Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/content/42/10186442/html/index.php:2) in /home/content/42/10186442/html/wp-content/themes/Clipso/functions.php on line 189
Sirukathaigal - Sirukathai - Short Stories in Tamil

இலையுதிர்ந்த மரங்கள்

 

வீட்டில் நடக்கும் ஒரு விசேஷத்திற்காக நண்பன் வீட்டிற்கு அழைக்க சென்றிருந்தேன். நண்பன் அமெரிக்காவில் செட்டில் ஆகியிருந்ததினால் மெயிலில் அவனை விழித்துவிட்டு அவன் பெற்றோரை அழைப்பதற்காக ஈரோடு பயணமானோம். காலை ஐந்து மணிக்கே ரயில் நிலையத்தை நெருங்கி கொண்டிருந்தது. வாடை காற்று வேறு. தூக்க கலக்கமாக இருந்ததால் முகம் அலம்பி வரலாம் என்று மெதுவாக நடந்து சென்றேன். கண்ணாடி மேலேயே ஒளிர் விளக்கு. உயரம் அதிகமாக இருந்ததால் குனிந்து தலை சீவலாம் என்றால் தலையில் முடி குறைந்து வருவதை வெளிச்சம் போட்டு காட்டியது. காலையிலேயே மூட் அவுட். ரயிலில் கண்ணாடி பார்ப்பதை தவிர்க்க வேண்டும்.

ஈரோடு அருகில் ஒரு கிராமம். சிறிய தெருவில் அவர்கள் வீடு. ஆதலால் கண்டுபிடிப்பதில் சிரமமில்லை. பல வருடங்கள் இடைவேளியானாலும் எளிதில் அடையாளம் கொண்டார்கள்.

அம்மா,”வாப்பா. நல்லாருக்கியா?”

வயது அறுபதை தாண்டியிருந்தது நரை முடி மற்றும் நடையில் தெரிந்தது.

“நல்லாருக்கேன்மா. அப்பா எங்கே?”

“உள்ள இருக்காரு. நடக்க சிரமமா இருக்கு. வாங்க.”

உள்ளே சென்றோம்.

வெறிச் என்றிருந்தது. இரண்டு நாற்காலியை சிரமத்துடன் எடுத்தார்கள். வேண்டாம் என்று மறுத்து விட்டு கீழே அமர்ந்தோம்.

அப்பாவின் வயது எழுபத்தைந்து. ஒடிசலாக இருந்தார், தலை முழுவதும் முடி கொட்டிபோய் மீசை மழித்து ராஜாஜியை ஞயாபகபடுத்தினார். அமைதியாக இருந்தார். விஷேஷத்திற்கான தேதி இடம் மற்றைய விவரங்கள் சொல்லி பரஸ்பர விசாரிப்புகள் முடிந்து,

அம்மா , “சாப்பிட வாங்கப்பா”.

கேசரியும் பஜ்ஜியும் இலையில் பரிமாறபட்டிருந்தது. சுவையாக இருந்தது.

“எப்பவுமே கேசரி சாப்பிடறதில்லைமா. ஆனா இதோட வாசனையே நல்லாருக்குது”.

“இந்த நெய் வீட்ல செய்றதுப்பா. கறந்த பால் வாங்கி அதில ஆடை எடுத்து ரெண்டு நாள் கழிச்சு வெண்ணை கடையனும். அத உருக்கி எடுத்தா இது மாதிரி வாசனையா வரும்.” அம்மா விளக்கிக்கொண்டிருந்தார். கேசரியை காலி செய்திருந்தேன்.

அறை முழுவதும் என் நண்பனின் மற்றும் அவரது மகளின் புகைப்படமும் நிறைந்திருந்தது. கல்யாணம், பட்டம் வாங்கியது, பேத்தி ஒரு நாய்க்குட்டியுடன், என்று முழுவதும் போட்டோவில் நிறைந்திருந்தார்கள்.

ஒவ்வொன்றையும் பொறுமையாக பார்த்து கொண்டிருந்தபோது அப்பா பேச ஆரம்பித்தார்.

“எல்லாம் சேகர் போட்டோ தான். இது அவன் காலேஜ்ல, இது வர்ஷவோட (பேத்தி) கோவில்ல” என்று ஒவ்வொன்றாக சொல்ல ஆரம்பித்தார். கொஞ்சம் முகம் மலர ஆரம்பித்திருந்தது.

கொஞ்சம் சகஜமாக பேச ஆரம்பித்த பின் மெதுவாக தோட்டத்திற்கு வந்தோம். வீட்டை சுற்றிலும் தென்னை, கொய்யா நெல்லி மரங்கள். அவரைச்செடிகள்.

“இது சேகர் மரம்பா.” ஒரு தென்னை மரத்தை சுட்டி காண்பித்தார்.

“அதுமாதிரி இது சிவாவோட (சேகர் தம்பி) மரம். ஒரு கொய்யா மரத்தை சுட்டினார்.

“சின்ன புள்ளைல ரெண்டு பெரும் போட்டி போட்டுட்டு மரத்த வளத்தானுங்க. நான் முந்தி நீ முந்தினு தண்ணி ஊத்தி உரம் போட்டு கண்ணா பாத்துபானுங்க. இப்போ ரெண்டு பெரும் ஒரொரு ஊர்ல இருக்கான். இப்ப நான்தான் இந்த மரத்துல தண்ணி ஊத்தறேன்.” வாஞ்சையாக தென்னையை தடவி கொடுத்துகொண்டே பேசினார்.

“இங்கேந்து ரெண்டு மைல் தள்ளி சேகர் ஸ்கூலு இருக்குது, காலைல நான் பொய் விட்டுட்டு வருவேன். அதுக்கப்புறம் இந்த சைக்கிள்ள தான் போவான்.” ஓரமாக ஒரு சைக்கிள் தூசி படிந்து காட்சியளித்தது.

“சேகரு இப்போ சீட்டில்ல இருக்கான். (சியாட்டில் நகரம்). சிவாதான் மெட்ராஸ்ல இருக்கான். வருஷத்துக்கு ரெண்டு தடவ வரான். சஹானா (இரண்டாவது பேத்தி) பெருசா வளந்துடுச்சு.இப்போ ஸ்கூலுக்கு போயிருக்கும் ”

மோட்டார் ஆன் செய்து மரத்தில் தண்ணீர் ஊற்றினேன். என் குழந்தையும் தண்ணீரில் கை அலம்பி விளையாடியது. அம்மா அதை எடுத்து கொஞ்சி கொண்டிருந்தார்.

“எத்தன மாசம் ஆகுதும்மா ?”

மனைவி, “ஒன்பது முடிஞ்சு பத்து நடக்குது.”

“புள்ள வெய்டே இல்ல. பேசாம இந்த நவதானியம் வாங்கி அத உலர வச்சி அரைச்சு தரேன்பா. கொஞ்சம் முந்திரி பாதம்லாம் போட்டு கொடுத்த குழந்த நல்லா வந்துடுவா.” குழந்தையை கையில் தூக்கி வைத்திருந்தார்கள்.

எங்களின் மூலம் சேகரையும் சிவாவையும் பேத்தியையும் பார்க்கிறார்கள் என்று புரிந்தது. இந்த வயதில் என்னால் இவ்வளவு வேகமாக ஒட்டி கொள்ள முடியுமா தெரியவில்லை. வயதின் முதிர்ச்சி.எல்லாம் பார்த்த பின் வரும் தெளிவு.

அப்பா அதற்குள் ஒரு கொய்யாவை பறித்திருந்தார். அதை தன் இரு கைக்குள் பொத்தி பத்திரமாக. வைத்துக்கொண்டார். மெதுவாக விரலால் தேய்த்து கொண்டிருந்தார்.

“சேகருக்கு கொய்யா ரொம்ப பிடிக்கும்.”சாப்பிடுவார் என்று தோன்றவில்லை.

குழந்தையை உள்ளே கூட்டி சென்று விளையாட்டு பொருளாக எடுத்து கொடுத்தார்கள். ஒரு பெட்டி நிறைய இருந்தது. ஒவ்வொன்றையும் தூக்கி பந்தாடி கொண்டிருந்தது.

“இதெல்லாம் சஹானா வர்ஷக்காக வாங்கி வச்சிருந்தது. இப்போ எல்லாம் வளந்துடுச்சுங்க. பெட்டிக்குள்ள தான் ரொம்ப நாள் இருக்குது. நீ விளாடும்மா ” குழந்தை அவர்களுடன் ஒட்டி கொண்டது. குழந்தையாக இருந்த போது நாம் பழகியவர்களை விட இப்போது எண்ணிக்கை பல மடங்காக குறைந்திருக்கிறது. அரை மணி நேரம் இருக்கலாம் என்று நினைத்து வந்த நான் இன்னும் ஒரு மணி நேரம் கூட இருக்கலாம் என்று முடிவு செய்தேன். குழந்தையோடு ஏதோ பேசி கொண்டிருந்தார்கள்.

குழந்தையிடம் மட்டுமே “லூலாயி, க்ளக் ப்ளக், அச்சு பிச்சு, ங்கா, ” போன்ற அர்த்தமில்லாத வார்த்தைகள் கூட ஆயிரம் கதை சொல்லிவிடும். பிரிய மனமில்லாமல் கிளம்பிய பொழுது இரண்டு பேரிடமும் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிகொண்டோம். குழந்தையின் நெற்றில் விபூதியிட்டு முத்தம் தந்து கையில் கொடுத்தார்கள். இருவர் முகத்திலும் முந்தய காட்டிலும் மகிழ்ச்சி தெரிந்தது.

குழந்தை ‘தா தா’ என்று சொல்லி அவர்களுக்கு கை ஆட்டிய போது திரும்பி பார்த்தேன். சுற்றிலும் இருந்த தென்னை மரங்களின் நிழல் வீட்டில் முழுவதும் படர்ந்திருந்தது.

கார் வேகம் எடுக்க ஆரம்பித்திருந்தது. 

தொடர்புடைய சிறுகதைகள்
1 மிகவேகமாக அந்த திருப்பத்தில் திரும்பிக்கொண்டிருந்தேன்.எதிரே வந்த கண்டெய்னர் லாரி கண்ணுக்கு தெரிந்து சுதாரிப்பதற்குள் ‘படார்’ என்று என் மீது இடித்து ஆறடிக்கும் குறையாமல் பறந்து மின்கம்பத்தில் மோதி....... கண் விழித்து பார்த்தேன். உடல் முழுவதும் வேர்த்திருந்தது. கெட்ட கனவு. இருட்டில் கட்டிலை தடவி ...
மேலும் கதையை படிக்க...
அப்பொழுது இரண்டாம் ஆண்டு கல்லூரியில் பயின்று கொண்டிருந்த நேரம். Group Study என்ற பெயரில் ஒவ்வொருவர் வீடாக மாறி மாறிபடித்தோம்.இல்லை அப்படி சொல்லிக்கொள்வோம். அன்று ரகு வீட்டில் என்று முடிவானது. வழக்கம் போல் இரவு ஒரு கடைக்கு சென்று மூக்கு பிடிக்க ...
மேலும் கதையை படிக்க...
கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து கொண்டிருந்த நேரம். உண்டு களைத்த ஒரு மதிய வேளை. ஸ்டிரெந்த் ஆப் மெட்டெரியல்ஸ் என்ற ஏற்கனவே மொக்கையான ஒரு சப்ஜக்டை படு மொக்கையாக்கி தாலாட்டு பாடி கொண்டிருந்தது, கோமளா மேடம். தீடீரென்று அப்பா வந்தார். ஏதோ பேசினார்.. ...
மேலும் கதையை படிக்க...
அந்த மூதாட்டியை அடிக்கடி கோவிலில் பார்க்க முடிகிறது. குறைந்தது எழுபது வயது இருக்கும். வெளிப்பிரகாரத்தில் ஒரு கேள்விக்குறியின் வளைவுகளோடு முதுகு வளைந்து சுவற்றில் சாய்ந்து உட்கார்ந்திருக்கிறாள். கைய்யில் ஒரு பழைய பை. அருகில் யாரும் இல்லை. எப்பொழுதும் வாய் ஏதோ ஸ்லோகத்தை ...
மேலும் கதையை படிக்க...
மூர்த்தி.இவனை நீங்கள் பாளை மத்திய சிறை அருகில் பார்த்திருக்க வாய்ப்புண்டு. அந்த ரெயில்வே கிராசிங் அருகில் இருக்குமே. அங்கு தான் ஜெயிலராக வேலை பார்க்கிறான். ஆறடி குறையாமலிருப்பான். அகன்ற மார்பு. கணீரென்ற குரல். ‘டேய்.....மவனே என்று கத்தினால் மிரண்டோடும் கைதிகள். புத்தகத்தை ...
மேலும் கதையை படிக்க...
ஜூன் பத்து என்று நாள் கொடுத்திருந்தார்கள். வழக்கம்போல் வாரா வாரம் செக் அப் போவது போல் அன்றும் சென்றிருந்தாள். அன்று சனிக்கிழமை . இரவு டிக்கட் புக் செய்யபட்டிருந்தது . அலுவலகத்தில் இருந்து சற்று முன்னதாக புறப்பட வேண்டும் . இதே ...
மேலும் கதையை படிக்க...
ஒரு அதிகாலை மரணம்
ஓர் இரவு
வாத்தியார் பெரியப்பா
ஆச்சி
கலைந்த மேகங்கள்
ஒரு பிறப்பும் மறுபிறப்பும்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)