இரவல் தொட்டில்

 

இன்னும் அன்னம் வரவில்லை. வாசல் இரும்புக் கிராதியின் சத்தம் கேட்கும்போது எல்லாம் விசுவம் எட்டிப் பார்த்து ஏமாந்தான். அப்பா இடை ரேழியில் இருந்து செருமினார்…

”இன்னும் அவ வரல்லே போல இருக்கே?”

”வந்துடுவா.”

அதற்கு மேலும் அங்கே நிற்கச் சக்தி அற்றவனாகக் கூடத்துக்கு வந்தான். ஊஞ்சல் பலகையில் ஒரு காலை மடித்து, ஒரு காலைத் தொங்கவிட்டபடி, குறுக்குவாட்டில் அமர்ந்து, ஒற்றையாய் பல்லாங்குழி ஆடிக்கொண்டு இருந்த அம்மா இவனை நிமிர்ந்து பார்த்து, ”ஒரே ஊர்லேயே பிறந்த வீடு இருந்தா, இதான் தொந்தரவு! போதாக்குறைக்கு இவளுக்கு ஒரே தெருவுலேயே இருக்கு. ஒரு நாளைக்கு ஏழெட்டு தரம் ‘பொசுக் பொசுக்’குனு ஓடிடறாடா.”

”……”

”சொல்றேனேன்னு தப்பா எடுத்துக்காதே! நீ அவளுக்கு ரொம்பத்தான் இடம் கொடுக்கறே. அவதான் ஓடி ஓடிப் போறான்னா, பெத்தவ புத்தி சொல்ல வேண்டாமா… வயசான ஜீவன்கள் ரெண்டு வீட்டுல இருக்கறப்ப, இப்படி ஓடி வர்றது தப்புன்னு?”

விசுவம் இதற்குப் பதில் சொல்லவில்லை. துண்டை எடுத்துத் தோளில் போட்டுக்கொண்டு கிணற்றடிக்குப் போய்விட்டான்.

”உக்கும்…” – அம்மாவின் சலிப்பு மிகுந்த முக்கல், அவன் முதுகுக்குப் பின்னாலேயே தொடர்ந்தது.

‘பெண்டாட்டிய அடக்கி ஆளத் தெரியாதவன்…’ – இப்படி அம்மாவும், ‘பகவத் சேவைக்காகவே பிறந்தவன் மனசை நீ வேற ரணமாக்காதே’ – இப் படி அப்பாவும், அவனும் அன்னமும் இல்லாத நேரங்களில் பேசிக்கொள்வது அவனுக்குத் தெரியும்.

அவளை நினைக்கும்போதே, சமீப காலமாக இனம் தெரியாத பயம் அவன் நெஞ்சைக் கவ்வுகிறது.

முந்தா நாள் கல்யாணசுந்தரம் – அன்னத்தின் அண்ணன் சென்னையில் இருந்து வந்திருக்கிறான். ஒரு காலத்தில் இதே விசுவத்தோடு, இதே வீட்டுக் கூடத்தில் கட்டிப்புரண்டு விளையாடியவன்தான். இன்று, அவன் சென்னையில் பிரபல டாக்டர். அவன் மனைவி வசுமதியும் டாக்டர். தங்கையை விசுவத்துக்குக் கட்டிக்கொடுக்கும் முன் எல்லாம் வாடா, போடாதான். இப்போது ‘டா’ இல்லை. முன்பு இருந்த நட்பும் இல்லையோ?!

பை நிறையப் பழங்களும் பூவும் வாங்கி வந்து தங்கையிடம் கொடுத்தவன், விசுவத்தை அருகில் இருந்த அந்தப் பிரசித்தி பெற்ற கோயிலில்தான் சந்தித்தான். வீட்டில் வைத்துப் பேச முடியாது. எப்போதும் விசுவத்தின் அப்பா, இல்லாவிட்டால் அம்மாவின் குறுக்கீடு.

”விசு… எப்படி இருக்கே?”

”உம்… எனக்கென்ன… சுவாமி படியளக்கிறார்.”

”ஆனா, அன்னத்துக்கு மட்டும் அந்த சுவாமி ஏன் பாராமுகமாவே இருக்கார் விசு? அவ செஞ்ச தப்பு என்ன?”

”அதெல்லாம் நம்ம கையில இல்லே கல்யாணம். எங்க அப்பா-அம்மாவுக்கே நான் ஏழு வருஷம் கழிச்சுத்தான் பிறந்தேன்.”

”இங்கே பத்து வருஷமாயிடுத்து விசு. ஒரு தடவை அன்னத்தை அழைச்சிட்டு சென்னை வாயேன். நம்ம வசுமதிகிட்ட எத்தனை பொண்ணுங்க குழந்தை இல்லாம வந்துட்டு, கை நிறையப் பெத்து எடுத் துட்டுப் போறா, தெரியுமா?”

கல்யாணத்தின் குரலில் அழுகை எட்டிப்பார்த்தது. இன்று நேற்றில்லை. இது போல எத்தனை தடவை இந்தப் பத்து வருடங்களில் அவன், தன் நண்பனைக் கெஞ்சியிருக்கிறான்? அசையவில்லையே விசுவம்.

கல்யாணசுந்தரத்தின் தந்தை வைத்தியநாத கனபாடிகளிடம் வேதம் பயின்றவன்தான் விசுவம். நினைவு தெரிந்த நாட்களில் இருந்து, கல்யாணத்துடன் சேர்ந்து அமர்ந்து, அன்னத்திடம் சீண்டி விளையா டிக்கொண்டே, கல்யாணத்தின் தாயார் கையால் தயிர் சாதமும் மாவடுவும் சாப்பிட்டவன். கல்யாணம் இவர்களுடன் வேதம் படித்தாலும், பள்ளிக்கூடத் திலும் முதல் மார்க். அவனைப் பள்ளிக்கூடமும் உதவித்தொகை கொடுத்துப் படிக்கவைத்தது.

விசுவத்தையும் நிறையப் படிக்கவைக்க அவன் தந்தை ஆசைப்பட்டாலும், படிப்பு வரவில்லை. ஹைஸ்கூல் படிப்பை முடிக்கும்போதே வைத்தியநாத னிடம் பயின்ற சம்ஸ்கிருதமும், வேதமும், உபநிஷத் தும் அவனைக் கோயில் கருவறைக்குள் கொண்டு போய் நிறுத்தின.

கல்யாணத்துக்கு மட்டும் குறை; தன் தங்கையைப் பெரிய படிப்பு படித்தவனுக்குக் கொடுக்கவில்லை என்று. வைத்தியநாதன் தன் பெண், தன் கண் எதிரி லேயே வாழ்க்கைப்பட்டு இருப்பதுதான் சந்தோஷம் என்றார். தவிர, கோயிலில் விசுவத்துக்குக் கிடைக்கிற மரியாதை கொஞ்சமா நஞ்சமா? அன்னத்தைப் பொறுத்தமட்டில், விசுவத்தை அப்படியே மனசுக்குள் வரித்துவிட்டாள் என்றே சொல்ல வேண்டும்.

ஏன், திருமணமான பிறகும்கூட விசுவம் மாம னார் வீட்டுத் திண்ணையில் வந்து உட்காருவதும், அங்கே வேத பாடசாலையில் விடப்பட்டுள்ள குழந்தைகளின் வெற்று முதுகைத் தடவி, மந்தி ரங்களைத் திருத்தித் தருவதும்…

”கல் தோசையும் எள்ளுப் பொடியும் கொண்டு வரவா..?” – தான் பார்த்து வளர்ந்த பிள்ளையானாலும் இன்றைக்கு மாப்பிள்ளை என்கிற ஸ்தானத்துக்கு மதிப்புக் கொடுத்து, பவ்யமாக அன்னத்தின் தாய் கேட்பதும்…

சுமார் ஒரு வருட காலம் வரை எல்லாமே நல்ல படியாகத்தானே நடந்துகொண்டு இருந்தது!

இரண்டு வீட்டிலும் அன்னத்தின் வயிறு ஒரு கருவைச் சுமக்கவில்லையே எனப் பேசத் தொடங் கியபோதுதான்…

அன்னம் 23 நாட்களுக்கு ஒருமுறை… ஐந்து நாட் கள் பிறந்த வீட்டுக்குப் போய்த் திரும்பும்போது எல்லாம் விசுவத்தின் தாய், தான் பிள்ளை பெறுவ தற்காக எடுத்த நோன்பு, விரதங்களை எல்லாம் வரிசைப்படுத்துவாள்…

”புத்துக்குப் பால் ஊத்து.”

”சந்தான கோபாலகிருஷ்ண யாகம் பண்ணு.”

”கர்ப்பரக்ஷ£ம்பிகை கோயிலுக்குப் போ…”

”சனிக்கிழமை விரதம் இரு…”

எல்லாம்தான் செய்தாள் அன்னம். ஆனால், விசுவம் ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி, அவளைவிட்டு விலகிப் படுப்பான்.

ஒருநாள் நைந்த சிரிப்புடன் கணவனிடம் கூறியே விட்டாள், ”உங்க அம்மா எனக்கு ஆயிரம் விரதம் சொல்றாரே தவிர, உங்களோட நிலைமை என்னவா இருக்கும்னு யோசிக்க மாட்டேங்கறாரே?”

சிரித்தபடிதான் சொன்னாள். அன்று முழுக்கக் கோயிலிலேயே உட்கார்ந்துவிட்டான். ”அவன் யோகியாய்ப் போயிருக்க வேண்டியவன். இழுத்துப் பிடிச்சுக் கல்யாணம் செஞ்சுவெச்சது நம்ம தப்பு!” – விசுவத்தின் தந்தை, சம்பந்தியிடம் கூறி வருத்தப்பட் டாராம். அவர் தன் மகளிடம் இதைச் சொல்லிவிட்டு மெதுவாகக் கேட்டார்… ”ஏம்மா… நீ சந்தோஷமா இருக்கியாம்மா?”

”கல்யாணமாகி பத்து வருஷமாகிப்போச்சு. இப்ப என்ன கேள்வி?”

இதற்குப் பின்தான் கல்யாணம், மனைவி வசுமதி யுடன் கோயிலுக்கே வந்து, அந்த விஷயத்தைக் கூறினான்.

”விசு, நாங்க ஒரு முடிவோடு வந்திருக்கோம். அவளை டெஸ்ட் பண்ணிப் பார்த்ததுல, நார்மலா இருக்கா. நீயும் சிகிச்சைக்குச் சம்மதிச்சா, உன்னால உன் வம்சம் வளரும். இல்லைன்னா…” – அவன் நிறுத்த, விசுவம் நிமிர்ந்து பார்த்தான்.

ஆனால், வசுமதி கூறினாள்… ”நீங்க சம்மதிக்க லைன்னாலும், அவளுக்கு ஸ்பெர்ம் பேங்க் மூலமா வேற சந்ததியை உற்பத்தி பண்ண முடியும். அட்லீஸ்ட், தனக்கு ஒரு குழந்தை இல்லையேங்கிற அவளோட தாபமாவது தீரும் இல்லையா? இந்த விஷயம் நாமளா சொல்லலைன்னா வெளில யாருக்கும்…”

மேற்கொண்டு கேட்கப் பிடிக்காமல், ‘விடுவிடு’ வெனப் புறப்பட்டுவிட்டான் விசுவம். முகம் சிவந்து வியர்வையில், தேகம் தெப்பமாய் நனைய…

கல்யாணத்தின் மீது ஆத்திரமும் எரிச்சலும் மண்டிக்கொண்டு வந்தது. ‘இவன் என்ன பெரிய மேதாவி மாதிரிப் பேசறான்? என்ன எழவையோ கொண்டுவந்து, அவ வயித்துல வெச்சுட்டா, அதுக்கு நான் அப்பனாயிட முடியுமா? இனிமே அவன் சக வாசமே கூடாது. அன்னத்தையும் அங்கே அனுப்பக் கூடாது. அம்மா சொல்ற மாதிரி, அவளுக்கு இடம் கொடுத்தது தப்பாப்போச்சு!’

மனம் உலைக்களனாகக் கொதித்தபோது ‘குபுக் குபுக்’கெனக் கொப்பளித்த வேகம் எல்லாம் அடங்கித் தணிந்தபோது…

எல்லாம் சரிதான்; அவளை எதன் அடிப்படையில் பிறந்த வீட்டுக்கே போகக் கூடாது என்று கட்டுப் படுத்த முடியும் என்கிற கேள்வி எழுந்தது.

நியாயமான கேள்வி… எதன் அடிப்படையில்..? ‘நீ என்ன, அவளுடன் கொஞ்சிக் குலவினாயா? உன் வம்ச வித்தைக் கொடுத்தாயா? அல்லது அவள் பெற்றுப் போட்டதைத் தோளில் தூக்கிக்கொண்டு அலைந்தாயா?’ – கேள்விகள் நெஞ்சுக் குழியில் அடைக்க… காலையில் போனவள் இன்னும் வராத காரணத்தைக்கூடக் கேட்கப் பயந்தவனாக, கோயிலுக்கு ஓடினான்.

பிரதோஷம்… இவன் வரவுக்காக, சுவாமியும் அம்பாளும் ரிஷப வாகனத்தில் காத்துஇருந்தனர்.

கண்களில் நீர் முட்டியது அவனுக்கு.

‘இன்றைக்கு எல்லாருடைய குறைகளையும் கேட்டுத் தீர்த்துவைக்கிறீர்களே… என் மனச் சஞ்சலத்துக்கு மருந்து தாருங்களேன் ஈசா..!”

இரவு -

கோயில் நடை சார்த்திய பிறகும், குளத்தின் படிக்கட்டில் கொஞ்ச நேரம் உட்கார்ந்துவிட்டு, ‘அன்னம் எந்த நிலையில் திரும்பி வந்திருப் பாள்… வந்தாளா, வரவே இல்லையா?’ என மனசு நிறைய நெருஞ்சிகளைச் சுமந்தபடி வீட்டினுள் நுழைய…

”நமக்கு இதெல்லாம் அவசியமா?” – அப்பா குண்டைத் தூக்கிப் போட்டார்.

”உள்ளே போய்ப் பாரு… தலைவலி தாங்கலே!”

ஊஞ்சலில் இருந்த அம்மா, நீலகிரித் தைல நெடியுடனேயே கூறினாள். முகத்தில் கடுமை யும் சிடுசிடுப்பும்!

முற்றத்தில் கால் அலம்பி, இரண்டாம் கட்டுக்குள் நுழைந்தவனைப் பேச்சுக் குரல் தடுத்தது.

”அன்னம்மா… போதும்! வயிறு ரொம்பிடுத்து!”

”பொய் சொல்லாதே! அப்புறம் பாதி ராத்திரியில பசிக்கும். எங்கே, வயித்தைக் காட்டு! இதோ இருக்கேடா, இன்னும் கொஞ்சூண்டு இடம்.”

அன்னம் தன் எதிரில் உழக்கு உழக்காய் அமர்ந்திருந்த நாலு பிள்ளைகளில் ஒன்றின் சின்னப் பறங்கிக் கொட்டைத் தொப்பையை அமுக்கிப் பார்க்க… அது உடம்பை வளைத்து, நெளித்து ‘கெக் கெக்’ எனச் சிரிக்க…

விசுவத்தைப் பார்த்ததும் சிரிப்பு போன இடம் தெரியவில்லை. ஆனால், அன்னத்தின் முகத்தில் அது என்ன… அத்தனை மகிழ்ச்சி! கரண்டியும் கையுமாக சாட்சாத் அன்னபூரணி மாதிரி உட்கார்ந்திருந்தாள் அவள்.

”அம்மாவுக்கு முடியலே! அதனால இனிமே நானே சாப்பாடு போடறேன்னு இதுகளை இங்கே அழைச்சிட்டு வந்துட்டேன். கல்யாணம்கூடச் சொன்னான். உன் அகமுடையானுக்குப் பிடிக்காமப் போயிடப்போறதுன்னு. ‘அதெல்லாம் ஒண்ணும் சொல்ல மாட்டார். குழந்தைகள்னா அவருக்கு ரொம்பப் பிடிக்கும்னு…” – சொல்லிக்கொண்டே அவள் சிறுவர்களைப் பார்வையால் வருடினாள்.

”கைய அலம்பிட்டு, உடனே படுக்காதீங்கோ. ஜீரணமாகாது. நாளைக்கு தாத்தா என்ன சுலோகம் சொல்லச் சொல்லியிருக்கார்…”

”அன்னபூர்ணே ஸதலபூர்ணே

சங்கர ப்ராண வல்லபே…” – குழந்தைகளின் கூட்டுக் குரலில் தெறித்த உற்சாகம்…

அன்னம் அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில் சொன்னாள்… ”கல்யாணம் சொன்னான், ‘உன் புருஷனுக்கு இதுல இஷ்டமில்லை. கோவிச்சுக்கிட்டு பேசாம கிளம்பிப் போயிட்டான். இன்னிக்கு விஞ்ஞானம் எந்த அளவுக்கு வளர்ந்திருக்குன்னு அவனுக்குப் புரியலே’ன்னு சொல்லி வருத்தப்பட்டான்..”

”…….”

”நான் சொல்லிட்டேன்… ‘புருஷனும் பொண்டாட் டியும் விருப்பப்பட்டுப் பெத்துண்டாதான் குழந்தை’ன்னு. விஞ்ஞானத்தை நான் குத்தம் சொல்லலே! அதனால எத்தனையோ பட்ட மரங்கள் துளிர்த்திருக்கு. ஆனா, எங்கப்பா வீட்டுல நாலஞ்சு கறிவேப்பிலைக் குருத்துங்க சாப்பாட்டுக்கு வழியில்லாம… வேதம் கத்துண்டா சாதம் கிடைக்கும்கிற நம்பிக்கையில தங்கிப் படிக்கிறதுகள்…”

”…….”

”வர வர வேதம் கத்துக்கவும் அதிகமா யாரும் வர்றதில்லே! போற போக்கைப் பார்த்தா வேதமும் அநாதையாயிடுமோன்னு அப்பா பயப்படறார். அதான்… சாதம் போடற சந்தோஷம் எனக்கு; வேதம் சொல்லித் தர்ற சந்தோஷம் அப்பாவுக்கு. உங்களுக்கு இதுல ஒண்ணும்…”

விசுவத்தின் கண்களில் நீர் தளும்பியது. குழந்தைகள் பார்க்காதவாறு மெள்ள மனைவியின் கையை அழுந்தப் பிடித்தான்.

- நவம்பர், 2009 

தொடர்புடைய சிறுகதைகள்
விறைத்த சோறும் பக்கோடாத் தூளும்!
ஆட்டோவில் இருந்து முத்துலட்சுமி இறங்குவதைப் பார்த்துவிட்டு, வீட்டு வாசலில் மற்ற சிறுசுகளுடன் கதை பேசிக்கொண்டு இருந்த பாவாடை தாவணி உள்நோக்கி ஓடியது. உள்ளே போனவள், தன்னைப் பெற்றவளிடம் என்ன சொல்லிஇருப்பாள் என்று முத்துலட்சுமிக்குத் தெரியும். “அம்மா... ஓடிப் போன அத்தை வந்திருக்கா!” பட்டு, சங்கரிக்குப் ...
மேலும் கதையை படிக்க...
அன்று - கௌதம முனிவனின் குடிலில் பொழுது புலர்வதற்கு முன், ஏற்பட்ட விபத்து - இன்று பாகீரதிக்கு ஏற்பட்டுவிட்டது. நேரமும் காலமும் மனிதர்களும் தான் வேறு... வேறு... சம்பவம் ஒன்றுதான். அகலிகையைப் போல, தன் கணவனுக்கும் அந்நிய புருஷனுக்கும் வித்தியாசம் தெரியாத மனுஷி ...
மேலும் கதையை படிக்க...
வயிற்றில் நெருப்பை வைத்துக் கட்டினாற்போல இருக்கிறது ராமநாதனுக்கு. பசியில், வயிறு போடும் இரைச்சல்தான் காதில் கேட்கிறதே தவிர, கூடத்தில் ஒலிக்கும் மந்திர சத்தங்களல்ல… காலையில் ஒரு விழுங்கு காபி குடித்தது… மணி இரண்டாகப் போகிறது. இன்னமும் அவருக்குச் சாப்பாடு வரவில்லை. பெற்ற பிள்ளைகள் ...
மேலும் கதையை படிக்க...
அறிந்தும் அறியாமலும்…
‘‘ஏண்டா... ஏண்டா இப்படி, இங்கே வந்தும் அடிச்சுக்கறேள்... காசிக்கு வந்தும் கர்மம் தொலையலேடா! அஞ்சு வருஷம் முன்னாலே போனவர், என்னையும் அழைச்சிண்டு போயிருக்கப் படாதா..?” மாடி வெராந்தாவில் நின்றுகொண்டு அந்த அம்மாள் அழுதாள். அடுத்தாற்போல கரகரப்பான, ஆளுமை நிறைந்த ஆண் குரல் இரைந்தது... “இந்தா, ...
மேலும் கதையை படிக்க...
சுற்றுலாவுக்கும் எங்கள் குடும்பத்துக்கும் ரொம்ம்ம்ம்ப தூரம். இந்தக் காலம் போல அரையாண்டு விடுமுறைக்கு 'பிக்னிக்', கோடை விடுமுறைக்கு 'லாங் டூர்' என்று போவதெல்லாம் என்னவென்றே தெரியாது எங்களுக்கு! ஆக, டீன்--ஏஜில் எனக்கும் என் சகோதர, சகோதரிகளுக்கும் டூர் என்பது ஒரு அந்நிய ...
மேலும் கதையை படிக்க...
விறைத்த சோறும் பக்கோடாத் தூளும்!
சிறை
அக்னி
அறிந்தும் அறியாமலும்…
குற்றால டூரும்…கஷ்டமித்ர பந்துக்களும் !

இரவல் தொட்டில் மீது ஒரு கருத்து

  1. manjula says:

    வொந்டெர்புல் story

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)