அறிந்தும் அறியாமலும்…

 

‘‘ஏண்டா… ஏண்டா இப்படி, இங்கே வந்தும் அடிச்சுக்கறேள்… காசிக்கு வந்தும் கர்மம் தொலையலேடா! அஞ்சு வருஷம் முன்னாலே போனவர், என்னையும் அழைச்சிண்டு போயிருக்கப் படாதா..?”
மாடி வெராந்தாவில் நின்றுகொண்டு அந்த அம்மாள் அழுதாள். அடுத்தாற்போல கரகரப்பான, ஆளுமை நிறைந்த ஆண் குரல் இரைந்தது…

“இந்தா, கத்தி என் மானத்தை வாங்கினே… இப்பவே நான் குடும்பத்தோட ரயில் ஏறிடுவேன்.”

அப்புறம் பேச்சுமூச்சில்லை.

அன்னம்மா தனக்குள் சிரித்துக் கொண்டாள். இன்று நேற்றில்லை… இந்த நாற்பது வருடங்களில் அவளும் எத்தனை குடும்பங்களை, அதன் குணாதிசயங்களைப் பார்த்துவிட்டாள்!

காசியில் கோயில்கொண்டுள்ள விஸ்வ நாதரையும், விசாலாட்சியையும், அன்ன பூரணியையும் யாருக்காவது தெரியாமல் போகலாம். சதாசிவ கனபாடிகளின் வீடு என்றால்,- வழியை அடைத்துக்கொண்டு நிற்கும் பசுமாடுகளில் எதனிடம் கேட்டாலும்கூட அழைத்துக் கொண்டுவந்து விட்டுவிடும்.

கடல் மாதிரி வீடு… கூப்பிடு தூரத்தில் கங்கை. பயணிகளை வரவேற்று, தங்கவைத்து, காபி, பலகாரம், சாப்பாடு முதலிய வசதிகளைச் செய்துகொடுத்து, சுவாமி தரிசனம், பித்ரு காரியம், தான தர்மம் போன்றவற்றைக் கவனித்து, வந்தவர்களை மறுபடி யும் ரயிலடியில் வழியனுப்பும் வரை செய்துதர சதாசிவ கனபாடிகளைப் போலப் பலர் காசியில் காத்திருக்கிறார்கள்.

சதாசிவ கனபாடிகள் வீட்டில் ஒரு நாளுக்குப் பத்து குடும்பங் களாவது வந்துவிடும். ‘கலீர் கலீ’ரென ரிக்ஷா வண்டிகளின் ஓசை கேட்டதுமே, சதாசிவத்தின் சிஷ்யப்பிள்ளைகளில் எவனாவது ஒருவன், மூன்றாம் கட்டுக்கு ஓடி வந்து அன்னம்மாவிடம் அறிவித்து விடுவான்…

“பெரிய மாமி… இன்னும் ஆறு காபி. ரெண்டு பால் சூடா வேண்டியிருக்கும்…”

வந்து இறங்குபவர்கள் தங்களை ஆசுவாசப்படுத்திக்கொண்டு, பெட்டி, படுக்கைகளை அடுக்கிவிட்டு, மேலும் கீழுமாக அந்த பிரமாண்ட வீட்டை வாய் பிளந்து பார்த்துவிட்டு, பேஸ்ட், பிரஷ்ஷைத் தேடி எடுத்து, நடுவில் ஒன்றும் புரியாமல் பசியும், புது இடமும் மிரட்ட, கீழே விழுந்து புரண்டு அழும் சிறிசுகளின் முதுகில் ‘சுளீ’ரென ஒரு அறை கொடுத்து… பாத்ரூம் தேடி…

இதற்குள் அன்னம்மா காபி என்ன… அசுவமேத யாகமே செய்துவிடுவாள். வந்திருக்கிற விருந்தாளிகளுக்கு சதாசிவமும் அவளை மிகுந்த பாசத்துடன் அறிமுகப் படுத்துவார்.

“பெரிய மாமின்னா இவாதான். எனக்கு அக்கா முறை. இவாதான் இங்கே எல்லாத்துக்கும் இன்சார்ஜ். யார் யாருக்கு, எப்பப்போ, என்ன வேணும்னு ஒரு தடவை சொல்லிட்டாப் போதும்… எல்லாம் ஒரு குறையில்லாதபடி நடக்கும்.”

“நாங்க வர்றப்ப ஒரு வயசான நார்மடி பாட்டி எட்டிப் பார்த்தாளே, அது…”

“அது என் தாயார். பேரு சம்பூர்ணம்…”

அடக்கமாய், சிநேகமாய் சிரித்துவிட்டு, தனது ராஜ்ஜியமான மூன்றாம் கட்டு சமையலறைக்குள் புகுந்துவிடுவாள் அன்னம்மா.

மூன்றாம் கட்டுதான் அன்னம்மாவின் வாசம். சமையல் கூடத்துக்கு எதிரே பழுப்பேறிய அறையில், சுவர் மூலையில் ஒரு டிரங்குப் பெட்டி. அதன் மேலே ‘எஸ்.நாதன்’ என்று வெள்ளை பெயின்ட்டில் எழுதிய எழுத்துக்கள்கூட சமைய லறைப் புகையில் மங்கி விட்டது.

விடிவதற்குள்ளாகவே எழுந்து வெந்நீர் போடுவதும், காபிக்கு ஏற்பாடு செய்வதும், காலை பலகாரங்கள் யார் யாருக்கு என்ன என்று விசாரிப்பதும்… சிராத்த சமையல்களில் ஏதும் பங்கம் நேர்ந்துவிடாதபடி தானே சிரத்தையாய் செய்வதும், நடுவே சம்பூர்ணத்துக்கு பயத்தங் கஞ்சி அல்லது சிவக்கக் காய்ச்சிய பாலில் இரண்டு பூரியை நொறுக்கிப் போட்டுத் தரவும் மறக்க மாட்டாள் அன்னம்மா.

சதாசிவத்தின் மனைவி விசாலி, இரண்டாம் கட்டு மாடியைவிட்டுக் கீழே இறங்க மாட்டாள். யாரேனும் தம்பதி பூஜை செய்து பட்டுப்புடவை கொடுப்பதாக இருந்தால் மட்டுமே கீழே இறங்கி வருவாள். நினைத்தாற்போல், அன்னம்மா விடம் ஓடி வருவாள்.

“பெரிய மாமீ… நாப்பது வயசுக்கு மசக்கை வருமா என்ன?”

“ஏன், என்னாச்சு..?”

“குளிச்சு அம்பது நாளாச்சே…”

“நிக்கப்போறதோ என்னவோ…”

“அதுக்கு வயித்தை எங்கேயாவது புரட்டுமா?”

“நேத்து திரட்டுப்பால் கொஞ்சம் கூடச் சாப்பிட்டிருப்பே…”

“அப்படித்தான் இருக்கும். பயந்தே போயிட்டேன். ஏன் மாமீ… உங்களுக்குக் குழந்தைகளே பொறக்கலியா… இல்லே பொறந்து போயிடுத்தா..?”

அன்னம்மா இதற்கு மட்டும் பதில் சொல்லமாட்டாள். தனது வழக்கமான சிரிப்பை உதிர்த்தபடி, சுடச்சுட ஒரு டம்ளர் காபியை ஆற்றி, அவள் கையில் தருவாள்.

விழிகள் நாற்பது வருடத்துக்கு முன்பு தொலைந்துபோன காலங்களில் அமிழும். இப்போது கனபாடிகளாக வளைய வரும் சதாசிவம், அப்போது பத்து வயது பாலகன்.

இன்றைக்கு காசி, பிரயாகை, அனுமன்காட், கயா…- இப்படி சகல இடங்களுக்கும் ஒண்டியாய்ப் போய் வர அன்னம்மாவுக்குத் தெரியும். ஆனால், நாற்பது வருடங்களுக்கு முன்பு, சின்னதாக ஒரு கித்தான் பையுடன் கணவரின் பின்னால், அவன் நடைக்கு ஈடுகொடுக்க முடி யாமல் ஓடிய அன்னம்மாவுக்குப் பதினெட்டு வயசு.

“உயரமாவது உயரம். அடேயப்பா… நம்ம அன்னத்தோட அகத்துக்கார ரையும் அவளையும் சேர்த்து நிக்க வச்சுப் பார்த்தா… தென்னமரத்துப் பக்கத்துல அருகம்புல் நட்ட மாதிரி…” & கல்யாணத்தின்போது, அன்னத்தின் பிறந்த வீட்டைச் சேர்ந்த எவளோ சொன்னது.

அன்னத்துக்கு, அகத்துக்காரரை நிமிர்ந்து பார்க்கவே வெட்கம். அதே சமயம், மாமியார் பங்கஜம்மாளைப் பார்க்கும்போதே இனம் தெரியாத பயம். சேஷ ஹோமம் முடிந்ததுமே, அன்னத்தின் தகப்பனாரை அழைத்துச் சொல்லிவிட்டாள் சம்பந்தி அம்மாள்… “இதப் பாருங்கோ. எங்க குடும்பத்துல வயசுக்கு வந்த பொண்ணைக் கல்யாணம் பண்ணறதே இல்லே. என் பொண்ணு கழுத்துல தாலி ஏறி ரெண்டு வருஷம் கழிச்சுத்தான் புஷ்பவதியானா. இவ ஏற்கெனவே திரண்டுட்டதனாலே… அடுத்து ஒரு தடவை உட்கார்ந்து, ஸ்நானம் பண்ணினதுக்கு அப்புறம்தான் சாந்தி கல்யாணம் எல்லாம்…”

“இவ கல்யாணத்துக்கு ஒரு வாரம் முன்னாலேதான் குளிச்சா, மாமி. சின்ன வயசு இல்லையா… அதெல்லாம் சொன்னா சொன்ன தேதியில உட்கார்றதில்லே. ரெண்டு மாசம்… சில சமயம் ஆறு மாசம்கூட… இல்லையா ஜானு?”

ஜானு, அவரது இரண்டாம் சம்சாரம். அன்னம்மா மூத்தாள் பெண். இந்த மட்டும், நாலு நகை நட்டைப் போட்டு, கல்யாணத் தைச் செய்துவிக்க அனுமதி அளித்ததே பெரிய விஷயம்.

மறுபடியும் இரண்டு மாதமோ, ஆறு மாதமோ கழித்துதான் சாந்தி முகூர்த்தம் என்றால்… திரும்பவும் பித்தளை அடுக்கு, குஞ்சாலாடு, சீர் முறுக்கு, பருப்புத் தேங்காய்… குறைந்தது ஐம்பது பேராவது சாப்பிட மாட்டார்களா?

ஒரு பள்ளிக்கூட வாத்தியாருக்கு இதுவே குருவித் தலையில் பனங் காய்..!

ஜானு, எதுமே பேசாமல் அழுத்த மாய் நின்றாள். பங்கஜம் சூறைக்காய் உடைப்பது போல உடைத்துப் பேசினாள்… “இங்கே பாருங்கோ… இன்னிக்கே சாந்தி கல்யாணத்தை முடிக்க எனக்கும் ஆட்சேபனை இல்லே. ஆனா, கல்யாணமாகி பத்து மாசத்துக்குள்ள… இவ ஒரு பிள்ளயப் பெத்து நீட்டினா, அது எங்க வம்சத்துக் குழந்தைதான்கறதுக்கு என்ன உத்தரவாதம்?”

“சிவ சிவா! ஏன் இப்படி நாக்குல நரம்பில்லாம… அவ பச்சைக் குழந்தை மாமி. போன வருஷம் வரைக்கும் ரேழித் திண்ணையில சொப்பு வச்சுண்டு விளையாடிண்டு இருந்தா!”

“விளையாட்டோட விளை யாட்டா ஏதும் ஆகியிருக்கக் கூடாது பாருங்கோ… எதுக்கு பின்னிப்பின்னிப் பேசணும்? ஒரு குளிமுறை ஆனதுக்கு அப்புறம் தான் சாந்தி முகூர்த்தமே! கிணத்து நீரை வெள்ளமா கொண்டு போயிடப் போறது?”

சுவாமிநாதன், தன் விரலில் புதுசாய் ஏறியிருந்த மோதிரத்தை…- இரண்டு பக்கமும் வைரம் பதித்து, நடுவில் ஒற்றை நீலம் பதித்து, அன்னத்தின் தகப்பனார் கல்யாணத்துக்கென்றே அளவு எடுத்து செய்துபோட்டிருந்த மோதிரத்தைத் திருகியபடியே பேசாமல் தலைகுனிந்து உட்கார்ந் திருந்தான்.

அன்னத்துக்கு எதுவும் புரிய வில்லை. தூக்கம் கண்களை அழுத்த, ராக்கொடியும், புல்லாக்கும் மாட்டியதைக்கூடக் கழற்றிவைக்காமல் கொட்டக் கொட்டப் பார்த்துக்கொண்டு இருந்தாள்.

“எதுக்காக அந்த மாமி இப்படிக் கத்தறா, சித்தி?”

இவளின் கேள்விக்கு ஜானு, ரகசியமாய் இவளது கன்னத்தை அழுந்தக் கிள்ளிவிட்டுச் சொன்னாள்… “உம்? இன்னும் ஆறு மாசமோ, ஒரு வருஷமோ… பொண்ணை நீங்களே வச்சுக்கோங்கோன்னு சொல்றா… நன்னா அழுந்த உட்கார்ந்து, பொறந்த வீட்டை ஒட்டத் துடைச்சிட்டுப் போ!”

அன்னம் கண்களில் தளும்பிய கண்ணீரை யாரும் பார்க்காத வண்ணம் தூணில் தேய்த்துத் துடைத்தாள். நல்லவேளை… அன்னம்மா அதிக நாள் சித்தி யிடம் இடிசோறு தின்னவில்லை. அடுத்த முறை அவள் ஒதுங்கிய போது வாழைப்பழமும், கல்கண்டு மாய் கொண்டுபோய் சம்பந்தி அம்மாளிடம் கொடுத்து, இந்த நல்ல செய்தியைச் சொல்லி… சோபனத்துக்குப் பிறகு, மாய வரத்திலுள்ள சுவாமிநாதனின் வீட்டுக்குப் போன பிறகுதான் தெரிந்தது அன்னம்மாவுக்கு… தன் சித்தி எத்தனையோ நல்லவள் என்று!

பங்கஜம், மருமகளை ஓரிடத்தில் உட்காரவிடாமல் வேலை வாங்கினாள். ஒரு மாதத்தில் ஏழெட்டு நாட்கள் மட்டுமே அவளைக் கணவனுடன் தனியே படுக்க அனுமதித்தாள். அந்த இரவுகளில் கணவனின் மூர்க்கமான ஆளுகையில் கசங்கி…

போதாக்குறைக்கு சுவாமிநாதனின் அக்கா லட்சுமியும், அவள் கணவரும் பாதி நாள் கும்பகோணத்திலிருந்து மாயவரம் வந்துவிடுவார்கள். அப்போ தெல்லாம் இவர்களது படுக்கை அறை தான் ஒழித்துக் கொடுக்கப்படும்.

முதல் வருடம் மட்டும் ஒவ்வொரு பண்டிகைக்கும் சீரை எடுத்து வரும் அப்பாவிடம் ரகசியமாய் சொல்லி அழுதாள் அன்னம்… “அப்பா… நானும் உங்ககூடவே வந்துடறேனே..!”

“தப்பும்மா! இனிமே இதுதான் உன் வீடு. இந்த அப்பாவை மன்னிச்சுடு தாயே. என்னால உங்க சித்திகிட்ட உனக்காக எதுவும் பேச முடியாது!”

வெயிலில் வந்து, ஒரு வாய் மோர் கூடக் குடிக்காமல் புழுங்கியபடி படி யிறங்கும் தந்தையையே பார்த்தபடி… எத்தனை நாள்..!

மூன்றாம் வருட ஆரம்பத்தில் நாத்தனார் லட்சுமி புதுசாய் ஆரம்பித்து வைத்தாள்…

“என்னம்மா இது… கல்யாணமாகி மூணு வருஷத்துல நான் ரெண்டு குழந்தையப் பெத்துட்டுத் திண்டாடித் தெருவுல நிக்கறேன். இவ அப்படியே நேத்திக்கு நலங்குவச்ச மாதிரி நிக்கறாளே… மலடோ?”

அவ்வளவுதான்… பங்கஜத்தின் சவுக்கு புது வேகத்துடன் சுழலத் தொடங்கியது.

அன்றைக்கு, கல்யாணமான ஒரு வருஷத்துக்குள்ளேயே பிள்ளை பெறுவது அவமானம், ஊர் பேச்சுக்கு எல்லாம் யார் பதில் சொல்வது என்று அலட்டியவள்,- இப்போது ‘இப்படி மலடாய் நிற்கிறாயே’ என்று வார்த்தைகளால் சுட்டாள்.

 

அப்போதுதான் லட்சுமியின் கணவன், வீட்டின் அருமந்த மாப்பிள்ளை -இந்த யோசனையைக் கூறினான்… “ராமேஸ்வரம், காசில்லாம் போய் மறுபடியும் ராமேஸ்வரம் வந்து சமுத்திர ஸ்நானம் செஞ்சு, மணல்ல லிங்கம் பிடிச்சு பூஜை செஞ்சா குழந்தை பாக்கியம் உண்டுனு சொல்லுவா… அதையும் தான் செஞ்சு பாத்துடலாமே!”

மாப்பிள்ளை எது சொன்னாலும் பங்கஜத்துக்கு வேதவாக்கு. “ரொம்ப நல்லதாப்போச்சு! அப்படியே சாமி நாதனோட அப்பாவுக்குச் செய்ய வேண்டிய பித்ரு கர்மாக்களையும் முடிச்சுண்டு வந்துடலாம். எனக்குக் கூட ஒரு பிண்டத்தைப் போட்டுடட் டும் சாமி… இனிமே நான் இருந்துதான் என்ன பிரயோஜனம்..?”

பங்கஜம் வாய்தான் விரக்தியாகப் பேசுமே தவிர, சாப்பிட உட்கார்ந்தால் மூக்கில் மூன்று பருக்கை வராமல் எழுந்திருக்க மாட்டாள்.

லட்சுமி அதற்கும் மேல். இரண்டு குழந்தைகளையும் அன்னத்திடம் தள்ளிவிட்டு சதா தூக்கம், இல்லாவிட்டால் நொறுக்குத் தீனி. இத்தனையையும் ஈடு கொடுத்துக்கொண்டு அன்னம்!

அந்த நாளில் ரயில் பயணம் என்றால், கேட்கவே வேண்டாம்… மனுஷி நொந்துவெந்து போய்விட வேண்டும். அப்படியெல்லாம் பயணித்து மழையிலும், குளிரிலும் நடுங்கியபடி விஸ்வநாத கனபாடிகளின் வீட்டு வாசல் பக்க அறையில் குமுட்டி வைத்து ஒவ்வொருத்தருக்காகக் காபி போட்டு, உப்புமா கிளறி, ஈரத் துணியோடு பிண்டம் போட அனுமான்காட்டுக்கும், கயாவுக்கும் அலைந்து…

பாதி நாள் பட்டினி தான் அன்னம். இதோ, இந்தச் சம்பூர்ணம் சாட்சி!

“ஏண்டீ… நீ ஒண்ணும் சாப்பிடலையா?”

“பரவாயில்லே மாமி. ஆச்சு… சாயந்திரம் பலகாரத்தும்போது பார்த்துக்கலாம்!”

“நல்ல பொண்ணுடி! நான் சாப்பிட லைன்னு அகமுடையான்கிட்ட ஒரு வார்த்தை சொல்ல மாட்டியோ..?”

அன்னம் புன்னகைப்பாள். தர்ம சங்கடமான கேள்விகளுக்கெல்லாம் அவளுடைய பதில் புன்னகைதான்.

அவள் அழுதது எப்போது..?

செம்பருத்திப் பூவை அனலில் காட்டி வதக்குவது போல… கடுமையான வேலையும், அலைச்சலும், பட்டினியும், மழை ஈரமும் சேர்ந்து அவளது உடம்பை மழுவாய் கொதிக்கவைத்ததே… அப்போதா?

இல்லையே… அப்போதும்கூட கணவன், மாமியார், நாத்தனார் எல்லோருடைய வசவுகளையும் வாங்கிக் கட்டிக்கொண்டுதானே சுருண்டு கிடந்தாள்!

அயலார் எதிரில் இப்படி நெஞ்சில் துளியும் ஈரமே இல்லாமல் பேசுகிறோமே என்கிற பிரக்ஞையே இன்றி, எல்லோரும் மாறி மாறிப் பந்தாடினார்களே… அப்போது கூட, நெல் முனையளவு புன்னகை அவளது உலர்ந்த இதழ்க்கடையில் இருந்தது.

“அம்மா… உன் மாட்டுப் பொண் இதுக்கே இப்படி சாய்ஞ் சிட்டாளே… இவளா உனக்குப் பேரன், பேத்தியப் பெத்துக் கொடுத்து, காலத்துக்கும் காப்பாத்தப் போறா…? எனக்கு நம்பிக்கையே இல்லே!” என்று லட்சுமி தூபம் போட…

“அவ பாசாங்கு பண்றாம்மா. வரவர ரொம்பக் கத்துண்டுட்டா. நீ கிளம்பு. கோயிலுக்கு நேரமாச்சு. குதிரை வண்டிக் காரன் வேற கத்தறான்… சனியன் வீட்டுலயே கெடக்கட்டும்!” என்று சுவாமிநாதன் இரைய…

“அதெப்படிடா… தகப்பனாருக்குத் திவசம் பண்றே. பெண்டாட்டி இல்லாம எதைச் செய்யவும் முடியாதே. தலையில ஒரு சொம்புத் தண்ணியக் கொட்டிண்டு, வைதீகக் காரியங்களுக்காவது அவ கூட நிக்கட்டும். உங்க அப்பா வோட ஆசீர்வாதத்துல ஒரு பூச்சி, புழுவையாவது பார்க்கலாம்..!”

அன்று அன்னம்மாவுக்குச் சுய பிரக்ஞையே இல்லை. வீட்டை விட்டுக் கிளம்பும்போதே இரண்டு தடவை ‘பொத்’தென விழுந்தாள்.

சம்பூர்ணம்தான் ஓடிவந்து தாங்கினாள். அப்போதே கையும், காலும் வெட்டிவெட்டி இழுத்தன. உடம்பு வாழைத் தண்டாய் குளிர்ந்துபோனது.

பங்கஜம் பெருங்குரலெடுத்து அழ ஆரம்பித்தாள்… “இப்படியரு சோகைப் பொண்ணை நம்ம தலையில கட்டுவான் அந்த வாத்தின்னு நினைக்கவே இல்லையேடா..!”

பெரிய கனபாடிகள்தான் வைத்தியரை வரவழைத்தார்.

அந்த நாளில் ஆங்கில வைத்தியம் படித்த டாக்டர்கள் அதிகமில்லை. ஆனாலும் டிப்ளமோ படித்த மெடிக்கல் பிராக்டீஷனர் நஞ்சுண்ட ராவ் என்று ஒருவர்… ராசியான மனிதர். அவர் ஒருவேளை மருந்து கொடுத்தால், ஆசாமி ஜீவாம்ருதம் சாப்பிட்ட மாதிரி ‘ஜிங்’கென எழுந்து உட்கார்ந்துவிடுவான்.

அன்னத்துக்கு ஐந்து நாட்கள் சேர்ந்தாற் போல வந்து பார்த்தார் அவர்.

“ஊஹ¨ம்… இது தேறாது! நல்ல புண்ணியாத்மா. இந்த வயசுல, காசியில பிராணன் போகப் போறது. இருந்து, எல்லாக் கிரியைகளையும் செஞ்சுட்டுப் போங்கோ..!”

அன்னம்மா ஒரு பக்கம் நினைப்பின்றிக் கிடக்க, அவள் எதிரிலேயே நான்கு பேரும் மேற்கொண்டு என்ன செய்வது என்பது பற்றி விவாதித்தார்கள்.

“சாமிநாதா… நீ இருந்து சகலத்தையும் முடிச்சுட்டு வாப்பா. எனக்கு இப்பவே ஏகப் பட்ட நாள் ஆயிடுத்து. நிலம் நீச்சையெல்லாம் யார் கவனிப்பா..?”

-மாப்பிள்ளை பெட்டி, படுக்கையைக் கட்டத் துவங்க…

“ஏற்கெனவே எனக்குப் புக்ககத்துல நல்ல பேரு. பிறந்தகத்து மனுஷாளோட காசி, ராமேஸ்வரம்னு நான் ‘பிக்னிக்’ போயிட்டதா என் மாமியார் சொல்லித் தூத்துவா. இங்கே நான் நாய் படாத பாடுபடறது அவாளுக்கு என்ன தெரியுமாம்? அம்மா, நானும் கிளம்ப றேன்!” & -இது லட்சுமி.

பங்கஜம் மகனிடம் குரல் நடுங்கக் கேட்டாள்… “ஏண்டா, நானும் லட்சுமி யோட போகட்டுமா? என்னமோ நினைச்சிண்டு வந்தேன். கடன்காரி, கடைசியில கல்லைத் தூக்கித் தலையில போட்டுட்டாளே!”

சுவாமிநாதன் நேரே பெரிய கனபாடி களிடம் வந்து நின்றான். “நாங்கள்லாம் கிளம்பறோம்…”

“என்னது… இவளை இப்படியே விட்டுட்டா?”

“காசிக்கு வந்து பிராணனை விடணும்னு எத்தனையோ கிழங்கள், கங்கைக் கரை யில பொங்கித் தின்னுண்டு இருக்குகள். இவளுக்கு வந்த இடத்துல இப்படி யாயிடுத்து. பிராணன் போனவுடனே செய்ய வேண்டிய கிரியைகளை நீங்களே செஞ்சு, கங்கையில இழுத்து விட்டு டுங்கோ!”

“அதெப்படி..?”

சம்பூர்ணம் மறுத்துச் சொல்ல வாயெடுத்தாள். கனபாடிகள்தான் தடுத்தார். “ரொம்பச் சரி! அவ பக்கத்து லேயே உட்கார்ந்து வாய்க்கு வந்தபடி திட்டிண்டு இருக்கிறதைவிட, பிராணன் அடங்கற சமயத்துல நல்லதா நாலு ஸ்லோகத்தையும், சிவ நாமத்தையும், ஹரி மந்திரத்தையும் கேட்கட்டும். புண்ணியமாப் போகும். நானே எல்லாத்தையும் செஞ்சுடறேன்!”

“சாமிநாதா! அவ கையில இருக்கிற கண்ணாடி வளையலை விட்டுட்டு, தங்க வளையலை மட்டும் கழற்று!” &- பங்கஜம் மறக்காமல் சொன்னாள்.

“ஏம்மா… அவ காதுல போட்டிருக் கறது வைரமா..?”

“போதுமே… மூத்தாள் பொண்ணுக்கு வைரத் தோட்டைப் போட்டுட்டு, வாத்தியார் யாரைக் கட்டிட்டு அழுவா ராம். எல்லாம் வெள்ளைக் கல்லுதான்!”

“லட்சுமி… போகப் போறவ கழுத்துல தங்கம் எதுக்கு? ஒரு மஞ்சக் கிழங்கை கட்டினாப் போதும். சாமிநாதனுக்கு நானே பார்த்து, என் ஒண்ணுவிட்ட அக்கா பொண்ணையே கட்டிவைக்கிறேன். மூத்தாள் திருமாங்கல் யத்தை இளையாளுக்குப் போட்டா, அவளோட ஆயுசையும் சேர்த்து வச்சுண்டு சின்னவ இருப்பான்னு ஐதீகம்!”

“ஆமாண்டா, சுவாமிநாதா… மாப்பிள்ளை சொல்ற தைக் கேளு…’’ ஒரு பொட்டுத் தங்கம்கூட இல்லாமல், எல்லாவற்றையும் உருவிக்கொண்டு கிளம்பினார்கள்.

“இந்த நூறு ரூபாயை அவளோட அந்திமக் காரியத்துக்காக வெச்சுக்கணும் நீங்க! வேண்டாம்னு சொல்லக் கூடாது!”

முழு நூறு ரூபாய் நோட்டை, கனபாடிகளின் எதிரில் வைக்கப்பட்டிருந்த பித்தளைத் தாம்பாளத்தில் போட்டுவிட்டு நிமிர்ந்த சுவாமிநாதனிடம், சம்பூர்ணம் தான் வறண்ட குரலில் கேட்டாள்… “பிராணன் போயிட்டா, எந்த விலாசத்துக்குத் தகவல் கொடுக்கணும். ஸ்நானமாவது பண்ண வேண்டாமா?”

இப்படிக் கேட்டதற்குப் பதில், ‘பிழைத்தால் எந்த விலாசத்துக்குத் தெரிவிப்பது?’ என்று கேட்டிருக் கலாம்.

வாசல் திண்ணையில் மறைவு கட்டி, ஒற்றைப் பாயில் இழுத்துக்கொண்டு கிடப்பவள், பிழைத்து எழுவாள் என்ற நம்பிக்கையே யாருக்கும் இல்லையே!

ஆனால்…

கிட்டத்தட்ட ஒரு மாதம் போல மூச்சுக்குப் போராடிக்கொண்டு இருந்தவளுக்குச் சக்தியை ஊட்டிக் கண் திறக்கவைத்தது எது?

இருபத்து நாலு மணி நேரமும் ஒலித்துக்கொண்டி ருக்கும் வேத மந்திரமா… அல்லது, வாசலில் சதா நடமாடிக்கொண்டு இருக்கும் பசுக்களின் கழுத்து மணி ஓசையா? அல்லது, யாத்ரீகர்களின் ‘கங்கா மாதா கீ ஜெய்’ என்னும் கோஷமா..?

எது எப்படியோ… டாக்டர் நஞ்சுண்ட ராவின் சரித்தி ரத்திலேயே முதல் தடவையாக அவரது கணிப்பைத் தோற்கடித்து, அன்னம்மா எழுந்து உட்கார்ந்து விட்டாள்.

‘அன்னம்மா அபாய கட்டத்தைத் தாண்டி விட்டாள்’ என்று அனுப்பிய தந்திகள் எல்லாம் விலாசம் தப்பு என்று திரும்பி வந்தன.

அன்னம்மாவுக்கு கணவனின் முகவரி தெரியும். இருந்தாலும், சொல்ல மறுத்தாள். சம்பூர்ணத்திடம் நெஞ்சுருகக் கேட்டாள்… “இப்ப என்ன… சதாசிவத்துக்கு ஒரு அக்காவா, உங்க மூத்த பொண்ணா நான் இங்கே இருக்கப்படாதா..?”

அவள் கண்களில் முதலும் கடைசியு மாய் கங்கை…

தமிழ் பேசும் மனிதர்கள் வந்து இறங்கும்போதெல்லாம், சம்பூர்ணத்தின் பழுத்த முகத்தில் வேதனை படரும்.

அன்னம்மா தனியே அகப்படும் போது, மெல்லிய குரலில் கேட்பாள்… “ஏண்டியம்மா… சதாசிவத்துகிட்ட சொல்லி, அந்த இரக்கமத்த பாவி இருக்கானா, இல்லையான்னு விசாரிக்கச் சொல்லட்டுமா..? காசிக்கு வர்றவா, காயை விடுவா… கனியை விடுவா… இப்படிக் கட்டின பொண் டாட்டியை விடுவாளோ..?”

சம்பூர்ணம் இந்த விஷயத்தைப் பற்றிப் பேச ஆரம்பித்தால் மட்டும், அன்னம்மா தனது வழக்கமான சிரிப்பை உதிர்க்க மாட்டாள்.

பெரிய குமுட்டியில் நெருப்புக் கங்குகள் கனன்றுகொண்டு இருந்தன. பழைய நினைப்புகளை இந்த நெருப்பில் போட்டு எரிக்க முடிந்துவிட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்!

குமுட்டியில் வாய் அகன்ற பித்தளைப் போகிணியில் ‘தளதள’வெனப் பால் கொதித்துக்கொண்டு இருந்தது.

“பெரிய மாமீ… அங்கே இன்னும் மூணு காபி. ஒண்ணுல சர்க்கரை மட்டா… டிகாக்ஷன் நிறைய…”

இன்னொரு பிள்ளையாண்டான் இதைச் சொல்லிவிட்டு ஓடிவிட்டான். நின்றால், காபி கெட்டிலை தான் தூக்க வேண்டியிருக்குமே என்கிற பயம்.

மாடியில் சத்தம் இன்னும் ஓயவில்லை. அன்னம்மா காபி கெட்டிலைத் தூக்கிக் கொண்டு படியேறினாள்.

மாடிப்படிகளில் வழிமறித்து ஒரு கரம் நீண்டது.

“மாமி! சர்க்கரை குறைச்சலா, டிகாக்ஷன் தூக்கலா ஒரு காபி கேட்டேனே…”

சற்றுமுன் தாயிடம் சண்டை போட்டுக்கொண்டிருந்த அதே குரல்…

குனிந்த தலையை நிமிர்த்தாமல், தனியே கொண்டு வந்த காபி டம்ளரை நீட்டினாள் அன்னம்.

டம்ளரை வாங்கிய வனின் விரலில்… அது என்ன…?

இருபுறமும் வைர மும், நடுவில் நீலமும் பதித்த மோதிரம்.

அன்னம்மா ‘விருட்’ டென நிமிர்ந்தாள்.

‘அய்யோ… இதென்ன! அவரா இது? வயசு ஏறவில்லையா?’

ஒரு கணம் அன்னம்மாவின் விழிகள் பூத்துப் போயின. மனதின் மருட்சி தெளிந்த பின், அறிவு இடித்தது.

‘ஒருவேளை…இது அவரோட பிள்ளையா இருக்குமோ..!’

ஆவலும் பயமும் அன்னத்தின் கால்ளைப் பிணைக்க, தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டு, ஒவ்வொருவரிடமும் தம்ளரை நீட்டி, காபியை ஊற்றினாள்.

“இங்கே ரெண்டு பால்…”

“அனுப்பறேன்…”

“மாமீ… தலைவலித் தைலம் கிடைக்குமா?”

“அதுக்கென்ன… கொடுத்து அனுப்பறேன். முதல்லே சூடா ஒரு கப் காபியைக் குடிங்கோ..!”

“அம்மா… மாமி ரொம்ப ஃப்ரண்ட்லியா இருக்கா, இல்லே… இந்த மாதிரி ஒரு மாமி கிடைச்சா, நான் பெங்களூருக்கு அழைச் சிண்டு போயிடுவேன்…”

அன்னம் படபடக்கும் இதயத்தை அழுந்தப் பிடித்தபடி, இந்த விழுதுகளின் அடிமரத்தை &- தாயைத் தேடினாள்.

அதோ… ஒரு சூட்கேஸின் எதிரில் அமர்ந்து, கழுத்துச் சங்கிலியில் மாட்டியுள்ள சாவியால் பூட்டைத் திறக்க பகீரதப் பிரயத்தனப் பட்டுக்கொண்டு இருக்கி றாளே, அவள்தான்!

“மாமீ… காபி குடிங்கோ…”

“உம்…”

“இப்ப பெட்டியைத் திறந்து என்னத்தை எடுக்கப் போறே… காபியக் குடுச்சுட்டு குளியேன்…”

“அதில்லேடா… பணம் போதலைன்னு…”

“நீ கொடுக்கப் போறியாக்கும்? எத்தனை லட்சம் வச்சிருக்கே..?”

மறுபடியும் மோதிரம் அணிந்த பிள்ளை இரைந்தான். அவன் பேச்சும், தோரணையும்… அப்படியே… அப்படியே…

“என்னடி… பொட்டிய மூடி மூடி வெச்சுக்கறே? உங்கப்பன் எத்தனை ஆயிரம் கொடுத்திருக்கான்?”

நாற்பது வருடங்கள் ஆனாலும் வார்த்தைகள் தேயவில்லை.

அன்னம்தான் நிலைமை யைச் சமாளித்தாள்… “மாடியில நாலு பாத்ரூம் தான் இருக்கு. நீங்க கீழே வாங்களேன். அங்கேயே குளிச்சுக்கலாம்…”

மனசு அடித்துக் கொண்டது. தன் பின்னால் இறங்கி வருபவளை, திரும்பிப் பாராமலேயே விசாரித்தாள் அன்னம்… “எந்த ஊரு?”

“எல்லாம் சென்னை தான். மேலே கத்திண்டிருக் கிறவன் பெரியவன். உங்க கிட்ட பால் வேணும்னு கேட்டவன் அடுத்தவன். உங்களை பெங்களூருக்குத் தூக்கிட்டுப் போயிடு வேன்னு சொன்னது என் பொண்ணு…”

அன்னம்மா அதற்கு மேல் எதுவும் கேட்க வில்லை.

அந்த அம்மாளின் பெயர் நீலாவாம். சம்பூர்ணத்திடம் சொல்லிக்கொண்டு இருந்தது அன்னம்மாவின் காதில் விழுந்தது.

“ஒவ்வொரு வருஷமும் தட்டித் தட்டிப் போயிண்டே இருந்து, இப்பத்தான் கை கூடித்து. அவருக்கு என்னவோ காசியில, கங்கைக் கரையில தனக்கு…” நீலா மேலே பேச முடியாமல் நிறுத்திக் கொண்டாள்.

நடுவே, நீலாவின் மூத்த மருமகள் கீழே வந்து, மாமியாரை அதட்டும் குரலில் சொன்னாள்… “பொட்டியப் பூட்டி சாவிய எடுத்துண்டு வந்துட்டா எப்படி..?”

நீலா முக்கி முனகியபடி எழுந்தாள். “நான் அப்புறம் வர்றேன் மாமி… என்னை ஒரு நாழி நிம்மதியா உட்கார விடாதுகள்… பிள்ளைங்க…”

நீலாவுக்கு பாரியான உடம்பு. அதற்கேற்ற உயரம். நல்ல நிறம். இருந்தும் அந்த முகம், தேய்த்துக் கழுவிய தொட்டி முற்றம் மாதிரி இருந்தது. கன்னச் சதையில் சோகம் ஆடியது. முன் நெற்றி அகன்று மேலோடிப் போயிருந்ததால், முகத்தில் மேல் பாதியே காலியாக இருப்பது போல…

மறுநாள் நீலாவின் கணவரின் திதி.

அன்னம் ஓடி ஓடி தேவையானவற்றை ஏற்பாடு செய்து கொடுத்தாள். நீலாவின் நாட்டுப் பெண் களுக்கும், பெண்ணுக்கும் மடிசார் புடவையைக் கட்டிவிட்டாள். அவளது மாப்பிள்ளைக்கு உப்புமா பிடிக்காது என்பதால், அவசரமாக நாலு தோசையை சட்னியுடன் கொண்டுபோய்க் கொடுத்தாள்.

கூடத்தில் திதி நடந்துகொண்டு இருந்தது. “உம்… சொல்லுங்கோ. அப்பா பேரு, கோத்ரம்… அப்படியே தாத்தா, தாத்தாவுக்குத் தாத்தா பேரு… அம்மா இருக்கா இல்லையா, அப்போ பாட்டி… பாட்டிக்கு அம்மா… பேரெல்லாம் எழுதி வச்சிருக்கேளா..?”

“எங்கே… அவசரத்துல பெண்டாட்டி பேரே மறந்துடும். இதெல்லாம் எங்கே ஞாபகத்துல… அம்மாதான் ஞாபகம் வெச்சு சொல்லுவா..!”

உள்ளே சம்பூர்ணத்தின் அருகில் நீலா உட்கார்ந்திருக்க, பெரியவன் உள்பக்கம் பார்த்து இரைச்சலாகச் சொன்னான்… “அம்மா… பேர் எல்லாம் சொல்லு…”

“சுவாமிநாதன். பாரத்வாஜ கோத்ரம்…”

“தாத்தா பேரு சுந்தர ராஜன். கொள்ளுத்தாத்தா பேரு கோபால கிருஷ்ணன்…”

“சரி, சரி… பாட்டி பேரு..?”

“பாட்டி இருக்கட்டும். பெரியம்மா பேரைச் சொல்லுடா. அந்த மகராசி போய்ச் சேர்ந்து அந்த இடத்துல வந்து உட்கார்ந்து தானே நான் இன்னிக்கு இந்தப் பாடு படறேன்..!’’

“வளவளன்னு பேசாதே… பெரியம்மா பேரென்ன…?”

“அன்னம்னு சொல்லக் கேள்வி. அன்னபூரணியா, அன்ன லட்சுமியான்னு தெரியாது..!”

சம்பூர்ணத்தின் இடுங்கிய விழிகள் சுடர் விட்டன.

அன்னம்மா ஓடிவந்து சட்டென அவள் கரத்தை அழுத்தினாள். அதன் அர்த்தம், ‘தயவுசெய்து எதையும் சொல்லி டாதேள்!’ என்பதுதான்.

நல்லவேளையாக, திதியை நடத்திக் கொடுப்பவர் சதாசிவத்தின் உதவியாளர். சதாசிவம் வேறு ஒரு விஷயமாக வெளியில் போயிருந்தார்.

அன்னம் சம்பூர்ணத்திடம் கெஞ்சும் குரலில் அனுமதி கேட்டாள்… “உள்ளே சமையல் முடிஞ்சாச்சு. ஒரு பத்து நிமிஷம்… இதோ, இப்ப வந்துடறேன்…”

“எங்கேடி போறே… சதாசிவம்கூட வீட்டுல இல்லே. எனக்குப் பயமாய் இருக்கு…”

அன்னம் சிரித்தாள்… “என்ன பயம்? ஓடிப்போய் கங்கையில ஒரு ஸ்நானம் பண்ணிட்டு வந்துடறேன். செய்தியக் கேட்ட தீட்டுக்காகவாவது ஒரு முழுக்குப் போட வேண்டாமா?”

சம்பூர்ணம் ஏற் கெனவே உருண்டையாக மூலையில் கவிழ்த்து வைத்த வெண்கலப் பானை மாதிரி இருப்பாள். இப்போது இடிந்து, உதிர்ந்து போன மண்பானை மாதிரி…

“யாரையாவது துணைக்கு அழைச்சிண்டு போறியா…”

“எதுக்குத் துணை… தினமும் மூணு நாலு தரம் போய் முங்கற அதே கங்காதானே…”

அன்னம் போக, சம் பூர்ணம் இருப்புக் கொள் ளாமல் வாசலுக்கும், உள்ளுக் குமாக அலைந்தாள்.

குளித்து முடித்து ஈரத் துணியுடன் வீடு திரும்பிய போது, அன்னம்மாவின் கழுத்தில் புதுசாக ஒரு பவழ மாலைதான் இருந்தது. மஞ்சள் சரட்டைக் காணவில்லை.

“எதுக்கு அதை எடுத்தே?”

“அது அவர் கொடுத்தது. திருப்பி கங்காகிட்டயே கொடுத்துட்டேன். அவ் வளவுதான்..!”

அன்னம் வேறு எந்த அலங் கோலமும் செய்து கொள் ளாததே சம்பூர்ணத்துக்கு ஆறுதலாய்…

“இவதாண்டி உன் மூத்தாள். உன் புருஷனும், மாமியாரும் காசியிலேயே விட்டுட்டு..’ன்னு சொல்ல நாக்குத் துடிச்சுது. நீ வாயைத் திறக்கப்படாதுன்னு ஆர்டர் போட்டுட்டியே… சொல்லலே..!”

“த்ச்… இதெல்லாம் இப்ப அவளுக்குத் தெரிஞ்சு என்ன ஆகணும்? பாவம்… அந்த மனுஷர்கிட்ட எத்தனைப் பிடுங்கல் பட்டாளோ? பசங்க கிட்ட எவ்வளவு பாட்டோ? நான் பாருங்கோ… எந்தப் பிரச்னையும் இல்லாம அதிரசம், வடை, திரட்டுப் பால்னு… இதுக்குக் கொடுத்து வெச்சிருக்கணுமோல்லியோ..?”

இதற்குள் மாடியில் யுத்தம் மூண்டிருந்தது.

“காசில வந்து திவசம் பண்ணணும்னு சொன்னே… பண்ணியாச்சு! இப்ப கோதானம், பூதானம்னு இழுத்துவிட்டா, யாரால செய்ய முடியும்?”

“அப்பாவுக்குத்தானேடா செய்யறே?”

“காசில பொண்டாட்டியையே தானமா விட்டுட்டு வந்த மனுஷருக்கு எல்லாம் இது போறும். இன்னும் ஊர் போய்ச் சேர்றதுக்குள்ள எனக்கு ஆயிரம் செலவு வைப்பே. உன் ரெண்டாவது பிள்ளையைத் தரச் சொல்லு. இல்லே, உன் பொண்ணு கிட்ட வாங்கிக் கொடு!”

“நன்னாயிருக்கே! அப்பா, ஆஸ்பத்திரியில கிடக்கறப்ப, யார் செஞ்சாளாம்..? இன்னிக்கும் என் மாமியார் குத்திக் காட்டறா..!”

அன்று மாலை கீழே இறங்கி வந்து சம்பூர்ணத்தின் அருகில் கண்ணீருடன் அமர்ந்தாள், நீலா.

“அவர் பண்ணின பாவம்லாம் கரையணும்னுதானே கோதானத் துக்கும், பூதானத்துக்கும் தட்டுல ஆயிரம், ரெண்டாயிரம்னு போடு டான்னு கெஞ்சறேன். நேத்து இவன் பொண்டாட்டி கடைக்குப் போய், ஏழாயிரத்துக்கு பனாரஸ் பட்டு வாங்கிண்டு வந்திருக்கா. அதுக்கு வாயே திறக்கலை. இதுக்குக் கொடுக் கறதுக்குதான் மூக்கால அழறான்” என்றபடி அவள் தன் வளையலைக் கழற்றிப் பித்தளைத் தட்டில் வைத்தாள்.

அன்னம்மா, உள்ளே ஓடி தன் ஒரே சொத்தான பழுப்பேறிய பெட்டியைத் திறந்தாள்.

ஐம்பதும், நூறுமாய்… இங்கு வந்து தங்கும் யாத்ரீகர்கள் கிளம்பிப் போகும் போது வயிறு நிறைய, நாவுக்கு ருசியாகப் பார்த்துப் பார்த்துச் சமைத்துப் போட் டதற்காக, அன்னம் மாவுக்கு அன்பளிப் பாகக் கொடுத்த பணம்.

அவ்வப்போது சதாசிவத்தின் குழந்தைகளுக்குச் சட்டையும், பொம் மையும், வளையல், மணிமாலைகளும் வாங்குவதைத் தவிர, வேறு என்ன செலவு அவளுக்கு?

நோட்டுக் கற்றையை அள்ளி வந்து, நீலாவின் கையில் அன்னம் திணித்தாள். சம்பூர் ணம் அர்த்தத்துடன் பார்த்தாள்.

“அய்யோ… நீங்க எதுக்கு மாமி..?’’ என்று நீலா பதற…

“மொதல்ல வளையலைக் கையில போடுங்கோ! சும்மா தரதா நெனைக்க வேண்டாம். முடியறபோது திருப்பித் தந்தாப் போறும்..!”

“வாங்கிக்கோ நீலா! அவ ஒண்டிக் கட்டை. ஏதோ, நீ வாங்கற பேச்சைக் கேட்டு மனசு தாங்காம கொடுக்கறா!”

நீலாவின் முதுகை வருடி ஆறுதல் அளித்த சம்பூர்ணம், அப்படியே அன்னத்தையும் பார்வையால் வருடினாள்.

அன்னத்தின் ஐம்புலன்களும் சாயந்திரம் பலகாரத்துக்கு தேங்காய் துருவுவதிலேயே இருக்கிறது.

“எதை மனத்தால் உணர முடியாதோ, ஆனால், எதனால் மனம் உணரப் பெறுகிறதோ, அதுவே பிரம்மம் என்பதைத் தெரிந்துகொள்!”

கூடத்தில் மாண வர்களுக்குக் கன பாடிகள் உபநிஷத் துகளின் அர்த்தத்தை விளக்கிக்கொண்டு இருக்கிறார்.

இதோ…

அன்று நடுப்பகலில் எவளுக்கு, அவளுடைய கணவரின் திதியில் பிண்டம் போடப் பட்டதோ, அவள் தனக்கு திதியளித் தவர்களுக்குச் சமைத்துக்கொண்டு இருக்கிறாள்.

நாற்பது வருடங்களுக்கு முன்னால், எவன் தனது மனைவியின் சமஸ்காரத் துக்காகக் கனபாடிகளின் தட்டில் நூறு ரூபாய்த் தாளைப் போட்டானோ…

இதோ, இன்று அவனுடைய கர்மாவுக்காக அந்த நூறு ரூபாய், வட்டியோடு அதே தட்டில் சேர்ந்து விட்டது.

சம்பூர்ணத்துக்கு புதிய உபநிஷத் படிக்கக் கிடைத்திருக்கிறது.

வயசானால் என்ன… எல்லாமே பாடம்தானே?

- வெளியான தேதி: 18 ஜூன் 2006 

தொடர்புடைய சிறுகதைகள்
விறைத்த சோறும் பக்கோடாத் தூளும்!
ஆட்டோவில் இருந்து முத்துலட்சுமி இறங்குவதைப் பார்த்துவிட்டு, வீட்டு வாசலில் மற்ற சிறுசுகளுடன் கதை பேசிக்கொண்டு இருந்த பாவாடை தாவணி உள்நோக்கி ஓடியது. உள்ளே போனவள், தன்னைப் பெற்றவளிடம் என்ன சொல்லிஇருப்பாள் என்று முத்துலட்சுமிக்குத் தெரியும். “அம்மா... ஓடிப் போன அத்தை வந்திருக்கா!” பட்டு, சங்கரிக்குப் ...
மேலும் கதையை படிக்க...
முதலில் வாசற்கதவைச் சாத்தி விட்டு வருகிறீர்களா... ஏனென்றால், இது நமக்குள் பேச வேண்டிய விஷயம்... நண்டு, சிண்டுகள் கேட்டால் போச்சு... தெரு முழுக்க ஒலிபரப்பி, நம்மை பீஸ் பீஸாக்கி விடும். புருஷர்களுக்கா... ஊம்ஹ§ம்... மூச்சு விடக் கூடாது. ஏற்கனவே வெறும் வாயை மெல்லுபவர்களுக்கு ...
மேலும் கதையை படிக்க...
வயிற்றில் நெருப்பை வைத்துக் கட்டினாற்போல இருக்கிறது ராமநாதனுக்கு. பசியில், வயிறு போடும் இரைச்சல்தான் காதில் கேட்கிறதே தவிர, கூடத்தில் ஒலிக்கும் மந்திர சத்தங்களல்ல… காலையில் ஒரு விழுங்கு காபி குடித்தது… மணி இரண்டாகப் போகிறது. இன்னமும் அவருக்குச் சாப்பாடு வரவில்லை. பெற்ற பிள்ளைகள் ...
மேலும் கதையை படிக்க...
இரவல் தொட்டில்
இன்னும் அன்னம் வரவில்லை. வாசல் இரும்புக் கிராதியின் சத்தம் கேட்கும்போது எல்லாம் விசுவம் எட்டிப் பார்த்து ஏமாந்தான். அப்பா இடை ரேழியில் இருந்து செருமினார்... ''இன்னும் அவ வரல்லே போல இருக்கே?'' ''வந்துடுவா.'' அதற்கு மேலும் அங்கே நிற்கச் சக்தி அற்றவனாகக் கூடத்துக்கு வந்தான். ஊஞ்சல் ...
மேலும் கதையை படிக்க...
சுற்றுலாவுக்கும் எங்கள் குடும்பத்துக்கும் ரொம்ம்ம்ம்ப தூரம். இந்தக் காலம் போல அரையாண்டு விடுமுறைக்கு 'பிக்னிக்', கோடை விடுமுறைக்கு 'லாங் டூர்' என்று போவதெல்லாம் என்னவென்றே தெரியாது எங்களுக்கு! ஆக, டீன்--ஏஜில் எனக்கும் என் சகோதர, சகோதரிகளுக்கும் டூர் என்பது ஒரு அந்நிய ...
மேலும் கதையை படிக்க...
விறைத்த சோறும் பக்கோடாத் தூளும்!
கதவைச் சாத்து…காதோடு பேசணும்
அக்னி
இரவல் தொட்டில்
குற்றால டூரும்…கஷ்டமித்ர பந்துக்களும் !

அறிந்தும் அறியாமலும்… மீது 2 கருத்துக்கள்

  1. manjula says:

    excellent

  2. Anandh R says:

    கதை நிஜ வாழ்க்கையை பிரதிபலிப்பது போல் இருந்தது………….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)