உழைப்பில் இத்தனை பலனா?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: March 23, 2020
பார்வையிட்டோர்: 12,503 
 

விடியற் காலை நான்கு மணிக்கு வேண்டா வெறுப்பாய் எழுந்தவன் வாக்கிங்க் போய்த்தான் ஆக வேண்டுமா, என்று யோசித்தேன். ஐம்பதை தாண்டி விட்டாலே வர தயாராய் இருக்கும் சுகர், பி.பி போன்ற வியாதிகளை நினைத்து வாக்கிங் கிளம்பலாம் என்று முடிவெடுத்தேன்.யாருடைய தூக்கத்தையும் கெடுக்காமல் மெல்ல காம்பவுண்ட் கேட்டை திறந்த பொழுது, பக்கத்து வீட்டு பெண் வாசல் தெளித்து கோலம் போட்டுக்கொண்டிருந்தாள்.

அப்பொழுதே அவர்கள் வீட்டில் விளக்குகள் எரிய ஆரம்பித்து விட்டன. வீட்டுக்குள்ளிருந்து வந்த அந்த பெண்ணின் மாமியாரிடம் இந்த பெண் உங்க மகன் ரெடியாயிட்டாரா என்று கிசு கிசுப்பாய் கேட்டது என் காதில் விழுந்தது.

இப்பத்தான் காப்பிய கொடுத்தேன் குடிச்சுட்டு கிளம்பிடுவான், அவங்கப்பாவை எழுப்பி விட்ணும், இல்லையின்னா, கிளம்பும்போது கத்துவான், முணங்கிக்கொண்டே அந்த வயதான

பெண் உள்ளே சென்றாள்.

இந்த பெண் வாசலில் நிற்க, வீட்டுக்குள்ளிருந்து தன்னுடைய டி.வி.ஏஸ்ஸை வெளியே எடுத்து வந்தவர், அப்பன் எந்திரிச்சா காப்பிய கொடுத்து விரசலா போய் கடைய தொறக்க சொல்லு, உன் பையனை எழுப்பி விட்டு, அஞ்சு மணிக்கு போய் இலைக்கடையை திறக்க சொல், நான் வந்திடுதேன். சொல்லி விட்டு வண்டியை முறுக்கிவிட்டார்.

நான் காதுக்கு ஒரு மப்ளரை சுற்றி, காலுக்கு நடை காலணி எல்லாம் மாட்டிக்கொண்டு வீதியில் நடக்க ஆரம்பித்தேன் என் மனம் மட்டும் அடுத்து பக்கத்து வீட்டில் என்ன நடக்கும் என நினைத்து பார்த்துக்கொண்டு வந்தது.

அந்த வயதானவரை எழுப்பி விடுவார்கள், அவருக்கு எழுபதுக்கு மேல் இருக்கும், மனுசன், ஒரு டம்ளர் காப்பியை குடித்து விட்டு கடையை திறக்க அந்த இருளில் நடக்க ஆரம்பித்து விடுவார். கடை நடக்கும் தூரம்தான் என்றாலும் அந்த இருளில் அவர் ந்டந்து செல்வது எனக்கு வருத்தமாய் இருக்கும்.

அடுத்து அந்த பன்னிரண்டாவது படிக்கும் பையன் எழுப்பப்படுவான், அவனுக்கும் ஒரு டம்ளர் காப்பி கொடுக்கப்பட்டு இந்த பக்கம் உள்ள அவர்கள் வாழை இலைக்கடையை திறக்க செல்வான்.

அதற்குள், மாமியாரும், மருமகளும், வீட்டுக்குள் ஒரே பரபரப்பாய் வேலை செய்து கொண்டிருப்பது இங்கு கேட்கும். மகளுக்கு மட்டும் ஆறு மணி வரை தூங்க அனுமதி உண்டு. ஆனால் அதற்கு பின் வீட்டில் இருக்கும் மிச்ச வேலைகளை அவள்தான் செய்ய வேண்டும், ஏனென்றால் மாமியார் தன் கணவர் திறக்க சென்றிருக்கும் கடைக்கு துணைக்கு சென்று விடுவாள், மருமகள் தன் மகன் திறக்க சென்றிருக்கும் வாழை இலை கடைக்கு சென்று அவனை வீட்டுக்கு அனுப்பி வைப்பாள். அவன் வந்து குளித்து பள்ளிக்கு கிளம்புவான், கூடவே இந்த கடைசிப்பெண்ணும் தயாராகி அவனுடன் அரசாங்க பள்ளிக்கு செல்வார்கள்.

நான் வாக்கிங்க் முடித்து வீடு வரும்பொழுது மணி ஆறு ஆகி இருக்கும். அதற்குள் பக்கத்து வீடு எல்லா களேபரங்களும் முடிந்து அமைதியாகி இருக்கும். நான் வந்து அரை மணி நேரம் கழித்தே என் வீட்டு மக்கள் விழிப்பர். அதன் பின் அவர்கள் கிளம்பி அவரவர்கள் காலேஜ் கிளம்புவர். நானும் என் மனைவியும் ஒன்பதரைக்கு வீட்டில் இருந்து ஒரே காரில் கிளம்புவோம். எங்களுடைய வழக்கம் இப்படியாக இருந்தது.

இன்னும் இரண்டு மூன்று வருடங்களில் ஓய்வு பெற்று விடுவேன், மனைவிக்கும் ஐந்து வருடங்கள் சர்வீஸ் இருக்கும், ஒன்றும் பெரிய பிரச்சினை இல்லை. வீடும் நல்ல வசதியாக கட்டிவிட்டேன். இடம் வாங்கித்தான் கட்டினேன். பக்கத்து வீட்டுக்கார்ர் கூட நான் வாங்கி கட்டி ஒரு வருடத்தில் அவரும் வாங்கி கட்டி குடி வந்து விட்டார். அப்பொழுதே இடம் நல்ல விலை.

நல்ல வசதி கொண்ட நானே இவ்வளவு பணம் கொடுத்து வாங்குகிறோமே என்று வருத்தப்பட்டுத்தான் வாங்கினேன். ஆனால் பக்கத்து வீட்டுக்காரர் என்னைவிட அதிகமாக பணம் கொடுத்து வாங்கி கட்டினார். விலை அதிகம் பற்றி அலட்டிக்கொண்டதாய் தெரியவில்லை. வீடும் நல்ல வசதியாக கட்டியிருந்தார். நல்ல பண வசதி உள்ளவர்கள்தான் என்று அனுமானித்தேன். இதற்கும் இரண்டு கடைகள் மட்டுமே இந்த நகரின் இரு புறமும் வைத்திருந்தார் அதுவும் மளிகைக்கடையும் இலைக்கடையும் தான். இந்த இரண்டை நடத்திக்கொண்டு எப்படி இவரால் இந்த இடத்தை வாங்கி வீடு கட்ட முடிந்தது என்று ஆச்சர்யப்பட்டதுண்டு.

பெயர் என்னவோ அன்பானந்தம், ஆனால் மனுசன் அந்த குடும்பத்தின் சர்வதிகாரி போலத்தான். அந்த குடும்பமே அவர் சொல்லுக்கு மரியாதை கொடுக்கும். காலை நாலு மணிக்கு எழுந்து குளித்து வெளீயே வரும்போது மனைவியோ, அம்மாவோ, காப்பியுடன் தயாராக இருக்க வேண்டும். இவர் நாலரைக்கு கடைவீதிக்கு வண்டி எடுத்து செல்வதற்கு முன்

வீட்டு முன் வாசல் தெளித்து கோலம் போட்டிருக்க வேண்டும்.மனைவி கட்டாயமாக அவரை வழியனுப்ப நிற்க, இவர் அடுத்து என்ன என்ன செய்யவேண்டும் என்று சொல்வார். அந்த நேரத்தில் நான் வாக்கிங் செல்ல நின்று கொண்டிருந்தால் அவரே வணக்கம் சொல்வார், அவ்வளவுதான், அவர் வேலைகளை பார்க்க ஆரம்பித்து விடுவார்.

ஞாயிற்று கிழமை மதியம் மேல்தான் அவர்கள் அனைவரும் ஒன்றாக உட்கார்ந்து பேசிக்கொண்டிருப்பதை பார்த்திருக்கிறேன். அதுவும் ஒன்பது மணி வரைதான். அதற்கு பின் அந்த குடும்பம் உறங்க சென்று விடும். கார் கூட வைத்திருக்கிறார்கள், மாதத்திற்கு ஒரு முறையோ,இரு முறையோதான் வெளியே எடுப்பதை பார்த்திருக்கிறேன், அதுவும் அவர்கள் குடும்பத்தோடு வெளியே கிளம்பினால்தான். மற்றபடி நடந்து சென்று பஸ் ஏறி செல்வதைத்தான் பார்த்திருக்கிறேன்.

எப்பொழுது பார்த்தாலும் பரபரப்புத்தானா? அதுவும் அந்த வயதான மனுசனையும், அந்த விடியற்காலையில் எழுப்பி கடையை திறக்க சொல்லி, அதன் பின் இவர் கடை வீதி சென்று திரும்பி வந்தவுடன், வீட்டுக்கு அனுப்புவார். வீட்டுக்கு வந்தாலும், ஒரு மணி நேரம் மட்டுமே அவர் வீட்டிலிருப்பார், அதற்கு பின் இலைக்கடைக்கு கிளம்பி விடுவார். அங்கு மனைவி இருப்பாள். அவளை வீட்டுக்கு அனுப்புவார். அதே போல் அன்பானந்தத்தின் மனைவி மளிகை கடைக்கு சென்று அவரை வீட்டுக்கு அனுப்புவாள். அவர் வந்தவுடன் அம்மா காலை உணவை

பறிமாறி இவர் சாப்பிட்டுவிட்டு அவசர அவசரமாக, மளிகை கடைக்கு வந்து மனைவியை சாப்பிட வீட்டுக்கு அனுப்புவார்.இவர்களின் இந்த கண்ணாமூச்சி விளையாட்டு எனக்கு வேடிக்கையாக இருக்கும். அதுவும் அரசாங்கத்தில் உயர்ந்த பதவியில் இருக்கும் எனக்கு இந்த அவசரம், ஆத்திரம் எல்லாம் வேடிக்கையாக இருக்கும்.

அன்று யதேச்சையாக எங்கள் நகர்வாசி ஒருவரின் இல்ல திருமண விழாவில் நானும், அன்பானந்தமும் சந்திக்க நேர்ந்தது. மனுசன் கொஞ்சம் பரபரப்பில்லாமல் அமைதியாக இருப்பதாக எனக்கு பட்டது. நான் அதுதான் சமயம் என்று பொரிந்து விட்டேன். ஏன் சார் நீங்க வேலை செய்யறீங்க ஓகே, உங்க மனைவி, மகன் குழந்தைங்க ஓகே, பாவம் வயசானவங்களுக்கு ஓய்வு கொடுக்கலாமில்லை.

விருந்து முடிந்து சுவாரசியமாய் வெற்றிலை போட்டுக்கொண்டிருந்தவர் மெளனமாய் என்னை பார்த்து ஏன் சார் உங்களுக்கு வயசு என்ன? எதற்கு கேட்கிறார் என்று எண்ணி ஐம்பதுக்கு மேல இருக்கும் என்றேன். உண்மையான வயதை சொல்ல மனமில்லாமல். அவர் அதை கண்டு கொண்டதாக தெரியவில்லை. நீங்க அரசாங்கத்துல பெரிய உத்தியோகத்துல இருக்கறீங்க, மெதுவா எந்திரிக்கலாம், மெதுவா வேலைக்கு போகலாம்,அப்படி இருக்கும்போது காலையில வெள்ளென எந்திரிச்சி எதுக்கு வாக்கிங் போறீங்க?

எல்லாம் நம்ம உடம்பை கரெக்டா வச்சுக்கத்தான்.

இன்னும் அஞ்சாறு வருசத்துக்கப்புறம் ரிட்டையர்டு ஆயிட்டு என்ன பண்ணுவீங்க?

நான் யோசித்தேன், நல்ல ரெஸ்ட் எடுக்கணும், அவ்வளவுதான் என்றேன். சரி அப்பவும் நீங்க வாக்கிங் போறதை நிறுத்த முடியாதில்லை. இதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. ஆமாம் என்றேன்.

எங்கப்பாவுக்கு வயசு எழுபத்தி அஞ்சுக்கு மேல் ஆச்சு, அம்மாவுக்கு எழுபது ஆச்சு, இதுவரைக்கும், சுகரோ, பி.பி, இந்த மாதிரி எந்த பிரச்சினையும் வந்ததில்லை. அது தெரியுமா? அது மட்டுமில்லை, என் குழந்தைக வேலை செய்யும்போது நானும் என் மனைவியும் அவங்களோட வேலை செஞ்சா எங்களுக்கு புத்துணர்ச்சியா இருக்கு, அதே மாதிரி எங்கப்பா, அம்மா எங்க எல்லோர் கூடயும் வேலை செய்யும்போது அவங்களுக்கு தனக்கு வயசாயிடுச்சு அப்படீங்கறதே தோணாது. அது மட்டுமில்லை. இந்த குடும்பத்துல எல்லாம் உழைக்கறோம், அப்ப எல்லாமே சமம் அப்படீங்கற எண்ணம்தான் வரும். என் குழந்தைங்களுக்கு கூட இந்த வீட்டுல சும்மா நம்மளை படிக்க வைக்கலை. இந்த குடும்பத்துக்கு உழைக்கிறோம்,அதுக்கு பலனா நாம படிக்கறதுக்கு செலவு செய்யறாங்க அப்படீன்னு நினைக்க தோணுமில்லையா?

இன்னொன்ணு தெரியுமா? எங்க வீட்டுல மாமியார், மருமக பிரச்சினை வராது தெரியுமா? காரணம் அவங்கவங்களுக்கு தலைக்கு மேல வேலை இருக்கு., இதை எல்லாம் செஞ்சு, என்னையும், எங்கப்பாவையும் கவனிக்கணும், அது போக பசங்களை ரெடி பண்ணனும். எங்க வீட்டுல ஒன்பது மணிக்கு மேல டி.வி சத்தம் கேட்டிருக்கீங்களா? முடியாது சார், ஏனா எல்லாருக்கும் கடினமான வேலை, எப்படா படுக்கலாமுன்னுதான் யோசிப்பாங்க. அப்புறம் எப்படி டி.வி பாக்க மனசு வரும்.

அதிகம் படிக்காத அன்பானந்தம் தன் குடும்பத்தின் கூட்டு உழைப்பையும், அதனால் எத்தனை நன்மைகள் கிடைக்கிறது என்பதையும் சொன்னவுடன் எதுவும் பேசாமல் வாய் மூடி ஆச்சர்யமாய் பார்த்துக்கொண்டிருந்தேன்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *