ஒரு மாலை நேரத்தில் என் மனம் அழுகின்றது

1
கதையாசிரியர்:
தின/வார இதழ்: குமுதம்
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: October 1, 2014
பார்வையிட்டோர்: 22,331 
 

ஒரு உஷ்ணமான ஆகஸ்ட் மாலை . நகரத்தை விட்டு அதிகமாக விலகிச் செல்லாமல் ஆனால் நகரத்தின் இரைச்சல்களில் இருந்து விடுபட்டு நிற்கும் அந்த டெர்மினஸில் ஒரு ஷெல்ட்டரின் கீழ் நான் நின்று கொண்டிருக்கிறேன் .

பஸ்ஸிற்காக நின்று கொண்டிருக்கிறேன் என்ற வார்த்தைகளை என்னால் உபயோகிக்க முடியாது . ஐ அம் நாட் எ ஹிபோகிரைட் . நான் போக வேண்டிய இடத்திற்கு எந்த பஸ்ஸில் வேண்டுமானாலும் போகலாம். ஆனாலும் நான் வெகுநேரமாக நின்று கொண்டிருக்கிறேன் – கையில் புகையும் சிகரட்டோடு . இதில் மறைப்பதற்கு எதுவும் இல்லை .

வகுப்பிற்குச் சென்றதால் ஏற்பட்ட களைப்பைப் போக்குவதற்காகச் சிரித்துக் கும்மாளமிட்டுக் கொண்டிருக்கும் கல்லூரிப் பெண்களின் சிரிப்பிற்கும் கும்மாளத்திற்கும் பின்னே மறைந்திருக்கும் அவர்களது கவலைகள் – வீட்டிற்குச் சென்றதும் அம்மாவின் அதிகாரம் தொடங்கிவிடுமே . ரேடியோ கேட்காதே ; நாவல் படிக்காதே ; அரட்டை அடிக்காமல் பாடத்தைப் படி என்னும் வழக்கமான வசனங்களைக் கேட்க வேண்டுமே .

பக்கத்தில் நிற்கும் பெண்கள் கேட்க வேண்டுமென்பதற்காக உரத்த குரலி ஜோக்கடிக்கும் ஜீன்ஸ் இளைஞர்கள் . ஒன்றுமில்லாத விஷயங்களிற்கெல்லாம் தோள்களைக் குலுக்கி , கைகளை ஆட்டிச் சிரிக்கும் அவர்களது ஆர்ப்பாட்டம் . அவற்றின் செயற்கைத் தன்மை .

திரைப் பட்த்தின் பெயரைப் படிப்பது போல , ஜெயமாலினியின் அந்தரங்கங்களை ஆராயும் அரைகுறைகள் . வெள்ளை உடையால் மனக் கறுப்பை மறைத்து விடலாம் என்ற போலியான எண்ணங்களோடு , அக்கம் பக்கம் பார்த்துவிட்டு அருகில் உள்ள லாட்ஜீக்குள் மறையும் அழுக்கு வர்க்கங்கள் ; செயற்கைத் தனத்தோடு மார்பில் புடவையை இழுத்து விட்டுக் கொண்டு அந்த வர்க்கங்களைத் தொடரும் கிராக்கிகள் .

எதிரில் வருபவள் கட்டியிருக்கும் புடவையைப் போல தன்னிடம் இல்லையே என்ற ஏக்கத்துடன் நடக்கும் மனைவி ; மனைவி மற்றப் பெண்களைப் போல இல்லையே என்ற தாபத்துடன் அவள் பக்கத்தில் நடக்கும் கணவன் . ஏக்கங்களையும் தாபங்களையும் மறைத்துக் கொண்டு கடற்கரையை நோக்கிச் செல்லும் அவர்களது போலியான நெருக்கம் .

இவைகளுக்கிடையே நான் இயற்கையாக – மிகவும் இயற்கையாக நின்று கொண்டிருக்கிறேன் . சுற்றி நிற்கும் பெண்களின் அழகை ரசிப்பதன் மூலம் எனது தாகங்களை அடக்கிக் கொள்ள முடியும் என்ற சித்தாந்தத்தில் மூழ்கி நின்று கொண்டிருக்கிறேன் .

என்னைப் பொறுத்த வரையில் பெண்கள் அழ்கான கலைப் படைப்புகள் . ஓவியங்களையும் , சிற்பங்களையும் பார்ப்பது போன்ற உயர்ந்த ரசனையோடு நான் அவர்களைப் பார்க்கிறேன் . நம்புங்கள் . எனது பார்வைகள் யாரையும் துகிலுரிப்பது கிடையாது . யாரையும் கற்பழிப்பது கிடையாது . அவர்கள் பார்க்கும் போது நான் தலையைத் திருப்பிக் கொள்வது கிடையாது . நான் திருடனல்ல – ரசிகன் .

ஒவ்வொரு மாலைப் பொழுதையும் நான் இப்படித்தான் கழிக்கிறேன் . எனது பார்வைகள் என்றுமே ஏக்கங்களாக மாறியது கிடையாது . ஆசைகள் எல்லையைத் தாண்டும் பொழுது தானே ஏக்கங்கள் பிறக்கின்றன ? ஏக்கங்களை வெளியில் காட்ட முடியாமல்தானே வேஷங்கள் போடப்படுகின்றன ?

மாலைப் பொழுதின் நடை துரிதப்படுகின்றது . என்னைச் சுற்றிலும் நடனமாடிக் கொண்டிருந்த சிரிப்பொலிகளும் , வர்ண ஜாலங்களும் கொஞ்சம் கொஞ்சமாகத் தேய்ந்து மறைந்து கொண்டிருக்கின்றன .

நான் நின்று கொண்டிருக்கின்றேன் . தொண்டையில் ஏற்படும் ‘ குறு குறு ‘ உணர்ச்சியை அடக்கிக் கொண்டிருக்கும் சிகரட் கையில் புகைகின்றது .
எனது ‘ டிபார்ச்சர் டைம் ‘ நெருங்குகிறது .இன்னும் சிறிது நேரத்தில் நகர்ந்து விடுவேன் .

கையைச் சுடும் சிகரட்டைத் தூக்கி எறிகிறேன் . கல்லறைக் குழியைச் சுயமாகத் தோண்டிக் கொண்டிருக்கும் எனக்கு ஓய்வு , அடுத்த சிகரட்டைப் பற்ற வைப்பதற்கு முன்னால் உள்ள இந்தச் சில நிமிடங்கள்தான்.
வந்து நிற்கும் பஸ்ஸில் தொற்றிக் கொள்கிறேன் . இடது கையால் கம்பியைப் பிடித்துக் கொண்டு வலது கையைப் பாக்கட்டினுள் விடும்போதுதான் அவளைக் கவனிக்கிறேன் .

ஷெல்ட்டருக்குக் கீழ் நின்று கொண்டிருக்கும் அவள் என்னை இறங்க வைக்கிறாள் . படியில் இருந்து குதித்து ஷெல்ட்டரை நோக்கி நடக்கிறேன். சிகரட் ஒன்றைப் பற்ற வைத்துக் கொண்டு அவளை முழுவதுமாகப் பார்க்க முடிகின்ற ஓரிட்த்தில் நின்று கொள்கிறேன் .

ரோஸ் நிறப் புடவையும் ஜாக்கெட்டும் அணிந்துள்ள அவள் புதிதாக , இளமையாக , அழகாக இருக்கிறாள் .

லோ ஹிப்பும் , லோ கட்டும் அவளது முகத்தில் தெரியும் குழந்தைத் தனத்தோடு இணையாமல் வேறுபட்டு நிற்கின்றன . சூழ்ந்து நிற்கும் கண்களுக்குப் பயந்து அவள் புடவையைப் படரவிட்டுக் கைகளால் அழுத்திக் கொள்கிறாள் . ஆசைகளுக்கும் , அச்சங்களுக்கும் ஒன்றாக இடம் கொடுத்துவிட்ட அவளது பதைபதைப்பு எனக்குப் புரிகிறது .

அடிக்கடி கையைத் திருப்பி , வாட்சைப் பார்த்துக் கொள்கிறாள் . அவளது கண்களில் தெரியும் படபடப்பு அவளது எதிர்பார்ப்பைக் காட்டுகின்றது .
அப்போதுதான் அது நிகழ்கின்றது .

அவளுக்கு அருகில் வந்து நின்றான் அவன் . தூக்கிக் கட்டப்பட்டிருக்கும் லுங்கி , வற்றிக் கிடந்த உடம்பில் துவளும் சாயம் போன கசங்கிய புரூஸ்லி பனியன் , நிறம் மாறிய பரட்டைத் தலை , காதில் செருகப் பட்டிருக்கும் அணைந்து போன பீடித் துண்டு ..அவனது மனநிலை நிர்வாணமாகத் தெரிகிறது .

அவளுக்கு மிக அருகில் நின்று அவளைப் பச்சையாகப் பார்க்கிறான். கண்களை விரித்து , உதட்டைச் சுருக்கி … பிறக்கும் சிரிப்பு அவனது கீழ்த்தரமான ரசனையைக் காட்டுகிறது . வேறுபட்ட , ஒதுக்கப்பட வேண்டிய ரசனை .

அவனது செயலால் அவளிடம் ஏற்பட்ட சலனத்தை ரசித்துக் கொண்டே இடுப்பை வளைத்து அவளை ஒரு தடவை மோதுகிறான் .கைகளை அவள் மீது படர விடுகிறான் . ‘ ஜோரா இருக்கே ‘ என்று சொல்லிவிட்டு அநாவசியமான வேகத்தில் நகர்ந்து விடுகின்றான் .

எதிர்பாராத விதத்தில் நடை பெற்று முடிந்து விடும் அந்த சம்பவத்தால் அவள் செயலிழந்து விடுகிறாள் .

‘ யாருடா அவன் … பயலைப் புடிடா ! ‘ பக்கத்தில் கடை விரித்திருக்கும் செருப்புத் தொழிலாளி கத்துகிறான் , இருந்த இடத்தை விட்டு எழாமல் .

‘ இவனை மாதிரி அயோக்யப் பசங்களை எல்லாம் சும்மா விடக் கூடாதுபா ! ‘ பேசியவாறே கையில் டீத்தம்ளருடன் அருகே வருகிறார் ஒருவர் .’

‘ ….. தா ! எவனாவது எம்மேல கை வச்சா கிழிச்சுடுவேன் . ‘ அந்த புரூஸ்லி கத்தியவாறே வேகமாக நடக்கின்றான் .

அவளைச் சுற்றி ஒரு கூட்டம் கூடுகிறது . அனுதாபங்கள் , குமுறல்கல் . ஆனால் எல்லாவற்றிலும் போலித்தனம் மிளிர்கின்றது. கீழே சிதறிய புத்தகங்களைக் குனிந்து பொறுக்கிக் கொள்கிறாள் . கண்ணாடியைக் கழற்றி விரல் நுனியால் கண்ணீரைத் துடைத்துக் கொள்கிறாள் .

’ நீ அழாதேம்மா . இன்னொரு தபா அவன் இப்டிப் பண்ணட்டும் . தோலை உரிச்சுடறேன் . கஸ்மாலம் ! ‘ செருப்புத் தொழிலாளி திட்டுகிறான் .

‘ இவன மாதிரி ஆளுங்கள்ளாம் இருக்கவரை பொண்ணுங்க ரோட்ல எப்படி நடக்க முடியும்பா . ‘ டீயைக் குடித்து முடித்துவிட்டுத் தம்ளரைக் கடையில் கொடுத்து விட்டு மெதுவாக லாட்ஜீக்குள் நுழைகிறார் அவர் .

திடீரென்று நடந்து முடிந்து விடுகின்ற அந்தச் சம்பவத்தின் பரபரப்பைத் தணிப்பதற்காக சிகரெட் ஒன்றைப் பற்ற வைத்துக் கொள்கிறேன் .

நான் அவளைப் பார்க்கிறேன் . சுற்றி நிற்பவர்களின் பார்வையில் அனுதாபம் என்ற போர்வையில் உறங்கும் வேடிக்கை பார்க்கும் இயல்பைத் தாங்க முடியாமல் தலை குனிந்து நிற்கிறாள் அவள் .

என்னுள் ஏதோ அரிக்கின்றது . அவளைப் பார்ப்பதற்கு ஏதோ போல் இருக்கின்றது . பார்வையைத் திருப்பிக் கொள்கிறேன் .

ஆட்டோ ஒன்று அருகில் வந்து நிற்கும் சப்தம் கேட்டுத் திரும்புகிறேன் . அதில் இருந்து அழகான , உயரமான , தலைமுடியை அதிகமாக வளர்த்திருக்கும் ஒருவன் இறங்குகிறான் .

‘ ஸாரி ஃபார் த டிலே கீத் ! ‘ மன்னிப்பு கேட்கும் தோரணையில் பேசியவன் அவளைப் பார்த்ததும் பதறுகிறான் .

“ வாட் ஹாப்பண்ட் கீத் ? “

அவள் உடனே பதில் சொல்ல முடியாமல் திணறுகின்றாள் . பின்னர் அரைகுறையாக அவனிடம் நடந்ததைச் சொல்கிறாள் . அதைக் கேட்கும் அவன் சுற்றி நிற்பவர்களைக் கோபமாகப் பார்க்கிறான் . ‘ ஒருத்தனுக்குக் கூடவா துணிச்சல் இல்லே ? ‘ என்ற கேள்வி அவனது பார்வையில் அமைதியாக ஒலிக்கிறது .

மீண்டும் அவளைப் பார்க்கிறான் . ‘ வேர் இஸ் ஹி ? ஜஸ்ட் ஷோ மி . ‘
அவள் கையை நீட்டி புரூஸ்லி போன திசையைக் காட்டுகிறாள் . பாதை வெறிச்சோடிக் கிடக்கிறது .

‘ ஆமா, இவரு போய்க் கிழிச்சுடுவாரு . சும்மா போயா … அவ்ளோ வீரம் இருந்தா அப்பவே வந்து ஹீரோயினைக் காப்பாத்தி இருக்க வேண்டியதுதானே ! ‘ கம்பத்தில் சாய்ந்து கொண்டிருப்பவன் கண்களை உருட்டிக் கைகளை ஆட்டிப் பேசுகிறான் . ‘ என்னவோ நடக்காதது நடந்துட்டாப்ல பேசறியே ! ‘

‘ லெட் அஸ் கெட் எவே ஃப்ரம் ஹியர் ஜார்ஜ் ! ‘ அவள் ஆட்டோவில் ஏறி உட்கார்ந்து கொண்டு புத்தகங்களைப் பக்கத்தில் வைக்கிறாள் . அவன் அடுத்த பக்கத்தில் ஏறிக் கொள்ளுகிறான் . அவளிடம் ஏதோ சொல்கிறான் .

‘ நோ ஜார்ஜ் . எனக்கு மனது ஏதோ போல் இருக்கு . இன்னைக்கு கோவிலுக்குப் போகலாம் . வீ வில் கோ டு மூவி டுமாரோ . ‘

அவன் தலையாட்டுகிறான் . டிரைவரிடம் ‘ மயிலாப்பூர் கோவிலுக்கு விடுப்பா ‘ என்கிறான் . ஆட்டோ புறப்படுகிறது .

’ நல்லா இருக்குயா நாயம் . செத்த முன்னாடி எவனோ இடிச்சுட்டான்னு ஓன்னு அழுதுச்சு . இப்போ பாரு இவங்கூட ஒரே ஆட்டோவில போகுது . ம் … எங்கே போயி விழுந்து கிடக்கப் போவுதுங்களோ ! ‘ செருப்புத் தொழிலாளி இரண்டு கைகளையும் விரித்துச் சிரிக்கிறான் . சுற்றி நிற்பவர்களும் சிரிக்கிறார்கள் .

என்னால் சிரிக்க முடியவில்லை .

‘ ஒரே ஆட்டோவில் அவர்கள் ஏறுவதை மட்டும்தானே பார்க்கிறீர்கள் . உயிரற்ற புத்தகங்களைப் பெருஞ்சுவர்களாக மாற்றிக் கொண்டு இடைவெளி விட்டு அமரும் அவர்களது பண்பை ஏன் ஏற்றுக் கொள்ள மறுக்கிறீர்கள் ? அவளது மனத் துயரைப் போக்குவதற்காகத் தனது ஆசைகளை அழித்துக் கொள்ளும் அவனது பெருந்தன்மையை ஏன் ஒப்புக் கொள்ள மாட்டேன் என்கிறீர்கள் ? ‘

என் மனம் அழுகின்றது .

‘ வேஷங்கள் போட்டுக் கொண்டு , வேஷங்கள் போட்டிருப்பவர்களின் மத்தியில் உலவி வரும் உங்களுக்கு , வேஷங்கள் போடாத இவர்களைப் பிடிக்காதுதான் . வேஷங்கள் போடாவிட்டாலும் கூட இவர்கள் உங்களைவிட அழகானவர்கள் . உங்களைக் காட்டிலும் உயர்ந்தவர்கள் . ‘

என் மனம் அழுகின்றது .

வந்து நின்ற பஸ்ஸில் ஏறிக் கொள்கிறேன் .

’ நீ எந்த வகையில் சேர்த்தி ? ‘ என்னை நானே கேட்டுக் கொள்கிறேன் . பதில் கூற முடியவில்லை . ஒரு வேளை என் வேஷங்களை என்னால் பார்க்க முடியவில்லையோ . ‘

என் மனம் அழுகின்றது .

– 1979 ல் குமுதம் நடத்திய இளைய தலைமுறையினருக்கான சிறுகதைப் போட்டியில் இரண்டாவது பரிசு பெற்ற சிறுகதை – பிரசுரமான எனது முதல் சிறுகதையும் கூட .

Print Friendly, PDF & Email

1 thought on “ஒரு மாலை நேரத்தில் என் மனம் அழுகின்றது

  1. அருமை.. மனிதன் போடும் வேஷங்களை மிகவும் அழகாக காண்பித்துள்ளீர்கள் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *