அலென் ராமசாமி உட்காரும் நாற்காலி

 

‘உனக்கு பயமாயில்லையா? எத்தனை நாளைக்கு சுவர்களை பார்த்துக்கொண்டு?’

மேசையின் எதிர்முனையில் அமர்ந்திருந்த அவளிடமிருந்து பதிலில்லை, எழுந்துகொண்டாள். தட்டில் தோசை விள்ளல்களாக சிதைந்திருந்தன. இவர் என்ன சொன்னார் என்பதையாவது காதில் வாங்கியிருப்பாளா என்கிற சந்தேகம் எழுந்தது. தட்டினை அவள் கையில் எடுக்கவும், இவருக்கு வரவேண்டிய இறுமல் வந்தது. இவர் முன்னே கிடந்த தட்டை, சாப்பிட்டு முடித்தாரா? இல்லையா? என்றுகூட பார்க்காமல் கையிலெடுத்துக்கொண்டு சமையலறைக்குள் நுழைந்து கதவை அடைத்துக் கொண்டாள். இனி கால்மணிநேரத்திற்குக் குறையாமல் தட்டிரண்டையும் கழுவிக்கொண்டிருப்பாள். அவள் போகட்டுமென்று காத்திருந்ததுபோல, எரிந்துகொண்டிருந்த மின்சார பல்புகள் சட்டென்று நின்றன – ஒளியற்ற உலகம் – ஜீவனற்ற வெளி – எங்கும் இருள், அது திரண்டு கைகளாக நீண்டு- தலைகீழாய் அதளபாதாளத்தை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறார் – விழுந்த இடத்தில் துர்நாற்றம்- மலச்சகதி.

அப்பா?

‘நீ எப்போ வந்த?’

‘என்ன கேள்வி? நான் எங்கும் போகலை. என்னோட அறையில்தானிருந்தேன்’

‘இல்லை பொய் சொல்ற.. எனக்கு நம்பிக்கையில்லை’

‘வாங்க, வேண்டுமானால் வந்து பாருங்க. மேசையில் நான் வாசித்திருந்த புத்தகங்கள்கூட போட்டது போட்டபடி இருக்கின்றன’

அவனைப் பின் தொடர்வதாக நினைத்துக்கொண்டு, எதிர்ப்புறமிருந்த அறைநோக்கி நடந்தார், கதவினைத் தள்ளிக்கொண்டு உள்ளேவந்தார். ஒரு பெரிய தளவாடக் கடையில் மகனுக்கென்று பார்த்து பார்த்து வாங்கிய புத்தக அலமாரி, அதிலிருந்த புத்தகங்கள்; கட்டில்; மேசை, மேசையிலிருந்த கணினி, மடித்துவைத்திருந்த உடற்பயிற்சிக்கான நீண்ட மேசையென்று எதுவுமேயில்லை. யாரோ சுத்தமாகத் துடைத்து எடுத்துபோயிருந்தார்கள்

லட்சுமி.. இங்கே கொஞ்சம் வந்துட்டுபோயேன். இந்த அறையிலிருந்த சாமான்களையெல்லாம் எங்கே எடுத்துபோட்ட?

கொஞ்சம் மெதுவான அழைத்திருக்கலாமோ? இதே வீட்டில் ஒரு பெண், ஒரு பிள்ளை, கணவன் மனைவியென நால்வராக இருந்தபோது இத்தனைக்கூச்சலை எழுப்பியதில்லை. மெல்லிய குரலில் எழுப்பிய அனேக கேள்விகளுக்கு விடை கிடைத்திருக்கிறது, அனேகக் கட்டளைகள் நிறைவேற்றபட்டிருக்கின்றன. நம்பிக்கைகள் தளர்வுறும் நேரங்களில் சந்தோஷ கலகலப்புகள் மங்கிவிடுமோ? குரல்கள் உரத்து ஒலிக்குமோ? தாக்குதல்கள் இருக்குமோ? யுத்தத்திற்கு வழிகோலுமோ? தனது மகன் அறையிலிருந்து மீண்டபோது இவரது குரல்வளையை அமானுஷ்யமான கையொன்று இறுக்குகிறது, அதனை அப்புறப்படுத்தவென்று, இவர் முயல மற்றொன்று, பிறகு இன்னுமொன்று, ஆக்டோபாஸ்போல முளைத்துக்கொண்டு இவரது கழுத்தைத் தேடிவருகின்றன.

‘யார்..நீ..நீங்கள்?’

‘தனிமை, ஆனால் தனி ஆளாக வரவில்லை, எனது ஆட்களுடன் வந்திருக்கிறேன் காலங்காலமாய் உனக்காக உழைத்து இன்றைக்கு விழித்துக்கொண்டவர்கள்: கெடுமதி, சூது, அசூயை, வயிற்றெரிச்சல்…’

‘கொஞ்சம் கருணை காட்டுடி, இங்கே என்னென்னவோ நடக்குது? நீ இன்னுமா அந்த இரண்டு தட்டுகளை கழுவி முடிக்கலை…’

முடிந்த மட்டும் தனது பலத்தை பிரயோகித்துக் கைகளை அப்புறபடுத்தினார். மெல்லச் சென்று மேசை எதிரிலிருந்த நாற்காலியில் அமர்ந்தார். இரைத்தது. சுவாசம் சங்கடப்பட்டது. ராட்சசி, கொஞ்சம் ‘வாந்த்தோலின் ஸ்ப்ரேயை’ எடுத்துத் தந்தால் தேவலாம். பாழாய்ப்போன இருமலுக்கு நேரங்காலம் தெரிவதில்லை. காலாவதியான டீசல் எஞ்சின் போல, யோசித்து வாயில் முட்டும் இருமலை அடக்கும் துணிவு, வயதுக்கும் இல்லை, உடலுக்கும் இல்லை. குபுக்கென்று வெளிப்படும் முதல் சுற்று இருமலில், குருதி ஈரத்துடன் குலையை வெளியேதள்ளிவிடுமோ என்கிற பயம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாக்கில் உலராமல் ஒட்டிக்கிடக்கும் கொஞ்சநஞ்ச எச்சிலையும் வழித்து வெளியில் தள்ளி சிதற அடித்துவிடுகிறது. எழுப்பும் ஓசை சுற்றியுள்ள நான்கு சுவர்களிலும் மோதி, ஒன்று நான்காக பூமராங்போல திரும்பவும் இவரிடம் வருகின்றன. பேசும்போது, இத்தனை தொனியுடன் அவரது குரல் ஒலிப்பதில்லை. கட்டைவிரலையும் ஆட்காட்டிவிரலையும் இணைத்து மூக்கு மடலை நான்கைந்துமுறை குறுக்கும் நெடுக்குமாக பிடித்துவிட்டார், பிசுபிசுவென்று கட்டைவிரல் முனையில் இறங்கிய திரவச் சளியை, முதுகின் பின்புறமிருந்த நாற்காலி விளிம்பில் துடைத்தார்.

ஒரேபெண், அவள் அம்மாவை அப்படியே உரிந்துவைத்திருந்தவள், போன வருடத்தில் ஒரு நாள் வழக்கம்போல பல்கலைகழகத்திற்குப் போனவள், இரவு வெகு நேரத்திற்குப் பிறகும் வீட்டிற்குத் திரும்பவில்லை. கைத்தொலைபேசியைத் தொடர்புகொள்கிறார்கள், அது தகவலை பதிவுச் செய்யும்படிக் கேட்டுக்கொண்டது. மகனிடம் என்னவென்று பாரடா? என்கிறார். அவன் சிரிக்கிறான். அவளொன்றும் சின்னக்குழந்தையில்லை என்கிறான். இவர் முறைக்க, அவன் சுருக்கென்று அறைக்குள் சென்று கதவினை அடைத்துக்கொண்டான். இவர் கையைப் பிசைந்துகொள்கிறார். லட்சுமி அவ்வப்போது அடுக்களையிலிருந்து வெளிப்பட்டு சிறிது நேரம் வரவேற்பறையில் நின்று பின்னர் உள்வாங்குகிறாள். இரவு பதினோருமணிக்குப் போன் வருகிறது.

‘பப்பா.(Papa -Dad).?’

‘என்ன?

‘உங்களுக்கு மிஷெல் தெரியுமில்லையா? ஒரு முறை நமது வீட்டிற்குக்கூட அழைத்துவந்திருக்கிறேன்..’

‘சொல்லு’..இவருக்கு ஞாபகமில்லை.

‘நான் அவனோட இருக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன். அம்மாவிடம் சொல்லிடுங்க. முடிந்தால் ஞாயிற்றுக்கிழமை வீட்டிற்கு வரபார்க்கிறேன். போனை வச்சிடறேன்.’

தழைத்திருந்த மரத்தின் கிளையை சட்டென்று வெட்டியெடுத்ததுபோல உணர்ந்தார். அன்றிரவு வெகுநேரம் நாற்காலியிலேயே உட்கார்ந்ததாய் நினைவு. ஓயாமல் இரும ஆரம்பித்ததும் அன்றைக்கென்றுதான் சொல்லவேண்டும்.

பிறகு அவரது மகன்முறை, போனமாதத்தில் ஒரு நாள், ‘எனக்கு ‘முலூஸில்(Mulhouse) வேலை கிடத்திருக்கிறது’, என்றான்.

‘நல்லது பக்கத்தில்தானே எட்டுமணி வேலைக்கு, இங்கிருந்து ஏழு மணிக்குக் கிளம்பிப் போனாற்போதும்’ -இவர்.

‘என்ன.. ஒரு நாளைக்கு 250 கி.மீட்டரா? என்னால் முடியாது. அங்கேயே தங்கப்போறேன்; நேரம் கிடைச்சா வீக்- எண்டுக்கு வந்துட்டுப்போறேன்.’

‘ஏன் வெள்ளைக்கார தேவடியா எவளாவது, எதையாவது காட்டினாளா?’

அன்றைக்குப் புறப்பட்டுப்போனவன்தான். லட்சுமி தடுக்கவில்லை. போகட்டுமென்று காத்திருந்ததுபோல தெரிந்தது. சிறுக்கி, அவளுக்கு எல்லாம் தெரிந்திருக்கும். கூட்டுக் களவாணி.

எவ்வளவுநேரம் நாற்காலியிலியே உட்கார்ந்திருந்தார் அல்லது உறங்கியிருந்தாரென்று தெரியவில்லை. தொலைபேசி விடாமல் ஒலிக்க விழித்துக் கொண்டார். விடிந்து விட்டிருந்தது. பிரெஞ்சு நன்றாக வரும் – புதுச்சேரியை பிரெஞ்சுகாரன் ஆண்டபொழுதும், அதற்குப் பிறகு சுதந்திர இந்தியாவிலும் நொத்தேர்(1) அலுவலகமொன்றில் குமாஸ்தாவாக இருந்தும் சம்பாதித்த ஞானம்- பிறகு தாய்மொழியென்று தமிழ்; இரண்டும் மொழி பெயர்த்து சொல்கின்ற வாய்ப்பினை அவருக்குக் கொடுத்திருந்தது. களவாக பிரான்சுக்குள் நுழையும் தமிழர் எவரேனும் பிடிபட்டால், எல்லையிலிருந்த பிரெஞ்சுகாவற் துறையினரிடமிருந்து அலென் ராமசாமிக்குத் தொலைபேசி அழைப்புவரும். அப்படித்தான் சற்றுமுன்னர் வந்திருந்தது:

‘மிஸியே அலன்.. வணக்கம், ழாக் – ழாக் திரினித்தே, எல்லை காவற்படை, நீங்க இங்கே கொஞ்சம் வந்தாகணும்?’

‘எப்போ?’

‘எவ்வளவு சீக்கிரம் முடியுமோ?’

‘சரி’

இருமல் கொஞ்சம் அடங்கியதுபோல இருந்தது. நேற்று இரவு வெகுநேரம் விழித்திருந்த அசதி. கடந்த சில வருடங்களாகவே இரவில் சுலபத்தில் தூக்கம் வருவதில்லை. TF1, Antenne2, FR3, RTL9(2) என்று சேனல்களை மாற்றி மாற்றி வைத்து களைத்துபோனார். இணைப்பிலிருந்த தமிழ்ச் சேனலுக்குத் திருப்ப மூன்று நிமிடச் ‘செய்தி’ வாசிப்பில், ஐந்து முறை ‘பரபரப்புக்கு’ உள்ளாக்கினார்கள், வெறுத்துபோய் TF1க்கு மாற்றினார். ‘Sans Aucun Doute’ (சந்தேகத்திற்கு இடமில்லாமல்…) நிகழ்ச்சி. இவரைப்போலவே ஒரு எழுபது வயது ஆசாமி, நிகழ்ச்சி நடத்தும் ‘ழூலியன் கூர்பே’(Joulien Courbet)யிடம், ‘ஏ.சி. எந்திரம் பொறுத்துகிறேனென்று தனது வீட்டில் நுழைந்த நிறுவனமொன்றிடம் தான் ஏமாந்த கதையை, மொத்தம் பதினோறு முறை – இடையில் இருமியபடி நிறுத்தாமல் சொல்லி முடித்தார்.

அலென் ராமசாமிக்கு இருமல் எந்தவயதில் ஆரம்பித்தென்பது நினைவில்லை. ஆனால் அடிக்கடி இரும ஆரம்பித்தது சமீபக் காலங்களில்தான். எப்போதுவேண்டுமானாலும் சொல்லிக்கொள்ளாமல் வருகிறது. அந்த ஒருசில நிமிடங்களில் இவருக்கு ஆவேசம் கண்டதுபோல ஆகிவிடும், மீண்டுவருகிறபோது சோர்ந்து விடுகிறார். போன வாரத்தில் ஒருநாள் அப்படித்தான் ஒரு பெக் விஸ்கி உள்ளே போனதும், இருமல் தணிந்ததுபோலவிருந்தது. ஆசுவாசப்படுத்திக்கொண்டு, மீண்டும் விஸ்கிக்கு ஆசைபட்டு, வரவேற்பறை மினிபாரைத் திறந்து, விஸ்கிபாட்டிலையும் கண்ணாடித் தம்ளரையும் எடுத்துக்கொண்டு சாப்பாட்டு மேசையில் வைத்துவிட்டு உட்கார, பின்னாலிருந்து செருமல் சத்தம்.

மதாம் அலென் ராமசாமி – இவரது துணவியார்- செருமுகிறாள். கர ஆண்டு ஆவணிமாதம் 4ந்தேதி – கைபிடித்த தினத்திலிருந்து இவருக்குப் பிடித்த வெந்தயக்குழம்பு, கைமுறுக்கு, தேன்குழல், பச்சை வண்ணம், சிவாஜிகணேசன், அவளுக்கும் பிடித்ததாக இருந்தது. ஆனால் இவரைப் பிடித்த இருமல் அவளுக்குப் பிடிக்காமல் போனதுதான் ஆச்சரியம். சமீபக்காலங்களில் இவருக்கு எதிராக தனது கோபத்தை வெளிப்படுத்த நிறைய யுக்திகளை தெரிந்துவைத்திருந்தாள், அவற்றுள் செருமல் ஒன்று. இரண்டொருமுறை முகத்தை அழுந்தத் துடைத்துக்கொண்டு, காலை உதறியபடி நடந்து சென்று டாய்லெட்டிற்குள் புகுந்தவள் வேண்டுமென்றே கதவைத் திறந்துவைத்தபடி மூத்திரம் போகிறாள். சலசலவென்ற சத்தம் எரிச்சலூட்டியது, உரத்த குரலில் அவளைத் திட்டவோ அல்லது எழுந்துசென்று தனது உடற்பலத்தை பிரயோகிக்கவோ இயலாத நிலையில் மிச்சமிருந்த விஸ்கியைக் குடித்து முடித்தார்.

மீண்டும் சேனலை மாற்றினார் ‘Antenne2′ வில் ‘Nestor Burma’ தொடர் நடந்துகொண்டிருந்தது. ‘நெஸ்டர் பர்மாவாக’ நடிக்கிற கி மர்ஷாண் (Guy Marchand)னுக்கும் கிட்டத்தட்ட இவர் வயதுதான் இருக்கவேண்டும். சுலபமாகப் பெண்களை வளைத்துப் போடுகிறான். பெண்களே முந்திக்கொள்கிறார்கள், தங்கள் உதடுகளிரண்டையும் – பலமுறை பயிற்சி எடுத்திருப்பார்கள்போல -குவித்து, அவனுடைய உதடுகளில் சட்டென்று அழுந்தப் பதிக்கிறார்கள். சில விநாடிகள் தாமதத்திற்குப் பிறகு பிரிகிறார்கள். பிறகு வழக்கம்போல ‘கீ’(Guy), தனது தொப்பியை அருகிலிருந்த மேசைமீது வைக்கிறான், முத்தமிட்டவள் அவனது மேற்சட்டை பொத்தான்களை, துரிதகதியில் அவிழ்க்கிறாள். ஏற்றுமதி இறக்குமதி பங்குதாரர் ஒருவர், திடீரென்று கொலைசெய்யபட்டுவிட, அவரது அழகான மனைவி போலீஸ¤க்குத் தன்மீதுள்ள சந்தேகத்தைப் போக்க ‘நெஸ்டரைத்’ தேடிவருகிறாள் என்பதாகக் கதை. மிஸியே அலென் ராமசாமிக்குத் தொடர்ந்து சீரியலைப் பார்க்கவேண்டுமென்கிற அவசியமில்லை. கொலை செய்தது யாரென்று விளங்கிவிட்டது, சந்தேகமில்லாமல் அவனது ‘பொண்டாட்டிதான்’ என்பதில் தீர்மானமாக இருந்தார். மதாம் அலெனும், தன்னை கொன்றாகணுங்கிற முடிவுக்கு வந்திருப்பாளோ என்கிற ஐயம். தொலைக்காட்சிப்பெட்டியை நிறுத்திவிட்டு வரவேற்பறையில், அரைமணிநேரத்திற்கும் கூடுதலாக நடந்திருப்பார்.

சன்னலுக்கு வெளியே, அரசாங்கத்திற்குச் சொந்தமான அவசர மருத்துவ உதவி வாகனம், நீல சமிக்ஞை விளக்கும், சைரனுமாக வந்து நின்றது. இந்த மாதத்தில் இது மூன்றாவது முறை. நான்கைந்து மாதங்களுக்கு முன்புவரை பக்கத்து வீட்டு கிழவி நன்றாகவே நடமாடிவந்தாள். புதன்கிழமைதோறும் ஷரியோ (3)வை இழுத்துக்கொண்டு பக்கத்தில் கூடுகின்ற சந்தைக்குச் சென்று அரபு நாட்டவர் கடைகளில் ஒரு வாரத்திற்குத் தேவையான பழம்காய்கறிகளை வாங்கி வருவாள், ஒவ்வொருநாளும் இரண்டுதடவை உடல்முழுக்க சதைவழிந்திருக்கும் நரிமாதிரியான தனது நாயை உலாத்த அழைத்துசெல்வாள். அந்த நாயும் ஏதோ பிரார்த்னைபோல இவரது வீட்டிற்கு நேரெதிரே வந்ததும், நிற்கிற மிமோசா மரத்தை சில நொடிகள் மோப்பம் பிடித்துவிட்டு, தனது கழிவுகளை வெளியேற்றும். மிமோசாமரத்தின் அருகில்தான் வாகனம் நின்றுகொண்டிருந்தது. இரண்டு மருத்துவ ஊழியர்களும், ஒரு பெண்மருத்துவரும் இறங்கிச் சென்றார்கள்.

கதவைத் திறந்துகொண்டு மதாம் அலென் உள்ளேவந்தாள். ‘இன்னுமா எழுந்திருக்கலை’, என்று அதற்கு பொருள். தொலைபேசி அழைப்பு ஞாபகத்திற்குவந்தது, பதினொன்றரை மணிக்குள்ளாகவாவது எல்லைக் காவற்படை அலுவலகத்தில் இருக்கவேண்டும், அதற்கு அடுத்த அரைமணிநேரத்திற்குள் பஸ் நிறுத்தத்தில் இருப்பது அவசியம். காவலதிகாரிகளில் ஒரு தடியன், தனது முழங்கையில் சிவந்திருந்த கொப்புளமொன்றைக் கிள்ளிக்கொண்டே,’ மிசியே அலென் கொஞ்சம் நேரத்திற்கு வரப்பாருங்கள்’ என்று முகத்தைக் கோணலாக்கிக்கொண்டு சென்றமுறை சொன்னது ஞாபகத்திற்கு வந்தது. எழுந்துகொண்டார். டாய்லெட்டுக்குள் நுழைந்து மின்சாரவிளக்கைப்போட்டார். வெளிச்சத்திற்குப் பயந்து இரண்டு கரப்பான் பூச்சிகள் சட்டென்று மரதளவாடத்திற்குக் கீழே மறையும் முயற்சியிலிறங்கின. ஒன்று மெதுவாக நகர்ந்தது, கர்ப்பமுற்றிருக்கலாம். கொல்வதற்குத் தயக்கமாக இருந்தது. கண்களிரண்டும் சிவந்து இரப்பைக்குக்கீழே வீக்கமாக இருந்தன. பேஸ்ட்டைப் பிதுக்கியதில் காற்றுவந்தது. இரண்டொருமுறை பிதுக்கியதை பிரஷ்ஷில் வாங்கி பல்துலக்கி, வெந்நீரில் முகம் அலம்பினார். பேண்ட், சட்டை, அதற்குமேல் ஜாக்கெட், ஒரு கோப்பைக் காப்பி என முடித்து வெளியில் வந்தபோது, மேலே வானம் சாம்பல் வண்ணத்தில் சோர்ந்து விரிந்திருந்தது. இலேசாக தூறலிட்டுக்கொண்டிருந்தது. மர்த்தினெத்(Martinet) பறவையொன்று தன்னதனியாய் பறந்து போனது. பெய்திருந்த மழையில் நனைந்திருந்த தார்ச்சாலை-கடந்த இருபது ஆண்டுகளாக இவராலும் மிதிபட்ட சாலை – சோம்பலாய்ப் படுத்துக்கிடக்கிறது.

பஸ் நிறுத்தத்தை அடைந்தபோது, பதின்வயது பெண்களிருவரும், ஆப்ரிக்கப் பெண்மணியொருத்தி தள்ளுவண்டியில் குழைந்தையுடனும் காத்திருந்தனர். ஆப்ரிக்கபெண்மணியின் சொந்த தேசத்தை இவரால் சொல்ல முடியாது, அவள் பிரெஞ்சு பேசும் ஆப்ரிக்கதேசத்தவளாகவும் இருக்கலாம் அல்லது அல்லாவதளாகவும் இருக்கலாம். கடந்த இருபது ஆண்டுகளாக அவரை குழப்பத்தை உண்டாக்கும் விவகாரங்களில், ஆப்ரிக்கர்களின் சொந்த தேசத்தைப் பற்றிய ஞானமுமொன்று. இரண்டு பிரெஞ்சு பெண்களும் மழைத் தூறலைப் பொருட்படுத்தாமல் உடுத்தியிருந்தார்கள்: சரிந்திருந்த மார்புகளில் கோவணம் அளவிற்கு ஒரு துணியைச் சுற்றியிருந்தார்கள், கீழே விருப்பமற்று அணிந்திருப்பதுபோல டெனிமில் ஒரு குட்டைப்பாவாடை, சிவப்பு ரெக்சின் பெல்டொன்றினால் இடுப்பில் அதனைத் தொடைகளின் ஆரம்பத்தின் சாதுரியமாய் நிறுத்தியிருந்தார்கள். இருவரும் வாயில் சுவிங்கத்தை அடக்கியிருந்தார்கள் அதை அவ்வப்போது, இரு உதடுகளுக்குமிடையில் நிறுத்தி பலூனாக்கினார்கள், அது வெடித்து வாய்பரப்ப்பில் ஒட்டிக்கொள்ள, அதை மறுபடியும் சேகரித்து உள்ளே தள்ளினார்கள். அவரது கவனத்தை இப்போது தள்ளிநின்ற பூலோ(4)மரமொன்றின் அடிப்பாகம் ஈர்த்தது. ஒரு மரவட்டையொன்று மெல்ல ஏற முயற்சிப்பதும் மண்ணில் மீண்டும் விழுவதுமாயிருக்கிறது. அவ்வபோது காத்திருந்து காற்றில் அசைந்த கிளைகள், அசையும்தோறும், தங்கள் பாரத்தை இறக்கிவிட காத்திருந்ததுபோல மழைத் தண்ணீரை இறைக்கின்றன.

‘வூஸ் அவே லே’ர் மிஸியே?’. இளம் பெண்களில் ஒருத்தி இவரை நெருங்கி நேரம் கேட்கிறாள்.

‘உய்.. சே ஓன்ஸ் ஏர் முவான் தீஸ் ( பத்து நாற்பது)’

இவர் சொல்லி முடிக்கவும், பேருந்து வந்து நிற்கவும் சரியாக இருந்தது. இவரும் ஆப்ரிக்க பெண்மணியையும் முதலில் ஏறட்டுமென பெண்களிருவரும் காத்திருந்தார்கள். ஆப்ரிக்க பெண்மணி தள்ளுவண்டியுடன் முதலில் ஏறினாள். இவர் இரண்டாவதாக ஏறினார். முதியவர்களுக்கான இலவச பயண உரிமம் அவரிடமிருந்தது. அதை ஓட்டுனர் இருக்கயின் பின்புறம் நிறுத்தியிருந்த எந்திரத்தின் கண்களில் காட்ட அது ‘பீப்’ என்றது. இருக்கைகள் பலவும் காலியாக இருந்தன. சன்னலொட்டியிருந்த இருக்கையாகப் பார்த்து அமர்ந்துகொண்டார். அசதியாக இருந்தது. கண்ணை மூடினார். ஒரு சிலவிநாடிகளில் சீழ்க்கை ஒலியுடனான குறட்டையுடன் உறங்கி போனார். விழித்தபோது பேருந்து நகரத்தின் மத்திய பகுதி நிறுத்தத்தில் நின்றிருந்தது. இறங்கியவர்கள் ‘டிராம்’ பிடிக்க ஓடினார்கள், ஓட முடியாதவர்கள் வேகமாய் நடந்தார்கள். ஒரு சிலர் வேறொரு பஸ்ஸ¤க்கென்று எதிர்த் திசையில் ஓடினார்கள் அல்லது, எதிர்த் திசையில் வேகமாய் நடந்தார்கள். சிலர் இவர் அமர்ந்திருந்த பேருந்துக்காய் ஓடிவந்து, காலியாய் இருக்கிற இருக்கைகளைத் தேடி பிடித்து அமர்கிறார்கள். ஓடுகின்றவர்களில் தனிமையை வென்றவர்களாகவோ அல்லது இதுவரை தனிமை என்னவென்று அறியாதவர்களாகவோ இருக்கக்கூடும். பக்கத்து இருக்கையில் ‘மன்னிக்கணும்’ என்று சொல்லிவிட்டு ஒரு வயதுபோன ஐரோப்பிய பெண்மணி உட்கார, இவர் தனது இருக்கையைத் தெளிவாக்கிக்கொண்டு நேராக உட்கார்ந்தார். எதிரிலும் இரண்டு வயதான பெண்மணிகள். பேருந்து பயணிகளில் பெரும்பாலோர் வயது போனதுகள், இவரைப்போல. தனிமைக் கூட்டிலிறுக்க பிடிக்காமல், வெளியில் வருகிற இறக்கை தளர்ந்த பறவைகள். பத்து நிமிட பயணத்தில், ரைன் (Rhin) நதிக்கு இக்கரையிலிருக்கிற பிரெஞ்சு அரசாங்கத்தின் எல்லைப்புற காவற் படைஅலுவலகத்தில் இருக்க முடியுமென்று தோன்றியது. நதிக்கு மறுகரையில் கிழக்கே கேல் (Khel) நகரம், ஜெர்மனைச் சேர்ந்தது. இவர் வசிப்பது நதிக்கு மேற்கிலுள்ள பிரான்சுக்குச் சொந்தமான ஸ்ட்ராஸ்பூர்(Strasbourg)நகரத்தில், இரு நகரத்தையும் இணைத்திருப்பது ‘ஐரோப்பிய பாலம்’(Le pont de l’Europe). பாலத்தின் ஆரம்பத்தில்தான் இவர் செல்ல வேண்டிய அலுவலகமிருக்கிறது.

‘உனக்குத் தெரியுமா? எங்கள் ஜாகைக்கு பக்கத்திலே குடியிருந்த மரோக்கன்(மொராக்கோ நாட்டவன்) அதைக்கு விலைக்கு வாங்கிட்டானாம். இத்தனைக்கும் உருப்படியாக அவன் வேலைக்குச் சென்று நான் பார்த்ததில்லை’ – பக்கத்து இருக்கைக்காரி.

‘எனக்கதில் வியப்பேதுமில்லை அவனைப்போல வசவசவென்று பிள்ளைபெற்றுக்கொண்டிருந்தால், தாரளமாக வாங்கலாம். நாம கட்டற வரிகளத்தனையும் அந்நியர்களுக்குத்தான் போகுது’ – மற்றவள்.

‘மன்னிக்கணும், உங்கள் அண்டை வீட்டுக்காரர் நிறைய பிள்ளைகள் பெற்றுக்கொள்வதற்கான காரணம் எனக்குத் தெரியும்’, இவர் குறுக்கிட்டுப் பேசினார்

‘—’

‘தனிமையைத் தவிர்க்க அதுவொன்றுதான் வழி. சாகிற வரையிலும் ஏதாவதொரு உறவு அருகிலே இருக்குமென்கிற நம்பிக்கையாக இருக்கலாம். வளர்ந்தவர்கள் வீட்டைவிட்டுப் போகிறபோது வெற்றிடத்தை நிரப்ப அடுத்தடுத்து பிள்ளைகள் வேண்டுமில்லையா?’

இவர் முடிக்கும்வரை அவர்கள் காத்திருக்கவில்லை. முகத்தைத் திருப்பிக்கொண்டார்கள்.

பிரான்சு எல்லைக் காவற்படை, களவாய் பிரெஞ்சு தேசத்துக்குள் நுழையமுயன்றார்களென்று, இந்த முறை எத்தனைத் தமிழர்களை பிடித்துவந்திருப்பார்களென்று யோசித்துக் கொண்டுவந்தார். சென்ற முறை மூன்று இளைஞர்களும், இரண்டு பெண்களும் இருந்தனர். ஐவருமே ஏஜன்ஸி ஒன்றுக்கு தலா நான்கு லட்சம் ரூபாய் கொடுத்ததாகவும், கடந்த சில நாட்களாக ஜெர்மனியில், ஊர்பேர் தெரியாத நகரமொன்றில் ஒரு வீட்டில் அடைத்துவைத்திருந்ததாகவும், அங்கிருந்து ஒருவர் காரில் ஏற்றிக்கொண்டுவந்ததாகவும், இரவு முழுக்க பயணித்ததாகவும், இவர்களை பிரெஞ்சு எல்லைக்கருகே இறக்கிவிட்டு சென்றதாகவும் கூறினார்கள். தங்களிடம் கடவுச்சீட்டோ (Passeport), வேறு தாள்களோ, இல்லையென்றனர். இப்பிரச்சினையில் அவர்கள் சார்பாக வழக்குரைஞர் யாரையேனும் கூப்பிட விருப்பமா? என்று பிரெஞ்சு போலீசார் கேட்டனர். உண்மையில் பிரெஞ்சு போலீசாருக்கு அப்படி யாரையும் கூப்பிட விருப்பமில்லை என்பது புரிந்தது.

பிடிபட்டிருந்த தமிழர்களுக்கும், ‘சட்டத் தரணியை’ வைத்துகொண்டால், ஏதாவது சாதகமாக நடக்குமோ என்று இவரை கேட்டனர். இவர் அவர்களுக்கு நேரிடையாக பதில் சொல்ல முடியாத நிலை. காவலதிகாரியிடம் மொழி பெயர்த்துச் சொன்னார். அவர்கள் அதனால் எந்தப் பிரயோசனமும் இல்லை, என்றனர். பின்னெதற்கு இப்படியான கேள்விகள் என்று புரியவில்லை. பிரான்சில் யாரேனும் உறவினர்கள் இருக்கிறார்களா? அவர்களது முகவரி தெரியுமா எனக் கேள்விகள் கேட்கபட்டன. ஒவ்வொருவரையும் தனித்தனியாக அழைத்துவந்து இவர் முன்னே விசாரித்திருந்தார்கள். அவர்களில் இளம் வயது பெண்ணொருத்தி (இவரது மகள் வயதிருக்கலாம்) இவரைக் கண்டதும், தேம்பி தேம்பி அழுதாள் (தம் உறவுகளை தனிமைபடுத்திவிட்டு வந்தற்காகவா அல்லது தாம் தனிமைபடுத்தப்பட்டதற்காகவா?). தங்களை என்ன செய்வார்கள் என்று கேட்டாள். வழக்கம்போல அவளது கேள்வியைப் பிரெஞ்சு காவலதிகாரியிடத்தில் அவர் மொழிபெயர்த்துச் சொன்னார்.

இன்று மாலைக்குள் மாஜிஸ்ட்ரேட் அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்துவிட்டு, ஜெர்மன் போலிஸார் சம்மதத்துடன் அவர்கள் எல்லையில் விட்டுவிடுவோம். ஏனெனில் முதன்முதலில் எந்த நாட்டில் இறங்குகிறார்களோ அந்த நாட்டில்தான் சட்டபடி அவர்கள் தஞ்சம் கேட்கவேண்டும் என வழக்கமான பல்லவியை பாடினர். ‘உரிய அனுமதியின்றி ஒரு நாட்டிற்குள் நுழையமுயன்றது குற்றமென்பதை நான் உணர்ந்தே இருக்கிறேன்’, என எழுதி அவர்களிடத்தில் கையெழுத்து வாங்கினார்கள், சாட்சியாக இவரும் கையொப்பமிட்டார். மாலை நான்கரை மணிக்கு காவற்துரை வாகனத்திலே ஏற்றி மறுகரைக்கு கொண்டுபோனார்கள். அன்றைய தின மொழிபெயர்ப்பு படியாக ஒரு மணி நேரத்திற்கு 17 யூரோவும், பஸ் பயணப்படியும், ஒருவேளை உணவுப் படியுமாகச் சேர்ந்து, நூற்றுமுப்பது யூரோவரை இவருக்கு மொத்தத்தில் கிடைத்தது.

இவர் இறங்கவேண்டிய நிறுத்தம் வந்தது. இறங்கிக் நடந்தார். இடப்புறம் ஐரோப்பிய பாலத்தின் தொடக்கத்தில், வரிசையாய் ஐரோப்பிய யூனியனில் அங்கம் வகிக்கும் உறுப்பு நாடுகளுடைய தேசியக்கொடிகள். தேசங்களுக்குக்கூட தனிமையென்றால் பயம் போலும், கை சேர்த்துக்கொள்கின்றன. எதிரே பிரெஞ்சு அரசாங்கத்தின் எல்லைக் காவற்படை(5) அலுவலகம். நுழைவாயிலில் கண்ணாடியின் ஊடாக இரு பெண்கள் சீருடையில் அமர்ந்திருக்கிறார்கள். பாலத்தின் மறுபக்கத்தில் சமுத்திரமே நகர்ந்து செல்வது போல ரைன் நதி. தெற்கு வடக்காக ஓடிக்கொண்டிருக்கிறது. சற்று முன்புவரை தூறலிட்டுக்கொண்டு, சாம்பல் வண்ணத்திலிருந்த வானம்; சுத்தமான வெளுர் நீலத்திற்கு மாறியிருந்தது., திட்டுத் திட்டாய் அழுக்கடைந்ததுபோல மேகங்கள். பரந்திருந்த வானத்தின் மற்றபகுதியை ரைன் நதிக்கு மறுகரையில் இழுத்துக் கட்டியிருப்பது போல தோற்றம். சூரியன் தனது முழு வன்மத்தையும் வெளிப்படுத்தித் தீர்வதென்கிற தீர்மானத்துடன் காய்ந்து கொண்டிருந்தான். பாலத்தின் மீது வாகனங்கள் வலம் இடமாக அசுரகதியில் ஓடிக்கொண்டிருந்தன.

அலென் ராமசாமி பாலத்தின் வலப்புறமிருக்கும் நடைபாதையைக் குறிவைத்து நடந்தார். தொடர்ந்து நடந்து பாலத்தின் ஆரம்பத்திற்கு வந்தார். பிரான்சு எல்லை காவற்படை(5) அலுவலகத்தின் நேரெதிரே நின்றுகொண்டார். உள்ளே காவல் அதிகாரிகளுள் ஒருவன் கடிகாரத்தைப் பார்த்தபடி இவரை எதிர்பார்த்துக் காத்திருப்பான். களவாய் பிரான்சு நாட்டுக்குள் நுழைய முயன்று பிடிபட்ட தமிழர்கள் தவிப்புடன் அமர்ந்திருக்கலாம். வேறு நாட்டவரும் இருக்கலாம்., அவர்களுக்கான மொழிபெயர்ப்பாளருக்காகக்கூட, காவல்துறை அதிகாரிகளில் ஒருவன் காத்திருக்கலாம். சட்டத்தை முறைப்படி அமல் படுத்தவேண்டிய கவலையில் அவர்கள். பாலத்திற்குக் கீழே ரைன் நதி. நிதானமாய் ஓடிக்கொண்டிருந்தது. நீரில் அழுக்கடைந்த மேகங்கள் தங்களை அலசிக்கொண்டிருப்பது தெரிந்தது. வால் முனையில் கறுப்புமையில் தோய்த்தெடுத்ததுபோலவிருந்த காட்விட் பறவைகள் இவர் நெஞ்சில் ஆரவாரம் செய்கின்றன. நிர்வாணமாயிருந்த நதியின் சரீரம் இவரை வசீகரிக்கிறது. எழுந்து அடங்கும் அலைகள், குமிழ்களாய்க் குவிந்து, நீரின் வேகத்தில் பிரிந்து பின் கூடும் நுரைத் தொகுதிகள் உமிழ் நீராக இவரது உள்ளத்தில் இறங்குகின்றன. அதன் சுழிப்புகளில் மனம் தடுமாறுகிறது. தனிமை தணலிருந்து இவரை விடுவிக்கக் காத்திருந்ததுபோல சிலுசிலுவென்ற காற்று இவரைக் குளிர்விக்கிறது. இதமாக இருந்தது. எல்லைக் காவற்படை அலுவலகத்தைப் பார்த்தார். இறங்கி நடந்தார்.

மாலை அலென் ராமசாமி வீட்டிற்குப் தொலைபேசியில் தொடர்புகொண்ட பிரெஞ்சு எல்லைக் காவற்படை அதிகாரிகளுல் ஒருவன், ‘அலென் ராமசாமி’ வீட்டில் இல்லையா என்று கேட்டான். மதாம் அலென் அமைதியாக இருந்தாள். அதிகாரி தொடர்ந்து, ‘அழைத்திருந்தோமே வரவில்லையே’ என்று மீண்டும் தொடர்ந்தான். மௌனத்தைக் கலைத்துக்கொள்ள தீர்மானித்தவளைப்போல இவள் ‘அவரைத்தான் கேட்கணும், எனக்கு அதுபற்றி எதுவும் தெரியாது என்கிறாள். பின்னர், மிஸியே அலென் ராமசாமி வழக்கமாய் உட்காரும் நாற்காலியில் முதன்முறையாக சிறிது நேரம் அமர்ந்தாள். இரவுக்கு, தனக்குப் பிடித்ததை சமைக்கவேண்டுமென நினைத்துக்கொண்டாள்.

***

1. Notaire – Notary public

2. பிரெஞ்சு தொலக்காட்சி சேனல்கள்

3. Trolley

4. Bouleau – Common Birch

5. Police Frontiere Francaise 

தொடர்புடைய சிறுகதைகள்
கணவனும் மனைவியுமாக, பனகல் பார்க்கிலிருந்த அந்தத் துணிக்கடையிலிருந்து வெளிவந்தபோது மாலை மணிநான்கு. மனிதர்களை பதட்டத்துடன், அலையவைத்துக்கொண்டிருக்கிற வெயில். ஆண் பெண்பேதமின்றி வியர்வையில் ஊறியிருந்தனர். பெண்களின் கை இடுக்குகளில் வெண் சாம்பல் பூத்திருந்தது. சிலரது கன்னக் கதுப்புகளில் இடம்பெயர்ந்து, கண்மை. பின்னல்களில் பழுத்துக்கிடந்த ...
மேலும் கதையை படிக்க...
வசு' இன்றைக்கு சடுகுடு விளையாடலாம் வரும்போது, கலா டீச்சர் சொன்னதை மறந்திடாதே! அரைப்படி பசுநெய் கொண்டுவர மறந்திடாதே' பள்ளியிலிருந்து திரும்பும்போதே மணி சொல்லியிருந்தான். 'வசந்தன்' என்ற எனது பெயரைச்சுறுக்கி 'வசு' என்றழைப்பவன் அவனொருவந்தான். எனக்கு கிராமத்தில் பிடித்தவர்களென்று சொன்னால் கலா டீச்சர், ...
மேலும் கதையை படிக்க...
சூப்பில் கிடக்கும் ரொட்டிபோல(2) நனைந்திருந்தேன். சடிதியான மழையென்றால் நனைந்துதானே ஆகணும் ?இல்லையா. திடுதிப்பென்று அடித்து ஓயும் வெப்பமண்டல பிரதேசத்து மழை. சுழன்று அடிக்கும் காற்றும் மழையும் பாதசாரிகளைப் பிடுங்கி எறிகிறது, சாலையோற குறடுகளை நீரில் மூழ்கச் செய்கிறது. என்னைக்குறிவைத்து பெய்கிற மழை. ...
மேலும் கதையை படிக்க...
சுற்றிலும் பரந்து கிடக்கும் காடு கரம்பைகள். நானூறு ஆண்டுகளைக் கடந்து, ரொட்டிக்கடையின் மாவுபிசையும் மேடைக்கான உயரத்தில், ஏறக்குறைய சரிபாதி உள்ளீடற்று, பட்டைகளும் முண்டுகளுமாய் நிற்கும் ஷேன் மரம். அம்மரத்தினைச் துறடுபோலச் சுற்றிக்கொண்டு செல்லும் சாலை. கோடையில், தொக்தர்* ஃபகேர், தமது பணி ...
மேலும் கதையை படிக்க...
இதற்குமுன்பு இரண்டு முறை அவனைப் பார்த்திருக்கிறான். பிரான்சில் இறங்கிய முதல் நாள், இவன் பயணித்த சென்னை - பாரீஸ் டெல்டா ஏர்லைன்ஸில் முதன்முறையாக அவனைக்கண்டு தமிழில் பேசப்போக அவன் முகத்தைத் திருப்பிக்கொண்டான். இரண்டாவது முறை. சூப்பர் மார்க்கெட்டொன்றில் வாங்கியப்பொருட்களுக்கானப் பணத்தைச் செலுத்தவென்று ...
மேலும் கதையை படிக்க...
புலியும் பூனையும்..
ஒரு தாளிப்பனையின் கதை
ப்ளூஸ்(1) பாடல்களுக்கான நேரம்
மோகினிப் பிசாசு
சன்னலொட்டி அமரும் குருவிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)