ஒருநாளில் மறைந்த இரு மாலைப்பொழுதுகள்

 

அட, எனக்கு முப்பத்திரண்டு வயதாகிறதே என நினைத்துக்கொண்டு கவலையடைந்தாள் புனிதம். வயது அதிகரிப்பது ஒன்றும் புதினமான சங்கதியில்லை என்பது தெரிந்திருந்தாலும் இப்பொழுதெல்லாம் வயதின் நினைவும், அதையொட்டிய கவலைகளும் தோன்றுவதற்குக் காரணம் அவன்தானோ? அவனைக் காண நேர்ந்தபிறகுதானே இந்தப் புதுமையான மனக்கலக்கம் ஏற்பட்டிருக்கிறது. அவனுக்கும்.. தன் மன நினைவுகளுக்கும் கவலைகளுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது என்றும் புரியவில்லை. அவனைக் காணாமலே விட்டிருக்கலாம். வாழ்க்கையில்வெவ்வேறு விதங்களில் கவலைகளின் தோற்றங்களை அலாதியான துணிவுடனே சுமந்து வந்தவள் புனிதம். இதென்ன புதுவிதமான கவலை…. இந்த முப்பத்திரண்டு வயதை நினைத்து!

இந்த வயதில் எத்தனை பெண்கள் ஊரிலே குடும்பமும் குடித்தனமுமாக வாழ்கிறார்கள். கணவன்… குழந்தைகள்…. பொறுப்பு…. சுகம்! மண்ணாங்கட்டி.. குடும்பத்திலும் பிள்ளை குட்டிகளிலும் அப்படி என்ன சுகம்தான் கொட்டிக்கிடக்கிறது? சீச்சி!…. அந்தப் பழம் புளிக்கும்!

ஊரிலே அப்பா…. அம்மா…. தங்கைகள்…. தம்பிகள் எல்லோரையும் பிரிந்து, கடல் கடந்து வந்து இந்தப் பாலைவனப் பிரதேசத்தில் பணத்திற்காகக் காயவேண்டிக் கிடக்கிறதே.. கவலைகளுக்கு அதுதான் காரணமோ? பணத்துக்காக இப்படியொரு செயற்கையான வாழ்க்கையா? என்ன இலகுவாகச் சொல்லியாயிற்று…. பணத்திற்காக இப்படியொரு வாழ்க்கையா என்று! பணம்! பணம்தானே வேண்டும்? அப்பாவுக்கு… சகோதரர்களுக்கு… மாப்பிள்ளைமாருக்கு.. எல்லோருக்கும் வேண்டியது அதுதான். அது மட்டும்தான்! பிறகு பணத்தைத் தேடி எங்கே போனால்தான் என்ன கேவலம் இருக்கிறது?

மாதா மாதம் வீட்டுக்குப் பணம் அனுப்பமுடிகிறதே, சுளையாக! அவர்கள் வயிறு நிறையச் சாப்பிடுவார்கள். அம்மா ஏதோ சீட்டுக்கூடப் பிடிக்கிறாளாம்…. ‘உனது கலியாணத்துக்கு உதவும்” என்று கடிதம் எழுதியிருந்தாள். கலியாணமும் கச்சேரியும்! தங்கச்சிகளுக்காவது உரிய காலத்தில் ஒழுங்காக நடந்தால் சரி. அந்த ஒரு விஷயத்தை நினைக்கிறபொழுதுதான் சத்தியமாக ஆறுதலடைய முடிகிறது.

அப்பா செய்த கைகரியங்களில் ஒன்று: மூத்த நான்கையும் பெண்களாவே பெற்றுப்போட்டது. ஆனால் நேரகாலத்திற்கு அவர்களுக்கு ஒவ்வொருவனைப் பிடித்துக் கொடுக்கவும் முடியவில்லை. நேரகாலத்திற்குக் கஞ்சியும் ஊற்ற முடியவில்லை. பாவம் அவர் என்ன செய்ய?

தனது கடமையை உணர்ந்துகொண்டு, அரபுதேசம் வந்துவிட்டாள் புனிதம். “ஹவுஸ்மெயிட்”டாக மூன்று மாதத்திற்கு முதல் குவைத்திற்கு வந்தாள். அவளோடு சேர்ந்து பதினைந்து பெண்களை “ஏஜெண்ட்“ அனுப்பிவைத்தான். புனிதத்திற்கு ஆங்கிலக் குடும்பத்திற்குப் பணிபுரிய வேண்டிவந்தது.

ரொபேர்ட் கோல் தம்பதியினரின் குழந்தையைக் கவனிப்பதுதான் புனிதத்தின் முக்கிய வேலை. வீட்டு வேலைகள் குறைவாகவே இருக்கும். திருமதி கோல் புனிதத்தை ஒரு பணிப்பெண்ணாகவா கருதுகிறாள்? தங்கள் குடும்பத்திலேயுள்ள ஒருத்திமாதிரி எவ்வளவு அன்பாக நடத்துகிறார்கள். வயிறு நிறையச் சாப்பாடு, பழவகைகள், ரெலிவிசன், தனியறை, கட்டில் மெத்தை சொகுசு! இந்த வசதிகளையெல்லாம் ஊரிலிருந்தால் நினைத்துக்கூடப் பார்க்கமுடியுமா என எண்ணிக்கொண்டு மனதை ஆறுதல் படுத்த நினைத்தாலும்… உள்ளே முட்டி முட்டி நோவெடுக்கிற நினைவுகள்.

குழந்தையை “பிராமில்” இருத்தி உருட்டியவாறு அல்பைட் வீதியில் நடந்து வந்தாள். கால் நடக்கிற அலுவலைச் செய்கிறது. குழந்தை நிமிர்ந்து பார்த்துச் சிரித்து அவளிடம் எதையோ சொல்ல எத்தனிக்கிறது. அதையும் கவனிக்கவில்லை. மனது நினைக்கிறது. நினைத்து, நினைத்து அது பறக்கிற இடம் எங்குதானென்று புரியவில்லை. மனதின் கேள்விகளுக்குப் பதிலளிக்கவும் முடியாது. கவலைகளுக்குச் சரியான காரணம் கண்டுபிடிக்கும்வரை அதைச் சமாதானிக்கவும் முடியாது.

அல்பைட் வீதியில் நடந்துவந்து “மெசில்லா ஹோட்டல்“ சந்தியை அடைந்ததும் நின்றாள். இங்கு நெடுநேரம்வரை நிற்கலாம். ஏழுமணிவரையானாலும். இன்னும் ஒரு மணித்தியாலமளவிற்தானே இருக்கிறது?

அதற்குள் அவன் எப்படியும் வந்துவிடுவான். அவனை நினைக்கிறபொழுது பொங்குகின்ற ஓர் இன்பம். காரை விட்டு இறங்குகின்றபோதே அந்தக் கண்களையும் ஹோட்டலினுள் நுழையுமுன்னர்…. அவசரத்தில் மலர்த்துகிற அந்தப் புன்னகையையும் தரிசிக்கலாமே! அவ்வளவுதானா? அதற்காகத்தானா இந்தக் கவலைகளெல்லாம்? முட்டாள் பெண்ணே அவன் எங்கே… நீ எங்கே… சும்மா போ!

அந்தக் கண்களையும், மலர்ச்சியையும் அவளுக்காகவே அவன் வீசுகிறபொழுது… அவள் ஏன் மணிக்கணக்காகவேனும் நிற்கக்கூடாது? நிற்பேன். அவனது பார்வைக்காக. அதற்குப் பிறகு…. இரவில் படுக்கையில் அவனது பார்வையும், சிரிப்பும் நினைவுக்கு வரும். அந்தப் பார்வையின் செக்ஸை நினைத்துக்கொண்டே படுக்கலாம். ஸ்வீட் ட்றீம்ஸ்!

இந்த மாலைபொழுதை நன்றாக ரசிக்கமுடிகிறது. இன்றைய மாலை மட்டுமல்ல, இங்கு மாலைப்பொழுதுகளே மிகவும் இனிமையானவை. தனிமையான வாழ்வில்…. அன்பு…. பாசம்…. எல்லாவற்றையும் தூரவிட்டு இருக்கும் வெறும் செயற்கையான வாழ்வில்… எப்படா ஒரு பொழுது கழியும் என்பதுபோல இருக்கும். இந்தத் தனிமையான வாழ்வுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்து ஒருவனைக் கட்டிக்கொள்வதென்றால்கூட…. பணத்தைச் சம்பாதித்துக்கொண்டு சீக்கிரமாக ஊருக்குப் போய்விடவேண்டும். காலையில் எழுகிறபொழுது எவ்வளவு கவலை தோன்றுகிறது. இது என்ன செயற்கையான வாழ்வு? எனக்காக யார் இருக்கிறார்கள். நான் தனிய! மாலை வந்தால் கொஞ்சம் குதூகலம்… அப்பாடா ஒருநாள் முடியப்போகிறதே!.

ஆறு மணிக்கெல்லாம் மறையாத ஜுன் மாதத்துச் சூரியன். குவைத் சிற்றியை நோக்கிப் பணக்காரத்தனமாகப் பறக்கின்ற வாகனங்களில்… அணிகோர்த்து நிமிர்ந்து நிற்கும் கட்டிடங்களின் தலைகளாய் இருக்கும் தண்ணீர் தாங்கிகளில் எல்லாம் பட்டுத் தெறிக்கும் மஞ்சள் வெய்யில் கண்களைக் கூசவைக்கிறது. அவனது பார்வையும் அப்படித்தான்! மெசில்லா ஹோட்டலுக்கு நிறைப் பேர் வருகிறார்கள். எல்லோரும் பெரிய மனிதர்கள். ஹோட்டலுக்கு மிதந்து வருகின்ற கார்களையும்… இறங்கிச் செல்லும் வெள்ளைக்காரர்களையும் பார்த்துக்கொண்டே இருப்பது நல்ல பொழுதுபோக்குத்தான். எத்தனை விதமான கார்கள்! எத்தனை விதமான வெள்ளைக்காரர்கள்! அரபிய உடையில் வருபவர்களைப் பார்த்து இவர்கள் அரபியர்கள் எனச் சொல்லலாம். மற்றப்படி வெள்ளைத் தோல்காரர்கள் எல்லோரையும் வெள்ளைக்காரர்களாகத்தான் நினைக்க முடிகிறது. வெள்ளைத் தோலிலும் விதவிதமான வெள்ளைகள். அதை வைத்துக்கொண்டே இவன் வேறு நாடு… இவன் வேறு நாடு என்று நினைக்க முடியும். கோட் – சூட் – ரை சப்பாத்து, டொக், டொக் எவ்வளவு கம்பீரமாக நடக்கிறார்கள். எங்களை அசைக்க யாரும் இல்லை என்பதுபோல! எங்களுடைய சனங்களுக்கு இந்தக் கம்பீரமும் திமிரும் வரவே வராதா? சில வெள்ளைக்காரர்கள் தாங்களே வாகனங்களைச் செலுத்தி வருவர். சிலருக்காக “ட்றைவர்“ ஓட்டுவார். அதிலும் கவலையான விஷயம் அந்த ட்றைவர்கள் எல்லாம் எங்கள் பக்கத்தவராக இருப்பது. இது என்ன நீதியோ? இங்கு வருகிற எங்களுடைய ஆட்களெல்லாம் ஏதாவது சிறிய, சிறிய வேலைகளுக்குத்தானே வருகிறார்கள். லேபர்கள்… ஹவுஸ் மெயிட்ஸ்… ட்றைவர்ஸ்…. இடியட்ஸ்! ஒரு நாளைக்காவது வெள்ளையன் கார் ஓட்டிவர, அதிலிருந்து ஒரு கறுப்புத்தோல் இறங்கவேண்டுமே. எவ்வளவு அருமையாக இருக்கும்!

எந்த நேரத்தில் புனிதம் அந்தக் கனவைக் கண்டாளோ! அவன் வந்தானே அன்றைக்கு! கோட் – சூட் – ரை – சப்பாத்து – டொக் – டொக்! எவ்வளவு கம்பீரமாக! அவனைப் பார்த்த மாத்திரத்திலேயே… ‘எங்களுடைய நாட்டிலிருந்தும்..!’ என நினைத்தாள். அப்படி நினைக்கத்தான் அவள் விரும்பினாள். அவன் பெரிய உத்தியோகத்தனாக இருக்கும். “டொக்டராக, இஞ்சினியராக..!” இந்தப் பெரிய நட்சத்திர ஹோட்டலில் குடியிருக்கிறான் என்றால் லேசுப்பட்ட ஆளாகவா இருப்பான்? வெள்ளைத் தோல் ட்றைவர் போய்விட்டான். எங்களுடைய பெரியவனும் போய்விட்டான். சாய்…. வடிவாகப் பார்க்க முடியாமல் போய்விட்டதே! நாளைக்குப் பார்க்கவேண்டும். நாளைக்கு வருவானோ…. என்னவோ!

அன்றைய மாலை மறைந்துவிட்டது. மாலை எவ்வளவு அழகாக இருக்குமோ… அப்படித்தான் இரவும் இதமாக வரும். ஒருநாள் முடிந்துவிட்ட சுகம்! இன்னும் எத்தனை நாட்களில் ஊருக்குப் போகலாம். ஊரிலே அப்பா, அம்மா சகோதரர்கள்.. கல்யாணம்? அட, இந்த முப்பத்திரண்டு வயதுக்குப் பிறகுமா? இப்படி வெளிநாட்டிலிருந்து உழைத்துக் கொண்டுபோய், ஒரு நாளைக்கு அவள் மணவறையில் புதுமணப் பெண்ணாக? இரவுகளுக்கும் சுகமான நினைவுகளுக்கும் குறைச்சலே இல்லை! ஒரு மாலை மறைந்துவிட்ட இனிமையை.. ஒரு நாள் முடிந்துவிட்ட இன்பத்தை அந்த நினைவுகளைத் தொடர்ந்து ஏற்படும் ஏக்கம் கெடுத்துவிடுகிறது. ஒரு நாள் முடியப் போவதால் சந்தோஷமும் அதனாலேயே வயதில் அதிகரிப்பு ஏற்படுகிறது என்ற கவலையும் தோன்றிவிடுகிறது. இது என்ன இன்பமும் துன்பமும் கலந்த வேளை? மகிழ்ச்சியும் துக்கமும் கலந்த நினைவுகளைத் தருகிற நேரம்! இப்போது புதுப் பிரச்சினையும் முளைத்திருக்கிறது. அவன் நாளைக்கும் வருவானோ… என்னவோ!

அடுத்த நாளும் வந்தான். புனிதம் எதிர்பார்த்து நின்ற நேரம் சரியாக இருந்தது. அந்த “பியூக்“ கார் அமைதியாக வந்து மெதுமையாக நின்றது. அவன் இறங்கினான். புனிதம் ஆர்வம் மேலிட்டுப் பார்க்க, அவனும் அவளைப் பார்த்தான். தற்செயலாகத்தான் அவனும் கண்டிருக்கவேண்டும். ஒரு ஆச்சரியமும் சந்தோஷமும்.. அவனிடத்திலும் தோன்றியமாதிரி இருந்தது. அல்லது அது தனது பிரமையோ என்று தெரியவில்லை. அவளைக் கண்ட மாத்திரத்தே அந்த நடையிலும் மிடுக்கிலும் ஒரு தளர்ச்சி தோன்றியது போலிருந்தது! ஏனோ? என்ன நினைத்தானோ? போய்விட்டான், பேசாமலே போய்விட்டான்.

அடுத்த நாளும் அதே நேரம் வந்தது. மிதக்கிற “பியூக்“கின் கதவு திறக்க அவன் கம்பீரமாக வெளிப்பட்டான். நேற்றையைப்போல அவசரமாக நுழையாமல்…. அவளைத் தேடுகிறானோ…. அவளைக் கண்டதும் புன்சிரிப்பு…. சிரிக்கலாமா…? கூடாதா….?

குவைத்திற்கு வந்து அலுப்புத் தட்டிய நாட்களெல்லாம் உற்சாகமடையத் தொடங்கியிருக்கின்றன! பிறகு ஏன் இந்தக் கவலை? அந்தப் பார்வையம் சிரிப்பும்… அவ்வளவுதானா?

அவனோடு கதைக்கவேண்டுமே, அந்தப் பெரியவனோடு கதைத்து ‘எங்களுடைய நாட்டிலிருந்து வந்து இங்கு என்ன வேலை செய்கிறாய்..” என்று கேட்கவேண்டும். டொக்டர் என்று சொல்லட்டும். அல்லது இன்ஜினியர். ‘அந்த வெள்ளையன் உனது ட்றைவரா..?“ என்று கேட்கவேண்டும். நீ பெருமிதத்தோடு  தலையை அசைத்துவிடு! அது போதும்! அதற்காகவே நான் உனக்குத் தலை வணங்குகிறேன். ஆனால் உன்னோடு எப்படித்தான் கதைப்பது?

இப்படியே சில மாலைப்பொழுதுகள் மறைந்துவிட்டன. அதை நினைத்துக்கொண்டே புனிதம் வருகிறாள். இன்றைக்காவது அந்த “சான்ஸ்” கிடைக்குமா?

இப்பொழுதெல்லாம் இரவில் உறங்கமுடிவதில்லை. தனியறை, கட்டில், சுகம் எல்லாம் அலுப்புத் தட்டுகிறது. சுடுகிறது. ரெலிவிசனில் வருகிற கதாநாயகன் ஒரு பெண்ணை நைசாகத் தூக்கிக் கட்டிலிற் கிடத்துகிறானே… அப்படியெல்லாம் கற்பனை வருகிறது!

கற்பனைகள் ஒரு பக்கம் இருக்கட்டும். கனவுகளாவது விட்டுவைக்க வேண்டுமே! என்ன மடத்தனமான கனவுகளும் கற்பனைகளும் – அவனாவது என்னைத் தொடுவதாவது? ஏன்தானோ இப்படி வில்லங்கமான கனவுகள் தோன்றுகின்றன? அதை நினைத்துப் பயமும் ஏற்படுகிறது. அதற்குப் பிறகு தனது வயதின்மேல் ஆத்திரம் பற்றுகிறது. இதற்குப் பிறகும் ஓர் இனிமையான வாழ்வா? என்ன.. ரீவியில் வந்த பெண் ஒரு பதினெட்டு இருபது வயது மதிக்கலாம். எவ்வளவு பூப்போல இருந்தாள்! இந்த முப்பத்திரண்டுக்குப் பிறகு தன்னை யார்தான் கல்யாணம் கட்டப்போகிறார்கள்? அவ்வளவு நைசாக அணைப்பார்கள்? பெண்கள் உத்தியோகம் பார்ப்பதென்றால் ஊரில் மூக்காலே சிணுங்குவார்கள். இப்படி வெளிநாட்டுக்கு உழைக்க வந்தவளுக்கு எந்த மாப்பிள்ளை காத்துக்கொண்டிருப்பான்?

பத்மா ஒருநாள் கேட்ட கேள்வி நினைவுக்கு வந்தது. (பத்மா என்ற பெண்ணும் புனிதத்துடன் குவைத்திற்கு வந்த ஹவுஸ் மெயிட்களில் ஒருத்தி. இடையிடையே புனிதத்தைக் காண வருவாள்) ஒரு ஞாயிற்றுக்கிழமை புனிதத்தைக் குவைத் சிற்றிக்கு அழைத்துப் போனாள். சிற்றியில் ஒரு “சேர்ச்“ அமைந்திருக்கிறது. அதை அண்மிய “பார்க்“ நிறையச் சனங்கள். பெண்கள்.. ஆண்கள் எல்லோரும் எங்களுடைய நாடுகளிலிருந்து – இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் – உழைக்க வந்தவர்கள்.

‘இங்கு என்ன நடக்கிறது..?” – கை கோர்த்துக்கொண்டு பெண்களும், ஆண்களும், சிரிப்பும் கும்மாளமுமாக.. பெப்சியும், சொக்லட்டும்… என்ன இது? இதற்காகவா இங்கு வருகிறார்கள்?

அவளது முகச்சுளிப்பைக் கண்ட பத்மா விளக்கமளித்தாள்: “ஒவ்வொரு ஞாயிறு.. வெள்ளிக்கிழமைகளிலும் இப்படித்தான்…. இங்கு வருகிற ஆட்களுக்குக் குறைவிராது. இதில் ஒரு தவறுமில்லை. ஊரை விட்டு, உறவுகளை விட்டு இங்கு வந்து தனிய இருக்கிறோம்…. யாரையாவது சினேகம் பிடித்தால் கிழமையில் ஒருநாள் கிடைக்கும் ஒஃப்டேயில் வந்து சந்திக்கலாம். பொழுதும் போகும், தனிமையுணர்வும் தோன்றாது….”

எவ்வளவு இலகுவாகச் சொல்லிவிட்டாள் பத்மா? அவள் தனது சினேகிதனுக்காகக் காத்து நின்றாள். அவன் இந்தியனாம். பத்மா சிங்களப் பெண். தங்களுக்குத் தெரிந்த ‘யேஸ்… நோ…” ஆங்கிலத்தில் காதல் நடக்கிறது. பத்மா எவ்வளவு இலகுவாகப் பதில் சொல்லிவிட்டாள்!

மறு ஞாயிற்றுக்கிழமை புனிதம் போக மறுத்துவிட்டாள். “எனக்கு அதெல்லாம் சரிப்பட்டு வராது. பத்மா…”

பத்மா விடவில்லை.. ‘என்ன பெரிய பத்தினத்தனம் போடுகிறாய்… ஒருத்தனோடு சினேகம் கொள்வதால் கற்பா பறிபோகிறது? அல்லது ஊரில் இருக்கிற எல்லாரும் பத்தினிகள் என்கிறாயா? நாங்கள் வெளியே வந்துவிட்டபடியால்தான் கெட்டுப்போகிறோம் என்பதுபோல் இருக்கிறது உனது பேச்சு? அங்கேயும் அலுவலகங்களில் வேலை செய்பவர்கள் ஒருவருக்கொருவர் பேசாமலா இருக்கிறார்கள்? அதுபோல ஒன்றுதான் இதுவும்…!”

புனிதம் சுருங்கிப் போனாள்.

‘இல்லை… பத்மா… நான் உன்னைச் சந்தேகப்படவில்லை… எனக்கு அப்படியான சினேகங்களில் விருப்பமில்லை..” என ஒதுங்கிக்கொண்டாள்.

பத்மாவுக்கும் கவலை ஏற்பட்டிருக்கவேண்டும். ‘புனிதம்…. நீ தனிமையில் கவலையாக இருக்கிறாய் என்றுதான் அழைத்தேன்… எங்களுடைய வாழ்க்கை இவ்வளவுதான். எப்படியோ உழைப்பதற்கென்று வந்துவிட்டோம். இனி எங்களைக் கட்டிக்கொள்ள எந்தக் கதாநாயகன் முன்வருவான்? நாங்கள் என்ன இங்கு கெட்டா போகிறோம்? எங்களுக்கும் ஏதோ பொழுதுபோக்கு தேவைப்படுகிறது. அவ்வளவுதான். உனக்கு வர விருப்பமில்லாவிட்டால் விட்டுவிடு..”

பத்மா போய்விட்டாள். அவள் கூறியவற்றில் நிறைய நியாயங்களும் இருந்தன. வெட்கம் கெட்ட சனங்கள். பணமும் அவர்களுக்குத் தேவைப்படுகிறது. பக்குவமான பெண்ணும் தேவைப்படுகிறது! எவ்வளவு புனிதமாக இருந்துவிட்டுப் போனாலும் கறுப்புக் கண்கொண்டு பார்க்கத்தானே போகிறார்கள்? ‘ஊரிலே எத்தனை கூத்துக்கள் நடக்கின்றன…. அங்கே எல்லோரும் பத்தினிகளாகவா இருக்கிறார்கள்…” என்று ஒரு கேள்வி கேட்டாளே… பத்மா! உண்மைதானே? வீட்டில் குமரியாக வளர்ந்து வந்த காலத்தை நினைத்துப் பார்த்தாள் புனிதம். அடிக்கடி பாரத்துச் சிரிக்கிற பக்கத்து வீட்டு மணியன். வித்தியாசத்தை உணர்த்தும் அவனது பார்வை. பொழுதுபடும் நேரங்களில் வேலிப்பக்கமாக மினைக்கெடுவான். எப்படியோ தன்னைக் கவர்ந்து… ஒருநாள் தன்னை ஸ்பரிசித்தும் இருக்கிறான். பிறகு சீக்கிரமாகவே இன்னொருத்தியைக் கல்யாணம் முடித்துக்கொண்டு போனான்.

அப்படியென்றால் நான்கூட மானம் கெட்டவள்தானே? கற்பு என்பதன் எல்லை எது? கை, ஸ்பரிசங்களில்… மன உறவுகளில் எல்லாம் புனிதமாக இருக்கக் கடவர் என்றால், உலகில் எத்தனைபேர் பத்தினிகள்? இந்தப் புனிதமே புனிதமற்றவளென்றால் வேறு யாரை நம்புவது என நினைத்தப் பார்த்தாள் புனிதம். அல்லது தன்னை ஒப்பிட்டு மற்றவர்களைக் கணிப்பது தவறோ? தன்னைத்தான் அவளுக்கு முழுமையாகத் தெரியும்.. எவ்வளவு சுத்தமாக இருக்கவேண்டும்.. என்ற எண்ணங்களில் இருந்துகொண்டே, எப்படி மணியனை நாடினேன்… ஏன் அவனில் விழுந்தேன்? அப்பொழுது… அந்த இளம் வயதில் தன்னைத் தூண்டுவதற்கு அவனிடமிருந்த மந்திரமென்ன? ஒரு கறுத்த தடியன் எப்படித் தன்னை மயக்கி எடுத்தான். ஏன் நான் அந்த வேலிப்பக்கம் போனேன்? அதற்காக இப்பொழுது எவ்வளவு கவலைப்பட வேண்டியிருக்கிறது. இந்தப் புனிதம் என்ற பெயருக்கே லாயக்கற்றவள். இந்தத் தழும்புகளோடு எப்படி இன்னொருவன் முகத்தில் விழிப்பது? இப்பொழுது… இந்தக் கம்பீரமான அவனை நினைப்பதற்கே லாயக்கில்லாதவள்.

ஆனால் அவன் ஏன்தானோ அப்படிப் பார்க்கின்றான்? அப்படிச் சிரிப்பை மலர்த்துகிறான்… அவனிடம் அழவேண்டும்போலிருக்கிறது, அழுதுகொண்டே தனது பழைய கதைகளைச் சொல்லவேண்டும். அப்பொழுது ஒரு ஆறுதல் கிடைக்கும். ஐயோ! என்ன இது? ஏன் இப்படியெல்லாம் நினைக்கிறேன். கறுத்த தடியன் மணியனிடம் விழுந்ததுபோல இவனிடமும் தன்னை இழுக்கிற சக்தி என்ன?

புனிதத்திற்குப் பயமாக இருந்தது. நேரகாலத்திற்குக் கலியாணத்தைக் கட்டிக்கொண்டு கணவனும்… குடும்பம் பிள்ளைகுட்டிகளும் என்று இருந்தால் இப்படியான ஏக்கங்கள் இருந்திருக்காது என நினைத்தாள். ஒரு பாபமும் அறியாத ஒருவனோடு தன்னைச் சேர்த்துக் கற்பனை செய்யவேண்டிய அளவிற்கு நிலைமை மோசமடைந்திருக்காது. நேரகாலத்திற்குக் கல்யாணம் கட்டப் பணம் தேவைப்படுகிறது. பணத்தைத் தேடிவந்தால் கல்யாணம் பறிபோய்விடுகிறது! இத்தனை வருடங்கள் இந்த முப்பத்திரண்டு வருடங்கள்… புனிதமாக இருந்தும் காணப்போகும் பலன்தான் என்ன? வெறும் பணமும்… சாப்பாடும்தான் வாழ்க்கையென்றால் வயது அதிகரிப்பதைப் பற்றிய கவலை ஏன் ஏற்படுகிறது? சாகும்வரையும் சாப்பிட்டுக்கொண்டே இருக்கவேண்டியுதானா? பணத்தைச் சாப்பிடுவதற்காக எத்தனை ஏக்கங்கள்… பெருமூச்சுகள்;… இழப்புகள்…. வெறுப்பகள்… பிளவுகள்… வேதனைகள்!.

ஒரு ஆணைக் காண நேர்ந்ததற்காகவா இவ்வளவு சந்தோஷமும், இவ்வளவு துக்கமும் தோன்றுகிறது? அல்லது அவனது உறவு கிடைக்கப்போகிறது… கிடைக்கவேண்டும் என்னும் பரவசத்தில் ஏற்படும் கலக்கமோ? ஆண்களே வேண்டாம். அப்படியென்றால் என்ன செய்வது? சும்மா உழைத்து, உழைத்து வீட்டுக்குப் பணத்தை அனுப்ப வேண்டியது. இரத்தமும் சதையும் உள்ள மனிதராக இராமல், இரும்பும் எண்ணெயும் கொண்ட இயந்திரமாக இருந்தால் எவ்வளவு நல்லது? மெஷின்களுக்கு வயது அதிகரிப்பதில்லை.. காலம் போனாலும்! ஆனால் புனிதம் ஒரு நாளைக்கு…. வெகு சீக்கிரத்திலே… இன்னும் இருபதோ முப்பதோ வருடங்களில் கிழவியாகிவிடுவாள்!

நேரம் கடந்து போய்விட்டிருந்தது. ஆறரைக்கும் மேலே. அவனைக் காணவில்லை. இன்றைக்கு வரமாட்டானோ? அவன் வரமாட்டான் என்றதும் ஏன் இப்படி மனதை எரிக்கும் கவலை? “பேசாமல் போய்விடலாம்..“ என நினைத்தாலும் போகவும் மனதில்லாமல் நின்றாள்.

அந்தக் காரகை் காணவில்லை.

ஆனால் கனவுபோல் இருந்தது. மெல்ல மெல்ல அடியெடுத்து மிடுக்காக அவன் நடந்து வந்துகொண்டிருந்தான்.. ஹோட்டலிலிருந்து!

புனிதத்தின் உடலெல்லாம் ஒருவித கூச்சமெடுப்பது போலிருந்தது. மனதும் நாணியது. கதைப்பானோ? கதைக்கலாமோ? தெரியாததுபோலவே போய்விடலாமா? மூச்சு முட்டிக்கொண்டு நின்று வெளிவர மறுத்தது. பெரியவனே, நீ போய்விடு! எனக்கு எல்லாம் மறந்துபோச்சு, ஏன் உனக்காக நின்றேன் என்பதும் புரியவில்லை.

அவன் போகவில்லை. அண்மையில் வந்தான். மிக அண்மையில்! எவ்வளவு அழகான இளைஞன்… கம்பீரமாக..! பார்வையைச் சட்டெனக் குனித்துக்கொண்டாள். அவன் போய்விடட்டும்.

அவன் போகவில்லை. மீண்டும் நிமிர்ந்தாள்… அவனது புன்சிரிப்பில்! கண்களை… அதன் “செக்ஸை“ தாங்க முடியாது உடல் கூச்சமெடுத்தது… “என்ன இவர்?”

‘நீங்களும் சிறீலங்காவா?” என்றான்.

புனிதம் அசந்துபோனாள்… நீ கெட்டிக்காரன்… நான் நினைத்ததற்கு மேலாக, எப்படி என்னிலிருந்த முத்திரையைக் கண்டுபிடித்தாய்?

புனிதம் தலை அசைத்து விடை சொன்னாள்.

‘நானும்தான்..”  என்றான்.

புனிதம் தலை நிமிரவில்லை. கேட்க நினைத்த விஷயங்களெல்லாம் மறந்துபோயின… ‘நீ… அந்த வெள்ளைக்காரனின் டிறைவரா?… அவன் என்ன உத்தியோகம் பார்க்கிறான்?” என்றுதானே… அடச்சீ! என்ன எல்லாம் மாறுபாடாக இருக்கிறது.

‘ஹவுஸ் மெயிட்டா?” என்றான்.

இன்னொரு தலையசைவுப் பதில்.

‘நல்ல இடமா?”

‘ஒரு இங்கிலீஸ் ஃபமிலி!”

இப்படிச் சொன்னபொழுது, இன்னொரு முறை அவனை நிமிர்ந்து பார்க்கவேண்டியிருந்தது. அவனது மலர்ச்சி மாறாத முகம், சிவப்பான உதடுகள்.. சிகரட் பிடிப்பதில்லை போலிருக்கு. உதடுகளுக்கு மேல் அரும்புகின்ற மீசை. நல்ல இளம் இளைஞன், தன்னைவிட வயதிற் குறைந்தவனாகத்தான் இருப்பான்.

-’உங்களுக்கு எப்ப ஒஃப் டே?” என்றான்.

‘ஏன்?”

‘சும்மாதான் கேட்டன்!”

‘ஞாயிற்றுக்கிழமைகளில்!”

‘ஓஃப் டேய்சிலை… எங்கையாவது வெளியிலை போய் வரலாமே… அந்தப் பெரிய காரிலை…. வருவீங்களா?”

‘எதுக்கு?”

‘வேறை எதுக்காகக் கேக்கிறது?… இதுகூட விளங்கவில்லையா? அல்லது விளங்காததுபோல நடிக்கிறீங்களா? இவ்வளவு தூரம் வந்த பிறகும்?”

அவனது கம்பீரமும், அழகும் இளமையும் தனது காலடியில் சிதறியதுபோலிருந்தது. இன்னொருமுறை அவனது முகத்தைப் பார்க்கத் தேவையில்லாமலுமிருந்தது. குழந்தையை உருட்டியவாறு நடக்கத் தொடங்கினாள் புனிதம்..

இன்றைய பொழுதில் இன்னொரு மாலை மறைந்தது போன்ற சுகமும் வேதனையும் மனதில்.

(வீரகேசரி – 1982) 

தொடர்புடைய சிறுகதைகள்
அவள் அங்கு எப்போது வந்தாள் என்பது யாருக்கும் தெரியாது. எப்படி வந்தாள் என்றும் தெரியாது. தானாகவே வந்தாளா அல்லது யாராவது கொண்டுவந்து சேர்த்துவிட்டார்களா என்பதும் தெரியவில்லை. அவள் எந்தப் பிரதேசத்தைச் சேர்ந்தவள், எதற்காக அங்கு வந்து சேர்ந்தாள் என்றுகூட யாரும் அறிய ...
மேலும் கதையை படிக்க...
தாமரா வீட்டை விட்டுப் போய் பத்து நாட்களாகிறது! இன்றைக்கு வருவாளோ.. இன்றைக்கு வருவாளோ, என எண்ணி ஏமாந்த பொழுதுகளைப் போலவே இன்றைய நாளும் போய் விடுமோ என்ற ஏக்கம் மனதை ஆக்கிரமித்திருக்கிறது. சோகம் அவனைக் குப்புறப் போட்டு அழுத்தியது. படுக்கையிலிருந்து எழவும் ...
மேலும் கதையை படிக்க...
கொழும்பு கோட்டையிலிருந்து, காங்கேசன் துறை நோக்கிச் செல்லும் புகையிரதம்; தபால்வண்டி, இன்னும் சில நிமிடங்களில் முதலாவது மேடைக்கு வரும் என சிங்களத்திற் சொல்லப்பட்டது. அநுராதபுர புகையிரத நிலையம். வடபகுதிக்குச் செல்ல இருந்த பிரயாணிகளிற் சிலர் ஓரளவாவது சிங்களம் தெரிந்தவர்களாயிருந்தபடியால் (அரசாங்க அலுவலர்) இந்த அறிவிப்பில் ...
மேலும் கதையை படிக்க...
அலுவலகத்திலிருந்து வரும்போது பொழுதுபட்டிருந்தது. புவனா ஜன்னலடியில் நின்று பார்த்துக்கொண்டிருந்தாள். ஃபிளாட்டின் இரண்டாவது மாடியில் வீடு. அங்கிருந்து வீதியைப் பார்ப்பதற்கு வசதியாகவே ஜன்னல் அமைந்திருந்தது. வீடுகளை டிசைன் பண்ணுகிறவர்கள் பரந்த அறிவு படைத்தவர்கள் என்பதற்கு இதுவே நல்ல சான்று. நான் படியேறி வாசலுக்கு வர, ...
மேலும் கதையை படிக்க...
இரண்டு மணிக்குப் பிறகான இந்த நேரம்தான் சற்று ஓய்வாயிருக்கும் - ஓய்வு எனக்கல்ல.. கடைக்குச் சாப்பிட வருபவர்கள் தொகை குறைவாயிருக்கும் என்று அர்த்தம். கதிரை மேசைகளை ஈரத்துணியினாற் துடைத்துக் கடையைக் கூட்டித் துப்பரவு செய்யத் தொடங்கினேன். காலையில் ஒருமுறை கடை திறப்பதற்குமுன் ...
மேலும் கதையை படிக்க...
“வெளிக்கிடுங்கோ போவம்!” என அப்பா அவசரப்படித்தினார். இதை அவர் நூறாவது தடவையாகச் சொல்கிறார் என்று சொல்லலாம். அம்மா அதற்குக் காது கொடுத்த மாதிரித் தெரியவில்லை. சுவரோடு சாய்ந்திருந்த என்னிடம் “எழும்படி…போ!… அடுப்பை மூட்டு!” என்றாள். தம்பி அழுதுகொண்டிருந்தான். அவனுக்குப் பால்மா கரைப்பதற்குச் சுடுத்தண்ணீர் ...
மேலும் கதையை படிக்க...
ரவின் அமைதியைக் குலைப்பதுபோல ஒரு பறவை இனிமையாக அலறிக் கொண்டு சென்றது. சில இரவுகளில் இப் படி அந்தப் பறவை பாடிக்கொண்டு செல்வது வழக்கம். அதன் கூவலில் சத்தியன் சுய உணர்வுக்கு வந்தான். ஏதோ அவலத்தைக் கண்டு குரல் கொடுப்பது போல அப்பறவை அலறிக் ...
மேலும் கதையை படிக்க...
சோதனைச் சாவடிக்கு மிகத் தொலைவிலேயே வாகனங்களுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. அந்த இடத்திலிருந்து நடக்கவேண்டும். சனங்கள் பஸ்ஸிலிருந்து குதித்து இறங்கினார்கள். தங்கள் பொருள் பொதிகளை இழுத்துப் பறித்தார்கள். கியூவில் முன்னே இடம் பிடிக்கவேண்டுமென்ற அவசரம் ஒவ்வொருவரிடமும்! சுமக்கமுடியாத சுமைகளைச் சுமப்பதற்குத் தயாராய் வந்தவர்கள்போலவே ...
மேலும் கதையை படிக்க...
தாக்குதலுக்குப் பயந்து ஓடுகின்ற அப்பாவியைப் போல புகையிரதம் ஓடிக்கொண்டிருந்தது. அருணாசலம் உயிரைக் கையிலே பிடித்துக்கொண்டு ஒரு மூலையில் அமர்ந்திருந்தார். இறங்கவேண்டிய இடம் அண்மித்துக்கொண்டுவர அவரது மனதில் பதட்ட உணர்வும் அதிகரித்தது. இந்த செப்டம்பர் மாத நடுப்பகுதியிலும், அநுராத. புரத்தில் இறங்க வேண்டியேற்பட்டது தனது ...
மேலும் கதையை படிக்க...
'ஆனைவாழை குலை போட்டிருக்கு!" வீட்டுக்கு வந்து பயணக்களைப்பு ஆற, அமர முதலே இந்தச் செய்தியை மனைவி சொன்னாள். அதைக் கேட்டதும் 'அட! அப்படியா..” என்றொரு சந்தோஷம் மனதிற்குள் தோன்றினாலும் நிதானமாக நின்று உடைகளை மாற்றினான். 'கேட்டுதே? ஆனைவாழையெல்லே குலை போட்டிருக்கு எண்டு சொல்லுறன்!” 'ஓம்! ஓம்! ...
மேலும் கதையை படிக்க...
பிறழ்வு
மனக்கணிதம்
பயணம்
புரியாதது
தயவு செய்து கை போடாதீர்கள்
யாரொடு நோவோம்?
உள்ளங்களும் உணர்ச்சிகளும்
மனிதர்கள் இருக்கும் இடங்கள்
ஒரு தேவதையின் குரல்
கனிவு

ஒருநாளில் மறைந்த இரு மாலைப்பொழுதுகள் மீது ஒரு கருத்து

  1. A. Rajakumari says:

    ஒரு பெண்ணின் மனம் அழகாய் இருந்தது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)