கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: April 8, 2022
பார்வையிட்டோர்: 12,045 
 

ஆய்வுக்கூடம்.

ஒவ்வொரு அறையிலும் ஆயிரம் ஆயிரம் பாம்புகள். மொத்தம் 33 அறைகள். அனைத்து பாம்புகளிடம் இருந்தும் விஷம் எடுக்கப்பட்டு, அது விஷ எதிர்ப்பு மருந்தாக தயாராகிக் கொண்டிருந்தது. எல்லாவற்றையும் மேற்பார்வையிட்டனர் கிரிஷ், ஹரி மற்றும் மிருதுளா.

கல்லூரிக் காலத்திலிருந்து தோழர்கள். ஒரு மலையேற்றத்தில் எதேச்சையாய் ஒரு ஓலைச்சுவடி கிடைக்க, அதை கஷ்டப்பட்டு பல இடங்களில் அலைந்து திரிந்து படித்துப் பார்த்ததில் மிகப்பெரிய பொக்கிஷம் இருக்கும் இடம் பற்றிய குறிப்புகள் இருந்தன. அதை மேலும் பல வகை ஆராய்ச்சிகளில் ஈடுபடுத்திப்பார்த்ததில்.. சரியான இடத்தை துல்லியமாக அறிந்து கொள்ள முடிந்தது. மேலும் அவ்விடம் அமைந்துள்ள மலைக்குகை, பாம்புகள் மட்டுமே வாழும் இடமென்றும், பொக்கிஷமுள்ள குகைக்குள் இதுவரை யாருமே போனதில்லை என்றும்.. அதற்குள் நுழைந்தாலும் அங்கு வாழும் வகை வகையான பயமுறுத்தும் பாம்புகளிடம் மாட்டாமல் தப்பிக்க வாய்ப்பே இல்லை என்பதையும் அறிந்தனர். அன்றிலிருந்து பாம்பு கொத்தினாலும் தப்பிக்க என்ன வழி? என்பதை சிந்திக்க ஆரம்பித்தனர்.

பிறகு தான்.. வகை வகையான பாம்புகளை பிடிக்கும் பாம்பாட்டிகளிடம் பேசி, அதற்கு பாம்பு விஷத்தையே பயன்படுத்தி.. மருந்தாக மாற்றி அதனை சிறிது சிறிதாக சாப்பிட்டு வர, முழு எதிர்ப்பு சக்தி விஷத்திற்கு எதிராக மனிதருக்குள் வரும் என்பதைக் கண்டறிந்தனர்.

அன்று முதல் இவர்களின் பணி.. பாம்புகளைச் சேகரித்தல்.. அதன் விஷத்தை நீக்குதல்.. அதனை பத்திரமாக சேமித்து வைத்தல்.. பின் அதனுள் சில ரசாயன மாற்றங்களை செயல்படுத்தி மருந்தாக மாற்றுதல்.. அதனையும் கொஞ்சம் கொஞ்சமாக உடம்பிற்குள் எடுத்துக்கொள்ளுதல் என தொடர்ந்து ரகசியமாக இயங்கி வந்தனர்.

மிக விரைவாக உடலை விஷத்திற்கு எதிராக மாற்றியபிறகு, அங்கு சென்று, பத்திரமாக காவல் காத்துவரும் பாம்புகளை வென்று, பொக்கிஷத்தை எடுத்து, வாழ்வில் வேறு நிலைக்குச் செல்வதே திட்டம்.

ஆய்வகத்தின் ஓய்வறையில் இருக்கும் பொழுதுகளில், விஷம் எடுக்கப்பட்ட பாம்புகளுடன் விளையாடுவதை ஒரு பொழுதுபோக்காகவும் வைத்திருந்தனர்.

அன்று முழு நாளும் வேலைப்பளு அதிகம். அதனை முடித்துவிட்டு ஓய்வெடுக்கத் தீர்மானித்தனர்.

மிருதுளா.. சுடச்சுட காபி போட்டுக் கொண்டு வந்தாள்.

“கிரிஷ்.. எப்படியோ நம்ம குறிக்கோள சீக்கிரம் அடையற நாளுக்கு பக்கத்துல வந்துட்டோம்னு நினைக்கறேன்…”

“ஆமா.. மிரு.. நம்ம வீட்டுல‌யெல்லாம் எதோ புரோஜக்ட் பண்றோம்னு சொல்லி பர்மிஷன் வாங்கி நாம இந்த வேலையப் பார்த்துட்டு இருக்கோம்.. மாட்டாம காரியத்தச் சாதிச்சிட்டோம்னா பரவாயில்ல…”

“கண்டிப்பா மாட்டிக்க வாய்ப்பே இல்ல.. நமக்கு உதவி செய்யற எல்லாருக்கும் நல்ல பேமென்ட் தரதா சொல்லி வச்சிருக்கும் போது நமக்கு என்ன கவலை.. சரி எப்போ நாம அந்த மலைக்குகைக்கு போகப்போறோம்?”

“சீக்கிரமா ஒரு டேட்ட பிக்ஸ் பண்ண வேண்டியதுதான்.. அந்த வழியெல்லாம் கூகுள்ள தேடிப்பார்த்தேன்.. ஒன்னுமே காட்டல.. இது வரைக்கும் மனித நிழலே படாத காட்டுக்குள்ள இருக்கற மலை அது.. அந்த மலையில இருக்கற‌ குகை அது.. அதுவும் அடைச்சு இருக்கோ.. திறந்து இருக்கோ.. உள்ளுக்குள்ள வெளிச்சமெல்லாம் கண்டிப்பா இருக்க வாய்ப்பே இல்ல.. அதுக்கு தேவையான எல்லா முன்னேற்பாடுகளையும் செஞ்சுட்டு தான் கெளம்பணும்… நம்ம உடம்பெல்லாம் எந்த விஷத்தையும் தாங்கும் சக்திய பெற்றிருச்சா…..!!?”

“கண்டிப்பா… அதத்தான்.. நான் கண்டுபிடிச்ச கருவிய வச்சு தினமும் செக் பண்ணிட்டு தானே வர்ரோம்.. நேத்திக்கே மூனு பேருக்கும் 100 சதவீதம் எதிர்ப்பு சக்தி வந்தாச்சுனு அந்தக் கருவி சொன்னுச்சுல்ல.. அப்பறம் என்ன கவலை? இன்னும் ரெண்டு மூனு நாள்ல கெளம்ப வேண்டியது தான்.. நம்ம எய்மை நோக்கி..”

“ஓகே.. இப்ப ரெஸ்ட் எடுக்கலாம்.. மூணு நாள்ல எல்லா விதமான பொருட்களோட கெளம்பறோம்…. “ஆப்ரேஷன் விஷம்”னு இதுக்கு பேரு வச்சுக்கலாம்.. ஆப்ரேஷன் பொக்கிஷம்னு வச்சா சிலருக்கு சந்தேகம் வரக் கூட வாய்ப்பு இருக்கு…”

“ஓகே.. அப்படியே ஆகட்டும்.. நிச்சயம் நம்ம ‘ஆப்ரேஷன் விஷம்’ ஜெயிக்கும்…”

“ஓகே.. பை..பை..”, எனச் சொல்லி விட்டு அனைவரும் அவர்களது இருப்பிடம் அடைந்தனர்.

***

அந்த நாளும் வந்தது.

முந்தின நாள் இரவு மூவருக்கும் தூக்கமே வரவில்லை. எவ்வளவு பெரிய பொக்கிஷத்த நோக்கிய நமது வாழ் நாள் கனவு… நிச்சயம் இதுல சாதிக்கணும்… என்ற வெறி வர..

விருவிருவென தயாராயினர்.

“அப்படி அங்க என்னத்தான்டா இருக்கும்? ஹரி உனக்கு எதாவது தோணுதா..?”

“எனக்கு என்னென்னவோ தோணுதுடா.. இதுவரைக்கும் உலகமே பார்க்காத.. தங்கம், வைரம், வைடூரியமெல்லாம் அங்க இருக்கும்னு தோணுது.. நமக்கு முன்னாடி இதத்தேடி யாராவது முயற்சி பண்ணாங்களானு என்னானு தெரியல.. அப்படியே முயற்சி பண்ணியிருந்தாலும் இன்னும் அவங்க யாரும் உயிரோட இருக்க வாய்ப்பே இல்ல.. உலகே காணாத பாம்புகள் எல்லாம் அங்க இருக்குனு குறிப்புல இருந்து தெரியுது… எதோ ஒரு தைரியத்துல கெளம்பிட்டோம்.. அப்பவும் உள்ளுக்குள்ள ஒரு நடுக்கம் இருக்கத்தான் செய்யுது..”

“ஹரி.. இது தேவையே இல்லாத நடுக்கம்? அதான் நம்ம உடம்ப எதையும் தாங்கும் விதமா ரெடி பண்ணிட்டோமே.. அப்பறம் என்ன பயம்? நம்ம மிருதுவப் பாரு.. எப்படி ஹேப்பியா சிரிச்சுட்டே இருக்கானு…!”

“டே டே.. நான் வெளியத்தான்டா சிரிக்கறேன்.. உள்ளுக்குள்ள நான் அழுகற சத்தம் உங்களுக்கு கேக்காதுடா கேக்காது.. எதோ ஆரம்பத்துல இருந்தே கூட இருக்கமேனு தான் இப்பவும் இருக்கேன்.. எனக்கும் கொஞ்சம் பயமாத்தான் இருக்கு… அப்படீனு சொல்லுவேனு நெனச்சியா.. டே.. நானெல்லாம் ராஜ பரம்பரைடா… எதற்கும் அஞ்சாத சிங்கக்குட்டி.. பயப்படமா எங்கூடவே வருவீங்களாம்.. நாம சரியா போயி.. நம்ம குறிக்கோள சாதிப்போமாம்.. ஓகே..”

“ஓகே..”

இப்படியா பேசிய படியே அந்த அடர்ந்த காட்டின் முகப்பிற்கு வந்து சேர்ந்தனர். காட்டின் சத்தமே கிலி கொடுத்தது.

“பாரேன்.. காடு இப்படி கத்தும்போதும்.. இந்த மரம் பயப்படாம இருக்கறத!!”

“குட் ஜோக்.. பட்.. ஜோக் சொல்லும்போது ஏன் உன் குரல் நடுங்குது!? காத்து ஜில்லுனு அடிக்குதுனு சொல்லப்போறீயா?”

“இல்ல.. என் ஹார்ட்டு ஜில்லுனு இருக்குனு சொல்லப்போறேன்..”

“ஹா.. ஹா.. நீ சொல்லிட்ட.. நான் சொல்லல.. வெளிச்சத்துலேயே போலாம்னு தான் இப்படி மத்தியானத்துல வந்தோம்.. இன்னும் காட்டுக்குள்ள நுழையவேயில்ல.. இப்படி பயமுறுத்துதே!”

“காடு… பாவம்.. இவ்ளோ நாளா ரொம்ப தனிமையில இருந்திருக்குமில்ல.. இப்ப நம்ம பார்க்கவும்.. கத்தி குழந்தையாட்டம் ஆர்ப்பாட்டம் பண்ணுதோ என்னவோ!?”

“சரி.. நம்ம வேலையப் பார்ப்போம்… யாரும் வராத காடு. யாரும் நுழையாத குகை.. நமக்கு எந்த வழிகாட்டியும் இல்ல… நாமளே போறோம்.. சாதிக்கறோம்..”

“சரி.. வாங்க போலாம்”, என்றவாறே மூவரும் மெல்ல மெல்ல நடக்க ஆரம்பித்தனர்.

வழியில் முனிவர் ஒருவர் தவம் செய்வது போல கண்ணில் பட்டது. என்னவென்று பக்கத்தில் சென்றுபார்த்தால் ஒன்றும் தட்டுப்படவில்லை. ‘என்ன இது பிரமை’ என யோசித்தவாரே தொடர்ந்தது அவர்களது நடைப்பயணம்.

“ஏன் ஹரி.. இங்க அனகொன்டா கூட இருக்குமா என்ன?”

“ஏன் மிருது.. இப்படியெல்லாம் கேட்டு ஹரிய பயமுறுத்தற்?”

“சரி.. நான் ஹரியத்தானே பயமுறுத்தறேன்.. அப்பறம் நீ ஏன் நடுங்கற கிரிஷ்!?”

“நெவர்.. நானாவது நடுக்கறதாவது”, என சொல்லியபடியே நன்றாக நடுங்கினான் கிரிஷ்..

“சரி.. சரி.. மிருது.. இப்படியெல்லாம் எடக்குமுடக்கா எதுனா சொல்லி.. எங்கள பயமுறுத்தாம அமைதியா வா”, என்று ஹரி சொன்ன போது குகைக்கு மிக அருகில் இவர்கள் வந்துவிட்டனர்.

பெரிய பாறைகளால் மூடப்பட்டிருந்தது அக்குகை. அதன் நுழைவாயில் எலும்புக்கூட்டின் படம் வரையப்பட்டிருந்தது

“எவனோ பொக்கிஷத்த வச்ச மகராஜா தான் இத வரஞ்சிருக்கனும்…”

“சரி… சரி.. முதல்ல இந்தக்கல்ல நகர்த்தப் பாருங்க… அப்பறம் ராஜாவப் பத்தியும், ராணியப் பத்தியும் பேசலாம்..”

அப்போது அருகிலிருந்த.. ஒரு சிறு செடியை மெல்ல ஹரி தூக்கினான்.. அப்போது குகையின் கதவு தானாக திறக்க ஆரம்பித்தது.. அதாவது பாறை விலகிக்கொடுக்க சிறிய வெளிச்சத்துடன் கூடிய குகையின் நுழைவாயில் இவர்களை பயத்துடன் வரவேற்றது.

மெல்ல இவர்கள் முன்னேறி நடக்க ஆரம்பித்தனர்.

ஒரு பாதை முடிந்து விசாலமான ஒரு அறை அங்கு தெரிய ஆரம்பித்தது. அங்கே கோடிக்கணக்கான பாம்புகள் தரையில் ஊர்ந்து கொண்டிருந்தன.. ஒவ்வொன்றும் ஒவ்வொரு நிறம்.. ஆரஞ்சு நிறப்பாம்புகள் நெருப்பென ஜொலிஜொலித்து பயமுறுத்தின.. அவற்றிற்கு நடுவே ஒரு பாதை மாதிரி தெரிய.. பாம்புகளை தொந்தரவு செய்யாமல் இவர்கள் முன்னேறிச் செல்ல… ஒரு மிகப்பெரிய தங்கப்பெட்டி இவர்கள் கண்ணுக்கு முன்னே ஒரு மேடையில் வைக்கப்பட்டிருந்தது.

ஆச்சரியத்துடன் பக்கத்தில் போன மூவரும் திடுமென பயந்து அப்படியே மயங்கி விழுந்தனர்.

“சாயா.. சாயா”, என கத்தியபடி.. ஒரு மலையாளி இவர்களை நோக்கி வந்ததைக் கண்டதாலே இந்த விபரீதம் நிகழ்ந்தது.

அப்போது.. “ஹரே.. க்யா.. குவா.?”, என்ற படி ஒரு சர்தார்ஜி இவர்களை நோக்கி ஓடிவந்தார்.

– திரு.கணேஷ் பாலா சார் முகநூலில் நடத்திய படத்திற்கு கதை எழுதும் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றக் கதை, அக்டோபர் 2021

Print Friendly, PDF & Email

2 thoughts on “ஆப்ரேஷன் விஷ(ம)ம்

  1. அடுத்து என்ன? அடுத்து என்ன? என்று எதிர்பார்க்கவைக்கும் சஸ்பென்ஸ் கதையை தொய்வில்லாமல் கொண்டு செல்கிறது. நச்சென்று முடித்தவிதம் அருமை. குழந்தைகளை மிகவும் ஈர்க்கும் சிறுகதைகளில் இதுவும் ஒன்று.
    வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.
    ஜூனியர் தேஜ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *