Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

உயிர்ச்சுமை

 

சந்துருவுக்கு வீடு திரும்புவதை நினைத்தாலே வயிற்றிலிருந்து ஒரு அக்னிச்சுழல் எழும்பி தொண்டை முழுக்க வியாபித்தது போல துக்கம் நிரம்பியது. அவனை அறியாமல் விழிகளில் பொங்கிய நீர் பிரிந்து புரண்டது.

வசிப்பிடம்தான் எல்லோருக்கும் இளைப்பாறல்… ஆனால் ஒரு சில சமயம் வீடற்று இருப்பதும் ஒரு சவுகர்யம் என்று தோன்றியது. பற்றற்று இருப்பது பேரானந்தம் என்கிற ஞானமெல்லாம் துயரம் சூழ்ந்து அழுத்துகையில் தோன்றாமலிருக்கிற மனிதர் எவருமில்லை.

மணி தன் இறுதி நிமிடங்களை சிரமப்பட்டு நர்த்திக்கொண்டிருக்கிறது. அதன் தீனமான குரைப்பொலி இல்லாத வீடு அமானுஷ்யமாக இருக்கிறது இப்பொழுதெல்லாம். எத்தனை மெலிதாக வண்டியின் சத்தத்தை குறைத்துக்கொண்டு சென்றாலும் சட்டென்று தான் படுத்திருந்த இடத்திலிருந்து தலையை தூக்கி காதுகள் விரைக்க வாசல் பக்கம் திரும்பி குரைக்கும் அதன் கம்பீரமான அழகு எல்லா கவலைகளையும் கண்நேரத்தில் துரத்திவிடும். செருப்பொலியில் ஏதோ ஒரு சுரத்தை கண்டு தரம் பிரித்து தன் பிரியமானவர்களை எளிதாக இனம் காணும் அதன் வாலாட்டல் கலப்பற்ற நேசட்ர்ஹ்தின் அடையாளம்.

மனிதர்களின் ஆதிக்க மனோபாவத்தின் வடிகாலாய் இருப்பதால்தான் நாயை செல்லப்பிராணியாக்கி வளர்க்கிறார்கள் என்பான் கிருஷ்ணா, வரும்தோறும்.. தனக்கு கீழே ஏதோ ஒரு ஜீவன் வாலாட்டியபடி, குழைந்து நக்கிக்கொண்டிருக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பை நாய்தானே நிறைவேற்றிக்கொண்டிருக்கிறது என்பது அவன் வாதம். எல்லாவற்றையும் தர்க்கத்தராசில் ஏற்றி எடை போட்டபடி இருக்க முடியாது. கிருஷ்ணாவின் காரண அறிவு எல்லாவற்றிலும் விழித்துக்கொண்டு தன் இருப்பை நிலை நிறுத்தியபடியே இருக்கிறது. சந்துருவின் தரப்பில் அதற்கு வேறு அர்த்தம் உண்டு. சதா அன்பை யாசிக்கும் மனிதனுக்கு சலிப்பின்றி நாயைத் தவிர வேறு எது அன்பை அப்படி வஞ்சனையின்றி தரமுடியும்.

செல்வ வினாயகர் ஆலயத்தின் பிரகாரம் தண் என்று காற்றை வாரி அவன் முகத்தை வருடி ஆற்தல் சொன்னது. ‘ ஒரு நாள் எப்படியும் இழக்க போகிறோம் என்று தெரிந்துதானே எல்லாவற்றையும் பெறுகிறோம்’. சில நொடிகள் கழித்து சலனமற்ற மௌனத்தில் காற்று அசையாமல் அதை மெய்ப்பித்தது.

யாருக்கும் நாய்களை, குருவிகளை, கிளிகளை பரிசளிக்காதீர்கள் என்று இப்பொழுதெல்லாம் எல்லோரிடமும் சிபாரிசு செய்கிறான் சந்துரு.மணியை விளையாட்டாக ஏழு வருடங்களுக்கு முன்பு பரிசளித்துச்சென்ற சந்தானத்தை எல்லோரும் இப்போது திட்டித் தீர்க்கிறார்கள். ஆனால் அவன் அதை இங்கு விட்டுச்சென்றபோது எல்லோருக்கும் ஒரு புது உலகம் தங்களுக்குள் தோன்றியதுபோல் இருந்ததை மறந்துவிட்டார்கள்.

பொமரேனியன் க்ராஸில் பிறந்த மணி, பழுப்புக் கலந்த வெள்ளை நிறத்தில் புஸு, புஸு வென்று விரல் விட்டு அளைகையில் விளைந்த நெற்பயிரை வருடுவது போல் இருக்கும். அதன் உட்செவி புதிதாகப் பூத்த சிவந்த ரோஜா போல், சூரிய ஒளி படும்போது தக தகக்கும். எந்த மின்சக்தியும் இல்லாமல் ஒளிரும் அதன் கண்களை உற்றுப்பார்க்கும் எவரும் அதனிடம் மயங்காமல் இருக்கமுடியாது.

புதிதாக பிறந்தக் குழந்தையை கீழே இறக்க மனமில்லாமல் ஆளாளுக்கு தூக்கி அதன் பிஞ்சு கழுத்தில் முகம் கொஞ்சுவோமே அது போல, அதை கடந்து செல்பவர்கள் ஒரு முறையேனும் அதனை தூக்கி கொஞ்சிவிட்டு, ‘ இப்ப எதுக்கு என்னைக் கூப்பிட்ட’ என்று அதன் சாதாரண தலையாட்ட்லுக்கெல்லாம் அர்த்தம் கற்பித்து அதனை மடியிலேந்துவார்கள்.

சின்ன சின்ன பிணக்குகள், மனித உறவுகள் மீதான அதிருப்திகள் என்று களையிழந்துக் கிடந்த வீட்டை ‘மணி’யின் வருகைதான் ரம்யமாக்கியது. சரியான சமயத்தில் கொடுத்தான் சந்தானம் என்று அவ்வப்போது நினைத்துக்கொள்வான் சந்துரு. அன்பின் அடையாளமாகத்தான் அதனை தந்தான் சந்தானம். வயோதிகத்தாலும் நோயாலும் அவதிப்படும் மணி இப்பொழுது கூடுதல் சுமையாகத்தெரிந்தது வீட்டில் சிலருக்கு… அவர்கள் எல்லாம் சந்தானத்தை புரட்டி எடுத்தார்கள் தங்கள் வார்த்தைகளில்… இலகுவாக வளையும் என்பதால் நாக்குதான் எப்படியெல்லாம் புரட்டிப் பேசிவிடுகிறது…

வெத்திலைப் பாட்டிதான் கரித்துக்கொட்டிகொண்டிருந்தாள் சந்தானத்தை..யாரையாவது திட்டியபடி, குறை சொன்னபடி இருந்தாலதான் பாட்டிக்கு பொழுது நகரும். தாத்தா வழி உறவில் எப்போதோ ஆதரவில்லையென்று தாத்தா காலத்தில் வந்து ஒட்டிக்கொண்டவள், இப்பொழுது கொட்டிகொண்டிருக்கிறாள். மணி வருவதற்கு முன் வீட்டு பெண்பிள்ளைகள், மணி வந்த பிறகு மணி, இப்பொழுது சந்தானம்…. பாட்டி மீது இப்பொழுதெல்லாம் கோபம் வரவில்லை. பாவமாக இருந்தது. அன்பை உணராத, அன்பை அனுபவிக்கத் தெரியாத மனிதர்கள் துரதிர்ஷ்டசாலிகள்தானே…

‘அந்த குமாரு பய கேட்டுகிட்டு கெடந்தான் அப்பவே குடுத்து தொலைச்சிருக்கலாம்.. இப்ப வாந்தி எடுத்துகிட்டு, சீக்கா கெடக்கு.. எப்ப ஒழியுமோ தெரியலை.’.என்று புலம்பிக்கொண்டிருக்கும் வெத்திலை பாட்டிக்கு இரண்டு வருடங்களுக்கு முன் கால் அடிபட்டு நடக்கமுடியாமல் ப்டுத்த படுக்கையாக கிடக்கிறாள். எல்லாமே பெட்டில்தான்.ஜீவகாருண்யத்துக்கும், தாஇய்மைக்கும் பல சமயங்களில் பொருள் புரியாமல் போய்விடுகிறது.

என்றாலும் மணிக்கு பாட்டி மேல் துவேஷம் ஏதுமில்லை. பதிலுக்கு குரைக்காது. ஆனால் தோட்டக்கார முருகனைக் கண்டால் எப்பொழுது பார்த்தாலும் குரைக்கும். சஞ்சீவிதான் அதற்கு விளக்கம் சொன்னான், சில மனிதர்களின் வாசம் நாய்களுக்குப் பிடிக்கும்.. அவர்களோடு சட்டென்று எளிதாக ஒட்டிக்கொள்ளும். சந்துருவுக்கு பல இடங்களி அதே அனுபவம்தான். எந்த ஜாதி நாயானாலும் சந்துருவிடம் மிக சுலபத்தில் சினேகமாக பழகிவிடும். சில மனிதர்களின் வாசம் நாய்க்கு பிடிக்காது. அவர்களைக் கண்டால் சதா குரைக்கும் என்பான் சஞ்சீவி. மனிதர்களின் நல்ல எண்ணங்கள்தான் அவனைச்சுற்றி வாசனையாகவும், ஒளியாகவும் சுழல்கிறது என்பது சஞ்சீவியின் உபரித்தகவல். நாய்க்கு மனிதர்களின் வாசம் பிடிக்கிறதோ இல்லையோ சந்துருவுக்கு நாய்களி வாசம் என்றால் ரொம்ப இஷ்டம்..அதன் நெற்றியை, தாவாங்கட்டையை, கழுத்துப்பகுதியை, முதுகை வருட, வருட அதன் மென்மையும், வாசமும் அலாதி சுகம்.அந்த சுகத்தை முழுமையாக உணர நாயைக் குளிப்பாட்டிப் பாருங்களேன். தன் மீது பரவிய நீர்த்திவலைகளை சட சடவென்று அது உதறுகையில் அதன் அருகில் இருப்பவர்கள் அருவியின் தெறிப்பில் கிடைக்கும் சிலிர்ப்பை அனுபவிக்கலாம்.

மணிக்கு நான்கு நாட்களாக அன்ன ஆகாரம் ஏதுமில்லை. எப்பொழுதாவது ஒரு முறை கொஞ்சம் பால்.. கண்கள் ஒளி இழந்து ஜுரகளை கழன்றது. அதற்கு இஷ்டமான ரஸ்க் ஐ போட்டால் கூட தீண்டத் திராணியில்லாமல் அப்படியே கிடக்கிறது.அதன் ஜீவன் துளி துளியாக கரைந்துகொண்டிருக்கும் காணச் சகியாத நிலையை பார்த்து அப்பா எங்கையாவது இதை விட்டுத் தொலை என்று நச்சரிக்க ஆரம்பித்துவிட்டார்.இயலாமை என்று தெரிந்த பிறகு அதை கை கழுவ நினைப்பது எத்தனை குரூரம்.

எப்போதோ ஒரு முறை எல்லோரும் வெளியேப் போக நேரும்போது வர மறுக்கும் நாயை கவனிக்கும் வெலையை சொல்லிப்போனால் மகா எரிச்சலடைவார். எல்லா வீட்டுக்கும் நாய்தான் காவல்… எங்கள் வீட்டில் நாந்தான் நாய்க்கு காவல் என்பார் கிண்டல் தொனிக்க.. மணி அப்படியொன்றும் திருடர்களை கவ்விப்பிடிக்கவில்லை என்பது அவர் குறை.

மணி சார்ந்த நாய்களின் இனத்தில் அது குணம் இல்லை.அது அன்பே மயமானது. துரத்தலும், கடித்தலும் அதன் அடையாளம் இல்லை. அதன் நரம்பில் ஊறி முகிழ்க்கும் அன்பை அது நாவால் திரட்டி தீண்டி, தீண்டி ஈரமிக்க மொழியில் உரையாடும் அன்பின் பிரளயம் மணி. அதன் சிலிர்ப்பை வாசிக்க முடியாதவர்களால் ஒரு போதும் அதன் அன்பை உணரமுடியாது.

மணிக்கு குழந்தைகளிடம் அலாதி பிரியம். குழந்தைகளும் அதனிடம் அதீத சலுகை எடுத்துக்கொள்வார்கள். அதன் காதுகளை பிடித்து இழுத்து, வாய்க்குள் விரலைவிட்டு விளையாடும் பிள்ளைகளை ஒரு போதும் மிரட்டியதே இல்லை. அத்தனை வலிகளை பொறுத்ததாலோ என்னவோ பிரியா அதன் வலிகளை புரிந்தவளை இருந்தாள்.

இப்படித்தான் ஒரு தடவை பிரியா‘ஏம்பா கடவுள் ரொம்ப பெக்யூலியர் கேரக்டரா இருக்கார்’ என்றாள்

‘ ஏன் அப்படி கேக்கற?’

‘ உலகத்திலேயே ரொம்ப நன்றி உள்ள ஜீவன்னா நாய்தான்னு சொன்னே. ஆனா அதுக்கு போய் 15 வருஷம்தான் ஆயுள் குடுத்துருக்கிறார். நன்றி உள்ள ஜீவனுக்கு கடவுள் தரும் பரிசு அவ்வளவுதானா?’

குழந்தைகள் எத்தனை சுலபமாக கனமான கேள்விகளை கேட்டுவிடுகிறார்கள். அதன் பளுவை சுமக்க முடியாமல் நழுவுகிறது மனது.

‘ அப்படியில்லடா இந்த உலகம் நன்றியுள்ள பிறவிகளுக்கானது இல்லை. அப்படியான அன்பானவற்றை தன்னருகில் அழைச்சுக்கிறார்.’

‘ வெத்திலைப் பாட்டி மேல கடவுளுக்கு பிரியமே இல்லை போலிருக்கு’ ரகசிய குரலில் களுக்கென்று சிரித்தபடி சொன்னாள் பிரியா.

‘அப்படியெல்லாம் பேசக்கூடாது” என்று அடக்கினான் சந்துரு.

‘ நீ ஒரு தடவை யயாதி கதை சொன்னியே.. அது மாதிரி மத்தவங்க ஆயுள் காலத்திலேர்ந்து அதுக்கு லைஃப் தரமுடியாதா?’

‘ நாம வாழற ஆயுள்காலத்துல நாயோட ஆயுள் காலமும் இருக்கு. அதுக்கு ஒரு கதை இருக்கு தெரியுமோ?’

‘சொல்லுப்பா’

‘ கடவுள் ஒவ்வொரு விலங்கா கூப்பிட்டு அதன் ஆயுள் காலத்தை ஃபிக்ஸ் பண்ணினாராம். குரங்கை கூப்பிட்டு உனக்கு 20 வருஷம் ஆயுள் அப்படின்னாராம். குரங்கு வேண்டாம் கடவுளே மரத்துக்கு மரம் தாவுற பொழப்பு எனக்கு அதுக்கு 10 வருஷம் போதும்னுச்சாம். சரின்னு அதை பூமிக்கு அனுப்பிட்டாராம். அடுத்து கழுதையை கூப்பிட்டு உனக்கு 50 வருஷம்னாராம். காலம் முழுக்க பொதி சுமக்கற எனக்கு எதுக்கு அத்தனை வருஷம் 20 வருஷம் போதும்னுச்சாம். சரின்னுட்டாராம். அப்புறமா நாய் வந்துச்சாம் அதுக்கு 30 வருஷம்னாராம். தெருத் தெருவாக அலைச்சல் வாழ்க்கை எனக்கு ஏன் அவ்வளவு 15 வருஷம் போதும்னாச்சாம். சரின்னு அதை அனுப்பிட்டாராம். கடைசியா மனுஷன்.. எல்லாமே குறைச்சுக் கேக்குதேன்னு உனக்கு 40 வருஷம் போதுமான்னாராம். மனுஷங்கதான் பேராசைக்காரவங்களாச்சே இத்தனை அழகா உலகத்தை படைச்சுட்டு 40 வருஷம் குடுத்தா எனக்கு போதாதே 100 வருஷம் வேணும்னானாம். கடவுளும் யோசிச்சு பார்த்துட்டு சரி குரங்கு, கழுதை,நாய் திருப்பி கொடுத்த வருஷங்களை நீ வச்சுக்கன்னாராம் அதனாலதான் மனுஷன் அந்தந்த வயசுல அந்தந்த குணத்தில இருக்கான். ஆனா வேடிக்கையை பாரு நல்லதை எடுத்துக்க தெரியாத மனுஷன், நாய்கிட்டேர்ந்து அலைச்சலை எடுத்துகிட்டான் நன்றியை மறந்துட்டான்’ என்று சிரித்தான் சந்துரு

செல் ஒலித்தது. துர்க்காதான் பேசினாள்.

‘ எங்கே இருக்கீங்க. இன்னிக்கு ஏதாவது ஓ.டி. பார்க்கறீங்களா? நேரமாச்சே காணுமேன்னு பார்த்தேன்’

‘ கோயில்ல இருக்கேன் துர்க்கா. மனசு என்னமோ போல இருந்தது. வந்துடறேன்’

சிறிது நேர மெளனத்திற்கு பிறகு ‘ போதும். கடவுளுக்கு ரொம்ப நெருக்கடி குடுக்காதீங்க. இப்பவே ரொம்ப இழுத்துகிட்டு இருக்கு. இன்னும் கொஞ்ச நாளுக்கு இருக்கட்டும்னு அப்ளிகேஷன் போட்டிங்கன்னா பாக்க சகிக்காது. சீக்கிரம் நல்லபடியா கொண்டு போயிடுன்னு வேண்டிக்கங்க’

‘சரி, சரி’ செல் ஐ ஆஃப் செய்தான். எல்லோரும் எத்தனை சுலபமாக முடிவெழுதிவிடுகிறார்கள். பாவம் அவளும்தான் என்ன செய்வாள். அது உடம்பு சரியில்லாத காலங்களிலெல்லாம் அது கக்கி வைப்பதை அவள்தான் கழுவிவைக்கவேண்டியிருக்கிறது. பிறக்கும் போதும் பிறரை வலிக்கச்செய்து, இறக்கும்போது வலிக்கவைக்கும் பிறவி ஏன் எங்களுக்கு என்று ஒரு முறை மூலஸ்தானத்தைப் பார்த்து கேட்டுவிட்டு வீடு நோக்கி நடந்தான் சந்துரு.

சந்துரு உள்ளே நுழையும்போது கொஞ்சம் பிரகாசமாகி எழ முயற்சித்து பின் ஹீனமான முனகலோடு படுத்துக்கொண்டது மணி.

‘பரவாயில்லையே.. எந்திரிக்கப் பார்த்தியே.. உடம்பு சரியாச்சாடா உனக்கு? துர்க்கா மணி எதாச்சும் சாப்பிட்டுச்சா?’

‘ம்ஹூம்’ உதட்டை பிதுக்கிவிட்டு ‘ டாக்டர்கிட்ட சாயந்திரம் கூட காண்பிச்சாச்சு..ரொம்ப வைத்தியம் பண்ணிக்கிட்டு இருக்க வேணாம் பிரயோஜனமில்லன்னுட்டார். கையை சுத்தமா கழுவிட்டு சாப்பிட வாங்க’ என்றாள்.

முகம் கை, கால் கழுவிவிட்டு சாப்பிட அமர்ந்தான். தட்டில் பிசைய, பிசைய மனம் பிழிவது போல் இருந்தது. சாப்பிட முடியாமல் அப்படியே உட்கார்ந்திருந்தான். சட்டென்று உள் நுழைந்த காற்று ஜில் லென்று முகத்தில் அறைந்துவிட்டு வெளியேறியது.ஏதோ தோன்ற கையை உதறிவிட்டு மணியிடம் போனான்…….

…………….. முடிந்து போயிருந்தது.

ஒரு கணம் அதன் முன் அமர்ந்த சந்துரு துக்கம் தாங்காமல் ஓவென்று கதறி அழுதான். பதறியடித்து வந்த துர்க்கா எதுவும் பேச முடியாமல் தூணருகே சாய்ந்து நின்றாள்.பின் அவனருகே வந்து அவன் தலையை கோதிவிட்டு ‘ மெல்ல… மெல்ல பிரியா தூங்கிட்டு இருக்கா’.சட்டென்று கட்டுப்படுத்திக்கொண்டான்

அதன் குறும்பான துறுதுறுப்பை, எல்லையற்ற அன்பை, கள்ளமற்ற விசுவாசத்தை, நிகரற்ற அழகை ஒற்றை இழையாஇ இது வரை சுமந்திருந்த உயிர் பறந்துவிட்டது. அந்த கண்ணுக்குத்தெரியாத காற்று இத்தனை ஸ்தூலமான உடலை சுமந்து திரிந்தபோது கொண்டாடியவர்கள் எத்தனை பேர்.

உடல் தளர்ந்து, சரிந்த போது கனமற்ற அந்த காற்றை சுமக்க முடியாமல் தவ்க்கின்ற பொழுதுகள் மிகக்குறுகியதாக இருந்தாலும் எத்தனை கொடுமை?

பிறப்புக்கும், இறப்புக்கும் இடையில் எல்லையற்ற வெளியில் விடையற்றுத் திரியும் எல்லா கேள்விகளோடு மணியின் உயிரும் கலந்தது….

- 20.06.2010 

தொடர்புடைய சிறுகதைகள்
எப்படியோ ஒரு கசகசப்பு மரணம் நிகழ்ந்த வீட்டில் புகுந்துவிடுகிறது. சம்பூரணத்தாச்சிக்கு எழுபத்தி மூன்று வயதாகிறது. படிக்கட்டிலிருந்து விழுந்த அதிர்ச்சியில் இறைவனடி சேர்ந்துவிட்டார். மல்லிகாதான் முதலில் அவரது மரணத்தை உணர்ந்தவள் பின்பு பிரகடனப்படுத்தியவளும் அவளே... மரணம் பற்றிய செய்தி மனிதர் விட்டு மனிதர் ...
மேலும் கதையை படிக்க...
‘அரணாக் கயிறு இல்லாம எழவெடுத்த ட்ரவுசரு நிக்கமாட்டேங்குது' வயித்தை ஒரு எக்கு எக்கி பொத்தானில்லாத ட்ரவுசரை முடிச்சுப் போட்டுக் கொண்டான் மருதன். எரும மிதிச்ச கால் எரியறது மாதிரி வெய்ய மூஞ்சியில எரிச்சலைக் கெளப்பியது. குத்துக் காலிட்டுக் குந்தியபடி கீழக் கெடந்த ரவக் ...
மேலும் கதையை படிக்க...
புகைப்படங்கள் இல்லாத வரவேற்பறைகள் அத்துனை அழகாய் இருப்பதில்லை. எல்லா புதிய ஒப்பனைகளும், புதிய அடையாளங்களும் களைந்து அவற்றில் தெரியும் அழகற்ற முகங்களுக்கும் ஒரு ஈர்ப்பு சக்தியை எப்படியோ கேமரா ஒளி வழங்கிவிடுகிறது. அறிமுகமில்லாதவர்களின் வீடுகள்கூட எனக்கு பெரும்பாலும் அந்நியமாக இருப்பதில்லை, அந்த வீடுகளின் ...
மேலும் கதையை படிக்க...
மூன்று: காதலின் நண்பன் யார்? சந்தேகமென்ன ... ‘செல்'தான். ஒவ்வொரு செல்லுக்கும் ஒவ்வொரு அலைவரிசை இருக்கலாம். ஆனால், காதலும் செல்லும் ஒரே அலைவரிசை இரவுகள்தான் இரண்டுக்கும் பிடித்தமான பொழுது தனிமைதான் இரண்டுக்கும் பிடித்தமான சூழல் இரண்டில் சில இதயத்தில் இடம்பிடிக்கும் சில இடுப்பில் ...
மேலும் கதையை படிக்க...
சங்கீத சீசன் என்றால் கட்டாயம் நீங்கள் ஏதாவதொரு சபாவில் சிதம்பரநாதனை பார்த்திருக்கலாம். அவனொரு சுவாரஸ்யமான பேர்வழி. நல்ல ரசனைக்காரன். அப்படியென்றால் திருவையாறு பக்கம் வராமலா போய்விடுவான், அப்போது பார்த்துக் கொள்ளலாமென்று திட்டம் ஏதாவது தோன்றினால் அதை சுத்தமாக மனதிலிருந்து அழித்துவிடுங்கள். ஏனென்றால், சிதம்பரநாதனுக்கு ...
மேலும் கதையை படிக்க...
போட்டுத்தள்ளு
பிடிபட்டவன்
சுடுநிழல்
நில் … கவனி… செல்…
கசக்கும் சர்க்கரை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)