கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: May 18, 2020
பார்வையிட்டோர்: 18,547 
 

வீரென்று பக்கத்து வீட்டுப் பெண்கள் கத்தும் சத்தம் கேட்டு ஓடினேன்.

மாடிப்படிக்குக் கீழே பெரியவர் மல்லாந்து கிடந்தார்.

பேரன் பேத்திகள் கோரஸாய் மாடி எறங்கறப்போ தாத்தா தடுமாறி விழுந்துட்டார் அங்கில் என்றனர்.

நிலைமையைப் புரிந்து கொண்ட நான் உடனடியாக எதிர் வீட்டுக்கு ஓடினேன்.கைலி பனியன் சகிதமாய் கையில் ஹிந்துப் பத்திரிகையோடு நின்றிருந்த டாக்டர் என்னைப் பார்த்ததும் என்னாச்சு எனக் கேட்ட படிக் கேட்டைத் திறந்தார்.

விசயம் சொன்னதும் விரைவாய் ஓடி வந்தார்.டாக்டரைப் பார்த்ததும் வீட்டுப் பெண்கள் விலகி நின்றனர்.பெரியவரின் மணிக்கட்டைப் பிடித்துப் பார்த்தும் விழிகளை விரித்துப் பார்த்தும் உதட்டைப் பிதுக்கினார் டாக்டர்.

என்னாச்சு டாக்டர்?

கதை முடிஞ்சு போச்சு.

கொஞ்ச நேரம் அங்கே மயான மௌனம். அதன்பின் பெரியவரின் பெரிய மகன் கணபதி கதவைப் பிடித்துக்கொண்டு கேவிக் கேவி அழுதான்.

சின்னவனின் கண்களோ சிவப்பாக இருந்தன.அவன் அவருக்கு பக்கத்திலே குத்த வைத்து உட்கார்ந்தான். அவருடைய கன்னத்தை தடவிக் கொடுத்து அப்பா என்று அலறலோடு கத்தினான்.

பெண்கள் விசும்பிக் கொண்டு இருந்தார்கள். அடுத்து ஓர் அமைதி நிலவியது .என்ன செய்வது என்று தெரியாமல் நானும் டாக்டரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தோம். ஏதாவது செய்தாக வேண்டும்.

மெதுவாக கணபதியின் தோளைத் தொட்டு, தம்பி நடந்தது நடந்து போச்சு. இனி ,ஆக வேண்டியதைப் பார்க்கணும் என்று நான் சொன்னேன். கணபதி நிமிர்ந்தான். என் முகத்தை என்ன செய்வது என்பதாக பார்த்தான். சொல்லிவிட்டேனே தவிர எனக்கு வார்த்தைகள் வரத் தடுமாறின.சரி தம்பி ,அக்காவுக்கு மொதல தகவல் தெரிவி எனக் கூறினேன். என்னையும் டாக்டரையும் வீட்டுக்குள் அழைத்துப் போனான். ஒரு பையில் இருந்து சில நோட்டுக் கட்டுகளை எடுத்து என் கையில் கொடுத்து, அண்ணே இதிலே 20,000 ஆயிரம் ரூபாய் இருக்கு. இத வச்சுக்கோங்க, ஆகும் செலவ எல்லாம் பாருங்க. எல்லாம் முடிஞ்ச பின்னாடி கணக்கு கொடுங்க .நான் கொடுத்தது தெரிஞ்சா இது திரும்ப வராது‌. அதனால நீங்க செலவு செஞ்ச மாதிரிதான் சொல்லப் போறேன். அப்படின்னா தான் எனக்கு அவங்க பங்கு பணம் வந்து சேரும் தப்பா நினைச்சுக்காதீங்க என்று கணபதி சொன்னான். அவன் சொல்லுவது இந்த நேரத்தில் தவறானதாக பட்டாலும் சில விஷயங்கள் யோசித்துப் பார்த்தால் சரி என்றே தோன்றுகிறது.

கணபதியின் தம்பி கந்தன் ஜன்னலில் வைத்திருந்த சாராய பாட்டிலை எடுத்து கடகடவென்று குடித்தான். இப்போது மட்டுமல்ல எப்போதுமே அவன் அப்படித்தான். கணபதி அந்த நிலையிலும் தன் தம்பியை அழைத்தான். அதோடு அவன் மனைவியையும் அழைத்தான். அண்ணன்கிட்ட பொறுப்ப ஒப்படைச்சு இருக்கேன். எல்லா செலவும் அண்ணனே பாத்துக்குவார் காரியம் எல்லாம் முடிஞ்ச பின்னாடி அண்ணன் இடத்துல ஆகுற செலவுல அவங்க அவங்க பங்கக் கொடுத்துடணும் என்று கணபதி கூறினான்.தம்பி மனைவி சம்மதித்து தலையாட்டினாள். அந்த நேரத்தில் பெரியவரின் சடலத்திற்கு பக்கத்தில் பிள்ளைகளெல்லாம் நின்றிருந்தார்கள். நாயும் நின்றிருந்தது கந்தன் கடுப்போடு அந்த நாயை கழுத்தில் ஓங்கி எத்தினான் .சனியனே ,செத்த வீட்டில உனக்கென்ன வேலை என்பதாக கத்தினான் .அந்த சத்தத்தில் அவனுடைய கோபம் நாயின் மீது அல்ல என்பது புரியும் படியாக இருந்தது.

அடுத்தடுத்து வேலைகள் ஆரம்பமாயின. உறவினர்களுக்கு உடனடியாக தகவல் பரிமாறப்பட்டது .பந்தல் சேர் தண்ணீர் பாட்டில் ஏற்பாடாயிற்று. சங்கு சாவடி அழைக்கப்பட்டது.சரூராக வேலைகள் நடக்கத் தொடங்கின.

மின் மயானத்திற்கு ஆள்கள் அனுப்பப்பட்டனர் .அன்று மாலை 5 மணியளவில் தேர் புறப்பாடு என முடிவாயிற்று.சற்றுநேரத்தில் சொந்தம் உறவு அனைவரும் கேள்விப்பட்டும் தகவல் தெரிந்தும் வர ஆரம்பித்துவிட்டனர் .வீடு கலகலப்பானது.

சொந்தத்தில் ஒரு பெரியவர் தண்ணி கொடம் எடுக்க பொம்பளப் பிள்ளைக தயாராகிக்கங்க ,எங்கப்பா சின்னவன் ? தந்தைக்கு கடைசி மகன்தான் காரியம் பாக்கணும் தயார் ஆகிக்க எனக் கந்தனைப் பார்த்துக் கத்தினார். அவன் சாராய பாட்டிலைச் சாய்த்துக் கொண்டிருந்தான்.

நான் கொல்லி போடணும்னா இந்த வீடு எனக்கு எழுதி வைக்கணும் என்று கந்தன் தடுமாறிக்கொண்டே பிணத்துக்கு முன் வந்து ஆட்டம் போட்டான். பெரியவரின் மகளுக்கு கோபம் வந்தது. ஆமாமா அவருக்கு நீ மட்டும் தானே பிறந்திருக்க நாங்கல்லாம் ஊரானுக்குப் பிறந்தவங்க பாரு என கோபத்தோடு கூறினாள். கணபதி எந்தப் பேச்சும் பேசாமல் அவர்களுக்குள் ஏதோ ஒரு முடிவுக்கு வரட்டும் என்று அமைதியாக நின்றான்.

சொந்தக்காரர் இந்த நேரத்தில இதெல்லாம் பேசிட்டு இருக்கணுமா ?அடுத்த வேலையப் பாருங்க,மின் மயான ஆளுங்க ஆம்புலன்சோடவந்துட்டாங்க, பிணத்தக் கொண்டு போகணும்.கிளம்புங்க, திரும்பி வந்து நம்ம பஞ்சாயத்து பார்த்துக்கலாம். என வேகப் படுத்தினார். இதுக்கு நான் ஒத்துக்க மாட்டேன், எனக்கு பதில் தெரிஞ்சாகணும் என்று கந்தன் சத்தமிட்டான்.

அங்கு கூடியிருந்தவர்கள் சில பேர் அவனுக்கு அறிவுரை கூறி அடுத்த வேலை ஆரம்பமாக ஆயிரத்து படுத்தினர். பிணம் சர்வ அலங்காரங்களுடன் வண்டியில் ஏற்றப்பட்டது.மின்மயானத்தில் அனைத்து வேலைகளும் முடிந்து எரியூட்டும் இடத்தில் பெரியவரின் உடல் தள்ளப்பட்டது .அது முடிந்தபின் பாதிப்பேர் அங்கிருந்து அப்படியே கிளம்பி சென்றுவிட்டனர். மீதிப்பேர் வீடுவரை வந்து விளக்கு பார்த்துவிட்டு சம்மந்தி முறையில் டிபனை ரெடி பண்ணினர். அதன்பின் நாளைக் காலைப் பால் தெளிக்க போகும் நேரம் குறித்து பேசப்பட்டது.

கந்தன் வந்தவுடன் பெட்டில் போய்ப் படுத்துவிட்டான் .அங்கு நடந்தவை எவை பற்றியும் கவலை கொள்ளவில்லை .காதில் போட்டுக் கொள்ளவில்லை. குறட்டை விட்டு தூங்க ஆரம்பித்து விட்டான்.

விடிந்தவுடன் விறுவிறுப்பாக பால் தெளிக்கும் காரியங்கள் பரபரப்பாயின. வழக்கம் போல கந்தன் சாராயம் குடித்துச் சலம்பல் பண்ண தொடங்கினான். கூட இருந்தவர்கள் சமாதானம் செய்து அவனை அந்த இடத்திலிருந்து கடத்திச் சென்றனர் .பால் தெளித்து முடித்தவுடன் மீண்டும் அனைவரும் வீட்டுக்கு வந்து சேர்ந்தனர்.

வீட்டுக்கு வந்ததும் வராததுமாக சொத்துப் பிரச்சினையைக் கந்தன் கிளர ஆரம்பித்தான். கூட இருந்த சில பேர் அடுத்து கருமாதி வைப்பதைப் பற்றி பேசும்படி கேட்டுக் கொண்டனர். ஆனால் கந்தனோ பஞ்சாயத்து செய்து சொத்தை தனக்குத்தான் வழங்க வேண்டும் என்றும் ,அண்ணன் கணபதிக்கு அப்பா படிக்கவைத்து நல்ல உத்தியோகத்தை வாங்கிக்கொடுத்தார்.அக்காவிற்கு வசதியான வீட்டில் வாழ்க்கை அமைத்துக் கொடுத்தார். ஆனால் எனக்கு படிப்பு உத்தியோகம் வசதி எதுவுமே செய்து தரவில்லை .எனவே இந்தச் சொத்து எனக்குத்தான் என்று பலமுறை அப்பா என்னிடம் சொல்லி இருக்கிறார். அதை அவர் விருப்பபபடி நீங்கள் எல்லாம் பேசி முடித்துத் தரவேண்டும் என்று தன் பக்க நியாயத்தை சத்தமாக எடுத்துக்கூறினான்.

அப்பா எல்லாரையும் படிக்க வெச்சார் நீ பிரண்ட்ஸோட சேர்ந்து ஊர் சுத்திட்டு ஒழுங்கா படிக்கலைனா அதற்கு யார் பொறுப்பு சொத்துல எல்லாருக்கும் பங்கு இருக்கு அதுலயும் இப்பச் சட்டத்தின்படி பொம்பள பிள்ளைகளுக்கு முக்கிய பங்கு இருக்கு. அதனால சமமாத்தான் பிரிக்கோணும் என பெரியவரின் மகள் தன் பக்க நியாயத்தை எடுத்துக் கூறினார்.

யார் பக்கம் ஞாயம் கிடைத்தாலும் தனக்குச் சம்மதம் என்பதைப்போல அமைதியாக அமர்ந்திருந்தான் கணபதி.

கொல்லைப்புறத்தில் குழந்தைகள் சத்தம் கேட்டது. அந்த கூட்டத்திலிருந்து நானும் டாக்டரும் அவசரமாக அங்கே ஓடினோம்.

குழந்தைகளுக்கு மத்தியில் அந்த நாய் இருந்தது. பெரியவர் வாக்கிங் போகும் போதெல்லாம் வாலாட்டிக் கொண்ட அதுவும் பின்னால் போகும். அவர் பேப்பர் படிக்கும் போதெல்லாம் பக்கத்திலேயே சமர்த்தாக அது அமர்ந்திருக்கும். அவர் வாங்கும் பென்சனில் அவருக்காக செலவு செய்கிறாரோ இல்லையோ ,அந்த ஜிம்மிக்காக தின்பண்டங்கள் சோப்புகள் வாசனை திரவியங்கள் கட்டாயம் வாங்கிவிடுவார்.

மில்லில் இருந்து ஊதப்படும் சங்கைப் போல அந்த ஜிம்மி இரவு நேரங்களில் அடிவயிற்றிலிருந்து பெரிய குரலை எழுப்பும். சில நேரங்களில் அது எரிச்சலூட்டும். இருந்தாலும் ,அது தெருவுக்கே காவலாக இருப்பது குறித்து எல்லோருக்கும் அதன்மீது ஒரு மதிப்பு எப்போதும் உண்டு.

அந்த ஜிம்மி மின்சாரம் தாக்கினார் போல் உடம்பெல்லாம் ஒரு நடுங்கு நடுங்கி கால்கள் இழுக்க தொப்பென்று தரையில் விழுந்தது. குழந்தைகள் குய்யோ முறையோ என்று கத்தினார்கள். அதன் கண்களின் ஓரம் கசிந்திருந்தது.

காலை உணவு என்ன கொடுத்தீங்க?என நான் கேட்டேன். இல்லை அங்கிள் தாத்தா இறந்ததிலிருந்து அது எதுவுமே குடிக்கிறதோ சாப்பிடறதோ இல்லை என ஒரு பையன் சொன்னான்.

ஆம் ,இந்த மூன்று நாட்களாக அதனுடைய சத்தம் வெளியே கேட்கவில்லை. என்னும் ஞாபகம் எனக்கு அப்போதுதான் வந்தது.

கொஞ்ச நேரத்தில் அதன் உயிர் பிரிந்தது.

சுடுகாட்டில் நடுராத்திரி அமைதியைப் போல அங்கே ஒரு மௌனம் நிலவியது. அந்த மௌனத்தைக் கிழிப்பதைப் போல வீட்டுக்குள்ளிருந்து பெரியவரின் பிள்ளைகள் பாத்திரத்தை விட்டு எறிந்து வசைபாடிக் கொண்டிருக்கும் சத்தம் நாரசமாக கேட்டுக் கொண்டேயிருந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *