இன்னும் எத்தனை நாள்…?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: July 31, 2013
பார்வையிட்டோர்: 12,829 
 

பெருமழையாக இல்லாவிட்டாலும் ஒரு மனிதனை தொப்பையாக நனைத்து விடும் அளவுக்கு மழை பெருந்தூறலாகத் தூறிக் கொண்டிருந்தது. அதனுடன் சேர்ந்து மெல்லிய ஈரக்காற்றும் வீசியதால் தேகத்தில் நடுக்கம் ஏற்படுத்தும் அளவுக்கு குளிர் காணப்பட்டது.

அந்திச் சூரியனைக் கண்டு சில நாட்கள் ஆகியிருந்தன. தொடர்ச்சியான மழை காரணமாக வீதியெங்கும் சேறும் சகதியும் சொத சொதவென்று காணப்பட்டது. மாலைப்பொழுது மறைந்து மலைப்பிரதேசத்தை இருள் மெதுமெதுவாக விழுங்கிக் கொண்டிருந்தது.

இவை எதனையும் பொருட்படுத்தாமல் வீரசேவுகப் பெருமாள் தன் வசிப்பிடமான பசுமலைத் தோட்டத்தின் பணிய கணக்கு பிரிவில் அமைந்திருந்த ஐந்தாம் நம்பர் லயத்தை நோக்கி விரைந்து கொண்டிருந்தான். சுற்றுப்புறத்தில் ஏற்பட்டிருந்த சலனங்களைப் பொருட்படுத்தாத அவனது போக்கும் தீர்மானமான நடையும் அவன் ஏதோ ஒரு இலக்கை நோக்கி நடக்கிறான் என்பதனை சொல்லாமல் சொல்லிக் காட்டின.

அவன் மிகத் தீவிரமான சிந்தனையுடன் நடந்தான். அவனுள் ஒரு பெரும் மாற்றம் நிகழ்ந்து கொண்டிருந்தது என்பது மாத்திரம் தெரிந்தது. அவன் பலமான யோசனையுடன் வீறு நடை போட்டான். கண்ணுக்கெட்டிய தூரம் வரை விரிந்து பரந்த பசுமைச் செழிப்புடன் நெடிதுயர்ந்து காணப்பட்ட அந்த மலை தொடர்கள் எத்தனை காலம் தான் நம்சோகக் கதைகளை கேட்டுக் கொண்டிருக்கும் பார்த்துக் கொண்டிருக்கும் விம்மிப்புடைத்து செழிப்புடன் கிளர்ந்தெழுந்திருந்த அப்பசுமலைக் குன்றுகளின் பள்ளத்தாக்குகளில் மெல்லாடைப் போல் படர்ந்திருந்த வெண்மேகக் கூட்டங்களை பெண்ணின் மார்பகத்துக்கு ஒப்பிட்டு இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் நாம் கவிதை பாடிக் கொண்டிருப்பது? நூற்றாண்டு காலமாக கொத்தடிமைகளாய் பரம்பரை பரம்பரையாக தம் வாழ்வை தேயிலைச் செடிகளுக்கு உரமாக்கி இந்நாட்டின் பொருளாதாரத்தை நிமிர்த்திப் பிடித்திருக்கும் நமக்கு இவர்கள் செய்த கைமாறுதான் என்ன?

கூலிகள் என்று பெயர்வைத்து எம்மைக்கூட்டி வந்து கங்காணிகளுக்கும் தேயிலைத் தோட்டச் சொந்தக்காரர்களுக்கும் கொத்தடிமைகளாக்கி எம்மை அடகு வைத்து விட்டு வெள்ளைக்காரன் சென்று அரை நூற்றாண்டு கடந்து விட்ட பின்பும் ஏன் இன்னமும் நமது அடிமைத்தனம் போகவில்லை? ஏன் இன்னமும் இந்த நாட்டில் எம்மை ளஇந்த நாட்டு மக்களாக மதிக்கிறார்கள் இல்லை? நாம் நமது சொந்தக் கரங்களால் நாயாக பேயாக உழைப்பதனைத் தவிர வேறென்ன தப்பைச் செய்து விட்டோமென்று நமக்கிந்த தண்டனை? இது தொடரக்கூடாது இதற்கொரு முடிவு வேண்டும்.

வீரசேவுகப் பெருமாள் அந்த மழையில் முற்றாக நனைந்திருந்தான். அவன் அணிந்திருந்த வெள்ளைச் சட்டையும் வெள்ளைச்சாரமும் நனைந்து அவன் உடம்புடன் ஒட்டிக் கொண்டிருந்தன. நன்கு செழித்து அடர்ந்து வளர்ந்திருந்த கரிய தலைமயிரின் வழியாக வழிந்த மழைநீர் மூக்கு நுனிவரை வந்து அதற்கு மேல்போக முடியாமல் பின்னர் சொட்டுச் சொட்டென கொட்டிக் கொண்டிருந்தது. அதனை வழித்து ஒதுக்கிவிட வேண்டும் என்று கூட கருதாமல் அவன் நடந்து கொண்டிருந்தான்.

அவன் சிந்தனைகள் அண்மைக்காலத்தில் அவன் வாழ்வைச் சுற்றி இடம்பெற்று வரும் மாற்றங்கள் தொடர்பில் மிகத் தீவிரமாக லயித்துப் போயிருந்தது. வீரசேவுகப் பெருமாளின் குடும்பத்தில் மொத்தம் ஒன்பது குழந்தைகள். ஆறு பெண்கள், மூன்று ஆண்கள் அதில் அவன் ஆறாவது. மூத்தவர்களில் நான்கு அக்காமாரும் ஒரு அண்ணனும், இளையவர்களில் ஒரு தம்பியும் இரண்டு தங்கைகளும் இருந்தனர். மூத்த அக்காமார்கள் இருவர் அவனுக்கு விவரம் தெரியாத காலத்திலேயே கலியாணம் முடித்து தூரத்து தோட்டங்களில் வாழ்ந்து வந்தனர். எப்போதாவது இருந்திருந்து தீபாவளி, பொங்கல், திருவிழாக்காலங்களில் வந்து ஓரிரு தினங்கள் இருந்து விட்டுப் போவார்கள்.

மற்ற இரண்டு அக்காமார் அதே தோட்டத்தில் கொழுந்து மலையில் வேலை செய்து வந்தனர். அம்மா தேயிலைத்தொழிற்சாலையில் வேலை அப்பா வீட்டிலேயே சிறிய அளவல் பெட்டிக்கடை நடத்திக் கொண்டிருந்தார். அண்ணன் க.பொ.த (சாஃத) வரை படித்து விட்டு அதன் பின் படிப்பைத் தொடர முடியாமல் கொழும்பில் கடையொன்றில் சிப்பந்தியாக தொழில் பார்க்கிறார்.

இவர்கள் அனைவரது உழைப்பிலுமே குடும்பம் நகர்ந்து கொண்டிருந்தது. இவர்களது தயவிலேயே சேவகப்பெருமாளும் இரண்டு தங்கைகளும் தம்பியும் அருகிலுள்ள நகரப் பாடசாலையில் கல்விகற்று வந்தனர். வீரசேவுகப் பெருமாள் க.பொ.த (உஃத) படித்து பல்கலைக்கழகம் செல்ல தகுதி பெற்றிருந்த போதும் வீட்டின் நிதி நிலைமை கருதி அவனால் மேற்படிப்பை தொடர முடியவில்லை.

தான் எப்படியாவது பல்கலைக்கழகம் சென்று ஒரு பட்டதாரியாக வந்துவிட வேண்டும் என்று வீட்டுக்குள்ளும் வெளியிலும் தொடர்ந்து போராட்டம் நடத்திப்பார்த்தான். இருந்தும் சரிப்பட்டு வரவில்லை. அவனது தந்தை அவனை எப்படியாவது கொழும்பில் ஒரு கடையில் சிப்பந்தி வேலைக்குச் சேர்த்து விட வேண்டும் என்பதிலேயே கண்ணும் கருத்துமாக இருந்தார்.

அவன் கொழும்புக்குச் சென்று நாலு காசு சம்பாதித்தால் தான் கொழுந்து மலையில் வேலை செய்யும் அவனது இரண்டு அக்காமாரையும் கலியாணம் கட்டிக் கொடுக்க முடியும் என்றும் இரண்டு தங்கைகளையும் தம்பியையுமாவது மேற்படிப்பு படிக்கச் செய்ய முடியும் என்றும் வாதிட்டார் அவர் தந்தை.

அவர் சொல்வதிலும் நியாயம் இருந்தது. அவன் அக்காமார் இப்போதே கலியாண வயதை தாண்டிக் கொண்டிருந்தனர். அவர்களை கலியாணம் செய்து கொடுத்து விட்டால் வீட்டு வருமானம் குறைந்து விடுமே என்பதற்காகவே அவர்களுக்கு அவன் தந்தை இன்னமும் திருமணம் பேசாமல் இருந்தார். அவர் சொல்வதில் நியாயம் இருந்தாலும் தனக்கு பல்கலைக்கழகம் செல்ல முடியாதிருந்தது தொடர்பில் அவன் வருத்தப்பட்டான்.

அவனுக்கு மனக்கிலேசம் வரும்போதெல்லாம் பதிமூனாம் நம்பர் கொழுந்து மலைக்குச் சென்று மலையுச்சியில் இருக்கும் மாடசாமிக் கோயில் கல்லுப்பாறையில் ஏறி நீண்ட நேரம் மௌனமாக அழுது கொண்டிருப்பான். ஒரு சமயம் அவனது கல்லூரி அதிபர் அவனது பல்கலைக்கழக பிரவேசம் சம்பந்தமாகப் பேசுவதற்கு அவனைப் பாடசாலைக்கு அழைத்திருந்தார். அதிபருக்கு அவனது பிரச்சினை நன்கு தெரியும். அவன் பாடசாலையில் படிக்கும் காலத்தில் பாடசாலையின் முதல்தர மாணவனாக பெயர் வாங்கியிருந்தான். இலக்கியம், கலை முதலானவற்றில் அதிக ஆர்வம் காட்டியதுடன் பல போட்டிகளில் பரிசில்களும் பெற்று பாடசாலைக்கு பல பெருமைகள் சேர்த்திருந்தான். கல்லூரி தமிழ் இலக்கிய மன்றத் தலைவர்களாகவும் சிரேஷ்ட மாணவர் தலைவனாகவும் பல வருடங்கள் கடமையாற்றி இருந்தான். இதனாலெல்லாம் கல்லூரி அதிபரும் உயர்தர வகுப்பு ஆசிரியர்களும் அவனைக் கல்லூரியின் நம்பிக்கை நட்சத்திரமாகவே மதித்து உற்சாகப்படுத்தினர்.

நீண்ட வருடங்களுக்குப் பின்னர் அவன் ஒருவனே பல்கலைக்கழகத்துக்குச் செல்ல அந்தக் கல்லூரியில் இருந்து தெரிவாகி இருந்தபடியால் அவனை பல்கலைக்கழகத்துக்கு அனுப்பி விட வேண்டும் என்பதில் அதிபர் தீவிரமாக இருந்தார்.

அன்று அவன் பாடசாலையில் அதிபரைச் சந்தித்த போது அதிபர் அவனுக்கு சில ஆலோசனைகளைத் தெரிவித்தார். படிப்புக்கான செலவுகளை பெற்றுக்கொள்ள சில வழிகள் உள்ளன என்று கூறினார். மகாபொல என்ற அரசாங்கத்தின் மாணவர் புலமைப் பரிசில் திட்டத்தின் மூலமும் இந்திய வம்சாவளி தோட்டத்தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கென இந்தியத்தூதுவராலயம் கல்வி உபகார நிதி வழங்குகின்றதென்றும் அதில் சேர்ந்து நிதியுதவி பெற முடியும் என்றும் அவர் யோசனைகள் தெரிவித்தார். இறுதியாக அவர் மலையகத்தின் தனிப்பெரும் தொழிற்சங்கமொன்று பல்கலைக்கழகம் செல்லும் மாணவர்களுக்கு நிதி உதவி வழங்கி வருவதாகவும் உடனடியாக விண்ணப்பிக்கும் படியும் கூறி விண்ணப்ப படிவமொன்றையும் கொடுத்தார்.

வரும் விளைவுகளைப்பற்றி சிந்திக்காமல் அந்த விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அவன் அனுப்பிவைத்தான். இரண்டு வாரங்களுக்குப் பின்னர் அவனுக்கு ஒரு அழைப்புக் கடிதம் வந்தது. அவனது பல்கலைக்கழகப்படிப்பு சம்பந்தமாக நிதி உதவி கோரி அனுப்பியிருந்த விண்ணப்பப்படிவம் தொடர்பில் தீர்மானம் மேற்கொள்வதற்காக நேர்முகப்பரீட்சை ஒன்றுக்கு வரும்படி அவனை அந்த தொழிற்சங்கம் அழைத்திருந்தது. பல்வேறு பிரச்சினைகளால் குழம்பிப் போயிருந்த சேவுகப் பெருமாள் எதற்கும் அந்த நேர்முகப்பரீட்சைக்கு போய்ப் பாப்பதென்று தீர்மானித்தான். அது விடயத்தை வீட்டில் தெரிவித்த போது தந்தை வேண்டா வெறுப்பாகவே சம்மதித்தார்.

தான் வைத்திருந்த ஒரேயொரு கறுப்பு நிற நீளக்காற்சட்டையை நன்கு துவைத்து உடைந்து ஓட்டை விழுந்திருந்த இஸ்திரிக்கைப் பெட்டியில் இருந்து நெருப்புக் கொட்டிவிடாமல் மிகக் கவனமுடன் இஸ்திரிக்கை செய்து தனக்கு அதிர்ஷ்டமானதெனக் கருதிய வெள்ளையில்கறுப்பு கோடிட்ட நீளக் கை சட்டையும் போட்டுக்கொண்டு சோகத்தை மறைத்து இல்லாத தெம்பை வரவழைத்துக் கொண்டு மிடுக்குடன் புறப்பட்ட அவன் தோற்றத்தைக் கண்டு அதிகம் விசயம் தெரியாத அவனது தம்பியும் தங்கைகள் இருவரும் மட்டும் ஆனந்தித்து விடை கொடுத்தனர். தந்தையார் விரும்பியோ விரும்பாமலோ கொடுத்த நூறு ரூபாவையும் பெற்றுக் கொண்டு பஸ் வண்டிப்பாதை நோக்கி நடந்தான் சேவுகப்பெருமாள்.

அவன் கண்டிக்குச் சென்று குறித்த முகவரியைத் தேடி அந்தக் கட்டிடத்துக்குள் நுழைந்த போது அவனைப் போலவே நம்பிக்கைகளை சுமந்து கொண்டு மலையகமெங்குமிருந்த பல இளைஞர் யுவதிகள் அங்கு வந்திருந்தனர். அப்போதைய அரகாங்கத்தில் அமைச்சராக இருந்தவரும் மலையகத்தின் தனிப்பெரும் தொழிற்சங்கத்தின் ஏகோபித்த தலைவராகவும் இருந்தவருமே அன்றைய நேர்முகப்பரீட்சையை நடத்தவிருந்ததால் அனைவரும் அவரது வருகைக்காக காத்திருந்தனர். சுமார் அரைமணி நேர காத்திருப்பின் பின்னர் தலைவரானாவர் செயலாளர் மற்றும் பரிவாரங்கள் சகிதம் வருகை தந்தார். சங்கத்தின் செயலாளரும் கூட நாடாளுமன்ற அங்கத்தவராகவும் இருந்தார். அவர்கள் அனைவரும் தேனீர் அருந்தியதன் பின்னர் நேர்முகப்பரீட்சை ஆரம்பமாகியது. அங்கு வருகை தந்திருந்தோர் ஒவ்வொருவராக அழைத்து விசாரிக்கப்பட்டனர்.

சேவுகப்பெருமாளின் முறைவந்த போது பணியாள் அவனை உள்ளே போகச் சொன்னான். வீரசேவுகப்பெருமாள் தயங்கி தயங்கிச் சென்று தலைவருக்கு முன்னால் போட்டிருந்த ஆசனத்தில் மேலும் கீழும் பார்த்தவாரே அமர்ந்தான்.

தலைவரும் செயலாளரும் நேரடியாகவே மாறி மாறி அவனை விசாரித்தனர். அவன் பெயர், தந்தை பெயர், வசிக்கும் தோட்டம், பாடசாலை, பரீட்சைப் பெறுபேறுகள் என்று சகல விபரங்களும் கேட்டறியப்பட்டன.

இடையில் குறுக்கிட்ட பொதுச் செயலாளர் அவனது தந்தை குறித்த தொழிற்சங்கத்தின் அங்கத்தவரா என்று கேட்டார் அவன் இல்லை என்று பதில் சொன்னான். உடனேயே அங்கே சூழ்நிலையில் ஒரு மாற்றம் ஏற்பட்டது. அங்கிருந்தோர் ஒவ்வொருவரும் ஒருவர் மாறி மாறி ஒருவர் முகங்களைப் பார்த்துக் கொண்டனர்.

சங்கத்தின் சட்ட விதிகளின்படி தமது சங்கத்தினர் அல்லாத ஒருவரின் பிள்ளைக்கு உதவி வழங்க முடியாது என்று செயலாளர் தலைவருக்கு விதி முறைகளை ஞாபகப்படுத்தினார். இருந்தாலும் அவனது விண்ணப்பம் தொடர்பான முடிவினை பின்னர் அறிவிப்பதாகக் கூறி அடுத்தவரை அழைக்குமாறு மணியை அடித்தார் தலைவர். ஏற்கனவே வயிற்றில் சிறுபந்தை போல் உருவாகியிருந்த சேவுகப் பெருமாளின் சோகங்கள் இப்போது மெல்ல மேலெழுந்து வந்து அவன் தொண்டையை அடைத்துக் கொண்டு விட்டது. அவன் கண்களில் நீர் திரள்வதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் மெல்ல எழுந்து கதவை நோக்கி நடந்தான்.

அவன் அன்று வீட்டுக்கு மிக நேரங்கழித்தே சென்றான். நல்ல செய்தியென்று ஓடோடிச் சென்று சொல்லியிருப்பான். இருந்தாலும் அவன் வீட்டையடைந்ததும் எல்லோரும் என்ன நடந்தது என்று கேட்டார்கள். அதெல்லாம் சரிபட்டு வராது என்று முகத்தைத் திருப்பிக் கொண்டே பதில் சொல்லிவிட்டு பேசாமல் இருந்து விட்டான். அதன் பின் ஒருவாரம் கழித்து ஒரு கடிதம் வந்தது. அவனது விண்ணப்பம் சங்கத்தின் சட்டதிட்டங்களுக்கு அமைவாக இல்லாததால் நிராகரிக்கப்பட்டுள்ளது என்று சங்கம் அவனுக்கு வருத்தத்துடன் அறிவித்திருந்தது. அத்துடன் அவனது பல்கலைக்கழக கனவுகள் ஆடிமாதத்து மேகங்கள் என எங்கோ சிதறி ஓடி மறைந்து போய் விட்டன.

அதன்பின் சிலமாதங்களுக்குப் பின்னர் அவன் படித்த கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தில் இருந்து அழைப்பொன்று வந்திருந்தது. அது கல்லூரியின் பவள விழா கொண்டாட்டத்துக்கான அழைப்பு. முழுநாள் கருத்தரங்கின் காலை நிகழ்ச்சியாக கல்விக் கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மலையகத்தின் கல்விக் கலாசாரம் ஒன்று உருவாக்கப்பட்ட வேண்டும் என்ற தலைப்பில் உரை நிகழ்த்த கொழும்பில் இருந்து பேராசிரியர்கள் மலையகக் கல்விமான்கள் சட்டத்தரணிகள் முதலானோர் அழைக்கப்பட்டிருந்தனர்.

வீரசேவுகப் பெருமாளும் இந்த கருத்தரங்குக்குப் போவதென்று தீர்மானித்தான். கடைசியாக அவன் தன் பல்கலைக்கழக பிரவேசம் சம்பந்தமாக அதிபரை சந்திக்கச் சென்றதற்குப் பின்பு கல்லூரிக்குச் செல்லும் வாய்ப்பு கிடைக்கவில்லை. கல்லூரிப்பக்கம் போவதற்கு கூச்சமாக இருந்தது தான் அதற்குக் காரணம்.

அவன் கருத்தரங்கு நடைபெறும் மண்டபமான கல்லூரியின் கோமகள் மண்டபத்தை அடைந்த போது மண்டபத்தில் ஓரளவுக்கு மட்டும் தான் கூட்டம் கூடியிருந்தது. வீரசேவுகப் பெருமாள் அக்கல்லூரியின் பழைய மாணவன் என்ற உரிமையில் முன்னால் இருந்த மூன்றாவது வரிசையில் ஒரு ஆசனத்தில் அமர்ந்து கொண்டான்.

தலைமையுரைக்குப் பின் பிரதான கருத்தரங்கு ஆரம்பமான போது கொழும்பில் இருந்து வந்திருந்த கல்வி பேராசிரியர் உரை நிகழ்த்தினார். இன்றைய மலையகம் கல்வியில் மிகப் பின்தங்கிப்போயிருக்கின்றது. சனத்தொகை அடிப்படையில் பார்க்கும் போது மிகக் குறைந்த மாணவர்களே பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவாகின்றனர். அவ்வாறு தெரிவு செய்யப்படுபவர்கள் கூட பல்கலைக்கழகங்களுக்குப் போகாமல் பாதியிலேயே கல்வியை விட்டு விடுகின்றனர். இவற்றுக்கான காரணிகள் தொடர்பில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு பரிகாரங்கள் காணப்பட வேண்டும்.

மலையக மாணவர்கள் கல்வியை பாதியில் விட்டு விடுவதற்கு பிரதான காரணியாக இருப்பது பொருளாதாரப் பிரச்சினையாகும். தங்களின் பிள்ளைகளை பல்கலைக்கழகத்துக்கு அனுப்பி படிப்பிக்கும் அளவுக்கு அவர்களிடம் நிதி வசதியில்லை. அத்துடன் அவர்களது குடும்பகளும் அதிகம் குழந்தைகளுடன் பெரிய குடும்பமாகவும் உள்ளதால் பிற்காலத்தில் குடும்பத்தின் பாரத்தை சுமக்கும் பொறுப்பு பிள்ளைகளின் தலைமேலேயே விழுகிறது.

இன்னும் கூட மலையக மக்களில் எண்பது சதவீதமானவர்கள் தோட்டங்களில் வாழ்கின்ற தொழிலாளிகளாகவே உள்ளனர். இம்மக்களின் கல்வி பயில்வோரின் வீதம் நகர்ப்புறத்தில் வாழ்கின்ற மக்களிடையே தான் அதிகம் உள்ளது. இது தொடர்பில் மலையக தொழிற்சாலைகளும் அரசியல் கட்சிகளும் பொது அமைப்புகளும் அக்கறை காட்ட வேண்டும் தமக்கிடையே பேதங்களை மறந்து தமது தொழிற்சங்கத்தைச் சேர்ந்தவன். தமது கட்சியைச் சேர்ந்தவன் என்று பிரித்துப் பார்த்து குறுகிய நோக்கில் செயற்படுவதனை இந்த அமைப்புக்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும். முழு மலையகத்தின் எதிர்கால நலன்கருதி அவர்கள் செயற்படுவார்களாயின் மட்டுமே மலையகம் முன்னேற்றப்பாதையில் செல்லும்.

பேராசிரியர் மிகுந்த கரகோஷத்துக்கு மத்தியில் தனது உரையை பூர்த்தி செய்தார். கூட்டத்துக்கு வந்திருந்தோர் ஆர்வமுடன் அங்கு நடக்கும் நிகழ்வுகளை அவதானித்துக் கொண்டிருந்தனர். பேராசிரியர் சொன்ன சில கருத்துக்கள் தன் வாழ்வுடன் பொருந்திப் போனபடியால் வீரசேகவுப் பெருமாளும் தனது ஆசனத்தில் நிமிர்ந்து அமர்ந்து அடுத்து யார் என்ன பேசப் போகிறார்கள் என்று கவனித்துக் கொண்டிருந்தான்.

அடுத்த ஒரு விசேட நிகழ்வாக அதே கல்லூரியில் படித்து கொழும்பு பல்கலைக்கழகத்தில் சட்டப்பட்டம் பெற்று தற்போது கொழும்பில் ஒரு சட்டத்தரணியாக இருக்கும் ஒரு இளம் சட்டத்தரணியை பேச அழைத்தார் கூட்டத்துக்கு தலைமை தாங்கிய கல்லூரியின் பழைய மாணவர் சங்கச் செயலாளர்.

அவர் தனது அறிமுகத்தில் பின்வருமாறு குறிப்பிட்டார். இப்போது உங்கள் முன்னிலையில் பேச அழைக்கப்பட்டுள்ளவர் பல்வேறு வகைகளில் விசேடத்துவம் பெற்றவர். இக்கல்லூரியின் பழைய மாணவரான இவர் தோட்டத்தில் பிறந்து தோட்டத்திலேயே வளர்ந்தவர். இக்கல்லூரியில் படிக்கும் காலத்தில் கல்லூரிக்குள் பல பெருமைகளைத் தேடித்தந்தவர். இவர் வெறும் சட்டத்தரணி மட்டுமல்ல ஒரு எழுத்தாளர். கவிஞர் ஓவியர் எனப் பல பெருமைகள் இவருக்குண்டு. மலையக சமூகத்தின் முன்னேற்றத்தில் அக்கறை கொண்டு பல நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் இவர் மலையக இளைஞர் சமூகத்துக்கு ஒரு முன்னுதாரணமாவார்.

இத்தகைய அறிமுகத்தால் சற்றே கூச்சத்துக்கு ஆளான இளம் சட்டத்தரணி மைக்கருகில் வந்து கூட்டத்தை சற்றே நோட்டமிட்டார். தான் படித்த கல்லூரியில் தனக்களிக்கப்பட்ட வரவேற்பாலும் வந்திருந்த பழைய புதிய மாணவர் கூட்டத்தாலும் பரவசப்பட்டுப் போன அவர் தான் தயாரித்து வந்திருந்த நீண்ட பேச்சை மறந்து போய்விட்டார். இருந்தாலும் இந்த சமூகத்தின் எதிர்காலத் தலைவிதியை நிர்ணயிக்கப் போகும் சில விடயங்கள் குறித்து நாலு வார்த்தைகளை நறுக்குத் தெறிந்தாற் போல் உரைக்கும் படி கூறிவிட வேண்டும் என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டார்.

அவர் மிகுந்த கரகோஷத்துக்கு மத்தியில் பேச ஆரம்பித்தார். அவர் கூறிய வார்த்தைகள் ஒவ்வொன்றும் உள்ளது உள்ளபடி ஆணி அடித்தாற் போல் வீரசேகவுப்பெருமாளின் மனதில் மாத்திரமல்ல கூடியிருந்தோர் மனதையும் கசக்கிப் பிழிந்தன.

நன்றி நண்பர்களே நன்றி என்னை இங்கு அழைத்துப் பேச வைத்தமைக்கு நன்றி. எனக்கு முன் பேசிய பேராசிரியர் அவர்கள் குறிப்பிட்டது போல் என்னைப் பெற்ற எனது தாய் தந்தையரும் தனது குடும்பச்சுமையை என்மீது சுமத்தியிருந்தால் நான் கூட இன்று உங்கள் மத்தியில் இந்த அளவுக்கு உயர்ந்திருக்க மாட்டேன். ஆதலால் அவர்களுக்கு எனது முதல் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நானும் உங்களைப் போல் ஒரு தோட்டத்தொழிலாளியின் மகனாகப் பிறந்து நீங்கள் எதிர்கொள்ளும் அதே பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து எதிர்நீச்சலிட்டு இன்றைய நிலைக்கு வந்தவன் தான். நாம் மலையகத்தோர் என்பதாலேயே நிறைய சவால்களை வெளியுலகத்தில் சந்திக்க வேண்டியவர்களாக உள்ளோம். நாம் இன்னமும் பெருந்தோட்டக் கூலிகள் கொத்தடிமைகள் என்ற அடிமைத்தனத்தில் இருந்து விடுபடவில்லை என்பது அதற்கு முக்கிய காரணம். நாம் எப்போது அந்த அடிமைத்தனத்தில் இருந்து விடுபட்டு இந்த நாட்டின் ஏனைய பிரஜைகள் போல் சுதந்திரமான ஜீவிக்க ஆரம்பிக்கிறோமோ அன்று தான் நம் அனைவருக்கும் விடுதலை என்பதனை நீங்கள் அனைவரும் நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்த விடயத்தை நாம் இன்னமும் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்று தான் நான் கருதுகிறேன். அதனால் தான் இந்த அடிமைத்தனத்தில் சிக்கி சுமார் இருநூறு ஆண்டுகள் கடந்துவிட்ட பின்பும் எம்மால் அதில் இருந்து விடுபட முடியாமல் உள்ளது. நமது மக்கள் இந்த அடிமை வாழ்வுக்கு நன்கு பழக்கப்பட்டு விட்டார்கள்.

இதுதான் நமக்கு விதிக்கப்பட்ட வாழ்க்கை இதற்கு அப்பால் ஒன்றும் இல்லை என்று அவர்கள் நினைக்கிறார்கள். தமக்குச் சொந்தமென நான்கு சுவர்கள் கூட இல்லாத இந்த மக்கள் தமது எதிர்காலம் தொடர்பிலும் அடுத்த பரம்பரைகளின் எதிர்காலம் தொடர்பில் சிந்திக்க முடியாத அளவுக்கு இந்த அடிமை வாழ்க்கையுடன் ஒன்றிப் போய்விட்டார்கள்.

இவர்களது அரசியல் தலைவர்களும் தொழிற்சங்கத்தவர்களும் கூட இவர்களை அடிமைத்தனத்தில் வைத்திருந்ததால் தான் தாம் பிழைப்பு நடத்தலாம் என்று கருதுகிறார்கள். கல்வியறிவு பெறுவதால் இந்த அடிமைத்தனத்தில் இருந்து அவர்கள் விடுபட்டு விடுவார்களோ என்று பயன்படுகிறார்கள்.

அங்கே உங்களுக்கு அருகில் இருக்கும் நாட்டுப்புறத்து சிங்கள மக்களைப் பாருங்கள். தமக்கென சொந்தமாக இருக்கும் ஒரு சிறிய துண்டு நிலத்தில் சிறுகுடிசை ஒன்றையும் அமைத்துக்கொண்டு எவ்வளவு சுதந்திரமாக வாழ்கிறார்கள். அந்த வாழ்வின் மேன்மையை நாம் ஏன் அறிந்து கொள்ளவில்லை. இதனை உணர்ந்து தானோ என்னவோ அந்த மக்கள் ஆரம்பத்திலேயே கோப்பித் தோட்டங்களில் கூலி வேலை செய்ய மறுத்து விட்டார்கள்.

ஆதலினால் நாம் கல்வியில் அதிகம் நாட்டம் செலுத்த வேண்டும். கற்ற கல்வியைக் கொண்டு வேறு தொழில்களைத் தேடிக்கொண்டும். தோட்டத்துக் கூலிகள் என்ற அடிமைத்தனத்தில் இருந்து விடுபட வேண்டும். சொந்தமாக காணித் துண்டொன்றை பெற்றுக்கொள்ள வேண்டும். அதில் சிறியதாக நமக்கென ஒரு குடிசை ஒன்றை அமைத்துக் கொள்ள வேண்டும்.

நாம் சுதந்திரமாய் வாழ வேண்டும் என்பது தான் எல்லாவற்றிலும் உயர்வானது. அதுதான் உன்னதமானது நாம் இப்போதே இந்த நிமிடத்தில் இருந்தே கூலியடிமை முறையில் இருந்து விடுபட வேண்டுமென்று சிந்திப்போம். செயற்படத் தொடங்குவோம் என்று கூறி விடைப்பெற்றார் அந்த இளம் சட்டத்தரணி. அவரது பேச்சைக் கேட்டு உணர்ச்சி வசப்பட்ட அனைவரும் நீண்ட நேரம் தம்மை அறியாமலேயே கைதட்டி பரவசப்பட்டனர்.

அவரது அந்த உணர்ச்சி பூர்வமான சொற்பொழிவால் அங்கு கூடியிருந்தவர்கள் எத்தனை பேர் தூண்டப்பட்டனர் என்று சொல்ல முடியாவிட்டாலும் நிச்சயமாக வீரசேவுகப்பெருமாளுக்குள் அது மாற்றத்தை ஏற்படுத்தியது. அவன் நீண்ட நேரம் சிலையென அமர்ந்திருந்தான். அதன் பின் இடம்பெற்ற நிகழ்ச்சிகளை அவன் பார்க்கவோ கேட்கவோ இல்லை.

அவனுக்கு நீண்ட நாள் புரியாமல் இருந்த ஒரு உண்மை திடீரென தெரிந்து விட்டது போல் இருந்தது. தான் ஞானம் பெற்று விட்டது போன்றதொரு அனுபவத்தைப் பெற்றான். அவனுள் எங்கோ தீப்பொறி ஒன்று பற்றிக்கொண்டு எரிய ஆரம்பித்தது.

அந்தத்தோட்டத்தில் இருந்து வீரசேவுகப் பெருமாளுடன் சேர்ந்து சுமார் ஏழட்டுப்பேர் நகரத்துப் பாடசாலைக்குச் சென்று கல்வி கற்று வந்தனர். அவர்களின் அருகில் இருந்த நாட்டில் இருந்து தோட்டத்தில் குடியேறியிருந்த மாத்தேனிஸ் அப்புவின் புதல்வர்களான சுகத்தபாலாவும் ஜயசேனவும் இருந்தனர். அவர்கள் இருவருமே பத்தாம் வகுப்புடன் தமது கல்வியைக் கைவிட்டு விட்டனர்.

மார்த்தேனிஸ் அப்புவும் அவரது குடும்பத்தினரும் அந்தத் தோட்டத்தில் குடியேறி சுமார் பதினைந்து வருடங்கள் ஆகியிருந்தன. அவர்கள் குடும்பத்தினரும் சேவகப் பெருமாள் குடும்பத்தினரும் ஒரே லயத்தில் குடியிருந்ததால் நல்ல நண்பர்களாக இருந்தனர். குடும்பப்பிரச்சினைகளின் போது பரஸ்பரம் உரிமையுடன் பங்கெடுத்துக் கொள்வார்கள். மாத்தேனிஸ் அப்புவும் சேவுகப் பெருமாளின் தந்தையான பெரியாம்பிள்ளையையும் மாலை வேளைகளில் வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து கொண்டு பல்வேறு விடயங்கள் பற்றி உரையாடுவார்கள்.

மாத்தேனிஸ் அப்புவுக்கு நாட்டில் நாடு என்பது தோட்டத்து அயலில் இருக்கும் சிங்கள கிராமத்தைக் குறிக்கும். அரை ஏக்கர் காணியும் வீடும் இருந்தது. அதனை அவரது அக்கா வேறொருவருக்கு அடகு வைத்திருந்ததில் முழுகிப் போய் விட்டது இந்த விடயம் தெரியாதநிலையிலேயே ஒரு நாள் நீதிமன்ற கட்டளையுடன் வந்து வீட்டை அடகுக்கு வாங்கியவன் அவர்களை வெளியேறி விட்டு வீட்டைப் பறித்துக் கொண்டான். அதன் பின் அவர்கள் போவதற்கு இடமில்லாமல் அந்தத் தோட்டத்தில் வந்து குடியேறினர்.

ஆனால் மர்தேனிஸ் அப்பு தோட்டத்தில் குடியேறிய நாளில் இருந்தே எப்படியாவது நாட்டில் காணித்துண்டொன்றை பெற்றுக்கொண்டு அங்கு சென்று குடியேறி விட வேண்டும் என்று தீர்மானமாக இருந்தார் தன்னைப் போல் தனது பிள்ளைகளும் தோட்டத்துறைக்கும் கண்டாய்கையா கிளாக்காøயா கங்காணிமார் மற்றும் சகல மேலதிகாரிகளுக்கும் தலை வணங்கி அடிமை வாழ்வு வாழக்கூடாது என்று அடிக்கடி கூறி வந்தார். அதன் படி அண்மையில் தோட்டத்துக்கண்மையில் இருந்த தரிசு நிலத்தை துண்டுகளாக்கி கொலனியாக்கிய பொழுது எப்படியோ குத்துக்கரணம் அடித்து தனது மகன் சுகந்தபாலவின் பெயரில் காணித்துண்டொன்றை பெற்றுக்கொடுத்து விட்டார். விரைவில் மகனுக்கு ஒரு கலியாணம் செய்து கொடுத்து அந்தக் காணித்துண்டில் அமைந்திருக்கும் சிறு வீட்டில் அவர்களை குடியேற்றத் திட்டமிட்டிருந்தார்.

இவையெல்லாம் வீரசேவுகப் பெருமாளின் வாழ்வில் அண்மைக்காலமாக இடம்பெற்றுவரும் நிகழ்வுகள். அவன் இவற்றையெல்லாம் மனதில் இருத்தி சீர்தூக்கிப் பார்த்தான். அன்று நீண்ட நேரம் பதின்மூன்றாம் நம்பர் கொழுந்து மலைக்குச் சென்று மலையுச்சியில் இருக்கும் மாடசாமிக்கோயில் கல்லுப்பாறையில் ஏறி கீழே பள்ளத்தா“கையும் விரிந்து பரந்திருந்த பசுமைக் கோலத்தையும் வெறித்துப்பார்த்தவாறு அமர்ந்திருந்தான்.

நெஞ்சடைத்த சோகங்கள் விசும்பல்களாக வெளிப்பட்டு அவன் தேகமெங்கும் நடுக்கத்தை உண்டு பண்ணின. அவன் தேம்பித்தேம்பி அழுதான். இரு கண்களிலும் கங்கைகள் என கண்ணீர் பெருக் கெடுத்தோடியது. அவன் எவ்வளவு நேரம் அங்கு அப்படியே இருந்தான் என்பது அவனுக்கு தெரியாது. அவன் மணிக்கணக்காக அவ்விடத்தில் அப்படியே அமர்ந்திருக்க வேண்டும். அவன் மனம் இப்போது மிக அமைதியடைந்திருந்தது. அவனுள் அப்பிக்கிடந்த சோகங்கள் எங்கோ ஓடிப்போய் மறைந்து கொண்டன. அவன் கண்ணில் கண்ணீர் இல்லை. அவை மிகத் தெளிவுடன் ஒளி வீசிக் கொண்டிருந்தன. அவன் தனக்குள் ஒரு தீர்மானத்துக்கு வந்திருந்தான். மர்த்தேனிஸ் அப்புவின் மகனும் தன் நண்பனுமான சுகத்தபாலவால் முடியுமாயின் தன்னால் மட்டும் ஏன் முடியாது. அவன் காதுகளுக்குள் அன்று அந்த இளம் சட்டத்தரணி பேசிய வார்த்தைகள் மீண்டும் ஒரு முறை ஒலித்தன.

அங்கே உங்களுக்கு அருகில் இருக்கும் நாட்டுப்புறத்து சிங்கள மக்களைப் பாருங்கள். தமக்கென சொந்தமாக இருக்கும் ஒரு சிறிய துண்டு நிலத்தில் சிறுகுடிசை ஒன்றையும் அமைத்துக் கொண்டு எவ்வளவு சுதந்திரமாக வாழ்கிறார்கள். அந்த வாழ்வின் மேன்மையை நாம் ஏன் அறிந்து கொள்ளவில்லை…. நாமும் தோட்டத்துக் கூலிகள் என்று அடிமைத்தளையில் இருந்து விடுபட வேண்டும் சொந்தமாகக் காணித்துண்டொன்றை பெற்றுக் கொள்ள வேண்டும்.

அதில் சிறிதாய் குடிசை ஒன்றை தமக்கென அமைத்துக்கொள்ள வேண்டும். நாம் சுதந்திரமாய் வாழ வேண்டும் என்பது தான் எல்லாவற்றிலும் உயர்வானது. அதுதான் உன்னதமானது. நாம் இப்போதே இந்த நிமிடத்தில் இருந்தே கூலியடிமை முறையில் இருந்து விடுபட வேண்டும்.

வீரசேவுகப்பெருமாள் தீர்மானத்துடன் கல்லுப்பாறையில் இருந்து இறங்கினான். ஈரமான வாடைக்காற்றும் அதனைத் தொடர்ந்து மெல்லிய தூறலும் கொட்டவாரம்பித்தது.

அவன் வேகமாக நடந்தான் தனது இலக்கை நோக்கி உறுதியுடன்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *