Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

ஏலம்

 

காலை எட்டு மணிக்கு தென்காசியிலிருந்து கிளம்பி டிரைவருடன் தனது காரில் திம்மராஜபுரத்திற்கு சென்று கொண்டிருந்தார் சந்தானம்.

கடந்த வாரத்திய தினசரியில் திம்மரஜபுரத்தில் உள்ள அருள்மிகு வரதராஜப் பெருமாளுக்கு சொந்தமான பயன்பாட்டில் இல்லாத இரும்புப் பொருட்களும், மரச் சாமான்களும் ஏலம் விடப்போவதாக இணை ஆணையர் பெயரில் டெண்டர் கோரி நோட்டீஸ் வந்திருந்தது.  உடனே சந்தானம் கோவில் இணை ஆணையரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது, ‘நேரில் வந்து ஏலப் பொருட்களைப் பார்த்து, பின் விருப்பமிருந்தால் இரண்டு லட்ச ரூபாய்க்கான வரைவோலை (டி டி) டெப்பாசிட் செய்ய வேண்டுமென்றும், பிறகு ஏல தினத்தன்று ஏலத்தில் கலந்து கொள்ளலாம்’ என்றார்.

தற்போது சந்தானம் டெப்பாசிட் தொகை இரண்டு லட்சம் டி டி, மற்றும் பணமாக ஐம்பதாயிரம் ரூபாய் எதற்கும் இருக்கட்டும் என்று எடுத்துக் கொண்டார்.

சாந்தானம் இதுகாறும் ஏராளமான மரச் சாமான்களையும், இரும்பு ஸ்கிராப்களையும் ஏலத்தில் எடுத்த அனுபவங்கள் நிறைய.  பல சமயங்களில் தனியாகவும், சில சமயங்களில் மற்ற வியாபாரிகளுடன் கூட்டு அமைத்துக் கொண்டும் குறைந்த விலைக்கு ஏலம்எடுத்து நிறைய லாபம் பார்த்திருக்கிறார். ஏலம் சம்பந்தப்பட்ட அனைத்து விதமான நெளிவு சுளிவுகளும் அவருக்கு அத்துப்படி. எனினும் கோவில் ஏலங்களில் இதுவரை பங்கேற்றதில்லை. இது முதல் அனுபவம். தென்காசி சுற்றுப் புறங்களில் செல்வாக்கு மிக்கவர்.

பத்து மணிக்கு கார் கோவிலின் முன் நின்றது.  டிரைவரை உள்ளே அனுப்பி, இணை ஆணையா¢டம் தான் வந்திருப்பதாகச் சொல்லச் சொன்னார்.  காரை விட்டு இறங்கி, வேட்டியை தூக்கி இறுகக் கட்டியபடி நோட்டம் பார்த்தார்.  வெள்ளை சுவற்றில் பட்டை பட்டையாக காவியடிக்கப் பட்டு. பெரிய மதில் சுவர்களுடன் கோவில் விஸ்தாரமாக இருந்தது.  பிரதானமான வாயிலுக்கு எதிரே நீளமான தெருவுடன் அக்ரஹாரம் இடது வலது பக்கங்களில் வரிசையான வீடுகளுடன் அழகாக இருந்தது. அனைத்து வீடுகளின் வாசலிலும் பொ¢தாக கோலம் போட்டிருந்தது,

இணை ஆணையர் கனகசபை வெளியே ஓடி வந்து சந்தானத்தை உற்சாகத்துடன் வரவேற்றார்.  இருவரும் கோவிலினுள் நுழைந்தார்கள்.

கனகசபை, ” நாம் ஏலத்துக்கான பொருட்களைப் பார்த்து விடலாமா ?” என்றார்.

“முதலில் உள்ளே சென்று பெருமாளை தரிசித்து விடலாம்.”  இருவரும் உள்ளே சென்றார்கள்.

அருள்மிகு வரதராஜப் பெருமாள் பிரமாதமான அலங்காரத்தில் ஆஜானுபாகுவாக கம்பீரத்துடன் ஜொலித்தார்.  பெருமாள் கோவிலுக்கே உண்டான ஐஸ்வர்யம் நன்கு புலப் பட்டது.  சந்தானம் பாதாதி கேசம் பெருமாளை நன்கு தா¢சனம் செய்தார்.  ஏலம் தனக்கே கிடைக்க வேண்டுமென வேண்டிக் கொண்டார்.

பிறகு இருவரும் தாயார் சன்னதிக்கு சென்றனர்.  அங்கு ஒரு மாமி காதில் வைரத்தோடு மினுங்க பாடிக் கொண்டிருந்தாள்.  நல்ல சாரீரம்.சற்று முயன்றிருந்தால் பிரபல பாடகியாக வந்திருக்கக்கூடும் என சந்தானம் நினைத்துக் கொண்டார்.  பாட்டு முடிந்ததும் தீபாராதனை காட்டப் பட்டது.  இருவரும் கோவில் பிரகாரத்தை வலம் வந்தனர்.  கனகசபை தன் சிறிய அலுவலகத்தை திறந்து, பெரிய சாவிக் கொத்தை எடுத்துக் கொண்டு வந்தார்.  கோவிலுக்குப் பின்னால் வலதுபுறம் இருந்த பெரிய கட்டிடத்தின் முன் நின்று அதன் உயரமான கதவுகளைத் திறந்தார்.  இருவரும் உள்ளே சென்றனர்.

உள்ளே இருட்டாக இருந்தது.  கனகசபை சுவிட்சைப் போட்டதும் வெளிச்சம் பரவியது.  வௌவால்கள் பறந்தன.  ஒருவிதமான பழமையான முடை நாற்றம் அடித்தது.

அங்கு கோவிலுக்கு சொந்தமான பயன் பாட்டில் இல்லாத இரும்புத் தகடுகள், இரும்புக் கதவுகள், பழைய கதிர் அடிக்கும் இயந்திரங்கள்,தேர் போல்கள், தேர் அச்சுக்கள் என ஏறக்குறைய முப்பதாயிரம் கிலோ இரும்புப் பொருட்களும், உயர் ரக மரங்களில் செய்யப்பட்ட மரத் திம்மைகள், தேர்மிதி மரங்கள், மரக் கதவுகள், ஜன்னல்கள், உடைந்த தேர்ச் சக்கரங்கள், பழுதடைந்த மர யாளிகள், மரக் குதிரைகள், தெப்பங்கள்,தேர் முட்டுக் கட்டைகள், உடைந்த நிலையில் இரண்டு கருடாழ்வார்கள் என கிட்டத்தட்ட நாற்பதாயிரம் கிலோ அளவிற்கு மரச் சாமன்களும்…அடேங்கப்பா… சந்தானம் சொக்கிப் போனார்.  இவ்வளவு அ¡¢ய பொருட்களை ஒருசேர அவர் பார்த்ததில்லை.

“சார் இதெல்லாம் நூற்றைம்பது ஆண்டுகள் பழமை வாய்ந்தவை… கார்த்திகை மாதத்தில் நடக்கும் பத்து நாள் தேர்த் திருவிழாவில் காலங்காலமாக பயன் படுத்தப் பட்டவை, சிங்க முக யாளிகளும், மரக் குதிரைகளும் விலை உயர்ந்த மர வகைகளில் செய்யப் பட்டவை,”

சந்தானம் தோராயமாக மனக் கணக்கு போட்டதில், குறைந்த பட்சம் நிறுவைக்குப் போட்டாலே சந்தையில் ஒன்றரை கோடிக்கு மேல் விற்கலாம் என நினைத்தார்.  இந்த நல்ல சந்தர்ப்பத்தை விட்டு விடக் கூடாது என தீர்மானித்துக் கொண்டார்.

எல்லாம் பார்த்து முடிந்தவுடன் மிகவும் சிரமத்துடன் கதவுகளை இழுத்துப் பூட்டினார் கனகசபை.  சாவியை எடுத்துக் கொண்டு சந்தானத்துடன் தன் அலுவலகத்தில் வந்து அமர்ந்தார். அவர்களுக்கு பெருமாள் கோவில் பிரசாதம் சூடான சார்க்கரைப் பொங்கல் இரண்டு தொன்னைகளில் வந்தது. இது நல்ல சகுனம் என்று சந்தானம் நினைத்துக் கொண்டார்.

கனகசபை நேராக விஷயத்துக்கு வந்தார்.  மெல்லிய குரலில், “சார் உங்களைப் பற்றி நிறைய கேள்விப் பட்டிருக்கேன். ஏலம் உங்களுக்கே கிடைக்க நான் ஏற்பாடு செய்கிறேன்.  கமிட்டி மெம்பர்ஸ் எல்லோருமே நம்ம ஆளுங்கதான்.  நீங்க முப்பது லட்ச ரூபாய்க்கு ஏலம் எடுங்க.  எங்க எல்லோருக்குமா சேர்த்து இருபது லட்சம் தனியா குடுத்துடுங்க… ஏலம் எடுத்த பொருட்களை பதினைந்து நாட்களுக்குள்ள இங்கிருந்து எடுத்துச் செல்ல வேண்டியது உங்க செலவைச் சேர்ந்தது… எல்லாத்தையும் என்னை நம்பி விடுங்க, நல்ல படியா முடிச்சுத் தர வேண்டியது என்னுடைய பொறுப்பு”  என்றார்.

சந்தானம் மகிழ்ச்சியுடன் தன்னிடமிருந்த இரண்டு லட்ச ரூபாய்க்கான டி டியை டெப்பாசிட் தொகையாக எடுத்துக் கொடுத்தார். பின்பு ஐம்பதாயிரம் பணத்தைக் கொடுத்து, ” இதை முதல் தவணையாக வச்சுக்குங்க” என்றார்.  பணம் கை மாறியது.  பணத்தையும், டி டியையும் தனது டேபிள் டிராயா¢ல் போட்டுப் பூட்டினார் கனகசபை.

“வரும் ஞாயிற்றுக் கிழமை நீங்க கோவிலுக்கு வாங்க, நான் கமிட்டி மெம்பர்ஸை வரச் சொல்லி உங்களுக்கு அறிமுகம் செய்து வைக்கிறேன்.”

“இந்த ஞாயிறு வேண்டாம்… எனது ஒரே மகள் தேஜஸ்வியை பெண் பார்க்க வருகிறார்கள், பையன் திருநெல்வேலிதான்..” எழுந்து கிளம்ப ஆயத்தமானார் சந்தானம்.

கார் தென்காசியை நோக்கி விரைந்து கொண்டிருந்தது.  பேட்டையைத் தாண்டி ஒரு திருப்பத்தில் குறுகிய பாலத்தை கடக்க முயன்ற போது, எதிரே வேகமாக வந்த லாரியை டிரைவர் கவனியாது போனதால், மோதலைத் தவிரிக்க காரை இடது புறம் திருப்ப எத்தனிக்கையில், பாலத்தின் சுவற்றின் மீது பொ¢ய சத்தத்துடன் மோதி நின்றது.  நல்ல வேளையாக யாருக்கும் அடி எதுவும் படவில்லை.  ஆனால் காருக்கு பலத்த சேதம்.

சந்தானம் வீடு வந்து சேர்ந்து அன்று நடந்த அனைத்தையும் கோர்வையாக தன் மனைவி மரகதத்திடம் விவரித்தார்.  விபத்து பற்றி சொன்னபோது அவள் மிகவும் பதறிப்போனாள்.  நல்ல வேளை தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போயிற்று என்றாள்.

அன்று இரவு தூக்கத்தில் சந்தானத்திற்கு ஒரு பயங்கர கனவு வந்தது. இரண்டு கருடாழ்வார்கள் ஆடிக்கொண்டே அவர் வீட்டின் உள்ளே நுழைந்து,பெரிதாக சத்தம் போட்டு சிரித்து,  தங்களது கூரிய மூக்கை நீட்டி அவரது முகத்தைத் தீண்ட, சட்டென முழித்துக் கொண்டார். உடம்பு தொப்பலாக வியர்த்திருந்தது.  ஒரு வாய் தண்ணீர் குடித்தார்.  கடிகாரத்தை பார்த்த போது மணி இரண்டு.அதன் பிறகு படுக்கையில் தூக்கம் வராது புரண்டார்.  கனவைப் பற்றிய பயத்துடன் தூங்காது கண் விழித்தார்.

காலை எழுந்தவுடன், மரகதத்திடம் தான் கண்ட கனவையும், பயத்தில் தான் பதறி எழுந்ததையும், தூக்கம் வராது புரண்டதையும் சொன்னார்.

” இத பாருங்க, நான் சொல்றதை தயவு செய்து கொஞ்சம் கோபப் படாமல் பொறுமையா கேளுங்க… நேற்று மதியத்திலிருந்து உங்களுக்கு சகுனம் சரியில்லை.  முதல்ல ஒரு பெரிய விபத்திலிருந்து அதிர்ஷ்டவசமா தப்பிச்சீங்க, பின்பு, இரவு உங்க கனவில் கருடாழ்வார்கள் வந்து பயமுறுத்தியது. முதன் முதலாக கோவில் ஏலத்தில் நீங்க வாய்ப்பு தேடும்போது வரிசையாக அபசகுனங்கள் தோன்றி உங்களை எச்சரிக்கை செய்கிறது…நீங்க ஏலம் எடுக்க ஆசைப் பட்டவைகள், ஆகமவிதி முறைப்படி கட்டப்பட்ட கோவிலினுள்ளே நூற்றைம்பது வருடங்களாக வாசம் செய்திருக்கின்றன… அவைகள் வெறும் கட்டைகளோ, இரும்புத் தகடுகளோ அல்ல, தெய்வத்தின் சக்தி வாய்ந்தவை.  கோவிலுக்கு நாம் தர்மம் செய்ய வேண்டுமே தவிர, கோவிலை வைத்து லாப நோக்கில் எதையும் செய்யலாகாது.  இந்த கோவில் ஏலத்தை தயவுசெய்து எடுக்காதீங்க…

“………”

” பகவான் நமக்கு எதிலும் குறை வைக்கவில்லை, ஏகப்பட்டது சம்பாதித்தாயிற்று.  வரும் ஞாயிறு நம் தேஜூவைப் பெண் பார்க்க வருகிறார்கள். அவளுக்கு இந்த நல்ல இடத்தில் திருமணமாகிவிட்டால், நாம் இருவர் மட்டும்தானே.. இருக்கறது நமக்கு தாராளமாக போதும்…” குரல் உடையச் சொல்லி பெரிதாக அழுதாள்.

சந்தானத்திற்கு அவள் சொல்வதில் உண்மை இருப்பதாகப் பட்டது.  ஏலம் எடுக்கும் எண்ணம் அடிபட்டுப் போனது.  உடனே கனகசபையைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனக்கு ஏலத்தில் பங்கு கொள்ள விருப்பமில்லை என்று சொன்னபோது,  ஏலம் முடிந்தபிறகு அவருடைய பணம் திருப்பியனுப்பி வைக்கப்படும் என்றார்.

மரகதம் நிம்மதியடைந்தாள்.

ஞாயிற்றுக் கிழமை…

சந்தானமும், மரகதமும் மிகுந்த எதிர் பார்ப்பில் இருந்தனர்.  தேஜூவுக்கு இது நல்ல இடம்.  ஒரே பையன். பெயர் வசீகரன்.  எம் பி ஏ படித்துவிட்டு தன் அப்பாவிற்கு உதவியாக ஹோட்டலைக் கவனித்துக் கொண்டிருக்கிறான்.  அவன் தந்தை பசுபதி தன் மனைவி சந்திரிகாவின் பெயரில் திருநெல்வேலியில் நூற்றிப்பத்து அறைகள் கொண்ட மூன்று நட்சத்திர ஹோட்டல் வைத்திருக்கிறார்.  சந்திரிகா முதல் தரமான ஹோட்டல் என்பதால்
முன்பதிவு செய்தாலன்றி அறைகள் கிடைப்பது கடினம் என்று சந்தானம் கேள்விப் பட்டிருக்கிறார்.

ராகு காலத்திற்கு முன்பாக இரண்டு சொகுசு கார்களில், பசுபதி-சந்திரிகா தம்பதியினர் தேஜஸ்வியைப் பார்க்க மகன் வசீகரனுடனும், உறவினர்களுடனும் வந்தனர்.  வசீகரன் பெயருக்கேற்ற மாதிரி அழகாக இருந்தான்.  தேஜஸ்வியுடன் பத்து நிமிடங்கள் தனியாகப் பேசினான்.  இருவருக்கும் ஒருவரையொருவர் பிடித்துப்போக, லெளகீக விஷயங்கள் பேசப் பட்டன.  எல்லாம் பொருந்திவர, தட்டுகள் மாற்றிக் கொள்ளப் பட்டன.  நிச்சயதார்த்தம், திருமண தேதிகள் குறிக்கப் பட்டதும் அவர்கள் கிளம்பிச் சென்றனர்.

திருமணம் தென்காசியில் மிகச் சிறப்பாக நடந்தது.  அடுத்த சில வாரங்களில் ஏல டெப்பாசிட் பணம் இரண்டு லட்சம் டி டியும், தனியாக கனகசபையிடமிருந்து ஐம்பதாயிரத்துக்கு காசோலையும் பதிவுத் தபாலில் திரும்பி வந்தது.  சந்தானம் நிம்மதியடைந்தார்.

இரண்டு மாதங்கள் சென்றன.  அன்று பசுபதியின் பிறந்த நாள் என்பதால் அவரை நேரில் வாழ்த்த சந்தானம் தன் மனைவியுடன் திருநெல்வேலி சென்றார். தேஜஸ்வியின் முகத்தில் ஏகப்பட்ட பூரிப்பு.  சற்றே பூசினாற்போல் இருந்தாள்.  வைரத்தில் புதியதாக பெரிய மாலை அணிந்திருந்தாள்.

பசுபதி சிரித்துக்கொண்டே குரலில் பெருமை பொங்க, “தேஜஸ்வி எங்க வீட்டுக்கு வந்த மகாலட்சுமி.  அவள் வந்த பிறகு என் பிசினெஸ் மிக நன்றாக இருக்கிறது” என்றார்.  சந்தானமும், மரகதமும் ஒருவரையொருவர் பெருமையுடன் பார்த்துக் கொண்டனர்.

இரவு,  பிறந்த நாள் டின்னருக்காக அனைவரும் சந்திரிகா ஹோட்டலுக்குச் சென்றனர்.  ஹோட்டலின் பெயர் நியான் விளக்கில் மின்னியது. போர்டிக்கோவில் கார் நின்றதும், வாயிலில் மிகப் பெரிய மீசையுடன் காத்திருந்த செக்யூரிட்டி கண்ணாடிக் கதவை அகலத் திறந்தான்.

உள்ளே மிகப் பெரிய வரவேற்பறையின் சில்லென்ற ஏ சி யும், மெத்தென்ற உயர் ரகக் கம்பளங்களும், மிகப் பெரிய ஷாண்டிலியரிலிருந்து வீசிய ஒளியும், மெல்லிய சென்ட் வாசனையும்… சந்தானம் ஆச்சரியமாகப் பார்த்தார்.  ஹோட்டல் பெண்கள், அனைவருக்கும் சந்தன மாலையணிவித்து, நெற்றியில் பொட்டு வைத்து வரவேற்றனர்.  மரகதத்துக்கு இதெல்லாம் புதுமையாகவும், உற்சாகமாகவும் இருந்தது.

பசுபதி, ஹோட்டலின் அனைத்துப் பகுதிகளையும் சுற்றிக் காண்பித்தார்.  பெரிய திருப்பங்களிலும், முக்கியமான வளைவுகளிலும், ஒவ்வொரு மாடியின் லிப்ட் அருகிலும்  ஆண்டிக்ஸ் அழகுற வைக்கப் பட்டிருந்தன.  அவைகளின் புராதனத் தோற்றம் சந்தானத்தை மிகவும் கவர்ந்தது.

சிறப்பான டின்னருக்குப் பிறகு, அனைவரும் விஸ்தாரமான வரவேற்பு ஹாலுக்கு வந்து அங்கு போடப் பட்டிருந்த மெத்தென்ற இருக்கைகளில் அமர்ந்தனர்.  அப்போது ஒரு அயல் நாட்டுப் பெண்மணி அங்கிருந்த மரத்திலான சிங்கத்தின் பிடாரியில் தன் இடது கையை வைத்து, வலது கையை சிங்கத்தின் வாயினுள் விட்டு டிஜிட்டல் காமிராவில் புகைப்படம் எடுத்துக் கொண்டாள்.

அதைப் பார்த்த சந்தானம், பசுபதியிடம் ” நம் ஹோட்டலில் இருக்கும் ஆண்டிக்ஸ் அத்தனையும் நன்றாக இருக்கிறது… எங்கு வாங்கினீர்கள் ?” என்று கேட்டார்.

“நான்தான் சொன்னேனே தேஜஸ்வி எங்க வீட்டிற்கு வந்த மகாலட்சுமியென்று, அவள் வந்த பிறகுதான் ஹோட்டலுக்கு ஆண்டிக்ஸ் வந்தது” என்றார்.

“எனக்குப் புரியவில்லை.”

“எல்லாம் திம்மராஜபுரம் பெருமாள் கோவில் ஏலத்தில் எடுத்தவை… நம் ஹோட்டலில் இருக்கும் ஆண்டிக்ஸ் தவிர எனக்கு ஒன்றரை கோடி நிகர லாபம்.” 

தொடர்புடைய சிறுகதைகள்
மாநில அரசாங்கத்தின் வட்டார போக்கு வரத்து மீனம்பாக்கம் அலுவலகத்தில் அவனுக்கு இளநிலை எழுத்தர் வேலைக்கான ஆர்டர் வந்ததும் அவன் மிகவும் மகிழ்ந்து போனான். நிரந்தரமான வேலை. மேற் கொண்டு படித்து அலுவலகத் தேர்வுகள் எழுதினால் மேல்நிலை எழுத்தர், கண்காணிப்பாளர், மேலாளர் என்ற ...
மேலும் கதையை படிக்க...
(இதற்கு முந்தைய ‘சூதானம்’ கதையைப் படித்துவிட்டு இதைப் படித்தால் புரிதல் எளிது) பூரணி சொன்ன பொய்யால் அத்தனை சொந்தக்காரப் பயல்களும் ஓடிப்போய்விட்டான்கள். அதுவும் எப்படி? ‘வெளி வேசத்தைப் பார்த்து யாரையும் நம்பக்கூடாது’ என்று பேசியபடி... செந்தூர் பயல்களே இப்படிப் பேசினான்கள் என்றால் பாளை வியாபாரிகள் ...
மேலும் கதையை படிக்க...
அது ஒரு சனிக்கிழமை. சென்னை எக்ஸ்ப்ரஸ் மால். காலை பதினோரு மணி. மாதவி தன் கணவன் நரேன் மற்றும் இரண்டரை வயதுக் குழந்தை வருண் ஆகியோருடன் விண்டோ ஷாப்பிங் செய்து கொண்டிருந்தாள். ஏஸியின் குளிர் இதமாக இருந்தது. வருண் ஒரு இடத்தில் நிற்காமல் அங்கும் இங்கும் ...
மேலும் கதையை படிக்க...
குர்லா, மும்பை. வருடம் 2010. செப்டம்பர் 10. வெள்ளிக் கிழமை. காலை ஐந்து மணி. மழை சீசன் என்பதால், சொத சொதவென மழை தூறிக்கொண்டிருந்தது நடக்கப்போகும் விபரீதம் எதுவும் தெரியாது, அன்றும் வழக்கம்போல் நர்மதா, வயது 24, சீக்கிரமாக எழுந்து தன் அலுவலகத்திற்கு கிளம்ப ஆயத்தமானாள். ஒன்பது ...
மேலும் கதையை படிக்க...
இரவு ஒன்பது மணி. பெங்களூர் சிட்டி ரயில்வே ஸ்டேஷன். மைசூர்-மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரயில் புறப்படுவதற்கு தயாராக நின்றது. ரகுராமன் அவசர அவசரமாக எஸ்-6 ரிசர்வ்டு பெட்டியில் ஏறி அமர்ந்தான். கரூரில் உள்ள ரகுராமனின் அக்கா பெண்ணுக்கு நாளை காலை பத்து மணிக்கு நிச்சயதார்த்தம். பெண்ணுக்கு மாமா ...
மேலும் கதையை படிக்க...
மனிதர்களில் ஒரு மனிதன்
பூரணி
பேராசை
ஒரே கல்
தூக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)