ஒருநாளும் உனை மறவாத..

3
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: March 29, 2013
பார்வையிட்டோர்: 14,741 
 

“ஒருநாளும் உனை மறவாத” – ஆன்லைன் ரேடியோவில் ஜானகி பாடிக்கொண்டிருக்க, நான் எனது ஹோண்டாவை I-4 ஈஸ்ட் நெடுஞ்சாலையில் விரட்டிக் கொண்டிருந்தேன். I-4, ப்ளோரிடா நகரமான தம்பாவையும்(Tampa), உலக சுற்றுலாதலமான அர்லண்டோவையும்(Orlando) இணைக்கும் நெடுஞ்சாலை. நம்மூர் ஸ்டேட் ஹைவே போல. என்றுமில்லாமல் எனது ஹோண்டா சிவிக் இன்று சீறிப் பாய்ந்து கொண்டிருந்தது. காரணம், அருகில் அமர்ந்திருந்த அவளாகத் தான் இருக்க வேண்டும்.

அவளைப் பற்றி சொல்வதற்கு என எதுவுமில்லை. காரணம் எனக்கே இன்று தான், அரைமணி நேரத்திற்கு முன்புதான் அவளை தெரியும். பேசாமல் நானும் சராசரி பிரம்மச்சாரியைப் போல சனிக்கிழமையை ராஜ்தமிழ்.காமில் இரண்டொரு படத்துடனும், கையில் கொஞ்சம் சரக்குடன் முறுக்குமாய் கழித்திருக்கலாம். விதி வலியது என்பது என் விஷயத்தில் உண்மையாயிற்று.

IIFA சார்பில் திரைப்பட விழா நடைபெறுவதாய் நண்பன் ஒருவனிடமிருந்து அழைப்பு வந்தது. சராசரி இந்திய குடிமகனைப் போல் திரைப்படப் பிரியனாக இருந்த காரணத்தால் சோம்பலை முறித்து, குளியலை முடித்து ஹாலிஸ்டரை உடுத்தி கிளம்பினேன். திரையரங்கிற்குள் வரிசையில் நின்று கொண்டிருக்கையில் யாரோ என்னைப் பார்ப்பதாக உள்ளுணர்வு கூற திரும்பிப் பார்த்து ஒரு ABCD இளம்பெண்கள் குழு நிற்பதை கண்டுகொண்டேன். ABCD – American Born Confused Desi (முதல் தலைமுறை இந்தியர்களுக்கு அமெரிக்காவில் பிறந்த, இந்திய அமெரிக்க பிள்ளைகள்). அவர்களும் கிட்டதட்ட அமெரிக்கர்கள் போல தான். நம்மை மதிப்பதே இல்லை.

இடைவேளை சென்று திரும்புகையில் அரங்கிற்குள் அந்த குழுவிலிருந்து ஒரு தலை என்னைப் பார்த்து அசைவைதை ஓரிருமுறை பார்த்து உறுதி செய்து கொண்டேன். திரைப்படம் முடிந்து அமெரிக்க நாயர் கடையான Starbucksல் காபி அருந்துகையில் அந்த ABCD குழு எங்களருகில் வந்தமர்ந்தது. வழக்கம் போல அவர்களை சட்டை செய்யாத பாவனையில் ஸ்கேன் செய்து கொண்டிருந்தோம்.

காபி குடித்து கொண்டிருக்கையில் மறுபடியும் ஒருமுறை உறுதி செய்து கொண்டு, நண்பனிடம் விடைபெற்று நழுவ ஆரம்பித்தேன். பார்க்கிங் லாட்டில் கார் கண்ணாடியில் அவளின் நிழல் கண்டு “Yes” என்று எச்சரிக்கையோடு திரும்பினேன். எச்சரிக்கைக்கு காரணம் எங்கே Wanted படத்தில் வருவது போல என்னை தூக்கி கொண்டு போய் எதுவும் செய்ய போகிறார்களோ என்ற பயம் தான். நல்லவேளை அவள் மட்டும் நின்றிருந்தாள். நீல நிற ஜீன்சும், சிவப்பு நிற மேலாடையும் அணிந்திருந்தாள். நீளமான தலைமுடி.

அவள் வீட்டுக்கு செல்ல வேண்டுமென்றும், அதற்கு உதவி செய்ய முடியுமாவெனவும் ஆங்கிலத்தில் கேள்வினாள். யார் என்னவென தெரியமால் லிப்ட் கேட்பது அமெரிக்காவில் சகஜம். ஆனால் என்னிடம் லிப்ட் கேட்பது, அதுவும் ஒரு பெண் லிப்ட் கேட்பது இதுவே முதன்முறை. மறுபடியும் எச்சரிக்கை மணி. ராஜேஷ்குமார் கதைகள் படிப்பதை நிறுத்த வேண்டும். இது போல ஒரு வாய்ப்பு இன்னொரு முறை கிடைக்காது. ஆனால் இதில் சூழ்ச்சி எதுவுமில்லையென தெரிந்து கொள்ள வேண்டும். உடன் ஒப்புகொண்டால் அலைபவன் என நினைத்து கொள்ள கூடும் என்பதால், “எனது வீடு மேற்கு தம்பாவில் இருக்கிறது. போகும் வழியெனில் எனக்கெதுவும் ஆட்சேபணையில்லை. நீங்கள் எங்கே போகணும்?” என்றேன். அவள் பதிலேதும் கூறாமல் விழித்தாள். விழித்ததில் விழுந்தேன். ” சுற்று வழியாகயிருந்தாலும் பரவாயில்லை” என்றவுடன் சிறு புன்னகை ஒன்றை உதிர்த்து “எனது வீடு கிழக்கு தம்பாவில்” என்றாள்.

முன் வைத்த காலை பின் வைப்பதில்லையென, “பரவாயில்லை, நான் அங்கிருக்கும் இந்தியன் ஸ்டோர்ஸ்க்கு நாளை போக வேண்டுமென்று நினைத்திருந்தேன். இன்று போய் விட்டால் போகிறது” என வழிந்தேன். அவளுக்கு அது புரிந்திருக்க வேண்டும். நமுட்டு சிரிப்பு ஒன்றை உதிர்த்து காரில் ஏறிக்கொண்டாள். கார் I-4 ஈஸ்டை நோக்கி சீறியது. I-4 ஈஸ்டை தொடும் வரை எதுவும் பேசவில்லை. தொட்டவுடன் நான் எனது கைபேசியிலிருந்த இணைய வானொலி செயலியை உயிர்ப்பித்தேன். ஜானகி பாடி கொண்டிருந்தார். பாட ஆரம்பித்த சில நொடிகளில் அவள் கை டாஷ்போர்டை எட்டி ஒலியை குறைத்தது.

“வேண்டுமானால் மாற்றிக் கொள்ளுங்கள்” என மௌனத்தை உடைத்தேன். ப்ச் என்று அவள் தலையசைத்த விதம் அவள் பாட்டு கேட்கும் மனநிலையில் இல்லை என்பதை சொல்லாமல் சொல்லியது. ஏதோ ஒன்றில் அவள் மனம் ஈடுபட்டிருப்பது தெரிந்தது. “என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?” என எதிர்பாராத கேள்வி ஒன்றை கேட்டாள். “I’m a consultant in one of the leading software firm” என என் வேலையை எடுத்துரைத்தேன். ஆங்கிலத்தில் சொல்லும்போது நமக்கே நம் வேலை மீதான மதிப்பு கூடுகிறது. “ஓ.. அப்படியென்றால் பிரச்சனைகளை கலந்தாலோசித்து தீர்வு காண்பீர்களோ?” என கேள்வியில் புதிர் வைத்தாள். “ம்ம்.. மென்பொருள் பிரச்சனைகளை மட்டும்” என்றேன். “அப்படியென்றால் உங்களால் நிஜ உலக பிரச்சனைகளை தீர்க்க இயலாது என்று எண்ணி கொள்ளலாமா?” உடம்பின் மொத்த ரத்தத்தையும் தலைக்கு ஏற்றினாள் ஒற்றை கேள்வியில். யாராயிருந்தாலும் பின்வரும் பதிலை வெவ்வேறு வார்த்தைகளில் கூறியிருப்பார்கள். “எதையும் எதிர்கொள்ளாமல் அப்படி ஒரு முடிவிற்கு வர இயலாது” என்றேன். கடந்த சனிப்பெயர்ச்சி எனது ராசியையும் ஆக்ரமித்திருந்தது என்று அம்மா சொன்னது ஏனோ நினைவிற்கு வந்தது.

“சரி.. நான் இப்பொழுது ஒரு பிரச்சனையில் இருக்கிறேன்.. உங்களால் அதை எதிர்கொள்ள முடியுமா?” மறுபடியும் சவால். ஒன்றில்லை. இரண்டு. பேசி கொண்டே வந்ததில் ஹெட்லைட்டை ஆன் செய்ய மறந்து விட்டிருந்தேன். சனிபெயர்ச்சி ஷெரிப் ரூபத்தில் வந்து தொலைத்தது. காரை ஓரம்கட்டி ஸ்டீரிங் மேல் கை வைத்து காத்திருந்தேன். வந்தவர் என்னுடைய ஓட்டுனர் உரிமத்தை வாங்கினார். “எதற்காக நீங்கள் நிறுத்தப்பட்டீர்களென என தெரியுமா, ஜென்டில்மன்?” என கண்களைப் பார்த்து கேட்டார். “தெரியும் ஆபீசர். ஹெட்லைட்டை ஆன் செய்ய மறந்து விட்டேன்” என்றேன் அவர் கண்களைப் பார்த்து. அசடே என்பது போல ஒரு பார்வைப் பார்த்து விட்டு தன்னுடைய வாகனத்தை நோக்கி சென்றார்.

“விறுவிறுப்பாக இருக்கிறது” இவள் வேறு. ஏற்கனவே சிவப்பு விளக்கை மீறியது, அதிவேகம் என நூற்றுகணக்கில் தண்டம் கட்டியாயிற்று.”இப்பொழுது என் கவலையெல்லாம் இவர் எவ்ளவு எழுத போகிறார் என்பது தான்” என்று நொந்து கொண்டேன். “ஜென்டில்மன்” என்றபடி வந்தார் அந்த ஷெரிப். உரிமத்தை நீட்டி விட்டு “இந்த தடவை வெறும் எச்சரிக்கையோடு விட்டு விடுகிறேன். அடுத்த தடவையும் அது போலவே இருக்கும் என உறுதியில்லை” என்று கூறி எனது 32ப் பற்களையும் தரிசித்து சென்றார்.

காரை நகர்த்தி, விரட்ட ஆரம்பித்த பொழுது பேச தொடங்கினாள். “நீங்கள் தென்னிந்தியாவா?” நிறத்தை வைத்து கேட்டிருப்பாள் போலும். “ஆம்.. கோயம்புத்தூர்” என்றேன். “ஓ.. தமிழானோ?” என்று இதுவரை ஆங்கிலம் பேசி கொண்டிருந்தவள் திடீரென மலையாளம் பேசினாள். “எனக்கு மலையாளம் புரியும்” என்றேன். “எங்கனே?”. எனது மூதாதையர்கள் மலையாளிகள் என்றும், நான் தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்தவன் என்றும் எடுத்துரைத்தேன். “ஓ.. அது நந்தாய்” என்றவளிடம், “நாம் கிழக்கு தம்பாவை நெருங்கி விட்டோம். உங்கள் வீட்டிற்கு எப்படி போக வேண்டும்?” என்றேன். அர்லண்டோ என்றாள்.

அதிர்ச்சியா, ஆத்திரமா என்று இனம் காண முடியாதொரு உணர்ச்சியுடன் பிரேக்கை அழுத்தினேன். அர்லண்டோ நூறு மைல் தொலைவில் இருக்கிறது. “அர்லண்டோ என்றா சொன்னாய்?” என்ற என்னை பார்த்து “அதே… அர்லண்டோ” என்றாள். “அடுத்த கிளைச்சாலை அல்லது ஓய்விடத்தில் நிறுத்துகிறேன். அங்கிருந்து அர்லண்டோவிற்கு நீ எப்படியேனும் போய் சேர்” என்று கடுப்பாக கூறினேன். அவள் பயந்த மாதிரி தெரியவில்லை. ஒரு வேகத்தில் நான் அப்படி சொன்னாலும் அவ்வாறு செய்வதாக உத்தேசமில்லை. “என்ன தான் பிரச்சனை உனக்கு?” என்றேன். “ஞான் இவிடே USFல் Masters டிகிரிக்கு படிச்சு கொண்டிருக்கியானு. Brandonலா வீடு. எண்டே பேரன்ட்ஸ் என்னே இந்தியலேக்கு அயக்கான் போகுகயானு. அவிடே போய் ஸ்டடீஸ் துடறான் போகுகயானு”. நிறுத்தி விட்டு மீண்டும் தொடர்ந்தாள்.”அச்சனு businessல் கொறச்சு loss. அவசானம் Bankrupt ஆவும் எந்தாயப்போல் வேற வழியில்லாதே நாட்டிலேக்கு திரிச்சு போகான் தீர்மானிச்சு” என்று முடித்தாள்.

ABCDகளுக்கே உரித்தான இடம்பெயர்தல் பற்றிய குழப்பமென மனம் ஆறுதலடைந்தது. “ஹும்.. இது தான் உன் பிரச்சனையா.. இதற்கு தான் இந்த பில்ட்-அப் ஹா? இது பிரச்சனையே இல்ல. இங்கே பொது நல நிறுவனங்கள் நிறைய இருக்கிறது. அவர்கள் உன் படிப்புக்கு உதவி செய்வார்கள். படித்து முடித்து, நல்ல வேலை கிடைத்தவுடன், உன் பெற்றோரை திரும்ப அழைத்து வந்து விடலாம்.” என முல்லைக்கு தேர் கொடுத்த பாரி வள்ளல் கணக்கில் பெருமிதத்தோடு கூறினேன். “அவர்க்கு அது இஷ்டபடில்லா” என்றாள். “நீ வேறு மாநிலத்தில் உள்ளப் பல்கலைகழகத்திற்கு மாறி விடலாம். யாருக்கும் உன் கடந்த காலம் பற்றி எதுவும் தெரியாது” என்றேன். “இது சரியாவும் எந்து தோந்துனு” என்றவளிடம் “அப்படியென்றால் நாம் உனது வீட்டிற்கு திரும்புகிறோம்” என்றதும், “No” என அலறாத குறையாக… அலறினாள்.

“ஏன்” என்றதற்கு “தொடர்ந்து செல்லுங்கள்” என்பது மட்டுமே பதிலாக கிடைத்தது. “முடியாது” என நான் சொல்ல, அவள் கைப்பிடியின் மேல் கை வைக்க, “சரி..” என்று கேஸ் பெடலை ஏறி மிதித்தேன். ஏதோ இன்ப சுற்றுலா செல்வது போல ஹாயாக பதப்படுத்தப்பட்ட காற்றை சுவாசித்து கொண்டு, வாய்க்குள் எதையோ முணுமுணுத்து கொண்டிருந்தாள்.

“சரி.. எதற்காக இப்பொழுது அர்லண்டோ செல்ல வேண்டுமென்கிறாய்?” தூங்கி விடுவேன் போலிருந்ததால் மறுபடியும் ஆரம்பித்தேன். “அதினே குறிச்சு நிங்கள்க்கேந்தானு?” என்றாள். தேவையா உனக்கு என்ற கேள்வியோடு தேவை தான் என்ற பதிலும் தோன்ற “உன் பிரச்சனைகளை தீர்த்து வைப்பதாக நான் ஒப்புக்கொண்டுள்ளேன் என்பதை நினைவுபடுத்த விரும்பிகிறேன்” என்றேன். மடக்கபட்டவளாய் அவள் நடித்திருக்க வேண்டுமென தோன்றியது. “எண்டே பிரெண்டினே காணான்” என்றவுடன் ஏனோ மனம் தவித்தது. வாய் கேட்டுவிட்டது “பாய்பிரெண்ட்?”. அவளது பார்வையின் உஷ்ணம் என் கன்னத்தை சுட்டது. “அங்கனே ஒராள் உண்டெங்கில் எந்தினா நான் நிங்கள்டே கூடே வருந்தது” என சீறினாள். மனம் ஆறுதலையும், ஆச்சர்யத்தையும் ஒன்றாக அனுபவித்தது. “நம்பமுடியவில்லை” என மறுபடியும் வழிந்தேன். பின் எனது கௌரவத்தை நிலைநாட்ட “அமெரிக்க கல்லூரிகளில்ப் பேருக்காக பாய்பிரெண்ட் வைத்துகொள்வது சகஜம்தானே” என்றேன். முறைத்தாள். மறுபடியும் மௌனம்.

பாதி தூரத்தை கடந்தாயிற்று. இடையில் அர்லண்டோவிலிருக்கும் என் நண்பனுக்கு நான் வருவதாய் தகவல் சொல்லியாயிற்று. முன்னிரவில் தனியாக ஒரு பெண்ணுடன் நெடுஞ்சாலைப் பயணம் சுவாரசியமானதாகவும், சுகமூட்டுவதாகவும் தோன்றியது. அந்த சுகமும், சுவாரசியமும் அடுத்த நொடியே சுக்ரியா சொல்லி விடைபெற்று கொண்டன, நெடுஞ்சாலையில் இருந்த அந்த Variable Message Signஐப் படித்தவுடன்!!!

SILVER ALERT

CALL *347

MISSING 21 YO BRANDON GIRL WITH DEMENTIA DISORDER

BLUE JEANS RED TOPS

அன்றிரவு அவசரப் போலிசின் உதவியுடன், அவளைப் பத்திரமாக அவளது பெற்றோரிடம் ஒப்படைத்து வீடு வந்து சேர்ந்த பின் விக்கிபீடியாவில் Dementia எனத் தேடினேன்.அதன்படி வயதானவர்களுக்கு மட்டுமே வரும் இந்தப் புலன் உணர்வு சார்ந்த சீர்குலைவு சில சமயம் இளம் வயதினரையும் பாதிக்குமெனவும், அதற்குப் பெயர் early onset dementia எனவும் இருந்தது. அதன் அறிகுறிகளில் சில:

Affected persons may be disoriented in time (not knowing what day of the week, day of the month, or even what year it is), in place (not knowing where they are), and in person (not knowing who they, or others around them, are).

Print Friendly, PDF & Email

3 thoughts on “ஒருநாளும் உனை மறவாத..

  1. அஜேஷ்,
    நல்ல திருப்பம் கொண்ட சிறுகதை. சுவாரசியமாய் இருந்தது.
    நன்றி,
    மோகன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *