Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/content/42/10186442/html/index.php:2) in /home/content/42/10186442/html/wp-content/themes/Clipso/functions.php on line 189
Sirukathaigal - Sirukathai - Short Stories in Tamil

இறந்தவன்

 

ஆறு மாதத்திற்கு முன்பு நிகழ்ந்த பைக் விபத்தொன்றில் வசந்தன் இறந்துவிட்டானாம். இதைச் சொல்வதற்காகவே நேரங்கெட்ட நேரத்தில் சிங்கப்பூரிலிருந்து போன் பண்ணியிருந்தான் நடராஜ்.

மிகத் தாமதமாக வந்த அதிர்ச்சி செய்தி. கேட்டுவிட்டு இந்த முனையில் அஷோக் உறைந்துபோய் சில விநாடிகள் பேச்சற்று நின்றான்.

ஆறு மாசத்துக்கு முன்னாலா? எப்படி இது இத்தனை நாள் தனக்குத் தெரியாமல் போனது?

எனக்கே இப்பதாண்டா தெரியும். ரொம்ப கஷ்டமாயிருச்சு. பாவம்டா அவன். அல்பாயுசு! எப்பவும்போல பைக்-ல கண்ணு மண்ணு தெரியாமப் பறந்திருப்பான். வினையாயிருக்கும். எத்தனை தடவை படிச்சுப் படிச்சு சொல்லிருப்போம். கேட்டானா?” என்றான் நடராஜ்.

அவன் அடுத்த தடவை இந்தியாவுக்கு வரும்போது வசந்தனின் வீட்டுக்குப் போய் விசாரிப்பதாகவும் முடிந்தால் அசோக்கை இப்போதே அங்கே போய்விட்டு வரும்படியும் சொல்லிவிட்டுப் ஃபோனை வைத்தான்.

ஐந்தாறு நிமிடங்கள் பிரமை பிடித்தமாதிரி உட்கார்ந்திருந்தான் அசோக். வசந்தனிடம் மனஸ்தாபம் ஏற்பட்டுப் பிரிந்து ஏழெட்டு வருடங்கள் ஓடிவிட்ட நிலையில் இப்படி ஒரு அதிர்ச்சித் தகவல்!

கொதிக்கிற நீரில் குமிழ்கள் மாதிரி மனதிற்குள் குழப்பமாய் வசந்தனைப் பற்றிய நினைவுகள் சட்சட்டென்று தோன்றி மறைந்தன. அவன் இறந்துவிட்டான் என்பதை அஷோக்கால் நம்பவே முடியவில்லை. ஆனால் ஒரு நாள் இந்த மாதிரி விபரீதம் நடக்குமென்பது மனதின் ஏதோ ஒரு மூலையில் தோன்றிக்கொண்டேயிருந்தது.

ஓடும் ரயிலின் ஜன்னல் வழிக் காட்சிகள் போல மனதில் வசந்தனைப் பற்றிய எண்ணங்கள் ஓடத்துவங்கின.

அவனைப் பற்றி யோசிக்கையில் எப்போதுமே முதலில் நினைவுக்கு வருவது அவனுடைய வசீகரமான மலர்ந்த சிரிப்பு. இளந்தாடி. எறும்பு போன்ற சுறுசுறுப்பு. Catch me if you can என்று பிருஷ்டத்தில் ஸ்டிக்கர் ஒட்டிய அவனது யமஹா பைக். அந்த பைக்கில் அவன் செய்கிற தீர சாகசங்கள். இவற்றிற்கு அடுத்ததாக பிறகு அந்தப் பெண் சுகந்தி. அவள் போகிற இடங்களுக்கெல்லாம் விடாமல் வசந்தனின் பைக் பின் தொடர்ந்து போய்க்கொண்டிருந்தது. அவளோ அவனைத் திரும்பிக்கூடப் பார்க்கமாட்டாள். இந்த மாதிரி ஒரு வசீகரமான, வேகமான பையனை ஒரு பெண் நிராகரிக்கிறாள் என்பது நண்பர்களுக்கே ஆற்றாமையாக இருந்தது. சுகந்தியை கிரிக்கெட் கிரவுண்ட் அருகே வழிமறித்து அசோக் கூட வசந்தனைப் பற்றி அவன் நல்லவன் வல்லவன் என்று மெதுவாய்ச் சொல்லிப்பார்த்தான். எதுவும் நகரவில்லை. மாறாக அடுத்த நாளிலிருந்து உங்களுக்கெல்லாம் வேறு வேலை இல்லையா என்பது போல் அசோக்கையும் பார்த்து முறைக்க ஆரம்பித்திருந்தாள்.

இப்படித் தன் பின்னே ஒருவன் பைத்தியம் பிடிக்காத குறையாய் சுற்றுகிறானே பாவம் என்று அவளும் கொஞ்சமாவது தயை காட்டியிருக்கலாம். ஊஹூம். வசந்தனால் பெட்ரோல் பங்க்காரர்கள் பலனடைந்ததுதான் மிச்சம். அவளை அத்தனை நினைந்துருகி மருகிக் காதலித்த வசந்தன் இப்போது போய்ச் சேர்ந்துவிட்டான் என்பது அவளுக்குத் தெரியுமா?

வேகம் என்றால் அப்படியொரு வேகம்! வசந்தன் எதற்கு அப்படி இறக்கை கட்டிக்கொண்டு பறந்தான்? எதைச் சாதிக்க? பைக்கில் ஏறி உட்கார்ந்துவிட்டானென்றால் அவனை யாரும் கட்டுப்படுத்தமுடியாது. முன் சக்கரத்தைத் தூக்கி ஓட்டுவது, ‘க்ரீச்’ என்று டயர் தேய படுத்தவாக்கில் அரைவட்டம் இடுவது, பைக் ஓடும்போதே இரண்டு கையையும் விட்டு காலரை பின்னுக்கு இழுத்து விட்டுக்கொண்டு நிதானமாய் சிகரெட் பற்ற வைப்பது, நெடுஞ்சாலையில் அசுர வேகத்தில் லாரிகளுக்கிடையே புகுந்து பறப்பது என பயமறியாத இளங்கன்றின் துணிச்சல். அப்பாவிடமும் நண்பர்களிடமும் வாங்கிக் கட்டிக்கொண்டே பைக்கில் அவன் செய்கிற சர்க்கஸ்-கள் எல்லோருக்கும் மிகப் பிரசித்தம். எங்கேயாவது போகலாம் வருகிறாயா என்று அவன் கூப்பிட்டால் அசோக் உடனே ஜகா வாங்கி விடுவான். ஒரு கிலோ மீட்டர் தாண்டுவதற்குள்ளாகவே குடல் வெளியே வந்து விழும் அளவுக்கு ஒரு ரோலர் கோஸ்டர் பிரயாணத்தை பைக்கிலேயே நிகழ்த்திக் காட்டிவிடுவான் வசந்தன். உயிரைப் பற்றி பயமில்லாதவர்கள் மட்டுமே அவன் பைக்கின் பில்லியனில் ஏற முடியும்.

சுகந்தியை அவன் முதன் முதலாய்ப் பார்த்தபிறகு அவளைக் கவரும் பொருட்டு இந்த சர்க்கஸ்களை அதிகமாக்கவும் செய்தான். நண்பர்கள் கூட “ஒரு நாளைப் போல ஒரு நாள் இருக்காது. அப்புறம் விபரீதமாகிவிடும்” என்று எத்தனையோ தடவை சொல்லியிருக்கிறார்கள். நிறைய எச்சரிக்கைகள். நிறைய புத்திமதிகள். நிறைய கோரிக்கைகள்.

எதையும் காது கொடுத்துக் கேட்டால்தானே? வழக்கம்போல எல்லாவற்றிற்கும் மந்தகாசமாய்ச் சிரிப்பான். ராஸ்கல். எல்லாமே விரயமாகிவிட்டது.

அசோக் வசந்தனைச் சந்தித்த கடைசி நாளை யோசித்துப் பார்த்தான். முன்னொரு காலத்தில் இருவரும் நெருங்கிய நண்பர்களாய் இருந்தவர்கள்தான். ஒன்றாய் சுற்றி, உரையாடி சந்தோஷமாகக் கழிந்த நாட்கள். ஒருநாள் ஏதோ விஷயத்தில் ஏற்பட்ட சின்ன விவாதம் பெரிய பிரச்சனையாய் விஸ்வரூபம் கொண்டுவிட்டது. வார்த்தைகள் தடித்தன. இருவருக்குமிடையே இனம்புரியா வன்மம் ஒன்று திடுக்கென முளைவிட்டது. சட்டென்று ஒரு கணத்தில் பிரிந்துவிட்டார்கள். நண்பர்களின் சமரச முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்தன. இருவரும் சமாதானமாகாமல் விரோதம் தொடர்ந்தது.

