கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: June 5, 2020
பார்வையிட்டோர்: 18,462 
 

அலுவலகம் முடிந்து நான் வீட்டிற்குள் வந்தவுடனேயே, எனது பார்வையில் உடனடியாக பட்டுவிடும் வகையில், என்னுடைய மேஜையின் மீது தயாராக வைக்கப்பட்டிருந்த, ‘சவாலை’ சுமந்த இந்த தபாலை பரபரப்பாக வாசித்தேன்.

‘எனது அண்ணன் பெரிய கதாசிரியர்! தெரியுமா?’ என்று என்னிடம், அடிக்கடி அலட்டிக்கொண்டேயிருக்கும், எனது ஆருயிர் தோழி அமுதாவின், அண்ணனும்…

கலகலப்பு, உற்சாகம், சுறுசுறுப்பு, ஆசை! இவைகளை, ‘வீசை என்ன விலை?’ எனறு கேட்டுக் கொண்டிருப்பவரும்…

விளக்கெண்ணெய் குடித்ததுப் போலவே, எப்பொழுதும் தனது முகத்தை வைத்துக் கொண்டிருப்பவரும்…

உங்களது எழுத்தாற்றலின் மீது, எனக்குள்ள, ‘நல்ல’ நம்பிக்கையின் காரணமாக, துணிந்து, இங்கு நான் விடுத்துள்ள, இந்த அறைகூவலில், ‘அம்பேல்!’ ஆகிக்கொண்டு, ஓட்டம் பிடிக்க உள்ளவரும் ஆகிய உங்களுக்கு…

அல்லிதேவி விடுக்கும் சவால்!

சவால் என்னவென்றால், ஒரு சிறுகதைக்கான, ஆரம்ப வரிகள் மற்றும் கடைசி வரிகளை இங்கே கொடுத்துள்ளேன். இவற்றைக்கொண்டு சுவையான கதையை நீங்கள் ஒரு வாரத்திற்குள் எழுதிட வேண்டும்!

ஆரம்ப வரிகள்: சித்ரா அவனைப் பார்த்து சிரித்தாள். “எதனால, உங்களுக்கு என்மீது இப்படியொரு சந்தேகம் வந்தது?” என்று கேட்டாள். நரேன் மௌனமாக இருந்தான்.

கடைசி வரிகள்: “அப்படின்னா, அந்த நரேன் இப்ப…” என்று திவாகர் ஆரம்பிக்கவும், “வேண்டாமே, ப்ளீஸ்! இந்த இனிமையான நேரத்துல, அவனைப் பத்தி பேசி நம்ப முதலிரவை பாழ்படுத்திக்கனுமா? என்று சொன்னவாறே அவனது மடியில் சரிந்தாள், சித்ரா

இந்த சவாலில் நான் வெற்றி பெற்றவுடன், ‘என் அண்ணன் பெரிய…!’ என்னும் புராணத்தை, அமுதா அடியோடு விட்டுவிட வேண்டும்.

மேலும், என்னுடைய திருமணத்தின் போது, ஒரு சவரன் தங்க மோதிரத்தை, அவள் எனக்கு பரிசாக அளிக்க வேண்டும்.

ஒரு வேளைத் தப்பித்தவறி, இந்தச் சவாலில் நீங்கள் வெற்றிப்பெற்றால்…. (அதெல்லாம் நடக்காதுங்க!) ‘நீங்கள் கேட்கும், பொருள் ஏதுவாயினும்’ பரிசாக தருகிறேன்!

அது எனது ஒரு மாத சம்பளத் தொகையைக் காட்டிலும், அதிகமான விலையில் இருக்க கூடாது என்பது முக்கிய நிபந்தனை!

‘என்னுடைய ஒரு மாத வருவாய் நட்டமாகிவிடுமோ?’ என்னும் பயம், எனக்குத் துளிக்கூட இல்லை!

‘நீங்களாவது, எழுதுவதாவது? வெல்வதாவது? ம்ஹும்.. சான்ஸேயில்லை! (இங்கே உதடு பிதுக்கப்படுகிறது!) உங்களது தோல்விக்கு, எனது அனுதாபங்கள்! அமுதா இனி அலட்டிக்கொள்ள முடியாது. அவளுக்கும் எனது அனுதாபம்!

வெற்றிக்களிப்பில்,

அல்லிதேவி.

ஒரே மூச்சில் கடிதத்தை படித்து முடித்தேன்.

அல்லிதேவியின் இச்சவாலுக்குள், ஒளிந்து கொண்டிருக்கும் உட்பொருளை உணர்ந்து, என்னுள் மகிழ்ச்சி பன்மடங்கானது.

அமுதா அறியாத வகையில், இவள் வெளிப்படுத்தி வரும், அர்த்தம் பொதிந்த பார்வைகளை, ‘என்னால் புரிந்துகொள்ளவே முடியவில்லை!’ என்ற தீர்க்கமான முடிவுக்கே அல்லிதேவி வந்துவிட்டாள் போலிருக்கின்றது!

அமுதா என் அறைக்குள் பரபரப்பாக நுழைந்து, “அண்ணா! அந்த பேப்பரை படிச்சி பார்த்துட்டிங்களா!?” என்றாள். “திடீர்ன்னு எப்படி சவால் விட்டிருக்கா, பாருங்கண்ணா, அந்த வானரம்?”

நான் செயற்கையான கோபத்துடன், “ம் படிச்சிட்டேன்! இப்படி என்னை கேலி செஞ்சு சவால் விடற அளவுக்கு, அந்த பெண்ணுக்கு நீ இடம் கொடுத்திருக்க கூடாது, அமுதா!”

“சரி! இப்போதைக்கு அதை விடுங்கண்ணா! இந்த சவாலிலே நீங்க ஜெயிச்சிட்டா போதும்! எல்லாமே சரியாயிடும்! அப்புறம் பாருங்க, அல்லி தேவி ராஜ்ஜியத்துல இந்த அமுதா கொடி எப்படி பறக்குதுன்னு? குழப்பம் ஒன்னுமில்லியே? கதை எழுதிடலாம்தானே?”

“ஜமாய்ச்சிடலாம்!”

“’எதைக்கேட்டாலும் பரிசா கொடுப்பேன்!-னு என்ன தைரியமாக எழுதியிருக்கான்னு பாருங்க! எழுதி ஜெயிச்ச உடனேயே, நான், அவகிட்டேயிருந்து, மெத்து மெத்துன்னு ஒரு புதுப்பட்டுப் புடவையை பிரைஸாக வாங்கிட மாட்டேன்? அண்ணா! இதுலே நம்ப ரெண்டு பேரு கௌரவமும் இருக்கு! ஜெயிச்சே ஆகனும்!”

“ஜெயிச்சிட்டோம்!”

***

சித்ரா அவனைப் பார்த்து சிரித்தாள். “எதனால, உங்களுக்கு என்மீது இப்படியொரு சந்தேகம் வந்தது?” என்று கேட்டாள்.

நரேன் மௌனமாக இருந்தான்.

“இதோ பாருங்க, நரேன்! நீங்க இப்ப சொன்ன மாதிரி, எனக்கு இதுல எந்த சம்பந்தமும் இல்லை; சந்தோஷமும் இல்ல! ஒரு அவசர வேலையா, மெயின் பஜார் போய்கிட்டிருக்கேன். தேவைன்னா, மதியம் வீட்டிலே பார்க்கலாம்!” எனக் கூறிவிட்டு, சித்ரா தன் சைக்கிளில் ஏறி மீண்டும் விரைந்தாள்.

நரேன், தன்மீது சுமத்திய குற்றச்சாட்டு, சித்ராவுக்கு மெல்லிய கோபத்தை ஏற்படுத்தினாலும், அவன் இப்பொழுது தெரிவித்த, ‘சாவித்திரியின் செயல்!’ அவளுக்கு, மிகுந்த மனநிறைவை அளித்தது.

சில நிமிடங்களுக்கு முன்னர்… பக்கத்து வீட்டு நரேன், முதன் முறையாக, இன்று சாலையில் இடைமறித்து, “கொஞ்சம் நில்லுங்க!” என்றதும் ஆச்சர்யம் அடைந்து, இறங்கி நின்றாள்.

அவன் கோபக்குரலில், “உங்களுக்கு இப்ப சந்தோஷம் தானே? நீங்க அவளுக்கு சொல்லிக்குடுத்த மாதிரியே, சாவித்ரி, இப்ப என் பக்கம் கூட திரும்பி பாக்கிறத்திலே! ஏங்க, உங்களுக்கு இப்படி ஓர் எண்ணம்?”

சித்ரா சற்றே திடுக்கிட்டு, “நான் சாவித்ரிக்கு சொல்லிக் கொடுத்தேனா? என்னன்னு?”

“என் கூட பழக வேண்டாம்!-ன்னு தான்”

“அப்படின்னு, சாவித்ரி சொன்னாளா?”

“இல்லே!”

“பின்னே?”

“நீங்கதான் அவளுக்கு சொல்லிக் குடுத்திருக்கனும்!”

அவனது சிறுபிள்ளைத்தனமான தோரணை, சித்ராவுக்கு சிரிப்பை வரவழைத்தது.

அவள் மெயின் பஜாரில் வேலை முடித்துக்கொண்டு, மதியம் வீடு திரும்பும் வழியில், நரேன், யாரோ ஒரு இளைஞனிடம், சித்ராவைக் காட்டி, ஏதோ சொல்ல, கேட்டவன் ஆபாசமாக சிரித்தான்.

நெய்வேலி லட்சக்கணக்கான மரங்கள் நிறைந்த பசுமையான அழகு நகரியம்!

ஒரு யூனிட்டில் ஒரே மாதிரியான இரண்டு மினி பங்களாக்கள்!

அந்தச் சாலையின் இருப்பக்கங்களிலும் வரிசையாக பல யூனிட்கள்!

ஒவ்வொரு மினி பங்களாவிற்கும், அத்துடன் இணைந்த அவுட்ஹவுஸ்! விசாலமான தோட்டம்! தாவரங்கள்! மரங்கள்! குளுமை! அமைதி! தனிமை! சுதந்திரம்!

ஒரே யூனிட்டிலுள்ள இரண்டு பங்களாக்களின் கேட்டுகளும், நடைபாதைகளும், வராந்தாக்களும், கார் ஷெட்களும் மட்டும் பரஸ்பரம் ஒன்று, மற்றொன்றின் பார்வைக்கு தென்படும்.

நரேன் – சித்ரா இல்லங்கள் ஒரே யூனிட்!

கடந்த திங்கள் கிழமை மதியம், யதேச்சையாக சித்ரா தன்வீட்டு வராந்தாவுக்கு வந்த நேரத்தில்,

நரேன் வீட்டு அழைப்பு மணியை ஒரு நிலவு நளினமாக இயக்கிக்கொண்டிருந்தது

சித்ரா அத்திசைப் பார்த்துவிட்டு, ‘அடடே! இவள் காயத்திரி தங்கனை சாவித்ரியாயிற்றே?’ என வியக்கும் விநாடியிலேயே, அந்த நிலவும், சித்ராவை கவனித்துவிட்டு, ‘சித்ராக்கா போலிருக்கே? இங்கே எப்படி?’ என்று யோசித்தது

“ஹேய் சாவித்ரி! என்ன யோசிக்கிறே? நான் சித்ரா!”

சாவித்ரி பிரமிப்புடன், “என்னக்கா இங்கே? நீங்க தானா?-ன்னு ஒரு விநாடி அடையாளமே தெரியலே!”

சித்ரா சிரித்துக்கொண்டு, “இங்கே குடி வந்தாச்சி! என்னது! அடையாளம் தெரியலியா? தெரியாதுடியம்மா, தெரியாது! உங்க அக்காவுக்கு, அவ கல்யாணத்துக்கு அப்புறம் தான், என்னை மறந்து போச்சி! உனக்கு இப்பவேவா?”

சாவித்ரி திகைப்புடன் வந்து கொண்டே, “நீங்க தான் எங்களை மறந்துட்டீங்க! காயத்திரி அக்கா இங்கே இல்லைன்னாலும், எங்களையெல்லாம் பார்க்க, முன்னாடி மாதிரியே நீங்க வீட்டுக்கு வரக்கூடாதா? இந்த வீட்டிற்கு மாறினது கூட சொல்லலே பார்த்தீங்களா?”

சித்ரா சங்கடமாக, “இங்கே வெச்சி சொல்றதுனாலே நம்ப மாட்டே சாவித்ரி! கம்மிங் சன்டே வீட்டு வரலாம்ன்னுதான் நெனைச்சிகிட்டே இருக்கேன்!”

சாவித்ரி அவசரமாக, “என்னக்கா இப்படி சொல்லிட்டீங்க? உங்களோட ஸ்டேட்மென்ட்லே எனக்கு எப்பவும் நம்பிக்கை உண்டு!”

“தேங்க்ஸ் சாவித்ரி!”

“இங்கே வந்து எவ்வளவு நாளாச்சிக்கா?”

“ஒன் மந்த் ஆகப்போவுது! சரி, நீ எப்படி இங்கே?”

“அந்த வீட்டு நரேன், இந்த புக்ஸ் கேட்டிருந்தார். குடுத்திட்டுப் போகலாம்ன்னு வந்தேன். வீட்டிலே எல்லாருமே தூங்கறாங்க போலிருக்கு!”

நரேன் அவசரமாக கதவை திறந்து, சாவித்ரியும் சித்ராவும் நெருங்கி பேசிக்கொண்டிருப்பதை கண்டதும், அவனது உற்சாக பலூன் வெடித்துப்போய் “சாவித்ரி! எப்ப வந்தே?”

நட்புடன், “ம்? வந்து நாலு நாளாச்சி! எவ்வளவு நேரம் கூப்பிடறது?”

“தோட்டத்திலே இருந்து வர்ரேன்!” என்று பொய் சொன்னான்.

சாவித்ரி, சித்ராவின் தோள் மீது சாய்ந்து கொண்டு, “இவங்க எங்க டியரஸ்ட் பிரண்ட் அன்ட் மை கைடு! எதிர்பாரா சந்திப்பு இங்கே. அறிமுகம் தேவையில்லையே?” என்று சிரித்தாள்.

குரல்கள் கேட்டு, சித்ராவின் தாயார் வெளில் வந்து, “அடடே, வாடிப் பொண்ணே! மறக்காம கண்டு புடிச்சி வந்துட்டியே!”

சாவித்ரி பொய் மூச்செறித்து, “அம்மா..டி! இந்த வீட்டைக் கண்டுபிடிக்கிறத்துக்குள்ள, போதும் போதும்ன்னு ஆயிடுச்சி!” என்று சித்ராவை ஜாடையாக பார்த்தாள்.

சித்ரா, “அம்மா நம்பாதே! பொய் சொல்ரா!” என்று சாவித்ரியின் காதைத் தேடி வர, அவள் விரைந்து அம்மாவின் பின்னால் பதுங்கினாள்.

அம்மா, “வாசல்லே என்ன விளையாட்டு? உள்ளே வாங்க!”

“நரேன்! இந்தாங்க, நீங்க கேட்ட புக்ஸ்! படிங்க… இல்லேன்னா, பரிட்சையிலே…!” காற்றில் முட்டை வரைந்து, “இது தான் கிடைக்கும்!” என்று சிரித்தாள்.

நரேன், முழு ஏமாற்றம் அடைந்தவனாக, “தேங்க்ஸ்!”

சித்ரா, நரேனைப் பார்த்து, “நீங்களும் உள்ளே வாங்களேன்!”

“பரவாயில்லை, எனக்கு கொஞ்சம் வேலையிருக்கு!” என்று அவன் தன் வீட்டிற்குள் சென்று, கதவை அறைந்து சாத்திக்கொண்டான். ஆத்திரமாக, புத்தகங்களை வீசி எறிநதான். “கோடு ஹெல்!”

சித்ராவும் சாவித்ரியும் சுவாரஸ்யமாக பேச தொடங்கினர்.

நரேன், , சென்னை பாரீஸ் கார்னர் பேருந்து நிலையத்தில் தான், சாவித்ரியை முதன்முதலாக பார்த்தான்.

நெய்வேலி பேருந்துக்கு காத்துக்கொண்டு, வயது வித்தியாசம் பாராமல், எதிர்ப்பட்ட பெண்களை எல்லாம் லஜ்ஜையின்றி, பார்வையால் பருகிக் கொண்டிருந்தவன் கண்களில், சாவித்ரி தென்பட்டாள்.

அவளை ஒரே வரியில் வர்ணிப்பது என்றால், குகைகோயில் சிற்பம்.

அவளின் பிரமிப்பூட்டும் திரட்சியான மார்பகங்களினால் முற்றிலுமாக கவரப்பட்டான்.

தனது பார்வையை, நரேனால் அங்கிருந்து மீட்டுக்கொள்ள முடியவில்லை!

இந்த நிமிடத்திலேயே சகலத்தையும துறந்துவிட்டு, அவளுடன் சென்றுவிடலாம் போல அவனுக்கு தோன்றியது.

‘அவள், தன் அம்மாவிடம் குடித்த ஊட்டம் முழுவதும், அங்கே தான் சேமித்து வைக்கப்பட்டிருக்கிறதோ?’ என சந்தேகப்பட்டான். அவளின் எதிர்கால கணவன் மற்றும் குழந்தைகள் மீது அவனுக்கு பொறாமை ஏற்பட்டது.

அவனது பஸ் வந்து நின்றது. விலக மனமின்றி தவித்தான்.

நரேன் அவளைப்பார்த்த நிமிடம், மன்மதக்கடவுள் அவனை ஆசீர்வதித்த நேரமாக இருந்திருக்க வேண்டும்.

அதிஷ்டம் அவன் பக்கம் சேர்ந்தது!

அதே பஸ்ஸில் அவளும் ஏறி அமர்ந்தாள்.

அவளும் தனது ஊருக்கே பயணச்சீட்டுப் பெற்றதை கவனித்து, காற்றில் மிதப்பவன் போலானான்.

அவள் பார்வையில் படாமல் அமர்ந்து, அவளை ரசித்துக்கொண்ட பயணம் செய்தான்.

ஊர் வந்து சேர்ந்ததும், பேருந்து நிலையத்தில் தென்பட்ட பள்ளித்தோழன் ஒருவனின், மோட்டார் சைக்கிளில் அவசரமாக தொற்றிக்கொண்டு, அவளது ஆட்டோவை ரகசியமாக பின் தொடர்ந்து சென்று, அவளது வீட்டைக் கண்டறிந்ததும், அவன் மனம் முழுவதும் இன்பத் தேனாறு பாய்ந்தது!

அவளது வீட்டிற்கு, அடுத்த வீடு, அவளது முன் நாளைய நண்பன் சுரேந்தருடையது.

நரேனின் அன்றைய கனவில், சாவித்ரி பலவித கோலங்களில் தோன்றினாள்.

மறுநாளே, சுரேந்தர் வீடு சென்று நட்பை புதுப்பித்துக் கொண்டான். அங்கும், அவனுக்கு நல்ல செய்திகள் இருந்தன.

சுரேந்தரின் தங்கை சுரேகாவும், சாவித்ரியும் சென்னையில் ஒன்றாக தங்கிப் படிக்கிறார்கள் என்று தெரிந்து கொண்டான்.

சுரேகாவுக்கு உதவி செய்வதாக சொல்லிக்கொண்டு, சென்னையில் சுரேகாவை, அவள் தங்குமிடத்தில் அடிக்கடி சந்தித்து, சாவித்ரியுடன் அறிமுகம் ஏற்படுத்திக்கொண்டான்.

இச்சமயங்களில், தன்னை மிகச்சிறந்த ஒழுக்க சீலனாக காட்டிக்கொண்டு, மெல்ல மெல்ல சாவித்ரியின் நட்பைப் பெற்றான்.

தனது நட்பினை வெளிப்படுத்திக்கொள்வதில், சாவித்ரி மேற்கொண்டிருந்த நெருப்புத்தன்மை மிக்க தீர்மானங்களின் முன், அவனது ‘அந்த’ ரகமான முயற்சிகள், அவள் உணரா தொலைவிலேயே பொசுங்கிபோயின. ஆயினும், நாளுக்கு நாள், அவனுள் அந்த தீவிரம் வளர்ந்து கொண்டேயிருந்தது!

நரேனின் விடுதி அறை நண்பன், பாஸ்கர். திருவண்ணாமலையை சேர்ந்தவன். நரேன் கடைசியாக வீழ்த்திய, நரேன் வீட்டு வேலைக்கார பெண்ணின் மச்ச இடங்களை, பாஸ்கர் மிக சரியாக சொல்வான், என்பதை இங்கே தெரிவித்தால், அவர்களிடையே நிலவும் உரையாடலின் முப்பரிமாணமும் உங்களுக்கு தெளிவாக புரியும்.

ஒரு நாள் பாஸ்கர், சாவித்ரியை பார்த்துவிட்டு, நரேனிடம், “கை குடு மாப்ள! சும்மா சொல்லக்கூடாது! சூப்பர் ஸ்ட்ரெக்சர்! எவ்வளவு தூரம் முன்னேறியிருக்க? கோபுர தரிசனமெல்லாம் ஆயிருச்சில்ல?”

நரேன் உதட்டைப் பிதுக்கினான். “இவள்கிட்ட நம்ம வழக்கமான ரூட்டெல்லாம் எடுபடாது, போலிருக்கு! இதுக்கு மேல எனக்கு தாங்காது! நெக்ஸ்ட் மந்த் ஸ்டடி லீவுக்கு போறேன்ல? அப்ப எல்லாத்தையும் முடிச்சிடறேன்! வழி வெச்சிருக்கேன்!”

“அப்படி என்னடா வழி?”

விலாவாரியாக விவரித்தான். பாஸ்கர் விழிகள் விரிந்தன.

வீசி எறிந்த புத்தகங்களை, நரேன் பொறுக்கி எடுத்து அலமாரியில் வைத்தான். மயக்க மருந்து கலந்து வைத்திருந்த குளிர்பானத்தை வாஷ்பேசினில் ஊற்றினான். ஏமாற்றம் தாளாமல் வீட்டை பூட்டிக்கொண்டு புறப்பட்டான்.

சாவித்ரி, சித்ராவிடம் கேட்டாள்: “எப்போக்கா உங்க கல்யாண சாப்பாடு?”

சித்ரா கன்னம் சிவந்து, “முடிவாகிடுச்சி, சாவித்ரி! அவரோட போட்டோவை பார்க்கறியா?”

பார்த்தாள். சித்ராவை கட்டிக்கொண்டு, “அட்வான்ஸ் கங்ராஜுலேஷன்ஸ்!”

“கல்யாணத்துக்கு கண்டிப்பா நீ வந்துடனும்!”

“நிச்சயமாக வந்துடுவேன். நானில்லாமலா உங்க கல்யாணம்?”

உற்சாகமாக, ஒரு மணி நேரத்திற்கும் மேல் பேசிக் கொண்டிருந்து விட்டு, புறப்படும் போது, நரேன் வீடு பூட்டியிருப்பதை பார்த்து, “நரேன் பேரன்ட்ஸுமா இந்த வெயில் நேரத்துல வெளியிலே போயிட்டாங்க?”

“பேரன்ட்ஸா!? அவங்க மதுரைக்கு போய்தான் ஒரு வாரமாச்சே! அடுத்த வாரம்தான் வருவாங்கோ!”

சாவித்ரியின் கண்களில் ஒரு விநாடி கலவரம் தோன்றி மறைந்ததை, சித்ரா கவனித்தாள்.

“ஈஸிட்? சரிக்கா! நீங்க சொல்லியிருக்கிற மாதிரியே கம்மிங் சண்டே மார்னிங்கே வந்துடனும்! ஈவினிங் தான் உங்களை திரும்ப அனுப்புவேன்!”

மறுநாள் செவ்வாய்கிழமை!

சாவித்ரியின் பெயருக்கு, டைப் செய்யப்பட்ட, ஒரு தபால் வந்தது.

அதைப் படித்ததும் முகத்தருகே குண்டு வெடித்தாற்போல அதிர்ந்து போனாள்.

அந்த நீளமான கடிதம், நரேனின் பசுந்தோலை அகற்றி எறிந்தது. அவனின் விகார எண்ணங்களை வெளிச்சமிட்டுக் காட்டப்பட்டிருந்தன.

சாவித்ரியை தன் வீட்டுக்கு அழைத்து. தந்திரமாய், மயக்க மருந்து கொடுத்துவிட்டு, அவளை சிதைக்க, நரேன் கொண்டிருக்கும் திட்டம் பற்றி படித்துவிட்டு, ஸ்தம்பித்துப் போனாள்.

கடவுள் மீது சத்தியமிட்டுச் சொல்கிறேன்!

இக்கடிதம் சொல்வது அத்தனையும் நிஜம்! இனி இதை நம்புவதும், நம்பாததும், உங்களை தலைவிதிப்படி!

நரேனின் நட்பை அடியோடு துண்டித்துக்கொள்வீர்கள் என்றால், உங்களை பெரும் ஆபத்திலிருந்து காப்பாற்றிய புண்ணியம் எனக்கு கிடைக்கும்!

நான் யாரென்பது முக்கியமல்ல! என்னை அறிய முற்படுவது வீண் வேலை!

நான் இதை எழுதுவதே, கடவுளின் விருப்பமாகத்தான் இருக்ககூடும்! என்று முடிக்கப்பட்டிருந்தது

பின் குறிப்பாக, இக்கடித்தை நரேனிடம் காட்டுவீர்கள் என்றால், நீங்கள் நம்பும்படியாக, இதற்கு சிறப்பான மறுப்புரை கொடுப்பான்! அது அவனது பலம்! எனவும் எழுதப்பட்டிருந்தது

பாஸ்கர் தான் இதை எழுதினான் என்கிற விஷயம் சாவித்ரிக்கு தெரிய போவதில்லை.

அக்கடித்தை பூஜை அறையில் வைத்து கற்பூரமேற்றி கடவுளுக்கு நன்றி சொன்னாள்.

அன்று மாலையே, நரேன், அவளைத் தேடி வந்தான். அவனை பார்க்கவே, சாவித்ரி மறுத்து விட்டாள்.

சுரேகா வந்து விசாரித்தாள். கடிதம் பற்றி ஏதும் காட்டிக் கொள்ளாத சாவித்ரி, “எனக்கு பிடிக்கலே! அவ்வளவு தான்! அவன்கிட்ட சொல்லிடு!” என்றாள்.

நரேன், அடுத்து வந்த இரண்டு மூன்று தினங்களிலும், சாவித்ரியுடன் பேசுவதற்கு மேற்கொண்ட முயற்சிகளில் தோற்றுப்போனான்.

‘இதற்கு காரணம் சித்ரா தான்!’ என மிகச்சுலபமாக நரேன் நம்பினான். சித்ரா மீது வன்மம் கொண்டான்.

ஞாயிறு அன்று சாவித்ரி வீட்டிற்கு சென்ற சித்ரா, விபரம் அறிந்து பதறினாள்: “ஓ, காட்! இப்பத்தானே புரியுது! அந்த ஸ்கௌன்ட்ரல் நேத்து ஏன் எங்கிட்ட, அந்த அளவுக்கு ஆத்திரப்பட்டான்னு! உன் நல்ல மனசுக்கு எல்லாம் நல்லதாகவே நடந்துடுச்சி! காட் சேவ்டு யூ !இந்த லட்டரை எழுதினது யாருன்னு புரியுதா?”

‘தீர்மானிக்க முடியலேக்கா! யாராயிருந்தாலும் அவங்க நல்லாயிருக்கனும்!”

சித்ரா – திவாகர் ஜோடிப் பொருத்தத்தை அவரும் ரசித்தனர்.

திவாகர் திரைப்பட நடிகர் சிவகுமார் சாயலில் இருநதான். சித்ராவின் தூரத்து உறவு. எல்லோரிடமும் கனிவுடன் பேசிக்கொண்டிருந்தான்.

காயத்ரி தன் கணவனுடன் திருமணத்திற்கு வந்து விட்டாள். சாவித்ரியும் பட்டாம்பூச்சியாக பறந்து, விருந்தினர்களை உபசரித்துக்கொண்டிருந்தாள்.

அடுத்த வீட்டுக்காரன் தகுதியில், திருமணத்திற்கு வந்திருந்த நரேன், சாவித்ரியை வெறியுடன் பார்த்துக்கொண்டிருந்தான். அவ்வப்போது சித்ராவையும், திவாகரையும் விரோதமுடன் நோக்கினான்.

நரேன் ஆல்கஹாலின் உந்துதலில் சாவித்ரியை நோக்கி, அசந்தர்ப்பமாக, ஒரு ஆபாச வார்த்தையை உதிர்த்துவிட, அருகிலிருந்து காயத்திரியின் கணவனால் நைய புடைக்கப்பட்டான்.

ஆத்திரத்தில் சித்ராவின் திசை நோக்கி, “இதுக்கு காரணமான உன்னையும் சும்மா விட மாட்டேன்டி!” என்று கத்தி, மேலும் அடிப்பட்டு, வெளியேற்றப்பட்டான்.

அங்கிருந்த காவல் துறையைச் சேர்ந்த உறவினர் ஒருவரின் தீவிர விசாரிப்புக்கு ஆளாகினான்.

முதலிரவு அறையில் நுழைந்த சித்ராவை வாஞ்சையுடன் திவார் அணைத்துக்கொண்டான். அருகே அமர்த்திக் கொண்டு, ஆங்காங்கே அவளை தொட்டுக்கொண்டு, “ரொம்ப அருமையா இந்தக் கல்யாணத்தை நடத்திக் காட்டிட்டார், என் மாமனார்! எல்லோருக்கும் ரொம்ப சந்தோஷம்!” திடீர் நினைவு பெற்றவனாக, “யாரு சித்ரா அவன்? மண்பத்துல கரும்புள்ளியாட்டம் ஒருத்தன் கலாட்டா பண்ணிட்டானே?”

“அவனா? பேரு, நரேன்! சரியான பொறுக்கி ராஸ்கல்!”

“என்ன இவ்வளவு கோபம்?”

“அது ஒரு பெரிய கதைங்க!”

அவன் சுவாரஸ்மாக, “கதையா? சொல்லேன், கேட்கலாம்?” என்று அவள் முந்தானையை விலக்கினான்.

சித்ரா சிணுங்கிக்கொண்டே, “அவசியம் இப்பவே சொல்லி ஆகனுமா?”என்று அவனது சிலுமிஷங்களை சந்தோஷமாக அனுமதிக் கொண்டு, சுருக்கமாக சொன்னாள்.

“அப்படின்னா, அந்த நரேன் இப்ப…“என்று திவாகர் ஆரம்பிக்கவும், “வேண்டாமே, ப்ளீஸ்! இந்த இனிமையான நேரத்துல, அவனைப் பத்தி பேசி, நம்ப முதலிரவை பாழ்ப்படுத்திக்கனுமா?” என்று கொஞ்சலாக சொன்னவாறே, அவன் மடியில் சரிந்தாள். சித்ரா!

(நிறைந்தது)

***

அடுத்து வந்த மூன்று தினங்களில் எழுதி முடிக்கபட்ட, மேற்காணும் சிறுகதையை, அல்லிதேவியிடம் சேர்ப்பித்தாள், அமுதா!

அவள், ‘எனது வெற்றியை ஏற்றுக்கொள்வதாகவும், எனக்கு என்ன பரிசு வேண்டும் என்பதை தெரிவித்தால், அதனை நேரில் வந்து வழங்கிவிடுவதாகவும்,’ உறுதி அளித்துவிட்டிருக்கின்றாள்.

ஆனால், சற்று நேரத்திற்கெல்லாம், “தாய்மாமா உடல் நிலை திடீரென மிகவும் மோசம்! உடனே வரவும்!” என்ற செய்தியை தாங்கிக்கொண்டு, அவளுக்கு அவசர தந்தி வரவே, ஒரு வாரம் விடுப்பு பெற்றுக்கொண்டு, அவளது சொந்த கிராமத்துக்கு, பதற்றமாக புறப்பட்டு சென்றதாகவும், அந்த தருணத்திலேயும் கூட, ‘திரும்பி வந்தவுடனேயே, அவருக்கு ப்ரைஸ் கொடுத்துடறேன்!’ என்று வலிய சொல்லிச் சென்றதாகவும், அமுதா என்னிடம் தெரிவித்தாள்.

இந்த சில நாட்களில், ‘பரிசு!’ பற்றி, நான் பலவிதமாக கற்பனைகள் செய்து கொண்டதில், எனக்குள் ஏராளமான எதிர்பார்ப்புகள் ஏற்பட்டுவிட்டன!

இனியும், அவளிடம் செயற்கையான பாராமுகத்துடன் இருந்திடாமல், வெறும் கற்பனையிலேயே காலம் கடத்திக்கொண்டிருக்காமல், உடனே உள்ளக் கிடக்கையை பகிர்ந்துகொண்டு விடுவது என்று தீர்மானித்துக்கொண்டு ஆவலுடன் காத்திருந்தேன்.

மறு வாரத்தில், ஒரு நாள் மாலையில், நான் வீட்டிற்குள் வந்த போது, அமுதாவுடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த அல்லிதேவி, என்னைக் கண்டதும் எழுந்து நின்றாள்.

அமுதா என்னிடம், “அண்ணா! அல்லிதேவிக்கு அவசரமா திடீர்ன்னு கல்யாணம் முடிவாகிடுச்சாம்! ஊர்ல பலவித கட்டாயம்ன்னு சொல்றா! ரொம்ப அப்செட் ஆகியிருக்கா, பாவம்! இன்விடேஷன் எடுத்துகிட்டு வந்திருக்கா! என்னை ரெண்டு நாள் முன்னதாகவே அங்கே வரச் சொல்றா!” என்று என்மீது நெருப்பைக் கொட்டினாள். “இருங்க! குடிக்க தண்ணி எடுத்துக்கிட்டு வர்றேன்!” என்ற சமையலறைக்கு சென்றாள்.

அல்லிதேவி, தனது கண்ணீரை மறைக்க முயன்றுகொண்டே, “எக்ஸ்ட்ரீம்லி சாரிங்க!” என்றாள்.

“சரிங்க!” என்று சொல்ல முயன்றேன். வாயிலிருந்து வார்த்தைக்கு பதில் காற்றுதான் வெளிப்பட்டது!

என் முகத்தில் லிட்டர் கணக்கில், ‘விளக்கெண்ணெய்’ வழிந்து கொண்டிருந்தது!

– நெய்வேலி புத்தக கண்காட்சி 2010, குமரன் பதிப்பகம், நெய்வேலி எழுத்தாளர்கள் சிறுகதைகள் தொகுப்பு புத்தகத்தில் வெளியான சிறுகதை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *