ஆத்தா

 

“நாடி விழுந்து நாளு நாலாச்சே.. இன்னமும் மூச்சு நிக்காம இழுத்துகிட்டிருக்கே.. ஏ ஆத்தா சிலம்பாயி.. எங்கைய்யா சாத்தையா.. என்ன கணக்கு வெச்சி இந்த சீவனை இழுத்துக்க பறிச்சுக்கனு விட்டிருக்கீகன்னு வெளங்கலையே..”

- இன்னைக்கு பொழுது தாண்டாது என்று தான் குறித்துக் கொடுத்த கெடு தாண்டியும் உயிர் பிரியாமல் கெட்டிமாக நின்ற சேதி புரியாத குழப்பத்தில் புலம்பித் தீர்த்தாள் கருப்பாயிக் கிழவி. அந்த ஊர் வைத்தியச்சி.

ஆத்தா1“அடிப் பாதகத்தி மகளே.. எனக்குப் பிந்தி வந்தவளே.. நீ ஒழச்ச ஒழப்புக்கு இன்னுங் கொஞ்சங் காலம் வாழ்ந்திருக்கலாமேடியாத்தா கல்லுக்குண்டாட்டமா.. வந்தவக ஆரு போனவக ஆருன்னு புரியாம, பெத்த ஒறவும் துக்கத்துக்கு இல்லாம, இப்படி பஞ்சாக் கெடக்கிறயேடி பொசகெட்ட சிறுக்கி…” வசவு வார்த்தைகளில் பாசத்தைக் கொட்டி, ஒப்புச் சொல்லி அழுதாள் நாச்சம்மா. கூரியாயிக்கு முந்திப் பிறந்த ஒன்றுவிட்ட உறவு.

‘மண்ணு மேல, பொன்னு மேல ஆசை இருந்தாலும் இப்படித்தான் இழுத்துகிட்டிருக்கும். எதுக்கும் அதுக்குண்டான வைத்தியம் செஞ்சு பாப்பம்’ என்று கூரியாயி பிறந்து, வளர்ந்து, நடந்து, சலித்த அந்த கிராமத்து மண்ணை கிண்ணியில் கரைத்து, தெளிந்த கரைசலை வாயில் ஊற்றிப் பார்த்தார்கள். ஐந்தாறு பவுன் கொண்ட ரெட்டை வடம் சங்கிலியை ‘அங்கன கொஞ்சம் இங்கன கொஞ்சம்’ என்று அம்மிக் கல்லில் பட்டும் படாமல் உரசி, உரசிய இடத்தின்மீது கொஞ்சம் தேனை விட்டு தேய்த்து எடுத்து தடவி விட்டார்கள் நாக்கில், ‘இந்தா நீ போய் ஜீவன எடுத்துக்கோ’ என்று.

ஒன்றும் பிரயோசனப்படவில்லை. திறந்த வாய் திறந்தே கிடக்க, சொட்டு தண்ணியும் உள்ளே செல்லுதில்லை.

“ம்.. நமக்கு தெரிஞ்ச பண்டிதமெல்லாம் பாத்தாச்சு. எதுக்கும் அசையலியேப்பு.. மகள நெனச்சுத்தான் மனசுக்குள்ள மருகுதா இருக்கும் கெழவி உசுரு. தாக்கல் சொல்லியும் அவளக் காங்கலையே? அதுவுஞ்சரிதான்.. வாழ்ந்து முடிச்ச பொம்பளை, இதுக்கே இம்புட்டு வீம்பு. கெடையில விழுகந்தண்டியும் மகளப் பத்தி ஒரு சொல்லு சொன்னதுண்டா?! நெனச்சதாக்கூட காட்டிக்கலையே.. இது பெத்தெடுத்த சிறுக்கி மட்டும் ஆத்தாளுக்கு கொறச்சலாவா இருக்கப் போறா? நடக்கறாப்பல நடக்கட்டும்.. இனி அந்தச் சாமிக உட்ட வழி..” தோளில் கிடந்த துண்டால் திண்ணை தூசியை தட்டி விரட்டி, தூணில் சாய்ந்து உட்கார்ந்தார் ராமநாதக் கோனார்.

ஆத்தா2ஒரு உயிர் பிரிவதைவிட, பிரியாமல் நிலைத்திருந்ததே பெரும் சுமையாய் அழுத்திக் கொண்டிருந்தது அங்கே.

“கொலப் பட்டினியாக் கெடக்கிறியே.. இந்தா எங்கண்ணு முன்னாலயே இதத் தின்னு. நா பார்த்துட்டுத்தான் போவேன்..’ புல்லுக்கட்டை கையில் வைத்து, சீக்காய்க் கிடக்கும் செவலைக் காளையிடம் மல்லுக்கட்டிக்கொண்டிருந்தாள் பூவழகி.

“ஏம்த்தா பூவழகி. உங்காத்தா இப்பவோ அப்பவோண்டு கண்ணு மசந்து கெடக்குது அங்க. வெரசா வா ன்னு சேதி வந்தும் நீ நகராம கெடக்கறது நல்லால்ல பாத்துக்க.. பெத்தவ சாபம் பொல்லாது ஆத்தா.. உனக்காக இல்லேண்டாலும் ஒப்புக்காச்சும் போய் தலைய காமி. நாளப் பின்ன நமக்கும் நாலு சனம் நல்லது கெட்டதுக்கு முன்ன நிக்க வேணுமா இல்லையா..” மாமனார் வார்த்தையைக் கேட்டும் கேளாதவளாக கால்நடையின் வயிற்றை நிரப்புவதிலேயே கவனமாக இருந்த அவளை பயம் கலந்து பார்த்தது குடும்பம், ‘இப்படியுமா இருப்பா ஒருத்தி?!’

பதில் தவிர்த்து, இறுகி நின்ற பூவழகியின் நினைவோட்டம் வேறாக இருந்தது. “எம்பொழப்பத் தெரிஞ்சுக்காம அதெப்படிப் போகும் எங்காத்தா உசிரு? பண்ணுன பாவத்துக்கு காத்துதான் கெடக்கட்டுமே கொஞ்ச காலம். என்ன இப்ப..” வீம்புக்கு நீர் இறைத்தாள் பூவழகி. அது கிளை பரப்பி வளர்ந்திருந்தது விசுவிசு என்று. ஒரு உயிரைக் குடித்து, ஒரு குடும்பத்தைப் பிரித்து, பெற்றவளுக்கும் மகளுக்கும் ஆகாமல் செய்த காலக்கசடு அது..

பூவழகியும் பஞ்சவர்ணமும் ஒன்றாகப் பிறந்த இரட்டைப் பெண்கள். கூரியாயி குழந்தை வரம் வேண்டி பழனி முருகனுக்கு தைப்பூசத்தில் காவடி தூக்க ஆரம்பித்து, பன்னிரண்டு தூக்கலுக்குப் பிறகு, அவளின் முற்றிப்போன முப்பத்தி எட்டு வயதில் தலைச்சனும் கடைசியுமாக வந்து பிறந்தவர்கள். பாசத்தைக் கொட்டி, குறிஞ்சிப் பூ போல பிள்ளைகளை பொக்கிஷமாய் வளர்க்கத்தான் பெற்றவர்கள் ஆசைப்பட்டார்கள்.

ஆனால் விதி? அது வேறாக இருந்தது.

ஆத்தா3பெண்களுக்கு இரண்டு வயதிருக்கும், வழக்கம்போல, “இந்தா இருக்கற சந்தைக்கு யாவாரத்துக்கு போயிட்டு வாரேன்” என்று சென்ற கூரியாயி புருஷன் வழக்கப்படி திரும்பி வரவில்லை. உடம்பைத்தான் கொண்டு வந்தார்கள். சந்தையில் வந்த சண்டையில் நெஞ்சில் அடி வாங்கி சாவை சேர்த்துக்கொண்டான்.

திக்கித்த கூரியாயிக்கு, ஆளுக்கு ஒரு கையாகப் பிடித்து நின்ற பிள்ளைகளைப் பார்த்ததும் துக்கம் பலநூறு மடங்காகப் பெருகி பொங்கியது. அவளையும் பிள்ளைகளையும் வைத்து வழி நடத்த அண்ணன் தம்பிகள் என்று ஆளும் பேருமாக யாரும் இல்லை. காலம் பாதி போன கடைசியில் ஒற்றை ஆளாக இரட்டைப் பெண்களை கட்டிக் காப்பாற்றும் பொறுப்பு பெருஞ் சுமையாகப்பட்டது அவளுக்கு. “தகப்பன் இல்லாத பொண்ணுங்க தட்டுக் கெட்டுப் போயிட்டாய்ங்கனு யாரும் ஒரு கெட்ட சொல்லு சொல்லிடாம சூதானமா பாத்துக்கணுமே” என்று அவர்கள் பச்சைப் மண்ணாக இருக்கையிலேயே அதீத கவலைப்பட்டவள், ஒரு சூட்சுமம் செய்தாள்..

செம்மண் புழுதி பறக்கும் அந்தப் பட்டிக்காட்டில் குடிக்க கஞ்சி இருக்கிறதோ இல்லையோ, கும்பிட மட்டும் வகை வகையாக குலசாமியிருக்கும். அதில் ஐந்தாறு சாமி அப்பப்போ வந்து குறி சொல்லும் கூரியாயி உடம்பில் இறங்கி.. அப்படித்தான் அவள் நம்பினாள். அப்படித்தான் ஊரும் சொல்லியது.. நூற்றுக்கு ஒன்று இரண்டு கூடக் குறைய குடும்பங்கள் இருக்கின்ற அந்த ஊரைப் பொறுத்தவரை கண்கண்ட தெய்வம் கூரியாயிதான். அவள் வார்த்தைகள் ஊருக்கு தெய்வ வாக்கு. அதையே பிள்ளைகளை வளர்க்க வாகாக பயன்படுத்திக்கொண்டாள்.

அன்பாக, அனுசரணையாக மகள்களிடம் கூரியாயி பேசிப் பார்த்ததில்லை யாரும். செல்லம் கொடுத்தா கெட்டு குட்டிசுவரு ஆகிடுவாங்களாம். எப்போதும் அதட்டல் குரல். விழிகள் உருட்டி ஒரு மிரட்டல் பார்வை. அம்மாவாக சொல்ல வேண்டிய வார்தைகளையும் ‘ஆத்தா’ வாக்காக குறி சொல்லியே குடும்பத்தை ஓட்டினாள். ‘சொல்லு மீறி நடந்தா குல தெய்வம் கண்ணக் குத்திடுமே’ என்று அரண்டு போயே வளர்ந்தார்கள் அக்காவும் தங்கையும்.

சிறகு பிய்க்கப்பட்ட பறவைகளாக அவர்கள் தத்தி தத்தி நடை பயின்ற காட்சிக்கு ஊரே சாட்சி. பெற்றவளிடம் கிடைக்காத பாசச் சொற்களை ‘எனக்கு நீ குடு.. உனக்கு நான் தாரேன்..’ என்று உடன்பிறப்புக்கள் தங்களுக்குள்ளாக பரிமாற்றம் செய்து, மனதை நிரப்பி, ஏதோ கொஞ்சம் மகிழ்ந்து போனார்கள். வீட்டிலிருந்து பத்தெட்டு வைத்தால் வந்து விழும் நிறை பெருக்கி நீர் தளும்பும் கண்மாய் கரை மட்டுமே அவர்கள் சென்று வர அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச தொலைவு.

“ஏ கம்மாய்.. ஏன் நீ எப்பவும் இங்கனயே தேங்கிக்கெடக்கறவ? நகந்து போனா உம்ட்ட ஆத்தாளும் உன்ன வையுமா?” அவர்களின் குரல் சுமந்த காற்றுப் பட்டு நீர்தேக்கம் சலசலக்கும். அதுதான் பதில் அவர்களுக்கு.

“ஓ.. இந்தப் புள்ளைகளுக்கு துணையா இருப்பமேண்டு நீயாத்தேன் தங்கிட்டயா? இரு. இரு. உங்காலம் முடியுமட்டும் நாங்க இருக்க வழி இல்ல. எங்க காலம் தீருமட்டும் நீ வத்தாம வாழ்ந்திரு..” இயற்கையிடம் கதைபேசிக் கதை பேசிக் கலைந்தது அவர்கள் காலம். நீரும், தீயும், செடியும், மரமும், ஈயும், எறும்பும் மனித பாஷை புரிந்த சிநேகிதகாரிகள் ஆனார்கள் அந்த பூஞ்சை மனதுப் பெண்களுக்கு.

பூஞ்சை மனசுக் காரி, அம்மாவுக்கு பயந்த பிள்ளை என்பதால் மன்மதன் பாணம் விடாமல் போய்விடுவானா?! விட்டுவிட்டான். பஞ்சவர்ணத்தின் மீது அத்தை மகன் முத்தரசுக்கு ஆசை. அவளுக்கும்தான். அங்கேதான் பிடித்தது சனி. ஒரே வம்சத்தில் வந்தவர்கள் ஆனாலும் கூரியாயி குடும்பத்துக்கும் முத்தரசு வகையறாவுக்கும் மூன்று தலைமுறைக்கும் முன்னால் முட்டப் பகை. பங்காளிகளுக்குள் பங்கு பிரிப்பதில் ஆரம்பித்த வில்லங்கம் வெட்டுப்பலி குத்துப்பலி பார்த்து விலகி நிற்கிறார்கள். வெட்டியது முத்தரசு பாட்டன். வெட்டுப் பட்டு உயிரை விட்டது கூரியாயி அப்பச்சி.. கால ஓட்டத்தில் பழையதை மறந்து முத்தரசு குடும்பம் ஒட்ட வந்தாலும் பறி கொடுத்தவள் பகையை விலக்க தயாராக இல்லை.

அப்பேர்ப்பட்ட நேரத்தில்தான் அரசல் புரசலாக கூரியாயி காதுக்கும் வந்தது மூத்த மகள் விஷயம். அவள் கத்தவில்லை. கண்ணீர் விடவில்லை. மகளிடம் ஒரு சொல்லும் கேட்கவில்லை. காதோடு வந்த சேதியை கமுக்கமாக மனதோடு வைத்துக்கொண்டாள், ‘உனக்கு வெச்சிருக்கேண்டி மகளே ஒரு வேப்பில’ என்று.

இரவிலும் சேராமல் பகல் என்றும் சொல்வதற்கு இல்லாத இரண்டுங்கெட்ட மசமசத்த அந்திப் பொழுது அது. எப்பொழுதும் சாம்பல் நிறமோ, நீலச் சாயமோ பூசிவரும் வானம் அன்றைக்கு செஞ்சாந்தைக் கொட்டிக் கவிழ்த்ததைப் போல ‘சிவீர்’ என்று சிவப்பு வண்ணம் பூசிக்கிடந்தது, ‘இன்னைக்கு நடக்கப்போற சம்பவத்துக்கு நாந்தான் சாட்சி’ என்கிற மாதிரி.

கண்களை மூடி, சம்மணமிட்டு குலவை கொட்டிக்கொண்டிருந்தாள் கூரியாயி..
ஆறடிக்கு அரையடி குறைவு அவள் உயரம். அதற்கேற்ற சதைப் பிடிப்பான உடம்பு. ஓங்கு தாங்கான ஆகிருதி. அவிழ்த்து விட்டால் இடுப்பைத் தொடும் அடர்ந்த கூந்தலை கைக்கு அகப்பட்ட வாக்கில் எடுத்துச் சுருட்டி, கொண்டை என்ற பெயரில் உச்சியில் குமித்து வைத்திருந்தாள். அப்போதுதான் அரைத்தெடுத்த பசும்மஞ்சளில் முக்கியெடுத்து அப்படியே கட்டிக்கொண்டதுபோல அடர் மஞ்சள் புடவையில், நெற்றியை மறைத்த விபூதிப் பட்டையும், நடுவில் மூன்றில் ஒரு பங்கு இடம் பிடித்து அப்பப்பட்ட சந்தனக் காப்பும், அதன் மையத்தில் ஒற்றை ரூபாய் நாணயம் அளவில் வட்டமிட்ட ஆஞ்சநேயர் கோயில் செந்தூரமுமாக இருந்தவளைப் பார்க்கும் யாரும் பயப்படாமல் இருக்க முடியாது. அந்தப் பயத்தின் அழுத்தமான வடிவங்களாக கூரியாயியின் முன் உடல் குறுக்கி உட்கார்ந்திருந்தனர் பஞ்சவர்ணமும் பூவழகியும். எதிரில் இருப்பது ஒரு வகையில் அவர்களுக்கு அம்மா முறை வேணும் என்றால்கூட அவர்கள் ஒப்புக்கொள்ள தயாராக இல்லை அப்போது.

பின்னிப் பிணைந்திருந்த கைகளை தலைக்கு மேல் உயர்த்தி உடம்பை இப்படியும் அப்படியுமாக முறுக்கி, கூரியாயி ‘உஸ்ஸ்ஸ்… உஸ்ஸ்ஸ்…’ என்று சடைந்து மூச்சு விட்டுக்கொண்டிருந்தாள் பயமுறுத்தலின் உச்சமாக.

“உஸ்ஸ்ஸ்..ஸ்ஸ்ஸ்ஸ்.. நான்தான் உங்குலசாமி சிலம்பாயி கருமேனியம்மன் வந்திருக்கேண்டி..”

“கும்புட்டுக்கறோம் ஆத்தா.. சொல்லாத்தா”

“உஸ்ஸ்ஸ்ஸ்… எந்தேகம் நெருப்பா கொதிக்குதடி. அத குளிரப்பண்ணனும்டி.. எம்மந்தையில உருவான ஒரு குட்டி ஆடு பகையாளி குடும்பத்துல உறவாட பாக்குதடி.. நல்லதுக்கில்ல.. இந்த வம்சமே அழிஞ்சு போகுமடி.. விடமாட்டேன்.. நடக்க விடமாட்டேன்.. நாஞ் சொல்றது புரியுதா?.. ம்ம்..” கடப்பாரையை கரைத்து காது வழியே ஊற்றியதுபோல இருக்கிறது அவள் குரல் தொட்ட உணர்வு. உடலை முன்னும் பின்னுமாக அவள் சுழற்றிய வேகத்தில் கூந்தல் சரசரவென சரிந்து, விரிந்து முதுகை மறைத்தது. கழுத்தை முட்டுவதும் விலகுவதுமாக ஆவேச நடனமாடின கனத்து தொங்கிய பாம்படங்கள். நாக்கைத் துருத்தி, கண்களை விரித்து, படைத்தவள் தோரணையில் பெற்றவள் மிரட்ட, உடலும் உயிரும் நடுங்கிப் போனார்கள் பெண்கள் இருவரும்.

“மூத்தவ மனசுல இப்ப ஒரு தள்ளாட்டம். கெட்ட சத்தி உள்ள பூந்து மனசப் பிராண்டுது. அம்மாளையும் மகளையும் பிரிக்க ஒரு குடும்பமே கூட்டுச் சேர்ந்து பண்ற சதி அவளுக்குப் புரியலை. இப்ப தெரிஞ்சுக்க.. அதுக்கு இனி எடங்கொடுக்க மாட்டேன்னு சூடத்து மேல அடிச்சு சத்தியம் பண்ணு. ம்ம்..” உறுமிக்கொண்டே கூரியாயி கையை நீட்ட, மாற்றுச் சிந்தனைக்கே நேரமின்றி நெருப்பின் மீது கை வைத்து ‘சாமி சத்தியம்’ செய்து கொடுத்தாள் பஞ்சவர்ணம். பிறகும் அவள் மீது ஒரு அக்னிப் பார்வையை வீசி, கொளுத்திக் கொடுத்த சூடத்தை வாங்கி நடு நாக்கில் வைத்து நெருப்போடு விழுங்கி, வந்த சாமி மலையேறியது.

முகம் கறுத்துப் போனாள் பஞ்சவரணம். எதுவும் விளங்கவில்லை அந்தச் சின்னப் பெண்ணுக்கு. மவுனம் சுமந்தாள். அந்த மவுனத்தின் அர்த்தம் அன்றைக்கு ராத்திரியே தெரிந்துவிட்டது. ‘குலம் காக்கற சாமியை எதிர்த்து எப்படி வாழ்வது?’ என்று யோசித்து, வழி தெரியாமல், அரளி விதையை அரைத்து தின்றுவிட்டு சத்தமில்லாமல் செத்துப் போனாள்.

விடியக் கருக்கலில் விஷயம் தெரிந்து “ஐயையோ எம்மகளுக்கு செய்வினை வெச்சு கொன்னுட்டாங்களே..” என்று கட்டிப்பிடித்து ஒப்பாரிக்கு வந்த கூரியாயியை அசிங்கம்போல் உணர்ந்து, உதறி விலகினாள் பூவழகி. அவளுக்கு ஆறுதலான ஒரு உயிரும் விட்டு விலகியதில் பேச்சு மறந்து புத்தி துவண்டு கிடந்தாள். அக்கா செத்துப் போனதற்காக துக்கப் படவா, தனியா விட்டுப் போனதுக்காக கோபப்படவா? என்று புரியாமல் மருகி, கூரை ஓட்டை வெறித்து முடங்கினாள். அதன்பின் வந்த எந்த ஒரு பொழுதும் வெளிச்சத்தோடு விடியவேயில்லை அவளுக்கு.

பஞ்சவர்ணம் உயிர் விட்டு மாதம் ஐந்து முடிந்த ஒரு நாளில், இழவு விழுந்த வீட்டில் உடனே ஒரு நல்லது செய்து பார்க்க வேண்டும் என்ற ஊர்ப்பக்க நம்பிக்கைக்கு உயிரூட்ட, பூவழகியை பெண் கேட்டு வந்தது ஒரு சம்பந்தம். ‘ஒருத்தி போய்ச் சேர்ந்துட்டா, உள்ளவளும் வில்லங்கம் ஏதும் பண்றதுக்குள்ள தாலியேத்தி அனுப்பிடுவோம்’ என்று கூரியாயி செய்த ஏற்பாடுதான். இப்பொழுதும் தாயாக தகவல் சொல்லவில்லை. ஒரு பெரும் இழப்பிற்குப் பிறகும் மிச்சமிருக்கும் மகளிடம் பேச அவள் மனதில் எந்த பாசச் சொற்களும் சுரக்கவில்லை. “இது நா முடிச்சு போட்ட முடிச்சு. நீட்டுடி கழுத்த” என்று அம்மன் கட்டளையாகவே அவள் சாமியாட, உடன் பிறந்தவளை துள்ளத் துடிக்க அள்ளிக் கொடுத்துவிட்டு ஆற்ற மாட்டாமல் குமுறிக்கொண்டிருந்த பூவழகி வெறி கொண்டு எழுந்தாள் ஒரு பொம்பளை வேங்கையாக..

“இந்தாரு இத்தோட நிறுத்திக்க.. ஆத்தா பேரச்சொல்லி இன்னொரு சொல்லு சொன்னியானாக்க பாரு.” கண்களை உருட்டி, கால்களை அகட்டி, இடுப்பில் கைவைத்து தலைவிரிக் கோலமாக நின்றாள் பூவழகி பாதி பத்திரகாளிபோல. வேக வேகமாக கிழிறங்கி ஏறிய நெஞ்சு சொன்னது அவள் கீழ்மூச்சு மேல்மூச்சு வாங்குவதை. “உங் கேடுகெட்ட சட்ட திட்டத்துக்கெல்லாம் என்னத்துக்கு ஆத்தாள கூட்டு சேர்த்துக்கிறவ? குல சாமிக பேரச் சொல்லி சொல்லி நீ இதுங்காலமா பண்ணிய அழிச்சாட்டியம் போதுமடியாத்தா. எங்கூடப்பொறந்தவள மண்ணுக்குனு கொடுத்தாச்சே போதாதா. இன்னும் யாரு உசுரக் குடிக்க காத்திருக்கறவ? நீ பொறந்த குடிலதான மாமன் வம்சமும் வந்துச்சு. ஒரே எச்சிப்பால குடிச்சு வந்தவகதான உனக்கு முன்ன பொறந்தவக.. ஒரே ரத்தந்தான.. பின்ன எப்படி உன்ன ஏத்துக்கற ஆத்தா அவுகள ஒதுக்கி வைக்கும்? பெத்தவளுக்கு பிள்ளகள்ள என்னாடி ஆயா வேத்துமை இருக்கும். அப்படி வேத்துமை பார்த்தா அவ சாமி இல்ல, பேயி. உனக்கு பிடிச்சிருக்கறதும் பேயிதான். சாமினு பொய்யச் சொல்லி ஊர ஏமாத்தறதோட நிறுத்திக்க. எங்கிட்ட வேணாம். இப்பச் சொல்லுறேன் மனசுல வாங்கிக்க.. எம் பொறப்புக்கு முன்ன உங்குடும்பத்துல என்ன பகையோ ஏது குறையோ எனக்கொண்ணும் தெரிய வேணாம். நாங்க பாக்க அவுக நல்லவகதான். நம்பி போகலாம், தப்பில்ல. எம் பொறந்தவ எந்த ஊட்டுல வாக்கப்பட ஆசப்பட்டாலோ அதுதா எனக்கும் புருஷன் வூடு. என் வகுத்துல ஒரு புள்ளைண்டு உண்டானா அது உம்ட்ட அண்ணனூட்டு வாரிசாத்தான் இருக்கும் பாத்துக்க.” பிடி மண்ணை கையிலெடுத்து சபதமிட்டாள் பூவழகி..

அதுங்காலமாக சாதுவாகப் பார்க்கப்பட்ட பெண்ணிடம் வெளிப்பட்ட ருத்ரமும், குரலில் தெறித்த உறுதியும் கூரியாயியை நிலை குலைய வைத்தது. வாழ்க்கைப் பிடிமானமாக தனக்கென இருக்கும் ஒருத்தியும், ‘நான் உனக்குச் சொந்தமில்லே..’ என்றதும் நிராதரவாக விடப்பட்டதாக உணர்ந்தாள். இயலாமை. அதனால் கூடிய மனக் கடுமை. உச்சந்தலைக்கு ஏறி நின்றது ஆத்திரமும் ஆங்காரமும்.

“அடியே எஞ் சின்னச் சிறுக்கி, சவடாலாடி விடற ஆத்தாகிட்ட? நீ காலடி வெக்கற குலம் அழிஞ்சு போகுமடி.. உன்னயும் சேர்த்திழுத்து குடி மூழ்கப் போகுதடி.. தூமச் சேலைக்கும் வக்கத்து வாழ்வழிஞ்சு போவடியோய்.. மஞ்சக் கருக்கு மறையும் முன்ன தாலியறுத்து வரப்போறவளே.. பெத்தவ வாக்குல நிண்டது அந்தச் சாமிகதான். அவுக சொன்னது அத்தனையும் சத்தியமுண்டு ஆத்தா சன்னதிக்கு நீ வந்து பழியா கண்ணீர் கொட்டற காலம் வெரசா வரப்போகுதடி.. அந்தக் கதியக் காணாம இந்தக் கட்டைல உசிரு பிரியாதுடி.. இது உன்னப் பெத்தவ உருவுல வந்து வாக்குச் சொல்ற ஆத்தா சிலம்பாயி கருமேனியம்மன் என் மேல சத்தியம்டி..ம்ம்..” பழுக்கக் காய்ந்த வறட்டு இரும்புச் சட்டியில் கொட்டிக் கவிழ்த்த கொள்ளு போல கூரைக்கும் பூமிக்குமாக எகிறிக் குதித்து, உடம்பு குலுங்க, மூச்சிரைக்க உறுமித் தீர்த்தது குலசாமியா? கூரியாயியா? அது அவர்கள் இருவருக்கு மட்டுமே வெளிச்சம்.

கூரியாயியும் பூவழகியும் கடைசியாக முகம் பார்த்தது அப்போதுதான். கண்மாயிடம் விடை பெற்று, வளர்த்த பூங்குடியின் எல்லை கடந்து பாவனக் கோட்டை, சருகணி, புலியடிதம்மம் தாண்டி உருவாட்டியில், ஊர் மெச்ச வாழும் மாமன் வீடு தேடிப் போனாள். ஊர் வழக்கமும் சாதி வழக்கமும் அவளைத் தடுக்க இடம் கொடுக்காததால் தங்கு தடையின்றி அக்கா ஆசைப் பட்டவனையே கட்டிக்கொண்டாள் பூவழகி. உள்ளன்போடு அவளை ஏற்றுக்கொண்டது முத்தரசு வீடு. மூத்த தலைமுறை செய்த பாவத்துக்கு பரிகாரமாக உள்ளங்கையில் வைத்து தாங்கினார்கள் அவளை ஆளாளுக்கு. பெற்றவளிடம் கிடைக்காத பாசம் புகுந்த வீட்டு மனிதர்களின் போலியற்ற சீராட்டலில் கொட்டிக் கிடைக்க, வெகு சீக்கிரமாகவே அம்மாவை மறந்துபோனாள். தவறி எப்போதாகிலும் வரும் நினைவிலும் அக்காவின் அகால மரணக் காட்சியும் கூரியாயி வாரி இறைத்த சாப வார்த்தைகளும் மட்டுமே இடம் பிடித்தன.

பூவழகி கருவுற்று இடுப்பு வலி கண்டிருந்தாள். பிரசவம் சிக்கலாகி, பெத்துப் பிழைப்பாளா என்று மருத்துவச்சி கைவிரித்த அந்த நேரத்திலும் ரண வேதனையை தாங்க முடியாமல் மாமியார் கைப்பிடித்து ‘அத்தே.. அத்தே..’ என்று கதறினாலே தவிர, ஆத்தா என்று தவறியும் ஒரு சொல் சொல்லவில்லை. அத்தனை வெறுப்பை மனதில் பொதித்து வைத்திருப்பவளைத்தான் ‘உங்கம்மாவப் போய் ஒருதரம் பாரு’ என்று விரட்டிக்கொண்டிருந்தது உறவுக்கூட்டம். அவர்கள் வார்த்தையை மீற முடியாத ஒரு கடைசிப் பொழுதில் மனதே இல்லாமல் பயணப் பட்டாள்.

மாமியார் வீடு போட்டு அழகு பார்த்த நகைகளை அள்ளி எடுத்து உடம்பில் பூட்டிக்கொண்டு, புருஷன் பின் தொடர, அரணையும், பூராணும், சிறு பாம்புகளும் சர்வ சுதந்திரமாக உலவும் ஒத்தையடிப் பாதையில் வெங்கு வெங்கு என்று வந்தாள் பூவழகி. அவள் எடுத்து வைத்த ஒவ்வொரு அடியும், மக்குப்பிள்ளை தலையில் மசக்கோவம் கொண்ட வாத்தியார் வைக்கும் அழுத்தமான கொட்டுப் போல இருந்தது. வெயிலில் இறுகிக் கிடந்ததால் தப்பித்தது. வேறு காலமாக இருந்திருந்தால் அவள் பாத அழுத்தலில் மண் இளகி அடிக்கொரு பள்ளம் ஏற்பட்டிருக்கும். குறி சொல்லில் துரத்தப்பட்டு வந்தவளுக்கு ‘உன் வாக்கு பொய்யாப்போச்சு பாரு..’ என்று நேருக்கு நேராக நிரூபிக்கும் ஆத்திரம் மட்டுமே மிச்சமாக மிகுந்திருந்தது. “உஞ் சாவு சேதி கேட்ட என் காதுக்கு இரக்கமில்ல.. எங்கண்ணுக்காச்சும் அது இருந்தா விடறேன் ஒரு சொட்டு தண்ணி..” அருகில் இல்லாத அம்மாவிடம் அவளாகப் பேசிப் கையை வீசி நடந்தாள்.

‘இப்பவோ பொறகோ, எப்பனாலும் உறவ அறுத்துக்கிடுவோம்’ என்று மிரட்டிக்கொண்டிருந்த இற்றுப் போன கயிற்றுக் கட்டிலில் கிடத்தியிருந்தார்கள் நைந்து நாராகத் துவண்டு கிடந்த கூரியாயிக் கிழவியை. அறுபது சொச்சம் வயதுக்காரி.. அரை நூறு வருஷமாக ஓடி ஓடி உழைத்த தேகம் ஓய்ந்துபோய்க் கிடந்தது. ஒரு பக்க கையும் காலும் செத்துப் போய் வருஷத்துக்கும் மேல ஆச்சு. அது எந்தப் பக்கம் என்று கண்டுபிடிக்க முடியாதபடி மொத்த உடம்பும் சலனமில்லாது கிடந்தாள் இந்த ஆறேழு நாளாக. ‘ஆ’ என்று வாய் பிளந்து கிடக்கிறது. ஒட்டிக்கொண்டிருக்கும் அந்த சொச்ச உயிர், ‘நான் இங்கனதான் இருக்கேன்’ என்கிறது மூடிய இமைகளுக்குள் இருந்து. நிலை கொள்ளாமல் இங்கேயும் அங்கேயுமாக மிக மெதுவாக நகர்ந்து கொண்டிருந்த கருவிழிகள்தான் ஒரே ஆதாரம் அவள் உயிரோடுதான் இருக்கிறாள் என்பதற்கு.

“ஏம்த்தா கூரியா.. ஆரு வந்திருக்காண்டு பாரு.. உம்ட்ட மக வந்துட்டால்ல.. கண்ணத் தொறந்து பாராத்தா..” ஆள் மாற்றி ஆள் கத்துகிறார்கள் காதோரம். சவாலுக்கு முடிவு சொல்ல மட்டுமே ஓட்டமாக ஓடிவந்த பூவழகி, பெற்றவள் பேரில் அறிமுகம் செய்து வைக்கப்பட்ட அங்கிருந்த உருவத்தைப் பாத்ததும் ‘ஆத்தாடி..’ என்று நெஞ்சில் கை வைத்து உணர்ச்சி தொலைத்து நின்று போனாள். ‘மீனாட்சி கோயில் தேர் போல முதுகு நிமிர்த்தி சுற்றி வந்த அம்மா இத்தனூண்டு தோலில் சுருட்டி வைத்த எலும்புக்கூடாக உயிர் வீங்கிக் கிடப்பதைப் பார்த்ததும் ஈரக்குலை அற்றுப் போனது கூரியாயி பெற்ற மகளுக்கு. பெரிய மனுஷியாகப் பார்வையில் பதிந்து போன பொம்பளை இடையில் கடந்திருந்த பத்து வருடத்தில் வெகு வேகமாய் தொண்டுக் கிழவியாய் மாறிப்போன கொடுமையை அவள் மனது ஏற்க மறுத்தது. ‘ஆளை மாத்தி வெச்சு ஊரு ஏதும் சூது பண்ணுதோ’ என்னெனவோ யோசனை போகுது மூளைக்குள்ளே. கண்ணுக்கெட்டிய தூரம் வரை அலையடித்து கிட்டே நெருங்க நெருங்க காணாமல் போகின்ற கானல் நீராக சுத்தமாக வற்றிப் போனது அவள் வேகம். பொலபொலவென கண்ணீர் வழிய ஆரம்பித்தது. காதுக்கு இல்லாத ஈவும் இரக்கமும் கண்களுக்கு இருந்தது. மனதின் கடைசி இழையில் ஊசலாடிய பாசம், அவள் கண்ணீரில் உரம் பெற்று சரசரவென மேலேறி, அதுவரை மண்டிக் கிடந்த வெறுப்பையும் வெறுமையையும் ‘அங்கிட்டுப் போங்க..’ என விரட்டிவிட்டு முழுதாக மனதை தனதாக்கியது.

கூரியாயி உடலைத் தொட்டு மெதுவாக உலுக்கிக்கொண்டே ‘ஆத்தா.. ஆத்தா..’ என்று கூப்பிட்டுக்கொண்டே இருந்தாள் பூவழகி. எந்தச் சலனமுமில்லை. “மகளுக்காக காத்திருக்கறதால்ல நெனச்சோம். அவ இம்புட்டு நேரமாச் சத்தம் கொடுத்தும் அசையாமக் கெடக்கே என்ன..” குழப்பத்தோடு அலுத்துக் கொண்டது சனம்.

பொழுதை பொழுது தின்று கொண்டிருந்தது.

‘எத்தனை நேரம்தான் இப்படியே இருக்க?’ என்று நினைத்தவளாக, கண்களைத் துடைத்து எழுந்தாள் பூவழகி. அந்த கணத்தின் அடர்த்தியை குறைத்தது அவள் குரல், “நாஞ் சொல்லு மட்டும் உள்ள வாராத மச்சான்.” என்று புருஷனை வாசலுக்கு அனுப்பி வைத்துவிட்டு அடுத்ததாக செய்த காரியம் பிடறியில் அறைந்தது அங்கிருந்த பெரிசுகளுக்கு.

தன் உடல் போர்த்தியிருந்த நகைகளைக் கழற்றி வைத்தாள். தலை கொள்ளாமல் வைத்திருந்த பூவை எடுத்து ஓரம் போட்டாள். வைத்த அடையாளம் மீதமில்லாமல் நெற்றிப் பொட்டையும் துடைத்தெடுத்தவள், கொஞ்சம் தயங்கி, ஒரு நீள் பெருமூச்சுவிட்டு, மிச்சமாக கழுத்தில் கிடந்த திருமாங்கல்யத்தையும் கழற்றி எடுத்தாள். கட்டியவனைப் பறி கொடுத்தவளைப் போல் மூளியாய் அவள் நின்ற கோலத்தைப் பார்த்து பார்த்து மூச்சடைத்தது ஊர். ஆடு மாடுகளின் ஒலியும் நின்ற அந்தப் பொழுதில்,

“யாத்தே….”

- அடித்தொண்டை கிழியக் கத்தினாள் பூவழகி.. அவள் குரல் ஊரில் பாதியை தொட்டுத் திரும்பியது.

“இந்த மூளி முகத்துல முளிக்க கூடாதுண்டுதான் கண்ண தொறக்காம கெடக்கியா தாயி.. எங் குல சாமி சொல்ல மீறிப்போன பலன கண்டுட்டேன் ஆத்தா.. எதிர்வாதம் பண்ணின என் வாழ்க்கை சீரழிஞ்சு சீப்பட்டு போச்சே.. ‘என்ன நம்பி வாடி புள்ள..’ னு சிங்காரிச்சு கூட்டிட்டுப் போன உம் மருமவன் சீரழிச்சு தாலியக்கூட அறுத்தெடுத்து தொரத்திப்புட்டானே.. அது உனக்கும் தெரிஞ்சுதான் இருக்கும். நாதியத்து அவ வருவா, வெச்சுத்தாங்க நாம இருக்கக்கூடாதுண்டுதான் முந்திகிட்டயா அம்மா.. பிடி சோத்துக்கும் வக்கில்லாம பொறந்த மண்ண மிதிக்க வந்த இந்த அவத்த சிறுக்கிய காணக்கூடாதுண்டுதான் கண்மூடிக் கெடக்கியா ஆயா.. உன் வாக்குல வந்த நம்ம குலதெய்வம் சொன்னது அத்தனையும் சத்தியம்டி என்னப் பெத்தவளே.. ஊருக்கே குறி சொன்ன உன்ன, வாய் கூசாம தப்பு சொன்ன என்ன வெளையாடவுட்டு வேடிக்க பார்த்த தெய்வம் நின்னு கொன்னுடுச்சே.. பொழப்பத் தொலச்சுட்டு நான் தோத்துப்போயி நிக்கறேனேடி யம்மா.. என்ன ஒத்தப் பார்வை பாராத்தா கும்பி குளிந்து போவேனே..” கூரியாயி காதோரம், கட்டில் காலில் தலை முட்டி முட்டி அழுதாள்…

கண்ணீருக்கு பலன் கிடைத்துவிட்டது.

கட்டிலில் ஏற்பட்ட அசைவு, அதில் ஒட்டிக் கிடந்த கூரியாயி உடம்பிலும் பரவியது. மகளின் கண்ணீரும் வார்த்தைகளும் கூரியாயியின் உடல்மீதும் உள்ளத்தின் மீதும் செலுத்திய ஆதிக்கம் அவள் இமைகளை திறக்க வைத்தது. மகளை உள் வாங்கினாள். உடைந்து, தேங்காய் ஓடாக சில்லுச் சில்லாக சிதறிக் கிடந்த அவள் நினைவுகள், வெப்பத் திரவம் மோதி தொட்டதில் சலனம் பெற, முகம் திருப்பிப் பார்த்தாள் மகளை. ‘உசிரப் புடிச்சு வெச்சதே இதுக்குத்தானே’ என்கிறார்ப் போல இருந்தது அவள் பார்வை. பூவழகியின் வெற்று நெற்றியையும் வெறுங் கழுத்தையும் பரபரவென ஒரு மேய்ச்சல் பார்வை பார்த்துவிட்டு கரகரவென கண்ணீர்விட்டாள் குழிவிழுந்த கண்களால். வாதத்தில் சாகாத இடது கையை இடம் பெயர்த்து எடுத்து வந்து மகள் கண்ணீரைத் தொட்டுத் துடைத்தாள்.. முழுதாக முடிக்கவில்லை விரல்கள் அதன் வேலையை. கை விழுந்துவிட்டது. தலை தொங்கிப் போனது. ‘இந்தாப் போறேன் அந்தாப் போறேன்’ என்று அதுங்காலமாக போக்குக் காட்டிய கூரியாயி மூச்சு போயே போச்சு.

உயிர் பிரிந்த வீட்டின் அடையாளமாக இருக்கும் ஒப்பாரி அங்கே ஒளிந்து கிடக்க, மையமாய் குத்துக்காலிட்டு உட்கார்ந்திருந்தது ஆழ்ந்த அமைதி. இங்கே என்ன நடந்தது, என்ன நடக்கப் போகிறது எதுவும் விளங்காமல், ‘இப்படியுமா நடக்கும் உலகத்துல?’; என்பதுபோல அரண்டு நின்றது சனம்.

தன்னால் ஏற்பட்ட இறுக்கத்தை தானே உடைப்பவளாக, மூக்கை உறிஞ்சி, கண்துடைத்து, சுவரில் கை அழுத்தி எழுந்தாள் பூவழகி. மாடத்து சாமி படத்தில் அப்பிக்கிடந்த மஞ்சள் குங்குமத்தை மூன்று விரல்களால் கிள்ளி எடுத்தாள். கழற்றி வைத்த நகை நட்டு, தாலிச் சங்கிலி, ஓரத்தில் ஒதுங்கிக் கிடந்த பூச்சரம் எல்லாம் அள்ளி எடுத்துக்கொண்டு விடுவிடுவென்று முத்தரசு பக்கத்தில் போன பூவழகி, அத்தனையையும் அவன் கையில் திணித்துவிட்டு, சரிந்து அவன் காலைப் பிடித்தாள்.

“எய்யா.. எஞ்சாமி.. என்னய மன்னிச்சுரு ராசா.. உள்ளங்கால் மண்ணுல பட்டா பாத அழகு போயிடுமின்னு எங்கால உங்கையில ஏந்தி சொமக்கற மவராசன்யா நீ.. உன்னய வாய்கூசாம மோசம் பேசிப்புட்டேன்னு இந்த இத்த சிறுக்கிய வெறுத்துப்புடாதய்யா.. எனக்கு வேற வழியும் தெரியல வாய்க்காலும் தெரியல சாமி.. உம்புகழச் சொல்லத்தான் ஓடோடி வந்தேன்.. அந்த பாவி மக உருவத்தப் பாத்து என் உயிர்க்கூடே நடுங்கிப்போச்சேய்யா.. ‘என்னப்போல உண்டுமா’ண்டு ஓஹோண்டு வாழ்ந்த பொம்பள இப்படி பெருங்காத்து தூக்கியடிச்ச சருகா போயிக்கெடக்க காரணம் நாந்தாய்யா.. நானேதான். எங்கிட்ட போட்ட சவடால்ல ஜெயிச்சமா தோத்தமாண்டே தெரியாம அது தெரியாம போகவும் முடியாம இழுத்துப் புடிச்சு வெச்சிருக்காய்யா உசிர..

நான் நெனச்சு வந்தாப்பல, ‘நீ தோத்துட்டடி ஆயா’ண்டு சொல்லியிருக்கலாம். அப்பவும் உசிரு போயித்தான் இருக்கும்.. ஆனா என்னமோ மனசு வரலைய்யா.. ஒரு பொறப்ப முடிச்சுட்டு போற உசிர மனசுக்கு சுமையில்லாம அனுப்புவமேண்டுதான் இந்த சின்னப் புத்திக்கு எட்டின வாக்குல நடந்துகிட்டேன்.. தப்புன்னா மன்னிச்சிடு ராசா..

ஆனா ஒரு சத்தியஞ் சொல்றேன், மனசுல வாங்கிக்க.. ‘நீ யாரையும் ஏமாத்தலை.. உன் வாக்குல நின்டு சொன்னது குலசாமிதான்’னு நான் ஒத்துகிட்டது வரைக்குந்தான் எங்க அம்மா சந்தோஷப்பட்டிருப்பா. என் வெறுங்கழுத்து அவளுக்கு ஆறா வேதனயத்தான் தந்திருக்கும். அவ கண்ணீருக்கு அதுதான்யா காரணம்.. இப்ப அருவமா நிக்கற அவ ஆத்மா குளுந்து வாழ்த்துவா, நூறு வருஷம் நான் மஞ்சள் குங்குமத்தோட வாழுவேன்.. கட்டுய்யா எங் கழுத்துல தாலிய..” மறு வார்த்தை இன்றி, அவள் சொன்னதைச் செய்து, அவள் செயல்பாட்டில் தனக்கு எவ்வித வருத்தமும் இல்லை என்பதைச் சொல்லாமல் சொன்னான் முத்தரசு.

இழவு வீட்டில் கையோடு ஒரு மங்கலம் அரங்கேற, தீரா வழக்கு தீர்ந்ததை கண்ணால் கண்ட திருப்தியோடு சத்தமில்லாமல் அசைந்து போனது அன்று வந்த அதே சிவப்பு வண்ண ஆகாயம்.. 

தொடர்புடைய சிறுகதைகள்
காற்று விசையிடமிருந்து நீர்க்குமிழியை பத்திரபடுத்துவதுபோல பிடித்திருந்தாள் காகிதக் கற்றையை. ‘கோவை தாலுகா வசுந்தராபுரம் நேரு நகரில் உள்ள மனை எண் இரண்டு’ - அடுத்து வரும் வரிகள், அவ்வளவு சுலபத்தில் விளங்காத அரசாங்க வார்த்தைகளாக நீண்டன. ஆனாலும் வாசித்து மகிழ்ந்தாள். அவள் ...
மேலும் கதையை படிக்க...
வெளியே பலத்த மழை! வடக்கிலிருந்து தெற்காக சாய்வாக விழுகிறது சாரல். இரைதேடி இடுக்குகளில் புகும் நாகம்போல் கடைக்குள்ளே சரசரவென பரவுகிறது ஈரம். தண்ணீர் தொடாத இடமாகப் பார்த்து பசங்க ஆளுக்கு ஒரு பக்கமாக ஒதுங்கியிருக்கிறார்கள். பொழுதென்னவோ பிற்பகல்தான். ஆனால் அதனை சிரமப்பட்டுதான் நம்பவேண்டும். அத்தனை ...
மேலும் கதையை படிக்க...
பெரிய மனுஷி
சூரியன் பிடிக்குள் உலகம் கைமாற இன்னும் நேரம் இருக்க, இருளையும் குளிரையும் போர்த்திச் சுருண்டு கிடந்தது ஊர். ராக்கோழிகளின் ஒலியும் நின்று, தீராச் சீக்காழிகளும் ரணம் மறந்து கண் அசந்த இரண்டாம் ஜாமத்தில், இமைக்கவே கற்றுக்கொள்ளாதவளாக விழித்துக்கிடந்தாள் பவானி. விஷயம் வெளி வந்தால் ...
மேலும் கதையை படிக்க...
எப்போதும் விருப்பத்துக்குரியதாக இருப்பது சமயத்தில் அதிகபட்ச வெறுப்புக்கும் உள்ளாகும் இல்லையா. அப்படித்தான் எனக்குப் பிடித்த, நான் சார்ந்திருக்கும் உத்தியோகம் இந்த நிமிடம் எனக்குப் பிடிக்காமல் போனது. நான் ஒரு பத்திரிகை நிருபர். இது சங்கீத சீஸன். இசைப் பிரியர்களின் வார்த்தைகளில் 'டிசம்பர் சீஸன்'. ...
மேலும் கதையை படிக்க...
வீடு
தேசம்
பெரிய மனுஷி
சுருதி பேதம்

ஆத்தா மீது 3 கருத்துக்கள்

 1. RAJA PANDIAN says:

  KOMALA சகோதரி கதை மிகவும் அருமை வட்டார மொழி வழக்காடல் நன்று தாய் மகள் உறவு இப்படிஎல்லாம் இருக்குமா

 2. ச. முரளி மனோகர் says:

  ‘ஆத்தா’வின் உருவம் உள்ளடக்கம் இரண்டுமே திறம்படக் கையாளப்பட்டிருக்கிறது. எடுத்துக்காட்டாகக் கதையின் இரண்டு முக்கியமான இடங்களில் காட்சிப் படிமமாக வரும் சிவந்த வானம், மக்கு மாணவனுக்கு விழும் வாத்தியார் கொட்டு போல – பூவழகி நடையின் வர்ணனை, நான் மிகவும் ரசித்த இடங்கள். உள்ளடக்கத்தில் “நீ தோத்துட்டடி ஆயாண்டு சொல்லியிருக்கலாம்… அப்பவும் உயிரு போயித்தான் இருக்கும்…” என பூவழகிப் புலம்பியழும் இடத்தைச் சொல்வேன்.

  நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு நல்ல கதை வாசித்த மனநிறைவு. வட்டார வழக்கில் எழுத்துநடை சிறப்பு! வாழ்த்துகள்!! நன்றி!!!

 3. வ.ஐ.ச.ஜெயபாலன் says:

  கதைகளே வாழ்வாகிப்போயிருந்த இளமையில் ஜெயகாந்தன் கதைகளைத் தேடி வாசித்த அதே உணர்வை ஆத்தா வாசிக்கும்போதுதான் அனுபவித்தேன். என் இளமையை மீண்டும் வாழ்ந்தேன். நன்றி கோமளா

Leave a Reply to RAJA PANDIAN Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)