Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

அம்மாவுக்காக…

 

ராஜூவுக்கு வியப்பாக இருந்தது. மேனேஜர் எதற்காக, தன்னை கூப்பிட்டு இருப்பார். வேலைக்குச் சேர்ந்து, ஒரு மாதம் தான் ஆகியிருக்கும் நிலையில், வேறு யாரிடமும் இல்லாத அளவுக்கு, தன்னிடம் மட்டும் அவர் தனியாக அக்கறை எடுத்துக் கொள்வதாக தோன்றியது. பல முறை, அவனே அதை கவனித்தும் இருக்கிறான். உடன் பணிபுரிபவர்கள் கூட, சில முறை அவனிடம் கேட்டு இருக்கின்றனர். ஆனால், ராஜூ பதில் சொன்னதில்லை. அது, அவனுக்கும் தெரியாது.
ஒருவித குழப்பத்துடன் லேசாக கதவைத் திறந்தான். கண்ணாடிக் கதவு லேசாக விலகியவுடன், “ஏசி’யின் குளிர்காற்றுடன் சந்தன வாசம் வீசியது. மேனேஜர் எப்போதும், சந்தன மணம் கொண்ட ரூம் ஸ்பிரேயைத்தான் பயன்படுத்துவார் என்று, அவனுக்கு தெரியும். உள்ளே வந்தான்.
ஒரு சில வினாடிகள் அவனை அமைதியாகப் பார்த்த மேனேஜர், உட்கார சொல்லி, மெதுவாக ஆரம்பித்தார்…
“”என்ன ராஜூ… முதல் மாதச் சம்பளம் வாங்கிட்டீங்க, எப்படி, “பீல்’ பண்றீங்க? ரொம்ப எக்ஸ்சைட்டிங்கா இருக்குமே?”
“”ஆமாம் சார்… ரொம்ப சந்தோஷமா இருக்கு.”
அம்மாவுக்காக...“”வழக்கமா தினமும், ஓவர் டைம் பார்ப்பீங்க. இன்னிக்கு, 5.00 மணிக்கே கிளம்பறீங்க போலிருக்கு…”
“”அது… வந்து சார்…”
“”நோ… நோ… பர்சனல்ன்னா சொல்ல வேண்டாம். நான் சும்மாத்தான் கேட்டேன்.”
“”அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை சார். காலேஜ் படிக்கும் போதே, எப்படா ஒரு வேலைக்கு போவோம். சொந்தமா சம்பாதிப்போம்ன்னு ரொம்ப ஆர்வமா இருக்கும். என்னை படிக்க வைக்க, எங்கம்மா எவ்வளவு கஷ்டப்பட்டாங்கன்னு, எனக்கு தான் சார் தெரியும். இதுவரைக்கும், எங்கம்மா கையில, அவங்களுடையதுன்னு மொத்தமா, ஒரு ஐயாயிரம் ரூபாய் கூட இருந்தது கிடையாது. அப்படி இருந்தா, அது அவர்களுடையதாக இருக்காது. எனக்கு காலேஜ் பீஸ் கட்ட, யாரிடமாவது கடனா வாங்கியிருப்பாங்க…
“”ஆனா, இப்போ என்னுடைய இந்த முதல் மாத சம்பளம் இருபதாயிரம் ரூபாயை, மொத்தமா எங்கம்மா கையில கொடுத்து, “இது, முழுக்க முழுக்க உனக்கு மட்டுமே சொந்தமான பணம்மா’ன்னு சொல்லணும் சார். இது, என்னோட ரொம்ப நாள் ஆசை. அதான், இன்னிக்கு ஓவர் டைம் பார்க்காம, சீக்கிரமா வீட்டுக்கு போகணும்ன்னு நினைச்சேன்.”
கேட்டுக்கொண்டிருந்த மேனேஜர், லேசாக தலையை சாய்த்து, மேஜையில் இரு கைகளையும் ஊன்றிக் கொண்டார். அவர் கண்களில், கண்ணீர் கசிந்ததை ராஜூவால் கவனிக்க முடிந்தது.
லேசாக அதிர்ந்தவனாய், தயக்கத்துடன் கேட்டான்…
“”சார்… சாரி சார். நான் ஏதும் தப்பா…”
“”இல்லேப்பா… நான் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டுட்டேன். அவ்வளவுதான்.” கண்களைத் துடைத்துக் கொண்டார். நிமிர்ந்து அவனை பார்த்தார்.
“”சார்… உங்கக்கிட்ட ஒண்ணு கேட்கணும். நீங்க தப்பா எடுத்துக்கலன்னா,” தயக்கினான் ராஜூ.
“”பரவாயில்லை கேளுங்க.”
“”சார்… நான் இந்த ஆபீஸ்ல வேலைக்கு சேர்ந்து, ஒரு மாதம் தான் ஆகுது. ஆனால், மத்தவங்கக்கிட்ட இல்லாத அளவுக்கு, எங்கிட்ட மட்டும் நீங்க கொஞ்சம் அக்கறையா நடந்துக்கற மாதிரி எனக்கு…” தயங்கித் தயங்கி அவன் பேச, லேசாக ஆரம்பித்து, பின் பலமாக சிரித்து முடித்தார் மேனேஜர்.
“”நீங்க இன்டர்வியூக்கு வந்திருந்த போது, “உங்களுக்கு எதற்காக இந்த வேலையை கொடுக்கணும்’ன்னு கேட்டதற்கு, ஒரே வார்த்தையில், “எங்க அம்மாவுக் காக…’ன்னு சொன்னீங்க. ஞாபகம் இருக்கா?”
“”ஆ…மாம் சார். ஞாபகம் இருக்கு.”
“”அப்படி ஒரு பதிலை நான் யாரிடமிருந்தும், அதுவரை கேட்டதில்லை. அப்பவே, உங்களுக்கு இந்த வேலையை கொடுத்துடணும்ன்னு முடிவு பண்ணிட்டேன்.”
சற்று நிறுத்தி தொடர்ந்தார்…
“”உங்களை மாதிரிதான் ராஜூ, நானும் இருந்தேன். சொல்லப்போனால், உங்களைவிட அதிகமாகக்கூட கஷ்டப்பட்டிருக்கலாம். என்னுடைய அப்பா, நான் ஸ்கூல் படிக்கும் போதே இறந்துட்டார். அதுக்கப்புறம், என்னோட அம்மாதான் என்னை கஷ்டப்பட்டு படிக்க வச்சாங்க…
“”நானும், உங்களை மாதிரியே தான், நல்லா சம்பாதிச்சு அவங்களை பார்த்துக்கணும், அவங்க கேட்டதெல்லாம் வாங்கிக்கொடுக்கணும்ன்னு ரொம்ப ஆசைப்பட்டேன். ஆனால், எனக்கு வேலை கிடைக்கிறதுக்குள்ள, அவங்களும் போய்ட்டாங்க…”
“”சாரி சார்.”
சில நொடிகள் மவுனத்துக்கு பின், அவரே தொடர்ந்தார்…
“”இப்ப இந்த கம்பெனிக்கே நான் மேனேஜர். எக்கச்சக்கமா சம்பளம் வாங்கறேன். ஆனா, என்னோட சம்பளத்துல, ஒரு நூறு ரூபாய் புடவை கூட அம்மாவுக்கு வாங்கி கொடுக்க முடியல… எனக்கு அதுக்கு குடுத்து வைக்கல.”
உணர்ச்சி வசப்பட்டதில், அவர் கண்கள் கலங்கின. குரல் தழுதழுத்தது.
“”இதனாலேயே, நான் எவ்வளவு சம்பாதிச்சாலும், அதுல எனக்கு திருப்தியே கிடைக்கிறதில்லை. அந்த பணத்தால, எனக்கு முழுமையான சந்தோஷமும் இல்லை. மனசுக்குள்ள நிம்மதியும் இல்லை.
“”அந்த மாதிரியொரு நிலைமை உங்களுக்கு வந்துடக்கூடாதுன்னு தான், நான் உடனே இந்த வேலையை உங்களுக்கு கொடுத்துட்டேன். அதுதான், உங்களுக்கும், மத்தவங்களுக்கும், நான் உங்க மேல ரொம்ப
அக்கறையா இருப்பது போல் தெரியுதுன்னு நினைக்கிறேன்.”
இப்போது புன்னகை.
நெகிழ்ச்சியுடன் வெளியே வந்தான் ராஜூ. உடனே, அம்மாவை பார்க்க வேண்டும் போல தோன்றியது.
ஒரு வாரம் கழிந்திருக்கும்.
அன்று ஞாயிற்றுக்கிழமை. காலையில் தாமதமாகத்தான் எழுந்தான்.
குளித்துவிட்டு, சாப்பிட அமர்ந்த போது, மொபைல் போன் தானும் எழுந்து விட்டதை உணர்த்துவது போல, லேசாக அதிர்ந்தது. எடுத்துப் பார்த்தான்.
ரிமைண்டர். இன்று மேனேஜருக்கு பிறந்த நாள் என, பொறுப்புடன் நினைவுப்படுத்தியது.
“வாழ்த்துச் சொல்லி ஏதாவது, பரிசளிக்கலாமா?’ என்று யோசித்தான் ராஜூ.
உடனடியாக அவருக்கு போன் செய்தான்.
சில வினாடிகளுக்கு பின், போனில் அவர் குரல்.
“”ஹலோ…”
“”சார்… நான் ராஜூ!”
“”ராஜூ… சொல்லுங்க… என்ன விஷயம்? சண்டே கூட போன் பண்றீங்களே… எதுவும் விசேஷமா?”
“”எஸ் சார்… உங்களுக்குத் தான். பிறந்தநாள் வாழ்த்துகள்!”
“”ஓ மை குட்னஸ். எனக்கே ஞாபகம் இல்லை. உங்களுக்கு எப்படி? ரொம்ப நன்றி ராஜூ.”
“”நம்ம கம்பெனி சைட்ல, உங்களோட புரோபைல்ல பார்த்தேன் சார். பை த வே, நீங்க இப்ப ப்ரீயா… உங்கக்கிட்ட கொஞ்சம் பேசணும் சார்…”
“”ம்… என்ன விஷயம் சொல்லுங்க…”
“”சார்… நீங்க வாங்கிய முதல் மாச சம்பளம் எவ்வளவுன்னு தெரிஞ்சிக்கலாமா?”
“”எதுக்காக இப்படி திடீர்ன்னு கேட்கறீங்க… ம், யாராலையும் அதை மட்டும் மறக்க முடியாதே. நல்லா ஞாபகம் இருக்கு. நாலாயிரத்து ஐநூறு ரூபாய்.”
“”சார்… நீங்க தப்பா நினைச்சுக்கலைன்னா, ஒரு நாலாயிரத்து ஐநூறு ரூபாயை எடுத்துக்கொண்டு, காந்தி நகர் ஆஞ்சநேயர் கோவில் பக்கம் வர்றீங்களா?”
“”எதுக்காக ராஜூ?”
“”வாங்களேன் சார்… சொல்றேன்.”
அவர் மீண்டும் ஏதோ கேட்க ஆரம்பிக்க, ராஜூ போனை வைத்து விட்டான்.
அடுத்த, இருபதாவது நிமிடம், இருவரும் காரில் இருந்தனர்.
“”எங்க ராஜூ போறோம்?”
“”வாங்க சார் சொல்றேன்,” என்றவன், காரை கடைவீதி நோக்கி ஓட்டினான்.
அவரை ஒரு துணிக்கடைக்கு அழைத்துச் சென்றான். ராஜூ தான் வாங்கினான். பத்து புடவைகள்.
அதன் பின், ஒரு பேக்கரிக்கு சென்று, கேக் வாங்கி வந்தான். நடப்பவை எதுவும் புரியாமல், மேனேஜர் அமைதியாக அமர்ந்திருக்க, ராஜூ ஒவ்வொரு கவருக்குள்ளும், ஒரு புடவையையும், ஒரு கேக்கையும் எடுத்து வைக்க ஆரம்பித்தான்.
ஒரு சிறிய தெருவுக்குள் சென்று, வலமாக திரும்பி, “அன்னை இல்லம்’ என்ற போர்டு வைக்கப்பட்டிருந்த ஒரு காம்பவுண்டுக்குள் நுழைந்து நின்றது கார்.
தன் பிறந்த நாளைக் கொண்டாட, ராஜூ செய்த ஏற்பாடு இது என்பது, மேனேஜருக்கு புரிய ஆரம்பித்தது. அந்த கவர்களுடன் இருவரும் உள்ளே வந்தனர்.
அங்கே வரிசையாக கட்டில்களில், நடப்பதற்கு கூட சிரமப்படும் வகையில், வயதான அம்மாக்கள் இருந்தனர்.
“”ம்… எடுத்து வந்து எல்லாருக்கும் குடுங்க சார்.”
ஒருவித தயக்கத்துடன் எடுத்துக்கொடுக்க ஆரம்பித்தார் மேனேஜர். வரிசையாக கொடுத்துக் கொண்டே சென்றபோது, நடுவில் ஒரு பாட்டி, கையில் கவரை வாங்கியதும், சட்டென கண் கலங்கினார். பார்த்த மாத்திரத்தில், மேனேஜருக்கும் உள்ளுக்குள் என்னவோ போல் ஆகியது.
அந்த பாட்டியோ, அழ முயன்று முடியாமல், உதடுகள் துடிக்க, தன் இரு கைகளாலும் அவரின் கன்னங்களை ஏந்திக் கொண்டார்.
தழுதழுத்த குரலில், “”பெத்த புள்ளைங்களே ஒதுக்கித்தள்ளிட்ட இந்த அம்மாவை கவனிக்க, நான் பெறாத புள்ளை நீ வந்திருக்கியா… என் ராசா…” என்று அழத்தொடங்க, மேனேஜர் நெஞ்சுக்குள்ளே, இதுவரை அனுபவித்திராத, ஒரு பிரளயமே நடந்து முடிந்தது போன்ற ஒரு உணர்வு. தன்னையும் மீறி, வெடித்து அழ ஆரம்பித்தார்.
அந்த தாயின் கைகளில், முகம் புதைத்து விம்மினார்.
பல வருடங்களாக, மனதில் கனத்துக் கொண்டிருந்த, ஒரு பெரிய சுமை, இப்போது இறகாக மிதக்க ஆரம்பித்தது அவருக்குள்.

- சு.வரதராஜன் (நவம்பர் 2012)

வயது: 21
கல்வித்தகுதி: பொறியியல் – எந்திரவியல் பிரிவில் இறுதியாண்டு.
கதை, கவிதைகள் எழுதுவதில் ஆர்வம் உள்ளவர். கல்லூரியில், கட்டுரை போட்டி, பேச்சு போட்டிகளில் பங்கு கொண்டு பரிசு பெற்றுள்ளார். பத்திரிகைக்கு சிறுகதை அனுப்பி, பரிசு பெறுவது இதுவே முதல் முறை. நிறைய எழுத வேண்டும் என்பது இவரது ஆசை. 

தொடர்புடைய சிறுகதைகள்
‘சார்..மாடம்பாக்கத்துக்கு எந்த பஸ்ல போகணும்’ -கேட்டவர் ஒரு முதியவர். ‘டைம் கீப்பர் ஆபிஸ்ல போய்க்கேளுங்க பெரியவரே…’ சொல்லிவிட்டு தான் பொறுப்பேற்றிருந்த வண்டி ரிவர்ஸ் வருவதற்காக விசில் கொடுத்துக் கொண்டிருந்தார் கண்டக்டர் சையது. ‘சார்…பைவ் பி எங்கே வரும்?’ – கல்லூரி மாணவன் கேட்டான். ‘படிக்கத் தெரியும் ...
மேலும் கதையை படிக்க...
அந்த பெரும் வெளியில் சுற்றிக்கொண்டு இருந்த போது இந்த துயரம் எதுவும் இருக்கவில்லை. அங்கே காற்றொடு காற்றாய் காற்றின் திசையில் திரிந்து கொண்டு இருந்தேன்.... சட்டென்று யாரோ பிடித்து இழுப்பது போல் தோன்றியது... என்னவென்று உணர்வதற்குள் ஒரு இருட்டரையில் தள்ளப்பட்டு இருந்தேன். சில காலமாய் அந்த இருட்டறையில் ...
மேலும் கதையை படிக்க...
எதிர்வினை
காலை எட்டு மணிக்கெல்லாம் கருத்தராவுத்தரின் அழைப்புக் குரல்.""சுப்ரமணி...சுப்ரமணி'' என்று கூப்பிட்டுக் கொஞ்சியது.நான் வீட்டு வாசலுக்கு வருவதற்குள் , ராவுத்தர் தன் கடை வாசலுக்குப் போய்விட்டிருந்தார்.கடைவீதியில்தான் என் வீடு. வீட்டுக்கு முன்புறம்தான் ராவுத்தரின் வாடகைச் சைக்கிள் கடை.""பெரிய பள்ளிக்கூடம் வரைக்கும் போய்ட்டு வரலாமா?'' ...
மேலும் கதையை படிக்க...
வஜ்ரதம்ஷ்ட்ரன் கதை தெரியுமோ? அதைச் சொல்லவேண்டுமென்றால் மோஸ்கி மாமா பற்றிச் சொல்ல வேண்டும். மோஸ்கி மாமா என்றால் வஜ்ரதம்ஷ்ட்ரன் நினைவுக்கு வரும். இன்னும் சிலதும் வரும், ஆனால் வஜ்ர தான் முதல். (புராணம் மறந்த/அறியாதவர்களுக்கு அவசர அறிமுகம்: ராமாயணத்தில் ராமனுக்கு ராவணன், ...
மேலும் கதையை படிக்க...
கமலியின் கதை!
காலை நேர பரபரப்பில் இருந்தேன். ஒரு பக்கத்து அடுப்பில், கூட்டுக்கு தாளிப்பு, அடுத்ததில், அம்முவுக்காக நாலு அப்பளம் பொரிக்க வைத்த எண்ணெய். இரண்டிலும், கவனம் இருந்தாலும், மனம் மட்டும், பத்திரிக்கையில் படித்த ஒரு விஷயத்தைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தது. "உங்கள் குழந்தையை பத்திரமாக ...
மேலும் கதையை படிக்க...
அழகான பெண் – ஒரு பக்க கதை
ஒரு மௌனத்தின் குரல்
எதிர்வினை
மோஸ்கி மாமா
கமலியின் கதை!

அம்மாவுக்காக… மீது 2 கருத்துக்கள்

  1. r.k.jeyprakash says:

    அருமையான ஸ்டோரி , வாழ்த்துக்கள்,

  2. A.T.Deivasigamani says:

    படித்த கதைகளில் சிறந்த கதை இது. அனைவருக்கும் இந்த கதை பொருந்தும். படித்த போது கண் கலங்கிவிட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)