கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: March 26, 2014
பார்வையிட்டோர்: 15,381 
 

பிரமிப்பாய் இருந்தது ராமநாதனுக்கு.

கிட்டத்தட்ட ஐந்தே வருடங்களுக்குள் ஒருவன் பொருளாதார நிலை இப்படிக் கூட மாற முடியுமா என்ற வியப்பில் ஆழ்ந்து நின்றார். நகரத்தின் மையப்பகுதியில் வீடு, கார்,ஆள், அம்பலம் என்று எதிலும் பெருமை. எப்படி இருந்த பழனி, எப்படி மாறிவிட்டான்?

இந்நாட்டு மன்னர்“”வள்ளி… அது… வந்து.. பழைய சாதம் மிச்சம் இருக்கு.. வாங்கிக்கிறியா?”

“”எதுக்கு மேகலா அக்கா இப்படித் தயங்கறீங்க. வெறும் தண்ணியைக் குடிச்சு வயத்தை நிரப்பிக்கிறதுக்கு, பழைய சாதம் அமிர்தமாச்சே…? போடுங்க தாராளமாய்”

தன் மனைவிக்கும், இந்த பழனியின் பெண்டாட்டிக்கும் நடந்த பழைய உரையாடல் ஏனோ மனதில் உதிக்க, அருகில் இருந்த மேகலாவை நோக்கினார் ராமநாதன்.

“”என்னங்க?”

“”அது.. பழசை நினைச்சேன்…!” என்று புன்னகை புரிந்தார்.

“”என்ன, ஐயாவையும் அம்மாவையும் ரொம்ப நேரம் காக்க வைச்சுட்டேனா?” என்று கேட்டபடி வந்தார் பழனி. பட்டு வேட்டி தரையில் புரண்டது.

“”பரவாயில்லை பழனி”

“”எம்.எல்.ஏ. வந்தாரு. அவரோடு பேசிட்டு, வழி அனுப்பிட்டு வர்றதுக்கு நேரமாயிடுச்சு. மன்னிச்சுடுங்க ஐயா”.

“”அதனாலென்ன?”

“”வள்ளி.. ஏய்” என்று கத்தி அழைத்தார் பழனி.

“”இதோ வந்துட்டேன். அந்த எம்.எல்.ஏ. சம்சாரம் விடமாட்டேங்குது. நொய் நொய்னு… என்னம்மா, நல்லா சாப்பிட்டீங்களா?”

பட்டுச் சேலையில் தலைப்பைத் திருகியபடி விசாரித்தாள் வள்ளி.

“”உங்க பத்தாவது கல்யாண நாள் நிகழ்ச்சிக்கு எங்களையும் கூப்பிட்டதுக்கு நாங்கதான் நன்றி சொல்லணும்” என்றார் ராமநாதன்.

“”என்னங்க ஐயா பெரிய வார்த்தையெல்லாம்? பழைய வறுமையையும் மறக்கலை நான்… உங்களையும் மறக்கலை”

அதற்குள் ஓர் ஆள் வந்து காதைக் கடித்தான்.

“”ஒரு நிமிஷம் ஐயா. வந்துடறேன். வள்ளி நீயும் வா” என்று வேட்டி அவிழ ஓடினார். வேட்டியை ஒழுங்காகக் கட்டிக் கொள்ளத் தெரியாத அதே பழனிதான் இன்னும். ஆனால், அன்று ஆங்காங்கே நைந்துபோன அழுக்கு வேட்டி. இன்றோ, அகல ஜரிகை போட்ட விலை உயர்ந்த வேட்டி.

ராமநாதன் குடியிருக்கும் வீட்டுக்கு எதிரே குடிசையில்தான் முன்பு வசித்து வந்தது பழனியின் குடும்பம்.

வாடகை ரிக்ஷாவை ஓட்டி, பிழைப்பை நடத்திக்கொண்டிருந்தான். வள்ளி நாலு வீடுகளில் பத்துப் பாத்திரம் தேய்த்துத் தன் பங்குக்கு வீட்டு வருமானத்தை உயர்த்தினாள்.

“”என்னம்மா விசேஷம் இன்னிக்கு? வீட்ல பாயசம், கோயில் அர்ச்சனை?”

“”அது வள்ளி. இன்னிக்கு எங்க இருபதாவது கல்யாண நாள்”

“‘ஓ! அதுதான் நீங்க புது நூல் புடவையில் ஜொலிக்கிறீங்களாக்கும். ஹும்” என்று பெருமூச்சு விட்டாள்.

“”என்ன?”

“”அடுத்த வாரம் புதன்கிழமை எங்களுக்குக் கூட கல்யாண நாள்தான். அதை நினைச்சுப் பார்த்தேன். சிரிப்பு வந்தது”.

அவள் மனசின் ஓரத்தில் ஏற்பட்ட ஏக்கத்தை நொடியில் புரிந்துகொண்டாள் மேகலா.

அடுத்த புதன்கிழமை காலை சரியாக ஆறு மணிக்கு வழக்கம்போல வேலைக்கு வந்தவளுக்கு ஆச்சரியம் காத்திருந்தது.

இருநூறு ரூபாய் வாயில் சேலையும், நூறு ரூபாய் வேட்டியும் அவர்களின் திருமண நாள் பரிசாய் அளித்தாள் மேகலா. அன்று அந்த வாயில் புடவையைக் கண்டு பூரித்து ஆடையாய்க் கட்டிக் கொண்டவள், இன்று ஐயாயிரம் ரூபாய் காஞ்சிப் பட்டை அலட்சியமாய் உடுத்திக்கொண்டிருக்கிறாள்.

“‘மறுபடியும் மன்னிக்கணும் ஐயா” என்று திரும்பி வந்தனர் பழனியும் வள்ளியும்.

“”அப்ப நாங்க கிளம்பறம் பழனி”.

“”என்னய்யா அதுக்குள்ளே”

“”வீட்டுல பையனும், பொண்ணும் தனியா இருக்காங்க”

“”அவங்களையும் கூட்டி வந்திருக்கலாம். இப்ப என்ன படிக்கிறாங்க ரெண்டு பேரும்?”

“”பையன் இந்த வருஷம் காலேஜ் போறான்.பொண்ணு ப்ளஸ் டூ”

“”எந்தக் காலேஜ்ல சேர்க்கப் போறீங்க?”

“”ஏழைக்கு ஏத்த எள்ளுருண்டைதான். நம்ம அரசாங்கக் கல்லூரியிலே கிடைக்கிற கோர்சில படிக்க வைக்கணும்”

“”என்னம்மா. நான் ஒருத்தன் இருக்கறதையே மறந்துட்டீங்க. எந்தக் காலேஜ்ல சேர்க்கணும், சொல்லுங்க”

“‘மற்ற காலேஜ்னா டொனேஷன்….”

“”என் சிபாரிசு இருக்கே. டொனேஷனைப் பற்றி நீங்க கவலைப்படாதீங்க” என்றவரைப் புன்னகையுடன் பார்த்தார் ராமநாதன்.

“”என்னங்க…?”

“”என்னை உனக்குத் தெரியாதா? டொனேஷன், வரதட்சணை, லஞ்சம், கள்ளக் கடத்தல் எல்லாம் ஒரே ரகம்தான் என்னைப் பொறுத்தவரை”

“”ஐயா இன்னும் மாறவேயில்லை” என்று சிரித்தார் பழனி.

“”அப்ப கிளம்பறோம் பழனி”

“”வாங்க. அடிக்கடி வந்தீங்கன்னா சந்தோஷப்படுவோம்” என்று கை காட்டினார். இருவரையும் வாசல் வரை வந்து வழியனுப்பினார் பழனி.

வாசலில் இரண்டு போலீஸ் கான்ஸ்டபிள்கள், பந்தோபஸ்துக்காக. ராமநாதனுக்கு சிரிப்பு வந்தது. “”என்ன சிரிக்கிறீங்க?” என்றாள் மேகலா.

“”சொல்றேன். நம்ம பஸ் வருதா பாரு”

“”லெவன் ஏ!” – அவர்கள் செல்ல வேண்டிய டவுன் பஸ்தான். கூட்டம் அதிகமில்லை. ஏறி அமர்ந்தனர்.

“”ஐயா போலீஸ் என் புருஷனை இழுத்துக்கிட்டு போயிடுச்சு…”

அழுதபடி ஓடிவந்தாள் வள்ளி.

மாநிலச் செய்திகளை ரேடியோவில் கேட்டுக் கொண்டிருந்த ராமநாதன் “திடுக்’ கென எழுந்தார்.

“”என்ன சொல்றே?”

“”ஆமாங்க ஐயா. ரிக்ஷாவுல சாராயம் கொண்டு போறாருன்னு போலீஸ் பிடிச்சுக்கிட்டுப் போயிடுச்சு”

மறுபடியும் அவருக்கு அதிர்ச்சி.

“”உன் புருஷன் சாராயம் கொண்டு போறானா?”

தலை குனிந்து நின்றாள் வள்ளி.

“”முதல்ல ஸ்டேஷனில் போய் விசாரியுங்க. பாவம் கலங்கிப் போய் நிக்கறா” என்றாள் மேகலா.

ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் இவரின் உறவினர்தான். பேசிப் பார்த்தார். ஆனால் சாராய விஷயம் அவரை நெருடியது.

குற்றம் செய்தவன் தண்டனை அடைவதுதான் தர்மம். பழனி பதினைந்து நாள் ஜெயிலில் வாசம் செய்துவிட்டுத் திரும்பினான்.

அப்போது ஆரம்பித்தது அவன் வாழ்வில் திருப்பம். சாராயம் கடத்தி, பிறகு தானே விற்று, தானே காய்ச்சி, தில்லுமுல்லு வேலைகளில் தேர்ந்து… இதோ சமூகத்தில் அந்தஸ்துள்ள பிரஜையாகக் காட்சியளிக்கிறார், பழனி.

அன்று லாக்கப்பில் அடித்த போலீúஸ, அவன் வீட்டு வாசலில் இன்று பந்தோபஸ்துக்கு.

“”ஏன் மேகலா, பணம் வந்துட்டா சமூகத்தில் பெரிய மனுஷ அந்தஸ்து வருகுதில்லையா?”

முகத்தில் மோதிய காற்றினால் கலைக்கப்பட்டு பறந்த தலைமுடியை ஒதுக்கி விட்டபடி அவரைப் பார்த்தாள்.

“”என்ன யோசனைகள் பலமா இருக்கு அப்போதிருந்து? இப்ப கேள்வியும் புதிராயிருக்கு”

“”பழனியோட வாழ்க்கையை நினைச்சுப் பார்த்தேன். ஊரில் எந்த முக்கிய விழாவானாலும் பழனியிடம் நன்கொடைக்குப் போய் நிற்கறாங்க. அவன் பெயரைத் தலைமை இடத்திலே போடுறாங்க”

“”பொறாமையாயிருக்கா?”

“”சேச்சே… நாம பார்க்க வளர்ந்த பையன் அவன். ஆனால் சமூகத்தை நினைச்சாத்தான் குழப்பமாயிருக்கு”

சேலைத் தலைப்பால் தோள்பட்டை இரண்டையும் மூடிக்கொண்டாள் மேகலா, குளிருக்கு அடக்கமாய்.

“”என்னைப் பாரு. ஒழுக்கம், நியாயம்னு பேசிக்கிட்டு அதன்படி வாழறேன். உனக்கு எப்பவுமே இந்த சாதாரண சேலைன்னுதான் தலையிலே எழுதியிருக்கு. ஆனால் சட்டத்துக்குப் புறம்பாய் தில்லுமுல்லு செஞ்ச பழனி சொடக்குப் போட்ட நாழிகையில் பெரிய மனுஷனாயிட்டான். செல்வம் எல்லாம் அவனிடம் மண்டியிட்டு நிக்குது. அதான் புரியலை”

குழம்பிப் போய்ப் பேசும் தன் கணவரைப் பரிவுடன் பார்த்தாள் மேகலா.

“”குளிர் காத்து அடிக்குதே… காதைச் சுற்றி, துண்டை வேணும்னா கட்டிக்குங்களேன்”

“”பரவாயில்லை. இதமாய்த்தான் இருக்கு. முகத்துல மோதற காத்து மனசுக்கும் சுகமாயிருக்கு”

“”இதுதான் வித்தியாசம்” என்றாள் மேகலா மென்மையாய்.

“”என்ன சொல்றே?”

“”பழனியிடம் இப்ப காசு இருக்கு. புகழ் இருக்கு. உண்மைதான். ஆனால் முக்கியமானது இல்லை”

“”புரியலை…”

“”சாதம் குழைஞ்சா கஞ்சியாய்ச் சாப்பிட்டுடலாம். ஆனால் மனுஷனோட குணமே குழைவாயிடுச்சுன்னா கேவலம்தானே? ஆ… ஊன்னு வேலையாள்களை அதட்டுறதும், “ஹிஹி’ ன்னு “பவர்’ உள்ள ஆசாமிகளிடம் குழையறதும்…. பாவம் பழனி”

“”ஊம்…”

“”சொந்த மனைவியிடம் கூட இயல்பாய்ப் பேச வரலை பழனிக்கு. எப்பவுமே ஒரு முகமூடி மாட்டிக்கிட்டு, அதே பழகிப் போய், முகமூடியை மாட்டிக்கிட்டதே மறந்து போய், வேஷத்தோடவே அலையறான் பழனி. தன் இயல்பான குணமே மறந்துபோன மனுஷன் பரிதாபத்துக்கு உரியவன்தானே….”

“”அதுதானே அவனோட கவசமும்கூட இப்ப?”

“”கவசம் இல்லைங்க.. காலைப் பிடிச்ச சனியன். மேலே ஏறிட்டு இறங்கத் தெரியாம முழிக்குமே குழந்தைங்க, அதுபோன்ற நிலை. எல்லாம் இருந்தும், எதுவுமே இல்லாத பிச்சைக்காரர் தோற்றத்துல அவன் முகம். வசதி இல்லாட்டியும், எல்லாமே இருக்கற ராஜா மாதிரியான கம்பீரம் உங்க முகத்திலே. எப்படி வந்தது இது?”

“”எப்படி?”

“‘நீங்க கடைப்பிடிக்கிற வாழ்வு நெறிகள்தான் காரணம்”

பளிச்சென்று மனத்தில் பதியுமாறு சொன்ன மனைவியை பெருமையுடன் பார்த்தார் ராமநாதன். பைக்குள் இருந்த துண்டை எடுத்துத் தலையில் சுற்றிக் கொண்டார்.

“”என்ன, குளிருதுங்களா?”

“”இல்லை, ராஜாவுக்கு கிரீடம் இருந்தால்தானே அழகு? நான் இந்நாட்டு மன்னர். நீ என் இதய ராணி” என்று கம்பீரப் பொலிவுடன் சொன்ன கணவரை சந்தோஷமாய்ப் பார்த்தாள் மேகலா.

– அக்டோபர் 2013

தினமணி – நெய்வேலி புத்தகக் கண்காட்சி நடத்திய சிறுகதைப் போட்டிக்கு வந்த கதைகளில் பிரசுரிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்ட கதை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *