கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: June 16, 2019
பார்வையிட்டோர்: 21,854 
 

கருவறையில் அமர்ந்திருந்த கபாலிக்கு‌ அந்த கூச்சல்களையும் வசவுகளையும் எண்ணி சற்று மன சங்கல்பம் உண்டானது. அருகில் இருந்த பட்டரை ஓரக்கண்ணால் ஏற பார்த்தான் ஆனால் அவன் மேனியில் எந்த அசைவுகளும் தென்படவில்லை.

கபாலியின் மனக்குமுறலை அந்த பட்டர் எப்படி அறிந்திருப்பார்.

ஒருவாறு மனத்தாங்கலுடன் அமர்ந்திருந்த தொனியில் ‘சாம்பு மவனே எதனா பாட்ட போட சொல்லுடா’ என்று முனுமுனுக்கையில் உலகாளும் ஈஸ்வரனின் குரல் கேட்டதோ என்னவோ சட்டென பட்டர் ‘நாழி ஆயிடுத்து பூஜய ஸ்டார்ட் பண்ணுங்கோ’ என கூறினார் அவ்வாறு கூறும்பொழுதே பிரணவ மந்திரத்தின் ஓங்காரம் ஒலிக்க தொடங்கியது.

“தென்னாடுடைய சிவனே போற்றிஎன்னாட்டவர்க்கும் இறைவா போற்றிகயிலை மலையானே போற்றி போற்றி”

ஓம்ம்ம்ம்ம்ம்ம் நமசிவாய” ஒலித்தது.

இந்த கானத்தை கேட்ட மாத்திரமே கபாலியின் மனம் சற்று அமைதி கண்டது. அந்த அமைதி நீடிக்கவில்லை திரை விலகியதுமே பிரணவ மந்திரத்தின் சூத்திரமே அடங்கியது.

ஜனத்திரள் மயிலை கபாலிஸ்வரனின் உச்சடாணங்களை‌ ஜபித்தது அதுவும் சிறிது நேரம் மட்டும் தான் தாக்குபிடித்தது.

‘குனித்த புருவமும், கொவ்வைச் செவ்

வாயில் குமிண் சிரிப்பும்,

பனித்த சடையும், பவளம் போல்

மேனியில் பால் வெண்ணீறும்

இனித்தமுடைய எடுத்த பொற்

பாதமும் காணப் பெற்றால்

மனித்தப் பிறவியும் வேண்டுவதே

இந்த மாநிலத்தே’

என தீபாராதனையின் தீப ஒளியில் கபாலி அழகாகவே காட்சியளித்தார் இருந்தும் அதை கண்டு லயிக்க ஜனத்திரளில் ஒருவருக்கும் எண்ணமுமில்லை நேரமுமில்லை. பல குரல்கள் பிரணவ மந்திரத்தையும் தாண்டி ஒலித்தது.

அதில் ‘உனக்கு கண்ணே இல்லயா”

”உனக்கு இரக்கமேயில்லையா”

”ஏன் என்ன மட்டும் இப்படி சோதிக்கிற”

“எனக்கு பணம் கொடு”

”எனக்கு பதவி கொடு”

“நிம்மதிய கொடு ”

“நீ என்ன கல்லா ”

“எப்ப தான் நல்ல வழிய காட்டப் போற” என பல குரல்கள் பலவாறு ஒலித்தன.

அந்த சொல்லாடல்களுக்கு நடுவே “அமாவாசை பௌர்ணமினு உனக்கு முப்பது வருஷமா ஸ்பெஷல் டிக்கெட் வாங்கி பாலும் தேனுமா குளிர வைக்கிறேனே எப்ப தான் என் வயித்துல பால வார்க்க போர…நான் உன் கண்ணுக்கு தெரியலயா நான் கதறது உனக்கு கேக்கலயா” என்று ஆடியபாதம் தனக்கு பிடித்த சொலவடைகளை அவிழ்த்தான்.

கபாலிக்கு இந்த வாக்கியங்கள் அனைத்தும் அழகாக சேவிகளின் வாயிலில் விழுந்தது. கபாலியின் மனம் கலங்கி குமுறியது.

“போன வாரம் தான் நீ கண் கண்ட தெய்வம் நீ தான் எல்லாமேனு அண்ணாபிஷேகம்லா பண்ணிட்டு போனான் இந்த வாரம் இந்த கிழி கிழிகிரான்…இதுக்கு தான் இந்த ஆத்திக பயலுகளே கண்டாலே பிடிக்கமாட்டுது ஆப்பர்ச்சுனிஸ்ட் ”

“ஆமா ஆத்திகர்களயே கடவுளுக்கு பிடிக்காது‌. கடவுளுக்கு உங்கள விட எங்கள தான் ரொம்ப பிடிக்கும் ஏன் தெரியுங்களா ஏன்னா நாங்க தான் கஷ்டம் வந்தா அவன திட்றதும் இல்ல சந்தோஷம் வந்தா அவன புகழ்றதும் இல்ல” என்று மாயவதாரன் சொல்லி சிரிப்பை உதிர்க்கும் போது அவன் முகம் பிரம்ம கமலத்தின் சாயலில் இருந்தது.

“பெருமாள சேவிச்சிட்டு போனு சொன்னது தப்பு தாண்டா அம்பி மன்னிச்சுருடா ஆளவிடு” என பூமாலைகளுக்காக கொடுக்க வேண்டிய காசை மாயவதாரன் கையில் திணித்து விட்டு ஓடினார் நாரயணஅய்யங்கார்.

“சுவாமி நான் சாமி இல்லனு சொல்றவன் இல்ல கடவுள தேடுற தேடல்வாதி…

கிடச்சவுன செல்றேன் நீங்க கண்டிப்பா வரனும்” என திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் தூண்கள் எதிரொலிக்க கத்தினான்.

அந்த சொற்கள் நாராயணின் காதுகளிள் விழுந்ததோ என்னவோ மயிலையில் இருந்த கபாலியின் காதில் விழுந்தது.

கபாலி மேல் நோக்கி பார்த்தவாரே கண்களை உருட்டினார் சட்டேன பட்டரை பார்த்தார். பட்டர் உடனே ஆடியபாதம் அருகே சென்று “வியாழன் சனி திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலுக்கு போய் பார்த்தசாரதிக்கு துளசி மாலை சாத்துங்கோ நினைச்சது நடக்கும். போய்ட்டு வாங்க” என்று அனுப்பி வைத்தார்.

நன்றி கூறி விடைபெற்ற ஆடியபாதம் கபாலியை திரும்பிகூட பார்க்காமல் சென்றான். ஆம் ஏன் பார்க்க வேண்டும் மார்க்கம் கிடைத்த பிறகு மனம் எதற்கு ‌ அவன் சென்ற நொடி தொடங்கியே மக்களின் பேராசை கூச்சல்கள் வழக்கம்போல அதிகரித்தன.

அந்த கூச்சல்கள் சாந்தோம் தேவாலயத்திலும் பாதிரியாரின் ஆதியகாமம்

‘எ நியூ கமாண்ட்மென்ட் ஐ கிவ் டு யு தட் யு லவ் ஒன் அனதர் ஜஸ்ட் அஸ் ஐ ஹவ் லவ்டு யு, யு ஆல்சோ ஆர் டு லவ் ஒன் அனதர் பய் திஸ் ஆல் பீபில் வில் நோ தட் யு ஆர் மை டிசிபிள்ஸ் ஃப் யு ஹவ் லவ் ஃபார் ஒன் அனதர்’ நடுவே ஒலித்தது.

அதோடு நிற்காமல் ஆயிரம் விளக்கு மசுதியில் துவாவின் இடையேயும் கேட்கப்பட்டது.

‘ரப்பனா லா துஸிஃக் குலூபனா பஃத இத் ஹதை(த்)தனா வ ஹப்லனா மி(ன்ல்)லதுன்(க்)க ரஹ்மதன், இன்னக அன்தல் வஹ்ஹாப்’.

கபாலி வெகுவாக பொறுமை இழந்தார்

“இவனுக இம்ச தாங்க முடியல சும்மா அத கொடு இத கொடு சதா டார்ச்சர் பா!

இவனுகள்ல பாதியா பார்த்தாக்கு ரெஃபர் பண்ண வேண்டியது தான்.

அங்க டிரிபிலிகேன்ல பார்த்தாவ போட்டு என்ன பண்றானுக தெரியலயே

எப்பா பார்த்தா இருக்கியா‌” என தெய்வ சம்பாஷனையில் கேட்கும்போதே

‘பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடி நூறாயிரம் மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா! உன்சேவடி செவ்வித்திருக்காப்பு’ என காம்போதி ராகத்தில் திருப்பல்லாண்டு இசைக்க திருபாற்கடலில் இலக்குமியின் மடியில் பள்ளி கொண்டு இசையில் லயித்து கிடந்த எம் பெருமானுக்கு துயில் களைய மனம் வரவில்லை‌.

மீண்டும் ‘எப்பா பார்த்த’ என்று கபாலி குரல் கொடுத்தபோது தான் லேசாக கண்களை விழித்தான் பார்த்தா. விழித்த அடுத்த கணமே பார்த்தாவுக்கு தலை சுற்றியது. ஒரு நீண்ட வரிசையில் ஜன கூட்டம் பற்பல கோரிக்கைகளுடன் காத்திருந்தது. அந்த மக்களின் மனங்களை படித்த பொழுது பார்த்தாவுக்கு இனம் காணத புன்னகை தவழ்ந்தது.

‘உனக்காக நான் எழுதிட்ட திரைக்கதையில் நீ வேண்டியது யாவையும் சேர்த்திட்டு என் சுவாரஸ்யத்தை நானே கெடுப்பானேன்’ என்று கீதையின் நாயகன் ஒவ்வொரு முறையும் நாம் வேண்டி தவிக்கும் போது கொள்ளும் நமட்டு பொன் சிரிப்பை காண கடவு உள்ளம் ஒன்று நிச்சயம் செய்திட தான் வேண்டும்.

‘நேற்று வாழ்த்தியவர்கள் இன்று தூற்ற இன்று தூற்றியவர் நாளை வாழ்த்த உங்கள் அன்பில் நான் என்றும் மேனி சிலிர்த்து போவேன் ஆம் உங்கள் மீது நான் எப்போதும் கோவம் கொள்வதே இல்லை நீங்கள் ஏசினாலும் புகழ்ந்தாலும் என்றும் மாறாத அன்பு கொள்வேன் இதுவும் ஒருவகை அன்பு தானே

பிள்ளைகளிடம் பெற்றோர் காட்டும் அன்பினை பாசம் என்கிறோம்.

சகோகளிடம் பரிமாறும் அன்பின் பெயரை சகோதரத்துவம் என்போம்

சக நண்பனிடம் கொடுக்கும் அன்பின் பெயரை நட்பு என்றும்

துணையிடம் வெளிப்படுத்தும் அன்பின் பெயரை காதல் என்றும்

தாய்நாட்டின் மீது கொண்ட அன்பினை தேசப்பற்று‌ என்போம்

சக மனிதரிடம் பரப்பும் அன்பை மனிதம் என்கிறோம். இவையணைத்தும் என்னுள் கொண்டு நீ மருகும் அன்பின் பெயர் ஆன்மீகம் ஆகின்றனவே அப்படி இருக்கயில் உன் மீது எக்காலமும் எனக்கு வெறுப்பு உண்டாகாது’ என பார்த்தா மொழிந்திட்ட அந்த நயன மொழியை அவன் மட்டுமே அறிவான்.

பட்டர் சொன்னது போல் செய்ய காத்திருந்தான் ஆடியபாதம். ஞாயிறு சனியை கடக்க ஐந்து நாட்கள் ஆகிப்போனது. ஆடியபாதம் மறுக்காமல் மறக்காமல் பார்த்தாவை காண வந்தான் துளசி மாலையுடன்.

அவனை கண்டதும் பார்த்தாவுக்கு அதிர்ச்சி. உடனே தெய்வ சம்பாஷனையில் கபாலியை அழைத்தான்.

“என்னப்பா உன் கிளையண்ட்ட என்னான்ட தள்ளி விட்ட ”

“ஆமாபா ரொம்ப பண்றான் பா திட்றது கூட பரவாயில்லை செஞ்சதலாம் சொல்லிகாட்றாம் பா இவனலாம் ஸ்பெஷல் டிக்கெட் வாங்கினு யார் வந்து பாக்க சொன்னது. நீயே டீல் பண்ணிக்க”

“ஏன்பா இது உனக்கே நல்லா இருக்கா”

“நீ தான்பா! இவனுக என்ன பண்ணாலும் கோவமே வராதுன்னு சொன்ன”

“அதுக்காக இப்படியா பா பழிக்கு பழி வாங்குவ”

“சின்ன பிள்ளலருந்து இந்த மாறி விஷயங்கள்ல நீ தானபா என்ன காப்பத்துவா”

என்று கபாலி கூறுகையில் பார்த்தாவுக்கு கொஞ்சம் கலக்கம் உண்டானது. அவன் குழப்பத்தை எப்படி தீர்ப்பது என்று யோசித்த பொழுது மாயவதாரன் பார்த்தா முன் பூமாலையுடன் புன்னகித்தான்.

பார்த்தா ஆடியபாதத்தையும் மாயவதாரனையும் உற்று பார்த்தான். ஏதோ ஒரு கணக்கை அவன் போட்டுவிட்டான் போலும். சிரிப்பை அடக்க முடியாமல் தவித்தான் பார்த்தா.

மெள்ள மாயவதாரனை பார்த்தான் பார்த்தா. அவன் பார்த்த நொடியே மாயவதாரன் கண்கள் ஆடியபாதத்திடம் சரணடைந்தது.

ஆடியபாத்தின் மன சஞ்சலங்களை அவிழ்க்க அருகில் இருந்த மாயவதாரன் கண் சிமிட்டாமல் பார்த்தான் அவன் கண்களை திறந்த அடுத்த கணமே

“ஐயா ! எதுவும் பிரச்சினையா வாழ்க்கையே வெறுத்த மாறி இருக்கீங்க” என்றான்.

“வாழ்க்கையில நிறையா பார்த்துட்டேன் தம்பி…இனி நான் பாக்க ஒன்னுமில்லை” என ஆடியபாதம் சொல்லி முடிப்பதற்குள் மாயவதாரன் சடசடவென பாய்ந்தான்.

“அப்படி என்னங்கய்யா நீங்க பார்த்துருகீங்க

ம்ம் சொல்லுங்க ..‌‌

அனாதயா இருந்துருகீங்களா!

மூனு வேல சோறு இல்லாம இருந்துருகீங்களா!

தங்குறதுக்கு காணி நிலம் இல்லாம இருந்துருகீங்களா!

உடுத்த கோவணம் கூட இல்லாம இருந்துருகீங்களா!

கண்ணில்லாம இருந்துருகீங்களா!

காலில்லாமா இருந்துருகீங்களா!

இல்ல கை இல்லாம தான் இருந்துருகீங்களா!

சரி அத விடுங்க சார்

நீலக்கடல்ல நீண்ட கப்பல் பயணம் பண்ணீருங்கிங்களா!இமய உச்சத்தை தொட்டு உயிர் காற்ற சுவாசிச்சிருக்கீங்களா !நடுக்காட்டில நின்னு இயற்கைய ரசிச்சுருகீங்களா!

இல்ல கண்ணியாகுமரில இருந்து காஷ்மீர் வர தான் சுத்திருகீங்களா!

சொல்லுங்க எதாவது செஞ்சுருங்கீங்களா!”

“எதுவும் செஞ்சது இல்லீங்க”

“அப்ப நம்ம இத சொல்ல????”

“தகுதி இல்லீங்க…. தம்பி” என ஆடியபாதம் கூறும்பொழுதே அவர் உடம்பு கூசியது.

“தப்பா எடுத்துக்காதிங்க… நான் சொன்ன எல்லாம் எனக்கு நடந்ததில்ல செஞ்சதில்ல ஒன்னு இரண்டு அவ்வளவு தான்.

வாழ்க்கையில எல்லாருக்கும் எல்லாமும் அமைஞ்சுரது இல்லை அது நல்லதும் சரி கெட்டதும் சரி…

கொஞ்சம் கஷ்டம் இருந்தா தான் வாழ்க்கை சுவரசியமா இருக்கும் இல்லனா சலிச்சு போயிரும்னு நான் வியாக்கியானம் பேச விரும்பல

கஷ்டமோ சந்தோஷமோ அத சரியா பாக்குற மனசு தான் வேணும்.

நீங்கலாம் கோயிலுக்கு போய் அது வேணும் இது வேணும் கேப்பீங்க

நான் என் பாரதி மாறி வல்லமை தாராயோனு கூட கேக்க மாட்டேன்

நீ நல்லாருக்கியா சந்தோஷமா இருக்கியா நீ கொடுத்ததலாம் நல்லா இருக்குலனு கேட்பேன்”

எதோ ஆண்டாண்டு காலமாக பழகியதை போல முதல் சந்திப்பிலே அவர்களுக்குள் நடந்த உரையாடல் இருவருக்கும் பெரும் நெகிழ்ச்சியை தந்தது. இருவரும் மனம் விட்டு பேசி கொண்டு இருந்தார்கள்.

நடு நடுவே மாயவதாரனை ஏற இறங்க பார்த்து போனார்கள். இன்னும் சிலர் ஜாடைகள் செய்தார்கள். அதை எல்லாம் இருவரும் பொருட்படுத்தவில்லை. ஆடியபாதம் தன் அடி மனதில் அரித்து கொண்டிருந்த அனைத்தையும் மாயவதாரனிடம் கொட்டி தீர்த்தான்.

இருந்தும் தன் மகளுக்காக‌ மிகவும் சிரத்தை எடுத்து சாதி பார்த்து சமயம் பார்த்து குலம் கோத்திரம் பார்த்து நாள் நட்சத்திரம் பார்த்து காசு பணம் பார்த்து அழகு தேகம் பார்த்து தேடி கிடைத்த மாப்பிள்ளையை வெறும் நூறு சவரன் தங்க பிண்டத்திற்காக அந்த அரிய வாய்ப்பை இழந்து விடுவோமொ என தவித்து கொண்டிருக்கும் தன் மனதின் இன்னோர் அறையை திறக்க ஆடியபாதத்திற்கு மன வரவில்லை ஆனால் பார்த்தா விடுவானா அவன் மனக்குமுறலை அவன் கண்களில் சுட்டி காட்டினான். அதை அவன் வாயாலே கூறவும் வைத்தான்.

“தம்பி! என் பொண்ணுக்கு ரொம்ப நாள் கழிச்சு இப்ப தான் நல்ல வரன் அமஞ்சுருக்கு மாப்புள்ள அமேரிக்கால பெரிய கம்பேனில வேல பாக்குறாரு கை நிறைய சம்பளம்…

வெரும் நூறு பவுன் தான் கேக்குறாங்க

அதான் காஞ்சிபுரம் பக்கத்துல இருக்கிற என்னோட இடத்தை விக்கலாம்னு

மூனு மாசமா நாயா சுத்துறேன் …

ம்ஹூம் யாரும் வாங்கமாட்ராங்க” என இதை சொல்லி முடிக்கயில் ஆடியபாதத்தின் முகம் சோர்ந்து போய் கிடந்தது.

“நல்ல வரன் சொன்னீங்க அப்புறம் எதுக்கு நூறு பவுன் கேக்குறாங்க

ஓ காசு பணம் நிறைய வச்சுருக்குறவங்க நிறைய கேட்ட தான் நல்ல வரனோ” என்று மாயவதாரன் நகைக்க அவன் நகைச்சுவை உணர்வை ரசிக்க முடியாமல் தவித்தான் ஆடியபாதம்.

“கோச்சுகக்காதீங்க சும்மா தமாசு தான்

இப்ப என்னங்க உங்க இடத்த விக்கனும்

கவலைய விடுங்க நான் வாங்கிரேன் ‌”

இந்த உரையாடலின் நடுவே வந்துட்டான் நாதிக்கன் என குரல்கள் வலுத்தன.

கோயில் என்று பாராமல் கூட மாயவதாரன் கன்னம் பழுக்க காது புடைக்க இரண்டு பரிசுகள் விழுந்தன. ‘இவன் மாலை கொடுத்து தான் நாங்க தரிசனம் பண்ணனுமா …

இவன் இனிமே இவன் வரக்கூடாது

கண் தெரியாத காது கேட்காத அனாதைக கட்டி கொடுக்குற பூவலாம் சாமிக்கு போட கூடாது

இவன மொதல்ல அடிச்சு துரத்துங்க” என அந்த காலை பொழுதே பெருங் கவலையானது.

அவர்களை ஆசுவாசபபடுத்தி மாயவதாரனை தனிமைபடுத்த வெகு நேரம் பிடித்தது.

தன் தாய் செய்த தொண்டை; தன் தாய்க்காக, பகுதறிவு பெற்ற போதிலும் தன் மாணாக்கர் கொண்டு தன் தாய் தன்னை நீங்கிய பிறகும் அந்த தொண்டினை அவன் தொடர்ந்து செய்து வரும் ஒரு நலிந்த நவின இசை கலைஞன் அவன்.

அவன் சூட்டும் மாலையை மட்டுமே ஏற்பேன் என்னும் பிடிவாதத்திற்கு அடிக்கடி மாயவதாரன் இப்படி சில பல பரிசுகளை பெறுவது உண்டு.

மாலையில் மயிரிழைகள் இருந்தும் நாச்சியார் சூட்டி கொடுத்த பூமாலையை தான் அணிவேன் என்றவனாயிற்றே அந்த மாயவன். அன்பென்று வந்துவிட்டால் அவன் திமிருக்கு அளவுகோல் ஏது.

அந்த நிமிடங்களை ஆடியபாதத்தால் அவ்வளவு எளிதாக கடக்க முடியவில்லை.

“ஏன்பா தம்பி! இவங்க பண்ணது உங்களுக்கு கோபமே வரலீங்களா!” என ஆடியபாதம் மிகவும் குரல் தழுக்க தன்மையுடன் கேட்டார்.

அதற்கு சற்றும் தாமதிக்காமல் புன்னகை பூர்த்தவாரே கூறினான் மாயவதாரன்.

“ஐயா! புத்தனோட அன்ப பெற எந்த தகுதியும் தேவ இல்ல

ஆன புத்தனோட கோவத்த பெற சில தகுதி வேணும்

ஏன்னா புத்தன் நாய்கிட்ட கூட அன்பா தான் இருப்பான்” என்று கூறும் போது அவன் முகம் புத்தனின் தேஜஸை தாங்கியிருந்து.

“உங்க சித்தாந்தத்த புரிஞ்சுக்குற அளவுக்கு எனக்கு சக்தி இல்லை”

“சரி அத விடுங்க உங்க இடம் எங்க இருக்கு நான் வாங்கிரேன்

என்னோட பசங்களுக்கு இங்க நல்ல இட வசதி இல்லை அதுனால உங்க இடம் வசதியா இருக்கும் நினைக்கிறேன்.

“வேணாம் தம்பி அந்த இடம் வாஸ்து படி சரியில்லை. அந்த இடத்த வாங்குனதுல இருந்து எந்த காரியமும் விளங்கல

நீங்க வேற நல்ல விஷயத்துக்குகாக கேக்குறீங்க”

“வாஸ்து பார்த்து நல்ல விஷயம் எதுவும் நடக்குறதில்ல மனச பார்த்து தான் சார் நடக்கும்.

ஒன்னும் பிரச்சினை இல்லை நான் வாங்கிரேன்”

“எனகென்னமோ மனசே கேட்கல”

“நான் வாங்கிரேன அவ்ளோதான்”

“ரொம்ப சந்தோஷம் தம்பி”

“என் பொன்னு கல்யாண பத்திரிக்கை முத உங்களுக்கு தான்

நீங்க மனைவி பிள்ளைகளோட வரனும்”

“நீங்க வேற! நமக்கு அந்த மாறி தொல்லை எல்லாம் இல்லை

சந்தோஷமா இருக்குறத பார்த்தாலே தெரிய வேனாமா”

இந்த வரிகளை கேட்டவுடனே பார்த்தாவுக்கு திடுக்கென ஆகியது.

“இவன் கல்யாணம் பண்ணாமா நமக்கே டிவிஸ்டடிப்பான் போல

விடக்கூடாது நானும் கபாலியும் அனுபவிக்குறத இவனும் அனுபவிக்கனுமே

இவனுக்கு என்னா ஸ்கிரிப்ட் எழுதுனோம்

என நினைத்து பாத்தவுடன் சிரிப்பு பொங்கிற்று

“அதான பார்த்தேன்” என்று சிரிப்பை அடக்க முடியாமல் தவித்தான்.

திடிரென ஆடியபாதத்தின் கைப்பேசி அழைத்தது.

எதிர் குரலில் “ஏன்யா இன்னும் ரெடி பண்ணலயா!! அவங்களுக்கு நூத்தம்பது பவுனுக்கு சம்பந்தம் வந்துருக்காம் அதுனால உங்க சம்பந்தம் வேணாம் சொல்லிடாங்க.”

ஆடியபாதத்திற்கு இதயமே இரு துண்டாகி போனது. அதை தொண்டை கவ்வ மாயவதாரனிடம் கூறினான்.

அதை கேட்டவுடன் “ஒ அவுங்களுக்கு இப்ப நல்ல வரன் கிடைச்சிருச்சு போல” என தன் வருத்தங்களை பதிவு செய்தான் மாயவதாரன்.

நாட்கள் சென்றன சில வியாழன்களும் பல சனிகளும் உருண்டோடின.

வழக்கத்தை விட அன்று ஆடியபாதம் தயக்கத்துடன் காணப்பட்டான். மாயவதாரனிடம் எதோ ஒன்றை மொழிய முற்பட்டான் வார்த்தைகள் சிக்கின காலம் தாழ்த்துவது நல்லதுக்கு அழகல்ல என்று “உங்கள மாப்பிள்ளைனு கூப்டலாமா”

மாயவதாரன் முகத்தில் மௌனம் குடி கொண்டது. அது வெகு நேரமாக நீண்டது. பார்த்தா அதை கண்டு சிரிக்க ஆடியபாதத்திற்கு கபாலியின் ஞாபகம் வந்தது.

தாமதிக்காமல் அவனை காண சென்றான்.

பல நாட்கள் கழித்து வருகை தரும் ஆடியபாதத்தை கண்டு கருவறையில் அமர்ந்திருந்த கபாலி கொஞ்சம் ஆடி தான் போனான்.

“இன்னிக்கு என்ன பண்ண போறானோ” என்று பதட்டத்துடனே இருந்தான் கபாலி.

வேகமாக வந்தவன் அந்த வார்த்தைகளை உதிர்த்து விட்டு வந்த தடம் தெரியாமல் சென்றான்.

ஆனால் அந்த வார்த்தைகள் அவன் சென்ற பிறகும் அந்த கருவறையில் ஒலித்தது. அப்படி அந்த கபாலியையே மயக்கிட்ட அந்த சொற்றொடர் “நன்றி இறைவா!!!!!”

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *