்கு.
மிகுந்த குழப்பத்திற்கிடையே தூங்கப் போனார் ராஜ வர்மன்.
மனதிலே எப்படியாவது இவர்கள் மாறி விடுவார்களா என்ற எதிர்பார்ப்பு.
இந்த எதிர்பார்ப்புடன் அவர் தூங்கப் போக, கனவில் அவர் எதிர்பார்த்த படி அவர்கள் சண்டை போடாமல் ஒற்றுமையாக இருக்க ஆரம்பித்து விடுகிறார்கள். அவரும் அந்த இரண்டு வாட்களையும் அவர்களுக்கு பரிசளித்து விடுகிறார்.
உடனே இரட்டையர்களான இளவரசர்கள் இருவரும் தங்கள் தந்தை கொடுத்த அந்த வாளுடன் அண்டை நாட்டினரிடம் போருக்கு போய் அனைவரையும் கொன்று குவித்து வெற்றி வாகை சூடினார்கள்.
பிணக் குவியல்களின் மேலே அந்த இரட்டையர்கள் உலகத்தையே தங்கள் காலடியில் கொண்டு வந்து விடுவார்கள் என்று தோன்றியது.
இந்த சூழ்நிலையில் மாதேச நாட்டின் மீது இரட்டையர்கள் படையெடுத்தார்கள்.
வழக்கம் போல் பெரிய மாற வர்மனும், சிறிய மாறவர்மனும் அந்த மாய வாட்களை தங்கள் கைகளில் எடுத்துக் கொண்டு மனித தலைகளை உருட்டிக் கொண்டு மாதேச நாட்டிற்குள் நுழைந்து கோட்டையை முற்றுகை இட்டார்கள்.. மாதேச நாட்டின் படை கோட்டையை பாதுகாக்கவும், முற்றுகையை முறியடிக்கவும் முடிந்த வரை போராடியது.
ஆனால் அந்த மாய வாட்களின் முன் யாராலும் நிற்க முடியவில்லை.
குற்றுயிராய் மனித உடல்கள் நிரம்பிக் கிடக்க, கோட்டை தகர்க்கப் பட்டு, தேவ புரியின் சேனை மாதேச நாட்டுக் கோட்டைக்குள் நுழைந்தது.
கண்ணில் பட்ட அனைத்து ஆண்களையும், இரட்டைச் சகோதரர்கள் வெட்டிச் சாய்த்து விட்டார்கள். அதில் மாதேச நாட்டு மன்னரும், அவரின் இரண்டு மகன்களும் அடங்கும். அனைவரையும் கொன்று விட்டு பெண்கள் தங்கியுள்ள அந்தப் புரத்தில் பெரிய மாறவர்மனும், சிறிய மாற வர்மனும் நுழைந்தார்கள்..
அந்தப் புரத்தில் இருந்த பெண்கள் அனைவரும் அலறி அடித்து கொண்டு அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருக்க, ஒரு இளம் பெண் மட்டும் அமைதியாக உட்கார்ந்து கொண்டிருப்பதை பார்த்து இருவரும் மயங்கி நின்றனர்.
“ பூலோகத்தில் இப்படி ஒரு அழகியா.” என்று இளையவன் வாய் விட்டு சொன்னான்.
ஓடிக் கொண்டிருந்த ஒரு பணிப்பெண்ணை நிறுத்தி,
“ யார் அந்த அழகி..” என்று இளையவன் கேட்க,.
“ அவள் தான் இளவரசி.. பெயர் வசந்தி தேவி..” என்று சொல்லி விட்டு ஓட்டம் பிடித்தாள் அந்த பணிப்பெண்.
இளவரசியின் அருகே சென்று உட்கார்ந்த அவன், அவளின் கையைப் பிடித்து,
“ பெண்ணே.. உனக்கு என்ன வேண்டும்..” என்றான் இளையவன்.
இளவரசியின் கையை இளையவன் பிடிப்பதைப் பார்த்த மூத்தவன்,
“ அவளைத் தொடாதே.. அவள் எனக்குத் தான்..” என்றான் கோபத்துடன்.
“ இல்லை இவள் எனக்குத்தான்… இவளை எனக்கு பிடித்து விட்டது.” என்றான் இளையவன்.
“ அது முடியாது.. நான் தான் மூத்தவன்.. எனக்குத் தான் முதல் உரிமை..”
யோசித்த இளையவன் சொன்னான்.
“ சரி.. இவளிடமே கேட்கலாம்.. நம் இருவரில் யாரை மணந்து கொள்ள இவளுக்கு விருப்பம் என்று..”
“ சரி..”என்றான் மூத்தவன்.
இருவரில் யாரை மணந்து கொள்ள அவளுக்கு விருப்பம் என்று அவளிடம் இருவரும் கேட்க, இதற்காகவே காத்திருந்த அவள்,
“ முதலில் என் தந்தைக்கும், எனது தமையன்களுக்கும் முறையான இறுதிச் சடங்கு நடக்கட்டும்.. அது மட்டுமல்ல, நீங்களும் உங்கள் படையும் இனி மாதேச நாட்டு மக்களுக்கு எந்த தொந்திரவும் செய்வதில்லை என்று உறுதி கொடுக்க வேண்டும்.. பிறகு இதைப் பற்றி பேசலாம்..” என்றாள்.
இளவரசியின் இந்த இரண்டு கோரிக்கைகளை இரட்டையர்கள் ஏற்றுக் கொண்டது மட்டுமல்லாமல், அதை நிறைவேற்றுவதில் இருவரும் போட்டி போட்டார்கள்.
சகல ராஜ மரியாதைகளுடன் வசந்திதேவியின் தந்தை மற்றும் தமையன்களின் இறுதிச் சடங்கு நடந்தது.
மாதேச நாட்டு மக்களுக்கு எந்த தொந்திரவும் செய்வதில்லை என்ற உறுதி மொழியை அவர்களிடம் இருந்து வாங்கிக் கொண்டு, அதன்படி தன் குடிமக்கள் நடத்தப் படுகிறார்களா என்பதையும் பார்த்துக் கொண்டாள் வசந்தி தேவி.
மூன்றாவது நாள். மூத்தவனும், இளையவனும் இளவரசியிடம் சென்று இருவரில் யாரை மணந்து கொள்ள அவளுக்கு விருப்பம் என்று கேட்க, அதற்கு அவள்,
“ உங்கள் இருவருக்கும் இடையில் வாள் சண்டை போட்டி வைக்கலாம்.. அந்த போட்டியில் யார் வெற்றி பெறுகிறார்களோ, அவரை நான் மணந்து கொள்கிறேன்..” என்றாள் இளவரசி.
இரட்டையர்கள் இருவரும் இதற்கு ஒப்புக் கொண்டார்கள்.
வாள் சண்டை போட்டிக்கு ஏற்பாடானது.
எல்லோரும் கூடினார்கள்,
போட்டி ஆரம்பித்தது.
முதலில் மூத்தவன் வேகமாய் தன் வாளை தூக்கிக் கொண்டு இளையவனை நோக்கி ஓடினான்.
ஒரே வீச்சில் தன் தம்பியை வீழ்த்தி வெற்றி பெற்று இளவரசியை மணந்து கொள்ள வேண்டும் என்ற வெறி அவன் முகத்தில் தெரிந்தது.
அதே கோபத்துடன், இளையவன் வேகமாய் ஓடி வந்து தன் வாளைக் கொண்டு மூத்தவனின் வாளைத் தடுக்க,
என்ன ஆச்சர்யம்..
அந்த இரண்டு வாட்களும் ஒன்றை ஒன்று தொட்ட மாத்திரத்தில் இரண்டும் உடைந்து நொறுங்கி விழுந்தன.
இளையவன் அதிர்ச்சியில் உறைந்து போய், நொறுங்கி தரையில் விழுந்த தன் மாய வாளையே பார்த்துக் கொண்டிருக்க, அந்த சமயத்தில், மூத்தவன் தன் இடுப்பில் இருந்த குறுவாளை எடுத்து தம்பியின் வயிற்றில் குத்த முயன்றான்.
இளையவன், தப்பிக்க முயன்றும், முடியாமல், வயிற்றின் ஓரத்தில் குறுவாள் குத்தி விட, ரத்தம் வர ஆரம்பித்தது.
சொட்டும் தன் ரத்தத்தை தொட்டுப் பார்த்தான் இளையவன்.
ஆத்திரம் வந்தது அவனுக்கு. தன் இடுப்பில் இருந்த குறுவாளை எடுத்து, மூத்தவனை நோக்கி ஆக்ரோசமாய் பாய்ந்து அவன் வயிற்றில் குத்த, பீறிட்டு ரத்தம் வந்தது மூத்தவனுக்கு.
அவனும் தன் ரத்தத்தை தொட்டுப் பார்த்து ஆத்திரமடைந்து இளையவனை தாக்கினான்.
இப்படி அவர்கள் இருவரும் ஒருவரை பல இடங்களில் குத்தி கொள்ள, கடைசியில் குருதி கொட்டக் கொட்ட இருவரும் செத்து விழுந்தார்கள்.
இரட்டை இளவரசர்கள் மடிந்து போனதும், அவர்களின் மாய வாட்கள் உடைந்து போனதும் தெரிய வர, தேவ புரியின் சேனை நிலை குலைந்து போனது.
அதை உபயோகிப் படுத்தி, உடனே அந்த இளவரசி தன் நாட்டு படைக்கு தலைமை ஏற்றாள்.
ஓடிப் போன தன் நாட்டு சேனையை ஒருங்கிணைத்து போர் புரிந்தாள். மாதேச நாட்டு சேனை இளவரசியின் தலைமையில் அற்புதமாய் போர் புரிந்தது.
தேவ புரியின் சேனை பின்வாங்கி ஓட, விடாமல் துரத்தி தேவ புரிக்குள் வந்த இளவரசி வசந்தி தேவி,
“ எங்கே அந்த கிழவன்… அந்த கொடூர வாட்களை உருவாக்கியவன் எங்கே.. என் அப்பாவையும். அண்ணன்களையும், என் மக்களையும் கொன்று குவித்த அவனை, என் கையால் கொன்றால் தான் என் ஆத்திரம் தீரும்…” என்று சொல்லிக் கொண்டு ராஜ வர்மனை தேடி வந்த இளவரசி, தன் கையிலிருந்த வாளை ராஜ வர்மனின் நெஞ்சில் பாய்ச்சும் போது, ராஜ வர்மனுக்கு கனவிலிருந்து விழிப்பு வந்து விட்டது.
படுக்கையிலிருந்து தட்டுத் தடுமாறி எழுந்த ராஜ வர்மன், பதைபதைப்புடன் பாதாள அறைக்கு ஓடிப்போய் பூட்டி வைத்திருந்த அந்த இரு வாட்களும் பத்திரமாக இருக்கிறதா என்று பார்த்தார். அவைகள் பத்திரமாக இருந்தன. தன் இரண்டு கைகளிலும் அந்த இரண்டு வாட்களை எடுத்துக் கொண்டார்.
பாதாள அறையின் படிக்கட்டுகளில் சிரமப் பட்டு ஏறினார். ஜன்னல் வழியாக வெளியில் வானத்தைப் பார்த்தார். கும்மிருட்டு.. விடிவதிற்கு நான்கு நாழிகையாவது இருக்கும் என்று கணக்கு போட்டார்.
“ யாரங்கே..” என்று கூப்பிட்டார்.
ஒரு வயதான காவலாளி ஓடி வந்தான்.
“ எனக்கு தூக்கம் வர மாட்டேன் என்கிறது. நாம் இருவரும் கத்திச் சண்டை விளையாட்டு விளையாடலாம்.. இந்தா இந்த வாளைப் பிடி..” என்று அந்த இரு வாட்களில் ஒன்றை காவலாளியிடம் கொடுத்தார். அந்த காவலாளிக்கு உதறல் எடுத்தது.
நடுங்கிய கைகளுடன் அந்த வாளை வாங்கினான் காவலாளி.
காவலாளியிடம், தன்னை நோக்கி சண்டையிட வருமாறு சைகை காட்டி, ‘ வா.’ என்று கர்ஜித்தார் ராஜவர்மன்.
கட்டளையை மீற பயந்த அந்த காவலாளி, நடுக்கம் நீங்காமல் இரண்டு கைகளாலும் அந்த வாளை தூக்கிக் கொண்டு முன்னேறி வர, ராஜ வர்மன் தன்னிடமுள்ள வாளினால் அந்த வாளை தடுக்க முயல, இரண்டு வாட்களும் ஒன்றை ஒன்று தொட்ட மாத்திரத்தில் உடைந்து நொறுங்கி விழுந்தன,
பயந்து போனான் அந்த காவலாளி.
“ பயப் படாதே.. இது தான் நான் விரும்பியது..” என்றார் ராஜ வர்மன் அமைதியாக.
- கணையாழி, ஜுலை 2016
மிக ஆழமான கதை .பாராட்டுகள்
நன்றி ரத்னவேலு அவர்களே