அதற்கப்புறம் இந்த ஏழெட்டு வருடங்களில் விலகல் அதிகமாகி, இருவருக்குமான இடைவெளியின் நீளம் அதிகமாகிவிட்டது. எங்கேயாவது எதேச்சையாக எதிர்ப்பட நேரிட்டால் முறைத்துக்கொண்டு நகர்ந்தார்கள். இருவருக்கும் பொதுவான நண்பர்களும் வேறு திக்குகளில் வாழ்க்கையைத் துரத்திப் பிரிந்துபோனார்கள், அசோக்கும் கோயமுத்தூர் வந்துவிட்டான்.

அதற்கப்புறம் யாருக்கும் யாருடனும் சுத்தமாய் தொடர்பில்லாமல் எந்தத் தகவல் பரிமாற்றங்களும் இல்லாமல் வருடங்கள் உருண்டன. இப்போது ரொம்ப நாள் கழித்து நடராஜ் மூலமாய் வசந்தனைப் பற்றிக் கேள்விப் படுவது இப்படியொரு சோகச் செய்தியாகத்தான் இருக்கவேண்டுமா?

பாறைகளுக்குக் கீழே நீர் போல வசந்தனின்பால் முன்னர் ஏற்பட்டிருந்த விரோதத்துக்கும் அடியில் எங்கோ ஒரு மூலையில் சேமிக்கப்பட்டிருந்த பழைய நட்பின் ஒரு துளி கண்ணீராய் வழிந்தது. அசோக் துடைத்துக் கொண்டான். முன்னாள் ஆனாலும் இந்நாள் ஆனாலும் நண்பன்தானே.

அசோக்கிற்கு திடீரென்று தன்மேலேயே வெறுப்பாக இருந்தது. அவனுக்கும் வசந்தனுக்குமிடையே ஏற்பட்ட பழைய மனத்தாங்கலை பின்னோக்கி ஓட்டிப்பார்த்தான். அவன்மீது ஏன் அப்படி ஒரு வெறுப்பை உமிழ்ந்தேன்? கடைசியாய் பிரியும்போது ஏற்பட்ட வாக்குவாதம் அப்படியொன்றும் வெட்டு குத்துப் பகையில் முடிந்திருக்கவில்லை. ஒரு காரசாரமான பேச்சு. எதன் பொருட்டு என்பதுகூட இப்போது சரியாக ஞாபகம் வரவில்லை. ஆனால் இரண்டு பேரும் ரொம்பவே ஆத்திரமாகப் பேசிக்கொண்டார்கள் என்பது மட்டும் ஞாபகமிருக்கிறது. சூடான அந்தச் சூழ்நிலையில் உதிர்ந்த வார்த்தைகள் ஒரு நல்ல நட்பைச் சிதைத்துவிட்டதா?

அந்த வயதின் பக்குவமின்மைக்கும், ஈகோவுக்கும் இடையில் ஊஞ்சலாடின முடிவில் வசந்தனை முற்றிலும் புறக்கணித்துவிடுவது என்கிற முடிவே அசோக்கிற்குப் பிடித்தமானதாக இருந்தது. அவனை அதற்கப்புறம் பார்க்காமல், அவனைப்பற்றி விசாரிக்காமல், அவனிருக்கிற திசையில் தலைவைத்துப் படுக்காமல் போகிற அளவுக்கு அந்தப் பிரச்சனையும் அசோக்கின் பிடிவாதமும் அன்றைய தினத்தில் விஸ்வரூபம் எடுத்திருந்தது. இப்போது யோசிக்கும் போது அந்தச் சம்பவம் சிறு பிள்ளைத்தனமான ஒரு விஷயமாகவே தோன்றியது அவனுக்கு.

இப்போது அதைப் பற்றி யோசித்து ஒரு புண்ணியமுமில்லை. எட்டு வருடங்களுக்கு முன் வாழ்க்கையிலிருந்து மறைந்துபோனவன் இப்போது உலகத்தைவிட்டே போயும்விட்டான். சென்றதினி மீளாது. இப்போதைக்கு முடிகிற ஒரே விஷயம் வசந்தனின் வீட்டைத் தேடிப்போய் அவனது பெற்றோர்களுக்கு தன்னாலான ஆறுதலை அளித்தல். அவன் புகைப்படத்துக்கு முன் நின்று காலதாமதமான ஒரு மௌனாஞ்சலி.

சாயங்காலம் வசந்தனின் வீட்டுக்குப் போகத் தீர்மானித்துக் கிளம்பினான். அவனுடைய வீடு பொள்ளாச்சி மகாலிங்கபுரத்தில் இருந்தது. கோவையில் பஸ் ஏறி பொள்ளாச்சி போகிற வழியில் அவன் பழைய நினைவுகளை அசை போட்டுக்கொண்டே வந்தான் அசோக். அவனோடு சுற்றின இடங்கள். அவனோடு பார்த்த படங்கள். அவனோடு சேர்ந்து செய்த ரகளைகள். இப்படியாக ஒவ்வொன்றைப் பற்றி நினைக்கும்போது துக்கத்தின் அளவு மில்லிகிராம்களாகக் கூடிக் கூடி விழிவிளிம்பில் அணை கட்டி நின்றது. நிச்சயமாகப் பேரிழப்புதான்.

அங்கே போனபிறகு அவன் பெற்றோர்களுடன் என்ன பேசுவது கேட்பது என்று புரியவில்லை. எப்போதுமே அசோக்கிற்கு இது போன்ற துக்க செய்தியை விசாரிக்க நேர்கையில் ஒருவித அவஸ்தை சூழ்ந்துகொள்ளும். எப்படி ஆரம்பிப்பது, என்ன கேட்பது, என்ன சொல்லி ஆறுதலளிப்பது என்று தெரியாமல் விழிப்பான். அல்லது ஒரேயடியாய் மௌனமாக உட்கார்ந்து விடுவான்.

எப்போதும் அவன் வீட்டுக்குப் போகும்போது “வாடா அசோக்கு..” என்று உரிமையாய் அழைப்பார் வசந்தனின் அப்பா. இத்தனை வருடங்களாய் ஏன் வீட்டுக்கு வரவில்லை? வசந்தனோடு உனக்கு என்ன பிரச்சனை என்று கேட்டால் அதற்கும் பதில் சொல்லத்தயாராக வேண்டும். வசந்தனுடனான பிரச்சனையில் அவரையும் சேர்த்தல்லவா நிராகரித்திருக்கிறோம். ச்சே.. ரொம்ப நல்ல மனிதர்.

மகாலிங்கபுரத்தில் பஸ்ஸை விட்டு இறங்கி நடந்து வசந்தனின் வீடிருந்த தெருவை அடைந்தான். அவன் வீட்டை நெருங்கும்போது தூரத்திலிருந்தே பிரதானமான அந்த பச்சை பெயிண்ட் அடித்த கேட் தெரிந்தது. கேட்டில் படந்த பேப்பர் ரோஸ் பூக்கள். மரங்கள். எத்தனை நாளாயிற்று இங்கே வந்து! கேட்டை நெருங்க நெருங்க அசோக்கின் உடம்பில் ஒரு மாதிரி பதற்றமும் பயமும் கலந்ததாக ஒரு உணர்வு மிதந்தது. காலில் கட்டப்பட்டிருக்கும் பெரிய இரும்புச் சங்கிலியை இழுத்துக்கொண்டு நடப்பதுபோல நடந்தான்.

அசோக்கும் வசந்தனும் எப்போதும் உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கும் பெரிய வாசல் திண்ணையும், படிகளும் தெரிந்தன.

அருகில் நெருங்கிய போது திண்ணையில் உட்கார்ந்து ஒரு உருவம் பேப்பர் படித்துக்கொண்டிருந்தது தெரிந்தது. வாசலில் நிழலாடுவதைப் பார்த்துத் திண்ணை உருவம் கையிலிருந்த பேப்பரைக் கவிழ்த்துவிட்டுத் திரும்பிப்பார்த்தது.

அசோக் திடுக்கிட்டு நின்றான். ஒரு பெரிய அதிர்வலை அவனைச் சுற்றி சுழற்றியடித்துவிட்டு அடங்கியது. வசந்தன்??

இறந்துபோனதாக சொல்லப்பட்ட ஒருவன் திண்ணையில் சாவகாசமாகப் பேப்பர் படித்துக்கொண்டிருக்கிற காட்சியில் உறைந்து போய் நின்றான் அசோக். வலது கன்னத்தில் மிகப்பெரிய தழும்புடன் லேசாய் விகாரமாயிருந்த முகம்.

வசந்தன் சாகவில்லையா? அப்படியென்றால் அவன் விபத்தில் இறந்துவிட்டதாக வந்த தகவல்? எப்படி என்ன நிகழ்ந்தது? எங்கே தப்பு? ஒரு சில நொடிகள் மாபெரும் குழப்பம் சூழ அவனுக்கு பரபரவென்று ஆகிவிட்டது. வீட்டை நெருங்கின கால்கள் தயங்கியது. அசோக் நெஞ்சுக்குள் ஏதோ ஒரு அழுத்தத்தை உணர்ந்தான். இப்போது என்ன பண்ணுவது?

அசோக்கைப் அங்கே எதிர்பார்த்திராத மாதிரி வசந்ந்தன் முகத்திலும் ஒரு பெரிய திடுக்கிடல் நிகழ்ந்ததை அசோக் கவனித்தான். அது ஒரு சில நொடிகள்தான். அடுத்தநொடியில் வெறுப்பும் விரோதமும் லேசாய் கிளர்ந்தவிதமாய் அவன் முகம் மாறியது. துளைத்து எடுப்பது போல ஒரு நேர்ப்பார்வை பார்த்தான்.

அசோக்கிற்கு காலம் உறைந்து நின்றது போல் தோன்றியது. எல்லாமே சட்டென கலைந்து சூழ்நிலை வேறுமாதிரி உருவெடுத்துவிட்டதை உணர்ந்தான். அசோக்கும் வசந்தனை ஏறிட்டான். ”ராஸ்கல்.. என்று மனதில் கறுவலாய் ஒரு வரி ஓடியது.

இருவரின் உக்கிரமான முறைப்புப் பார்வைகள் ஒன்றோடொன்று மோதிக் கொண்டன. உறைந்த காலம் இயக்கம் பெற்றது. தயங்கின கால்கள் வேகமெடுத்து உடனே அங்கிருந்து நகர்ந்துவிடவேண்டுமென்று தோன்றியது அசோக்கிற்கு.

இருவரும் ஒரே நேரத்தில் முகத்தைத் திருப்பிக்கொள்ள, அசோக் வேகமாய் வசந்தனைக் கடந்து நடக்கத் தொடங்கினான்.

– ஃபெமினா தமிழ் – ஜூன் 1, 2012 

தொடர்புடைய சிறுகதைகள்
நிரஞ்சன் அவன் மொபைலை எடுத்து அந்த எஸ்.எம்.எஸ்ஸை மறுபடி திறந்து பார்த்தான். "உன்னை உடனே பாக்கணும் போல இருக்கு" என்றொரு வாசகம். அதற்கடுத்த எஸ்.எம்.எஸ்-ஸை படித்தான். அதே வாசகம். அடுத்ததும் அதற்கடுத்ததும் அதே. இதே மாதிரி பதினைந்து இருபது. எல்லாம் வேறு ...
மேலும் கதையை படிக்க...
அம்புஜம் வேலைக்கு வந்தால் தன்னை வந்து பார்க்குமாறு பரமேஷ் வீட்டில் சொல்லிவிட்டு வந்தான் ப்ரசன்னா. அவள் வந்தால் இரண்டில் ஒன்று கேட்டுவிட வேண்டும் என்று நினைத்துக்கொண்டான். அவள் மறுபடி வேலைக்கு வரமுடியுமா முடியாதா?. மஞ்சு இருக்கிற நிலைமைக்கு இனியும் அவளால் எந்த ...
மேலும் கதையை படிக்க...
இன்னும் ஒரு தெரு திரும்பினால் குழந்தையைப் பார்த்துவிடலாம். ஆனால் ஏதோ தயக்கம், லேசான பயம் எல்லாம் சேர்ந்து கால்கள் தானாக ப்ரேக்கை அழுத்தி நிறுத்தின. பைக்கை ஓரமாக நிறுத்தினான். அவசரப்படவேண்டாம். யோசிக்காமல் எதையாவது செய்தால் பிறகு அவமானம் மட்டுமே மிஞ்சும். ராஜூவை ...
மேலும் கதையை படிக்க...
அந்தப் பெண் என்னைச் சைகை காட்டிக் கூப்பிட்டமாதிரி இருந்தது. என்னைத்தானா? நான் திரும்பி தோட்டத்தில் ஷாமியானாவுக்குக் கீழே பாலிவினைல் சேர்களில் தனித் தனிக் குழுக்களாய் அமர்ந்து அரட்டையடித்துக்கொண்டிருப்பவர்களைப் பார்த்தேன். என்னைத் தாண்டி அவர்களில் யாரையாவதைத்தான் அவள் கூப்பிட்டாளா? அவள் சைகையை அவர்கள் ...
மேலும் கதையை படிக்க...
பல வருடம் கழித்து ஆதியை நேற்று பார்க்க நேரிட்டது. ஒருவகையில் அது கொஞ்சமும் எதிர்பாராத சந்திப்புதான். பார்த்த கணத்தில் அருணாவுக்கு காலடியில் பூமி நழுவியது. முகத்தில் லேசாய் கலவரம் விரிந்தது. தியாகராயா ரோட்டில் எச்.எஸ்.பி.ஸி ஏடிஎம்-ல் பணம் எடுக்க நின்றிருந்தபோது “ஹாய்” ...
மேலும் கதையை படிக்க...
“ஆகாஷை மறுபடி எங்கேயாவது மீட் பண்ணியா?” என்றாள் பிரமிளா. அப்பாடா! ஒரு வழியாகக் கேட்டுவிட்டாள். இந்தக் கேள்வியை அவள் நிச்சயம் கேட்காமல் இருக்க மாட்டாள் என்று அவனுக்கு ஏதோ ஒரு உள்ளுணர்வு சொல்லிக்கொண்டேயிருந்தது. இதோ கேட்டேவிட்டாள்! அதைக் கேட்கும்போது அவள் குரலில் ஏதேனும் ...
மேலும் கதையை படிக்க...
அவனை எங்கேயோ பார்த்தது போலிருந்தது. அந்த விடைத்த மூக்கு. நடுவகிடு எடுத்து முன் நெற்றியில் புரளும் முடி. அடுத்தவரை கடுகளவும் கவனியாமல் எங்கோ வெறித்த யோசனைப் பார்வை. ஆமாம். இதே ஆளை நிச்சயம் எங்கேயோ பார்த்திருக்கிறேன்.அவன் அந்த ஹோட்டலில் எனக்கு அடுத்த ...
மேலும் கதையை படிக்க...
மணி செண்ட்ரலில் ரயில் இறங்கி ஆட்டோ பிடித்து அபிராமபுரத்திலுள்ள கேசவனின் வீட்டுக்கு போய் இறங்கினபோது லேசாய் ஆச்சரியப்பட்டான். கேசவனின் வீடு காலி செய்யப்படுகிற முகாந்திரமாய் வீடு நிறைய மூட்டை முடிச்சுகள். அட்டைப் பெட்டிகள். அடுக்கத் தயாராயிருந்த சாமான்கள். குறுக்கும் நெடுக்குமாய் ஒழுங்கில்லாமல் ...
மேலும் கதையை படிக்க...
இரவு முழுக்க இடைவிடாது பெய்த மழை விடிந்த பின்னும் இன்னும் நிற்கவில்லை. அதன் இடைவிடாத சலசலப்பு ஹாலின் ஜன்னல் வழியே தோட்டத்தில் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருந்தது. அறைக்குள் தட்பவெப்பம் மாறி லேசான குளிர். ராஜனுக்கு சூடாக ஒரு ஒரு கப் காஃபி குடிக்கவேண்டும் ...
மேலும் கதையை படிக்க...
தனி வலி
பேறு
தொடர்பு எல்லைக்கு வெளியே
விரல்கள்
அழகிய தீயே!
நீரோட்டம்
மறக்க முடியாதவன்
புலம்
மழைக்காதல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)